01.12.24 Avyakt Bapdada Tamil Lanka Murli 18.01.2003 Om Shanti Madhuban
உங்களின் பிராமணப் பிறப்பினை உணர்ந்தவராக இருப்பதன் மூலம் சக்திசாலி ஆகி, எல்லோரையும் சக்திசாலி ஆக்குங்கள்.
இன்று, அன்பான குழந்தைகள் எல்லோரினதும் அன்பான நினைவின் பல்வேறு இனிய வார்த்தைகளும் அன்பு முத்துக்களாலான அட்டியல்களும் அமிர்த வேளைக்கு முன்னதாகவே பாப்தாதாவை வந்தடைந்தன. குழந்தைகளின் அன்பானது, பாப்தாதாவை மேலும் அன்புக்கடலில் அமிழச் செய்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் துண்டிக்காத அன்பு சக்தி இருப்பதை பாப்தாதா கண்டார். இந்த அன்பு சக்தியானது, ஒவ்வொரு குழந்தையையும் இலகு யோகி ஆக்குகிறது. அன்பின் அடிப்படையில், நீங்கள் சகல கவர்ச்சிகளுக்கும் அப்பால் செல்வதுடன் எவ்வளவிற்கு சாத்தியமோ, அந்தளவிற்கு முன்னேறிச் செல்கிறீர்கள். பாப்தாதாவிடமிருந்தும் விசேடமான ஆத்மாக்களிடமிருந்தும் தனித்துவமான, அழகான அன்பை அனுபவம் செய்யாத ஒரு குழந்தையைக்கூட பாபா காணவில்லை. ஒவ்வொரு பிராமண ஆத்மாவின் பிராமண வாழ்க்கையின் ஆரம்பமும் அன்பு சக்தியுடனேயே ஆரம்பித்தது. இந்த பிராமணப் பிறவியில் இந்த அன்பு சக்தியானது ஆசீர்வாதமாகி, உங்களை முன்னேறச் செய்கிறது. ஆகவே, இன்று, தந்தைக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான அன்பிற்கான விசேடமான தினமாகும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் இதயபூர்வமாக பாப்தாதாவிற்குப் பற்பல அன்பு முத்துக்களாலான அட்டியல்களை அணிவித்திருக்கிறீர்கள். ஏனைய சக்திகள் அனைத்தும் இந்தத் தினத்தில் அமிழ்ந்துவிட்டன. ஆனால், அன்பு சக்தியே வெளிப்பட்டுள்ளது. பாப்தாதாவும் குழந்தைகளின் அன்புக்கடலில் தன்னை மறந்திருக்கிறார்.
இன்றைய தினம், நினைவின் (விழிப்புணர்வின்) தினம் என்று அழைக்கப்படுகிறது. நினைவு தினம் என்பது தந்தை பிரம்மாவின் நினைவு தினம் மட்டுமல்ல. ஆனால், பாப்தாதா கூறுகிறார்: இன்றும் அத்துடன் எப்போதும், நீங்கள் பிராமணப் பிறவி எடுத்த கணத்தில் இருந்து இன்றுவரை, பாப்தாதா உங்களுக்கு நினைவூட்டியுள்ள வெவ்வேறு வகையான விழிப்புணர்வுகள் அனைத்தையும் நினைவில் வைத்திருங்கள். நீங்கள் எல்லோரும் பெற்ற முதலாவது விழிப்புணர்வு என்ன? உங்களுக்கு முதல் பாடம் நினைவிருக்கிறதல்லவா? நான் யார்? இந்த விழிப்புணர்வானது உங்களுக்கு புதிய பிறவியைக் கொடுத்தது. அத்துடன் அது உங்களின் மனோபாவம், பார்வை மற்றும் விழிப்புணர்வையும் மாற்றியது. இத்தகைய விழிப்புணர்வை நீங்கள் நினைத்தவுடனேயே, உங்களின் கண்களிலும் உங்களின் முகத்திலும் ஆன்மீக சந்தோஷத்தின் பிரகாசம் தென்படும். நீங்கள் விழிப்புணர்வை நினைக்கிறீர்கள். ஆனால், பக்தர்கள் உச்சாடனம் செய்து, மாலையின் மணிகளை உருட்டுகிறார்கள். நீங்கள் அமிர்த வேளையில் இருந்து, கர்மயோகி ஆகும்வரை ஒரு விழிப்புணர்வை மீண்டும் மீண்டும் நினைப்பீர்களாக இருந்தால், இந்த விழிப்புணர்வானது உங்களைச் சக்திசாலி ஆக்கும். ஏனென்றால், உங்களின் விழிப்புணர்வு எத்தகையதோ, இயல்பாகவே நீங்கள் அந்தச் சக்தியை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இதனாலேயே, இன்றைய நாள், நினைவு தினம் என்றும் அத்துடன் சக்தி தினம் என்றும் அழைக்கப்படுகிறது. தந்தை பிரம்மா உங்களின் முன்னால் வந்தவுடனேயே, தந்தையின் பார்வை ஆத்மாக்களான உங்களின் மீது விழுந்தவுடனேயே, நீங்கள் சக்தியைப் பெறுகிறீர்கள். நீங்கள் எல்லோரும் அனுபவசாலிகள். நீங்கள் எல்லோரும் அனுபவசாலிகள்தானே? அவரை நீங்கள் சாகார் ரூபத்தில் கண்டிருந்தாலென்ன அல்லது அவ்யக்த ரூபத்தால் பராமரிக்கப்படும்போது, அவரை அவ்யக்த ஸ்திதியில் அனுபவம் செய்திருந்தாலென்ன, உங்களின் இதயபூர்வமாக நீங்கள் பாப்தாதா என்று கூறிய உடனேயே ஒரு விநாடியில் நீங்கள் இயல்பாகவே சக்தியைப் பெறுகிறீர்கள். ஆகவே, ஓ சக்திசாலி ஆத்மாக்களே, இப்போது உங்களின் சக்தியால் ஏனைய ஆத்மாக்களையும் சக்திசாலிகள் ஆக்குங்கள். உங்களுக்குள் இந்த உற்சாகம் இருக்கிறதல்லவா? உங்களிடம் உற்சாகம் உள்ளது. நீங்கள் சக்தியற்ற ஆத்மாக்களைச் சக்திசாலிகள் ஆக்க வேண்டுமல்லவா? பலவீனமான ஆத்மாக்களைச் சக்திநிறைந்தவர்கள் ஆக்குவதற்கு மிக நல்ல உற்சாகம் எங்கும் காணப்படுவதை பாப்தாதா பார்த்திருக்கிறார்.
நீங்கள் சிவராத்திரிக்காக மிகுந்த கோலாகலமாக நிகழ்ச்சிகளைத் திட்டம் இடுகிறீர்கள். உங்கள் எல்லோருக்கும் உற்சாகம் உள்ளதல்லவா? இந்த உற்சாகம் உங்களிடம் இருக்கிறதா? இந்த வருடம் சிவராத்திரியின் போது அற்புதங்களைச் செய்வதற்கான உற்சாகத்தைக் கொண்டிருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! குழப்பங்கள் அனைத்தும் முடிந்து, ஆஹா! ஆஹா சக்திசாலி ஆத்மாக்களே! ஆஹா! என வெற்றி ஏற்படும் வகையில் அற்புதத்தைச் செய்யுங்கள். சகல பிராந்தியங்களும் நிகழ்ச்சிகளைத் திட்டம் இட்டுள்ளார்கள். பஞ்சாபும் அவற்றைத் திட்டமிட்டுள்ளார்கள். நல்லது. அலைந்து திரியும் ஆத்மாக்களுக்கும், தாகத்துடன் இருக்கும் ஆத்மாக்களுக்கும் அமைதியற்றிருக்கும் ஆத்மாக்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு துளியையேனும் கொடுங்கள். ஏனென்றால், அவர்கள் உங்களின் சகோதர, சகோதரிகளே. உங்களின் சகோதர, சகோதரிகளிடம் உங்களுக்குக் கருணை ஏற்படும்தானே? தற்காலத்தில், அனர்த்தங்கள் நிகழும்போது, அவர்கள் கடவுளை நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் சக்திகளையும் கணேஷ், அனுமான் போன்ற தேவர்களையும் ஏனைய தேவதேவியரையும் அதிகளவில் நினைக்கிறார்கள். எனவே, அவர்கள் யார்? நீங்கள்தான் அவர்கள், அப்படித்தானே? அவர்கள் ஒவ்வொரு நாளும் உங்களை நினைக்கிறார்கள். அவர்கள் அழைக்கிறார்கள்: ‘கருணைநிறைந்தவரே, காருண்யம் மிக்கவரே, கருணை காட்டுங்கள்! இரக்கம் கொள்ளுங்கள்! ஒரு துளி அமைதியையும் சந்தோஷத்தையும் கொடுங்கள்!’ அவர்கள் உங்களிடமிருந்து ஒரு துளிக்கான தாகத்துடன் இருக்கிறார்கள். ஓ சக்திகளே, ஓ தேவதேவியரே, சந்தோஷமில்லாத, தாகத்துடன் இருக்கும் ஆத்மாக்களின் சத்தம் உங்களை வந்தடையவில்லையா? அது உங்களை வந்தடைகிறதுதானே? பாப்தாதா அழைப்பைக் கேட்டதுமே, அவர் சக்திகளையும் தேவர்களையுமே நினைக்கிறார். அதனால், தாதிஜி நல்லதொரு நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளார். பாபாவிற்கு அது பிடித்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் நினைவு நாளே. ஆனால் இன்று, நீங்கள் நினைவைக் கொண்டிருப்பதன் மூலம், குறிப்பாகச் சகல சக்திகளையும் பெறுகிறீர்கள். எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருக்கும் பாப்தாதா இப்போது கூறுகிறார்: நாளையில் இருந்து சிவராத்திரி வரை, அதிகபட்ச எண்ணிக்கையான ஆத்மாக்களுக்கு ஒரு துளியையும் ஏதாவதொரு முறையில் உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளினூடாக செய்தியையும் நிச்சயமாகக் கொடுப்பதற்கான விசேடமான இலட்சியத்தை உங்களின் இதயங்களில் வைத்திருங்கள். உங்களுக்கு எதிரான முறைப்பாட்டை முடித்துவிடுங்கள். விநாசத்திற்கான திகதி இன்னமும் புலப்படவில்லை, அதனால் உங்களுக்கு எதிரான முறைப்பாட்டை எந்த வேளையிலும் முடிக்கமுடியும் எனக் குழந்தைகளான நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் இல்லை! அந்த முறைப்பாட்டை இப்போது நீங்கள் முடிக்காவிட்டால், ‘ஏன் நீங்கள் எங்களுக்கு முன்னரே சொல்லவில்லை? நாங்களும் ஏதாவது செய்திருப்போமே’ என மக்களிடமிருந்து நீங்கள் ஒரு முறைப்பாட்டைப் பெறுவீர்கள். இப்போது, அவர்கள் ‘ஓ பிரபு!’ எனச் சொல்வார்கள். அதனால், ஏதாவது ஆஸ்தியில் ஒரு துளியையேனும் அவர்கள் பெற்றுக் கொள்ளட்டும். அவர்களுக்குச் சிறிது நேரத்தையும் கொடுங்கள். ஒரு துளியிலாவது அவர்களின் தாகத்தைத் தணியுங்கள். தாகத்துடன் இருப்பவர்களுக்கு, ஒரு துளியேனும் அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, இதுவே அந்த நிகழ்ச்சி, அப்படித்தானே? பாப்தாதா உங்களுக்குப் பச்சைக் கொடி மட்டும் காட்டவில்லை, ஆனால் முரசங்களையும் அடிக்கிறார். அதாவது, நாளையில் இருந்து, திருப்தி ஆத்மாக்களான நீங்கள் ஆத்மாக்கள் எல்லோருக்கும் செய்தியை வழங்க வேண்டும். குறைந்தபட்சம் சிவராத்திரியின்போது, தந்தையின் பிறந்தநாளில், தாமும் செய்தியைப் பெற்றுள்ளோம் எனத் தமது வாய்களை எல்லோரும் இனிப்பாக்கிக் கொள்ளட்டும். இந்த தில்குஷ் இனிப்பை எல்லோருக்கும் கூறுங்கள், அதை அவர்களுக்கு ஊட்டுங்கள். சிவராத்திரியைச் சாதாரணமான முறையில் கொண்டாடாதீர்கள். ஆனால் ஏதாவது அற்புதங்களைச் செய்யுங்கள். இந்த உற்சாகம் உங்களுக்கு உள்ளதா? முதல் வரிசையில் இருப்பவர்களுக்கு அது இருக்கிறதா? அதிகளவு கோலாகலத்தை உருவாக்குங்கள். குறைந்தபட்சம், சிவராத்திரி எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது எமது தந்தையின் பிறந்தநாள். அவர்கள் இதைக் கேட்டு, சந்தோஷமாகக் கொண்டாட வேண்டும். அச்சா.
அமிர்தவேளையில், உங்களில் பெரும்பாலானோர் மிக நல்ல நினைவின் போதையையும் இறை பேறுகளையும் கொண்டிருப்பதை பாப்தாதா கண்டார். எவ்வாறாயினும், நீங்கள் அமிர்தவேளையில் கொண்டிருந்த போதைக்கும் நீங்கள் கர்மயோகி ஸ்திதியில் இருக்கும்போதுள்ள போதைக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. இதற்கான காரணம் என்ன? செயல்களைச் செய்யும்போது, நீங்கள் ஆத்ம உணர்வுடனும் கர்ம உணர்வுடனும் இருக்கிறீர்கள். இதற்கான வழிமுறை என்னவென்றால், ‘செயல்களைச் செய்யும்போது, இந்த ஆத்மாவான நான்......’ என்பதாகும். எந்த ஆத்மா? உங்களுக்கு அது ஏற்கனவே தெரியும். ஆத்மாக்களான உங்களின் வெவ்வேறு சுயமரியாதை ரூபங்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள். இத்தகையதோர் ஆத்மாவே கரவன்ஹாராகித் தனது பௌதீகப் புலன்களைச் செயல்பட வைப்பவர் ஆவார். இந்தப் பௌதீகப் புலன்கள் எனது பணியாளர்கள். ஆனால் நானே அந்தப் பணியாளர்களினூடாகச் செயல்படும் கரவன்ஹார் ஆவேன். நான் பற்றற்று இருக்கிறேன். உலகிலும், தனது கடமைகளைச் செய்யும்வேளையில் ஓர் இயக்குனர், தனது சக ஊழியர்களுக்கு அல்லது வார்த்தைகளைப் பேசுவதற்கு அவரின் கருவிகளாக இருப்பவர்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கும்போது, தான் அவர்களின் இயக்குனர் என்பதை அவர் மறப்பாரா? நானே சக்திவாய்ந்த கரவன்ஹார் ஆத்மா என்ற விழிப்புணர்வையே அவர் கொண்டிருப்பார். ஆத்மாவும் சரீரமும் - ஒன்று கரன்ஹார், மற்றையது கரவன்ஹார் என்ற விழிப்புணர்வு - ஒன்றாகக் கலந்துவிடும். தந்தை பிரம்மா அவரின் ஆரம்ப நாட்களில் எதைப் பயிற்சி செய்தார் என்பது பழைய குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் நினைவிருக்கிறதா? நீங்கள் அவரின் டயறிகளில் ஒன்றைக் கண்டீர்கள்தானே? டயறி முழுவதிலும், இந்த வார்த்தைகளே இருந்தன: ‘நான் ஓர் ஆத்மா, ஜசோதா(லௌகீக மனைவி) ஓர் ஆத்மா, இந்தக் குழந்தை ஓர் ஆத்மா. இவர் ஓர் ஆத்மா, அவர் ஓர் ஆத்மா’. அவர் சதா இந்த அடிப்படை விடயத்தையே பயிற்சி செய்தார். ஆகவே, நீங்கள் சதா இந்த முதலாம் பாடத்தைப் பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்: ‘நான் யார்?’ நீங்கள் உங்களையே சோதித்துப் பார்க்க வேண்டும். நான் ஓர் ஆத்மாதானே என நினைக்காதீர்கள். இந்த ஆத்மாவான நான், கரவன்ஹாராக, அந்த வேலையைச் செய்ய வைக்கிறேன். கரன்ஹார், கரவன்ஹாரில் இருந்து வேறுபட்டவர். அத்துடன் தந்தை பிரம்மாவின் பௌதீகப் புலன்கள் எப்படி அவரின் பணியாட்களாக இருந்தன என்ற இன்னொரு அனுபவத்தையும் கேட்டிருப்பீர்கள். ஒவ்வொரு நாள் இரவிலும் ஒரு சபை கூட்டப்பட்டதைப் பற்றியும் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்தானே? எனவே, அவற்றின் தலைவராக, அவர் தனது பணியாட்களிடம், தனது பௌதீகப் புலன்களிடம் அவற்றின் நலனை விசாரிப்பார். ஆகவே, தந்தை பிரம்மா இந்த அடிப்படை விடயத்தை மிக உறுதியாகப் பயிற்சி செய்தார். அதனால், அவரின் கடைசி நாட்களில் அவருடன் இருந்த குழந்தைகள் எதை அனுபவம் செய்தார்கள்? அதாவது, செயல்களைச் செய்யும்போதும், அவரின் சரீரத்தில் இருந்தவண்ணம் நடக்கும்போதும் அசையும்போதும், தந்தை சரீரமற்றவராகவே அனுபவம் செய்யப்பட்டார். அவர் தனது கர்மக்கணக்குகளைத் தீர்க்க வேண்டியிருந்தாலும், அவர் அதை ஒரு பற்றற்ற பார்வையாளராகவே செய்தார். அவர் தனது கர்மக்கணக்குகளின் ஆதிக்கத்திற்கு உட்படவும் இல்லை, தான் தனது கர்மக்கணக்குகளைத் தீர்க்கிறேன் என்ற அனுபவத்தை மற்றவர்களுக்குக் கொடுக்கவும் இல்லை. தந்தை பிரம்மா அவ்யக்த் ஆகுகிறார் என்பதை நீங்கள் உணர்ந்திருந்தீர்களா? நீங்கள் அதை உணரவில்லைத்தானே? ஏனென்றால், அவர் பற்றற்றவராக, ஒரு பார்வையாளராக, சரீரமற்றவராக, அதாவது, கர்மாதீத் ஸ்திதியை நீண்ட காலத்திற்குப் பயிற்சி செய்தார். அந்த ரூபமே இறுதியில் அனுபவம் செய்யப்பட்டது. நீண்ட காலத்திற்குச் செய்யப்படும் இந்தப் பயிற்சி மிகவும் பயனுள்ளது. உங்களின் சரீரத்தின் உணர்வுகளை இறுதியில் துறப்பீர்கள் என நினைக்காதீர்கள். இல்லை. சரீரமற்றவராகவும் உங்களின் சரீரத்தில் இருந்து பற்றற்றவராகவும் இருக்கும் அனுபவம், கரவன்ஹார் ஸ்திதி தேவைப்படுகிறது. எவருடைய - இளையவரோ, முதியவரோ, ஆரோக்கியமானவரோ அல்லது நோயுற்ற ஒருவரோ - இறுதிக் கணங்களும் எந்த வேளையிலும் வரலாம். ஆகவே, நீண்ட காலத்திற்குப் பற்றற்ற பார்வையாளராக இருக்கும் பயிற்சியில் கவனம் செலுத்துங்கள். எத்தனை இயற்கை அனர்த்தங்கள் வந்தாலும், இந்தச் சரீரமற்ற ஸ்திதியானது இலகுவாக உங்களைப் பற்றற்றவர் ஆக்குவதுடன், இறைவனால் நேசிக்கப்படுபவராகவும் ஆக்கும். ஆகவே, ‘நீண்ட காலத்திற்கு’ என்ற கூற்றை நீங்கள் கீழ்க்கோடிடும்படி பாப்தாதா செய்கிறார். என்னதான் நடந்தாலும், மீண்டும் மீண்டும் பற்றற்ற பார்வையாளர் என்ற ஸ்திதியையும் கரவன்ஹார் என்ற ஸ்திதியையும் சரீரமற்ற ஸ்திதியையும் அனுபவம் செய்யுங்கள். அதன்பின்னர், இறுதிக்கணங்களில், தேவதைகளான நீங்கள் தேவதேவியர் ஆகுவதற்கான உத்தரவாதம் உள்ளது. நீங்கள் தந்தையைப் போல் ஆகவிரும்பினால், தந்தை அசரீரியானவர், அத்துடன் தேவதையானவர். தந்தை பிரம்மாவைப் போல் ஆகுவதென்றால், தேவதை ஸ்திதியில் இருத்தல் என்று அர்த்தம். நீங்கள் தேவதை ரூபத்தை பௌதீக வடிவில் கண்டதைப் போல், தந்தை கேட்கும்போது, பேசும்போது அல்லது தனது சரீரத்தால் காரியங்களை ஆற்றும்போது, பற்றற்று இருந்ததை நீங்கள் அனுபவம் செய்தீர்கள். உங்களின் வேலையை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, குறுகிய காலத்திற்குச் சரீரமற்றவர் ஆகுவது சாத்தியமே. எவ்வாறாயினும், உங்களின் செயல்களைச் செய்யும்போது, நீங்கள் தொடர்ந்து ஒரு சக்திவாய்ந்த சரீரமற்ற ஸ்திதியை அனுபவம் செய்வதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் தேவதைகளே. தந்தையிடமிருந்து இந்த பிராமணப் பிறவிக்கான ஆதாரத்தை எடுத்துக் கொள்வதன் மூலம், நீங்கள் செய்தியை வழங்குவதற்காக உங்களின் பௌதீக வடிவங்களில் உங்களின் பணிகளைச் செய்கிறீர்கள். ஒரு தேவதை என்பவர் சரீரத்தில் இருந்தாலும் சரீரத்தில் இருந்து பற்றற்று இருப்பவர் ஆவார். தந்தை பிரம்மாவில் இந்த உதாரணத்தை நீங்கள் கண்டீர்கள். இது அசாத்தியமானது என்பதல்ல. நீங்கள் அதைக் கண்டீர்கள், அனுபவம் செய்தீர்கள். நீங்கள் எல்லோரும் இப்போது கருவிகளாக இருக்கிறீர்கள். இப்போது அதிகளவு விரிவாக்கம் இடம்பெற்றுள்ள போதிலும், தந்தை பிரம்மா இந்தப் புதிய ஞானம், புதிய வாழ்க்கை, புதிய உலகை உருவாக்குதல் என்பவற்றுக்காகச் செய்ததைப் போன்று அந்தளவு பொறுப்பு உங்கள் எவரிடமும் இல்லை. ஆகவே, எல்லோருடைய இலட்சியமும் தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகுவதேயாகும். அதாவது, தேவதை ஆகுவதாகும். தந்தை சிவனுக்குச் சமமாக ஆகுவதென்றால், உங்களை அசரீரி ஸ்திதியில் ஸ்திரப்படுத்திக் கொள்ளுதல் என்று அர்த்தம். இது சிரமமா? நீங்கள் பாபாவையம் தாதாவையும் நேசிக்கிறீர்கள்தானே? ஆகவே, நீங்கள் நேசிக்கும் அந்த ஒருவரைப் போல் ஆகுங்கள். நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் இருக்கும்போது, அது கடினமானதல்ல. மீண்டும் மீண்டும் கவனம் செலுத்துங்கள். இது சாதாரணமான வாழ்க்கை அல்ல. சாதாரணமான வாழ்க்கை வாழுகின்ற பலர் இருக்கிறார்கள். மகத்தான பணிகளைச் செய்கின்ற பலர் இருக்கிறார்கள். எவ்வாறாயினும், பிராமண ஆத்மாக்களான உங்களைத் தவிர எவராலும் நீங்கள் செய்கின்ற பணிகளைச் செய்ய முடியாது.
ஆகவே, இன்று, இந்த நினைவு நாளில், பாப்தாதா உங்களுக்கு ஆசீர்வாதத்தை வழங்குகிறார்: நெருங்கி வாருங்கள்! நெருங்கி வாருங்கள்! நெருங்கி வாருங்கள்! உங்களின் மனதைச் சகல எல்லைக்குட்பட்ட ஆதாரங்கள் என்ற படகில் இருந்து, சகல எல்லைக்குட்பட்ட ஆதாரங்களான எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளில் இருந்து விடுவியுங்கள். இப்பொழுதில் இருந்து, நீங்கள் நீண்ட காலத்திற்கு ஜீவன்முக்தியை அடைந்திருப்பதைப் போல், ஜீவன்முக்தி அடைந்த அலௌகீக அனுபவத்தைக் கொண்டிருங்கள். அச்சா.
பாபா எங்கும் இருந்து பல கடிதங்களைப் பெற்றுள்ளார். அத்துடன், மதுவனவாசிகள் கோபத்தில் இருந்து விடுபடுகிறார்கள் என்ற செய்திகளையும் அறிக்கைகளையும் பெற்றுள்ளார். அவர்களின் தைரியத்தையிட்டு பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். எதிர்காலத்திற்காக, சதா விடுபட்டிருப்பதற்காக, எப்போதும் சகித்துக் கொள்ளும் சக்தி என்ற கவசத்தை அணிந்து கொள்ளுங்கள். அப்போது, உங்களுக்கு யார் எரிச்சலூட்டினாலும், நீங்கள் சதா பாதுகாப்பாகவே இருப்பீர்கள். அச்சா.
திடசங்கற்பத்தைக் கொண்டிருப்பதுடன் சதா நினைவின் சொரூபங்களாக இருக்கும் ஆத்மாக்களுக்கும் சதா தமது சக்திகள் அனைத்தையும் சரியான நேரத்தில் பயன்படுத்தும் விசேடமான ஆத்மாக்களுக்கும் சகல ஆத்மாக்களிடமும் கருணைநிறைந்தவர்களாக இருப்பவர்களுக்கும் தந்தைக்குச் சமமாகுகின்ற எண்ணத்தை நடைமுறை வடிவில் இடுபவர்களுக்கும் இத்தகைய மிக, மிக, மிக அன்பான, தனித்துவமான குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும்.
இரட்டை வெளிநாட்டவர்களுக்கு: இரட்டை வெளிநாட்டவர்களிடம் இரட்டைப் போதை உள்ளது. ஏனெனில் தந்தை தொலைதூரத்தில் இருந்து வந்திருப்பதைப் போல், தாமும் தொலைவில் இருந்து வந்திருப்பதாக உணர்கிறார்கள். இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளின் ஒரு சிறப்பியல்பை பாப்தாதா பார்த்திருக்கிறார். அவர்கள் ஒரு தீபத்தில் இருந்து இன்னொரு தீபத்தை ஏற்றி வைக்கிறார்கள். இந்த முறையில், அவர்கள் பல நாடுகளில் பாப்தாதாவின் ஏற்றப்பட்ட தீபங்களின் தீபாவளியைக் கொண்டாடியுள்ளார்கள். செய்தியைக் கொடுப்பதில் இரட்டை வெளிநாட்டவர்களுக்குப் பெரும் ஆர்வம் உள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 35 தொடக்கம் 40 நாடுகளில் இருந்து குழந்தைகள் வந்திருப்பதை பாப்தாதா பார்த்திருக்கிறார். பாராட்டுக்கள்! சதா தொடர்ந்து பறவுங்கள். தேவதைகளாகப் பறந்தவண்ணம் தொடர்ந்து செய்தியைக் கொடுங்கள். நல்லது. பாப்தாதா வெறுமனே 35 நாடுகளைச் சேர்ந்த உங்களை மட்டும் பார்க்கவில்லை, ஆனால் அவர் ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களையும் பார்க்கிறார். ஆகவே, நீங்களே தந்தைக்குச் சமமாகுகின்ற முதலாம் இலக்க ஆத்மாக்கள், அப்படித்தானே? நீங்கள் முதலாம் இலக்கத்தவர்களா அல்லது வரிசைக்கிரமம் ஆகுகின்றவர்களா? நீங்கள் முதலாம் இலக்கத்தவர்களா? நீங்கள் வரிசைக்கிரமமானவர்கள் இல்லையா? முதலாம் இலக்கத்தவர் ஆகுவதென்றால், ஒவ்வொரு கணமும் வெற்றி பெறுதல் என்று அர்த்தம். வெற்றி கொள்பவர்கள், முதலாம் இலக்கத்தைப் பெறுவார்கள். நீங்கள் அத்தகையவர்கள்தானே? மிகவும் நல்லது. நீங்கள் வெற்றியாளர்கள். அத்துடன் சதா வெற்றியாளர்களாக இருப்பீர்கள். அச்சா. நீங்கள் எங்கே சென்றாலும், சகல இரட்டை வெளிநாட்டவர்களும் முதலாம் இலக்கத்தவர் ஆகவேண்டும் என்பதை எல்லோருக்கும் நினைவூட்டுங்கள். அச்சா.
பாப்தாதா சகல தாய்மார்களுக்கும், கோபாலின் அன்பான தாய்மார்கள் எல்லோருக்கும் தனது இதயபூர்வமாக அதிக, அதிக, அதிகளவு நினைவுகளை வழங்குகிறார். பாண்டவர்களும், நீங்கள் இளைஞர்களோ அல்லது இல்லறத்தவர்களோ, எப்போதும் பாண்டவபதியின் சகபாடிகளாக இருக்கிறீர்கள். சகபாடிகளாக இருக்கும் இத்தகைய பாண்டவர்களுக்கு பாப்தாதா அதிக, அதிக அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார்.
தாதியிடம்: நீங்கள் இன்று எதை நினைக்கிறீர்கள்? நீங்கள் மனோதிடத்தைப் பெற்றீர்கள்தானே? நீங்கள் மனோதிடத்திற்கான ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் மிக நல்ல பாகத்தை நடித்திருக்கிறீர்கள், அதற்காகப் பாராட்டுக்கள்! நீங்கள் எல்லோரிடமிருந்தும் ஆசீர்வாதங்கள் பலவற்றைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் பேசினாலென்ன பேசாவிட்டாலென்ன, எல்லோரும் உங்களைப் பார்க்கும்போது, சந்தோஷம் அடைகிறார்கள். உங்களுக்கு ஏதாவது நடந்தால், அது தமக்கும் நடந்து விட்டதாக எல்லோரும் நினைக்கிறார்கள். எல்லோரும் அதிகளவு அன்பு வைத்திருக்கிறார்கள். எல்லோரிடமும் அத்தகைய அன்பு உள்ளது. உங்களுக்கும் எல்லோரிடமும் அதிகளவு அன்பு உள்ளது. இந்த அன்பே எல்லோரையும் அசையச் செய்கிறது. தாரணை அதிகமோ அல்லது குறைவோ, இந்த அன்பே அவர்களை அசையச் செய்கிறது. மிகவும் நல்லது.
இஷு தாதியிடம்: இவரும் தனது கணக்குகளைத் தீர்த்துள்ளார். (இஷு தாதி விழுந்துவிட்டார், அதனால் ஓய்வெடுக்கிறார்) அது பரவாயில்லை. இவரின் முயற்சிகள் இலேசானவை. அவரின் கணக்குகள் இலகுவாகத் தீர்க்கப்படுகின்றன. படுத்திருக்கும்போது அது மிக இலகுவாக நடக்கிறது. நீங்கள் விஷ்ணுவைப் போல் சௌகரியத்தைப் பெற்றுள்ளீர்கள். அச்சா. நீங்கள் சாகார் காலத்தில் இருந்து இன்றுவரை யக்யத்தின் பாதுகாவலராக இருக்கிறீர்கள். யக்யத்தின் பாதுகாவலராக இருப்பதனால் பல ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன.
தாதிகளான நீங்கள் எல்லோரும் பாப்தாதாவிற்கு மிக, மிக நெருக்கமானவர்கள். நீங்கள் நெருக்கமாக இருக்கும் இரத்தினங்கள். எல்லோருமே தாதிகளை அதிகளவில் மதிக்கிறார்கள். ஒன்றுகூடலும் நன்றாக உள்ளது. தாதிகளின் ஒன்றுகூடல், யக்யத்தைப் பல வருடங்களாகப் பாதுகாத்து வருகிறது. தொடர்ந்தும் அவ்வாறே செய்யும். இந்த ஒற்றுமையே வெற்றிகள் அனைத்தினதும் அடிப்படையாகும். நீங்கள் மத்தியில் தந்தையை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் பேணும் இந்தக் கவனம் மிகவும் நல்லது. அச்சா. நீங்கள் எல்லோரும் நலமா?
ஆசீர்வாதம்:
உங்களின் சகபாடியான ஒரேயொரு தந்தையுடன் சகல உறவுமுறைகளையும் கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் ஓர் இலகு முயற்சியாளர் ஆகுவீர்களாக.தந்தையே சகல உறவுமுறைகளிலும் சகபாடியாக இருக்கும் தனது பொறுப்பை நிறைவேற்றுவதற்கு முன்வருகிறார். நேரத்திற்கேற்ப ஒவ்வோர் உறவுமுறையிலும் தந்தையுடன் இருந்து, அவரை உங்களின் சகபாடி ஆக்கிக் கொள்ளுங்கள். அவரின் சகவாசம் எப்போதும் உங்களுடன் இருக்கும்போது, அவர் உங்களின் சகபாடியாக இருக்கும்போது, எந்தவிதமான கஷ்டமும் இருக்காது. நீங்கள் தனியே இருக்கும்போது, தந்தையை ஒரு புள்ளி வடிவத்தில் நினைக்காதீர்கள். ஆனால், உங்களின் பேறுகளின் பட்டியலை உங்களின் முன்னால் கொண்டு வாருங்கள். வெவ்வேறு நேரங்களில் ஏற்பட்ட வெவ்வேறு சுவாரசியமான அனுபவங்களின் கதைகளையும் சகல உறவுமுறைகளின் இனிமையின் அனுபவங்களையம் உங்களின் விழிப்புணர்வில் கொண்டுவாருங்கள். அப்போது எந்தவிதமான கடின வேலையும் முடிவிற்கு வந்துவிடும். நீங்கள் இலகுவான முயற்சியாளர் ஆகுவீர்கள்.
சுலோகம்:
பல்ரூபங்களைக் கொண்டவராகி, மாயையின் பல ரூபங்களை இனங்கண்டு கொள்ளுங்கள். நீங்கள் மாயையின் மாஸ்ரர் பிரபு ஆகுவீர்கள்.