03.01.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, அசரீரியான தந்தை தனது சொந்த வழிகாட்டல்களை உங்களுக்குக் கொடுத்து, உங்களை ஆஸ்திகர்களாக ஆக்குகிறார். ஆஸ்திகர்கள் ஆகுவதனால் மாத்திரமே, உங்களால் தந்தையிடமிருந்து உங்களுடைய ஆஸ்தியைப் பெற முடியும்.

கேள்வி:
உங்களுடைய எல்லையற்ற இராச்சியத்தைப் பெறுவதற்கு, எந்த இரு விடயங்களில் நீங்கள் முழுக் கவனம் செலுத்த வேண்டும்?

பதில்:
1) இக்கல்வியில் 2) சேவை செய்வதில். சேவை செய்வதற்கு, உங்களுடைய குணாதிசயங்கள் மிகவும் நன்றாக இருக்க வேண்டும். உங்களுக்கு ஓர் இராச்சியத்தைப் பெற்றுத் தருகின்ற, இந்தக் கல்வி மிக அற்புதமானது. துவாபர யுகத்திலிருந்து, நீங்கள் தான தர்மங்கள் செய்ததன் மூலம் ஓர் இராச்சியத்தைப் பெற்றீர்கள். எனினும், இப்பொழுது இந்தக் கல்வியின் மூலமே நீங்கள் இளவரசர்கள், இளவரசிகள் ஆகுகிறீர்கள்.

பாடல்:
எங்களுடைய யாத்திரை தனித்துவமானது.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலின் ஒரு வரியைக் கேட்டீர்கள். உங்களுடைய யாத்திரை, வீட்டில் அமைதியாக அமர்ந்திருந்தவாறு முக்தி தாமத்திற்குச் செல்வதாகும். உலகிலுள்ள யாத்திரைகள் அனைத்தும் சாதாரணமானவையாக இருந்தபோதிலும், உங்களுடைய யாத்திரை தனித்துவமானது. ஒரு மனிதரின் புத்தியின் யோகம் தொடர்ந்து சாதுக்களையும், புனிதர்களையும் நோக்கியே அலைகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு வழிகாட்டல்கள் கொடுக்கப்பட்டுள்ளன: தந்தையை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். அவரே அசரீரியான தந்தையாவார். அசரீரியான தந்;தையின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள், அசரீரியான ஒரேயொருவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகிறார்கள் என்றில்லை. உலகில் பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன. அசரீரியான வழிகாட்டல்கள் அசரீரியான தந்தையால் கொடுக்கப்படுகின்றன. அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் மக்கள் முக்தி, ஜீவன்முக்தி என்ற உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறார்கள். ஏனையோருக்கு இவ் விடயங்கள் பற்றி எதுவும் தெரியாது. தாமும் அசரீரியானவரின் மீதே நம்பிக்கைக் கொண்டிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். எண்ணற்ற வழிகாட்டல்கள் உள்ளன. சத்திய யுகத்தில் ஒரேயொரு வழிகாட்டலே உள்ளது. கலியுகத்திலோ எண்ணற்ற வழிகாட்டல்கள் உள்ளன் எண்ணற்ற சமயங்கள் உள்ளன. நூறாயிரக்கணக்கான வழிகாட்டல்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய சொந்த வழிகாட்டல் உள்ளது. இங்கு ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களை அதிமேன்மையான மனிதர்கள் ஆக்குவதற்கு, அதிமேன்மையான வழிகாட்டல்களை உங்களுக்குக் கொடுக்கிறார். உங்களுடைய படங்களைப் பார்க்கும்போது, பலரும் உங்களிடம் வினவுகின்றார்கள்: நீங்கள் என்ன உருவாக்கி இருக்கிறீர்கள்? இதில் பிரதான விடயம் என்ன? அவர்களிடம் கூறுங்கள்: இது படைப்பவரினதும், படைப்பின் ஆரம்பம், மத்தி இறுதியின் ஞானமாகும். இந்த ஞானத்தின் மூலமே நாங்கள் ஆஸ்திகர்கள் ஆகுகிறோம். நாங்கள் ஆஸ்திகர்கள் ஆகுவதன் மூலம் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகிறோம். நாஸ்திகர்கள் ஆகுவதனால் ஆஸ்தியை இழக்கிறோம். நாஸ்திகர்களை, ஆஸ்திகர்களாக மாற்றுவதே குழந்தைகளாகிய உங்களுடைய இப்போதைய பணியாகும். இப்போது நீங்கள் தந்தையிடமிருந்து இந்த அறிமுகத்தைப் பெற்றிருக்கிறீர்கள். திரிமூர்த்தி படம் மிகவும் தெளிவானது. பிரம்மாவின் மூலம் உருவாக்கப்பட்ட பிராமணர்கள் நிச்சயமாகத் தேவைப்படுகின்றனர். இந்த யாகம் பிராமணர்களாகிய உங்கள் ஊடாகவே மட்டுமே செயற்படுகின்றது. இந்த யாகம் மிகவும் முக்கியமானது. தந்தையே அனைவரிலும் அதி மேலான தந்தை என்பதையும், ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதையும், அவர்கள் அனைவருமே ஒரேயொரு தந்தையையே நினைவு செய்கிறார்கள் என்பதையும் நீங்கள் முதலில் விளங்கப்படுத்த வேண்டும். அவர் தந்தை என்று அழைக்கப்படுகிறார். நீங்கள் படைப்பவரான தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். படைப்பிடமிருந்து உங்களால் அதனைப் பெற முடியாது. இதனாலேயே அனைவரும் கடவுளை நினைவுசெய்கிறார்கள். தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர், அவர் பாரதத்திற்கு மாத்திரமே வருகிறார். அவர் தனது பணியைச் செய்வதற்காக இங்கு வருகிறார். திரிமூர்த்தி படம் மிகவும் சிறந்தது. அவர் பாபாவும், இவர் தாதாவும் ஆவார். பாபா பிரம்மாவினூடாக சூரிய வம்ச இராச்சியத்தை ஸ்தாபிக்கிறார். தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். உங்களுடைய இலக்கும், குறிக்கோளும் முற்றிலும் தெளிவாக உள்ளன. இதனாலேயே பாபா பதக்கங்களைச் செய்வித்துள்ளார். அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் அனைத்தையும் இரண்டு வார்த்தைகளில் சுருக்கமாக விளங்கப்படுத்துகிறோம். நீங்கள் தந்தையிடமிருந்து உங்களுடைய ஆஸ்தியை ஒரு விநாடியில் பெறலாம். தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர். இந்தப் பதக்கங்கள் மிகவும் சிறந்தவை. எவ்வாறாயினும் பல சரீர உணர்வுடைய குழந்தைகள் அவற்றைப் புரிந்து கொள்வதில்லை. இந்தப் பதக்கங்கள் ஒரு விநாடிக்குரிய இந்த ஞானம் முழுவதையும் உள்ளடக்கியுள்ளன. பாபா வந்து, பாரதத்தை சுவர்க்கம் ஆக்குகிறார். தந்தை மாத்திரமே உலகைப் புதிதாக்குகிறார். “அதிமேன்மையான சங்கம யுகம்” என்பது நினைவு கூரப்படுகிறது. இந்த ஞானம் முழுவதும் உங்களுடைய புத்தியில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். சிலர் யோகம் செய்தபோதிலும், இந்த ஞானத்தைச் செவிமடுக்காததால், அவர்களால் எதனையும் கிரகிக்க முடியாதுள்ளது. சேவை செய்கின்ற குழந்தைகளால் இந்த ஞானத்தை மிக நன்றாகக் கிரகிக்க முடியும். தந்தை வந்து, மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்ற சேவையைச் செய்கின்றார். ஆனால் சில குழந்தைகள் எந்த சேவையையும் செய்வதில்லை. எனவே அத்தகைய குழந்தைகளால் என்ன பயன் உள்ளது? அவர்கள் எவ்வாறு பாபாவின் இதய சிம்மாசனத்தில் ஏறுவார்கள்? தந்தை கூறுகிறார்: அனைவரையும் இராவணனின் இராச்சியத்திலிருந்து விடுவிப்பதே நாடகத்தில் எனது பாகமாகும். இராம இராச்சியமும், இரவாண இராச்சியமும் பாரதத்தில் நினைவு கூரப்படுகின்றன. இப்போது, இராமர் யார்? மக்களுக்கு இது கூட தெரியாது. ‘பக்தர்களின் கடவுளாகிய, தூய்மையாக்குபவர் ஒரேயொருவரே’ என்று அவர்கள் பாடுகிறார்கள். ஆகவே எவராவது முதற் தடவை வரும்போது, அவருக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். முதலில் அந்த நபரைப் பற்றித் தீர்மானித்து (எடை போட்டு), அதற்கேற்ப விளங்கப்படுத்துங்கள். எல்லையற்ற சந்தோஷம் என்ற உங்களுடைய ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பதற்காகவே எல்லையற்ற தந்தை வருகிறார். அவருக்கென ஒரு சரீரம் இல்லாதபோது, அவரால் எப்படி ஆஸ்தியை கொடுக்க முடியும்? அவரே கூறுகிறார்: நான் பிரம்மாவின் சரீரத்தினூடாக உங்களுக்கு இராஜயோகம் கற்பித்து, நீங்கள் அந்த அந்தஸ்தைப் பெற உதவுகின்றேன். இப்பதக்கத்தை ஒரு விநாடியில் விளங்கப்படுத்த முடியும். இப்பதக்கம் மிகவும் சிறியது! எவ்வாறாயினும், அதனை விளங்கப்படுத்துபவர்கள் நல்ல ஆத்ம உணர்வில் இருக்க வேண்டும். அவ்வாறானவர்கள் மிகச் சிலரே உள்ளனர். எவரும் இந்த முயற்சியைச் செய்வதில்லை. ஆகவே பாபா கூறுகிறார்: உங்கள் அட்டவணையை எழுதி, நாள் முழுவதும் எவ்வளவு நேரம் நீங்கள் நினைவில் இருக்கிறீர்கள் எனப் பாருங்கள். உங்களுடைய அலுவலகத்தில் நீங்கள் வேலை செய்யும் நேரம் முழுவதும் நீங்கள் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் செயல்களைச் செய்ய வேண்டும். இங்கு உங்களை யோகத்தில் அமரச் செய்து, தந்தையை நினைவு செய்யுமாறு கூறப்படுகின்றது. அந்த நேரத்தில் நீங்கள் எந்தச் செயலையும் செய்வதில்லை. செயல்களைச் செய்யும் போதும் நீங்கள் பாபாவை நினைவுசெய்ய வேண்டும். அவ்வாறு செய்யாது விடின், விசேடமாக நினைவு செய்வதற்காக அமர வேண்டும் என்ற பழக்கததை நீங்கள் உருவாக்கி விடுவீர்கள். செயல்களைச் செய்யும் போது, நினைவில் நிலைத்திருந்தாலே நீங்கள் கர்மயோகிகள் என இனங் காணப்படுவீர்கள். உங்கள் பாகங்களை நீங்கள் நிச்சயமாக நடிக்க வேண்டும். இ;ந்த நினைவிற்கே மாயை தடைகளை ஏற்படுத்துகிறாள். உங்களில் எவரும் உங்களுடைய அட்டவணையை நேர்மையாக எழுதுவதில்லை. அரை மணித்தியாலம் நினைவில் இருந்ததாக அல்லது முக்கால் மணித்தியாலம் நினைவில் இருந்ததாக உங்களிற் சிலர் எழுதுகிறீர்கள். அதுவும் அதிகாலையில் நினைவில் இருந்ததாகவே இருக்க வேண்டும். பக்தி மார்க்கத்தில் கூட மக்கள் அதிகாலையில் எழுந்து. மாலையை உருட்டியவாறு இராம நாமத்தை உச்சரிக்கிறார்கள். அந்த நேரத்தில் அவர்கள் ஒரேயொருவரின் நினைவில் திளைத்திருக்கின்றார்கள் என்றில்லை; இல்லை. அவர்களுக்கும் வேறு பல எண்ணங்கள் உருவாகுகின்றன. உறுதியான பக்தர்களால் தங்கள் புத்தியை ஸ்திரமாக வைத்திருக்க முடியும். இது மௌன மந்திரமாகும். இது ஒரு புதிய விடயமாகும். ‘மன்மனாபவ’ என்ற வார்த்தை கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஸ்ரீ கிருஷ்ணரின் பெயர் பயன்படுத்தப்படுவதால், அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரை நினைவு செய்கிறார்கள்; அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் நிச்சயமாகச் சில பதக்கங்களை உங்களுடன் வைத்திருக்க வேண்டும். அவர்களிடம் கூறுங்கள்: பிரம்மாவின் சரீரம் மூலம் தந்தை விளங்கப்படுத்துகிறார். எங்களுக்கு அந்தத் தந்தையின் மீது அன்புள்ளது. மக்களுக்கு ஆத்மாக்களைப் பற்றிய அல்லது பரமாத்மாவைப் பற்றிய ஞானம் இல்லை. வேறு எவராலும் அன்றி, தந்தையால் மாத்திரமே இந்த ஞானத்தைக் கொடுக்க முடியும். திரிமூர்த்தி சிவனின் படமே பிரதானமானது – தந்தையும், ஆஸ்தியும். இந்தச் சக்கரத்தைப் புரிந்துகொள்வது மிகவும் இலகுவானது. கண்காட்சிகளில் நூறாயிரக் கணக்கான பிரஜைகள் உருவாக்கப்படுகின்றனர். மிகச்சொற்ப எண்ணிக்கையிலான அரசர்களே இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய பிரஜைகள் மில்லியன் கணக்கில் உள்ளனர். பலர் பிரஜைகள் ஆகுகிறார்கள். ஆனால் அரசர்களை உருவாக்குவதற்கு, நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். அதிகளவு சேவை செய்பவர்கள் நிச்சயமாக ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். சில குழந்தைகள் சேவை செய்வதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: “நான் எனது வேலையை நீக்கப் போகின்றேன். எவ்வாறாயினும் நான் உண்பதற்கு தேவையான அளவு உள்ளது. இப்போது நான் பாபாவிற்கு உரியவர் என்பதால் நான் சிவபாபாவினால் பராமரிக்கப்படுவேன்”. எவ்வாறாயினும் பாபா கூறுகிறார்: நான் இவர் ஓய்வுபெறும் ஸ்திதியின்போதே இவரின் சரீரத்திற்குள் பிரவேசித்தேன். தாய்மார்கள் இளமையாக இருப்பதால், வீட்டில் இருந்தவாறே, இரு வகையான சேவைகளையும் (வீட்டைக் கவனிப்பதுடன், ஆன்மீக சேவையையும் செய்தல்) செய்ய முடியும். பாபா உங்கள் ஒவ்வொருவருக்கும், உங்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்பவே ஆலோசனை வழங்குகிறார். அவர்கள் திருமணம் செய்வதற்கு அனுமதிக்கப்படாதபோது, பெருமளவு தொந்தரவு உள்ளது. ஆகவே, ஆலோசனை வழங்குவதற்கு முன்னர், பாபா ஒவ்வொருவரதும் கர்மக் கணக்கையும் பார்க்கின்றார். ஒரு குமாருக்கு பாபா கூறுவார்: நீங்கள் சேவையைச் செய்து, அச் சேவையின் மூலம் எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியை பெறலாம், அந்த லௌகீகத் தந்தையிடமிருந்து நீங்கள் எதனைப் பெறுவீர்கள்? தூசையே! அனைத்தும் மண்ணாகப் போகின்றது. நாளுக்கு நாள், மிகவும் குறுகிய காலமே எஞ்சியுள்ளது. தமது லௌகீகத் தந்தையின் சொத்துகளைத் தாங்கள் பெறுவார்கள் எனப் பல குழந்தைகள் நினைக்கின்றார்கள். ஆனால் தந்தை கூறுகிறார்: அவர்களுக்கு எந்த ஆஸ்தியும் கிடைக்க மாட்டாது. அந்தச் சொத்துக்கள் அனைத்தும் சாம்பலாகப் போகின்றன. தமக்குப் பின்னர், தமது சந்ததியினர் அந்த ஆஸ்தியிலிருந்து உண்பார்கள் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். ஒரு செல்வந்தருடைய செல்வம் அழிவதற்கு அதிக நேரம் எடுக்காது. மரணம் உங்கள் முன்னால் நிற்கின்றது. எவரும் அந்த ஆஸ்தியைப் பெற மாட்டார். இதனை மிகத் தெளிவாக விளங்கப்படுத்தக் கூடியவர்கள் மிகச் சிலரே உள்ளனர். பெருமளவு சேவை செய்பவர்கள் மாத்திரமே ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். எனவே அவர்களுக்கு மரியாதை கொடுக்கப்பட வேண்டும். நீங்கள் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். 21 பிறவிகளுக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும். அவர்கள் இயல்பாகவே ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகின்றார்கள், ஆகவே அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு மரியாதை கொடுக்கப்படுகின்றது. தங்களுக்குக் கிடைப்பவை அனைத்தும் சிறந்தவையே என்பதை அவர்களாலேயே புரிந்துகொள்ள முடியும். தமக்குக் கிடைத்தமட்டில் அவர்கள் சந்தோஷம் அடைகின்றார்கள். எல்லையற்ற இராச்சியத்தைப் பெறுவதற்கு, நீங்கள் இக்கல்வியிலும், சேவை செய்வதிலும் முழுக் கவனம் செலுத்த வேண்டும். இந்தக் கல்வி எல்லையற்றது. இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. நீங்கள் இந்தக் கல்வியை இங்கு கற்று, அங்கு இளவரசர்கள் ஆகுகிறீர்கள். மனிதர்கள் செல்வத்தைத் தானம் செய்வதால், ஓர் அரசருக்கோ அல்லது ஒரு செல்வந்தருக்கோ குழந்தையாகப் பிறக்கின்றார்கள். எவ்வாறாயினும், அந்தச் சந்தோஷம் தற்காலிகமானது. நீங்கள் இந்தக் கல்வியில் பெருங் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் சேவை செய்வதில் அக்கறை கொண்டிருக்க வேண்டும். நீங்கள் உங்களின் கிராமத்திற்குச் சென்று, அங்கு சேவை செய்ய வேண்டும். அங்கே பலர் நன்மை அடைவார்கள். அத்தகைய சேவை செய்வதில் எவரும் இன்னமும் எந்த ஆர்வமும் கொள்ளவில்லை என்பதை பாபா அறிவார். ஒரு நல்ல குணாதிசயமும் அவசியமானது. நீங்கள் அவச்சேவை செய்வதனால், இந்த யக்யாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதுடன், உங்களுக்கும் இழப்பை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது. பாபா அனைத்தையும் தெளிவாக விளங்கப்படுத்துகிறார். பதக்கம் போன்றவற்றிற்கு அதிகளவு அக்கறை செலுத்தப்படுகின்றது. நாடகத்திற்கேற்ப, நேரம் எடுக்கும் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. இலக்ஷ்மி, நாராயணனின் ‘திரான்ஸ்லைற்’ படம் முதற்தரமானது. எவ்வாறாயினும் குழந்தைகளாகிய உங்களுக்கு இன்று குருவின் சகுனங்கள் உள்ளன. ஆனால் நாளையே இராகு கிரகணத்தின் சகுனங்கள் இருக்கும். நாடகத்தில் உங்கள் பாகத்தை ஒரு பற்றற்ற பார்வையாளராக நீங்கள் ஒவ்வொருவரும் அவதானிக்க வேண்டும். மிகச் சிலரே ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறார்கள். உங்கள் தீய சகுனங்கள் அகற்றப்படுவது சாத்தியமே. உங்களுடைய தீய சகுனங்கள் அகற்றப்பட்டால், உங்களால் உயரப் பாய முடியும். சிறப்பான வாழ்வை உங்களுக்காக உருவாக்க முயற்சி செய்யுங்கள். தவறினால், கல்பம் கல்பமாக அனைத்தும் அழிக்கப்படும். முன்னைய கல்பத்தைப் போன்றே தீய சகுனங்கள் மீண்டும் வந்துள்ளன என்று நீங்கள் நினைப்பீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாதபோது உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற முடியாது. கடவுளின் ஸ்ரீமத்தே அதியுயர்வானது. வேறு எவராலும் அல்லாது, உங்களால் மாத்திரமே இந்த இலக்ஷ்மி நாராயணனின் படத்தைப் புரிந்துகொள்ள முடியும். படங்கள் மிக நன்றாக உள்ளன என்று மட்டுமே ஏனையோர் கூறுகின்றார்கள். இந்தப் படங்களை நீங்கள் பார்க்கும்போது, அசரீரி உலகம், சூட்சும உலகம், பௌதீக உலகம், முழு உலகச் சக்கரமும் உங்கள் புத்தியில் புகுகின்றன. நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக நீங்கள் ஞானம் நிறைந்தவர்களாக ஆகுகிறீர்கள். இந்தப் படங்களைப் பார்த்து பாபா மிகவும் சந்தோஷப்படுகிறார். மாணவர்களாகிய நீங்கள் பெருஞ் சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும்: இந்தக் கல்வி மூலம் நாங்கள் இவ்வாறே ஆகுகிறோம்! இந்தக் கல்வி மூலம் நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் கூறக்கூடாது: “எனது பாக்கியத்தில் இதுவே உள்ளது…!” முயற்சி செய்வதனால் நீங்கள் ஒரு வெகுமதியைப் பெறுகிறீர்கள். முயற்சி செய்வதற்கு உங்களைத் தூண்டுகின்ற தந்தையை நீங்கள் கண்டுகொண்டு விட்டீர்கள். அவருடைய வழிகாட்டல்களைப் பின்பற்றாது விட்டால், நீங்கள் மிகவும் தாழ்ந்த அந்தஸ்தை அடைவீர்கள். எல்லாவற்றிற்கும் முதலில் வருபவர்களுக்கு இந்தப் பதக்கங்களை விளங்கப்படுத்துங்கள். தகுதியானவர்கள் தங்களுக்கும் ஒன்றைத் தருமாறு உடனேயே கேட்பார்கள். “ஆம், ஏன் தரக்கூடாது?” இந்தத் தர்மத்திற்கு உரியவர்கள் அம்பினால் தைக்கப்படுவார்கள். அவர்கள் நன்மை பெறலாம். தந்தை ஒரு விநாடியில் உங்கள் உள்ளங்கையில் சுவர்க்கத்தைத் தருகிறார். இதனையிட்டு நீங்கள் பெருமளவு சந்தோஷப்பட வேண்டும். நீங்கள் இந்த ஞானத்தைச் சிவ பக்தர்களுக்குக் கொடுக்க வேண்டும். அவர்களிடம் கூறுங்கள்: “சிவபாபா கூறுகிறார்: என்னை நினைவுசெய்வதன் மூலம் நீங்கள் அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆகுவீர்கள்”. இந்தச் சேவையை நாள் முழுவதும் செய்யுங்கள். குறிப்பாக, பெனாரஸில் பல சிவன் கோவில்கள் உள்ளன. ஆகவே அங்கு சிறந்த சேவை செய்யலாம். எவராவது வெளிப்படுவார்கள். அது மிகவும் இலகுவான சேவை. முயற்சி செய்து பாருங்கள்! நிச்சயமாக உங்களுக்கு உணவு வழங்கப்படும். சேவை செய்வதற்கு முயற்சித்துப் பாருங்கள். எவ்வாறாயினும் அங்கு நிலையங்கள் உள்ளன. காலையில் கோவில்களுக்குச் சென்று, இரவில் திரும்புங்கள். சில நிலையங்களைத் திறவுங்கள். சிவன் கோவில்களில் உங்களால் அதிகளவு சேவை செய்ய முடியும். சிவனின் கோவில்களே மிகவும் மேன்மையானவை. பம்பாயில் பபுல்நாத்திற்கு (முட்களின் பிரபு) ஒரு கோவில் உள்ளது. முழு நாளும் நீங்கள் சேவை செய்வதற்காக அங்கு சென்று, பலருக்கு நன்மை செய்யலாம். இந்தப் பதக்கங்கள் நன்கு போதுமானவை. அதனைச் செய்து பாருங்கள்! பாபா கூறுகிறார்: நூறாயிரம் பதக்கங்கள் அல்ல, மில்லியன் பதக்கங்களையும் நீங்கள் செய்யலாம். முதியவர்கள் மிகச் சிறந்த சேவை செய்யலாம். பல பிரஜைகள் உருவாக்கப்படுவார்கள். தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள். அவ்வளவுதான்! நீங்கள் “மன்மனாபவ” என்ற வார்த்தையை மறந்து விட்டீர்கள். கடவுளே இதனைக் கூறுகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் கடவுளல்ல. அவர் முழுமையான 84 பிறவிகளையும் எடுக்கிறார். ஸ்ரீ கிருஷ்ணர் அந்த அந்தஸ்தைப் பெறுவதற்கு சிவபாபாவே உதவுகிறார். தடுமாறித் திரிவதற்கான அவசியம் என்ன? தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! சிவன் கோவில்களில் உங்களால் சிறந்த சேவையை செய்ய முடியும். சேவையில் வெற்றியடைவதற்கு, ஆத்ம உணர்வில் நிலைத்திருந்தவாறு சேவை செய்யுங்கள். உங்களுடைய இதயம் சுத்தமாக இருக்கும்போது, உங்களுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறுகின்றன. பாபா பெனாரஸிற்குக் குறிப்பாக ஆலோசனை வழங்குகின்றார். ஏனெனில், பெனாரஸில் ஓய்வு பெற்றவர்களுக்கும் ஆச்சிரமங்கள் இருக்கின்றன. அவர்களிடம் கூறுங்கள்: பிராமணர்களாகிய நாங்கள் பிரம்மாவின் குழந்தைகள். பிரம்மாவின் மூலம் தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்; வேறு வழியேதும் இல்லை. சிவன் கோவில்களில் காலை முதல் இரவு வரை அமர்ந்திருந்து, சேவை செய்யுங்கள். முயற்சி செய்து பாருங்கள்! சிவபாபாவே கூறுகிறார்: எனக்குப் பல கோவில்கள் உள்ளன. எவருமே உங்களுக்கு எதுவும் கூற மாட்டார்கள். அதற்குப் பதிலாக, நீங்கள் சிவனைப் பெருமளவு புகழ்கின்றீர்கள் என்று அவர்கள் மேலும் அதிகமாகச் சந்தோஷப்படுவார்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: “இந்தப் பிரம்மா ஒரு பிராமணர்; இவர் ஒரு தேவர் அல்ல. இவரும் சிவபாபாவை நினைவுசெய்தே அந்த அந்தஸ்தைப் பெறுகிறார். இவர் மூலம் சிவபாபா கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்!” அது மிகவும் இலகுவானது! எவரும் மூத்தவர்களை ஒருபோதும் அவதூறு செய்ய மாட்டார்கள். இதுவரை பெனாரஸில் அதிகளவு சேவை இடம்பெறவில்லை. பதக்கங்களையும், படங்களையும் உபயோகித்து விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானது. எவராவது ஏழையாயின், நாங்கள் உங்களுக்கு இதனை இலவசமாகத் தருகிறோம் என்று அவருக்குக் கூறுங்கள். எவராவது செல்வந்தராக இருந்தால், அவருக்குக் கூறுங்கள்: நீங்கள் எதனையாவது கொடுத்தால், நாங்கள் இன்னும் அதிகமாகச் செய்து, மேலும் பலருக்கு நன்மை அளிக்கலாம். அதனால் உங்களுக்கும் நன்மை ஏற்படும். உங்களுடைய இந்த வியாபாரமே மிகச் சிறந்தது. எவரேனும் முயற்சி செய்து பார்க்கட்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் வாழ்க்கையில் இந்த ஞானத்தைக் கிரகித்துச் சேவை செய்யுங்கள். பெருமளவு சேவை செய்பவர்களுக்கும், மிகச்சிறந்த குணாதிசயம் உடையவர்களுக்கும் மதிப்பளியுங்கள்.

2. செயல்களைச் செய்யும்போது நினைவில் நிலைத்திருக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். நீங்கள் செய்கின்ற சேவையில் வெற்றியடைவதற்கு, ஆத்ம உணர்வு ஸ்திதியைக் கொண்டிருப்பதுடன், உங்களுடைய இதயத்தையும் சுத்தமாக வைத்திருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தீர்வுகளின் சொரூபமாகி, பிரச்சனைகள் அனைத்திற்கும் விடை கொடுக்கின்ற விழாவைக் கொண்டாடுவீர்களாக.

நீங்கள் உங்களுடைய சம்பூரண ஸ்திதியில் ஸ்திரமாகும்பொழுதே, தீர்வுகளின் சொரூபங்களான ஆத்மாக்களாகிய உங்களின் மாலையானது தயாராகும். உங்கள் சம்பூரண ஸ்திதியில் பிரச்சனைகள் அனைத்தையும் குழந்தைகளின் விளையாட்டுக்களாக, அதாவது, அவை முடிவடைந்து விட்டதாக அனுபவம் செய்கின்றீர்கள். உதாரணமாக, தந்தை பிரம்மாவின் முன்னால் ஒரு குழந்தை பிரச்சனை ஒன்றுடன் வரும்போது, அக்குழந்தைக்கு அந்தப் பிரச்சனை பற்றிப் பேசுவதற்கான தைரியம் இல்லாததுடன், அவ்விடயத்தை மறந்தும் விடுவார். அதேபோல், குழந்தைகளான நீங்களும் தீர்வுகளின் சொரூபங்களாக வேண்டும். அப்போதே நீங்கள் அரைக் கல்பத்திற்கு, பிரச்சனைகள் அனைத்திற்கும் விடை கொடுக்கின்ற விழாவைக் கொண்டாடுவீர்கள். மாற்றமே உலகின் பிரச்சனைகள் அனைத்திற்குமான தீர்வு ஆகும்.

சுலோகம்:
இந்த ஞானத்தைச் சதா கடைபவர்களே மாயையின் கவர்ச்சிகளிலிருந்து பாதுகாப்பாக இருக்கின்றார்கள்.

உங்களின் சக்திவாய்ந்த மனதால், சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.

உங்கள் இலேசாகவும், ஒளியாகவும் இருக்கின்ற தேவதை ரூபத்தில் ஸ்திரமாக இருந்து, ஒரு பற்றற்ற பார்வையாளராகி, அனைத்துப் பாகங்களையும் அவதானிக்கும்போது, சகாஷை, அதாவது, ஒத்துழைப்பைக் கொடுங்கள். ஏனெனில் நீங்களே அனைவருக்கும் நன்மை அளிப்பதற்கான கருவிகள். சகாஷைக் கொடுப்பது எனில், உங்கள் பொறுப்பை நிறைவேற்றுவதாகும். ஆனால் நீங்கள் ஒரு மேன்மையான ஸ்திதியில் இருந்தவாறே சகாஷைக் கொடுக்க வேண்டும். வார்த்தைகளின் மூலம் சேவை செய்வதுடன், உங்கள் மனதின் நல்லாசிகள் எனும் மனோபாவம் மூலம் சகாஷைக் கொடுக்கின்ற சேவையையும் செய்யுங்கள்.