04.07.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, பந்தனத்தில் இருந்து விடுபட்டவராகி, சேவையில் மும்முரமாக ஈடுபடுங்கள். ஏனெனில் இச்சேவையினூடாக நீங்கள் ஒரு பெரும் வருமானத்தைச் சம்பாதிக்க முடியும். நீங்கள் 21 பிறவிகளுக்கு வைகுந்தத்தின் அதிபதிகள் ஆகுகிறீர்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள் பதிய வைக்க வேண்டிய பழக்கம் என்ன?பதில்:
முரளிக் கருத்துக்களை விளங்கப்படுத்துதல். உங்களுடைய பிராமண ஆசிரியர் எங்காவது சென்றால், உங்கள் மத்தியில் வகுப்பை நடத்துவது சாத்தியமாக இருக்க வேண்டும். நீங்கள் எவ்வாறு வகுப்பை நடத்துவது எனக் கற்காது விட்டால், ஏனையோரை உங்களைப் போன்று ஆக்குவது எப்படிச் சாத்தியம் ஆகும்? உங்கள் ஆசிரியர் இல்லாது விட்டால், நீங்கள் குழப்பம் அடையக் கூடாது. இக்கல்வி எளிமையானது. தொடர்ந்தும் உங்கள் வகுப்பை நடத்தி வாருங்கள். ஏனென்றால், இந்தப் பயிற்சியும் அவசியமானது.பாடல்:
உன் இதயக் கண்ணாடியில் உன் முகத்தைப் பார், ஓ மனிதா!ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தைச் செவிமடுக்கும் பொழுது, நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா எனும் நம்பிக்கையுடன் அமர்வதுடன், பரமாத்மாவாகிய, தந்தையே உங்களுடன் பேசுகிறார் எனும் நம்பிக்கையைக் கொண்டிருக்கவும் வேண்டும். ஒரேயொரு தந்தை மாத்திரமே இந்த வழிகாட்டல்களைக் கொடுக்கிறார். இவ்வழிகாட்டல்களே ஸ்ரீமத் என அழைக்கப்படுகின்றன. ஸ்ரீ என்றால் அனைத்திலும் அதிமேன்மையானது என அர்த்தம். அவரே அதிமேன்மையான, கடவுள் என அழைக்கப்படுகின்ற, எல்லையற்ற தந்தை ஆவார். பரமாத்மாவைத் தந்தை எனக் கருதுகின்ற அன்பைக் கொண்டிராத மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். மனிதர்கள் சிவனை வழிபட்டுப் பெருமளவு அன்புடன் அவரை நினைவு செய்தாலும், பரமாத்மா அனைவரிலும் இருக்கிறார் எனவும் அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே, அவர்கள் யார் மீது அந்த அன்பைக் கொண்டிருப்பார்கள்? இவ்வாறே அவர்களின் புத்தி தந்தையின் மீது அன்பைக் கொண்டிராமல் உள்ளது. பக்தி மார்க்கத்தில், அவர்களுக்குத் துன்பம் அல்லது நோய் போன்றவை ஏற்படும் பொழுது, அவர்கள் தங்கள் அன்பைக் காட்டுகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: ஓ கடவுளே, என்னைக் காப்பாற்றுங்கள்! இந்த வாயின் மூலமாகக் கடவுளால் கொடுக்கப்பட்ட ஸ்ரீமத்தே, கீதையாகும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். கடவுள் இராஜயோகத்தைக் கற்பித்த அல்லது ஸ்ரீமத்தைக் கொடுத்த வேறு சமயநூல்கள் எவையும் கிடையாது. பாரதத்தின் ஒரு கீதை மாத்திரமே உள்ளது. அது பெருமளவு தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. கீதை மாத்திரம் கடவுளால் பேசப்பட்டது. “கடவுள்” எனும் வார்த்தை கூறப்படும் பொழுது, அசரீரியானவர் மீதே பார்வை செல்கிறது. மக்கள் தங்கள் விரலை மேல் நோக்கிச் சுட்டிக் காட்டுகிறார்கள். ஸ்ரீகிருஷ்ணர் சரீரதாரி ஆதலால், அவர்கள் ஒருபொழுதும் ஸ்ரீகிருஷ்ணரையிட்டு இதைக் கூற மாட்டார்கள். அவருடனான உங்கள் உறவுமுறையைப் பற்றி இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆகவே, தந்தையை நினைவு செய்யுமாறும், அவர் மீது அன்பைக் கொண்டிருக்குமாறும் உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. ஆத்மாக்கள் தங்கள் தந்தையை நினைவு செய்கிறார்கள். இப்பொழுது கடவுள் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கிறார். ஆகவே, உங்களுக்குப் பெருமளவு போதை இருக்க வேண்டும். அது நிரந்தரமாக இருக்கவும் வேண்டும். உங்கள் ஆசிரியர் உங்கள் முன்னிலையில் இருக்கும் பொழுது, நீங்கள் போதை உடையவராக இருப்பதாகவும், அவர் அங்கே இல்லாத பொழுது, உங்கள் போதை மறைந்து, உங்கள் ஆசிரியர் இல்லாமல் உங்களால் வகுப்பைப் பராமரிக்க முடியாதுள்ளது என நீங்கள் கூறுவதாகவும் இருக்கக்கூடாது. சில நிலையங்களில், ஆசிரியர் ஐந்து தொடக்கம் ஆறு மாதங்கள் வரை எங்காவது சென்றிருப்பார் எனவும், மாணவர்களால் தங்கள் நிலையத்தைப் பராமரிக்க இயலுகிறது எனவும் பாபா விளங்கப்படுத்துகிறார். ஏனென்றால், இந்தக் கல்வி மிகவும் எளிமையானது. தங்கள் ஆசிரியர் இல்லாததால், சிலர் குருடர்களாக அல்லது முடவர்களாக ஆகுகிறார்கள். அவர்களின் ஆசிரியர் எங்காவது சென்று விட்டதால், அவர்கள் தங்கள் நிலையத்திற்குச் செல்வதையே நிறுத்துகிறார்கள். ஆ, ஆனால் அங்கும் ஏனைய பல மாணவர்கள் இருக்கிறார்கள்! உங்களால் வகுப்பை நடத்த முடியாதா? ஒரு குரு எங்காவது செல்லும் பொழுது, அவருடைய சிஷ்யர்கள் அவர் இல்லாத வேளையில் அனைத்தையும் பார்த்துக் கொள்வார்கள். குழந்தைகளான நீங்கள் சேவை செய்ய வேண்டும். மாணவர்கள் வரிசைக்கிரமமானவர்கள். பாப்தாதாவுக்கு முதற்தரமான குழந்தைகளை எங்கே அனுப்ப வேண்டும் என்பது தெரியும். குழந்தைகளாகிய நீங்கள் பல வருடங்களாகக் கற்று வருகிறீர்கள். ஆகவே, உங்கள் மத்தியில் ஒன்றுகூடி, நீங்களே உங்கள் நிலையத்தை நடத்தவும் கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் முரளிகளைப் பெறுகிறீர்கள்; கருத்துக்களின் அடிப்படையில் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் செவிமடுக்கும் பழக்கத்தை விருத்தி செய்துள்ளீர்கள், ஆனால் இந்த ஞானத்தைக் கொடுக்கும் பழக்கத்தை விருத்தி செய்யவில்லை. நீங்கள் நினைவில் நிலைத்திருந்தால், உங்களால் இந்த ஞானத்தைக் கிரகிக்க இயலும். ‘சரி, ஆசிரியர் இங்கே இல்லை, ஆகவே என்னால் நிலையத்தை நிர்வகிக்க முடியும்’ எனக் கூறக்கூடிய ஒருவர் உங்கள் நிலையத்தில் இருக்க வேண்டும். பாபா ஆசிரியரை வேறொரு சிறந்த நிலையத்துக்குச் சேவைக்காக அனுப்பியுள்ளார். ஆகவே, உங்கள் ஆசிரியர் இல்லாததால், நீங்கள் குழப்பம் அடையக் கூடாது. நீங்கள் உங்கள் ஆசிரியரைப் போன்று ஆகாது விட்டால், நீங்கள் எப்படி ஏனையோரை உங்களைப் போன்று ஆக்கப் போகிறீர்கள்? நீங்கள் எவ்வாறு பிரஜைகளை உருவாக்குவீர்கள்? அனைவரும் முரளிகளைப் பெறுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் கதியில் அமர்ந்து ஏனையோருக்கு இந்த ஞானத்தை விளங்கப்படுத்துவதில் சந்தோஷப்பட வேண்டும். இதைப் பயிற்சி செய்வதால், உங்களால் சேவை செய்யக் கூடியவர்கள் ஆக முடியும். நீங்கள் சேவை செய்யக் கூடியவர்கள் ஆகிவிட்டீர்களா என பாபா வினவும் பொழுது, எவருமே முன்வருவதில்லை. நீங்கள் சேவை செய்வதற்கு வேலையில் இருந்து லீவு எடுக்க வேண்டும். எங்கெல்லாம் உங்களைச் சேவைக்குச் செல்லுமாறு அழைக்கும் பொழுதும், நீங்கள் லீவு எடுத்து அங்கே செல்ல வேண்டும். பந்தனத்தில் இருந்து விடுபட்ட குழந்தைகளால் அத்தகைய சேவையைச் செய்ய முடியும். இந்த அரசாங்கத்தில் இருந்து நீங்கள் சம்பாதிக்கும் வருமானம், அந்த அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் வருமானத்தை விடவும் மிகவும் அதிகமாகும். கடவுள் உங்களுக்குக் கற்பிக்கிறார், அதனூடாக நீங்கள் 21 பிறவிகளுக்கு வைகுந்தத்தின் அதிபதிகள் ஆகுகிறீர்கள். நீங்கள் சம்பாதிக்கும் வருமானம் மிகப் பெரியது! அந்த வருமானத்தில் இருந்து நீங்கள் எதைப் பெறுவீர்கள்? தற்காலிகச் சந்தோஷத்தைப் பெறுவீர்கள். இங்கே, நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள். தாங்கள் இந்தச் சேவையில் மும்முரமாக ஈடுபடுவோம் என உறுதியான நம்பிக்கை உடையவர்கள் கூறுவார்கள். எவ்வாறாயினும், முழுமையான போதை இருக்க வேண்டும். உங்களால் இந்த ஞானத்தை ஏனையோருக்கு விளங்கப்படுத்த முடியுமா என நீங்கள் ஒவ்வொருவரும் சோதித்துப் பாருங்கள். அது மிகவும் இலகுவானது. கலியுக இறுதியில், பில்லியன் கணக்கான மனிதர்கள் இருக்கின்றார்;கள். சத்தியயுகத்திலோ நிச்சயமாக வெகு சிலரே இருப்பார்கள். அதை ஸ்தாபிப்பதற்கு நிச்சயமாகத் தந்தை சங்கமயுகத்தில் வருவார். பழைய உலகம் அழிக்கப்பட வேண்டும். மகாபாரத யுத்தம் மிகவும் பிரபல்யமானது. கடவுள் வந்து சத்திய யுகத்துக்காக இராஜ யோகத்தைக் கற்பித்து, உங்களை அரசர்களுக்கு எல்லாம் அரசர்கள் ஆக்கிய பின்னர் மாத்திரமே இந்த யுத்தம் நடைபெறுகிறது. அவர் உங்களை உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையச் செய்கிறார். அவர் கூறுகிறார்: உங்கள் சரீரங்களையும், உங்கள் சரீர சமயங்கள் அனைத்தையும் துறந்து, என்னை மாத்திரம் நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் தொடர்ந்தும் அழிக்கப்படும். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்வதற்கே முயற்சி தேவைப்படுகிறது. யோகத்தின் அர்த்தத்தை ஒரு மனிதர் கூட அறிந்து கொள்ளவில்லை. நாடகத்தில் பக்தி மார்க்கம் நிச்சயிக்கப்பட்டுள்ளது எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். பக்தி மார்க்கம் தொடர வேண்டும். அது நாடகத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த ஞானம், பக்தி, விருப்பமின்மை என்பவை உள்ளன. இரு விதமான விருப்பமின்மை உள்ளன: ஒன்று எல்லைக்கு உட்பட்ட விருப்பமின்மையும், மற்றையது எல்லையற்ற விருப்பமின்மையும் ஆகும். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் பழைய உலகம் முழுவதையும் மறப்பதற்கு முயற்சி செய்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் இப்பொழுது தூய உலகாகிய, சிவாலயத்திற்குச் செல்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். பிரம்மாகுமாரர்களும், குமாரிகளுமாகிய நீங்கள் அனைவரும் சகோதரர்களும், சகோதரிகளும் ஆவீர்கள். நீங்கள் விகாரப் பார்வையைக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் தமோபிரதானாக இருப்பதால், இன்றைய நாட்களில், அனைவருடைய பார்வையும் குற்றம் உடையதாகி விட்டது. இவ்வுலகம் நரகம் என அழைக்கப்படுகிறது. ஆனால் எவரும் தங்களை ஒரு நரகவாசியாகக் கருதுவதில்லை. அவர்கள் தங்களை அறியாததால், இங்கே சுவர்க்கம், நரகம் ஆகிய இரண்டும் ஒன்றாகவே இருக்கின்றன எனக் கூறுகிறார்கள். தனது மனதில் தோன்றுவதை எல்லாம், ஒவ்வொருவரும் கூறுகிறார்கள். இது சுவர்க்கம் அல்ல. சுவர்க்கத்தில் ஓர் இராச்சியம் இருந்தது. அவர்கள் தர்மவான்களாகவும் நெறிப்படி நடப்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுக்கு அதிகளவு சக்தி இருந்தது. நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை முயற்சி செய்கிறீர்கள். பின்னர் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். உலக அதிபதிகள் ஆகுவதற்கே நீங்கள் இங்கே வருகிறீர்கள். பரமாத்மாவான, சிவன் என அழைக்கப்படுகின்ற, தந்தையான சுவர்க்கக் கடவுளே உங்களுக்குக் கற்பிக்கிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு போதை இருக்க வேண்டும். இந்த ஞானம் முற்றிலும் இலகுவானது. உங்கள் பழைய பழக்கங்கள் அனைத்தையும் குழந்தைகளாகிய நீங்கள் துறந்து விட வேண்டும். பொறாமை என்னும் பழக்கம் பெருமளவு தீங்கை விளைவிக்கிறது. உங்களுடைய அனைத்தும் முரளியில் தங்கியுள்ளது. நீங்கள் அதிலிருந்து இந்த ஞானத்தை எவருக்கும் விளங்கப்படுத்த முடியும். ஆனால், உங்களில் சிலரினுள்ளே பொறாமை இருக்கிறது. அவர்கள் உணர்கிறார்கள்: அவர் ஓர் ஆசிரியர் இல்லை, அவருக்கு என்ன தெரியும்? பின்னர், அவர்கள் மறுநாள் வகுப்புக்குச் செல்வதில்லை. இந்தப் பழைய பழக்கங்களே அவச்சேவையை ஏற்படுத்துகின்றன. இந்த ஞானம் மிகவும் இலகுவானது. குமாரிகளுக்கு உத்தியோகம் போன்றவை இருப்பதில்லை. அந்தக் கல்வி சிறந்ததா அல்லது இந்தக் கல்வி சிறந்ததா எனச் சிலரிடம் கேட்கப்படும் பொழுது, அவர்கள் கூறுகிறார்கள்: ‘இந்தக் கல்வியே மிகவும் சிறந்தது. பாபா, நான் இனிமேலும் அந்தக் கல்வியைக் கற்க மாட்டேன். என் இதயம் அதில் ஈடுபடவில்லை.’ அவளுடைய லௌகீகத் தந்தை இந்த ஞானத்தில் இல்லாவிட்டால், அவள் அடிக்கப்படுகிறாள். சில புதல்விகள் இன்னமும் பலவீனமாகவே இருக்கிறார்கள். இந்தக்கல்வி மூலம் நீங்கள் ஒரு சக்கரவர்த்தினி ஆகுவீர்கள் என விளங்கப்படுத்த வேண்டும். அந்தக் கல்வி மூலம், உங்களால் சதங்களின் பெறுமதி வாய்ந்த ஒரு உத்தியோகத்தையே பார்க்க முடியும். இந்தக் கல்வி, உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்கு உங்களை ஒரு சுவர்க்க அதிபதி ஆகுமாறு செய்கிறது. பிரஜைகளும் சுவர்க்கவாசிகள் ஆகுகிறார்கள். தற்பொழுது, அனைவரும் நரகவாசிகள். நீங்கள் தெய்வீகக் குணங்கள் அனைத்தினாலும் நிறைந்திருந்தீர்கள் எனத் தந்தை இப்பொழுது கூறுகிறார். நீங்கள் இப்பொழுது மிகவும் தமோபிரதான் ஆகிவிட்டீர்கள். நீங்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழே வந்துள்ளீர்கள். “தங்கச் சிட்டுக்குருவி” என அழைக்கப்பட்ட பாரதத்துக்கு, இப்பொழுது கூழாங்கல்லின் பெறுமதியேனும் கிடையாது. பாரதம் 100வீதம் செழிப்பாக இருந்தது. அது இப்பொழுது 100வீதம் ஏழ்மை ஆகியுள்ளது. நீங்கள் தெய்வீகப் பிரபுக்களாக, உலக அதிபதிகளாக இருந்தீர்கள் என அறிவீர்கள். பின்னர், 84 பிறவிகளை எடுப்பதால், நீங்கள் இப்பொழுது கற்களின் பிரபுக்கள் ஆகியுள்ளீர்கள். உண்மையில் அவர்கள் மனிதர்களே. ஆனால் அவர்கள் தெய்வீகப் பிரபுக்கள் எனவும், கற்களின் பிரபுக்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். நீங்கள் பாடலில் கேட்டீர்கள்: உங்களுக்கு உள்ளே பாருங்கள், எந்தளவுக்கு நீங்கள் தகுதி வாய்ந்தவர்கள் ஆகியுள்ளீர்கள் எனப் பாருங்கள். நாரதரின் உதாரணமும் உள்ளது. நாளுக்கு நாள், அனைவரும் தொடர்ந்தும் கீழே வருகிறார்கள். படிப்படியாக வீழ்ந்து விட்ட பின்னர், இப்பொழுது அவர்கள் தங்கள் கழுத்து வரை புதைசேற்றில் சிக்கிக் கொண்டுள்ளார்கள். இப்பொழுது பிராமணர்களாகிய நீங்கள் அனைவரையும் அவர்களுடைய உச்சிக்குடுமியால்; பற்றிப் புதைசேற்றின் வெளியே அவர்களை இழுக்க வேண்டும். சரீரத்தின் வேறெந்தப் பாகமும் நீங்கள் பற்றிப் பிடிக்கக் கூடியதாக இல்லை. ஆகவே, அவர்களின் உச்சிக்குடுமியைப் பிடித்து அவர்களை வெளியே இழுப்பது இலகுவானது. அவர்களைப் புதைசேற்றில் இருந்து அகற்றுவதற்கு, நீங்கள் அவர்களின் உச்சிக்குடுமியைப் பிடிக்க வேண்டும். அவர்கள் புதைசேற்றினுள் ஆழமாகச் சிக்கிக் கொண்டுள்ளார்கள், கேட்கவும் வேண்டாம்! அது பக்தியின் இராச்சியம். நீங்கள் இப்பொழுது கூறுகிறீர்கள்: பாபா, எங்கள் இராச்சியப் பாக்கியத்தைக் கோருவதற்கு, முன்னைய கல்பத்திலும் நாங்கள் உங்களிடம் வந்தோம். மக்கள் இலக்ஷ்மி நாராயணனுக்கு ஆலயங்களைக் கட்டினாலும், அவர்கள் எவ்வாறு உலக அதிபதிகள் ஆகினார்கள் என்பதை அறியார்கள். நீங்கள் இப்பொழுது மிகவும் விவேகிகள் ஆகியுள்ளீர்கள். அவர்கள் எவ்வாறு தங்கள் இராச்சியப் பாக்கியத்தை அடைந்தார்கள் எனவும், பின்னர் எவ்வாறு அவர்கள் 84 பிறவிகளை எடுத்தார்கள் எனவும் நீங்கள் அறிவீர்கள். பிர்லா பல ஆலயங்களைக் கட்டியுள்ளார். ஆனால் அவர்கள் (இலக்ஷ்மியும் நாராயணனும்) பொம்மைகளைப் போன்று ஆக்கப்பட்டார்கள். அவை சிறிய பொம்மைகள், அவர் (பிர்லா) பெரிய பொம்மைகளை (விக்கிரகங்கள்) உருவாக்குகின்றார். அவர்கள் விக்கிரகங்களைச் செய்து, பின்னர் அவற்றை வழிபடுகின்றார்கள். அவர்களின் பணியை அறியாமல் இருப்பது, பொம்மைகளை வழிபடுவதைப் போன்றதாகும். தந்தை உங்களை எந்தளவுக்குச் செல்வந்தர் ஆக்கினார் எனவும், இப்பொழுது நீங்கள் எவ்வாறு ஏழ்மையால் பீடிக்கப்பட்டவர்கள் ஆகியுள்ளீர்கள் எனவும் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். வழிபடத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தவர்கள் இப்பொழுது வழிபடுபவர்கள் ஆகியுள்ளார்கள். அவர் வழிபடத் தகுதிவாய்ந்தவர், வழிபடுபவர் ஆகிய இரண்டாகவும் உள்ளார் எனவும், அவர் துன்பத்தையும் விளைவிக்கிறார், சந்தோஷத்தையும் கொடுக்கிறார் எனவும், அவரே அனைத்தையும் செய்கிறார் எனவும் பக்தர்கள் கடவுளையிட்டுக் கூறுகிறார்கள். அவர்கள் அதன் மூலம் பெரும் போதை உடையவர்கள் ஆகுகிறார்கள். ஆத்மாக்கள் செயலின் தாக்கத்துக்கு அப்பாற்பட்டவர்கள் எனவும், நீங்கள் எதை உண்டு அல்லது அருந்தினாலும், அல்லது நீங்கள் எவ்வளவு களிப்படைந்தாலும் பரவாயில்லை, உங்கள் சரீரமே அதன் தாக்கத்தை அனுபவம் செய்யும் எனவும், கங்கையில் குளிப்பதால், அது தூய்மை ஆக்கப்படும் எனவும், ஆகவே நீங்கள் விரும்பியதை எல்லாம் உண்ண முடியும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள். எவ்வளவு நாகரிகம் உள்ளது எனப் பாருங்கள். சிலர் என்ன சம்பிரதாயத்தை உருவாக்குகிறார்களே, அந்தச் சம்பிரதாயமும் வழக்கங்களும் தொடர்கின்றன. தந்தை விளங்கப்படுத்துகிறார்: இப்பொழுது அந்த நச்சுக்கடலில் இருந்து வெளியேறிச் சிவாலயத்துக்கு வாருங்கள். சத்தியயுகம், பாற்கடல் என அழைக்கப்படுகிறது. இதுவே நச்சுக்கடல். 84 பிறவிகளை எடுக்கும் பொழுது, நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகினீர்கள் எனவும், அதனாலேயே நீங்கள் தூய்மையாக்குபவரான தந்தையை அழைத்தீர்கள் எனவும் நீங்கள் அறிவீர்கள். விளங்கப்படுத்துவதற்கு நீங்கள் படங்களைப் பயன்படுத்தும் பொழுது, மக்களுக்குப் புரிந்து கொள்வது இலகுவாக ஆகுகிறது. ஏணியின் படத்தில் முழு 84 பிறவிகளும் விபரமாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. உங்களால் அத்தகையதோர் இலகுவான விடயத்தையேனும் எவருக்காவது விளங்கப்படுத்த முடியாது போனால், அப்பொழுது பாபா, நீங்கள் முழுமையாகக் கற்கவில்லை என்றும், நீங்கள் முன்னேறவில்லை என்றும் புரிந்து கொள்வார். இந்த ஞானத்தைப் பூச்சிகளுக்கு ரீங்காரமிட்டு, அவர்களையும் உங்களைப் போன்று ஆக்குவதே, பிராமணர்களாகிய உங்களின் கடமை. ஒரு பாம்பு செய்வதைப் போன்று, உங்கள் பழைய தோல்களை நீக்கி விட்டு, புதியதொன்றை எடுப்பதே உங்கள் முயற்சியாகும். உங்கள் சரீரங்கள் பழையவையும், உக்கிப் போனவையும் எனவும் நீங்கள் அறிவீர்கள்; அவை நீக்கப்பட வேண்டும். இந்த உலகம் பழையது, இந்தச் சரீரங்களும் பழையவை. நீங்கள் இப்பொழுது அவற்றை நீக்கிப் புதிய உலகத்துக்குச் செல்ல வேண்டும். உங்கள் இக்கல்வியானது சுவர்க்கமாகிய புதிய உலகத்துக்கு உரியது. இந்தப்பழைய உலகம் அழிக்கப்பட வேண்டும். கடலின் ஓர் அலையில் இருந்து, எங்கும் குழப்பம் ஏற்படும். விநாசம் நடைபெற வேண்டும். இயற்கை அனர்த்தங்களும் எவரையும் விட்டு வைக்காது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுக்கு உள்ளே உள்ள பொறாமை போன்ற பழைய பழக்கங்களை அகற்றிப் பெருமளவு அன்புடன் ஒன்றாக இருங்கள். பொறாமை காரணமாகக் கற்பதை நிறுத்த வேண்டாம்.2. உங்கள் பழைய, உக்கிய சரீரத்தின் விழிப்புணர்வு அனைத்தையும் துறவுங்கள். ஒரு ரீங்காரமிடும் பூச்சியாகி, இந்த ஞானத்தை ஏனையோருக்கு ரீங்காரமிட்டு, அவர்களையும் உங்களைப் போன்று ஆக்கும் சேவையைச் செய்யுங்கள். இந்த ஆன்மீக வியாபாரத்தைச் செய்வதில் மும்முரமானவர்கள் ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
உங்களின் மனதின் பந்தனம் எவற்றில் இருந்தும் விடுபட்டு இருப்பதன் மூலம் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்து, முக்தியை அருள்பவர் ஆகுவீர்களாக.சங்கமயுக பிராமணர்களான உங்களின் சிறப்பியல்பானது, அதீந்திரிய சுகம் என்ற ஊஞ்சலில் ஆடுவதே ஆகும். எவ்வாறாயினும், உங்களின் மனதிலுள்ள எண்ணங்களின் பந்தனம் எதுவும் உங்களை அக சந்தோஷத்தை அல்லது அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்ய அனுமதிக்காது. வீணான எண்ணங்கள், பொறாமை, கவனயீனம் அல்லது சோம்பேறித்தனமான எண்ணம் போன்றவற்றின் ஏதாவது பந்தனத்தால் கட்டுப்படுவதும் உங்களின் மனதின் பந்தனமே ஆகும். அகங்காரத்தினால், இத்தகைய ஆத்மாக்கள் எப்போதும் மற்றவர்களைக் குறைகூறுவதைப் பற்றியே தொடர்ந்தும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் இனங்காணும் சக்தி முடிவடைகிறது. அதனால் அவர்கள் அந்தச் சூட்சும பந்தனங்களில் இருந்து விடுபட வேண்டி உள்ளது. அப்போது மட்டுமே அவர்களால் முக்தியை அருள்பவர்கள் ஆகமுடியும்.
சுலோகம்:
துன்பத்தின் எந்தவிதமான அலைகளும் உங்களிடம் வர முடியாத அளவுக்கு உங்களின் சந்தோஷச் சுரங்கத்தை நிரப்பி வைத்திருங்கள்.அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியை சேமித்து மேன்மையான சேவைக்கு கருவியாகுங்கள்.
மேன்மையான எண்ணத்தின் விதை, பலனைத் தருவதற்கு ஒரேயொரு இலகுவான வழிமுறையே உள்ளது. விதையானவரான தந்தையுடன் சதா இணைந்து இருப்பதன் மூலம் அந்த விதையை ஒவ்வொரு கணமும் சக்தியால் நிரப்புவதே அந்த வழிமுறை. உங்களின் விதை ரூபத்தில், உங்களின் எண்ணங்கள் என்ற விதைகள் இலகுவாகவும் இயல்பாகவும் தொடர்ந்து வளர்ந்து பழங்களைத் தரும். உங்களின் எண்ணங்களின் சக்தியும் சேமிக்கப்படும்.