04.10.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக அன்புடன் தந்தையை நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக ஆசீர்வாதங்களைப் பெறுவதுடன் உங்கள் பாவங்களும் தொடர்ந்து அழிக்கப்படும்.

பாடல்:
எந்தத் தர்மத்தில் நிலைத்திருப்பதற்குத் தந்தை உங்களுக்கு வழிகாட்டுகின்றார்?

பதில்:
பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, ஓர் ரூபத்தைக் கொண்டிராத உங்கள் தர்மத்தில் நிலைத்திருங்கள்; சரீர தர்மத்தில் நிலைத்திருக்காதீர்கள். தந்தை சரீரமற்றவராக இருப்பதைப் போன்று குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் சரீரமற்றவர்களாக இருந்து, பின்னர் இங்கே ஒரு சரீரத்தினுள் பிரவேசிக்கின்றீர்கள். தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: குழந்தைகளே, சரீரமற்றவராகுங்கள்; உங்களைச் சுயத்தின் ஆதி தர்மத்தில் ஸ்தாபியுங்கள். சரீர உணர்வுள்ளவர் ஆகாதீர்கள்.

கேள்வி:
நாடகத்திற்கேற்ப, கடவுள் எதனைச் செய்வதற்குக் கட்டுப்பட்டுள்ளார்?

பதில்:
நாடகத்திற்கேற்ப, கடவுள் குழந்தைகளைத் தூய்மையாக்குவதற்குக் கட்டுப்பட்டுள்ளார். அவர் அதி மங்களகரமான சங்கமயுகத்தில் வரவேண்டியுள்ளது.

ஓம் சாந்தி.
தந்தை இங்கிருந்து ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார்: “ஓம் சாந்தி” எனக் கூறப்படும்பொழுது ஆத்மாக்களுக்கு அவர்களின் ஆதி தர்மத்தின் அறிமுகம் கொடுக்கப்படுகின்றது. எனவே நிச்சயமாகத் தந்தையும் இயல்பாகவே நினைவுகூரப்படுகின்றார். ஏனெனில் மனிதர்கள் அனைவரும் நிச்சயமாகக் கடவுளை நினைவுசெய்கின்றார்கள். ஆனால் அவர்கள் கடவுளின் அறிமுகத்தைக் கொண்டிருப்பதில்லை. கடவுள் தனது சொந்த அறிமுகத்தையும், ஆத்மாக்களின் அறிமுகத்தையும் கொடுப்பதற்காகவே வருகின்றார். கடவுள் மாத்திரமே தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகின்றார். நாடகத்திற்கேற்ப, கடவுள் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதில் கட்டுண்டுள்ளார். அவர் அதி மங்களகரமான சங்கமயுகத்தில் வரவேண்டியுள்ளது. அவர் சங்கமயுகத்தின் விளக்கத்தையும் கொடுக்கின்றார். தந்தை பழைய உலகிற்கும், புதிய உலகிற்கும் இடையில் மாத்திரமே வருகின்றார். பழைய உலகம் மரண பூமி என்றும், புதிய உலகம் அமரத்துவ பூமி என்றும் அழைக்கப்படுகின்றது. மரண பூமியில் ஆயுட்காலம் குறுகியதாக இருப்பதுடன், அகால மரணங்களும் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அங்கு அவர்கள் தூய்மையானவர்கள் என்பதால் அது அகால மரணம் ஏற்படாத, அமரத்துவ பூமியாகும். தூய்மையின்மையால் அவர்கள் கலப்படமானவர்கள் ஆகுவதுடன், அவர்களின் ஆயுட்காலமும் குறைவடைந்து, அவர்களின் சக்தியும் குறைவடைகின்றது. சத்தியயுகத்தில் அவர்கள் தூய்மையானவர்கள் என்பதால் கலப்படமற்றவர்களாகவும், மகத்தான சக்தி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் சக்தியின்றி எவ்வாறு இராச்சியத்தைப் பெற்றார்கள்? அவர்கள் நிச்சயமாகத் தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்க வேண்டும். தந்தை சர்வசக்திவான். ஆனால் எவ்வாறு அவர்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றார்கள்? தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள்! அதிக நினைவைக் கொண்டிருந்தவர்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றிருப்பார்கள். ஆசீர்வாதம் என்பது கேட்டுப் பெறுவதல்ல. அது நீங்கள் முயற்சி செய்வதற்கான ஒன்றாகும். நீங்கள் எந்தளவுக்கு அதிகமாக நினைவைக் கொண்டிருக்கின்றீர்களோ, அந்தளவுக்கு அதிகமாக ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள், அதாவது, ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். நீங்கள் நினைவைக் கொண்டிருக்காவிடின், ஆசீர்வாதங்களைப் பெற மாட்டீர்கள். ஒரு லௌகீகத் தந்தை ஒருபொழுதும் தனது குழந்தைகளிடம் தன்னை நினைவுசெய்யுமாறு கூறமாட்டார். ஒரு குழந்தை தனது குழந்தைப் பருவத்திலிருந்தே “மம்மா”, “பாபா” என இயல்பாகக் கூறுகின்றார். அவரது அங்கங்கள் சிறியவை. வளர்ந்த குழந்தைகள் “மம்மா”, “பாபா” எனக் கூற மாட்டார்கள். தாங்கள் ஆஸ்தியைப் பெறுகின்ற தாய் தந்தையர் அவர்களே என்பதும் அவர்களின் புத்தியிலே இருக்கும். அது கூறப்பட வேண்டிய அல்லது நினைவுசெய்யப்பட வேண்டிய விடயம் இல்லை. இங்கே தந்தை கூறுகின்றார்: என்னையும் ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள். எல்லைக்குட்பட்ட உறவுகளைத் துறந்து, இப்பொழுது எல்லையற்ற உறவுமுறையை நினைவுசெய்யுங்கள். மனிதர்கள் அனைவரும் முக்தியை விரும்புகிறார்கள். முக்தி என்பது முக்திதாமத்தையே குறிக்கின்றது. சற்கதி என்பது மீண்டும் ஒரு தடவை சந்தோஷ தாமத்திற்குச் செல்வதைக் குறிக்கின்றது. முதலில் வருகின்ற எவரும் நிச்சயமாகச் சந்தோஷத்தை அனுபவம் செய்வார்கள். தந்தை சந்தோஷத்தைக் கொடுப்பதற்காகவே வருகின்றார். இதில் ஏதாவது சிரமம் நிச்சயமாக இருக்க வேண்டும். அதனாலேயே இது அத்தகைய அதியுயர்ந்த கல்வி என்று கூறப்படுகின்றது. கல்வி எந்தளவிற்கு உயர்ந்ததோ, அந்தளவுக்குச் சிரமங்களும் அதிகமாக இருக்கும். அனைவருமே சித்தியடைய முடியாது. உயர் பரீட்சைகளில் வெகு சில மாணவர்களே சித்தியடைகிறார்கள். ஏனெனில் எவராவது அதியுயர்ந்த பரீட்சையில் சித்தியடையும்பொழுது அரசாங்கமும் அவர்களுக்கு அதிகளவு ஊதியத்தை வழங்க வேண்டியுள்ளது. சில மாணவர்கள் ஓர் உயர் பரீட்சையில் சித்தியடைந்தும் வெறுமனே உட்கார்ந்திருக்கின்றார்கள். அரசாங்கத்திடம் அவர்களுக்கு உயர் ஊதியத்தைக் கொடுப்பதற்குப் போதியளவு பணம் இல்லை. இங்கே தந்தை கூறுகின்றார்: நீங்கள் எந்தளவிற்கு அதிகமாகக் கற்கின்றீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். அனைவரும் அரசர்களாக அல்லது செல்வந்தர்களாக ஆகுவார்கள் என்றில்லை. அனைத்தும் எவ்வாறு நீங்கள் கற்கின்றீர்கள் என்பதிலேயே தங்கியுள்ளது. பக்தியைக் கல்வி என்று அழைப்பதில்லை. இது ஆன்மீகத் தந்தை கற்பிக்கின்ற, ஆன்மீக ஞானம்;. இக்கல்வி அதி உயர்ந்தது. குழந்தைகள் இதைச் சிரமமாகக் காண்கின்றார்கள். ஏனெனில் அவர்கள் தந்தையை நினைவுசெய்வதுமில்லை, தங்களின் நடத்தையைச் சீர்திருத்திக் கொள்வதுமில்லை. நல்ல நினைவைக் கொண்டிருப்பவர்களின் நடத்தை தொடர்ந்தும் நல்லதாகும். அவர்கள் தொடர்ந்தும் மிக மிக இனிமையானவர்களாகவும், சேவையாளராகவும் ஆகுவார்கள். நன்னடத்தை இல்லாதவர்களை எவரும் விரும்ப மாட்டார்கள். சித்தியடையாதவர்களின் நடத்தையில் நிச்சயம் ஏதாவது குறைபாடு இருக்கும். இலக்ஷ்மி, நாராயணனின் நடத்தை மிகவும் சிறந்தது. இராமர் இரண்டு கலைகள் குறைந்தவர் என்று கூறப்படுகின்றார். இராவண இராச்சியத்திலே பாரதம் பொய்யான பூமி ஆகுகின்றது. சத்திய பூமியில் பொய்மை சிறிதளவும் இருக்க முடியாது. இராவண இராச்சியத்தில் பொய்மையைத் தவிர வேறெதுவும் இல்லை. போலி மனிதர்களைத் தெய்வீகக் குணங்கள் உள்ளவர்கள் என்று அழைக்க முடியாது. இது எல்லையற்ற விடயமாகும். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: மற்றவர்கள் கூறும் அவ்வாறான போலியான விடயங்களைச் செவிமடுக்கவோ அல்லது அதை மற்றவர்களுக்குக் கூறவோ வேண்டாம். கடவுளின் வழிகாட்டல்கள் மாத்திரமே சட்டபூர்வமான வழிகாட்டல்கள் என்று கூறப்படுகின்றன. மனித வழிகாட்டல்கள், சட்டவிரோதமான வழிகாட்டல்கள் என்று கூறப்படுகின்றன. நீங்கள் சட்டபூர்வமான வழிகாட்டல்களைப் பின்பற்றுவதால், மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். எவ்வாறாயினும் அனைவராலும் அவற்றைப் பின்பற்ற முடிவதில்லை. எனவே அவர்கள் சட்டவிரோதமானவர்கள் ஆகுகின்றார்கள். சிலர் தந்தைக்குச் சத்தியமும் செய்கின்றார்கள்: பாபா இந்த வயது வரை நாங்கள் சட்டவிரோதமான செயல்களைச் செய்துள்ளோம், இப்பொழுது நாங்கள் அதனைச் செய்ய மாட்டோம். காமமாகிய தீய ஆவியே மிகவும் சட்டவிரோதமானது. எனினும் அனைவருக்குள்ளும் சரீர உணர்வான தீய ஆவி இருக்கின்றது. மாயையின் ஆதிக்கத்துக்கு உட்படுவதால், மக்கள் சரீர உணர்வினைக் கொண்டுள்ளார்கள். தந்தை சரீரமற்றவர். எனவே குழந்தைகளும் சரீரமற்றவர்களேயாவர். இது புரிந்துகொள்ள வேண்டிய விடயமாகும். ஆத்மாக்களாகிய நாங்கள் சரீரமற்றவர்களாக இருக்கின்றோம், பின்னர் இங்கே சரீரங்களினுள் பிரவேசிக்கின்றோம். தந்தை மீண்டும் ஒரு தடவை கூறுகின்றார்: சரீரமற்றவர் ஆகுங்கள். உங்களை உங்கள் ஆதி தர்மத்தில் ஸ்தாபியுங்கள். உங்கள் சரீரத்தின் சமயத்தில் உங்களை ஸ்தாபிக்காதீர்கள். சரீரத்தைக் கொண்டிராத உங்கள் தர்மத்தில் உங்களை ஸ்தாபியுங்கள். சரீர உணர்வுள்ளவர் ஆகாதீர்கள். தந்தை உங்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்துகின்றார்; இதில் நினைவுசெய்வதற்கான தேவை அதிகளவுள்ளது. தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி என்னை நினைவுசெய்யுங்கள். நீங்கள் சதோபிரதானாகவும், தூய்மையாகவும் ஆகுவீர்கள். தூய்மையற்றவராகுவதால், அதிகளவு தண்டனை பெறப்படுகின்றது. தந்தைக்குரியவராகிய பின்னர், தவறு செய்பவர்களைப் பற்றி நினைவுகூரப்படுகின்றது: சற்குருவை அவதூறு செய்பவர்களால் உயர்ந்த அந்தஸ்தைப் பெறமுடியாது. நீங்கள் தூய்மையாகுவதற்கான எனது வழிகாட்டல்களைப் பின்பற்றாது விட்டால் நூறு மடங்கு தண்டனை கிடைக்கும். நீங்கள் உங்களுடைய மனச்சாட்சியைப் பயன்படுத்த வேண்டும். என்னால் நினைவைக் கொண்டிருக்க முடியாவிடின், ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறவும் முடியாது. நீங்கள் முயற்சி செய்வதற்கு நேரத்தை ஒதுக்க வேண்டும். உங்களிடம் என்ன அத்தாட்சி இருக்கிறது என்று கேட்கப்படும்பொழுது, அவர்களுக்குக் கூறுங்கள்: கடவுள் பிரவேசிக்கின்ற சரீரமானது மனிதரான பிரஜாபிதாவினுடையது. மனிதர்களின் சரீரங்களுக்கே பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. சிவபாபா ஒரு மனிதரும் அல்ல, ஒரு தேவருமல்ல. அவர் பரமாத்மா என்று அழைக்கப்படுகின்றார். அவர் தூய்மையற்றவராகவோ அல்லது தூய்மையானவராகவோ ஆகுவதில்லை. அவர் விளங்கப்படுத்துகின்றார்: என்னை நினைவுசெய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள், இப்பொழுது தமோபிரதானாகி விட்டீர்கள். மீண்டும் சதோபிரதானாகுவதற்கு என்னை நினைவுசெய்யுங்கள். தேவர்களின் தகைமைகளைப் பாருங்கள், அவர்களிடம் கருணை வேண்டி நிற்பவர்களையும் பாருங்கள்! நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்று பின்னர் நீங்கள் ஆச்சரியமடைகிறீPர்கள். உங்கள் 84 பிறவிகளில் வீழ்ந்ததன் காரணமாக நீங்கள் முற்றிலும் சீரழிந்தவர்கள் ஆகிவிட்டீர்கள். தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் தேவ வம்சத்தவராக இருந்தீர்கள், இப்பொழுது உங்களால் தேவர்களைப் போன்று ஆகமுடியுமா என உங்கள் நடத்தையைப் பாருங்கள். அனைவரும் இலக்ஷ்மி, நாராயணனாக ஆகுவார்கள் என்று நினைக்காதீர்கள். அப்படியாயின் அனைத்து இடமும் ஒரு பூந்தோட்டமாகிவிடும். ரோஜா மலர்கள் மட்டுமே சிவபாபாவுக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும். ஆனால், இல்லை. எவ்வாறாயினும் அக் மலர்கள் உட்பட, அனைத்து மலர்களும் அவருக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன தந்தையின் சில குழந்தைகள் மலர்கள் ஆகுகின்றார்கள், பிறர் அக் மலர்கள் ஆகுகின்றனர். சித்தியடைந்தவர்களும், சித்தியடையாதவர்களும் இருக்கின்றார்கள். தாங்கள் அரசர்களாக ஆகமுடியாது என்று அவர்களே புரிந்து கொள்கின்றார்கள். அவர்கள் எவரையும் தங்களைப் போன்று ஆக்குவதில்லை. யார் செல்வந்தர்கள் ஆகுவார்கள், எவ்வாறு ஆகுவார்கள் என்பதைத் தந்தை மட்டுமே அறிவார். குழந்தைகளாகிய நீங்கள் முன்னேறிச் செல்லும்பொழுது ஒரு குறிப்பிட்ட குழந்தை தந்தையின் எவ்வகையான உதவியாளர் என்பதை நீங்களும் புரிந்துகொள்வீர்கள். அவர்களில் எவரும் முன்னைய சக்கரத்தில் செய்தவற்றையே மீண்டும் செய்வார்கள். அதில் எந்;த வேறுபாடும் இருக்க முடியாது. தந்தை தொடர்ந்தும் உங்களுக்கு கருத்துக்களைக் கொடுக்கின்றார். இந்த வகையில் நீங்கள் தந்தையை நினைவுசெய்து, அனைத்தையும் இடமாற்றம் செய்யவேண்டும். பக்தி மார்க்கத்தில் நீங்கள் கடவுளின் பெயரால் அனைத்தையும் செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் கடவுளை அறிந்திருக்கவில்லை. கடவுளே அதிமேலானவர் என்பதை மாத்திரமே நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அவர் அதிமேலான பெயரையும், சரீரத்தையும் கொண்டவர் என்றில்லை; அவர் அசரீரியானவர். பின்னர் இங்கே அதிமேலான சரீரதாரிகள் இருக்கின்றனர். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் தேவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். பிரம்ம தேவனுக்கு வந்தனங்கள், விஷ்ணு தேவனுக்கு வந்தனங்கள் எனக் கூறப்படுகின்றது. பின்னர் அவர்கள் ‘பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள்’ எனக் கூறுகின்றார்கள். எனவே, கடவுளே அதி மகத்துவமானவர். பிரம்மா, விஷ்ணு, சங்கரரைக் கடவுள் என அழைக்க முடியாது. பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள் என்று மக்கள் தங்கள் வாயினால் கூறுவதனால் நிச்சயமாகக் கடவுள் ஒருவராகவே இருக்க வேண்டும். மக்கள் தேவர்களுக்குத் தலை வணங்குகின்றார்கள். மனித உலகில் மனிதர்கள் என்றே மனிதர்கள் அழைக்கப்படுகின்றார்கள். மனிதர்களைக் குறிப்பிடும்பொழுது “பரமாத்மாவுக்கு வந்தனங்கள்” என்று கூறுவது முற்றிலும் அறியாமையாகும். கடவுள் சர்வவியாபி என்பதே அனைவரின் புத்தியிலும் உள்ளது. கடவுள் ஒருவரே என்பதையும், அவர் மாத்திரமே தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகின்றார் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். அனைவரையும் தூய்மையாக்குவது ஒரேயொரு கடவுளின் பணியேயாகும். எந்தவொரு மனிதரும் உலகின் குருவாக இருக்க முடியாது. குருமார்கள் தூய்மையானவர்கள். இங்கே அனைவரும் விகாரத்தின் மூலமே பிறவி எடுப்பவர்கள். இந்த ஞானம் அமிர்தம் என்று அழைக்கப்படுகின்றது. பக்தியை அமிர்தம் என்று அழைக்க முடியாது. பக்தி மார்க்கத்திலே பக்தி மட்டுமே இருக்கின்றது. மனிதர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்தில் உள்ளனர். ஒரேயொருவர் மட்டுமே ஞானக்கடல் என்றும், உலகின் குரு என்றும் அழைக்கப்படுகின்றார். தந்தை வரும்பொழுது என்ன செய்கிறார் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவர் பஞ்ச தத்துவங்களையும் தூய்மையாக்குகின்றார்; நாடகத்தில் அவருடைய பாகம் அத்தகையது. தந்தை ஒரு கருவியாகுகின்றார். அவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். ஆனால் அவரால் எப்படி விளங்கப்படுத்த முடியும்? பலர் இங்கு வருகின்றார்கள். ஓர் அங்குரார்ப்பண வைபவம் நடைபெறும்பொழுது, “வரவிருக்கும் விநாசத்துக்கு முன்னர் வந்து எல்லையற்ற தந்தையை அறிந்து அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுங்கள்” என மக்களுக்குத் தந்தி அனுப்பப்படுகின்றது. அவர் ஆன்மீகத் தந்தையாவார். மனிதர்கள் அனைவரும் அவரைத் தந்தை என்று அழைக்கின்றனர். அவர் படைப்பவராக இருப்பதனால் படைப்புக்கள் நிச்சயமாக அவரிடமிருந்தே ஆஸ்தியைப் பெறுவார்கள். எல்லையற்ற தந்தையை எவருக்கும் தெரியாது. தந்தையை மறப்பதும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எல்லையற்ற தந்தையே அதி உயர்ந்தவர். அவர் உங்களுக்கு எல்லைக்குட்பட்ட ஆஸ்தியைத் தருவதில்லை. அனைவருக்கும் ஒரு லௌகீகத் தந்தை இருந்தாலும், அவர்கள் எல்லையற்ற தந்தையையே நினைவுசெய்வார்கள். சத்தியயுகத்தில் அவர்கள் தங்கள் எல்லையற்ற சந்தோஷம் என்னும் ஆஸ்தியைப் பெற்றிருப்பதனால், எவரும் அவரை நினைவுசெய்ய மாட்டார்கள். நீங்கள் இப்பொழுது தந்தையை நினைவுசெய்கின்றீர்கள். ஆத்மாக்களே அவரை நினைவுசெய்கின்றார்கள். பின்னர் தங்களையும்;, தங்கள் தந்தையையும், நாடகத்தையும் மறந்து விடுகின்றார்கள். அங்கே மாயையின் நிழல் காணப்படுகின்றது. சதோபிரதான் புத்தியானது நிச்சயமாகத் தமோபிரதானாக வேண்டும். புதிய உலகில் தேவர்கள் சதோபிரதானாக இருந்தார்கள் என்பதை நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கின்றீர்கள். எவருக்கும் இது தெரியாது. உலகம் சதோபிரதானாகவும், சத்திய யுகமாகவும் ஆகும். அது புதிய உலகம் என்று அழைக்கப்படுகின்றது. இது கலியுக உலகமாகும். தந்தை மட்டுமே வந்து இந்த விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். ஒவ்வொரு கல்பத்திலும் உங்கள் முயற்சிகளுக்கேற்ப என்ன ஆஸ்தியைப் பெற்றீர்களோ, அந்த ஆஸ்தியையே நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் அவ்வாறு இருந்தீர்கள், இப்பொழுது கீழிறங்கி வந்துவிட்டீர்கள் என்பதையும் நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். தந்தையே உங்களுக்குக் கூறுகின்றார்: இதுவும் அதுவும் நடக்கும். சிலர் கூறுகின்றார்கள்: நாங்கள் மிகப்பெரிய அளவில் முயற்சிக்கிறோம், ஆனால் எங்களால் நினைவில் இருக்க முடியாதுள்ளது. இதனையிட்டுத் தந்தையோ, ஆசிரியரோ என்ன செய்ய முடியும்.? ஒருவர் கற்காவிட்டால் ஆசிரியரால் என்ன செய்ய முடியும்? ஆசிரியர் ஆசீர்வாதங்களை வழங்கியிருந்தால் அனைவரும் சித்தியடைந்திருப்பார்கள். எவ்வாறு நீங்கள் கற்கின்றீர்கள் என்பதில் பெருமளவு வேறுபாடு உள்ளது. இது முற்றிலும் புதியதொரு கல்வி. இங்கே பொதுவாக ஏழைகளும், சந்தோஷமற்றவர்களுமே உங்களிடம் வருகின்றார்கள்; செல்வந்தர்கள் இங்கு வருவதில்லை. மக்கள் சந்தோஷமற்று இருப்பதால் இங்கு வருகின்றார்கள். செல்வந்தர்கள் தாங்கள் சுவர்க்கத்தில் இருப்பதாக நினைக்கின்றார்கள். இது அவர்களின் பாக்கியத்தில் இல்லை. அதனைத் தங்கள் பாக்கியத்தில் கொண்டிருப்பவர்கள், உடனடியாகவே இதில் நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றார்கள். நம்பிக்கையும், சந்தேகமும் வருவதற்கு அதிக நேரம் எடுக்காது. மாயை உங்களை விரைவாக மறக்கச் செய்கிறாள். இதற்கு நேரம் எடுக்கின்றது. இதையிட்டுக் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை. உங்கள் மீது கருணை காட்டுங்கள். நீங்கள் தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பெறுகிறீர்கள். தந்தை இலகுவான விடயத்தையே உங்களுக்குக் கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி, என்னை நினைவுசெய்யுங்கள். இது மரணபூமி என்பதையும், அது அமரத்துவபூமி என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அங்கு அகால மரணம் எதுவும் நிகழாது. மாணவர்கள் வகுப்பில் வரிசைக்கிரமமாக அமர்ந்திருக்கிறார்கள். இதுவும் ஒரு பாடசாலை. ஆசிரியரிடம் வினவப்படுகின்றது: உங்கள் வகுப்பில் முதலாவது திறமைசாலிக் குழந்தை யார்? நன்றாகக் கற்பவர்கள் வலது பக்கத்தில் இருக்க வேண்டும். வலது கரத்துக்கு முக்கியத்துவம் உள்ளது. வலது கரத்தின் மூலமே வழிபாடும் நடாத்தப்படுகின்றது சத்திய யுகத்தில் என்ன இருக்கும் எனபதைப் பற்றிக் குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் சிந்தியுங்கள். நீங்கள் சத்தியயுகத்தை நினைவுசெய்தால், உண்மையான பாபாவையும் நினைவுசெய்வீர்கள். பாபா எங்களைச் சத்;தியயுகத்தின் அதிபதிகள் ஆக்குகின்றார். உங்கள் இராச்சியத்தை எவ்வாறு பெற்றீர்கள் என்பதை நீங்கள் அங்கே அறிய மாட்டீர்கள். இதனாலேயே பாபா கூறுகின்றார்: இலக்ஷ்மி, நாராயணனிடம் கூட இந்த ஞானம் இல்லை. தந்தை அனைத்தையும் தொடர்ந்தும் மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார். முன்னைய சக்கரத்தில் அதனைப் புரிந்துகொண்டவர்கள் நிச்சயமாக மீண்டும் புரிந்துகொள்வார்கள். எவ்வாறாயினும் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். தந்தை உங்களுக்குக் கற்பிப்பதற்கு வருகின்றார். இது ஒரு கல்வியாகும். இதற்குப் பெருமளவு புரிந்துணர்வு தேவைப்படுகின்றது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாயும் தந்தையுமாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த ஆன்மீகக் கல்வி அதியுயர்வானதும், சிரமமானதுமாகும். எனவே, இதில் சித்தி அடைவதற்கு, நீங்கள் தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதனால், ஆசீர்வாதங்களைப் பெற வேண்டும். உங்கள் நடத்தையைச் சீர்திருத்துங்கள்.

2. இப்பொழுது சட்டவிரோதமான எதனையும் செய்யாதீர்கள். சரீரமற்றவராகி, உங்கள் ஆதி தர்மத்தில் ஸ்திரமாக இருந்து, சரீரமற்ற தந்தையின் சட்டபூர்வமான வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தையின் சகவாசத்தைக் கொண்டிருப்பதன் மூலம், உங்களின் ஆதி தர்மமான தூய்மையை இலகுவாகப் பின்பற்றும் ஒரு மாஸ்ரர் சர்வசக்திவான் ஆகுவீர்களாக.

ஆத்மாக்களின் ஆதி தர்மம் (சமயம், வாழ்க்கை முறை) தூய்மை. ஆனால், தூய்மையின்மை என்பது புற தர்மம் ஆகும். உங்களின் ஆதி தர்மத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், எந்தவிதமான புற தர்மமும் உங்களை அசைக்க முடியாது. எவ்வாறாயினும், நீங்கள் தந்தையை மிகச்சரியாக இனங்கண்டு, அவரை உங்களுடன் வைத்திருந்தால், உங்களின் ஆதி தர்மமான தூய்மையை ஏற்றுக் கொள்வது மிகவும் இலகுவானதாகும். ஏனென்றால், உங்களின் சகபாடி, சர்வசக்திவான் ஆவார். சர்வசக்திவானின் குழந்தைகளான, மாஸ்ரர் சர்வசக்திவான்களின் முன்னால், தூய்மையின்மை வரமுடியாது. உங்களின் எண்ணங்களிலேனும் மாயை வந்தால், நிச்சயமாக ஏதாவது வாசல் திறந்துள்ளது அல்லது உங்களின் நம்பிக்கையில் ஏதோ குறைகிறது.

சுலோகம்:
முக்காலங்களையும் அறிந்தவர்கள், ஒருபோதும் எதையும் ஒரு காலத்துடன் பார்ப்பதில்லை. அவர்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நன்மை இருப்பதாகவே கருதுகிறார்கள்.