04.08.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையின் வலது கரம் ஆகுவதற்கு, அனைத்து விடயங்களிலும் உண்மையானவர்களாக ஆகுங்கள். எப்பொழுதும் மேன்மையான செயல்களைப் புரியுங்கள்.
கேள்வி:
சேவையில் பல தடைகளை விளைவிக்கின்ற சம்ஸ்காரம் எது?பதில்:
ஆத்மாக்களினது சுபாவத்தினதும், உணர்வுகளினதும் காரணமாக, சேவையில் முரண்பாடான சம்ஸ்காரங்களும், பல தடைகளும் விளைவிக்கப்படுகின்றன. அபிப்பிராய பேதம் காரணமாக, பெருமளவு சேதம் விளைவிக்கப்படுகிறது. கோபம் எனும் தீய ஆவி இருக்குமாயின், ஒருவருக்குக் கடவுளைக் கூட எதிர்ப்பதற்கு அதிக நேரம் எடுப்பதில்லை. இதனாலேயே பாபா கூறுகிறார்: இனிய குழந்தைகளே, உங்களுக்கு அத்தகைய சம்ஸ்காரம் இருப்பின், அதனை அகற்றுங்கள்.பாடல்:
நான் என்னுடைய பாக்கியத்தை விழித்தெழச் செய்தே வந்துள்ளேன்.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகள் பாடலைக் கேட்டார்கள். ஆன்மீகக் குழந்தைகளான நீங்கள், அதாவது, பரமாத்மாவாகிய, சிவபாபாவின் குழந்தைகளாகிய, ஆத்மாக்கள் சரீரத்தின் பௌதீக அங்கங்களினூடாகப் பாடலைக் கேட்டீர்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகவேண்டும். இதற்குப் பெருமளவு முயற்சி தேவையாகும். மீண்டும் மீண்டும் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். இம்முயற்சி மறைமுகமானது. தந்தை மறைமுகமானவர், அவர் உங்களை மறைமுகமான முயற்சியைச் செய்ய வைக்கிறார். தந்தையே வந்து கூறுகிறார்: குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் 5000 வருடங்களுக்கு முன்னர் செய்ததைப் போன்றே, மீண்டும் ஒருமுறை சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள் என்பதையும், நீங்கள் இப்பொழுது தமோபிரதான் ஆகிவிட்டீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் நிச்சயமாகச் சதோபிரதான் ஆகவேண்டும். பாடலில், கூறப்பட்டுள்ளது: ஒரு சர்வசக்திவான் தந்தை மாத்திரமே நீங்கள் இழந்த பாக்கியத்தை அடைவதற்கு, மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யத் தூண்டுகிறார். ஏனெனில் அவர் அனைவரையும் தூய்மையாக்குபவர் ஆவார். தந்தை குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். ஓ ஆன்மீகக் குழந்தைகளே: நீங்கள் இப்பொழுது உங்கள் பாக்கியத்தை உருவாக்குவதற்கு வந்துள்ளீர்கள். அந்த மாணவர்கள் தங்கள் பாக்கியத்தை உருவாக்குவதற்கே பாடசாலைக்குச் செல்கிறார்கள். அவர்கள் சிறுவர்களே. நீங்கள் சிறுகுழந்தைகள் அல்லர். நீங்கள் இப்பொழுது வளர்ந்து விட்டதுடன், முதிர்ச்சி அடைந்தும் உள்ளீர்கள். நீங்கள் உங்களுடைய பாக்கியத்தை உருவாக்குகிறீர்கள். ஆம், சில முதியவர்கள் உள்ளார்கள். நீங்கள் முதுமை அடையும் பொழுது கற்பதை விட, நீங்கள் இளமையாக இருக்கும் பொழுது கற்பதே மேலானதாகும். இளமையாக இருப்பவர்களின் புத்தியே சிறப்பானதாகும். இது அனைவருக்கும் மிகவும் இலகுவானது. உங்கள் சரீரம் பெரிதாக வளர்ச்சியடைந்து விட்டது. இவர் ஒரு சிறு குழந்தை, இவரால் அதிகளவு புரிந்துகொள்ள இயலாதிருக்கும், ஏனெனில் அவருடைய அங்கங்;கள் இன்னமும் சிறிதாக உள்ளன. உங்களால் அவதூறையும் புகழ்ச்சியையும், சந்தோஷத்தையும் துன்பம் போன்றவற்றையும் புரிந்துகொள்ள முடியும். ஆத்மா ஒரு புள்ளி ஆவார். அந்த சரீரம் தொடர்ந்தும் வளர்கிறது. ஆத்மா எப்பொழுதும் அதே அளவிலேயே இருக்கிறார். அது ஒருபொழுதும் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ வளர்ச்சி அடைவதில்லை. தந்தை இப்பொழுது உங்கள் புத்திக்கு வெகுமதியாக கஸ்தூரியைக் (ஒருவகை நறுமணம்) கொடுக்கிறார், ஏனெனில் புத்தியானது முழுமையாகவே தமோபிரதான் ஆகிவிட்டது. அவை இப்பொழுது சுத்தம் ஆகுகின்றன. உங்களுக்கு இப்படங்களுடன் விளங்கப்படுத்துவது மிகவும் பயனுள்ளதாகும். பக்திமார்க்கத்து மக்கள் தேவர்களின் சிலைகளுக்கு முன்னால் சென்று தலை வணங்கி, அவற்றைப் பூஜிக்கிறார்கள். முன்னர், நீங்களும் அங்கு குருட்டு நம்பிக்கையுடன் செல்வது வழக்கம். நீங்கள் சிவாலயத்துக்குச் செல்வது வழக்கம், அவர் சிவபாபாவாக இருந்தார் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. நீங்கள் நிச்சயமாக பாபாவிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெற்றீர்கள். இதனாலேயே அவருடைய புகழ் பாடப்பட்டுள்ளது. ஒருவர் தன்னுடைய ஆயுட்காலத்தில் ஏதாவது மிகவும் சிறந்தவற்றைச் செய்திருப்பின், அவர் புகழப்படுகிறார். நீங்கள் சிவபாபாவின் ஒரு முத்திரையை உருவாக்க வேண்டும். கீதையை உரைப்பவராகிய, சிவபாபாவின் முத்திரை மிகவும் இலகுவாக உருவாக்கப்பட முடியும். அந்தத்தந்தை அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கிறார். தந்தை கூறுகிறார்: நான் உங்களைச் சந்தோஷதாமத்தின் அதிபதிகளாக ஆக்குகிறேன். தாங்கள் சரீரமற்றவராகிய, சிவபாபாவிடம் வந்துவிட்டார்கள் என்பதையும், அவர் சரீரமுடைய இவரில் பிரவேசித்து விட்டார் என்பதையும் முதிய தாய்மார்களாலும் புரிந்துகொள்ள முடியும். அசரீரியானவர் சரீரமற்றவர் எனக் கூறப்படுகிறார். நீங்கள் இந்தச் சரீரத்தைத் தற்காலிகமாகத் தத்தெடுத்துள்ள சிவபாபாவிடம் செல்கிறீர்கள் என்பது உங்கள் புத்திகளில் உள்ளது. அவர் தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்கி, அவர்களுக்கு முக்தியையும் ஜீவன்முக்தியையும் அருள்கிறார். அதாவது, அவர் அவர்களை அமைதிதாம வாசிகளாகவும், சந்தோஷதாம வாசிகளாகவும் ஆக்குகிறார். மக்கள் அமைதியை அடைவதற்கு மிகவும் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். அவர்கள் கடவுளைக் கண்டால், அவர்கள் அமைதியைப் பெறுவார்கள். அவர்கள் சந்தோஷத்துக்காக எம்முயற்சியையும் செய்வதில்லை. அவர்கள் தந்தையின் வீட்டுக்குச் சென்று தந்தையைக் காண விரும்புகிறார்கள். இந்நேரத்தில் அனைவரும் முக்தியை வேண்டுகிறார்கள். பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே ஜீவன்முக்தியைப் பெறுகிறீர்கள். ஏனைய அனைவரும் முக்தியை வேண்டுகிறார்கள். உங்களுக்கு ஜீவன்முக்திக்கான பாதையை காண்பிக்கின்ற எவரும் கிடையாது. மக்கள் சந்நியாசிகளிடம் சென்று அவர்களிடம் அமைதியை வேண்டுகின்றார்கள். அவர்கள் வினவுகிறார்கள்: நாங்கள் எவ்வாறு மன அமைதியைக் கொண்டிருக்க முடியும்? அவர்கள் காண்பிக்கின்ற பாதைகள் அனைத்தும் முக்திக்குச் செல்வதற்கானது. அநாதியான முக்தி (மோட்சம்) என்றால் என்ன என்பது அவர்களின் புத்திகளில் புகுவதில்லை. அவர்கள் விரக்தி அடைவதனால் “முக்திக்குள் செல்வதே மேலானது” எனக் கூறுகிறார்கள். உண்மையில், முக்திதாமமே ஆத்மாக்களின் வசிப்பிடம் ஆகும். அந்தப் புதிய உலகத்துக்கான எங்கள் இராச்சியப் பாக்கியத்தை நாங்கள் கோருகிறோம் என்பதை அனைத்து நிலையங்களிலுமுள்ள குழந்தைகள் அனைவரும் அறிவார்கள். பாபா எங்களுக்குப் அந்தப் புதிய உலகின் இராச்சியத்தைக் கொடுக்கிறார். அவர் அதனை எங்கே கொடுப்பார்? அவர் அதனைப் பழைய உலகிலா அல்லது புதிய உலகிலா கொடுப்பார்? தந்தை கூறுகிறார்: நான் சங்கமயுகத்தில் வருகிறேன். நான் சத்தியயுகத்திலோ அல்லது கலியுகத்திலோ வருவதில்லை. நான் இரு யுகங்களுக்கு இடையில் வருகிறேன். தந்தை அனைவருக்கும் சத்கதியை அருள்கிறார். அவர் எவரையும் ஒரு சீரழிந்த நிலையில் விட்டுவிடுவதில்லை. சத்கதி, சீரழிவு ஆகிய இரண்டும் ஒரேசமயத்தில் இருக்க முடியாது. இப்பழைய உலகம் அழிக்கப்பட உள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இதனாலேயே நீங்கள் அதன் மீது விருப்பத்தைக் கொண்டிருக்கக் கூடாது. நாங்கள் இப்பொழுது உண்மையில் சங்கமயுகத்தில் இருக்கிறோம் எனப் புத்தி கூறுகிறது. இப்பழைய உலகம் மாற்றமடைய உள்ளது. தந்தை இப்பொழுது வந்துவிட்டார், அவர் கூறுகிறார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமயுகத்தில் உங்களைத் துன்பத்தில் இருந்து விடுவிப்பதற்கும், உங்களை ஹரியின் (துன்பத்தை அகற்றுபவர்) வாசலுக்கு அழைத்துச் செல்வதற்கும் வருகிறேன். இது ஒரு ஞான விடயம் ஆகும். ஹரித்துவார் ஸ்ரீகிருஷ்ணருக்கான வாசலாகும், அல்லது கிருஷ்ணரின் தாமம் ஆகும். நல்லது, பின்னர் அங்கு இலட்சுமணனின் ஊஞ்சலும் உள்ளது. முதலில், நீங்கள் ஹரித்துவாருக்கு செல்கிறீர்கள். சத்தியயுகமே ஹரித்துவார் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் அவர்கள் இராமரையும், இலட்சுமணனையும் காண்பிக்கிறார்கள். அவ்விடயங்கள் உண்மையில் இருப்பதில்லை. அவை மக்கள் உருவாக்கியுள்ள கதைகளே ஆகும். இராமருக்கு எத்தனை சகோதர்கள் இருப்பதாக அவர்கள் காண்பித்துள்ளார்கள்? அவருக்கு நான்கு சகோதரர்கள் இருக்க முடியாது. இங்கு மாத்திரமே ஒருவருக்கு நான்கு அல்லது எட்டு சகோதரர்கள் இருப்பார்கள். ஒருபுறம், கடவுளின் குழந்தைகளும், மறுபுறம் அசுரர்களின் குழந்தைகளும் உள்ளார்கள். சிவபாபா பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசித்துள்ளார் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். சிவன், பாபா ஆவார், பிரம்மா, தாதா ஆவார். இவரே மனித குலத்தின் தந்தை (பிரஜாபிதா) ஆவார். அவரோ ஆத்மாக்களின் தந்தை, அவர் அநாதியானவர் ஆவார். இந்நேரத்தில் அவர் பிராமணர்களைப் படைக்கிறார். சிவபாபா சாலிகிராம்களை உருவாக்குகிறார் என்பதல்ல, இல்லை. சாலிகிராம்கள் அழிவற்றவர்கள் ஆவார்கள். தந்தை வந்து உங்களைத் தூய்மை ஆக்குகிறார். ஓர் ஆத்மா தூய்மையாகும்வரை, எவ்வாறு அவருடைய சரீரம் தூய்மையாக முடியும்? ஆத்மாக்களாகிய நாங்கள் தூய்மையாக இருந்தபொழுது, நாங்கள் சதோபிரதானாக இருந்தோம். ஆத்மாக்களாகிய நாங்கள் இப்பொழுது தூய்மையற்றும், தமோபிரதானாகவும் இருக்கிறோம். நாங்கள் எவ்வாறு மீண்டும் ஒருமுறை சதோபிரதானாக முடியும்? இது மிகவும் இலகுவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டியதொரு விடயமாகும். நீங்கள் தூய்மை அற்றவர்களாகவும் தமோபிரதானாகவும் ஆகிவிட்டீர்கள், ஏனெனில் உங்களில் கலப்படம் கலக்கப்பட்டுள்ளது. நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை சதோபிரதான் ஆகவேண்டும். நீங்கள் அனைவரும் உங்கள் கணக்குகளைத் தீர்த்து, அமைதி தாமத்துக்கும் சந்தோஷ தாமத்துக்கும் செல்வீர்கள். ஆத்மாக்கள் எவ்வாறு அசரீரி தாமத்திலிருந்து கீழே வருகிறார்கள்? அதன் ஞாபகார்த்தம் என்னவென்றால், கிறிஸ்தவர்கள் ஒரு மரத்தில் விளக்குகளைத் தொங்கவிட்டுக் கொண்டாடுவதே ஆகும். வேறுபட்ட கிளைகள் அனைத்தும் ஏனைய சமயங்களே என்பதை நீங்கள் அறிவீர்கள். எவ்வாறு ஆத்மாக்கள் வரிசைக்கிரமமாக மேலிருந்து கீழே வருகிறார்கள் என்னும் ஞானத்தை நீங்கள் இப்பொழுது பெற்று விட்டீர்கள். அமைதிதாமமே, ஆத்மாக்களாகிய எங்களின் வீடாகும். இப்பொழுது சங்கமயுகமாகும். ஆத்மாக்கள் அனைவரும் அங்கிருந்து கீழே வந்து, பின்னர் அனைவரும் வீடு திரும்புவார்கள். பிரளயம் நடைபெறுவதில்லை. உங்கள் பாக்கியத்தை உருவாக்குவதற்கும், உங்கள் சுயராச்சியத்தை மீண்டும் ஒருமுறை கோருவதற்கும் நீங்கள் பாபாவிடம் வந்துள்ளீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது வெறுமனே கூற வேண்டும் என்பதற்காகக் கூறப்படவில்லை. நினைவு செய்வதனால், நாங்கள் எங்கள் ஆஸ்தியைப் பெறுவோம். தந்தை கூறுகிறார்: உங்கள் சரீர நண்பர்கள், உறவினர்கள் உட்பட, உங்கள் சரீரத்தை மறந்து விடுங்கள். சரீரமுடையவரும் சரீரமற்றவரும் உள்ளார்கள். சரீரமற்றவரைப் பார்க்க முடியாது. இவ்விடயங்கள் மிகவும் சூட்சுமமானவை. ஆத்மா மிகவும் சின்னஞ் சிறியவர்! அவர் மீண்டும் மீண்டும் தனது பாகத்தை நடிக்க வேண்டும். இவ்விடயங்கள் வேறு எவருடைய புத்தியிலும் இருப்பதில்லை. எல்லாவற்றுக்கும் முதலில், தாங்கள் ஆத்மாக்கள் என்பதையும், அவர் தங்களுடைய தந்தை என்பதையும் மக்களைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள். அவரே “ஓ தூய்மையாக்குபவரே! ஓ கடவுளே!” என அவர்கள் கூறும்பொழுது நினைவு செய்யப்படுபவர் ஆவார். வேறு எங்கும் செல்ல வேண்டிய தேவையில்லை. ஆகவே, அவர்கள் ஒருவரை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். அவர்கள் கடவுளை நினைவு செய்வதனால், அவர்கள் நிச்சயமாக அவரிடமிருந்து ஏதோவொன்றைப் பெறுவார்கள். ஆகவே, வாசல் தோறும் தடுமாறித் திரிய வேண்டிய தேவை என்ன? கடவுள் பரந்தாமத்திலிருந்து வர வேண்டும். நாங்கள் தூய்மை அற்றவர்கள் என்னும் காரணத்தினால், எங்களால் அங்கு செல்ல முடியாது. தூய்மை அற்றவர்களால் அங்கு செல்ல முடியாது. பக்திமார்க்கப் பாதையின் பாகம் எவ்வாறு அற்புதமானது என நீங்கள் இப்பொழுது வியப்படைகிறீர்கள். மக்கள் ஒரு கடவுளையே நினைவுசெய்து கூறுகிறார்கள்: ஓ ஈஸ்வரரே! ஓ பரமதந்தையே! ஓ தந்தையாகிய கடவுளே! அவர் ஒரேயொருவர் ஆதலால், நீங்கள் ஏன் எங்கும் தடுமாறித் திரிய வேண்டும்? அவர் மேலேயே வசிக்கிறார். எவ்வாறாயினும், இவை அனைத்தும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நாடகத்துக்கேற்ப, அவர்கள் அனைவரும் பக்தி செய்கிறார்கள். அவர்கள் முற்றாகவே எந்தப் புரிந்துணர்வும் இல்லாமல், பக்தி செய்கிறார்கள். நீங்கள் இப்பொழுது ஓர் எல்லையற்ற வழியில் விவேகிகள் ஆகுகிறீர்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுபவர்கள் மாத்திரமே விவேகிகள் ஆகுகிறார்கள். அவர்களால் மறைந்திருக்க முடியாது. அவர்கள் எப்பொழுதும் மேன்மையான பணிகளைச் செய்கிறார்கள். தந்தை கூறுகிறார்: நானே துன்பத்தை அகற்றுபவரும், சந்தோஷத்தை அருள்பவரும் ஆதலால், குழந்தைகளாகிய நீங்களும் அதேபோன்று இனிமையானவர்கள் ஆகவேண்டும். நீங்கள் தந்தையின் வலது கரங்கள் ஆகவேண்டும். வலது கரங்கள் ஆகுகின்ற அத்தகைய குழந்தைகளை மாத்திரமே தந்தை நேசிக்கிறார். உங்கள் இடது கரத்தின் மூலம் உங்களால் அதிகளவைச் செய்ய முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏனெனில் வலது கரம் மாத்திரமே நியாயமானவற்றைச் செய்கிறது. இதனாலேயே இவ்வலது கரம் ஒரு மங்களகரமான பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது. வழிபாடும் எப்பொழுதும் வலது கரத்தின் மூலமே செய்யப்படுகிறது. தந்தை கூறுகிறார்: அனைத்து விடயங்களிலும் உண்மை உள்ளவர்கள் ஆகுங்கள். நீங்கள் தந்தையைக் கண்டு விட்டதனால், அந்தச் சந்தோஷம் இருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள், உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை உங்களுடைய இலக்குக்கு இட்டுச் செல்லும். உங்களைச் சத்கதிக்குள் அழைத்துச் செல்வதற்கு ஒரு வழிகாட்டல் மாத்திரமே உள்ளது. கடவுள் மாத்திரமே சத்கதிக்கான அவருடைய வழிமுறைகளை அறிவார் என நினைவு கூரப்பட்டுள்ளது. அவர் மாத்திரமே தூய்மையாக்குபவர் ஆவார். தான் மனிதர்களைத் தூய்மையாக்குவார் என்பதையும், அவர்களைச் சீரழிவிலிருந்து சத்கதிக்கு அழைத்துச் செல்வார் என்பதையும் அவர் அறிவார். அவர்கள் பக்திமார்க்கத்தில் அதிகளவு முயற்சியைச் செய்கிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் சத்கதியைப் பெறுவதில்லை. அவர்கள் எப்பலனையும் பெறுவதில்லை. ஒரு தந்தை மாத்திரமே சத்கதியை அருள்கிறார். பக்திமார்க்கத்தில் பக்தர்கள் யாரையெல்லாம் அன்புடன் வழிபடுகிறார்களோ, நானே அவர்களுக்கு அதற்கான பலனை அருள்பவர் ஆவேன். அதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் முயற்சிகளுக்கேற்ப இயல்பாகவே அதனைப் பெறுகிறார்கள். இப்பொழுது, குழந்தைகளாகிய நீங்களும் உங்கள் சொந்த முயற்சிகளினூடாகத் தூய்மையாக வேண்டும். தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான தந்தையை நினைவு செய்யுங்கள்! அவர் மாத்திரமே சர்வசக்திவான் ஆவார். அவர் எங்களை மிகவும் சிறந்தவர்கள் ஆக்குகிறார்! நீங்கள் இப்பொழுது அனைத்தையும் அறிவீர்கள், அத்துடன் நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியையும் கோருகிறீர்கள். உங்கள் புத்தியில் படைப்பவரினதும், படைப்பினதும் ஞானம் உள்ளது. முன்னர் உங்களுக்கு இந்த ஞானம் இருக்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். யாகம் வளர்ப்பது, தபஸ்யா செய்வது, சமயநூல்களைச் செவிமடுப்பது போன்றவை அனைத்தும் சமயநூல்களின் ஞானமாகும். அது பக்தி என்று அழைக்கப்படுகிறது. அதில் இலக்கோ அல்லது குறிக்கோளோ இருப்பதில்லை. ஒரு கல்வியில் இலக்கும் குறிக்கோளும் உள்ளன. ஏதாவதொரு வகையான அறிவு உள்ளது. எவ்வாறு தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆகுவது என்னும் ஞானத்தைத் தூய்மையாக்குபவராகிய தந்தை எங்களுக்குக் கொடுத்தார். உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இந்த ஞானத்தையும், எவ்வாறு சக்கரம் சுழல்கிறது என்னும் ஞானத்தையும் தந்தை எங்களுக்குக் கொடுத்தார். இதில் நாங்கள் அனைவரும் நடிகர்கள் ஆவோம். இந்நாடகம் அநாதியாகவே உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் நிச்சயமாக இந்த எல்லையற்ற ஞானத்தைக் கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது காரிருளில் இருந்து வெளியேறிப் பேரொளிக்குள் செல்கிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது தேவர்கள் ஆகுகிறீர்கள். தேவ தர்மமே ஆதி அநாதியான தர்மம் என்பதையும், அது இப்பொழுது இந்து சமயம் என்று அழைக்கப்படுகிறது என்பதையும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். படிப்படியாக, அவர்களும் இதனைப் புரிந்து கொள்வார்கள். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் உஷாராக வேண்டும். இதற்குப் பெருமளவு குழந்தைகள் தேவைப்படுகிறார்கள். நீங்கள் டெல்கியில், ஒரு கருத்தரங்கை நடாத்த வேண்டும். டெல்கியும் தேவதைகளின் பூமி என்று அழைக்கப்படுகிறது. அது அதே யமுனை நதிக்கரையில் அமைந்திருந்தது. டெல்கியே தலைநகரம் ஆகும். அது பலரால் ஆட்சிசெய்யப்பட்டு வருகிறது. அது தேவர்களின் தலைநகரமாகவும் இருந்தது. டெல்கியில் மிகப் பெரிய கருத்தரங்கு நடாத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும், மாயை நீங்கள் இதனைச் செய்ய அனுமதிக்காத அத்தகையவள் ஆவாள். அவள் பல தடைகளை உருவாக்குகிறாள். இந்நாட்களில், பெருமளவுக்கு முரண்பாடான சுபாவங்களும் உள்ளன. குழந்தைகள் ஒருவருடனொருவர் ஒற்றுமையுடன் சேவைசெய்ய வேண்டும். மக்கள் ஒத்திசைவாக இல்லாத பொழுது, அவர்களுடைய இராச்சியம் இழக்கப்படுகிறது. இரு கட்சிகள் உள்ளபொழுது, அவர்கள் ஜனாதிபதியையே பதவியில் இருந்து கவிழ்த்து விடுகிறார்கள். அபிப்பிராய பேதம் பெருமளவு சேதத்தை விளைவிக்கிறது. அப்பொழுது அவர்களுக்குக் கடவுளை எதிர்ப்பதற்குக் கூட அதிக காலம் எடுப்பதில்லை. பெருமளவு சேதம் விளைவிக்கப்படுகிறது. கோபம் என்னும் தீய ஆவி வரும்பொழுது, கேட்கவும் வேண்டாம்! இதனாலேயே பாபா கூறுகிறார்: வெல்லமும் அறியும், வெல்லப்பையும் அறியும். தந்தை, குழந்தைகளாகிய உங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இந்த ஞானத்தைக் கூறுகிறார். இதனைக் கிரகிப்பதோ அல்லது இல்லையோ, அது உங்களைப் பொறுத்தது. அது உங்கள் முயற்சியில் தங்கியுள்ளது. உங்களில் எவரையாவது பாபா ஆசீர்வதிப்பார் அல்லது உங்களுக்காகக் கருணை கொள்வார் என்றில்லை. இங்கு கருணையை வேண்டுவதற்கான கேள்வியே கிடையாது. தந்தை கூறுகிறார்: நான் தூண்டுதலினூடாக இந்த ஞானத்தையும், யோகத்தையும் கற்பிக்க வேண்டுமாயின், நான் ஏன் இந்தத் தீய உலகத்தினுள் வர வேண்டும்? தூண்டுதல், ஆசீர்வாதம் போன்றவை பக்திமார்க்கத்தின் வார்த்தைகள் ஆகும். இங்கு, நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். தூண்டுதலுக்கான கேள்விக்கே இடமில்லை. நீங்கள் ஒரேநேரத்தில் மூன்று இயந்திரங்களைப் பெற்றுள்ளீர்கள். அங்கு, தந்தை ஆசிரியரில் இருந்து வேறுபட்டவர், பின்னர் உங்களுக்கு ஒரு குருவும் இருப்பார். இங்கு, மூவரும் ஒன்றாக இருக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் உங்களைப் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகிறேன். பின்னர் நீங்கள் பூஜிப்பவர்கள் ஆகுகிறீர்கள். இது மிகவும் சாதுரியமாக விளங்கப்படுத்தப்பட வேண்டும். யாராவது ஒருவர் மயக்கம் அடையக் கூடியதாக அது இருக்கக்கூடாது. இரு தந்தையர்களைப் பற்றி விளங்கப்படுத்துவதே முதலாவதும் பிரதானமானதுமான விடயமாகும். கடவுளே தந்தை ஆவார். இங்கு சிவஜெயந்தியாகிய, அவருடைய பிறந்ததினம் கொண்டாடப்படுகிறது. அவர் நிச்சயமாக எங்களைச் சுவர்க்க அதிபதிகளாக ஆக்கியிருக்க வேண்டும். பாரதத்தில் மாத்திரமே சுவர்க்கம் இருந்தது. நரகத்தின் விநாசத்துக்காக இப்பொழுது மகாபாரத யுத்தம் நேர்முன்னிலையில் உள்ளது. தந்தை நிச்சயமாகவே புதிய உலகின் ஸ்தாபனையை மேற்கொள்கிறார். தந்தையின் ஸ்ரீமத்துக்கேற்பவே, நாங்கள் கூறுகிறோம்: நாங்கள் நிச்சயமாகப் பாரதத்தைச் சுவர்க்கமாக ஆக்குவோம். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவராக இருப்பதைப் போன்று, தந்தைக்குச் சமமானவர்கள் ஆகுங்கள். மிகவும் இனிமையானவர்கள் ஆகுங்கள். சதா உண்மையான செயல்களைச் செய்து, ஒரு வலது கரம் ஆகுங்கள்.2. ஒருபொழுதும் அபிப்பிராய பேதம் இருப்பதை அனுமதிக்காதீர்கள். எவருடைய சுபாவத்திலாவது சிக்கிக் கொள்வதால், ஒருவரையொருவர் எதிர்க்காதீர்கள். கோபம் என்னும் தீய ஆவியை அகற்றுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களை உணர்ந்தவராக இருப்பதன் மூலமும் உங்களின் ஒவ்வொரு செயலையும் ஓர் ஒழுக்கமாக ஆக்குவதன் மூலமும் அதிகாரத்தின் சொரூபம் ஆகுவீர்களாக.பாபா பௌதீக ரூபத்தில் தன்னை உணர்ந்தவராக இருந்ததன் மூலம் செய்த செயல் எதுவாக இருந்தாலும் அது ஒவ்வொன்றும் பிராமணக் குடும்பத்திற்கு ஓர் ஒழுக்கமாக ஆகியது. அந்தப் போதையை அவர் கொண்டிருந்ததன் மூலம் சாகார் ரூபத்தில் ஏதாவது தவறு நடந்தாலும் கடவுள் அதைச் சரியாக்குவார் என்று அவரால் அதிகாரத்துடன் சொல்ல முடிந்தது. தனது ரூபத்தை உணர்ந்தவராக இருப்பதன் மூலம் எந்தவொரு செயலும் தவறாகப் போகாது என்ற போதையை அவர் கொண்டிருந்தார். குழந்தைகளான நீங்கள் உங்களின் சொந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கும்போது, உங்களுக்குள் என்ன எண்ணம் தோன்றினாலும் நீங்கள் என்ன வார்த்தைகளைப் பேசினாலும் அல்லது என்ன செயல்களைச் செய்தாலும் அவை ஒழுக்கமாக ஆகிவிடும்.
சுலோகம்:
உங்களின் தூய்மையின் தூணைப் பலமானதாக ஆக்குங்கள், அந்தத் தூண் ஒரு வெளிச்சவீட்டைப் போல் செயல்படும்.அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.
உங்களின் புத்தியானது தூய்மையற்ற எண்ணங்களால் அல்லது பழைய சம்ஸ்காரங்களால் சிறிதளவேனும் தொடப்படுமாயின், உங்களை சம்பூரணமான விஷ்ணு என்று அழைக்க முடியாது. யாராவது ஏதாவது பிழை செய்வதை நீங்கள் பார்க்கும்போது, அவ்வாறு பார்ப்பதே உங்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்துமாயின், ஒரு கணக்கு உருவாக்கப்படுகிறது. அதேபோல், சிந்தியுங்கள்: உங்களின் புத்தியைப் பழைய சம்ஸ்காரங்கள் அல்லது தூய்மையற்ற எண்ணங்கள் சிறிதளவேனும் தொடுமாயின், உங்களைச் சம்பூரணமான விஷ்ணு அல்லது சம்பூரணமாகத் தூய்மையானவர் என்று அழைக்க முடியாது.