04.11.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் குறைகளை அகற்ற விரும்பினால், அவை பற்றி தந்தையிடம், நேர்மையான இதயத்துடன் கூறுங்கள். பாபா அந்தப் பலவீனங்களை அகற்றுவதற்கான வழிமுறையை உங்களுக்குக் காட்டுவார்.
பாடல்:
எக்குழந்தைகள் தந்தையின் ‘கரண்ட்’ ஐப் பெறுகின்றனர்?பதில்:
தங்களுடைய நோய்கள் பற்றி நேர்மையான இதயத்துடன் சத்திரசிகிச்சை நிபுணரிடம் கூறுகின்ற குழந்தைகளுக்கு பாபா திருஷ்டி கொடுக்கின்றார். அத்தகைய குழந்தைகளில் பாபா பெருமளவு கருணை கொண்டிருக்கின்றார். அக்குழந்தையிலுள்ள தீய ஆவி நீக்கப்பட வேண்டும் என உள்ளார்த்தமாக அவர் உணர்கின்றார். பாபா அத்தகைய குழந்தைகளுக்கு ‘கரண்ட்’ ஐ வழங்குகிறார்.ஓம் சாந்தி.
நீங்கள் ஒவ்வொருவரும் தந்தையிடமிருந்து எதையாவது பெற்றீர்களா என்று, உங்களையே கேட்டுக் கொள்ளுமாறு தந்தை தொடர்ந்தும் குழந்தைகளுக்குக் கூறுகின்றார். நீங்கள் இன்னமும் எதில் குறைவாக இருக்கின்றீர்கள்? நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள்ளே பார்க்க வேண்டும். நாரதரின் உதாரணம் உள்ளது: அவர் இலக்ஷ்மியைத் திருமணம் செய்யத் தகுதி வாய்ந்தவரா என்று அவருடைய முகத்தைக் கண்ணாடியில் பார்க்குமாறு கூறப்பட்டது. அதே போன்று தந்தையும் குழந்தைகளாகிய உங்களிடம் வினவுகின்றார்: நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? நீங்கள் இலக்ஷ்மியைத் திருமணம் செய்யத் தகுதி வாய்ந்தவர்கள் ஆகிவிட்டீர்களா? அவ்வாறு இல்லையெனில், குழந்தைகளாகிய நீங்கள் இன்னமும் முயற்சிசெய்து அகற்றுவதற்காக எத்தகைய குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றீர்கள்? நீங்கள் பலவீனங்களை நீக்குவதற்கு முயற்சி செய்கின்றீர்களா, அல்லது எந்த முயற்சியும் செய்யாது இருக்கின்றீர்களா? சிலர் தொடர்ந்தும் முயற்சி செய்கின்றார்கள். புதிய குழந்தைகளுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது, உங்களுக்குள் ஏதாவது பலவீனம் உள்ளதா என்று உங்களுக்குள் சோதித்துப் பாருங்கள். ஏனெனில் நீங்கள் அனைவரும் சம்பூரணமானவர்கள் ஆகவேண்டும். தந்தை உங்களை சம்பூரணமானவர்கள் ஆக்குவதற்காகவே வந்துள்ளார். இதனாலேயே உங்களுடைய இலக்கிற்கும், குறிக்கோளுக்குமான படம் உங்கள் முன்னால் வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்குள்ளே கேட்டுப் பாருங்கள்: நான் அவர்களைப் போன்று சம்பூரணமானவன் ஆகிவிட்டேனா? லௌகீகக் கல்வியைக் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் அனைவரும் இந்த வேளையில் விகாரத்தில் ஈடுபடுகின்றவர்களாகவே உள்ளனர். இந்த இலக்ஷ்மியும் நாராயணனும் முற்றிலும் விகாரமற்றவர்களுக்கான மாதிரிகளாவர். அரைக் கல்பமாக நீங்கள் அவர்களைப் புகழ்ந்து கொண்டு இருந்தீர்கள். எனவே இப்பொழுது உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்: நான் முன்னேறுவதற்கு இன்னமும் நீக்க வேண்டிய, எனக்குள்ளே இருக்கின்ற பலவீனங்கள் யாவை? அப்பொழுதே என்னால் அதனைத் தந்தைக்குக் காட்ட முடியும். பாபா, என்னால் நீக்கமுடியாத இந்தப் பலவீனங்களை நான் கொண்டிருக்கின்றேன். தயவு செய்து எனக்கு ஒரு வழிமுறையைக் காட்டுங்கள். ஒரு சத்திரசிகிச்சை நிபுணரினால் மாத்திரமே எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுவதற்கு உதவமுடியும். சில உதவி சத்திரசிகிச்சை நிபுணர்களும் புத்திசாலிகளே. மருந்து கலப்பவர் ஒரு வைத்தியரிடமிருந்து கற்று, திறமையான வைத்தியர் ஆகுகின்றார். எனவே நேர்மையாக உங்களையே சோதித்துப் பாருங்கள்: என்னால் அந்த அந்தஸ்தை அடைய முடியாமல் இருப்பதற்குக் காரணமாகவுள்ள என்ன பலவீனங்களை நான் எனக்குள் கொண்டிருக்கின்றேன்? நீங்களும் அவர்களைப் போல் ஆகலாம் எனத் தந்தை கூறுவார். நீங்கள் உங்கள் பலவீனங்களை பாபாவிற்கு கூறும் பொழுதே அவர் உங்களுக்கு அறிவுரை கூறமுடியும். பல நோய்கள் உள்ளன. பலர் தங்களுக்குள் பலவீனங்களைக் கொண்டிருக்கிறார்கள். சிலர் பெருமளவு கோபத்தையும், பேராசையையும் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களை ஞானத்தைக் கிரகிக்கத் தூண்டக்கூடிய அளவிற்கு, அவர்கள் தமக்குள் ஞானத்தைக் கிரகிக்க முடியாமல் இருக்கின்றார்கள். தந்தை ஒவ்வொரு நாளும் அதிகளவு விளங்கப்படுத்துகின்றார். உண்மையில் தந்தை உங்களுக்கு மந்திரத்தின் அர்த்தத்தை விளங்கப்படுத்தி இருப்பதனால், பெருமளவு விளங்கப்படுத்த வேண்டிய தேவையில்லை. ஒரேயொரு தந்தையே இருக்கின்றார். நீங்கள் எல்லையற்ற தந்தையை நினைவு செய்து, அவரிடமிருந்து ஆஸ்தியைப் பெற்று, அவர்களைப் போலாக வேண்டும். ஏனைய பாடசாலைகளில் ஐந்து விகாரங்களை வெற்றி கொள்வது என்ற கேள்விக்கே இடமில்லை. உங்களுக்குப் பெருந் துன்பத்தை விளைவிக்கின்ற இத் தீய ஆவிகள் உங்களுக்குள் இருக்கின்றன எனத் தந்தை இப்பொழுது வந்து விளங்கப்படுத்தும் பொழுதே, இது பிரயோகிக்கப்படுகின்றது. நீங்கள் அவற்றைப் பற்றிப் பேசினால், தந்தை அவற்றை நீக்குவதற்கான வழிமுறையைக் காட்டுவார். பாபா, இன்ன இன்ன தீய ஆவிகள் என்னைத் தொந்தரவு செய்கின்றன. ஆவிகளை விரட்டுபவரிடம் நீங்கள் அவற்றை விவரிக்க வேண்டும். முன்னர் நீங்கள் அந்த தீய ஆவிகளை (பேய்களை) உங்களுக்குள் கொண்டிருக்கவில்லை. இந்த ஐந்து தீய ஆவிகளுமே பிறவி, பிறவியாக உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் எந்தத் தீய ஆவிகளைக் கொண்டிருக்கின்றீர்கள் என்று உங்களுக்குள் பார்க்க வேண்டும். பின்னர் அவற்றை எவ்வாறு நீக்குவது என்று அறிவுரை பெற வேண்டும். கண்கள் மிகவும் ஏமாற்றக் கூடியவை. இதனாலேயே தந்தையும் விளங்கப்படுத்துகின்றார்: உங்களை ஆத்மாவாகக் கருதி, மற்றவர்களையும் ஆத்மாக்களாகக் கருதுகின்ற பயிற்சியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வழிமுறையினால் உங்கள் நோய் நீக்கப்படும். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்களே. சரீரங்கள் எதுவும் கிடையாது. ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் வீடு திரும்பப் போகின்றீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். எனவே நீங்கள் அனைத்துக் குணங்களாலும் நிறைந்துள்ளீர்களா என உங்களையே பார்க்க வேண்டும். அவ்வாறில்லையெனில், நீங்கள் இன்னமும் என்ன குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றீர்கள்? தந்தையும் இங்கிருந்து அந்த ஆத்மாவை சோதித்துப் பார்க்கின்றார். அந்தக் குழந்தை குறிப்பிட்ட பலவீனத்தைக் கொண்டிருப்பதை அவர் பார்ப்பதனால், பாபா அவருக்கு திருஷ்டி கொடுக்கின்றார். அக் குழந்தையின் இந்தத் தடை நீங்க வேண்டும். நீங்கள் அதனை சத்திரசிகிச்சை நிபுணரிடமிருந்து தொடர்ந்தும் மறைத்தால், உங்களால் என்ன செய்ய முடியும்? நீங்கள் தொடர்ந்தும் உங்களின் பலவீனங்கள் பற்றிப் பேசினால், தந்தை உங்களுக்கு அறிவுரை கூறுவார். ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையை நினைவு செய்கின்றீர்கள்: பாபா, நீங்கள் மிக மிக இனிமையானவர்! எவ்வாறு இருந்த எங்களை நீங்கள் எவ்வாறு ஆக்குகின்றீர்கள் எனப் பாருங்கள்! அதே போன்று, நீங்கள் தந்தையைத் தொடர்ந்து நினைவு செய்யும்பொழுது தீய ஆவிகள் தொடர்ந்தும் ஓடிவிடும். நிச்சயமாக ஏதோவொரு தீய ஆவி இருக்கின்றது. சத்திரசிகிச்சை நிபுணரான தந்தையிடம் அவற்றைப் பற்றிக் கூறுங்கள்: இதற்காக ஒரு வழிமுறையைக் கூறுங்கள். இல்லாவிடின், பெருமளவு இழப்பு ஏற்படும். நீங்கள் தந்தைக்கு இதைப்பற்றிக் கூறும்பொழுது, அவர் கருணை கொள்வார். இந்த மாயையின் தீய ஆவி அவரைத் துன்புறுத்துகின்றது. தீய ஆவிகளை விரட்டக்கூடியவர் ஒரேயொரு தந்தையே ஆவார். அவர் அவற்றை சாதுரியமாக விரட்டுகின்றார். ஐந்து தீய ஆவிகளை விரட்டுமாறு உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் அனைத்து தீய ஆவிகளும் ஓடிவிடுவதில்லை. சிலர் குறிப்பாக அத் தீய ஆவிகளைக் கொண்டிருக்கின்றனர். சிலர் குறைவாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவை நிச்சயமாக இருக்கவே செய்கின்றன. யாராவது ஒருவர் தீய ஆவியைக் கொண்டிருக்கும்போது தந்தை பார்க்கின்றார். திருஷ்டி கொடுக்கும் வேளையில் இவை அனைத்தையும் தந்தை உள்ளெடுக்கின்றார்: இவர் மிக நல்ல குழந்தை. இவர் வேறு பல நல்ல குணங்களைக் கொண்டுள்ளார். ஆனால், அவர் எதையும் கூறாமல் இருப்பதுடன், எவருக்கும் விளங்கப்படுத்த முடியாமலும் உள்ளார். மாயை அவரது தொண்டையை அடைத்துவிட்டதைப் போன்றுள்ளது. அவரது வாய் திறக்குமாயின், அவர் பலருக்கும் சேவை செய்ய ஆரம்பிப்பார். மற்றவர்களுக்குச் சேவை செய்யும்பொழுது, நீங்கள் உங்களுக்கும் சேவை செய்கின்றீர்கள். நீங்கள் சிவபாபாவின் சேவையைச் செய்வதில்லை. சிவபாபாவே சேவை செய்வதற்காக வந்துள்ளார். அவர் கூறுகின்றார்: பிறவிபிறவியாக இருக்கும் தீய ஆவிகள் விரட்டப்பட வேண்டும். தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். ஒரு விருட்சம் படிப்படியாக வளர்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். இலைகள் தொடர்ந்தும் வீழ்கின்றன. நீங்கள் அங்கிருக்கும்பொழுதே உங்களுடைய எண்ணங்கள் மாறக்கூடியதாக மாயை தடைகளை உருவாக்குகிறாள். சந்நியாசிகள் விருப்பமின்மையை வளர்த்துக் கொள்ளும்பொழுது, அவர்கள் எந்த ஒரு காரணமுமின்றி, எதையும் கூறாமல் மறைந்து விடுகின்றார்கள். அனைவரது தொடர்பும் தந்தையுடனேயே ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக்கிரமமானவர்கள். நீங்கள் தந்தைக்கு உண்மையைக் கூறினால், அந்தப் பலவீனங்கள் அகற்றப்படக்கூடியதாக இருப்பதுடன், உங்களால் உயர்ந்த அந்தஸ்தையும் கோரிக்கொள்ள முடியம். நீங்கள் பாபாவிற்கு அதனைப் பற்றிக் கூறாததால் உங்களில் சிலர் உங்களுக்கே இழப்பைத் தேடிக்கொள்கின்றீர்கள் எனத் தந்தை அறிவார். நீங்கள் எவ்வளவுதான் அவர்களுக்கு விளங்கப்படுத்தினாலும், அவர்கள் தொடர்ந்தும் அந்த வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். மாயை அவர்களைப் பிடித்துக் கொள்கின்றாள். அனைவரையும் தனது வயிற்றுக்குள் போட்டுக்கொள்கின்ற முதலையே மாயை ஆவாள். அவர்கள் தமது கழுத்து வரைக்கும் புதைகுழியினுள் அகப்பட்டுக் கொள்கின்றார்கள். தந்தை பெருமளவு விளங்கப்படுத்துகின்றார். வேறு எதற்கும் அவசியமில்லை. நீங்கள் இரு தந்தையர்களைக் கொண்டிருக்கின்றீர்கள் எனக் கூறுங்கள். நீங்கள் எப்பொழுதும் ஒரு லௌகீகத் தந்தையைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் அவர்களை சத்தியயுகத்திலும் அத்துடன் கலியுகத்திலும் கொண்டிருக்கின்றீர்கள். சத்திய யுகத்தில் நீங்கள் பரலோகத் தந்தையைக் காண்பீர்கள் என்றில்லை. பரலோகத் தந்தை ஒரு தடவையே வருகின்றார். பரலோகத் தந்தை வந்து நரகத்தை, சுவர்க்கமாக மாற்றுகின்றார். அவர்கள் பக்தி மார்க்கத்தில் அவரை மிகவும் அதிகளவு பூஜிக்கின்றார்கள். அவர்கள் அவரை நினைவு செய்கின்றார்கள். சிவனுக்குப் பல ஆலயங்கள் உள்ளன. செய்வதற்கு எந்த ஒரு சேவையுமில்லை என்று குழந்தைகள் கூறுகின்றார்கள். ஓ, உண்மையாகவா! சிவாலயங்கள் எங்கும் உள்ளன. நீங்கள் அங்கு சென்று அவர்களிடம் வினவலாம்: நீங்கள் கடவுளை ஏன் வழிபடுகின்றீர்கள்? அவர் ஒரு சரீரதாரி அல்ல. அவர் யார்? அவர் பரமாத்மா என்று அவர்கள் கூறுவார்கள். வேறு எவரையும் அவர்கள் இவ்வாறு கூறமாட்டார்கள். எனவே அவர்களிடம் கூறுங்கள்: அவரே பரமாத்மாவாகிய தந்தையாவார். அவர் குதா என்றும் அல்லா என்றும் அழைக்கப்படுகின்றார். பொதுவாக அவர் பரமாத்மாவான பரமதந்தை என்று அழைக்கப்படுகின்றார். நீங்கள் அவரிடமிருந்து எதனைப் பெறப் போகின்றீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? பாரத மக்கள் சிவனின் பெயரைப் பெருமளவில் உபயோகிக்கின்றார்கள். அத்துடன் அவர்கள் சிவனின் பிறந்த தினத்தையும் கொண்டாடுகிறார்கள். எவருக்கும் விளங்கப்படுத்துவது இலகுவானது. தந்தை உங்களுக்குத் தொடர்ந்தும் பல வழிமுறைகளில் பெருமளவு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் எவரிடமும் செல்லலாம், ஆனால் நீங்கள் அதிகளவு சாந்தமாகவும், பணிவுடனும் பேசவேண்டும். உங்களின் பெயர் பாரதத்தில் அதிகளவில் பரவியுள்ளது. நீங்கள் சிறிதளவு பேசினாலே, அவர்கள் நீங்கள் ஒரு பிரம்மாகுமார் அல்லது பிரம்மாகுமாரி என்று தெரிந்து கொள்வார்கள். கிராமத்து மக்கள் மிகவும் கள்ளம் கபடமற்றவர்கள். ஆலயங்களுக்குச் சென்று அங்கு சேவை செய்வது மிகவும் சுலபமானது: வாருங்கள், நாங்கள் உங்களுக்கு சிவபாபாவின் வரலாற்றைக் கூறுவோம். நீங்கள் சிவனை வழிபடுகின்றீர்கள். ஆனால் அவரிடம் எதனை வேண்டுகின்றீர்கள்? எங்களால் உங்களுக்கு முழு வரலாற்றையும் கூற முடியும். மறு நாள், இலக்ஷ்மி, நாராயணன் ஆலயத்திற்குச் செல்லுங்கள். நீங்கள் உங்களுக்குள் சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். சில குழந்தைகள் கிராமங்களுக்குச் சென்று சேவை செய்ய விரும்புகின்றார்கள். ஒவ்வொருவரும் தமது சொந்த புரிந்துணர்வைக் கொண்டிருக்கிறார்கள். தந்தை கூறுகின்றார்: முதலில் சிவபாபாவின் ஆலயத்திற்குச் செல்லுங்கள். பின்னர் இலக்ஷ்மி, நாராயணனின் ஆலயத்திற்குச் சென்று அங்குள்ள மக்களிடம் வினவுங்கள்: அவர்கள் எவ்வாறு தமது ஆஸ்தியைப் பெற்றுக்கொண்டார்கள் என்று தெரியுமா? வாருங்கள், நாங்கள் தேவர்களின் 84 பிறவிகளின் கதையைக் உங்களுக்குக் கூறுகின்றோம். நீங்கள் கிராமத்தவரையும் விழித்தெழச் செய்ய வேண்டும். நீங்கள் சென்று, அன்புடன் அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள்: நீங்கள் ஓர் ஆத்மா. ஆத்மாவே பேசுகின்றார். இச்சரீரம் முடிவடையப்போகின்றது இப்பொழுது நாங்கள் தூய்மையாகி தந்தையிடம் செல்ல வேண்டும். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள். எனவே அவர்கள் இதைக் கேட்டதுமே அந்த ஈர்ப்பினை உணர்வார்கள். நீங்கள் எந்தளவிற்கு ஆத்ம உணர்வில் இருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு மேலதிகமான ஈர்ப்பும் இருக்கும். இப்பொழுது அந்தளவிற்கு முழுமையான விருப்பமின்மை சரீரத்திலும், பழைய உலகிலும் இல்லை. அந்தப் பழைய ஆடையை நீக்கவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே நீங்கள் ஏன் அதில் பற்று வைத்திருக்க வேண்டும்? சரீரத்திலுள்ளபோதே அதில் எவ்வித பற்றும் கொண்டிருக்கக் கூடாது. உள்ளார்த்தமாக இந்த ஒரேயொரு அக்கறையே இருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நாங்கள் இப்பொழுது தூய்மையாகி, எங்களுடைய வீட்டிற்குச் செல்ல வேண்டும். அத்துடன் இந்த ஆசையும் உள்ளது: நான் இத்தகைய பாபாவை எவ்வாறு விட்டுச் செல்வேன்? நான் இத்தகைய பாபாவை ஒருபொழுதும் இனிக் காணமாட்டேன். இத்தகைய எண்ணங்களைக் கொண்டிருப்பதன் மூலம், நீங்கள் தந்தையையும் அத்துடன் உங்களுடைய வீட்டையும் நினைவு செய்வீர்கள். நாங்கள் இப்பொழுது வீட்டிற்குச் செல்கின்றோம். எண்பத்து நான்கு பிறவிகளும் பூர்த்தியாகி விட்டன. நீங்கள் பகலில் உங்கள் வியாபாரம் போன்றவற்றைச் செய்யலாம். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வசிக்க வேண்டும். அங்கு வசிக்கும் பொழுதே, இவை எல்லாம் முடியப்போகின்றன என்பது உங்கள் புத்தியில் இருக்கட்டும். நாங்கள் இப்பொழுது எமது வீட்டிற்குத் திரும்ப வேண்டும். தந்தை கூறியுள்ளார்: நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வசிக்க வேண்டும். வேறு எங்குதான் நீங்கள் செல்வீர்கள்? நீங்கள் உங்களுடைய வியாபாரத்தைச் செய்யலாம், ஆனால் இவை அனைத்தும் அழியப்போகின்றன என்பதை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். முதலில் நாங்கள் வீட்டிற்கும் பின்னர் சந்தோஷ பூமிக்கும் செல்வோம். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் உங்களுடனேயே பேசுங்கள். உங்களுக்கு அதிக நேரம் உள்ளது. நீங்கள் எட்டு மணித்தியாலங்கள் உங்கள் வியாபாரத்தைச் செய்து, எட்டு மணித்தியாலம்; ஓய்வும் எடுக்கலாம். பின்னர் நீங்கள் இந்தத் தந்தையுடன் எட்டு மணிநேரம் இதயபூர்வமான உரையாடலைக் கொண்டிருப்பதுடன் ஆன்மீகச் சேவையும் செய்ய வேண்டும். உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சிவபாபாவினதும், இலக்ஷ்மி, நாராயணனதும் ஆலயங்களுக்குச் சென்று சேவை செய்யுங்கள். பல ஆலயங்கள் உள்ளன. நீங்கள் எங்கு சென்றாலும், அங்கு நிச்சயமாக சிவாலயம் இருக்கும். குழந்தைகளாகிய உங்களுக்குப் பிரதான விடயம் நினைவு யாத்திரையாகும். நீங்கள் நினைவில் நன்றாக நிலைத்திருந்தால், நீங்கள் கேட்பதை எல்லாம் பெறுவீர்கள். இயற்கை உங்கள் சேவகன் ஆகிவிடும். உங்கள் முகமும் எதையுமே கேட்கவேண்டிய அவசியம் இல்லாதவாறு கவர்ச்சியாக ஆகிவிடும். சில சந்நியாசிகளும் மிகவும் உறுதியானவர்களாக இருக்கின்றார்கள். ‘நான் பிரம்ம தத்துவத்துடன் கலந்துவிடுவேன்’ என்ற நம்பிக்கையுடன் அவர்கள் அமர்ந்திருக்கின்றார்கள். அவர்கள் அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கின்றார்கள். அந்த முறையில் சரீரத்தை விடுகின்ற பயிற்சியை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள். எவ்வாறாயினும் அவர்கள் தவறான பாதையில் இருக்கின்றார்கள். அவர்கள் பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலப்பதற்கு பெருமளவு முயற்சி செய்கின்றார்கள். பக்தி மார்க்கத்தில் அவர்கள் காட்சிகளைக் காண்பதற்கு பெருமளவு முயற்சி செய்கின்றார்கள். அவர்கள் தமது உயிரைக்கூட விடுகின்றார்கள். ஆத்மாவின் தற்கொலை இருக்க முடியாது, சரீரத்தின் தற்கொலையே உள்ளது. ஆத்மாக்கள் எப்பொழுதும் இருக்கின்றார்கள். அவர்கள் சென்று புதிய பிறவியை எடுக்கின்றார்கள், அதாவது இன்னொரு சரீரத்தை எடுக்கின்றார்கள். குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்வதில் பெருமளவு ஆர்வம் இருக்க வேண்டும், அதனால் தந்தையையும் நினைவுசெய்ய முடியும். இங்கும் பல ஆலயங்கள் உள்ளன. நீங்கள் முழுமையாக யோகத்தில் இருந்து மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தினால், அவர்கள் கேள்விகள் கேட்கமாட்டார்கள். யோகத்தில் நிலைத்திருப்பவர்களின் அம்பானது இலக்கினை அடையும். உங்களால் பெருமளவு சேவை செய்ய முடியும். இதனை முயற்சி செய்து பாருங்கள். ஆனால் முதலில் நீங்கள் உங்களுக்குள்ளே பார்க்க வேண்டும். மாயையின் தீய ஆவி உங்களுக்குள்ளே உள்ளதா? மாயையின் தீய ஆவியைக் கொண்டிருப்பவர்கள் வெற்றியடைய முடியாது. பெருமளவு சேவை செய்யப்பட வேண்டியுள்ளது. பாபாவினால் எங்கும் செல்ல முடியாது, ஏனெனில் தந்தை அவருடன் இருக்கின்றார். தந்தையை அந்தக் குப்பைக்குள் எங்கு அழைத்துச் செல்வது? யாரிடம் அவர் பேசுவார்? தந்தை அவரின் குழந்தைகளிடம் பேசவே விரும்புகிறார். எனவே குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்ய வேண்டும். மகன் தந்தையைக் காட்டுகின்றார் என நினைவு கூரப்படுகின்றது. தந்தை குழந்தைகளாகிய உங்களை புத்திசாலிகள் ஆக்கியுள்ளார். சேவை செய்வதில் ஆர்வம் உள்ள மிக நல்ல குழந்தைகள் இருக்கின்றார்கள். தாம் கிராமங்களுக்குச் சென்று சேவை செய்ய விரும்புவதாக அவர்கள் கூறுகின்றார்கள். பாபா கூறுகின்றார்: நீங்கள் அவ்வாறு செய்யலாம். சுருட்டி மடிக்கக்கூடிய படங்களை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். படங்கள் இல்லாது மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவது கடினமாக இருக்கும். பகல் இரவாக இந்த எண்ணங்களையே கொண்டிருக்க வேண்டும். மற்றவர்களின் வாழ்க்கையை உருவாக்குவதற்கு நான் எவ்வாறு உதவ முடியும்? எவ்வாறு எனக்குள் இருக்கும் பலவீனங்களை அகற்றி நான் முன்னேற முடியும்? இந்தக் குழந்தை எட்டு அல்லது ஒன்பது மாத வயதுடையவர் என்ற சந்தோஷத்தையும் நீங்கள் கொண்டுள்ளீர்கள். அப்படிப் பல குழந்தைகள் வெளியாகுவார்கள். அவர்கள் விரைவாகச் சேவை செய்வதற்குத் தகுதியானவர்கள் ஆகுகின்றார்கள். அனைவரும் தமது சொந்தக் கிராமத்தை உயர்த்துவது பற்றியும், தமக்குச் சமமான தமது சகோதரர்களுக்குச் சேவை செய்வது பற்றியுமே சிந்திக்கின்றார்கள். புண்ணியம் வீட்டிலேயே ஆரம்பமாகின்றது. சேவைக்குப் பெருமளவு ஆர்வம் தேவைப்படுகின்றது. நீங்கள் ஒரு இடத்திலேயே தங்கிவிடக்கூடாது. தொடர்ந்தும் சுற்றி வாருங்கள். சிறிதளவு நேரமே எஞ்சியுள்ளது. அவர்கள் பல பெரிய இடங்களைக் (ஆசிரமங்கள் போன்ற) கொண்டிருக்கின்றார்கள். ஓர் ஆத்மா வந்து யாராவது ஒருவரில் பிரவேசித்து, சில கற்பித்தல்களைக் கொடுக்கும்போது, அவர்களின் பெயர் புகழப்படுகின்றது. இங்கு எல்லையற்ற தந்தையே முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்று இங்கிருந்து கற்பிக்கின்றார். இந்த ஆன்மீகக் கல்ப விருட்சம் வளரும். ஆத்மாக்கள் வரிசைக்கிரமமாக அசரீரியான விருட்சத்தில் இருந்து கீழிறங்கி வருவார்கள். பெரியதொரு மாலையும், சிவபாபாவின் பெரியதொரு விருட்சமும் உருவாக்கப்படுகின்றது. இந்த விடயங்கள் அனைத்தையும் நினைவு செய்வதன் மூலம், நீங்கள் தந்தையை மட்டுமே நினைவு செய்வதுடன், மிக விரைவான முன்னேற்றமும் காணப்படும். அச்சா
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. குறைந்த பட்சம் எட்டுமணி நேரமாவது தந்தையுடன் இதயபூர்வமான உரையாடலைக் கொண்டிருப்பதுடன், மிகவும் சாந்தமாகவும், பணிவுடனும் சேவை செய்யுங்கள். சேவையில் வெற்றி அடைவதற்கு, உங்களுக்குள் மாயையின் தீய ஆவிகள் எதுவும் இல்லாதிருக்கட்டும்.2. உங்களுடனேயே பேசுங்கள்: நான் பார்க்கின்ற அனைத்தும் அழிக்கப்படும். நாங்கள் எங்கள் வீட்டிற்குச் சென்று பின்னர் சந்தோஷ பூமிக்குச் செல்வோம்.
ஆசீர்வாதம்:
நீங்கள் அசைக்க முடியாத நம்பிக்கையையும் சதா மலர்ச்சிநிறைந்தவராகவும் கவலையற்றவராகவும் இருப்பதன் மூலம் இலகு வெற்றியை அனுபவம் செய்வீர்களாக.நம்பிக்கையின் அடையாளம், இலகுவான வெற்றி. எவ்வாறாயினும், சகல விடயங்களிலும் நம்பிக்கை இருக்க வேண்டும். தந்தையின் மீது நம்பிக்கை வைத்திருப்பது மட்டுமல்ல, உங்களின் மீதும் பிராமணக் குடும்பத்தின் மீதும் நாடகத்தின் ஒவ்வொரு காட்சியின் மீதும் முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும். அற்ப விடயங்களுக்காக உங்களின் நம்பிக்கை அசைய அனுமதிக்காதீர்கள். ஆனால், வெற்றிக்கான விதியைத் தடுக்க முடியாது என்ற விழிப்புணர்வை சதா கொண்டிருங்கள். புத்தியில் இத்தகைய நம்பிக்கை வைத்திருக்கும் குழந்தைகள், ‘என்ன நடந்தது? ஏன் அது நடந்தது?’ என்ற கேள்விகளுக்கு அப்பால் சதா இருப்பார்கள். அவர்கள் சதா கவலையற்றவர்களாகவும் மலர்ச்சியானவர்களாகவும் இருக்க வேண்டும்.
சுலோகம்:
நேரத்தை வீணாக்குவதற்குப் பதிலாக, அப்பொழுதே ஒரு தீர்மானத்தை எடுத்து எல்லாவற்றையும் தீர்த்து விடுங்கள்.