11.02.24    Avyakt Bapdada     Tamil Lanka Murli    24.02.98     Om Shanti     Madhuban


தந்தையின் மீதும் சேவையின் மீதும் குடும்பத்தின் மீதும் அன்பு வையுங்கள். நீங்கள் சிரமப்படுவதில் இருந்து விடுபடுவீர்கள்.


இன்று, எங்கும் உள்ள குழந்தைகள் தமது தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட வந்துள்ளார்கள். நீங்கள் தனிப்பட்ட முறையில் தந்தையின் முன்னால் அமர்ந்திருந்தாலென்ன அல்லது உங்களின் தேவதை ரூபத்தில் இங்கே வந்திருந்தாலென்ன, நீங்கள் அவருக்கு முன்னால் இருக்கிறீர்கள். தந்தை குழந்தைகள் எல்லோரையும் பார்க்கிறார். ஒருபுறம், இந்தச் சந்திப்பைக் கொண்டாடுவதையிட்டு நீங்கள் சந்தோஷப்படுகிறீர்கள். மறுபுறம், எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாகத் தந்தையை வெளிப்படுத்தும் சேவையைச் செய்வதற்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் நீங்கள் கொண்டுள்ளீர்கள். சகல திசைகளிலும் உள்ள குழந்தைகளான உங்களைப் பார்க்கும்போது, பாப்தாதா பலமில்லியன் மடங்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். குழந்தைகளான நீங்கள் வெகு வெகு தொலைவில் இருந்தும், நானா திசைகளில் இருந்தும் தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட வந்துள்ளீர்கள். எனவே, பாப்தாதாவும் குழந்தைகளின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக வெகு வெகு தொலைவில் இருந்து வந்துள்ளார். யார் இதில் மிகவும் தொலைவில் இருந்து வந்துள்ளது? தந்தையா அல்லது நீங்களா? நாங்கள்தான் மிகத் தொலைவில் இருந்து வந்துள்ளோம் என நீங்கள் சொல்லக்கூடும். ஆனால் தந்தையும், நானே உங்கள் எல்லோரையும் விட மிகவும் தொலைவில் இருந்து வருகிறேன் எனக் கூறுகிறார். எவ்வாறாயினும், இங்கே வருவதற்கு உங்களுக்கு நேரம் எடுக்கும். ஆனால் தந்தைக்கு நேரமே எடுப்பதில்லை. நீங்கள் எல்லோரும் ஒரு விமானத்தை அல்லது புகைவண்டியைப் பிடித்து வரவேண்டியுள்ளது. ஆனால் தந்தை ஒரு இரதத்திற்குள் வரவேண்டியது மட்டுமே. நீங்கள் மட்டும் தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட வந்துள்ளீர்கள் என்பதல்ல. ஆனால், தந்தையும் ஆதி சகபாடிகளான பிராமண ஆத்மாக்களின், பிறப்பு எடுத்ததில் இருந்து அவரின் சகபாடிகளாக இருக்கும் குழந்தைகளின் பிறந்தநாளையும் கொண்டாடுவதற்குத் தந்தையும் வந்துள்ளார். தந்தை தனியே அவதரிப்பதில்லை. பிராமணர்கள் இல்லாமல், தந்தையால் தனித்து இந்த யாகத்தை உருவாக்க முடியாது. எனவே, பாபா இந்த யாகத்தைப் பிராமணர்களுடன் பிரம்மாவின் மூலம் உருவாக்கியுள்ளார். அதன்பின்னரே நீங்கள் எல்லோரும் உருவாக்கப்பட்டீர்கள். எனவே, நீங்கள் பாபாவுடன் இரண்டு வருடங்களோ அல்லது இரண்டு மாதங்களோ இருந்தாலும், உங்களின் தெய்வீகப் பிராமணப் பிறப்பிற்காக வாழ்த்துக்கள். இந்தத் தெய்வீகப் பிறவி மிகவும் மேன்மையானது! தெய்வீகப் பிறவி எடுத்திருக்கும் ஒவ்வொரு பிராமண ஆத்மாவின் பிரகாசிக்கும் பாக்கிய நட்சத்திரத்தைப் பார்க்கும்போது தந்தை மிகவும் சந்தோஷப்படுகிறார். அத்துடன் சதா, ஆஹா வைரம் போன்ற பெறுமதி மிக்க வாழ்க்கை வாழும் பிராமணக் குழந்தைகளே! ஆஹா! நீங்கள் எல்லோரும், ஆஹா! ஆஹா! (அற்புதம்), அப்படித்தானே? தந்தை உங்களை அற்புதமான குழந்தைகள் ஆக்கியுள்ளார். தந்தையின் அலௌகீகப் பிறந்தநாள் மிகவும் தனித்துவமானது. குழந்தைகளான உங்கள் எல்லோருடைய பிறந்தநாளும் மிகவும் அன்பானதும் தனித்துவமானதும் ஆகும். தந்தையின் பிறந்தநாள் அல்லது ஜெயந்தியே இப்படிப்பட்டது. வேறு எவருக்கும் இதைப் போன்ற பிறந்தநாள் இருக்காது. அசரீரியானவரின் தெய்வீகப் பிறந்தநாளைப் போன்றதொரு பிறந்தநாள் வேறு எவருக்கும் இருக்காது. ஆத்மாக்கள் எல்லோரும் தமது சொந்த பௌதீகச் சரீரங்களுடன் பிறப்பு எடுக்கிறார்கள். ஆனால், அசரீரியான ஒரேயொருவரோ, வேறொருவரின் சரீரத்தில் பிரவேசிப்பதன் மூலமே பிறப்பு எடுக்கிறார். கல்பம் முழுவதிலும் யாராவது இந்த முறையில் பிறப்பு எடுத்துள்ளார்களா? ஒரேயொரு தந்தைக்கு மட்டுமே இத்தகைய தனித்துவமான பிறந்தநாள் உள்ளது. இதையே பக்தர்கள் சிவஜெயந்தி எனக் கொண்டாடுகிறார்கள். இதனாலேயே, இந்தத் தெய்வீகப் பிறப்பின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிவீர்கள். பக்தர்களுக்கு இதன் முக்கியத்துவம் என்னவென்று தெரியாவிட்டாலும், அவர்களும் தாம் கேட்டுள்ளதற்கேற்ப, இறைவனை அதிமேலானவராகக் கருதி, அதைத் தொடர்ந்து கொண்டாடுகிறார்கள். குழந்தைகளான நீங்கள் அதைக் கொண்டாடுவது மட்டுமல்ல, ஆனால், கொண்டாடுவதுடன் கூடவே, நீங்கள் உங்களையும் தந்தைக்குச் சமமானவர்கள் ஆக்குகிறீர்கள். அலௌகீக, தெய்வீகப் பிறப்பின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிவீர்கள். வேறெந்தக் குழந்தைகளும் தமது தந்தை பிறப்பு எடுக்கும் நேரத்தில் பிறப்பதில்லை. ஆனால், சிவஜெயந்தி என்றால், தந்தையின் தெய்வீகப் பிறப்புடன்கூடவே, இது அவரின் குழந்தைகளின் பிறப்பும் ஆகும். இதனாலேயே, நீங்கள் வைரவிழாவைக் கொண்டாடுகிறீர்கள். எனவே, தந்தையின் பிறப்புடன் இது குழந்தைகளின் தெய்வீகப் பிறப்பும் ஆகும். இந்தப் பிறப்பு மட்டுமே வைரம் போன்று பெறுமதியானது. இந்த வைரம் போன்ற பிறந்தநாளைக் கொண்டாடுவதன் மூலம், உங்களின் வாழ்க்கைகள் வைரம் போன்றவை ஆகுகின்றன. குழந்தைகளான நீங்கள் எல்லோரும் இதன் அர்த்தத்தை மிக நன்றாக அறிவீர்கள். அத்துடன் நீங்கள் அதை மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்துகிறீர்கள். குழந்தைகளான நீங்கள் எப்படித் தந்தையின் தெய்வீகப் பிறப்பை மிகுந்த முக்கியத்துவத்துடனும் ஊக்கம் உற்சாகத்துடனும் கொண்டாடுகிறீர்கள் என்ற செய்திகளை எல்லாவற்றையும் பாப்தாதா தொடர்ந்து பார்க்கிறார், கேட்கிறார். சேவையாளர் குழந்தைகளின் தைரியத்திற்குப் பிரதிபலனாக, பாப்தாதா தொடர்ந்து அவர்களுக்கு உதவி வழங்குகிறார். இது குழந்தைகளின் தைரியம், அத்துடன் தந்தையின் உதவியும் ஆகும்.

தற்காலத்தில், குழந்தைகள் எல்லோருடைய அன்பான ஓர் எண்ணம் பாப்தாதாவை மீண்டும் மீண்டும் வந்தடைகிறது: இப்போது, நான் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாகத் தந்தைக்குச் சமமானவர் ஆகவேண்டும். தந்தையும் கூறுகிறார்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்படி ஆகவேண்டும். உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்தத் திடசங்கற்பமான நம்பிக்கை உள்ளது. எவ்வாறாயினும், நீங்கள் இப்போது இதைக் கீழ்க்கோடிட வேண்டும்: நான் இவ்வாறு ஆகாவிட்டால், யார் அப்படி ஆகுவார்கள்? நான் அப்படி இருந்தேன், நான் இப்படி இருக்கிறேன், நான் தொடர்ந்து ஒவ்வொரு கல்பமும் இப்படி ஆகுவேன். உங்களுக்கு இந்த உறுதியான நம்பிக்கை இருக்கிறதா? இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் சிவஜெயந்தியைக் கொண்டாட வந்துள்ளீர்கள். இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் எல்லோரும் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உலகின் எந்தவொரு மூலையையும் விடக்கூடாது என்ற மகத்தான உற்சாகத்தை இரட்டை வெளிநாட்டவர்கள் கொண்டிருப்பதை பாப்தாதா பார்க்கிறார். பாரதத்தைச் சேர்ந்தவர்கள் சேவை செய்வதற்கு அதிகளவு நேரத்தைப் பெற்றிருந்தார்கள். அதனால் அவர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் செய்தியைக் கொடுத்துள்ளார்கள். எவ்வாறாயினும், இரட்டை வெளிநாட்டவர்களுக்கு பாரதத்தைச் சேர்ந்தவர்களை விடக் குறைந்தளவு நேரமே கிடைத்துள்ளது. எவ்வாறாயினும், அவர்களின் ஊக்கத்தாலும் உற்சாகத்தாலும், தாம் நன்றாகச் சேவை செய்துள்ளோம் என்பதை பாபாவிற்கு நிரூபித்துள்ளார்கள். தொடர்ந்தும் அவர்கள் அதை நிரூபிப்பார்கள். பாரதத்திலே ஆரம்பிக்கப்பட்டுள்ள வெவ்வேறு தொழில் துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் செய்யும் சேவையானது, சகல தொழில்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாபாவின் செய்தியை வழங்குவதை இலகுவாக்கியுள்ளது. ஏனென்றால், ஒவ்வொரு தொழில் துறையைச் சேர்ந்தவர்களும் தமது தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றே விரும்புகிறார்கள். எனவே, தொழில்துறைகளுக்குச் சேவை செய்யும் இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் நல்லது. இதனூடாக, இங்கு வருகின்ற வெவ்வேறு தொழில் துறைகளைச் சேர்ந்த விசேடமான ஆத்மாக்களினூடாகப் பிரமாதமான சேவை இடம்பெறுகிறது. நீங்கள் இதை விரும்புகிறீர்கள்தானே? நீங்கள் தொழில் துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் சேவை செய்வதை விரும்புகிறீர்கள்தானே? வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும், நல்ல குழுக்களுக்கு ரிட்ரீட்கள் வைப்பதன் மூலம் அவர்களை இங்கே அழைத்து வருகிறார்கள். அதுவும் நல்லதொரு வழிமுறையே. எப்படி பாரதத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு தொழில் துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பை எடுத்துள்ளார்களோ, அவ்வாறே, இரட்டை வெளிநாட்டவர்களின் வழிமுறையும் மிகவும் நல்லதே. இரண்டு பேர்களின் சேவையையும் பாப்தாதா விரும்புகிறார். அவை இரண்டும் நல்லவை. ஜகதீஷ்பாய் மிக நல்லதொரு கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளார். வெளிநாடுகளில் ரிட்ரீட் மற்றும் கலந்துரையாடல்கள் என்ற வழிமுறைகளைக் கண்டுபிடித்தது யார்? (எல்லோரும் ஒன்றாகவே செய்தார்கள்.) பாரதத்திலும், எல்லோரும் ஒன்றாகவே பணிபுரிகிறார்கள். ஆனால், யாராவது ஒருவர் கருவி ஆகவேண்டியுள்ளது. இது நல்லது. எல்லோரும் தமக்குச் சமமாக இருப்பவர்களின் ஒன்றுகூடலை விரும்புவார்கள். இரண்டு வகையான சேவையைச் செய்யும்போது, பல வகையான ஆத்மாக்களை நெருக்கமாகக் கொண்டு வரும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. நீங்கள் பெறுபேற்றை விரும்புகிறீர்கள்தானே? ரிட்ரீட்டின் பெறுபேறு நன்றாக இருந்ததா? வெவ்வேறு தொழில் துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் சேவை செய்வதன் பெறுபேறும் நன்றாகவே இருந்தது. இந்த நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ, சேவை செய்வதற்கு மிக நல்ல உற்சாகம் காணப்படுகிறது. தமது இதயபூர்வமாக சுயநலமற்ற சேவை செய்வதன் மூலம் தொடர்ந்து முன்னேறுபவர்கள், தமது புண்ணியக் கணக்கில் அதிகளவு சேமிப்பதை பாப்தாதா பார்க்கிறார். குழந்தைகள் எல்லோருக்கும், முதல் கணக்கு, அவர்களின் சொந்த முயற்சிகளின் வெகுமதியாகும். இரண்டாவது கணக்கு, திருப்தியாக இருந்து, மற்றவர்களையும் திருப்திப்படுத்துவதனால் பெறப்படும் ஆசீர்வாதங்களின் கணக்காகும். மூன்றாவது கணக்கு, யோகியுக்த் மற்றும் யுக்தியுக்த் முறையில் மிகச்சரியான சேவை செய்வதற்கான பிரதிபலனாகப் பெறப்படும் புண்ணியக் கணக்காகும். பாப்தாதா தொடர்ந்தும் குழந்தைகள் எல்லோருடைய இந்த மூன்று கணக்குகளையும் பார்க்கிறார். இந்த மூன்று கணக்குகளிலும் குழந்தைகள் சேமிப்பதன் அடையாளம், அவர்கள் தங்களை சதா இலகுவான முயற்சியாளர்களாக அனுபவம் செய்வார்கள். அத்துடன் மற்றவர்களும் இலகுவாக அவர்களிடமிருந்து இலகு முயற்சிக்கான தூண்டுதல்களைப் பெறுவார்கள். அவர்கள் இலகு முயற்சியின் சின்னமாக இருப்பார்கள். அவர்கள் சிரமப்படவே மாட்டார்கள். அவர்கள் தந்தையையும் சேவையையும் குடும்பத்தையும் நேசிப்பவர்கள். இந்த மூன்று வகையான அன்பும் உங்களைச் சிரமப்படுவதில் இருந்து விடுவிக்கிறது.

நீங்கள் எல்லோரும் சதா இலகுவான முயற்சியாளர்களாக இருப்பீர்கள் எனக் குழந்தைகளான உங்கள் எல்லோரின் மீதும் பாப்தாதா மேன்மையான எதிர்பார்ப்பை வைத்துள்ளார். நீங்கள் 63 பிறவிகளாகப் பக்தி மார்க்கத்தில் சிரமப்பட்டீர்கள், அத்துடன் குழப்பத்துடன் அலைந்து திரிந்தீர்கள். இந்த ஒரேயொரு பிறவியில் மட்டுமே உங்களால் சிரமப்படுவதில் இருந்து விடுதலை அடைய முடியும். நீங்கள் நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து சிரமப்படுவீர்களாக இருந்தால், உங்களால் சங்கமயுகத்தின் ஆசீர்வாதத்தையும் அன்பைப் பெறுவதனால் இலகு முயற்சியாளர் ஆகுகின்ற ஆசீர்வாதத்தையும் பெற முடியுமா? இந்த யுகம் முடிவடையும் போது, இந்த ஆசீர்வாதமும் முடிவிற்கு வந்துவிடும். அதனால், எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக இந்த அநாதியான ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஒரு பணியோ அல்லது பிரச்சனையோ எத்தனை பெரியதாக இருந்தாலும், அந்தப் பணியை அல்லது பிரச்சனையை பட்டரில் இருந்து ஒரு தலைமுடியை நீக்குவதைப் போல் இலகுவாக வெற்றிகொள்ளுங்கள். குழந்தைகளான உங்களின் சிலரின் விiயாட்டுக்களை பாப்தாதா பார்க்கும்போது, வியப்படைவதுடன்கூடவே, பாபா உங்களில் கருணையும் கொள்கிறார். குழந்தைகளான உங்களில் சிலரின் முன்னால் எந்தவொரு பிரச்சனையோ அல்லது பணியோ வரும்போது, இது சிலவேளைகளில் உங்களின் முகங்களிலும் தென்படுகிறது. உங்களின் முகங்கள் சிறிது மாறுகின்றன. அதன்பின்னர், என்ன நடந்தது என யாராவது கேட்கும்போது, என்ன செய்வது, செய்வதற்கு அதிகளவு வேலைகள் உள்ளன என நீங்கள் சொல்கிறீர்கள். உங்களுக்கு எந்தவிதமான தடைகளும் ஏற்படாவிட்டால், உங்களை எப்படித் தடைகளை அழிப்பவர் என்ற பட்டத்தால் புகழ முடியும்? உங்களின் மனோநிலை சிறிதளவேனும் மாறியுள்ளது என்பது உங்களின் முகத்தில் சிறிதளவேனும் தென்படக்கூடாது. அத்துடன் எந்தவிதக் களைப்பின் அறிகுறிகளும் தென்படக்கூடாது. ஏன்? அரைக்கல்பமாக பூஜிக்கப்பட்டு வருகின்ற உங்களின் உயிரற்ற விக்கிரகங்களில் களைப்பின் அறிகுறிகள் அல்லது மனோநிலை மாற்றங்கள் ஏதாவது காணப்படுகிறதா? உயிரற்ற விக்கிரகங்கள் எப்போதும் புன்னகையுடன் காணப்படுவதனால், அவை யாருடைய விக்கிரகங்கள்? அவை உங்களுடையவைதானே? எனவே, உயிரற்ற விக்கிரகங்கள் உங்களின் உயிர்வாழும் ரூபங்களின் ஞாபகார்த்தங்கள் ஆகும். இதனாலேயே, சிறிதளவேனும் களைப்பின் சுவடேனும் இருக்கக்கூடாது. அல்லது, ஏனைய வார்த்தைகளில் சொன்னால், எரிச்சல் அடைதல் இருக்கக்கூடாது. பாப்தாதாவுடன் கூடவே, ஏனைய அனைவருமே எப்போதும் சிரித்த முகத்தையே விரும்புகிறார்கள். எரிச்சலுடன் இருக்கும் ஒருவரின் முன்னால் யாராவது செல்வார்களா? நான் இப்போது இவருக்கு எதையாவது சொல்லட்டுமா வேண்டாமா? என அவர்கள் முதலில் நினைப்பார்கள். பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உங்களின் உயிரற்ற விக்கிரகங்களிடம் வருகிறார்கள். எனவே, உயிருள்ள ரூபத்தில் உங்களுக்குள் பாரமாக இருக்குமாயின், அவர்கள் அதை விரும்புவார்களா? இப்போது, பாப்தாதா குழந்தைகளின் முகங்கள் அனைத்தும் தேவதையாக, ஆசீர்வாதங்களை அருள்பவரின் ரூபமாக, அருள்பவராகவும், கருணைநிறைந்தவராகவும் களைப்பற்றவராகவும் இலகு யோகியாகவும் இலகுவான முயற்சியாளராகவும் பார்க்க விரும்புகிறார். இந்தச் சந்தர்ப்பம் இப்படி இருந்தது! எனச் சொல்லாதீர்கள். சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், நீங்கள் சதா புன்னகையுடனும் குளிர்மையாகவும் இருக்க வேண்டும். சீரியஸாகவும் முதிர்ச்சியாகவும் இருத்தல், இலேசாகவும் களிப்பூட்டுபவராகவும் இருத்தலுடன் சமநிலையில் இருக்க வேண்டும். மக்கள் சடுதியாக உங்களின் முன்னால் வரும்போது, பிரச்சனைகளாலோ அல்லது ஏதாவதொரு பணியாலோ, நீங்கள் ஓர் இலகு முயற்சியாளராகத் தோற்றமளிக்காவிட்டால், அவர்கள் எதைக் காண்பார்கள்? உங்களின் அந்தச் சித்திரத்தையே அவர்கள் தங்களுடன் எடுத்துச் செல்வார்கள். ஏதாவதொரு வேளையில், ஒருவர் சடுதியாக உங்களின் புகைப்படத்தை எடுத்தால், நீங்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் வயதாக இருந்தாலும், உங்களின் முகங்கள் பாபா விவரித்ததைப் போல் இருக்க வேண்டும். அருள்பவர்கள் ஆகுங்கள். எடுப்பவர்கள் ஆகாதீர்கள். ஆனால் அருள்பவர்கள் ஆகுங்கள். யாராவது ஒருவர் உங்களுக்கு எதைக் கொடுத்தாலும், அது நல்லதோ கெட்டதோ, நீங்களே அனைவரிலும் அதிமகத்தான தந்தைக்குச் சொந்தமானவர்களான, பெரிய இதயங்களைக் கொண்டவர்கள். யாராவது உங்களுக்குத் தீயது எதைக் கொடுத்தாலும், உங்களின் பெரிய இதயங்களால், அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள். ஆனால், நீங்கள் அருள்பவர்களாகி, அவருக்கு ஒத்துழைப்பையும் அன்பையும் சக்தியையும் வழங்குங்கள். அவருக்கு உங்களின் ஸ்திதியின் மூலம் ஏதாவதொரு நற்குணத்தைப் பரிசாக வழங்குங்கள். நீங்களே மிகப்பெரிய இதயத்தைக் கொண்டுள்ள ஒரேயொருவரான, அனைவரிலும் மகத்தான தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள். அந்த ஆத்மாவிற்காக உங்களின் இதயங்களில் மேலதிகமான அன்பு வெளிப்படட்டும். ஏனென்றால், இந்த அன்பு சக்தியால் அந்த ஆத்மா மாற்றம் அடைவார். நீங்கள் இத்தகைய பெரிய இதயங்களைக் கொண்டவர்களா? அல்லது, உங்களிடம் சிறிய இதயங்களே உள்ளனவா? உங்களிடம் ஏற்றுக் கொள்ளும் சக்தி இருக்கிறதா? அப்படியென்றால், எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுங்கள்! கடலில் அதிகளவு குப்பை கொட்டப்படுகிறது. ஆனால் அந்தக் கடலோ, அந்தக் குப்பையை எறிந்த நபரை நோக்கி மீண்டும் குப்பையை எறிவதில்லை. நீங்களே அதிபதிகள். ஞானக்கடலினதும் சகல சக்திகளின் கடலினதும் குழந்தைகள் ஆவீர்கள்.

எனவே, பாப்தாதா எதைப் பார்க்க விரும்புகிறார் என்பதை நீங்கள் கேட்டீர்களா? உங்களில் பெரும்பாலான குழந்தைகள் இந்த வருடம் உங்களை மாற்றுகின்ற இலட்சியைத்தை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் எதிர்காலத்தில் எப்போதாவது அதைச் செய்வீர்கள் என்றோ, அல்லது நீங்கள் அதைப் பற்றிச் சிந்திப்பீர்கள் என்றோ சொல்லாதீர்கள். ஆனால், நீங்கள் நிச்சயமாக அதைச் செய்வீர்கள் எனச் சொல்லுங்கள். நீங்கள் இதைச் செய்ய வேண்டுமா அல்லது நீங்கள் வீட்டிற்குத் திரும்பிச் சென்றபின்னர் அதைப் பற்றிச் சிந்திப்பீர்களா? நீங்கள் இதைச் செய்யவே வேண்டும் என நினைப்பவர்கள், ஒரு கையால் தட்டுங்கள் (அசையுங்கள்). (எல்லோரும் தமது கைகளை உயர்த்தினார்கள்.) மிகவும் நல்லது! வெறுமனே அந்தக் கையை உயர்த்தாதீர்கள். ஆனால், உங்களின் மனதிலே திடசங்கற்பம் என்ற கையையும் உயர்த்துங்கள். பௌதீகமான கையை உயர்த்துவது இலகுவானது. உங்களின் மனதின் திடசங்கற்பம் என்ற கை, உங்களை சதா வெற்றி சொரூபம் ஆக்குகிறது. நீங்கள் எது நினைத்தாலும், அது நடக்க வேண்டும். நீங்கள் நினைப்பது நேர்முகமாகவே இருக்க வேண்டும். நீங்கள் எதிர்மறையான எதையும் நினைக்க முடியாது. எதிர்மறையான எண்ணங்களின் பாதை எல்லாவேளைக்கும் மூடப்பட்டுள்ளது. எதை எப்படி மூடுவது என உங்களுக்குத் தெரியுமா? அல்லது, ஏனைய கதவுகள் ஒரு புயல்காற்றின்போது தானாகத் திறந்து கொள்வதைப் போல், இதுவும் தானாகவே திறந்து விடுகிறதா? அது அப்படி இல்லைத்தானே? நீங்கள் இப்போதுதான் கதவை மூடினீர்கள் என நினைப்பீர்கள், ஆனால் ஒரு புயல்காற்று அந்தக் கதவைத் திறந்துவிடும். அதனால், கதவைத் தளர்வாக மூடி வைக்காதீர்கள். அச்சா.

இரட்டை வெளிநாட்டவர்களின் விழா நன்றாக இருந்ததுதானே? (பத்து வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக ஞானத்தில் இருக்கும் 400 இரட்டை வெளிநாட்டு சகோதர, சகோதரிகளைக் கௌரவிக்கும் விழா ஒன்று நடைபெற்றது) நீங்கள் அதை இரசித்தீர்களா? அதைக் கொண்டாடியவர்களும் அதை இரசித்தவர்களும் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இதில் பாண்டவர்களும் இருக்கிறார்கள். இதன் முக்கியத்துவம் என்ன? இதைக் கொண்டாடுவதன் முக்கியத்துவம் என்ன? கொண்டாடுவது என்றால், அவ்வாறு ஆகுதல் என்று அர்த்தம். சதா இந்தக் கிரீடத்தை அணிந்து கொள்ளுங்கள். சுயத்திற்கான முயற்சியையும் சேவைக்கான பொறுப்பையும் நீங்கள் என்னவென்று அழைப்பீர்கள்? அது களிப்பான ஒரு விடயம். சதா சேவையை இரசிக்கும் கிரீடத்தை அணிந்து கொள்ளுங்கள். எல்லோரும் ஒரு தங்கச் சால்வை (ஜொலிக்கும் தங்கத் துணியாலான ஒரு சால்வை) அணிந்தார்கள். ஏன் உங்கள் எல்லோருக்கும் இந்தத் தங்கச் சால்வை அணியப்பட்டது? ஏனென்றால், உங்களால் எப்போதும் சத்தியயுக ஸ்திதியைக் கொண்டிருக்க முடியும். வெள்ளி யுகம் அல்ல, ஆனால் பொன்யுகம். நீங்கள் ஒரு மாலையையும் அணிந்தீர்கள். நீங்கள் இரண்டு மாலைகளை அணிந்தீர்கள். நீங்கள் எந்த இரண்டு மாலைகளை அணிவீர்கள்? ஒன்று, சதா தந்தையின் கழுத்து மாலையாக இருத்தல். எப்போதும்! இந்த மாலையை ஒருபோதும் கழுத்தில் இருந்து கழற்றாதீர்கள். தந்தையின் கழுத்து மாலையாக இருங்கள். இரண்டாவதாக, சதா சேவை செய்வதன் மூலம், நீங்கள் மற்றவர்களையும் தந்தையின் கழுத்து மாலையின் பாகங்களாக ஆக்குகிறீர்கள். இவையே இரண்டு மாலைகள் ஆகும். எனவே, அதைக் கொண்டாடுபவர்கள் இரசிக்கிறார்கள். அத்துடன் அதைப் பார்ப்பவர்களும் இரசிக்கிறார்கள். எனவே, இந்தக் கொண்டாட்டங்களின் பின்னாலுள்ள அர்த்தத்தை பாபா உங்களுக்குக் கூறியுள்ளார். இத்துடன்கூடவே, கொண்டாடுவது என்றால், உங்களின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அதிகரித்தல் என்று அர்த்தம். பாப்தாதா ஒவ்வொருவரின் அனுபவத்தையும் கண்டார். உங்களுக்கு நல்ல அனுபவங்கள் ஏற்பட்டன. சந்தோஷமும் போதையும் ஒவ்வொருவரின் முகத்திலும் புலப்பட்டன. உங்களின் ரூபத்தைச் சக்திவாய்ந்ததாகவும் புன்னகையுடனும் சீரியஸாகவும் முதிர்ச்சியாகவும் இலேசாகவும் களிப்பூட்டுவதாகும் வைத்திருங்கள். தற்போதைய சூழ்நிலைகளுக்கேற்ப, இவற்றை வெறுமனே கேட்பவர்களே அதிகமாக இருக்கிறார்கள். இவற்றைப் புரிந்து கொள்பவர்கள் வெகு சிலரே இருக்கிறார்கள். உங்களைப் பார்த்து அனுபவத்தைப் பெறுபவர்கள் அதிகமாகக் காணப்படுகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு இந்த விடயங்களைச் சொல்வதை விடுத்து, அவர்களால் உங்களின் முகங்களில் தந்தையின் அறிமுகத்தைக் காணக்கூடியதாக இருக்க வேண்டும். எனவே, இது நல்லது. பாப்தாதாவும் இவை அனைத்தையும் காண்பதில் சந்தோஷப்படுகிறார். இந்த வருடம், இந்தப் பருவகாலம், கொண்டாட்டங்களுக்குரிய விசேடமான பருவகாலமாக உள்ளது. எல்லா வேளையும் இவை ஒன்றுபோல் இருக்க மாட்டாது.

(பாப்தாதா அப்பியாசத்தைச் செய்வித்தார்) உங்கள் எல்லோருக்கும் ஆளுகின்ற சக்தி உள்ளதா? நீங்கள் விரும்பிய போதெல்லாம் உங்களால் உங்களின் பௌதீக அங்கங்களை ஆள முடிகிறதா? நீங்கள் சுயத்தின் அதிபதிகள் ஆகியுள்ளீர்களா? சுய அதிபதிகளால் மட்டுமே உலக அதிபதிகள் ஆகமுடியும். சூழ்நிலை எத்தகையதாக இருந்தாலும், நீங்கள் விரும்பும்போதெல்லாம், உங்களின் மனதையும் புத்தியையும் நிறுத்தும்படி நீங்கள் கட்டளை இடும்போது, உங்களால் அவற்றை நிறுத்த முடிகிறதா? அல்லது, அதற்கு மேலும் நேரம் எடுக்கிறதா? நாள் முழுவதும் நீங்கள் ஒவ்வொருவரும் அவ்வப்போது இந்த முயற்சியை எடுப்பது அத்தியாவசியமானதாகும். உங்களின் மனமும் புத்தியும் மிகவும் பிஸியாக இருக்கும்போது, அந்த வேளையில், உங்களால் அவற்றை ஒரு விநாடியில் நிறுத்த முடிகிறதா என முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் நிறுத்து! எனச் சொன்னதும், அவற்றை நிறுத்த உங்களுக்கு மூன்று நிமிடங்கள் அல்லது ஐந்து நிமிடங்கள் எடுப்பதாக இருக்கக்கூடாது. இந்தப் பயிற்சியானது, இறுதியில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் அடிப்படையிலேயே, உங்களால் திறமைச் சித்தி எய்த முடியும். அச்சா.

தமது இதயபூர்வமாக சதா ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடும் அன்பான ஆத்மாக்கள் எல்லோருக்கும், தமது அனுபவத்தின் அடிப்படையில் அதிகாரிகளாக இருக்கும் விசேடமான ஆத்மாக்களுக்கும் தந்தையையும் அவரின் அறிமுகத்தையும் வெளிப்படுத்தும் முகங்களைக் கொண்டுள்ள சேவையாளர் ஆத்மாக்களுக்கும், சீரியஸாகவும் முதிர்ச்சியாகவும் அதேவேளை இலேசாகவும் களிப்பூட்டுபவராகவும் இருப்பதற்கிடையில் எப்போதும் ஒரு சமநிலையைப் பேணுவதன் மூலம் எல்லோரின் ஆசீர்வாதங்களுக்கான உரிமையைப் பெற்றுள்ள ஆத்மாக்களுக்கும், இந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் நானா திசைகளிலும் உள்ள குழந்தைகள் எல்லோருக்கும் தயவு செய்து சிவராத்திரிக்காக வாழ்த்துக்கள், வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள். அத்துடன் தயவு செய்து இதயங்களுக்கு சௌகரியம் அளிக்கும் திலாராம் பாப்தாதாவின் ஆழமான, இதயபூர்வமான அன்பையும் நினைவுகளையும் நமஸ்காரங்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் இராச்சியத்திற்கான சகல உரிமைகளையும் கொண்டிருக்கும் உங்களின் ரூபத்தையும் உங்களின் பூஜிக்கத்தகுதிவாய்ந்த ரூபத்தையும் உணர்ந்தவராக இருப்பதன் மூலம் சகல பொக்கிஷங்களும் நிரம்பிய அருள்பவர் ஆகுவீர்களாக.

சதா இதை உணர்ந்தவராக இருங்கள்: நான் பூஜிக்கத்தகுதிவாய்ந்ததோர் ஆத்மா, மற்றவர்களுக்கு வழங்கும் வள்ளல், நான் எடுப்பவன் அல்ல, ஆனால் கொடுப்பவன். எப்படித் தந்தை தானாக உடன்பட்டு, உங்கள் எல்லோருக்கும் வழங்குகிறாரோ, அதேபோல், நீங்களும் மாஸ்ரர் அருள்பவர்களாகித் தொடர்ந்தும் கொடுக்க வேண்டும். எதையுமே கேட்கக்கூடாது. இராச்சியத்திற்கான உரிமையைக் கொண்டிருக்கும் மற்றும் பூஜிக்கத்தகுதிவாய்ந்தவராக இருக்கும் உங்களின் ரூபங்களின் விழிப்புணர்வைப் பேணுங்கள். இன்றுவரை மக்கள் உங்களின் உயிரற்ற விக்கிரகங்களின் முன்னால் சென்று, எதையாவது வேண்டுகிறார்கள். அல்லது பாதுகாப்பை வேண்டுகிறார்கள். எனவே, நீங்களே பாதுகாப்பவர்கள். பாதுகாப்பிற்காக வேண்டி அழைப்பவர்கள் அல்ல. எவ்வாறாயினும், ஓர் அருள்பவர் ஆகுவதற்கு, நினைவையும் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருப்பதன் மூலமும் சேவை செய்வதன் மூலமும் சகல பொக்கிஷங்களும் நிறைந்தவர்கள் ஆகுங்கள்.

சுலோகம்:
உங்களின் நடத்தையிலும் உங்களின் முகத்திலும் உள்ள சந்தோஷமே, ஆன்மீக ஆளுமையின் அடையாளமாகும்.