26.04.26    காலை முரளி            ஓம் சாந்தி 31.12.2009      பாப்தாதா,   மதுபன்


"புது வருடத்தில், அனைத்து ஆத்மாக்களுக்கும் செய்தியை கொடுத்து - பொன்னான உலகத்தின் பரிசை கொடுங்கள்; தந்தைக்குச் சமமாக ஆகுவதற்காக ஆத்ம-அபிமானியாக இருக்கும் இயல்பை, இயற்கையானதாக ஆக்குங்கள்

இன்று பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும், பாப்தாதாவின் அன்பு மற்றும் சிநேகத்தில் மூழ்கி யிருக்கும் நிலையில் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு குழந்தையும் பரமாத்மா மீது கொண்ட அன்பில், பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்துக் குழந்தைகளும் - அன்பெனும் விமானத்தில் வந்து விட்டீர்கள். பொதுவாக நீங்கள் புத்தாண்டு கொண்டாட வந்திருக்கிறீர்கள், ஆனால் உங்கள் அனைவரின் கண்களிலும் என்ன தென்பட்டுக் கொண்டு இருக்கிறது? புது வருடம், புத்தாண்டு என்பது ஒரு காரணம் மட்டுமே, ஆனால் உங்கள் அனைவரின் கண்களிலும் எதற்கான உற்சாகம் இருக்கிறது? மூன்று விஷயங்களுக்கான வாழ்த்துக்கள் கொடுக்கப்படுகின்றது. ஒன்று உங்களது புதிய வாழ்க்கைக்கான வாழ்த்து, இரண்டாவது புதிய யுகத்திற்கான வாழ்த்து, மூன்றாவது குடும்பம் மற்றும் தந்தையுடனான சந்திப்பிற்கான வாழ்த்து. உங்கள் கண்களில் என்ன சுழன்று கொண்டிருக்கிறது? உங்களுடைய புதிய யுகம் உங்கள் முன்னால் வந்து கொண்டிருக்கிறது தானே! புதிய யுகம் வந்தே விட்டது என்ற உற்சாகம் உங்கள் உள்ளத்தில் வந்து கொண்டு இருக்கிறது. புதிய யுகத்தின் பிரகாசமான ஆடை இத்தனை தெளிவாக உங்கள் முன்னால் தெரிகிறது அதாவது - இன்று நீங்கள் சங்கம யுகத்தில் இருக்கிறீர்கள், மேலும் மிக விரைவில் இந்த ஒளிமயமான ஆடையை அணியப் போகிறீர்கள். அதை தங்கள் முன்னே பார்த்துப் பார்த்து மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறீர்கள். விடை கொடுத்துக் கொண்டும் இருக்கிறீர்கள் மேலும் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டு இருக்கின்றீர்கள். எப்படி பழைய வருடத்திற்கு விடை கொடுத்த பிறகு, அதை மறந்து விடுகின்றீர்கள், புது வருடம் தான் முன்னால் வருகின்றது அதே போல, உங்களுக்கு முன்னால் உள்ள பழைய உலகிற்கு நீங்கள் வாழ்த்துக்கள் சொல்லவில்லை, விடைபெறுகிறீர்கள்; ஆனால் புதிய உலகிற்கு வாழ்த்துக்கள் கொடுத்து கொண்டு இருக்கிறீர்கள். பழைய உலகிற்கு விடை கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். இன்று உங்கள் அனைவரிடத்திலும் புது யுகத்திற்கான ஊக்கம், உற்சாகம் இருக்கின்றது, மக்களும் கூட புது வருடத்திற்கான வாழ்த்துக் களை கொடுக் கின்றார்கள் மேலும் அதன் கூடவே பரிசும் கொடுக்கின்றார்கள். எனவே பாப்தாதாவும் குழந்தை களாகிய உங்களுக்கு, உங்களது பழைய சுபாவம் மற்றும் சமஸ்காரங்களுக்கு விடைகொடுத்து

விட்டு, புதிய உலகிற்குச் செல்வதற்கான பரிசை வழங்குகிறார். அந்தப் புதிய உலகில் எப்போதுமே பிராப்தி (அனைத்தும் கிடைத்தல்) மற்றும் பிராப்தி மட்டுமே இருக்கும். சுருக்கமாகச் சொன்னால், புதிய உலகில் அடைய முடியாத பொருள் என்று எதுவுமே இருக்காது.

அப்படிப்பட்ட பொன்னான உலகத்தின் பரிசை பாப்தாதா உங்கள் ஒவ்வொரு குழந்தைக் கும் பரிசாக கொடுத்து விட்டார். நாம் தான் அந்தப் பொன்னான உலகத்திற்கு அதிகாரிகளாக ஆகிக் கொண்டு இருக்கிறோம் என்ற நஷா உங்களுக்குள்ளும் இருக்கின்றது தானே! இத்தகைய பரிசை (பொன்னான உலகம்) வேறு யாராலும் கொடுக்க முடியாது. ஒவ்வொரு குழந்தைக்கும் – தந்தை யின் கட்டளை என்னவெனில் - அனைத்து ஆத்மாக்களுக்கும் - தந்தையின் ஆஸ்தியான இந்த பொன்னான உலகத்தைப் பற்றிய செய்தியைச் சொல்லி, அவர்களுக்கும் இந்தப் பரிசை வழங்க வேண்டும் என்பதாகும். உங்களிடம் எப்படிப்பட்ட பரிசுகள் இருக்கின்றன? ஒன்று புதிய உலகத்திற் கான பரிசு, மற்றொன்று உங்களிடம் பல பொக்கிஷங்கள் உள்ளன. குணங்களின் பொக்கிஷம், சக்திகளின் பொக்கிஷம், சுய கௌவரத்தின் (சுவமான்) பொக்கிஷம் என எத்தனை பொக்கிஷங்கள்! எனவே அனைவருக்கும் ஏதாவதொரு குணத்தையோ, சக்தியையோ பரிசாக வழங்குங்கள்; அந்தப் பரிசு அவர்களின் வாழ்க்கையை மாற்றி அவர்களைப் பொன்னான உலகத்தின் அதிகாரிகளாக ஆக்கட்டும். ஏனெனில், இன்று நாலாபுறமும் துக்கமும் அசாந்தியும் அதிகரித்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். நாலாபுறங்களிலும் - ஒவ்வொருவருக்கும் பயமும், கவலையும் இருக் கின்றது. அப்படிப்பட்ட துக்கமான, அசாந்தியான ஆத்மாக்களுக்கு, குறைந்தபட்சம் இந்த செய்தியை அவசியம் கொடுங்கள் அதாவது "இப்போது தந்தை வந்துவிட்டார், இனி அழிவற்ற ஆஸ்திக்கு அதிகாரி யாகுங்கள்" என்ற செய்தி. இந்தச் செய்தியை நீங்கள் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் கொடுத்துக் கொண்டிருந்தாலும், இப்போதும் கூட தந்தையின் குழந்தைகள் பலர் இந்தச் செய்தி யைப் பெறாமல் வஞ்சிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களும் கூட ஒரே தந்தையின் குழந்தை கள் தானே, எனவே உங்களின் சகோதரன், சகோதரிகளுக்கு - இந்தச் செய்தி (தந்தை வந்துவிட்டார்) எனும் பரிசை அவசியம் கொடுங்கள். யாரும் விடுபட்டுவிடக் கூடாது.

நீங்கள் சேவை செய்து கொண்டு தான் இருக்கிறீர்கள்; குழந்தைகளின் சேவையைப் பார்த்து பாப்தாதா குஷி அடைகிறார். ஆனால், "எனது குழந்தை எவரும் இந்தச் செய்தி (தந்தை வந்து விட்டார்) கிடைக்காமல் விடுபட்டுவிடக் கூடாது" என்பதே தந்தையின் ஆசையாக இருக்கிறது. "உங்களுக்குப் பொன்னான உலகத்தின் பரிசு கிடைத்தது, ஆனால் எங்களுக்குத் தெரியவில்லையே" என்று அவர்கள் புகார் சொல்லக்கூடாது. நமது தந்தை வந்துவிட்டார், ஆனால் எங்களுக்குச் செய்தி கிடைக்கவில்லை என்று அவர்கள் வருந்தக் கூடாது. எனவே, இந்த புத்தாண்டில் ஒன்றுகூடித் திட்டமிடுங்கள்; எந்தவொரு மூலையிலும் இருப்பவர்களுக்கும் இந்தச் செய்தி சென்றடைவதை உறுதி செய்யுங்கள். யாரும் விடு பட்டுவிடக் கூடாது. அவர்கள் குறை கூறுவதற்குப் பதிலாக, மகிழ்ச்சியடைந்து நமது தந்தை வந்துவிட்டார் என்பதை அறிந்து கொள்ளட்டும். வஞ்சிக்கப்பட்டு இருந்து விடக் கூடாது. எனவே, இந்த புது வருடத்தில் என்ன செய்வீர்கள்? அனைவரும் தங்களுக் குள் ஒன்றிணைந்து ஒரு திட்டத்தை உருவாக்குங் கள். பாப்தாதாவிற்கு ஒவ்வொரு குழந்தை மீதும் இரக்கம் வருகின்றது. எனவே, நீங்களும் உங்கள் சகோதர சகோதரிகள் மீது விசேஷமான இரக்க உணர்வும், நலம் விரும்பும் தன்மையும் கொண்டு (கல்யாண்காரியாக இருந்து) அனை வருக்கும் இந்தச் செய்தியை கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் இனி யாரும் புகார் கூறாதவாறு செயல்படுங்கள்.

இன்று, அனைத்துக் குழந்தைகளும் - புத்தாண்டு கொண்டாடும் ஊக்கம் உற்சாகத்தில் வந்துள்ளீர் கள். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் பார்த்து என்ன பாடல் பாடுகின்றார்? தெரியும் தானே. "ஆஹா குழந்தைகளே, ஆஹா!". யார் முதல் முறையாக வந்திருக்கின்றார்களோ, அவர்களுக்கும் பாப்தாதா சொல்லிக்கொள்வது - நீங்கள் அதிர்ஷ்டசாலிகள், ஏனெனில் நேரம் முடிவடைவதற்கு (சமாப்தி ஆகுவதற்கு) முன்பே தந்தையுடையவராக ஆகி விட்டீர்கள். புதிய குழந்தைகளுக்கு, பாப்தாதா - பல கோடி மடங்கு அதிர்ஷ்டசாலிகள் ஆகுவதற்கான வாழ்த்துகளைத் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். இன்றைய காலத்தில் பாப்தாதா அனைத்துக் குழந்தைகளிடமும் ஒரு விஷயத்தைப் பார்க்க விரும்புகிறார். அது என்னவென்று தெரியுமா?. எப்படி ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உற்சாகம் இருக்கின்றது, லட்சியம் இருக்கின்றது - அதாவது நாம் பாப்சமான் ஆகக்கூடியவர்கள் தான், ஆகுவோம் என்பது அல்ல, ஆகியே தீருவோம் என்ற லட்சியம் இருக்கிறது, அதே போல் இப்பொழுது லட்சியத்திற்கு ஏற்ற லட்சணத்தையும் பாப்தாதா பார்க்க விரும்புகிறார். எப்படி சமமாக ஆக வேண்டும் என்ற லட்சியம் இருக்கின்றதோ அப்படி சமமாக ஆகுவதற்கான லட்சணமும் இருக்கட்டும். இப்பொழுது லட்சியம் மிகவும் உயர்வாக இருக்கிறது ஆனால் லட்சணத்தில் விசேஷமாக கவனம் வேண்டும். சமமாக ஆகுவது என்ற லட்சியம் எத்தனை பெரியதோ அத்தனை பெரியதாக லட்சணமும் இருக்கட்டும். இப்பொழுது சில குழந்தைகள் - லட்சணங்களை தாரணை செய்ய விரும்புகிறார்கள்; ஆனால் இடை-இடையில் நாங்கள் நிறைய விரும்புகிறோம் ஆனால் என்று சொல்லி விடுகிறார்கள். எனவே, இந்த "ஆனால்" என்பது நீங்கிப் போகட்டும். தூரத்திலிருந்து பார்க்கும்போதே - எத்தனை பெரிய லட்சியமோ அதற்கான லட்சணம், உங்களுடைய முகத்தின் மூலம், நடத்தையின் மூலம் தெண்பட வேண்டும். எப்படி இதற்கு முன்பு நீங்கள் தேக அபிமானத்தில் இருந்தீர்கள்; ஆனால் தேக அபிமானத்தில் இருந்தபொழுது தேக அபிமானம் என்பது இயற்கையான இயல்பாக இருந்தது; தேக அபிமானத்தில் வருவதற்கு எப்பொழுதாவது புருஷார்த்தம் ஏதேனும் செய்தீர்களா என்ன, இயற்கையான இயல்பாக தேக அபிமானம் இருந்தது; அரைக் கல்பம் புருஷார்த்தம் செய்யவில்லை - அதே போல் இப்பொழுது தேகி அபிமானி ஆகுவதும் - இயற்கையான இயல்பாக இருக்க வேண்டும். எப்பொழுது தேக அபிமானத்தின் - இயற்கையான இயல்பு தன்மையில் இருந்தீர்களோ அப்போது தேக அபிமானத்தில் வர வேண்டும் என்று எப்போதாவது நினைவுக்கு வந்ததா, இந்த புருஷார்த்தம் செய்தீர்களா? இப்பொழுதும் கூட தேக அபிமான நிலை மற்றும் ஆத்ம அபிமான நிலை (இரண்டும்) இருக்கிறது; அதில் ஆத்ம அபிமான நிலைக்கு மட்டும் ஏன் உழைப்பு தேவைப்படுகிறது! ஏனெனில் பாப்தாதாவிடம் சமாச்சாரம் (செய்தி) வருகிறது - அவ்வபோது தேக அபிமானத்தை அழிப்பதில் உழைக்க வேண்டி இருக்கிறது. எப்பொழுது தேக அபிமானம் மட்டும் இயற்கை யானதாக இருக்க முடிகிறதோ அப்பொழுது ஆத்ம அபிமானி ஆகுவதில் மட்டும் ஏன் உழைப்பு தேவைப் படுகிறது? பாப்தாதாவிற்கோ, குழந்தை களின் இந்த உழைப்பு நல்லதாகப் படவில்லை. உழைப்பிலிருந்து முக்தி அடைந்து மேலும் இயற்கையான நிலையாக மாற வேண்டும் - இதைத்தான் (இயற்கை யான ஆத்ம அபிமானி நிலையைத் தான்) லட்சியமும், லட்சணமும் சமமாக இருத்தல் என்று சொல்லப்படுகின்றது. பிறகு பாருங்கள் நீங்கள் பாப்சமான் ஆகுவது மிக சகஐமாக மேலும் இயற்கையானதாக இருக்கும்.

பிரம்மா பாபாவை பாருங்கள் - இவ்வளவு பெரிய குடும்பத்தின் பொறுப்பு இருந்த போதிலும், அவர் இயற்கையாகவே ஆத்ம-அபிமானி நிலையில் நிலைத்திருந்தார். உங்களுக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு இருந்தாலும், பிரம்மா பாபா சுமந்த பொறுப்போடு ஒப்பிடும்போது உங்களுடையது உங்களுக்கு என்னவாக தெரிகிறது!. எப்படிப்பட்ட பொறுப்பாக இருந்தாலும் சரி, (யக்ஞத்தின்) மண்டல பொறுப்பாகவே இருந்தாலும் சரி அல்லது எந்தவொரு அதிகார ரீதியான யக்ஞ செயல் பாட்டிற்கான பொறுப்பாக இருந்தாலும் சரி ஆனால் அந்த பொறுப்புகள் - பிரம்மா பாபாவிற்கு முன்னால் என்ன! பிரம்மா பாபா, சிவபாபாவின் உதவியுடன் "செய்விப்பவர் செய்வித்து கொண்டு இருக்கின்றார் நான் (வெறும்) செய்பவராக ஆகி பாப்சமான் (நிலையில்) விடுபட்டு மேலும் அன்பானவராக (நியாரா மற்றும் பியாராவாக) இருக்கின்றேன் என்று இருந்தார். எனவே பாப்சமான் ஆக விரும்புகின்றீர்கள் எனும்போது - சோதனை செய்யுங்கள் - அதாவது எண்ணம், சொல் மற்றும் செயல்களுக்கான பொறுப்புகள் இருந்தாலும் - நான் செய்பவனாக, கருவியாக (டிரஸ்டியாக) இருக்கின்றேன், செய்விப்பவர் எஜமானர் சிவபாபா, இந்த செய்விப்பவர் என்ற பாடம் போக போக மறந்து போய்விடுகிறது. எனவே லட்சியம் மற்றும் லட்சணத்தை சமமாக ஆக்குங்கள். இப்பொழுது பழைய வருடத்திற்கு விடை கொடுப்பதன் கூடவே, இந்த லட்சியத்தை லட்சணத்தில் (நடைமுறையில்) கொண்டு வாருங்கள். புது வருடம் என்றால் புதிய விஷயங்கள் என்பதாகும். "என்ன செய்வது, மாயை வந்துவிடுகிறது; நான் விரும்பவில்லை ஆனாலும் அது வந்துவிடுகிறது..." இது போன்ற சப்தங்களையும், சங்கல்பங்களையும் பழைய வருடத்துடன் கூடவே விடை கொடுத்து விடுங்கள். வெறும் வருடத்திற்கு மட்டும் விடை கொடுக்காதீர்கள். மாயை கூட, பாப்தாதாவிடம் வந்து என்ன சொல்கிறது என்பதை பாப்தாதா சொல்லியிருந்தார். என்ன சொல்கிறது? "நான் செல்வதற்கான நேரம் இது என்பதை - நான் புரிந்து இருக்கின்றேன், ஆனால் சில குழந்தைகள் என்னை இன்னும் அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள், நான் என்ன செய்வது?" என்று கேட்கிறது. எனவே, இன்று பழைய ஆண்டிற்கு விடை கொடுப்பதன் கூடவே, மாயையின் பல்வேறு ரூபங்களுக்கும்- முழுமையாக விடை கொடுத்துவிடுங்கள். தைரியம் இருக்கிறதா? தைரியம் இருக்கிறதா? கைகளை உயர்த்துங்கள். விடை கொடுப் பதற்கான தைரியம் இருக்கிறதா? பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு தைரியம் இருக்கிறதா? யாருக்கெல்லாம் தைரியம் இருக்கிறதோ அவர்கள் கைகளை உயர்த்துங்கள். உங்களுடைய இந்தத் தைரியத்திற்காக, பாப்தாதா பல கோடி மடங்கு வாழ்த்துகளை கொடுக்கின்றார். ஏன்? ஏன் பாப்தாதா, இதற்கு (லட்சியம் மற்றும் லட்சணத்தின் சமநிலைக்கு) - இந்த அளவிற்கு அழுத்தம் கொடுக்கின்றார்? ஏனெனில், உலகத்தின் நிலைமை மிகவும் வேகமாக மோசமடைந்து வருவதை நீங்கள் பார்க்கிறீர்கள். "எல்லாம் திடீரென்று நடக்கும்" என்று பாப்தாதா நீண்ட காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். திடீரென்று தான் நடக்கும் என்று சொல்லும் போது ஒருவேளை நீண்ட கால பயிற்சி இல்லை எனில், நீங்களே சொல்லுங்கள் - திடீரென்று நடக்கும் போது பயிற்சியின் அவசியம் தேவை தானே!

பாப்தாதா ஒரு வீட்டுப்பாடம் கொடுத்திருந்தார்: ஒரு நாளைக்கு மொத்தம் 24 முறை, தலா 10 நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் அநேக குழந்தைகளுக்கு இது கடினமாக இருந்து வருகிறது. யோசித்துப் பாருங்கள், உங்களால் இப்போது 10 நிமிடம் பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், அந்தத் திடீர் நேரத்தில் (அழிவு காலத்தில்) நீங்கள் என்ன செய்வீர்கள்?. 24 முறையும் பயிற்சி செய்ய நேரம் குறைவாக இருக்கலாம் என்பதை பாப்தாதா அறிவார், ஆனால் இது ஒரு முயற்சியே. 10 நிமிடம், ஒரே நினைவில் - உங்களால் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நிலைத்திருக்க முடிகிறதா என்று சோதித்துப் பாருங்கள். பாப்தாதா 10 நிமிடம் கண்டிப்பாக செய்யவேண்டும் என்று இப்பொழுதும் கூட சொல்லவில்லை; உங்களால் 10 நிமிடம் முடியா விட்டால் 5 நிமிடங்கள் செய்யுங்கள், பிறகு அதை 6 அல்லது 7 நிமிடங்களாக மெல்ல மெல்ல அதிகரியுங்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சியுங்கள். பாப்தாதா அவரே சொல்கின்றார் இதில் அப்படிப்பட்ட விஷயம் எதுவும் இல்லை (10 நிமிடம் என்ற கட்டாயம்). 10 நிமிடம் அதிகம் என்று தோன்றினால் 8 அல்லது 9 நிமிடங்கள் செய்யுங்கள். எவ்வளவு அதிகமாகப் பயிற்சி செய்ய முடியுமோ அந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் "நீண்ட கால வரதானத்தை" இப்போதுதான் நடைமுறையில் பெற முடியும். இப்போது நீண்ட காலப் பயிற்சி இல்லை என்றால், அரை கல்பத்திற்கான அந்த நீண்ட கால பலனைப் பெறுவதில் வித்தியாசம் ஏற்பட்டுவிடும். எனவே உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்யுங்கள் என்று பாப்தாதா அனுமதி வழங்கியுள்ளார்; 5 நிமிடங்களுக்கு மேலே செய்யுங்கள், 10 நிமிடங்கள் முடியாவிட்டால் 7 நிமிடங்கள் செய்யுங்கள் அல்லது 8 நிமிடங்கள் செய்யுங்கள், 5 நிமிடங்கள் வரை கூட செய்வதற்கு அனுமதிக்கின்றார் (அதற்கும் கீழே குறைத்து விடாதீர்கள்). ஆனால் ஏதாவதொரு நேரத்தில் 10 நிமிடங்கள் செய்வது மிகவும் நல்லது. எதிர் காலத்தில் நீங்கள் உங்களுக்காகவும், உலகிற்காகவும் (அமைதி மற்றும் சக்தியின்) கிரணங்களைப் பரப்ப வேண்டிய கட்டாயத்தின் நேரம் வரும். எனவே, பாப்தாதா இந்த அனுமதியை வழங்குகின்றார் (குறைந்த பட்சம் 5 நிமிடமாவது செய்யுங்கள்) எவ்வளவு அதிகப்படியான நேரம் செய்ய முடியுமோ, அவ்வளவு பயிற்சி செய்யுங்கள் ஏனெனில் இன்றைய நீண்ட கால பயிற்சி தான் எதிர்காலத் திற்கான ஆதாரம். சரியா? "உங்களுக்கு இது கடினமாகத் தோன்றுகிறது; அது பரவாயில்லை. இந்த நேரத்தில் அது ஒரு பொருட்டல்ல, இதைப் பற்றி நீங்கள் தந்தையிடம் கூறிவிட்டீர்கள், அது நல்லது. ஏனெனில், உங்களால் பத்து நிமிடங்கள் அமர முடியாமல், (அமரும் கொஞ்ச நேரத்திலும்) யோசனையிலேயே சென்றுவிடும் எனும் போது - அதிலேயே 5 நிமிடங்கள் போய்விடும், எனவே தான் பாப்தாதா குறைந்ததிலும் குறைந்த பட்சம் 5 நிமிடங்களாவது செய்யுங்கள், அதைவிட குறைத்து விடாதீர்கள் என்று சொல்கின்றார். எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகரியுங்கள். சரியா, தெளிவாக இருக்கிறதா? பாப்தாதா உங்கள் ஒவ்வொருவரையும் மிகவும் ஸ்ரேஷ்டமான (உயர்ந்த) சொரூபத்தில் பார்க்கிறார்; இதைக் குறிப்பிடும் அடையாளமாக, பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் அவ்வளவு அதிகமான சுவமான்களை (சுய கௌரவம்) கொடுத்துள்ளார். அந்த சுவமான்களின் பட்டியலை நீங்கள் எடுத்தால், அது எவ்வளவு நீளமாக இருக்கும்!

இன்று அமிர்தவேளையில் பாப்தாதா ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் எதைப் பார்க்கச் சென்றார் தெரியுமா? பாப்தாதா உங்களுக்கு சுவமான்களின் (சுய கௌரவம்) ஒரு மிகப்பெரிய மாலையை வழங்கியுள்ளார். ஒவ்வொரு சுவமானிலும் நிலைத்து நின்று, நீங்கள் நடக்கும்போதும், பேசும்போதும் அந்த மாலையின் ஒவ்வொரு மணியையும் (சுவமானையும்) சுழற்றிக்கொண்டே இருந்தால், நீங்கள் மிகுந்த பேரின்பத்தை அடைவீர்கள். உங்களிடம் சுவமான்களின் ஒரு பட்டியல் உள்ளது, ஆனால் அந்தப் பட்டியலின் ஒவ்வொரு அம்சமும் எவ்வளவு மகத்தானது! மேலும், இதை உங்களுக்கு வழங்கியது யார்? சர்வசக்திவான் ஆகிய தந்தை ஒவ்வொரு குழந்தைக்கும் அநேக சுவமான்களின் (சுய கௌரவம்) பட்டியலை வழங்கியுள்ளார். அதைப் பயன்படுத்துங்கள், ஏனெனில் உங்களுடைய இந்த சுவமானைக் குறைக்கக்கூடிய அதிகாரம் வேறு எவருக்கும் இல்லை. இவ்வளவு அதிகமான சுவமான்கள் கொண்ட மாலை வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. சத்யுகத்தில் (பொற்காலம்) உங்களுக்கு ராஜ்ய பாக்கியம் கிடைக்கும், ஆனால் இந்த சுவமான்களின் மாலை சங்கம யுகத்தின் கொடையாகும் என்று பாப்தாதா பார்த்தார். பாப்தாதா எப்போது குழந்தை களைப் பார்த்தாலும், அவர்களை சுவமானின் நிலையில் தான் பார்க்கிறார் - 'ஆஹா குழந்தையே! ஆஹா!'. எனவே, 'நான் யார்' என்ற சுவமானின் அதிகாரத்தில் நிலைத்திருங்கள்." ஒவ்வொரு சூழ் நிலைக்கும் ஏற்ப - அதற்கேற்ற சுவமான்களை தன் முன்னால் வையுங்கள் (தாரணை செய்யுங்கள்) மேலும் சோதனை செய்யுங்கள் - இன்று அமிர்தவேளை எந்தவொரு விசேஷ சுவமானை புத்தியில் வைத்தேனோ - அதை பயன்படுத்தினேனா! அந்த சுவமான் என்பது ஒரு பொக்கிஷம் தானே; ஏனெனில் பொக்கிஷத்தை வளர்ப்பதற்கான வழி - எவ்வளவு பொக்கிஷத்தை காரியத்தில் பயன்படுத்துகிறோமோ அவ்வளவு அதிகமாக அது வளரும். எனவே இன்று பாப்தாதா பார்த்துக் கொண்டிருந்தார் - எந்தக் குழந்தையிடம் சுவமானின் நினைவலைகள் அதிகமாக உள்ளது, யாரிடம் குறைவாக உள்ளது என்று. எங்கே சுவமான் இருக்கின்றதோ அங்கே தேக-அபிமானம் என்பது அழிந்து போய்விடுகின்றது. எனவே இன்று பாப்தாதா வலம் வந்து குழந்தைகளை பார்த்தார் -

அதாவது எப்படி சுவமான் என்பது பொக்கிஷமோ அப்படி ஒவ்வொரு சக்தியையும் ஒவ்வொரு குணத்தையும் காரியத்தில் பயன்படுத்துங்கள். "மாயை வந்துவிட்டது, மாயை போகவில்லை" என்று சொல்வது ஒரு பிரச்சனை அல்ல; மாயை பற்றி பாபா ஏற்கெனவே சொல்லியிருந்கிறார் அதாவது என்னை அழைக்கின்றார்கள் அப்பொழுது தான் நான் செல்கின்றேன், அவர்கள் கூப்பிடாமல் நான் செல்வதில்லை என்று மாயை சொல்கிறது. ஒரு சிறிய பலவீனமான சங்கல்பம் செய்தாலோ அல்லது சக்திகளை கைவிட்டாலோ அது மாயையை அழைப்பதற்குச் சமம். விரும்ப வில்லை ஆனால் வந்து விடுகிறது. பலம்நிறைந்தவர் யார்? விரும்பவில்லை ஆனால் வந்துவிடு கிறது எனில் மாயை பலம்நிறைந்ததா அல்லது நீங்களா? இன்று பழைய ஆண்டு நிறைவடைந்து புதிய ஆண்டிற்கான புதிய ஊக்கம், புதிய உற்சாகம் பிறக்கிறது. ஏனெனில் சங்கம யுகத்திற்கான மகிமை - ஒவ்வொரு நாளும் உற்சாகம் நிறைந்த நாள், அதாவது உற்சவம். எனவே இந்த உற்சாகத்தை உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள். நடக்கும்போதும் பேசும்போதும் உங்களது சார்ட்டைச் சரி பார்க்கவும். சரிபார்த்தால் தான் மாற்றிக்கொள்ள முடியும்; சரிபார்க்காவிட்டால் எப்படி மாற்ற முடியும்?. ஒவ்வொரு குழந்தைக்காகவும் இன்று பாப்தாதாவின் விசேஷ சங்கல்பம் என்னவென்றால், பழைய ஆண்டிற்கு விடை கொடுப்பது போல மாயைக்கும் விடை கொடுக்க வேண்டும் என்பதே. வீணான சங்கல்பங்களுக்கு விடை கொடுங்கள், ஏனெனில் அநேகரிடத்தில் வீணான சங்கல்பங்களே அதிகம் வருகின்றன. விகாரமான சங்கல்பங்கள் குறைவாக இருந்தாலும், வீணானவை அதிகம் உள்ளன. இனி வீணானவை என்ற அடையாளமே இருக்கக்கூடாது. ஒவ்வொரு சங்கல்பமும் சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும். வீணான சங்கல்பங்களால் நேரமும் வீணாகிறது, தந்தைக்குச் சமமாக மாறுவதற்கான தூரமும் அதிகரிக்கிறது. உங்களுக்குச் சமமாக மாற வேண்டும் என்ற விருப்பம் உள்ளது, கைகளையும் உயர்த்தினீர்கள். ஆனால் பாப்தாதா எப்பொழுதும் சொல்வதுண்டு - அதாவது மனதின் கைகளை உயர்த்துங்க்ள, இந்த கைகளை (ஸ்தூல) உயர்த்துவது என்பது எளிது. எனவே விடை கொடுப்பதற்கு தைரியம் இருக்கின்றதா? தைரியம் இருக்கின்றதா? கைகளை உயர்த்துங்கள். நல்லது, தைரியம் உடையவர்களாக இருக்கின்றீர்கள்! அந்த தைரியத்தை மட்டும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். தைரியம் என்பது இருந்து விட்டால், எந்த லட்சியம் வைத்திருக்கின்றோமோ அது நடந்தே தீரும். ஏனெனில் பாப்தாதா உங்களுடன் இருக்கிறார். தனது குழந்தை யாரும் பின் தங்கிவிடக் கூடாது என்பதே பாபாவின் விருப்பம். கைகோர்த்து ஒன்றாக நடப்போம். சிவபாபா நிராகாரமானவர், அவருக்கு கைகள் இல்லை, ஆனால் ஸ்ரீமத் தான் அவரது கை. ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத்படி நடப்பது என்பது பாபாவின் கையோடு கை பிடித்து நடப்பது என்பதாகும். எனவே, அனைவருக்கும் புது வருடத்திற்கான, புது வாழ்க்கைக்கான மேலும் புதிய யுகத்திற்கான என்ற மூன்றிற்குமான, பல கோடி மடங்கு வாழ்த்துக்கள். நல்லது.

இப்பொழுது நாலாபக்கங்களிலும் உள்ள உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள - ஒரு தந்தையின் அன்பான, தந்தையின் செல்லமான, தந்தையின் காணாமல் போய் கண்டெடுக் கப்பட்ட ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பிரியாவிடை மற்றும் வாழ்த்துக்கள். மேலும் பாப்தாதா கூறியிருந்தார் அதாவது பழைய வருடத்தின் கூடவே பழைய சமஸ்காரங்களுக்கு விடை கொடுக்கக் கூடிய பழைய சுபாவங்களுக்கு விடை கொடுக்கக் கூடிய மகாவீர் குழந்தை களுக்கு, ஒவ்வொரு அடியிலும் பலமடங்கு வருமானம் செய்யக்கூடிய, சதா சுவமானத்தை கொடுக்கக்கூடிய பாப்தாதா வின் சுவமான்களினுடைய நிலையில் இருந்து அனுபவம் செய்யக் கூடிய, ஒவ்வொரு குழந்தை யையும் - பாப்பதாதா - அப்படிப்பட்ட ஒரு ரூபத்தில் பார்க்கின்றார் அதாவது இந்த ஒவ்வொரு குழந்தையும் 21 பிறவிகளுக்கான ஆஸ்திக்கான அதிகாரத்தை பெற்றவர்கள். முழு கல்பத்தில் 21 பிறவிகளுக்கான அதிகாரத்தின் ஆஸ்தி - குழந்தை களாகிய உங்களுக்குத்தான் கிடைத்திருக் கின்றது. எனவே அப்படிப்பட்ட சிரேஷ்ட அதிகாரியாக நாலா புறமும் இருக்கக்கூடிய குழந்தை களுக்கு பாப்தாதா - தந்தை, ஆசிரியர் மற்றும் குரு ரூபம் என்ற மூன்று ரூபத்தின் மூலமாக அன்பு நினைவுகள் மற்றும் வணக்கத்தை கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்.

ஆசீர்வாதம்:
சேவை அல்லது புருஷார்த்தத்தில் வெற்றியை
பெறக்கூடிய 'இரட்டை கிரீடதாரி' ஆகுக!

சங்கமயுகத்தில் எப்பொழுதும் உங்களை 'இரட்டை கிரீடதாரியாக' உணர்ந்து செயல்படுங் கள். ஒன்று-ஒளியின் கிரீடம் அதாவது தூய்மையின் கிரீடம், மற்றொன்று-பொறுப்புகளின் கிரீடம். தூய்மை மற்றும் சக்தி ஆகிய கிரீடங்களை அணிபவர்களிடம், இரட்டை பலம் எப்போதும் நிலைத்திருக்கும். இத்தகைய இரட்டை பலம் கொண்ட ஆத்மாக்கள் எப்போதும் சக்திவாய்ந்தவர் களாக இருப்பார்கள்; அவர்களுக்கு சேவை அல்லது புருஷார்த்தத்தில் எப்பொழுதும் வெற்றி கிடைக்கும்.

சுலோகன்:
திவ்ய குணங்களுடைய ஆதாரத்தில் எண்ணம், சொல்
மற்றும் செயலை செய்வது தான் தெய்வீகதன்மை என்பதாகும்.


அவ்யக்த சமிக்கை: மகான் ஆகுவதற்கு மதுரதா (இனிமை) மற்றும்

பணிவு என்ற குணங்களை தாரணை செய்யுங்கள்.

எந்தவொரு பொருளையும் சூடுபடுத்தி மென்மையாக்கிய பிறகே, அதை வேண்டிய வடிவத்திற்கு மாற்ற முடியும். அதுபோலவே இங்கேயும், 'வெப்பம்' என்பது 'சக்தியின் ரூபம்' மற்றும் 'மென்மை' என்பது 'பணிவின் ரூபம்'. எவர் ஒருவருக்கு அனைத்து ஆத்மாக்கள் மீதும் அன்பு இருக்கிறதோ, அவர்களால் மட்டுமே பணிவுள்ளவர் களாக இருக்க முடியும். அன்பு இல்லையென்றால், யாராலும் இரக்கமுள்ளவராகவோ அல்லது பணிவுள்ளவராகவோ இருக்க முடியாது. 'சக்தியின் ரூபத்தில்' எஜமானர் என்ற தன்மையும் , 'பணிவின் ரூபத்தில்' சேவையின் குணமும் உள்ளது. எனவே, இந்த மென்மை மற்றும் சூடு (சக்தி மற்றும் பணிவு) ஆகிய இரண்டும் இருக்கும்போதுதான், ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம்மை வடிவமைத்து (மோல்டு) கொள்ள முடியும்.