16-04-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தனது மனநிலையைப் பாருங்கள், எனக்கு ஒரு பாபாவிடம் மட்டுமே ஈடுபாடு உள்ளதா, அல்லது ஏதாவது கர்ம சம்மந்தங்களில் மனம் ஈடுபட்டுள்ளதா?

கேள்வி:
தனக்கு நன்மை செய்வதற்காக எந்த இரண்டு விஷயங்களின் கணக்கை தினந் தோறும் பார்க்க வேண்டும்?

பதில்:
யோகம் மற்றும் நடத்தையின் கணக்கை தினந்தோறும் பாருங்கள். சோதித்துக் கொள்ளுங் கள், சேவைக்குப் புறம்பாக எதுவும் செய்யவில்லையே? சதா தனது மனதைக் கேளுங்கள், நாம் எந்தளவு பாபாவை நினைவு செய்கிறோம்? தனது நேரத்தை எவ்விதமாகப் பயனுள்ளதாக ஆக்கு கிறோம்? மற்றவர்களைப் பார்க்காமல் இருக்கிறோமா? யாருடைய பெயர்-வடிவத்திலாவது மனம் ஈடுபடாமல் இருக்கிறதா?

பாடல்:
முகத்தைப் பார்த்துக் கொள் மனிதா....

ஓம் சாந்தி.
இதை யார் சொன்னார்கள்? எல்லையற்ற தந்தை சொல்லியுள்ளார். பிராணி என்றால் ஆத்மா. சொல்கிறார்கள் இல்லையா - ஆத்மா வெளியேறி விட்டது அல்லது பிராணன் போய் விட்டது என்று? இப்போது பாபா முன்னிலையில் வந்து புரிய வைக்கிறார் - ஹே ஆத்மாக்களே, நினைவு செய்யுங்கள். இந்த ஜென்மத்தை மட்டும் பார்த்தால் போதாது. ஆனால் எப்போதிருந்து நீங்கள் தமோபிரதானமாக ஆகியிருக்கிறீர்களோ, ஏணிப்படியில் இறங்கியே வந்து பதீதம் ஆகியிருக்கிறீர்கள் ஆக, நிச்சயமாகப் பாவம் செய்திருக்கிறீர்கள். இப்போது புரிந்து கொள்ள வேண்டிய விசயம். எவ்வளவு ஜென்ம-ஜென்மாந்தரத்தின் பாவங்கள் தலை மீது ஏறி இருக்கிறது! இதை எப்படி அறிவது? தன்னைத் தான் பார்க்க வேண்டும், நாம் எவ்வளவு நேரம் யோக நிலையில் இருக்கிறோம்? பாபாவிடம் எந்த அளவு யோகம் நன்றாக ஈடுபடுகிறதோ, அவ்வளவு விகர்மங்கள் விநாசமாகும். பாபா சொல்லியிருக்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் நான் உறுதி தருகிறேன், உங்கள் விகர்மங்கள் விநாசமாகும். தன்னுடைய மனதின் உள்ளே ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும்-நமக்கு பாபாவிடம் எந்த அளவுக்கு யோகா (நினைவு) உள்ளது? எவ்வளவு நாம் யோகா வைக்கிறோமோ, பவித்திரமாவோம், பாவங்கள் நீங்கிக் கொண்டே செல்லும். யோகா அதிகரித்துக் கொண்டே செல்லும். பவித்திரமாகவில்லை என்றால் யோகாவும் வராது. இது போலவும் அநேகர் உள்ளனர், நாள் முழுவதும் 15 நிமிடங்கள் கூட நினைவில் இருப்பதில்லை. தன்னைத் தான் கேட்டுக் கொள்ள வேண்டும் - எனது மனம் சிவபாபாவிடம் உள்ளதா, தேகதாரி யிடம் உள்ளதா? அல்லது செயல்கள் மற்றும் உறவினர்களிடம் உள்ளதா? குழந்தைகளிடம் தான் மாயா புயல்களைக் கொண்டு வரும் இல்லையா? தாங்களே கூட புரிந்து கொள்ள முடியும், என்னுடைய மனநிலை எவ்வாறு உள்ளது? சிவபாபாவிடம் மனம் ஈடுபடுகிறதா, அல்லது யாரேனும் தேகதாரியிடம் ஈடுபடுகிறதா? கர்ம சம்மந்திகள் முதலானவர்களிடம் உள்ளதென்றால் நம்மிடம் விகர்மங்கள் அதிகமாக உள்ளன என்று புரிந்து கொள்ள வேண்டும். அதனால் மாயா சாக்கடையில் தள்ளி விடுகின்றது. மாணவர்கள் உள்ளுக்குள் புரிந்து கொள்ள முடியும், நாம் பாஸா வோமா இல்லையா? நன்றாகப் படிக்கிறோமா இல்லையா? நம்பர்வாரோ இருக்கத் தான் செய் கின்றனர் இல்லையா? ஆத்மா தனக்கு நன்மை செய்து கொள்ள வேண்டும். பாபா வழி காட்டு கிறார். நீங்கள் புண்ணிய ஆத்மா ஆகி உயர்ந்த பதவி பெற விரும்புகிறீர்கள் என்றால் அதில் தூய்மை தான் முதலாவதாகும். வரும்பொழுது தூய்மையானவராகவும், திரும்பி போகும் போதும் தூய்மையானவராகத் தான் போக வேண்டும். தூய்மையற்றவர்கள் ஒருபோதும் உயர்ந்த பதவி பெற முடியாது. சதா தனது மனதைக் கேட்டுக் கொள்ள வேண்டும், நாம் எவ்வளவு பாபாவை நினைவு செய்கிறோம், நாம் என்ன செய்கிறோம்? இல்லையெனில் நிச்சயம்-பின்னால் அமர்ந்துள்ள மாணவர்களுக்கு மனதுக்குள் அரிக்கும். உயர்ந்த பதவி பெறுவதற்காகவே முயற்சி செய்கின்றனர். ஆனால் அதற்கேற்ற நடத்தையும் இருக்க வேண்டும் இல்லையா? பாபாவை நினைவு செய்து தனது தலை மீதுள்ள பாவங்களின் சுமையை இறக்கி வைக்க வேண்டும். நினைவினாலன்றி பாவங்களின் சுமையை இறக்கி வைக்க முடியாது. ஆக, எவ்வளவு பாபாவிடம் நினைவின் ஈடுபாடு இருக்க வேண்டும்! உயர்ந்தவரிலும் உயர்ந்த தந்தை வந்து சொல்கிறார் - தந்தையாகிய என்னை நினைவு செய்வீர்களானால் விகர்மங்கள் விநாசமாகும். நேரம் அருகில் வந்து கொண்டே உள்ளது. சரீரத்தின் மீது நம்பிக்கை கிடையாது. திடீரென்று விபத்துகள் எப்படி-எப்படியோ நடந்து விடுகின்றன. அகால மரணத்திற்கான முழு சீசனாக (கால நிலை) உள்ளது. ஆக, ஒவ்வொருவரும் தன்னை சோதித்து, தனக்கு நன்மை செய்து கொள்ள வேண்டும். முழு நாளின் கணக்கைப் பார்க்க வேண்டும் - யோகம் மற்றும் நடத்தை பற்றி. நாம் நாள் முழுவதிலும் எவ்வளவு பாவங்கள் செய்தோம்? மனம் மற்றும் சொல்லில் முதலில் வருகின்றன. பிறகு செயலில் வருகின்றன. இப்போது குழந்தைகளுக்கு சரியான புத்தி கிடைத்துள்ளது-அதாவது நாம் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும். யாரையாவது ஏமாற்றாமல் இருந்தேனா? தவறான பொய் எதுவும் பேசாமல் இருந்தேனா? சேவைக்குக் குந்தகம் செய்யாமல் இருந்தேனா? யாரேனும் யாருடைய பெயர்-வடிவத் திலாவது சிக்கிக் கொள்கின்றனர் என்றால் யக்ஞ பிதாவுக்கு நிந்தனை செய்கின்றனர் என்பதாகும்.

பாபா சொல்கிறார், யாருக்கும் துக்கம் கொடுக்காதீர்கள். ஒரு தந்தையின் நினைவில் இருங்கள். இந்த மிகப் பெரியதொரு கவலை கிடைத்துள்ளது. நாம் நினைவில் இருக்க முடிவதில்லை என்றால் என்ன கதி ஏற்படும்? இச்சமயம் கவனக்குறைவில் இருப்போமானால் பின்னால் மிகவும் வருந்த நேரிடும். இதையும் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், அதாவது யார் நாடகத்தின் படி சாதாரண பதவி பெற இருக்கிறார்களோ, அவர்கள் சாதாரண பதவி தான் பெறுவார்கள். புத்தி மூலம் புரிந்து கொள்ள முடியும், நாம் என்ன செய்ய வேண்டும் என்று. அனைவருக்கும் இதே மந்திரத்தைக் கொடுக்க வேண்டும் - பாபாவை நினைவு செய்யுங்கள். இலட்சியமோ குழந்தைகளுக்குக் கிடைத் துள்ளது. இந்த விசயங்களை உலகத்தினர் புரிந்து கொள்ள முடியாது. முதலாவது முக்கிய விஷயமே பாபாவை நினைவு செய்வதற்கானது தான். படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானமோ கிடைத்து விட்டது. தினந்தோறும் ஏதாவது புதுப்புதுப் பாயின்ட்டுகளும் புரிய வைப்பதற்காகத் தரப்படுகின்றன. எப்படி விராட ரூபத்தின் சித்திரம் உள்ளது, இதைப் பற்றியும் நீங்கள் புரிய வைக்க முடியும். எப்படி வர்ணங்களில் வருகிறோம் - இதுவும் ஏணிப்படியின் சித்திரத்திற்கு அருகில் வைப்பதற்கான சித்திரமாகும். நாள் முழுவதும் புத்தியில் இதே சிந்தனை இருக்க வேண்டும் - யாருக்கு எப்படிப் புரிய வைப்பது? சேவை செய்வதன் மூலமும் பாபாவின் நினைவு இருக்கும். பாபாவின் நினைவினால் தான் விகர்மங்கள் விநாசமாகும். தனக்கும் நன்மை செய்து கொள்ள வேண்டும். பாபா புரிய வைத்துள்ளார், உங்கள் மீது 63 பிறவிகளின் பாவங்கள் உள்ளன. பாவங்கள் செய்து-செய்தே சதோபிரதானத்திலிருந்து தமோபிரதானமாக ஆகி விட்டிருக்கிறீர்கள். இப்போது என்னுடையவர்களாக ஆகிவிட்ட பிறகு எந்த ஒரு பாவ கர்மமும் செய்யாதீர்கள். பொய், அசுரத்தன்மை, வீட்டில் கலகம் செய்வது, கேள்விப்பட்ட விசயங்களில் நம்பிக்கை வைப்பது - இந்த தீய பழக்கங்கள் மிகவும் நஷ்டம் விளைவிப்பதாகும். பாபாவிடம் நினைவு (தொடர்பு) வைப் பதையே துண்டித்து விடும். ஆக, எவ்வளவு பாவம் ஆகிறது! அரசாங்கத்திற்கும் துரோகிகள் உள்ளனர். அரசாங்க விசயங்களை யாராவது விரோதிகளுக்குச் சொல்லி மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். ஆக, பிறகு அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைக்கிறது. ஆக, குழந்தைகளின் வாயிலிருந்து சதா ஞான இரத்தினங்கள் வெளிப்பட வேண்டும். தலைகீழான விசயங்களை யாரிடமிருந்தும் கேட்கக் கூடாது. ஞான விசயங்களையே பேச வேண்டும். நீங்கள் எப்படி பாபாவிடம் யோகா வைக்கிறீர்கள்? எப்படி யாருக்காவது புரிய வைக்கிறீர்கள்? நாள் முழுவதிலும் இதே சிந்தனை ஓடிக்கொண்டிருக்க வேண்டும். சித்திரங்களின் முன்னால் போய் அமர்ந்து கொள்ள வேண்டும். உங்களுடைய புத்தியிலோ ஞானம் உள்ளது இல்லையா? பக்தி மார்க்கத்திலோ அநேக விதமான சித்திரங்களைப் பூஜித்துக் கொண்டே இருக்கின்றனர். எதையும் அறிந்து கொள்ளவில்லை. குருட்டு நம்பிக்கை, உருவ வழிபாடு- இவ்விசயங்களுக்கு பாரதம் பெயர் பெற்றதாகும். இப்போது நீங்கள் இந்த விசயங்களைப் புரிய வைப்பதற்கு எவ்வளவு முயற்சி செய்கிறீர்கள்! கண்காட்சிக்கு எவ்வளவு மனிதர்கள் வருகின்றனர்! பல விதமான வர்கள் உள்ளனர். சிலரோ இவை பார்ப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் ஏற்றவை எனப் புரிந்து கொள்கின்றனர். பார்ப்போம் என நினைத்து வருகின்றனர். பிறகு சென்டர் பக்கம் வருவதே இல்லை. நாளுக்கு நாள் உலகத்தின் நிலைமையும் கெட்டுக் கொண்டே போகிறது. சண்டைகள் அதிகம். வெளிநாடுகளில் என்னென்ன நடந்து கொண்டிருக்கிறது! கேட்கவே வேண்டாம். எவ்வளவு மனிதர்கள் இறந்து போகின்றனர்! தமோபிரதான உலகம் இல்லையா? வெடிகுண்டுகளைத் தயாரிக்கக் கூடாது எனச் சொல்லத் தான் செய்கின்றனர். ஆனால் அவர்கள் சொல்கின்றனர், உங்களிடம் ஏராளமாக வைத்துக் கொண்டிருக்கும் போது நாங்கள் ஏன் தயாரிக்கக் கூடாது? இல்லையென்றால் அடிமை யாக ஆகி இருக்க நேரிடும். எந்த வழிமுறை வெளிப்பட்டாலும் அது விநாசத்திற்காகத் தான். விநாசமோ நடந்தேயாக வேண்டும். சங்கர் இதைத் தூண்டுவதாகச் சொல்கின்றனர். ஆனால் இதில் பிரேரணை (தூண்டுதல்) முதலியவற்றின் விசயம் கிடையாது. நாமோ டிராமாவின் படி நடித்துக் கொண்டுள்ளோம். மாயா மிகவும் வேகமானது. நம்முடைய குழந்தைகளையும் கூட விகாரங் களில் வீழ்த்தி விடுகின்றது. எவ்வளவு சொல்லிப்புரிய வைக்கப்படுகின்றது - தேகத்தின் மீது அன்பு வைக்காதீர்கள். பெயர்-வடிவங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். ஆனால் மாயாவும் அப்படி தமோபிர தானமாக உள்ளது, தேகத்தின் மீது சிக்கிக் கொள்ளச் செய்கின்றது. ஒரேயடியாக மூக்கைப் பிடித்து விடுகின்றது. தெரிவதே இல்லை. பாபா எவ்வளவு புரிய வைக்கிறார் - ஸ்ரீமத் படி நடந்து செல்லுங் கள். ஆனால் நடப்பதே இல்லை. இராவணனின் வழிமுறை உடனே புத்தியில் வந்து விடுகின்றது. இராவணன் தனது சிறையிலிருந்து விடுவதில்லை.

பாபா சொல்கிறார், தன்னை ஆத்மா என உணருங்கள், தந்தையை நினைவு செய்யுங்கள், போதும். இப்போதோ (புத்தியின் மூலம்) நாம் சென்று விட்டோம். அரைக்கல்பத்தின் நோயிலிருந்து நாம் விடுபடுகிறோம். அங்கே இருப்பதோ நோயற்ற உடல். இங்கோ எவ்வளவு நோயாளிகள்! இது பயங்கர நரகம் இல்லையா? அவர்கள் கருட புராணம் படிக்கின்றனர் என்ற போதிலும் படிக்கிறவர் களுக்கும் கேட்கிறவர்களுக்கும் புத்தி கொஞ்சமும் இல்லை. பாபா தானே சொல்கிறார், முன் பெல்லாம் பக்தியின் நஷா எவ்வளவு இருந்தது! பக்தியினால் பகவான் கிடைப்பார் என்பதைக் கேட்டுக் குஷியாகி பக்தி செய்து கொண்டே இருக்கின்றனர். பதீதம் ஆகின்றனர். -பதீத பாவனா வாருங்கள் என்று அதனால் தான் அழைக்கின்றனர். பக்தி செய்கிறீôகள் - இதுவோ நல்லது தான், பிறகு பகவானை ஏன் நினைக்கிறீர்கள்? பகவான் வந்து பக்தியின் பலனைக் கொடுப்பார் என நினைக் கின்றனர். என்ன பலன் தருவார் என்பது யாருக்கும் தெரியாது. பாபா சொல்கிறார், கீதை படிப்பவர்களுக்குத் தான் புரிய வைக்க வேண்டும். அவர்கள் தான் நம்முடைய தர்மத்தைச் சேர்ந்தவர்கள். முதல் முக்கிய விஷயமே கீதையின் பகவான் வாக்கு. இப்போது கீதையின் பகவான் யார்? பகவான் பற்றிய அறிமுகமோ வேண்டும் இல்லையா? உங்களுக்குத் தெரிந்து விட்டது-ஆத்மா என்பதென்ன, பரமாத்மா யார்? மனிதர்கள் ஞான விஷயங்கள் பற்றி எவ்வளவு பயந்து கொள்கின்றனர்! பக்தி எவ்வளவு பிடித்திருக்கிறது! ஞானத்திலிருந்து 3 காத தூரம் ஓடு கின்றனர். அட, பாவனமாவதோ நல்லது. இப்போது பாவன உலகத்தின் ஸ்தாபனை, பதீத் உலகத்தின் விநாசம் ஏற்பட வேண்டும். ஆனால் முற்றிலும் கேட்பதே இல்லை. பாபாவின் கட்டளை-தீயதைக் கேட்காதீர்கள்........... மாயாவின் கட்டளை, சிவபாபாவின் ஞானத்தைக் கேட்காதீர்கள். அப்படி வேகமாக மாயா அடி கொடுத்து விடுகிறது, புத்தியில் நிற்பதே இல்லை. பாபாவை நினைவு செய்யவே முடிவதில்லை. உற்றார் உறவினர், தேகதாரிகளின் நினைவு வந்து கொண்டே இருக்கிறது. பாபாவின் கட்டளையை மதிப்பதில்லை. என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள் என்று பாபா சொல்கிறார். பிறகு கட்டளைக்குக் கீழ்ப்படியாதவராகிச் , எங்களுக்கு இன்னார் நினைவு வருகிறது என்று சொல்கின்றனர். நினைவு வந்தால் கீழே விழுந்து விடுவார்கள். இந்த விஷயங்களிலோ வெறுப்பு வர வேண்டும். இது முற்றிலும் மோசமான உலகம். நமக்காகவோ புதிய உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா வின் மற்றும் சிருஷ்டிச் சக்கரத்தின் அறிமுகம் கிடைத்துள்ளது என்றால் அந்தப் படிப்பிலேயே ஈடுபட்டு விட வேண்டும். பாபா சொல்கிறார், தனக்குள் பாருங்கள். நாரதரின் உதாரணமும் உள்ளது இல்லையா? ஆக, பாபாவும் சொல்கிறார் - தன்னைப் பாருங்கள், நாம் பாபாவை நினைவு செய்கிறோமா? நினைவினால் தான் பாவங்கள் பஸ்பமாகும். எந்த ஒரு நிலையிலும் சிவபாபா வையே நினைவு செய்ய வேண்டும். வேறு யாரிடமும் அன்பு வைக்கக் கூடாது. கடைசியில் சிவபாபாவின் நினைவு இருக்க வேண்டும், அப்போது உயிர் உடலை விட்டுப் பிரிய வேண்டும். சிவபாபாவின் நினைவும் இருக்கவேண்டும், சுயதரிசனச் சக்கரத்தின் ஞானமும் இருக்க வேண்டும். சுயதரிசனச் சக்கரதாரி யார் என்பதும் யாருக்கும் தெரியாது. பிராமணர்களுக்கும் இந்த ஞானத்தை யார் கொடுத்தார்? பிராமணர்களை இந்த சுயதரிசனச் சக்கரதாரியாக யார் ஆக்குகிறார்? பரமபிதா பரமாத்மாவாகிய பிந்துவாகிய சிவ பாபா. அப்போது அவரும் கூட சுயதரிசனச் சக்கரதாரியா? ஆம், முதலில் அவர் தான். இல்லையென்றால் பிராமணர்களாகிய நம்மை அதுபோல் யார் ஆக்குவார்? படைப்பு முழுவதின் முதல், இடை, கடை பற்றிய ஞானம் அவரிடம் உள்ளது. உங்களுடைய ஆத்மாவும் ஞானம் உள்ளதாக ஆகிறது, அவரும் ஆத்மா. பக்தி மார்க்கத்தில் விஷ்ணுவைச் சக்கரதாரி ஆக்கியிருக்கிறார்கள். பரமாத்மா திரிகாலதரிசி, திரிமூர்த்தி, திரிநேத்திரி என்பதாக நாம் சொல்கிறோம். அவர் நம்மை சுயதரிசனச் சக்கரதாரி ஆக்குகிறார். அவரும் கூட அவசியம் மனித சரீரத்தில் வந்து தான் சொல்வார். படைப்பினுடைய முதல்-இடை-கடை பற்றிய ஞானத்தை நிச்சயமாக படைப்பவர் தான் சொல்வார் இல்லையா? படைப்பவர் பற்றியே யாருக்கும் தெரியாது எனும்போது படைப்பினைப் பற்றிய ஞானம் எங்கிருந்து கிடைக்கும்? இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், சிவபாபா தான் சுயதரிசனச் சக்கரதாரி, ஞானக்கடலாக இருப்பவர். நாம் எப்படி 84 பிறவிகளின் சக்கரத்தில் வருகிறோம் என்பது பற்றி அவர் அறிவார். அவர் தாமே புனர்ஜென்மம் எடுப்பதில்லை. அவரிடம் ஞானம் உள்ளது, அதை நமக்குச் சொல்கிறார். ஆக, முதல்-முதலிலோ சிவபாபா சுயதரிசனச் சக்கரதாரியாக இருக்கிறார். சிவபாபா தான் நம்மை சுயதரிசனச் சக்கரதாரி ஆக்குகிறார். பாவனமாக்குகிறார், ஏனென்றால் பதீத பாவனர் அவர் தான். படைப்பவரும் அவர் தான். தந்தை குழந்தைகளின் வாழ்க்கைப் பற்றி அறிவார் இல்லையா? சிவபாபா பிரம்மா மூலமாக ஸ்தாபனை செய்விக்கிறார். செய்பவர்-செய்விப்பவர் இல்லையா? நீங்களும் கற்றுக் கொள்ளுங்கள், மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். பாபா கற்றுத் தருகிறார், பிறகு மற்றவர் களுக்கும் கற்றுக் கொடுங்கள் என்று சொல்கிறார். ஆக, சிவபாபா தான் உங்களை சுயதரிசனச் சக்கரதாரி ஆக்குகிறார். அவர் சொல்கிறார், எனக்கு சிருஷ்டிச் சக்கரத்தின் ஞானம் உள்ளது, அதனால் தான் அதைச் சொல்கிறேன். ஆக, 84 பிறவிகளை எப்படி எடுக்கிறீர்கள்? இந்த 84 பிறவி களின் கதை புத்தியில் இருக்க வேண்டும். இது புத்தியில் இருந்தால் கூட சக்கரவர்த்தி இராஜா ஆக முடியும். இது ஞானம். மற்றப்படி தந்தையின் நினைவினால் தான் பாவங்கள் நீங்கும். முழு நாளின் கணக்கை வெளிப் படுத்துங்கள். நினைவே செய்யவில்லை என்றால் என்ன கணக்கை வெளிக்கொண்டு வருவீர்கள்? நாள் முழுவதும் என்னென்ன செய்தோம்? - இதுவோ நினைவிருக் கிறது இல்லையா? இப்படியும் மனிதர்கள் உள்ளனர், தங்களின் அன்றாடக் கணக்கை நினைத்துப் பார்க்கின்றனர் - எத்தனை சாஸ்திரங்கள் படித்தோம், எத்தனை புண்ணியம் செய்தோம்? நீங்களோ சொல்வீர்கள் - எவ்வளவு நேரம் நினைவு செய்தோம், எவ்வளவு குஷியோடு வந்து பாபாவின் அறிமுகம் கொடுத்தோம் என்று?

பாபாவிடமிருந்து கிடைத்துள்ள பாயின்ட்டுகளைப் பற்றி அடிக்கடி சிந்தனை செய்யுங்கள். கிடைத்துள்ள ஞானத்தை புத்தியில் நினைவு வையுங்கள். தினந்தோறும் முரளி படியுங்கள். அதுவும் மிகவும் நல்லது. முரளியில் உள்ள பாயின்ட்டுகள் பற்றி அடிக்கடி சிந்தனை செய்ய வேண்டும். இங்கே வசிப்பவர்களை விடவும் வெளியில் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அதிகமாக நினைவில் இருக்கின்றனர். எத்தனை மாதர்கள் பந்தனத்தில் உள்ளனர்! பாபாவை அவர்கள் ஒருபோதும் பார்த்தது கூட இல்லை. ஆனால் எவ்வளவு நினைவு செய்கின்றனர்! நஷா (போதை) அதிகமாகின்றது! வீட்டில் அமர்ந்தவாறே சாட்சாத்காரம் ஆகின்றது, அல்லது சிரமமின்றி கேட்டுக் கேட்டே நிச்சயம் ஏற்பட்டு விடுகின்றது.

ஆக, பாபா சொல்கிறார், உள்ளுக்குள் தன்னை சோதித்துக் கொண்டே இருங்கள், நாம் எந்தளவு உயர்ந்த பதவி பெறுவோம்? நம்முடைய நடத்தை எவ்வாறு உள்ளது? ஏதாவது உணவு-பானத்தின் பேராசையோ இல்லையே? எந்த ஒரு பழக்கமும் இருக்கக் கூடாது. முக்கியமான விஷயம் கலப்படமில்லாத ஒரு நினைவில் இருக்க வேண்டும். மனதைக் கேளுங்கள் - நாம் யாரை நினைவு செய்கிறோம்? எவ்வளவு சமயம் மற்றவர்களை நினைவு செய்கிறோம்? ஞானத்தையும் தாரணை செய்ய வேண்டும். பாவங்களும் நீங்க வேண்டும். ஒரு சிலரோ அப்படிப்பட்ட பாவங்கள் செய்துள்ளனர், கேட்கவே வேண்டாம். பகவான் சொல்கிறார், இதைச் செய்யுங்கள் என்று, ஆனால் வெளி விசயங்களில் வசமாகியுள்ளோம், அதாவது மாயா வசமாக ஆகியிருக்கிறோம் எனச் சொல்லி விடுகின்றனர். நல்லது, மாயாவின் வசமாகவே இருங்கள். ஆனால் நீங்கள் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும், அல்லது தன்னுடைய வழிப்படி நடக்க வேண்டும். பார்க்க வேண்டும், இந்த நிலைமையில் நாம் எதுவரை பாஸாவோம்? என்ன பதவி பெறுவோம்? 21 பிறவிகளுக்கான நஷ்டம் ஏற்பட்டு விடுகின்றது. எப்போது கர்மாதீத் நிலை ஆகி விடுகிறதோ, பிறகு தேக அபிமானத்தின் பெயர் இருக்காது. அதனால் தான் சொல்லப் படுகின்றது - ஆத்ம அபிமானி ஆகுங்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) யக்ஞ பிதாவின் பெயர் கெட்டுப் போகிற மாதிரி எந்த ஒரு காரியத்தையும் செய்துவிடக் கூடாது. பாபாவிடம் கிடைத்துள்ள சரியான புத்தி மூலம் நல்ல கர்மங்களைச் செய்ய வேண்டும். யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது.

2) ஒருவர்-மற்றவரிடமிருந்து வேண்டாத, தலைகீழான தகவல்கள் எதையும் கேட்கக் கூடாது. தங்களுக்குள் ஞான விஷயங்களை மட்டுமே பேசிக்கொள்ள வேண்டும். பொய், அசுரத்தன்மை, வீட்டை இரண்டுபடச் செய்யும் பேச்சுகள் இவை அனைத்தையும் விட்டுவிட்டு வாயின் மூலம் சதா ஞான இரத்தினங்களையே வெளிப்படுத்த வேண்டும். தீய விஷயங்களைக் கேட்கவும் கூடாது, சொல்லவும் கூடாது.

வரதானம்:
5 விகாரங்கள் என்ற விரோதிகளை மாற்றி சகயோகி ஆக்கக்கூடிய மாயாவை வென்றவராக, உலகை வென்றவராக ஆகுக.

வெற்றியாளர் விரோதியின் ரூபத்தை அவசியம் மாற்றுவார். எனவே நீங்கள் விகாரங்கள் என்ற விரோதிகளை மாற்றி சகயோகி சொரூபமாக்கி விடுங்கள். இதன் மூலம் அவை சதா உங்களுக்கு சலாம் செய்து கொண்டே இருக்கும். காம விகாரத்தை சுப விருப்பத்தின் ரூபத்தில், கோபத்தை ஆன்மிக மகிழ்ச்சியின் ரூபத்தில், பேராசையைப் பற்றற்ற உள்ளுணர்வின் ரூபத்தில், மோகத்தை அன்பின் ரூபத்தில் மற்றும் தேக அபிமானத்தை சுய அபிமானத் தின் ரூபத்தில் மாற்றி விடுவீர்களானால் மாயாவை வென்றவராக, உலகை வென்றவராக ஆகி விடுவீர்கள்.

சுலோகன்:
உண்மையான தங்கத்தில் எனது என்பது தான் அலாய் (கலப்படம்) ஆகும். அது மதிப்பைக் குறைத்து விடும். எனவே எனது என்பதை முடித்து விடுங்கள்.

அவ்யக்த இஷாரா - இணைந்த ரூபத்தின் ஸ்மிருதி மூலம் சதா வெற்றியாளர் ஆகுங்கள்

ஒரு போதும் எந்த ஒரு காரியத்திலும் அல்லது சேவையிலும் எப்போது தனியாக இருப்பதாக அனுபவம் செய்கிறீர்களோ, அப்போது களைத்து விடுகிறீர்கள். பிறகு இரண்டு புஜங்கள் உள்ளவரைத் துணையாக ஆக்கிக் கொள்கிறீர்கள். ஆயிரம் புஜங்கள் கொண்டவரை மறந்து விடு கிறீர்கள். எப்போது ஆயிரம் புஜங்கள் உள்ளவர் தமது பரந்தாம வீட்டை விட்டு உங்கள் துணை யாவதற்காக வருகிறாரோ, அப்போது அவரை உங்களுடன் இணைந்தவராக ஏன் வைத்துக் கொள்வ தில்லை? சதா புத்தி மூலம் இணைந்த நிலையில் இருப்பீர்களானால் சகயோகம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.