03.08.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்களே உண்மையான இராஜரிஷிகளும், இராஜயோகிகளும் ஆவீர்கள். எனவே ஓர் இராச்சியத்தைப் பெறுவதற்கு நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும்.

கேள்வி:
உங்களை ஓர் இராச்சியத்திற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குவதற்கு நீங்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும்?

பதில்:
கல்வியிலே நீங்கள் முழுக் கவனம் செலுத்தினால் உங்களால் ஓர் இராச்சியத்தைப் பெற முடியும். தந்தை கூறுவதைக் கவனமாகச் செவிமடுத்து, அதை நன்றாகக் கிரகியுங்கள். தந்தை உங்களோடு பேசும் போது, அவர் கூறுவதைக் குழந்தைகளாகிய நீங்கள் செவிமடுப்பதனால், நீங்கள் இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். அவர் கூறுவதைச் செவிமடுக்கும் போது, நீங்கள் கொட்டாவி விட்டாலோ, அல்லது தூங்கி வழிந்தாலோ அல்லது உங்கள் புத்தி அலைபாய்ந்தாலோ நீங்கள் இராச்சியத்தை இழப்பீர்கள். எனவே, இந்தக் கல்வியில் முழுக் கவனம் செலுத்துங்கள்.

பாடல்:
நாம் வீழ்ந்து விடக்கூடிய இந்தப் பாதையை நாம் பின்பற்ற வேண்டி இருப்பதால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இன்று, பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு ஹத்த யோகத்தைப் பற்றியும், இராஜயோகத்தைப் பற்றியும் விளங்கப்படுத்துகின்றார். வெளியே உள்ளவர்கள் கற்பிப்பவை அனைத்தும் ஹத்த யோகமே. ஏனெனில் அவர்கள் கர்மத்தைத் துறந்த சந்நியாசிகள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். உண்மையில் இல்லறத்தில் வாழ்பவர்கள், ஹத்தயோகம் அல்லது கர்மத்தைத் துறப்பதைப் பற்றிக் கற்கக் கூடாது. அது துறவறப்பாதையும் வேறானதொரு சமயமும் ஆகும். உங்களுடைய தர்மம் தேவதர்மம் ஆகும். அந்தத் தேவர்கள் இராஜயோகத்தைக் கற்றதன் மூலம் இராச்சியத்தைப் பெற்றார்கள். இப்பொழுது நீங்கள் இராஜ ரிஷிகளாக இருக்கின்றீர்கள். தூய்மையாக இருப்பவர்களே ரிஷிகள். இப்பொழுது நீங்கள் தூய்மையானவர்களாக இருக்கின்றீர்கள். நீங்கள் தூய்மையாக இருக்காவிட்டால், உங்களை ரிஷிகள் என்று அழைக்க முடியாது. ஓர் இராச்சியத்தைப் பெறுவதற்காக நீங்கள் தூய்மை ஆகுகின்றீர்கள். ஓர் இராச்சியத்தைப் அடைவதற்கு அம்மக்கள் தூய்மை ஆகுவதில்லை. தூய உலகிலே நாம் தூய இராச்சியத்தைக் கொண்டிருந்தோம் என்பது உங்களுக்குத் தெரியும். 5000 ஆண்டுகளுக்கு முன்னர் தூய, பூஜை செய்யப்படத் தகுந்த தேவர்களின் இல்லறப் பாதையாக இருந்தது. இப்பொழுது அவர்கள் தூய்மையற்ற, பூஜிப்பவர்கள் ஆகிவிட்டார்கள். அவர்கள் எவ்வாறு தூய்மை அற்றவர்கள் ஆகினார்கள்? 84 பிறவிகளைப் பற்றிய கணக்கு இருக்கின்றது. உங்களுக்கு இலகு இராஜயோகத்தைக் கற்பிக்கும் தந்தையும் 84 பிறவிகளின் கணக்கைப் பற்றிக் கூறுகின்றார். சந்நியாச சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மற்றைய சமயங்களைப் பற்றி என்ன தெரியும்? இதுவே தேவர்களின் புராதன தர்மம் ஆகும். அந்த சமயம் பின்னரே தோன்றுகின்றது. கடந்த காலத்திலே இடம் பெற்றவற்றை சந்நியாசிகளால் புரிந்து கொள்ள முடியாது. அதன் பின்னர் இடம்பெற்றவைகளையே அவர்களால் விளங்கப்படுத்த முடியும். பலவிதமான ஹத்த யோகங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். பக்தி மார்க்கமும் ஹத்த யோகமும் துவாபர யுகத்தில் ஒரே நேரத்தில் ஆரம்பமாகின்றன. இப்பொழுது இது இராஜயோகம் ஆகும். அம்மக்கள் பிறவி பிறவியாக ஹத்த யோகத்தைக் கற்றார்கள். நீங்கள் ஒரு பிறவியில் மாத்திரமே இராயோகத்தைக் கற்கின்றீர்கள். அவர்கள் மறுபிறவி எடுத்து ஹத்த யோகத்தை பிறவி பிறவியாக கற்க வேண்டும். இராஜயோகத்தைக் கற்பதற்காக நீங்கள் மறுபிறப்பு எடுக்கத் தேவையில்லை. சங்கமயுகத்தில் மாத்திரமே நீங்கள் இந்த இராஜயோகத்தைக் கற்கின்றீர்கள். நீங்கள் இராச்சியத்தைப் பெற்றதும் அதுவே சுவர்க்கம் ஆகுவதால் ஏனைய சமயங்கள் அனைத்தும் மறைந்து விடுகின்றன. நீங்கள் இராஜரிஷிகள். ராதையும் கிருஷ்ணரும் தூய்மையானவர்கள். ஸ்ரீகிருஷ்ணர் மகாத்மா எனவும் அழைக்கப்படுகின்றார். மகாத்மாக்கள் தூய்மையானவர்கள். இப்பொழுது நீங்களே மகாத்மாக்களும், இராஜரிஷிகளும் ஆவீர்கள். ஒரு மகாத்மா என்றால் தூய, மேன்மையான ஆத்மா எனப் பொருள்படும். இவ்விடயங்கள் சமய நூல்களிலே குறிப்பிடப்படவில்லை. பின்னரே சமய நூல்கள் உருவாக்கப்படுகின்றன. அவர்கள் அவற்றை அமர்ந்திருந்து கதைகளைப் போல எழுதுகின்றார்கள். கடந்த காலத்திலே இடம்பெற்ற விடயங்களை அமர்ந்திருந்து நாடகங்களாக உருவாக்குகின்றார்கள். அவை எதுவுமே உண்மையல்ல. இப்பொழுது தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு நடைமுறை ரீதியாகக் கற்பிக்கின்றார். இதைப்பற்றி அவர்கள் சில வரலாற்றை உருவாக்கி இருக்கின்றார்கள். யாதவர்கள், கௌரவர்கள், பாண்டவர்கள் இருந்தார்கள். அவர்கள் நிச்சயமாக சங்கமயுகத்திலேயே இருந்திருக்க வேண்டும். அவர்கள் சங்கமயுகத்தின் வரலாற்றை அமர்ந்திருந்து உருவாக்கி இருக்கின்றார்கள். பண்டிகைகளும் சங்கமயுகத்தைச் சேர்ந்தவையே. “இரக்ஷபந்தன்” எனும் பண்டிகை தூய்மையின் அடிப்படையிலானது. அதன் ஞாபகார்த்தம் பின்னர் தொடர்கின்றது. தந்தை இங்கே எல்லோரையும் தூய்மையாக்கி, அவர்களை ஒரு சத்தியத்தைச் செய்யச் செய்கின்றார். சீக்கியர்கள் தூய்மையின் அடையாளமாக ஒரு உருக்கு இரும்பினாலான காப்பை அணிகின்றார்கள். இந்துக்கள் தூய்மையின் அடையாளமாக பூநூலைத் தரிக்கின்றார்கள். எவ்வாறாயினும், அவர்கள் தூய்மையாக இருப்பதில்லை. அவர்கள் ஒரு ராக்கியைக் கட்டுகின்றார்கள், ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. முன்னர், பிராமண குருமார் ராக்கியைக் கட்டினார்கள். ஆனால் இப்பொழுது ஒரு சகோதரி தனது சகோதரனுக்கு ஒரு ராக்கியைக் கட்டுகின்றாள். அவன் அவளுக்கு ஒரு பணப்பரிசு கொடுக்கின்றான். இந்த நாகரீகம் இப்பொழுதே உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது தூய்மையைப் பற்றிய ஒரு விடயம் ஆகும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, காமமே கொடிய எதிரி. அந்தப் பிராமண குருமார் இவ்விதமாக விளங்கப்படுத்துவதில்லை. எல்லையற்ற தந்தை இப்போது கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் தூய்மையாக இருப்பீர்கள் என்றும், விகாரத்திலே ஒருபோதும் ஈடுபட மாட்டீர்கள் எனவும் சத்தியம் செய்யுங்கள். வந்து தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குமாறு தந்தையை நீங்கள் அழைத்தீர்கள். சத்தியயுகத்திலும், திரேதா யுகத்திலும் எவருமே அவரை அழைப்பதில்லை. அது இராம இராச்சியம். இது இராவண இராச்சியம். இராம இராச்சியத்திலே ஐந்து விகாரங்கள் இருக்காது. அரசனும், அரசியும் எவ்வாறோ, அவ்வாறே பிரஜைகளும் இருப்பார்கள். நீங்கள் பாபாவிடம் இருந்து சுவர்க்க இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நிச்சயமாக நீங்கள் இந்த நரகத்தை விட்டு விலகிச் செல்ல வேண்டும். பாபா எம்மைத் தூய்மையாக்கி, சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கின்றார். எனவே நாம் ஏன் தூய்மையாகக் கூடாது? அவர்கள் வெவ்வேறு விதமான ஹத்த யோகத்தைச் செய்கிறார்கள். ஜெய்ப்பூர் நூதனசாலையிலே எத்தனை விதமான ஹத்த யோகிகள் இருக்கின்றார்கள் என்பதைச் சென்று பாருங்கள். அதன் மூலம் எதுவுமே நிறைவேறுவதில்லை. அவர்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழிறங்கி வருகின்றார்கள். பாரதம் தூய்மையற்றதாகி, இராவண இராச்சியம் ஆரம்பமாகும் போது, உலகம் ஆட்டங்காணத் தொடங்குகின்றது என்பதைத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். தங்க மாளிகைகள் போன்றவை அனைத்தும் நிலத்திற்குக் கீழே புதைந்து விடுகின்றன. மாளிகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது என்பதல்ல. ஆலயங்களே கொள்ளை அடிக்கப்பட்டு தங்க நகைகள் சூறையாடப்பட்டன. நகைகள் போன்றவற்றிலே பெருமளவு விருப்பம் உடையவர்கள் நீங்களே. நீங்கள் சுவர்க்கத்திற்குச் சென்றவுடன், நகைகள் போன்றவற்றை அணிந்து, இராச்சியத்தை ஆட்சி செய்கின்றீர்கள். மற்றைய சமயத்தவர்கள் வந்தவுடன் ஓர் இராச்சியத்தை ஆட்சி செய்வதில்லை. நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து சுவர்க்க இராச்சியம் எனும் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து இதை விளங்கப்படுத்துகின்றார். அவர் உங்களுக்கு கீதையை உபதேசிப்பதில்லை. கீதையிலே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தையும் நான் உங்களுக்கு கூறவில்லை. நான் பேசிய மகா வாக்கியங்களில் இருந்து பின்னர் மனிதர்களே சமய நூல்களை உருவாக்கினார்கள். நான் உங்களுக்குக் கூறியவற்றை நீங்களே செவிமடுத்தீர்கள். பின்னர் நீங்கள் சென்று இராச்சியத்தை ஆட்சிசெய்தீர்கள். இந்த ஞானம் அங்கே இருக்காது. தந்தை இங்கே ஆசிரியராக அமர்ந்திருந்து உங்களுக்கு இதைக் கற்பிக்கின்றார். தந்தை ஹிந்தியில் மாத்திரமே விளங்கப்படுத்துகின்றார். இங்கே, எல்லோரும் ஹிந்தி பேசுகின்றார்கள், ஏனெனில் உங்களுடைய மொழி ஹிந்தியே. உண்மையில், புராதன மொழி ஹிந்தியே, சமஸ்கிருதம் அல்ல. சங்கராச்சாரியாருக்குப் பின்னரே சமஸ்கிருத மொழி தோன்றியது. பின்னர் வந்தவர்கள் தமது சொந்த மொழியை ஆரம்பித்தார்கள். பாபா கீதையை சமஸ்கிருத மொழியில் பேசவில்லை. குருநானக் தனது சொந்த கிரந்தைக் கொண்டுள்ளார். அவர் சீக்கிய சமயத்தை ஸ்தாபிக்கின்றார். எனவே மக்கள் அவரை ஓர் அவதாரம் என நம்புகின்றார்கள். அந்த சமயத்தில் அரசர்களும் இருக்கின்றார்கள். சந்நியாசிகள் மத்தியிலே இராச்சியங்கள் எதுவுமே இல்லை. பாபா விளங்கப்படுத்தி உள்ளார்: புத்தர், கிறிஸ்து போன்றோர் ஆரம்பத்தில் இல்லறத்து ஆத்மாக்களே. எவ்வாறாயினும், தூய்மையற்ற இல்லறத்தவர்களால் ஒரு சமயத்தை ஸ்தாபிக்க முடியாது. ஒரு தூய ஆத்மா அவர்களுள் பிரவேசித்து ஒரு சமயத்தை ஸ்தாபித்தார். வேறு பல சமயங்களும் இருக்கின்றன. அவர்கள் வந்து தமது சொந்த சிறிய பிரிவுகளை உருவாக்குகின்றார்கள். இவையும் விருட்சத்தின் படத்திலே காட்டப்பட்டுள்ளது. ஹத்த யோகத்திற்கும், இராஜயோகத்திற்கும் இடையிலே பெருமளவு வேறுபாடு இருக்கின்றது. இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இவ்விடயங்களைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், தொடர்ந்து தூங்கி வழிந்தவாறும், கொட்டாவி விட்டவாறும் இருக்கின்றார்கள். இங்கே நீங்கள் பொக்கிஷங்களைப் பெறுகின்றீர்கள். இந்த வருமானம் மிகப்பெரியது. நீங்கள் உங்கள் புத்தியை இரத்தினங்களால் நிரப்புகின்றீர்கள். இதனை நீங்கள் கண்களைத் திறந்தவாறு செவிமடுக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து தூங்கி வழிந்தால், அல்லது உங்கள் புத்தி தொடர்ந்து அலைபாய்ந்தால், உங்களால் ஓர் இராச்சியத்தைப் பெற முடியாது. நீங்கள் ஓர் இராச்சியத்தைப் பெறும் இராஜரிஷிகள். ஓர் இராச்சியத்தை உருவாக்குபவர் தந்தையே, ஸ்ரீ கிருஷ்ணர் அல்ல. ஸ்ரீகிருஷ்ணர் தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகின்றார். உலக இராச்சியம் எனும் ஆஸ்தியை உங்கள் தந்தையான, அசரீரியான ஒரே ஒருவரிடமிருந்தே பெறுகின்றீர்கள். நீங்கள் மிகவும் செல்வந்தர்கள் ஆகுகின்றீர்கள். ஒரேயொரு தந்தையே இங்கே வந்து உங்களுக்கு இராஜ யோகத்தைக் கற்பிக்கின்றார். நீங்கள் பயணம் செய்யலாம், சுற்றுலாவிலும் செல்லலாம், உண்ணலாம், பானம் அருந்தலாம். ஆனால் தந்தையை நினைவுசெய்யுங்கள். செல்வந்தர்கள் நிச்சயமாக நன்றாகச் சாப்பிடுகின்றார்கள். அவர்கள் தமது வருமானத்தின் பலனைப் பெறுகின்றார்கள். நீங்கள் மால்புதாவையோ (இனிப்பான பொரித்த ரொட்டி - மம்மாவின் தினத்தன்று தயாரிக்கப்படும் விசேட உணவு) அல்லது வெறும் ரொட்டியையோ சாப்பிடலாம், ஆனால் தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் எதையும் சாப்பிடலாம். நீங்கள் எதற்காகப் பணத்தை வைத்திருக்கின்றீர்கள்? பாபா உங்களுக்கு எதையும் தடைசெய்வதில்லை. தந்தையுடன் யோகம் செய்யுங்கள். இந்த இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கு எந்தச் செலவும் இல்லை. அந்த யுத்தங்களுக்கு பெருமளவு செலவுகள் இருக்கின்றன! ஆகாயவிமானங்கள் போன்றவற்றிற்கும் பெருமளவு செலவு செய்யப்படுகின்றது. ஆகாய விமானங்கள் மோதும் போது, அவை முற்றாக அழிக்கப்படுகின்றன. பெருமளவு சேதமும் ஏற்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: நடக்கும் போதும், அசையும் போதும் தந்தையை நினைவு செய்யுங்கள். சுயதரிசன சக்கரத்தைத் தொடர்ந்தும் சுழற்றுங்கள். நாம் எமது 84 பிறவிகளை முடித்துவிட்டோம். இப்பொழுது நாம் வீட்டிற்குச் செல்கின்றோம். நாம் வீடு திரும்பிப் பின்னர் வந்து இராச்சியத்தை ஆட்சி செய்வோம். நீங்கள் நடிகர்கள். அந்தப் படங்கள் போன்றவை இரண்டு தொடக்கம் இரண்டரை மணித்தியாலங்களிற்கு ஓடுகின்றன. இந்த எல்லையற்ற நாடகம் 5000 ஆண்டுகளிற்குத் தொடர்கின்றது. மனிதர்களால் மாத்திரமே இதனைப் புரிந்துகொள்ள முடியும். இவ்வுலகம் முட்காடாகும். காமமே மிகப்பெரிய முள் ஆகும். அது ஆரம்பத்தில் இருந்து, நடுப்பகுதியூடாக, இறுதிவரை துன்பத்தையே விளைவிக்கின்றது. இரண்டாவது முள் கோபம் ஆகும். அதன் அடையாளமே மகாபாரத யுத்தம். அவர்கள் ஏதாவது ஒன்றைப் பற்றி கோபமுற்றதும், உடனடியாகக் குண்டுகளைப் போடத் தொடங்குகின்றார்கள். இப்போது அவர்கள் அத்தகைய குண்டுகளையே தயாரிக்கின்றார்கள், கேட்கவே வேண்டாம்! சத்தியயுகத்திலே யுத்தம் போன்றவை இருக்காது. மகாபாரத யுத்தம் சங்கமயுகத்திலேயே காட்டப்பட்டுள்ளது. இந்த யுத்தத்தைப் பற்றி வேறெந்த சமய நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை. நீங்கள் அங்கே இருந்த போது, முழு உலகினதும் அதிபதிகளாக இருந்தீர்கள். அங்கே யுத்தத்தைப் பற்றிய எந்தக் கேள்விக்கும் இடமில்லை. அவர்கள் சமயநூல்களிலே தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஒரு யுத்தத்தை சித்தரித்திருக்கின்றார்கள். எவ்வாறாயினும், தேவர்கள் அகிம்சாவாதிகள். யோக சக்தி மூலம் நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். இது மௌனசக்தி ஆகும். நீங்கள் எதையும் கூறத் தேவையில்லை. இந்த நினைவுசக்தி மூலம், நீங்கள் பாபாவிடம் இருந்து உலக இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். எவ்வளவு வேறுபாடு காணப்படுகின்றது என்பதைப் பாருங்கள்! விஞ்ஞானத்தின் சக்தி மூலம் அழிவு இடம்பெறுகின்றது. அதே விஞ்ஞானத்தின் மூலம் நீங்கள் சத்தியயுகத்தின் சந்தோஷத்தைப் பார்ப்பீர்கள். அவர்கள் விஞ்ஞானம் மூலம் பொருட்களைக் கண்டுபிடிக்கின்றார்கள். அவர்கள் அதனை சந்தோஷத்திற்காகச் செய்கின்றார்கள். அவர்களும் வந்து இந்த ஞானத்தைப் பெறுவார்கள். எல்லோரும் கண்காட்சிகளுக்கு வருகின்றார்கள். நீங்கள் மேலும் முன்னேறும் போது, எல்லோரும் வருவார்கள். உங்கள் மௌன சக்தியின் ஒலி பரவும். அவர்களிடம் கீதையின் கடவுள் யார்? எனக் கேளுங்கள். வேறெவராலும் அத்தகைய கேள்வியைக் கேட்க முடியாது. இந்தக் கேள்வியைக் கேட்கும் இடத்திலே நீங்கள் ஒரு படத்தையும் தொங்கவிட வேண்டும். கீதையின் கடவுள் பரமாத்மாவான பரமதந்தை சிவனா அல்லது சம்பூரண 84 பிறவிகளை எடுக்கும் ஸ்ரீகிருஷ்ணரா? தந்தையே உங்களைத் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆக்குகின்றார். ஸ்ரீகிருஷ்ணருடைய ஆத்மா 84 பிறவிகளை எடுத்து, அவலட்சணமானவர் ஆகுகின்றார். தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள், உங்களுக்கு உங்களின் சொந்தப் பிறவிகளைப் பற்றித் தெரியாது. நடிகர்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கின்றார்கள் என்பதை அவர்கள் தெரிந்திருக்க வேண்டும். சந்நியாசிகளின் சமயம் முற்றிலும் வேறானது. பாரத மக்கள் தமது சொந்த சமயத்தைப் பற்றித் தெரியாதிருப்பதால், அவர்கள் தொடர்ந்து மற்றைய சமயங்களுள் செல்கின்றார்கள். ஒரு குருவின் ஆசீர்வாதம் மூலம் ஒருவர் செல்வத்தைப் பெறும் போது, அவர் அந்த குருவைப் பின்பற்றுகிறார். எவ்வாறாயினும், பின்னர் அவர் நஷ்டம் அடைந்தால், அது கடவுளின் விருப்பம் என அந்தக் குரு கூறுகின்றார். அவர்களுக்கு ஒரு புதல்வன் பிறந்தால், அவர்கள் மிகவும் சந்தோஷப்படுகின்றார்கள். அவர்களுடைய புதல்வன் 10 தொடக்கம் 12 நாட்களின் பின்னர் மரணித்துவிட்டால், அது கடவுளின் விருப்பம் எனக் கூறுகின்றார்கள். அவரை மீண்டும் உயிர்பெறச் செய்வது எனது கையில் இல்லை. அத்தகைய பல உதாரணங்களை பாபா பார்த்திருக்கின்றார். அவ்வாறானவர்கள் பலர் இருக்கின்றார்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, தூய்மை ஆகுங்கள். மகாபாரத யுத்தம் இடம்பெற்ற போது, திரௌபதி: “பாபா, இந்த அசுரர்கள் என்னைத் துகிலுரிகின்றார்கள், என்னை அவர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள்!” என்று அழைத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இது 5000 ஆண்டுகளைப் பற்றிய ஒரு விடயம் ஆகும். இந்த விகாரம் காரணமாகவே அப்பாவிகள் துன்புறுத்தப்படுகின்றார்கள். நஞ்சில்லாமல் எதையும் செய்ய முடியாத சில பெண்களும் இருக்கின்றார்கள். அவர்கள் சூர்ப்பனகை, புட்னா போன்றவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். மற்றவர்களை விகாரத்திற்காகத் துன்புறுத்துபவர்கள் கம்சன், ஜரசந்த், சிசுபாலன் (சமய நூல்களில் உள்ள அரக்கர்களின் பெயர்கள்) போன்றவர்கள் ஆவார்கள். அவர்கள் அனைவரும் அழியப் போகின்றார்கள். இப்பொழுது இது இராவணனின் அசுர இராச்சியமாகும். பின்னர் இது கடவுளின் இராச்சியமாக இருக்கும். நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள் என்ற முழுச் சக்கரத்தையும் இப்பொழுது நீங்கள் தெரிந்துள்ளீர்கள். விகாரத்தில் ஈடுபடும் போது இதனை நீங்கள் மறந்து விடுகின்றீர்கள். விகாரத்தில் ஈடுபடுபவர்களின் முகம் வெளிறி விடுகின்றது. அவர்களே புரிந்து கொண்டு சிந்திக்கின்றார்கள்: நான் என்ன காரியம் செய்துவிட்டேன்? தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இந்த நஞ்சுச் சாக்கடையினுள் விழுந்து விடாதீர்கள். அது அதன் ஆரம்பகாலத்தில் இருந்து, நடுப்பகுதியூடாக, இறுதிவரை உங்களுக்குத் துன்பத்தையே விளைவிக்கின்றது. இதிலே ஈடுபட வேண்டாம். நீங்கள் ஒருபோதும் விகாரத்திலே ஈடுபட மாட்டீர்கள் எனச் சத்தியப்பிரமாணம் செய்யுங்கள். கடவுள் பேசுகின்றார்: காமமே மிகக் கொடிய எதிரி. ஒவ்வொரு படத்திலும் முதலாவதாக இதனை எழுதுங்கள்: ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும் கீதையின் ஞானத்தை அருள்பவருமான கடவுள் சிவன் பேசுகின்றார். அதன் பின்னர் ஸ்ரீகிருஷ்ணருடைய பெயர் நீங்கிவிடும். கீதையின் கடவுள் இங்கே அமர்ந்திருந்து, எமக்கு இதனைக் கற்பிக்கின்றார். நாம் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெறுகின்றோம். கடவுள் வந்து புதிய உலகை ஸ்தாபிக்கின்றார், பழைய உலகம் அழிக்கப்படுகின்றது. உருத்திரனின் இந்த ஞானயாகத்தீ இருக்கின்றது. உண்மையில் அவர் சிவபாபாவே. நீங்கள் உருத்திர பாபா எனக் கூறமாட்டீர்கள். பம்பாயிலே பபுல்நாதரின் (முட்களின் பிரபு) ஆலயம் இருக்கின்றது. பபுல் என்றால் முள். அவர்கள் அவருக்கு ஏன் பபுல்நாதர் எனப் பெயரிட்டுள்ளார்கள்? எவருமே இதைப் புரிந்து கொள்வதில்லை. உருவமோ சிவனுடையது ஆகும். அவர்கள் அவருக்குப் பல பெயர்களைச் சூட்டியிருக்கின்றார்கள். சிவபாபா வந்து இந்த முட்காட்டை அந்தப் பூந்தோட்டமாக மாற்றுகின்றார். அவர் உங்களுடைய பாபா, அவருடைய பெயர் சிவன். வார்த்தைகள் மிகவும் தெளிவாக இருக்கின்றன: பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள். தேவர்களாகப் போகின்ற பிராமணர்களுக்கு வந்தனங்கள். ஒரு பௌதீகத் தந்தை விளங்கப்படுத்துவதைப் போலவே, பரமாத்மாவாகிய பரமதந்தை, இங்கே அமர்ந்திருந்து இந்த இரதத்தின் மூலமாக விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, எனது குலத்தின் பெயரை அவதூறு செய்யாதீர்கள். தீயவை எதையும் செய்யாதீர்கள். இந்த பாபாவும் கூறுகின்றார்: குழந்தைகளே, ஒருபோதும் விகாரத்தில் ஈடுபடாதீர்கள். தூய்மை ஆகாமல், உங்களால் சுவர்க்கத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாது. நீங்கள் மிகவும் மகத்துவமான ஒரு வருமானத்தைச் சம்பாதிக்கின்றீர்கள். ஏனையோர் எல்லாவற்றையும் இழக்கின்றார்கள். ஒருவர் பல மில்லியன்களை வைத்திருந்து பாரிய மாளிகைகளைக் கட்டி, பல நூறாயிரங்களைச் செலவு செய்யலாம். அவை அனைத்தும் நேரத்தை வீணாக்குகின்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அவை எவையுமே பயனுள்ளவையாக இருக்காது. அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். அவை 10 தொடக்கம் 12 ஆயிரம் ஆண்டுகளுக்குத் தொடரும் என அவர்கள் கருதுகின்றார்கள். மரணம் உங்கள் முன்னால் நிற்கின்றது, உங்களின் தலைகளின் மீது தொங்கிக் கொண்டுள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ஒரு குறுகிய காலத்தில், பூமி அதிர்ச்சிகள் ஏற்பட்டு எல்லாம் ஆட்டங்காணத் தொடங்கிவிடும். பூமி அதிர்ச்சிகளின் போது, எண்ணற்ற மக்கள் மரணம் அடைகின்றார்கள். இப்பொழுது விநாசம் இடம்பெறவே வேண்டும். நீங்கள் அழிவினதும், ஸ்தாபனையினதும் காட்சிகளைக் கண்டீர்கள். பின்னர் இவற்றை மீண்டும் உங்கள் பௌதீகக் கண்கள் மூலமாகக் காண்பீர்கள். பக்தி மார்க்கத்திலே அவர்கள் பெருமளவு முயற்சிகளைச் செய்கின்றார்கள். ஆனால் எவராலும் வைகுண்டத்திற்குச் (சுவர்க்கம்) செல்ல முடியாது. இந்த ஞானம் இல்லாமல் சற்கதியைப் பெறமுடியாது. அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தைச் சேர்ந்த விளையாட்டுப் பொம்மைகளே. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. குலத்தின் பெயரை அவமதிக்கின்ற வகையில் தீய செயல்கள் எதையும் செய்ய வேண்டாம். “நாங்கள் தூய்மையாக இருப்போம்” என நீங்களே சத்தியம் செய்யுங்கள்.

2. உங்கள் நேரத்தையோ, பணத்தையோ வீணாக்காதீர்கள். பூந்தோட்டத்திற்குச் செல்வதற்கு, முட்களை அகற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சதா அலௌகீகப் பொம்மைகளுடன் அலௌகீக விளையாட்டுக்களை விளையாடுவதன் மூலம் சதா சக்திசாலியாகி அதனால் ஆட்ட, அசைக்க முடியாதவர் ஆகுவீர்களாக.

இந்த அலௌகீக வாழ்க்கையில் மாயையின் தடைகளை அனுபவம் செய்வதும் அலௌகீக விளையாட்டே ஆகும். உங்களின் பௌதீக வலிமையை அதிகரிப்பதற்கு உங்களை விளையாட வைப்பதைப் போல், அதேபோல், இந்த அலௌகீக யுகத்தில், இக்கட்டான சூழ்நிலைகளைப் பொம்மைகளாகக் கருதி அலௌகீக விளையாட்டுக்களை விளையாடுங்கள். அவற்றை இட்டுப் பயப்படவோ அல்லது பதற்றம் அடையவோ வேண்டாம். உங்களையும் உங்களின் எண்ணங்கள் அனைத்தையும் பாப்தாதாவிற்கு அர்ப்பணியுங்கள். அப்போது மாயை ஒருபோதும் உங்களைத் தாக்காது. ஒவ்வொரு நாளும் அமிர்த வேளையில், பற்றற்ற பார்வையாளராகி, உங்களைச் சகல சக்திகளாலும் அலங்கரியுங்கள். நீங்கள் ஆட்ட, அசைக்க முடியாதவராக இருப்பீர்கள்.

சுலோகம்:
உலகச் செய்திகளைச் செவிமடுப்பதும் விவரிப்பதும்கூட உங்களுக்குள் குப்பையைச் சேகரித்துக் கொள்வதே ஆகும்.

அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.

சதா நினைவில் இருப்பதும் உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் தூய்மையாக இருப்பதுமே பாப்தாதாவின் பிரதானமான கட்டளை ஆகும். உங்களின் எண்ணங்களிலேனும் எந்தவிதமான தூய்மையின்மை அல்லது சுத்தமின்மையைக் கொண்டிராமல் இருப்பதே சம்பூரணமான தூய்மையைக் கொண்டிருப்பதாகும். உங்களின் எண்ணங்கள் பழைய, தூய்மையற்ற சம்ஸ்காரங்களால் தொடப்பட்டால் அல்லது உங்களுக்குள் வீணான எண்ணங்கள் இருந்தால் அல்லது அவை உங்களின் கனவுகளில் வந்தால், இதை சம்பூரணமான தூய்மை என்று சொல்ல முடியாது. ஆகவே, முதலாவது பாடமான, நீங்கள் தூய்மை ஆகுவீர்களாக, யோகி ஆகுவீர்களாக என்பதை நடைமுறையில் கடைப்பிடியுங்கள். அப்போது மட்டுமே உங்களால் தந்தைக்குச் சமமானவர் ஆகி, தந்தைக்கு நெருக்கமாக இருக்கும் உரிமையைக் கோர முடியும்.