14-01-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! உங்கள் பார்வை
சரீரங்களின் மீது செல்லக் கூடாது, தன்னை ஆத்மா எனப் புரிந்து
கொள்ளுங்கள், சரீரங்களைப் பார்க்காதீர்கள்.
கேள்வி:
ஒவ்வொரு பிராமணக் குழந்தையும்
எந்த இரண்டு விஷயங்களின் மீது கவனம் கொடுக்க வேண்டும்?
பதில்:
1. படிப்பின் மீது, 2. தெய்வீக
குணங்களின் மீது. பல குழந்தைகளிடம் கோபத்தின் அம்சம் கூட
இருப்பதில்லை, சிலரோ கோபத்தில் வந்து மிகவும் சண்டையிடுகின்றனர்.
நாம் தெய்வீக குணங்களை தாரணை செய்து தேவதையாக வேண்டும் என்று
குழந்தைகள் சிந்திக்க வேண்டும். ஒரு போதும் கோபத்தில் வந்து
பேசக்கூடாது. பாபா சொல்கிறார் - எந்த குழந்தைக்குள்ளாவது கோபம்
இருக்கிறது என்றால் அவர்கள் பூதநாதன் - பூத நாயகி ஆவார்கள்.
இப்படிப்பட்ட பூதங்களிடம் பேசவும் கூடாது
பாடல்:
அதிர்ஷ்டத்தை எழுப்பி வந்தேன். .
.
ஓம் சாந்தி.
குழந்தைகள் இந்தப் பாடலைக் கேட்டீர்கள், வேறு எந்த
சத்சங்கத்திலும் எப்போதும் இசைத்தட்டை (ரிகார்டு) வைத்து புரிய
வைப்பதில்லை. அங்கே சாஸ்திரத்தை சொல்கின்றனர்.
குருத்துவாரத்தில் (சீக்கியர் கோவில்) கிரந்தத்தி-ருந்து இரண்டு
வசனங்களை எடுத்துக் கொள்கின்றனர், பின்னர் கதை சொல்பவர்கள்
அமர்ந்து அதனை விஸ்தரிக்கின்றனர். ரிகார்டை வைத்துப்
புரியவைப்பது எங்கும் நடப்பதில்லை. இவையனைத்தும் பக்தி
மார்க்கத்தின் பாடல்களாகும் என்று தந்தை இப்போது புரிய
வைக்கிறார். குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது, ஞானம்
தனிப்பட்டது, அது ஒரு நிராகார சிவனிடமிருந்துதான் கிடைக்கும்.
இதற்கு ஆன்மீக ஞானம் என்று சொல்லப்படுகிறது. ஞானம் பல விதமாக
உள்ளதல்லவா! இந்த கம்பளம் எப்படி உருவாகிறது என்ற ஞானம் (செய்முறை
விவரம்) உங்களுக்கு உள்ளதா என்று கேட்கப்படலாம். ஒவ்வொரு
பொருளைக் குறித்தும் ஞானம் (உருவாக்கம் பற்றிய விளக்கம்)
இருக்கிறது. அவை ஸ்தூலமான விசயங்கள். ஆத்மாக் களாகிய நம்
அனைவருக்கும் ஒரு ஆன்மீகத் தந்தை அவர் ஒருவரே என்று குழந்தைகள்
அறிவார்கள். அவருடைய உருவம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அந்த
நிராகாரரின் சித்திரம் (உருவம்) கூட சாலிக்கிராமம் (குழந்தைகளைப்)
போன்றதே. அவரைத்தான் பரமாத்மா என்று கூறுகின்றனர். அவர்தான்
நிராகாரமானவர் என்று கூறப்படுகிறார். மனிதரைப் போன்ற சரீரம்
கிடையாது. அனைத்து பொருட்களுக்கும் உருவம் கண்டிப்பாக
இருக்கிறது. அவையனைத் திலும் சிறியதிலும் சிறியதான உருவம்
ஆத்மாவுடையதாகும். அதனை இயற்கை என்றே சொல்வார்கள் ஆத்மா மிகவும்
சிறியது, அதனை இந்தக் கண்களால் பார்க்க முடிவதில்லை.
குழந்தைகளாகிய உங்களுக்கு திவ்ய திருஷ்டி கிடைக்கிறது, அதன்
மூலம் அனைத்தும் காட்சிகளாகத் தெரிகிறது. எது கடந்த காலமாக
ஆகிவிட்டதோ அது திவ்ய திருஷ்டியின் மூலம் பார்க்கப்படுகிறது.
முதல் நம்பரில் இவர் கடந்து சென்றவர் ஆகி விட்டார். இப்போது
மீண்டும் வந்துள்ளார் எனும்போது அவருடைய காட்சியும் தெரிகிறது.
மிகவும் சூட்சுமமானது. பரமபிதா பரமாத்மாவைத் தவிர ஆத்மாவின்
ஞானம் வேறு யாரும் கொடுக்க முடியாது என்பது இதிலிருந்து
புரிந்து கொள்ள முடியும். மனிதர்கள் ஆத்மாவை சரியாகத் தெரிந்து
கொள்ளவில்லை, அதேபோல பரமாத்மாவையும் கூட சரியாகத் தெரிந்து
கொள்ள முடியாது. உலகில் மனிதர்களின் வழிகள் பல இருக்கின்றன.
சிலர் ஆத்மா பரமாத்மாவுடன் ஐக்கியமாகி விட்டது என்று
சொல்கின்றனர், சிலர் வேறு எதையோ சொல்கின்றனர். இப்போது
குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள், அதுவும்
வரிசைக்கிரமமான முயற்சியின்படி, அனைவரின் புத்தியிலும் ஒன்று
போல பதிய முடியாது. அடிக்கடி புத்தியிலும் பதிய வைக்கப்படுகிறது.
நாம் ஆத்மாக்கள், ஆத்மாதான் 84 பிறவிகளின் நடிப்பை நடிக்க
வேண்டும். தன்னை ஆத்மா எனப் புரிந்து கொண்டு பரமபிதா
பரமாத்மாவாகிய என்னைத் தெரிந்து கொண்டு நினைவு செய்யுங்கள் என
இப்போது தந்தை சொல்கிறார். நான் இவருக்குள் பிரவேசமாகி
குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம் கொடுக்கிறேன் என்று தந்தை
கூறுகிறார். குழந்தைகளாகிய நீங்கள் தன்னை ஆத்மா என புரிந்துக்
கொள்வதில்லை, அதனால் உங்கள் பார்வை சரீரத்தின் மீது சென்று
விடுகிறது. உண்மையில் உங்களுக்கு இவரிடம் (பிரம்மாவிடம்) எந்த
வேலையும் இல்லை. அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் அந்த
சிவபாபா ஆவார், அவரது வழிப்படி நம் அனைவருக்கும் சுகத்தைக்
கொடுக்கிறார். யார் தந்தையை முழுமையாக நினைவு செய்வ தில்லையோ
அவர்களிட மிருந்து அவகுணங்கள் நீங்குவதே இல்லை. தன்னை ஆத்மா என
நிச்சயப்படுத்திக் கொள்வதில்லை. மனிதர்கள் ஆத்மாவையும் தெரிந்து
கொள்வதில்லை, பரமாத்மாவையும் தெரிந்து கொள்வதில்லை. சர்வவியாபி
(எங்கும் நிறைந்தவர்) என்ற ஞானத்தையும் கூட பாரதவாசிகள் தான்
பரப்பினார்கள். உங்களிலும் கூட சேவை செய்யத் தகுந்த குழந்தைகள்
புரிந்து கொள்கின்றனர், மற்ற அனைவரும் அவ்வளவாகப் புரிந்து
கொள்வதில்லை. தந்தையின் முழுமையான அறிமுகம் இருந்தது என்றால்
தந்தையை நினைவு செய்வார்கள், தனக்குள் தெய்வீக குணங்களை தாரணை
செய்வார்கள்.
சிவபாபா குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கிறார். இவை
புதிய விஷயங்கள் ஆகும். பிராமணர்கள் கூட கண்டிப்பாகத் தேவை.
பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாக எப்போது ஆகிறார்கள் என்பது
உலகில் யாருக்கும் தெரியாது. அளவற்ற பிராமணர்கள் இருக்கின்றனர்.
ஆனால் அவர்கள் வயிற்றின் வழி வம்சாவளியினர் ஆவர். அவர்கள்
பிரம்மாவின் வாய்வழி வம்சாவளி குழந்தைகள் அல்ல. பிரம்மாவின்
குழந்தைகளுக்கு ஈஸ்வரனாகிய தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது.
இப்போது உங்களுக்கு ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது அல்லவா!
பிராமணர்களாகிய நீங்கள் வேறு, அவர்கள் வேறு. பிராமணர்களாகிய
நீங்கள் இருப்பதே சங்கம யுகத்தில். அவர்கள் இருப்பது துவாபர
கலியுகங்களில். இந்த சங்கம யுக பிராமணர்களே வேறு. பிரஜாபிதா
பிரம்மாவின் அளவற்ற குழந்தைகள். எல்லைக்குட்பட்ட தந்தையைக் கூட
பிரம்மா என்று சொல்வோம், ஏனெனில் குழந்தைகளைப் பெறுகிறார்.
ஆனால் அது ஸ்தூல விஷயமாகும். இந்த தந்தை சொல்கிறார் - அனைத்து
ஆத்மாக்களும் எனது குழந்தைகள் ஆவார்கள். நீங்கள் இனிமையிலும்
இனிமையான ஆன்மீகக் குழந்தைகள். இது யாருக்கு வேண்டு மானாலும்
புரிய வைப்பது எளிதாகும். சிவபாபாவுக்கு தனது சரீரம் கிடையாது.
சிவ ஜெயந்தி கொண்டாடுகின்றனர், ஆனால் அவரது சரீரத்தைப் பார்க்க
முடிவதில்லை. மற்ற அனைவருக்கும் சரீரம் இருக்கிறது. அனைத்து
ஆத்மாக்களுக்கும் தத்தமது சரீரம் இருக்கிறது. சரீரத்திற்குப்
பெயர் வைக்கப்படுகிறது, பரமாத்மாவுக்கு தமது சரீரம் கிடையாது,
ஆகவே அவர் பரம ஆத்மா என்று சொல்லப்படுகிறார். அவருடைய
ஆத்மாவுக்குத்தான் சிவன் என்ற பெயர் உள்ளது. அது ஒருபோதும்
மாறுவதில்லை. சரீரம் மாறும் போது, பெயர்களும் மாறி விடுகின்றன.
சிவபாபா சொல்கிறார் - நான் எப்போதும் நிராகார பரம
ஆத்மாவாகத்தான் இருக்கிறேன். நாடகத்தின் திட்டத்தின்படி இந்த
சரீரம் எடுத்திருக்கிறேன். சன்னியாசிகளின் பெயர்கள் கூட
மாறியபடி இருக்கும். குருவினுடையவர் ஆகும்போது பெயர் மாறுகிறது.
உங்களின் பெயரும் கூட மாறியது. ஆனால் எதுவரை பெயர் மாறிக்
கொண்டே இருக்கும்? எவ்வளவு பேர் ஓடிப்போனவராகி விட்டனர்! அந்த
சமயத்தில் இருந்தவர்களுக்கு பெயர்கள் இடப்பட்டன. இப்போது பெயர்
வைப்பதில்லை. யார் மேலும் நம்பிக்கை இல்லை. மாயை பலரை
தோற்கடித்து விடுகிறது, அப்போது ஓடி விடுகின்றனர், ஆகையால் பாபா
யாருக்கும் பெயர் வைப்பதில்லை. சிலருக்கு வைப்பது, சிலருக்கு
வைக்காமல் இருப்பது, அதுவும் சரியல்ல. பாபா, நாங்கள்
உங்களுடையவர்களாக ஆகி விட்டோம் என்று சொல்கிறார்கள், ஆனால்
சரியான விதத்தில் என்னுடையவர்களாக ஆவதில்லை. வாரிசு ஆவதன்
இரகசியமும் கூட தெரியாதவர்கள் நிறைய பேர் உள்ளனர். பாபாவை
சந்திக்க வருகின்றனர், ஆனால் வாரிசுகள் அல்ல. வெற்றி மாலையில்
வர முடியாது. நாம் வாரிசுகள் என சில நல்ல நல்ல குழந்தை கள்
புரிந்திருக்கின்றனர். ஆனால் இவர் வாரிசு அல்ல என்று பாபா
புரிந்து கொள்கிறார். வாரிசு ஆவதற்காக பகவானை தன் வாரிசு ஆக்க
வேண்டும், இந்த இரகசியத்தைப் புரிந்து கொள்வதும் கஷ்டமாகும்.
வாரிசு என்று யார் புரிந்து கொள்ளப்படுகின்றனர் என்பதை பாபா
புரிய வைக்கிறார். பகவானை யாராவது வாரிசாக ஆக்கிக் கொண்டால்
ஆஸ்தி கொடுக்க வேண்டும். அப்போது பிறகு தந்தை தன் வாரிசாக
ஆக்குவார். ஆஸ்தியை ஏழைகளைத் தவிர எந்த பணக்காரரும் தர முடியாது.
மாலை எவ்வளவு குறைவானவர்களுடையதாக உருவாகிறது! இதைக்கூட யாராவது
பாபாவிடம் கேட்டால் பாபா சொல்ல முடியும் - நீங்கள் வாரிசு
ஆவதற்கான உரிமை உள்ளவரா அல்லது இல்லையா? இந்த பாபாவும் கூட
சொல்ல முடியும். இது புரிந்து கொள்ளக் கூடிய பொதுவான விஷயம்
ஆகும். வாரிசு ஆவதிலும் கூட மிகவும் புத்தி தேவை. இலட்சுமி
நாராயணர் உலகின் எஜமானர்களாக இருந்தனர், ஆனால் இந்த எஜமான்
தன்மையை எப்படி அடைந்தனர் என்பதை யாரும் அறிவதில்லை. இப்போது
உங்களின் இலட்சியம், குறிக்கோள் முன்னால் உள்ளது. நீங்கள்
இப்படி ஆக வேண்டும் என்று. குழந்தைகள் சொல்வார்கள் நாங்கள்
சூரிய வம்சத்து இலட்சுமி-நாரயணராக ஆகப் போகிறோம், சந்திர
வம்சத்து இராமன் - சீதையாக அல்ல. இராமன் சீதையை சாஸ்திரங்களில்
இழிவாக செய்து விட்டனர். இலட்சுமி நாராயணரை ஒரு போதும் தவறாகக்
கூறியதைப் பற்றி கேள்விப்பட்டதில்லை. சிவபாபா மற்றும்
கிருஷ்ணருக்கும் கூட நிந்தனை செய்யப்பட்டது. நான்
குழந்தைகளாகிய உங்களை இந்த அளவு உயர்ந்ததிலும் உயர்ந்தவர் களாக
ஆக்குகிறேன் என்று தந்தை கூறுகிறார். என்னை விடவும் குழந்தைகள்
வேகமாக சென்று விடுகின்றனர். இலட்சுமி நாராயணரை யாரும் நிந்தனை
செய்ய மாட்டார்கள். கிருஷ்ணரின் ஆத்மா அதேதான், ஆனால் தெரியாத
காரணத்தால் நிந்தனை செய்து விட்டனர். இலட்சுமி நாராயணரின்
கோவில் கூட மிகவும் குஷியுடன் கட்டுகின்றனர். உண்மையில்
இராதா-கிருஷ்ணருடைய கோவில் கட்ட வேண்டும், ஏனென்றால் அவர்கள்
சதோபிரதானமாக இருந்தவர்கள். இவர்களின் (இலட்சுமி நாராயணர்)
இளமைப் பருவத்தை சதோ என்கிறோம். அவர்கள் சிறியவர்கள், ஆகவே
சதோபிரதானம் என்று கூறுவோம். சிறிய குழந்தை மஹாத்மாவுக்கு
சமமாக இருக்கும். சிறிய குழந்தைகளுக்கு விகாரத்தைப் பற்றி
தெரியாதது போல அங்கே பெரியவர்களுக்குக் கூட விகாரம் என்றால்
என்ன என்பதே தெரியாது. இந்த 5 பூதங்கள் அங்கே இருப்பதே இல்லை.
விகாரங்களைப்பற்றி தெரியவே தெரியாது. இந்த சமயம் இரவாக உள்ளது.
காம விகாரத்தின் அங்க சேஷ்டை இரவில்தான் நடக்கிறது. தேவதைகள்
இருப்பது (பகலில்) சொர்க்கம் சத்யுகம் என்பதால் காமத்தின்
சேஷ்டை இருப்பதில்லை. எந்த விகாரமும் இருக்காது. இப்போது இரவில்
இராவண இராஜ்யம் அனைவரும் விகாரிகளாக இருக்கின்றனர். சத்யுகம்
வந்தாலே நம் அனைத்து விகாரங்களும் சென்று விடும் என்பதை நீங்கள்
அறிவீர்கள். விகாரம் என்பது என்ன பொருள் என்பதே
தெரிந்திருக்காது. இவை இராவணனின் விகார குணங்களாகும். இது விஷம்
நிறைந்த உலகமாகும். நிர்விகாரி உலகில் விகாரத்தின் எந்த
விஷயமும் இருக்காது. அது ஈஸ்வரிய இராஜ்யம் என்றுதான்
சொல்லப்படுகிறது. இப்போது இருப்பது அசுர இராஜ்யம். இது
யாருக்கும் தெரியாது. நீங்கள் வரிசைக்கிரமமான முயற்சியின்படி
அனைத்தும் அறிவீர்கள். அளவற்ற குழந்தைகள் இருக்கின்றனர். இந்த
அனைத்து பி.கு. - களும் யாருடைய குழந்தைகள் என்பதை எந்த
மனிதரும் புரிந்து கொள்ள முடியாது.
அனைவரும் சிவபாபாவை நினைவு செய்கின்றனர், பிரம்மாவைக் கூட
நினைப்பதில்லை. இவர் (பிரம்மா) தாமே சொல்கிறார் - சிவபாபாவை
நினைவு செய்யுங்கள், அவர் மூலம் பாவ கர்மங்கள் அழியும், வேறு
யாரை நினைவு செய்தாலும் பாவ கர்மங்கள் அழியாது. என்னை மட்டும்
நினைவு செய்யுங்கள் என்று கீதையிலும் சொல்லப்பட்டுள்ளது.
கிருஷ்ணர் சொல்ல முடியாது. ஆஸ்தி கிடைப்பதே நிராகார
தந்தையிடமிருந்துதான். தன்னை ஆத்மா என புரிந்து கொள்ளும்போது
சிவ பாபாவை நினைவு செய்ய முடியும். நான் ஆத்மா என்பதை உறுதியாக
நிச்சயப் படுத்த வேண்டும். எனது தந்தை பரமாத்மா ஆவார், அவர்
சொல்கிறார் - என்னை நினைவு செய்தால் நான் உங்களுக்கு ஆஸ்தி
கொடுப்பேன். நான் அனைவருக்கும் சுகம் கொடுக்கிறேன். நான்
அனைத்து ஆத்மாக்களையும் சாந்தி தாமம் அழைத்துச் செல்கிறேன்.
யார் கல்பத்திற்கு முன்பு தந்தையிடமிருந்து ஆஸ்தி
எடுத்திருப்பார்களோ அவர்கள்தான் இப்போதும் வந்து ஆஸ்தியை
எடுப்பார்கள், பிராமணர்கள் ஆவார்கள். பிராமணர்களிலும் சில
குழந்தைகள் உறுதியானவர்களாக இருக்கின்றனர். சொந்த தாயின்
குழந்தைகளாகவும் ஆவார்கள், மாற்றாந்தாய் குழந்தையாகவும்
ஆவார்கள். நாம் நிராகார சிவபாபாவின் வம்சாவளி ஆவோம். வம்சம்
எப்படி பெருகிக் கொண்டு போகும் என்பதை அறிவோம். இப்போது
பிராமணர் ஆன பிறகு நாம் திரும்பிச் செல்ல வேண்டும். அனைத்து
ஆத்மாக்களும் சரீரத்தை விட்டு விட்டு திரும்பிச் செல்ல வேண்டும்.
பாண்டவர்கள், கௌரவர்கள் என இரு சாராரும் சரீரத்தை விட வேண்டும்.
நீங்கள் இந்த ஞானத்தின் சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்கிறீர்கள்,
பிறகு அதன் அடிப்படையில் பலன் கிடைக்கிறது. அதுவும் நாடகத்தில்
பதிவாகி உள்ளது, பிறகு ஞானத்தின் நடிப்பு முடிந்து விடுகிறது.
உங்களுக்கு 84 பிறவிகளுக்குப் பிறகு ஞானம் கிடைத்திருக்கிறது.
பிறகு இந்த ஞானம் மறைந்து விடுகிறது. நீங்கள் பலனை
அனுபவிக்கிறீர்கள். அங்கே வேறு எந்த தர்மத்தைச்
சேர்ந்தவர்களுடைய படங்கள் முதலானவை இருக்காது. உங்களுடைய
படங்கள் பக்தி மார்க்கத்தில் கூட இருக்கும். சத்யுகத்தில்
யாருடைய படமும் இருக்காது, தேவி தேவதைகள் மட்டுமே இருப்பார்கள்.
பின்னர் சிருஷ்டி வளர்ந்தபடி செல்கிறது. குழந்தைகளாகிய நீங்கள்
இந்த ஞானத்தை சிந்தனை செய்து அதீந்திரிய சுகத்தில் (இந்திரியங்
களுக்கு அப்பாற்பட்ட சுகத்தில்) இருக்க வேண்டும். நிறைய (ஞான)
விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் மாயை அடிக்கடி மறக்கடித்து
விடுகிறது என பாபா புரிந்து கொள்கிறார். ஆக, சிவபாபா நமக்கு
படிப்பிக்கிறார் என்ற நினைவு இருக்க வேண்டும். அவர்
உயர்ந்ததிலும் உயர்ந்தவர். நாம் இப்போது வீடு திரும்ப வேண்டும்.
எவ்வளவு சகஜமான விஷயங்கள்! அனைத்து ஆதாரம் நினைவில் உள்ளது.
நாம் தேவதை ஆக வேண்டும். தெய்வீக குணங்களும் தாரணை செய்ய
வேண்டும். 5 விகாரங்கள் பூதங்கள் போன்றவை. காமம் எனும் பூதம்,
கோபத்தின் பூதம், தேக அபிமானத்தின் பூதமும் இருக்கின்றன. ஆம்,
சிலருக்குள் அதிகமான பூதங்கள் இருக்கின்றன, சிலருக்குள்
குறைவாக இருக்கின்றன. இவை 5 பெரிய பூதங்கள் என பிராமண குழந்தை
களாகிய உங்களுக்குத் தெரியும். முதல் நம்பர் காமம் எனும் பூதம்,
இரண்டாவது கோபம் எனும் பூதம். யாராவது கரடு முரடாகப் பேசினால்,
இவர் கோபம் மிக்கவர் என்று தந்தை சொல்கிறார். இந்த பூதம்
வெளியேற வேண்டும். ஆனால் பூதம் வெளியேறுவது மிகவும் கஷ்டமாக
உள்ளது. கோபம் ஒருவர் மற்றவருக்கு துக்கம் கொடுக்கிறது.
பற்றுதலில் பலருக்கு துக்கம் ஏற்படாது. யாருக்கு பற்று
இருக்கிறதோ அவருக்குத்தான் துக்கம் ஏற்படும். ஆகையால் இந்த
பூதங்களை விரட்டுங்கள் என்று தந்தை புரிய வைக்கிறார்.
ஒவ்வொரு குழந்தையும் விசேஷமாக படிப்பு மற்றும் தெய்வீக குணங்கள்
மீது கவனம் கொடுக்க வேண்டும். பல குழந்தைகளுக்குள் கோபத்தின்
அம்சம் கூட இருப்பதில்லை. சிலரோ கோபத்தில் வந்து மிகவும் சண்டை
போடுகின்றனர். நாம் தெய்வீக குணங்களை தாரணை செய்து தேவதை ஆக
வேண்டும் என குழந்தைகள் சிந்தனை செய்ய வேண்டும். ஒருபோதும்
கோபத்துடன் பேசக்கூடாது. யாராவது கோபித்துக் கொண்டால்
இவருக்குள் கோபம் எனும் பூதம் உள்ளது எனப் புரிந்து கொள்ளுங்கள்.
அவர்கள் பூதநாதன் - பூத நாயகி ஆகி விடுகின்றனர், இப்படிப்பட்ட
பூதம் உள்ளவர்களுடன் ஒருபோதும் பேசக் கூடாது. ஒருவர் கோபத்தில்
வந்து பேசினார், பிறகு மற்றவருக்குள்ளும் கூட பூதம் வந்து
விட்டால் பூதங்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும். பூத
நாயகி எனும் வார்த்தை மிகவும் அசிங்கமாக உள்ளது. பூதத்தின்
பிரவேசம் ஆகி விடக் கூடாது, ஆகையால் மனிதர்கள் ஒதுங்கிக்
கொள்கின்றனர். பூதத்திற்கு முன்பாக நிற்கவும் கூடாது.
இல்லாவிட்டால் பிரவேசம் ஆகி விடும். தந்தை வந்து அசுர குணங்களை
நீக்கி தெய்வீக குணங்களை தாரணை செய்விக்கிறார். தெய்வீக
குணங்களை தாரணை செய்வித்து தேவதையாக ஆக்குவதற்காக நான்
வந்துள்ளேன் என தந்தை சொல்கிறார். நாம் தெய்வீக குணங்களை தாரணை
செய்து கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகள் அறிவார்கள்.
தேவதைகளின் படங்கள் முன்னால் உள்ளன. கோபம் கொள்பவர்களிடமிருந்து
ஒரேயடியாக ஒதுங்கி விடுங்கள் என்று பாபா புரிய வைத்திருக்கிறார்.
தம்மைப் பாதுகாத்துக் கொள்ள யுக்தி தேவை. நமக்குள் கோபம் வந்து
விடக் கூடாது, இல்லாவிட்டால் நூறு மடங்கு பாவம் ஏற்பட்டு விடும்.
எவ்வளவு நல்ல அறிவை தந்தை குழந்தைளுக்குக் கொடுக்கிறார்! பாபா
துல்லியமாக கல்பத்திற்கு முன்பு புரிய வைத்ததைப் போலவே
இப்போதும் புரிய வைக்கிறார் என குழந்தைகளும் புரிந்து
கொள்கின்றனர். வரிசைக் கிரமமான முயற்சியின்படி புரிந்து
கொண்டபடிதான் இருப்பார்கள். தம் மீதும் கூட இரக்கம் காட்ட
வேண்டும். மற்றவர் மீதும் இரக்கம் கொள்ள வேண்டும். சிலர் தம்
மீது இரக்கம் கொள்வதில்லை, மற்றவர்கள் மீது இரக்கம்
கொள்ளும்போது அவர்கள் முன்னேறி விடுகின்றனர், தாம் நின்று
விடுகின்றனர். தாம் விகாரங்களின் மீது வெற்றி கொள்வதில்லை,
பிறருக்குப் புரிய வைக்கின்றனர், அவர்கள் வெற்றியடைந்து
விடுகின்றனர். இப்படிப்பட்ட அதிசயமும் நடக்கிறது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஞான சிந்தனை செய்து அதீந்திரிய சுகத்தில் இருக்க வேண்டும்.
யாருடனும் மூர்க்கத் தனமாகப் பேசக் கூடாது. யாராவது கோபத்துடன்
பேசினால் அவரிடமிருந்து ஒதுங்கி விட வேண்டும்.
2. பகவானின் வாரிசு ஆவதற்காக முதலில் அவரை வாரிசு ஆக்க வேண்டும்.
புத்திசாலிகளாகி தமது அனைத்தையும் தந்தைக்கு சமர்ப்பணம் செய்து
பற்றுதலை நீக்க வேண்டும். தம் மீது தாமே இரக்கம் காட்ட வேண்டும்.
வரதானம்:
சாட்சி பார்வையாளராக ஆகி உயர்ந்த நிலை மூலமாக அனைத்து
ஆத்மாக்களுக்கும் சக்தி கொடுக்கக் கூடிய தந்தைக்கு சமானமான
அவ்யக்த ஃபரிஷ்தா ஆவீர்களாக.
நடந்தாலும் சென்றாலும் எப்பொழுதும் தன்னை நிராகாரி ஆத்மா
மற்றும் செயல்கள் செய்யும் பொழுது அவ்யக்த ஃபரிஷ்தா என்று
உணர்ந்து இருந்தீர்கள் என்றால் எப்பொழுதும் குஷியில் மேலே
பறந்து கொண்டே இருப்பீர்கள். ஃபரிஷ்தா என்றால் உயர்ந்த நிலையில்
இருப்பவர். இந்த தேகத்தின் உலகத்தில் எது வேண்டு மானாலும்
கடந்து சென்று கொண்டு இருக்கட்டும். ஆனால் சாட்சி பார்வையாளராக
ஆகி அனைத்து பாகங்களையும் பார்த்து கொண்டே இருங்கள் மற்றும்
சக்தி கொடுத்து கொண்டே இருங்கள். இருக்கையில் இருந்து இறங்கி
சக்தி கொடுக்கப் படுவது இல்லை.உயர்ந்த நிலையில் நிலைத்திருந்து
விருத்தி உள்ளுணர்வு, திருஷ்டி பார்வை மூலமாக சகயோகத்தின் சகாஷ்
சக்தி கொடுங்கள் .மிக்ஸ் கலப்படமாக இருந்து அல்ல. அப்பொழுது
எந்த ஒரு விதமான வாயு மண்டலத்தில் இருந்தும் (ஸேஃப்)
பாதுகாப்பாக இருந்து அவ்யக்த ஃபரிஷ்தா பவ என்ற வரதானம்
உடையவராக இருப்பீர்கள்.
சுலோகன்:
நினைவின் பலம் மூலமாக துக்கத்தை சுகமாகவும் அசாந்தியை
சாந்தியாகவும் பரிவர்த்தனை (மாற்றம்) செய்யுங்கள்.
தங்களது சக்திசாலி மனசா மூலமாக சகாஷ் (சக்தி) கொடுக்கும் சேவை
செய்யுங்கள்.
தங்களது சுபபாவனை, சிறந்த நல்விருப்பம், சிறந்த உள்ளுணர்வு,
சிறந்த அதிர்வலைகள் மூலமாக எந்த ஒரு இடத்தில் இருந்தாலும் மனசா
மூலமாக உங்களால் அனேக ஆத்மாக்களுக்கு சேவை செய்ய முடியும்.
இதற்கான விதியாவது - லைட் ஹவுஸ், மைட் ஹவுஸ் ஆகி விடுவது. இதில்
ஸ்தூல சாதனங்கள்,சான்ஸ் (வாய்ப்பு) அல்லது நேரத்தின் பிரச்சினை
இல்லை. லைட், மைட்- ஒளி மற்றும் சக்தியில் நிறைந்திருப்பதற்கான
அவசியம் மட்டுமே உள்ளது.