04.12.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
இனிய குழந்தைகளே, அனைத்தும் நினைவிலேயே தங்கியுள்ளது. நினைவின் மூலம் மாத்திரமே நீங்கள் இனிமையானவர்கள் ஆக முடியும். இந்த நினைவில் மாத்திரமே மாயையுடனான போர் உள்ளது.
கேள்வி:
நாடகத்தின் எந்த இரகசியத்தை ஆழமாகக் கடைவதனால் நன்மையுள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிந்துள்ளீர்கள்?பதில்:
நாடகச் சக்கரத்தில் எவருடைய பாகமும் இரு தடவைகள் நடிக்க முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். முழு உலகிலும் அனைவராலும் நடிக்கப்படும் பாகங்கள் அனைத்தும் முற்றிலும் புதியதாகும். எவ்வாறு சத்தியயுகத்திலிருந்து இன்று வரை நாட்கள் மாறுகின்றன என்பதையிட்டு நீங்கள் வியப்படைகின்றீர்கள். முழுச் செயற்பாடுகளும் மாறுகின்றன. ஓர் ஆத்மாவில் பதிந்துள்ள 5000 வருடங்களுக்கான நாளாந்தச் செயற்பாடுகளை என்றுமே மாற்ற முடியாது. இந்தச் சிறிய விடயம் குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறெவரது புத்தியிலும் புகமுடியாது.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களிடம் வினவுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, உங்கள் எதிர்கால அதி மேன்மையான முகங்களையும் அதி மேன்மையான ஆடைகளையும் உங்களால் பார்க்கக்கூடியதாக உள்ளதா? இதுவே அதி மங்களகரமான சங்கமயுகமாகும். சந்தோஷ உலகம் என்று அழைக்கப்படும் புதிய உலகமாகிய சத்தியயுகத்தில் நீங்கள் இவரது வம்சத்தினுள் செல்வீர்கள் என்பதை நீங்கள் உணர்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது அந்த இடத்திற்கான அதிமேன்மையான மனிதர்கள் ஆகுகின்றீர்கள். இங்கு அமர்ந்திருக்கும் போதும் நீங்கள் இவ்வாறான எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும். மாணவர்கள் கற்கும் போது தாங்கள் நாளை என்னவாக ஆகுவார்கள் என்ற விழிப்புணர்வை நிச்சயமாகத் தங்கள் புத்தியில் கொண்டிருப்பார்கள். அதே போன்று நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும் போது விஷ்ணுவின் வம்சத்தினுள் செல்வீர்கள் என்ற விழிப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் புத்தி இப்பொழுது அலௌகீகமாகிவிட்டது. ஏனைய மனிதர்கள் இவ்விடயங்களைத் தங்கள் புத்தியில் சுழற்றுவதில்லை. இது ஒரு பொதுவான சத்சங்கம் அல்ல. இங்கு அமர்ந்திருக்கும் போது சிவன் என அழைக்கப்படுகின்ற உங்கள் சத்தியமான தந்தையாகிய ஒரேயொருவரின் சகவாசத்தில் அமர்ந்துள்ளீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். சிவபாபாவே படைப்பவர் என்பதால் இந்தப் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியை அவர் மாத்திரமே அறிவார். இந்த ஞானத்தை அவரே எங்களுக்குக் கொடுக்கின்றார். அவர் நேற்றைய கதையை எங்களுக்குக் கூறுவது போன்று அதனைக் கொடுக்கின்றார். இங்கமர்ந்தவாறு நீங்கள் புதியவர்கள் ஆகுவதற்கு, அதாவது தற்போதைய சரீரங்களைத் தெய்வீக சரீரங்களாக மாற்றுவதற்காக வந்துள்ளீர்கள் என்பதை நினைவு செய்கின்றீர்கள். இந்த ஆத்மா கூறுகின்றார்: இது எனது பழைய முற்றிலும் தூய்மையற்ற (தமோபிரதான்) சரீரமாகும். நான் இதனை அவரைப் போன்ற சரீரத்திற்கு மாற்றுகின்றேன். எங்கள் இலக்கும் இலட்சியமும் மிக இலகுவானது! உங்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர், கற்கின்ற மாணவர்களாகிய உங்களை விட நிச்சயமாக மிகவும் புத்திசாலி ஆவார். அவர் எவ்வாறு நற்செயல்கள் செய்வது என்பதைக் கற்பிப்பதுடன் செய்தும் காட்டுகின்றார். அதிமேன்மையான கடவுளே உங்களுக்கு இப்பொழுது கற்பிக்கின்றார் என்பதால் அவர் நிச்சயமாக உங்களைத் தேவர்கள் ஆக்குவார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இந்தக் கல்வி புதிய உலகத்திற்கானது. புதிய உலகைப்பற்றி வேறு எவருமே அறியார். இலஷ்மியும் நாராயணனும் புதிய உலகின் அதிபதிகளே. தேவர்களும் வரிசைக்கிரமமானவர்களே. அனைவரும் ஒரேமாதியாக இருக்க முடியாது. ஏனெனில் இது ஓர் இராச்சியமாகும். நீங்கள் இத்தகைய எண்ணங்களைத் தொடர்ந்தும் கொண்டிருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நாங்கள் இப்பொழுது தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாக மாறுவதற்குத் தூய தந்தையை நினைவு செய்கின்றோம். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் இனிய தந்தையை நினைவு செய்கிறீர்கள். தந்தையே கூறுகிறார்: என்னை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் முற்றிலும் புதியவர்களாகவும் தூய்மையானவர்களாகவும் (சதோபிரதான்) ஆகுவீர்கள். அனைத்தும் நினைவு யாத்திரையிலேயே தங்கியுள்ளது. அவரை நீங்கள் எந்தளவு நேரம் நினைவு செய்தீர்கள் எனத் தந்தை நிச்சயமாகக் குழந்தைகளாகிய உங்களிடம் வினவுவார். இந்த நினைவு யாத்திரையிலேயே நீங்கள் மாயையுடன் போர் புரிகின்றீர்கள். போர் என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இது யாத்திரை அல்ல, போரைப் போன்றே உள்ளது. நீங்கள் இதில் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஞானத்தில் மாயையின் புயல் என்ற கேள்விக்கே இடமில்லை. குழந்தைகளாகிய நீங்கள் கூறுகிறீர்கள்: நான் உங்களை நினைவுசெய்ய முயற்சிக்கிறேன். ஆனால் மாயையின் புயல் என்னை வீழ்த்திவிடுகிறது. சரீர உணர்வே முதல் இலக்கப் புயல் ஆகும். பின்னர் காமம், கோபம், பேராசை, பற்று போன்ற புயல்கள் உள்ளன. குழந்தைகளாகிய நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, எந்தத் தடைகளும் வராமல் இருப்பதற்காக, நான் நினைவில் நிலைத்திருப்பதற்கு அதிகளவு முயற்சி செய்கின்றேன். ஆனால் அதற்கு மாறாகப் புயல்கள் வருகின்றன. இன்று கோபத்தின் புயலும் நாளை பேராசையின் புயலும் வருகின்றன. பாபா இன்று எனது ஸ்திதி நன்றாக இருந்தது. நாள் முழுவதும் எந்தப் புயலையும் அனுபவம் செய்யவில்லை. நான் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்தேன். நான் அதிகளவு அன்புடன் தந்தையை நினைவு செய்தேன். அன்புக் கண்ணீரையும் சிந்தினேன். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதனால் நீங்கள் மிகவும் இனிமையானவர் ஆகுவீர்கள். மாயையினால் தோற்கடிக்கப்பட்டதனால் என்ன நிலையை அடைந்தீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். எவரும் இதனைப் புரிந்து கொள்வதில்லை. மக்கள் பல நூறாயிரம் வருடங்களைப் பற்றி பேசுகிறார்கள் அல்லது தொன்று தொட்ட காலத்திலிருந்து தொடர்கிறது என்றும் கூறுகிறார்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: நாங்கள் மீண்டும் ஒருமுறை மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுகின்றோம். தந்தையே வந்து இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். ரூபமற்ற ஒரேயொரு தனித்துவமான தந்தையினால் மாத்திரமே இந்தத் தனித்துவமான ஞானத்தைக் கொடுக்கமுடியும். அசரீரியான ஒரேயொருவரே ரூபமற்றவர் என அழைக்கப்படுகிறார். அசரீரியான ஒரேயொருவர் எவ்வாறு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார்? இந்தச் சரீரத்தில், தான் எவ்வாறு பிரவேசிக்கின்றார் என்பதைத் தந்தையே விளங்கப்படுத்துகின்றார். ஆனால் மக்கள் குழப்பமடைந்து வினவுகிறார்கள்: அவர் எப்பொழுதும் அதே சரீரத்திலேயே வருவாரா? நாடகத்தில் இந்தச் சரீரமே கருவியாக்கப்பட்டுள்ளது. அதில் சிறுமாற்றமேனும் இருக்க முடியாது. நீங்கள் மாத்திரமே இவ்விடயங்களைப் புரிந்துகொள்கிறீர்கள். பின்னர் நீங்கள் அவற்றை ஏனையவர்களுக்கு விளங்கப்படுத்துகிறீர்கள். ஆத்மாக்களே கற்கின்றார்கள். கற்பதும் கற்பிப்பதும் ஆத்மாக்களே. ஆத்மாக்கள் மிகப் பெறுமதிவாய்ந்தவர்கள். ஆத்மாக்கள் அநாதியானவர்கள். ஆனால் சரீரங்கள் மரணிக்கின்றன. பரமாத்மாவாகிய பரம தந்தையிடமிருந்து ஆத்மாக்களாகிய நாங்கள் படைப்பவரினதும் படைப்பின் 84 பிறவிகளின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தையும் பெறுகின்றோம். இந்த ஞானத்தைப் பெறுபவர்கள் யார்? ஆத்மாக்களாகிய நாங்களே. ஞானம் நிறைந்த தந்தையிடம் இருந்து ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது அசரீரியான உலகையும் சூட்சும உலகையும் பற்றிப் புரிந்து கொண்டீர்கள். தங்களை ஆத்மாக்களாகக் கருத வேண்டும் என்று மனிதர்களுக்குத் தெரியாது. அவர்கள் தம்மைச் சரீரங்கள் என்று கருதுவதால் தலை கீழாகத் தொங்குகின்றார்கள். ஆத்மா சத்தியமானவர் என்றும் உயிருள்ளவர் என்றும் பேரானந்த சொரூபமானவர் என்றும் நினைவு கூரப்பட்டுள்ளார். பரமாத்மாவின் புகழே அதி மகத்துவமானதாகும். ஒரேயொரு தந்தையின் புகழே அதிகளவு உள்ளது. அவர் மாத்திரமே துன்பத்தை அகற்றி சந்தோஷத்தை அருள்பவர். நுளம்பு போன்றவை, துன்பத்தை அகற்றி சந்தோஷத்தை அருளும் என்றோ அல்லது ஞானக்கடல் என்றோ நீங்கள் புகழ்வதில்லை. இல்லை. இந்தப் புகழ் தந்தைக்கே உரியது. குழந்தைகளாகிய நீங்களும் மாஸ்டர் துன்பத்தை நீக்குபவரும் சந்தோஷத்தை அருள்பவரும் ஆவீர்கள். குழந்தைகளாகிய உங்களிடம் முன்னர் இந்த ஞானம் இருக்கவில்லை. நீங்கள் குழந்தைப் புத்தியுடையவர்களைப் போன்றிருந்தீர்கள். சிறு குழந்தைகளிடம் ஞானமும் இருப்பதில்லை, குறைபாடுகளும் இருப்பதில்லை. அவர்கள் தூய்மையானவர்கள் என்பதாலேயே, அவர்கள் மகாத்மாக்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். ஒரு குழந்தை எவ்வளவு சிறியதாக இருக்கின்றதோ, அந்தளவிற்கு அந்தக் குழந்தை முதற்தரமான மலரைப் போன்றுள்ளார். அந்தக் குழந்தை முற்றிலும் கர்மாதீத ஸ்திதியில் இருப்பதைப் போன்றே உள்ளார். குழந்தைக்கு செயல், நடுநிலைச் செயல், பாவச்செயல் பற்றி எதுவும் தெரியாதிருப்பதால், அந்தக் குழந்தை ஒரு மலரைப் போன்றுள்ளார். தந்தை அனைவரையும் கவருவதைப் போன்று, அந்தக் குழந்தையும் அனைவரையும் கவருகின்றார். தந்தை அனைவரையும் கவர்ந்து அவர்களை நறுமணம் கமழும் மலர்கள் ஆக்கவே வந்துள்ளார். சிலர் இன்னமும் முள்ளாகவே உள்ளார்கள். ஐந்து விகாரங்களின் ஆதிக்கத்திற்குள் இருப்பவர்கள் முட்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். சரீர உணர்வே முதற்தரமான முள்ளாகும். இந்த முள்ளில் இருந்தே ஏனைய அனைத்து முட்களும் பிறக்கின்றன. ஒரு முட்காடு அதிகளவு துன்பத்தைக் கொடுக்கின்றது. ஒரு காட்டில் பல்வேறு வகையான முட்கள் உள்ளன. ஆகையாலேயே இந்த உலகம் துன்ப உலகம் என்று அழைக்கப்படுகின்றது. புதிய உலகில் முட்கள் இருப்பதில்லை. ஆகையாலேயே அது சந்தோஷ உலகம் என்று அழைக்கப்படுகின்றது. சிவபாபா பூந்தோட்டத்தை உருவாக்குகின்றார். ஆனால் இராவணனோ அதனை முட்காடாக மாற்றுகின்றான். ஆகையாலேயே இராவணன் முட்கள் நிறைந்த கிளைகளுடன் சேர்த்து எரிக்கப்படுகின்றான். ஆனால் தந்தையோ மலர்களால் அர்ச்சிக்கப்படுகின்றார். தந்தைக்கும் குழந்தைகளாகிய உங்களுக்கும் மாத்திரமே இந்த விடயங்கள் தெரியும். இந்த விடயங்களை வேறு எவராலும் அறிந்து கொள்ள முடியாது. ஒரு நாடகத்தில் ஒரே பாகம் இருமுறை நடிக்கப்பட முடியாது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உலகில் உள்ள ஒவ்வொருவரது நடிக்கப்படும் பாகங்கள் அனைத்துமே புதியவை என்பது உங்கள் புத்தியில் உள்ளது. இப்பொழுதில் இருந்து சத்தியயுகம் வரை எவ்வாறு நாட்கள் மாறுகின்றன என்பதையும் உங்கள் நடவடிக்கை அனைத்தும் எவ்வாறு மாறுகின்றது என்பதைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள். ஆத்மாக்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் 5000 வருடங்களிற்கான உங்கள் செயற்பாடுகளின் பதிவுகள் பதிவாகி உள்ளன. அதனை என்றுமே மாற்ற முடியாது. ஆத்மாக்களாகிய உங்கள் ஒவ்வொருவரது பாகமும் உங்களுக்குள் பதிவாகி உள்ளது. இந்தச் சிறிய விடயமுமே எவரது புத்தியிலும் பிரவேசிக்க முடியாது. நீங்கள் இப்பொழுது இந்த நாடகத்தின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை அறிவீர்கள். இது ஒரு பாடசாலையாகும். தந்தை தன்னை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் தூய்மையாகலாம் என்பதைக் கற்பிக்கின்றார். தூய்மையற்றவரில் இருந்து தூய்மையானவர் ஆகுவதற்குத் தந்தை வந்து கற்பிப்பார் என்று நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்திருப்பீர்களா? இந்தக் கல்வியின் மூலம் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். பக்தி மார்க்கத்தின் புத்தகங்கள் வேறானவையாகும். அவற்றை ஒரு கல்வியென என்றுமே அழைக்க முடியாது. ஞானம் இல்லாது எவ்வாறு சத்கதி இருக்க முடியும்? தந்தை இல்லாது சத்கதியைப் பெற்றுத்தரக் கூடிய இந்த ஞானத்தை எவ்வாறு நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்? சத்கதி இருக்கும் போது நீங்கள் பக்தி செய்வீர்களா? இல்லை. அங்கு அளப்பரிய சந்தோஷம் உள்ளது. எனவே நீங்கள் ஏன் பக்தி செய்ய வேண்டும்? இந்த நேரத்தில் மாத்திரமே நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்களே இந்த ஞானம் முழுவதையும் கிரகிக்கின்றீர்கள். ஆத்மா எந்தச் சமயத்திற்கும் உரியவர் அல்ல. ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை எடுக்கும் பொழுதே, தான் இந்தச் சமயத்திற்குரியவர் என்று கூறுகின்றார். ஓர் ஆத்மாவின் சமயம் என்ன? முதலில் ஒவ்வொரு ஆத்மாவுமே ஒரு புள்ளியைப் போன்றவர். ஆத்மாக்கள் அமைதி சொரூபங்களும் அமைதிதாமத்தில் வாழ்பவர்களும் ஆவார்கள். குழந்தைகள் அனைவருக்குமே தந்தையின் மீது உரிமை உள்ளது எனத் தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார். ஏனைய சமயங்களுக்கு மாற்றப்பட்ட பல குழந்தைகளும் மீண்டும் வெளிப்பட்டு, தமது ஆதி தர்மத்திற்குத் திரும்பி வருவார்கள். தேவ தர்மத்தை விட்டுச் சென்று ஏனைய சமயங்களுக்கு மாற்றப்பட்ட இலைகள் அனைவருமே தமது சொந்த இடத்திற்கு மீண்டும் திரும்பி வருவார்கள். முதலில் நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். அனைவரும் இந்த விடயங்களை இட்டுக் குழப்பம் அடைந்துள்ளார்கள். இப்பொழுது உங்களுக்குக் கற்பிப்பவர் யார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்களா? எல்லையற்ற தந்தையாகும்! ஸ்ரீகிருஷ்ணர் சரீரதாரியாவார். பிரம்மபாபா, தாதா (மூத்த சகோதரர்) என்று அழைக்கப்படுகின்றார். நீங்கள் அனைவரும் சகோதரர்கள். அதன் பின்னர் அனைத்தும் உங்கள் அந்தஸ்திலேயே தங்கியுள்ளது. ஒரு சகோதரரின் சரீரம் எவ்வாறிருந்தாலும் ஒரு சகோதரியின் சரீரம் எவ்வாறிருந்தாலும் ஒவ்வோர் ஆத்மாவும் சின்னஞ்சிறியதொரு நட்சத்திரமாகும். இந்த ஞானம் முழுவதும் சின்னஞ்சிறிய நட்சத்திரத்திலேயே பதிவாகியுள்ளது. சரீரம் இல்லாத ஒரு நட்சத்திரத்தினால் பேச முடியாது. நட்சத்திரங்களான நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பாகத்தை நடிப்பதற்காகப் பல புலன் அங்கங்களைப் பெறுகின்றீர்கள். நட்சத்திரங்களான உங்களின் உலகம், இவ் உலகத்தை விட முற்றிலும் வேறுபட்டதாகும். ஆத்மாக்கள் இங்கே வந்து ஒரு சரீரத்தை எடுக்கின்றார்கள். ஒரு சரீரம் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இருக்க முடியும். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் தந்தையை சரீரத்தில் இருக்கும் போதே நினைவு செய்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் போது தந்தையை நினைவு செய்கின்றீர்களா? இல்லை. அங்கிருக்கும் போது நீங்கள் எங்கிருக்கின்றீர்கள் என்பதை நீங்கள் அறியாதுள்ளீர்கள். ஆத்மாவும் பரமாத்மாவும் சரீரத்தில் இருக்கும் போதே சந்திப்பு நிகழ முடியும். ஆத்மாக்களும் பரமாத்மாவும் நீண்டகாலமாகப் பிரிந்திருந்தார்கள் என்பது நினைவு கூரப்படுகின்றது. அவர்கள் எவ்வளவு காலம் பிரிந்திருந்தார்கள்? நீங்கள் எவ்வளவு காலம் பிரிந்திருந்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு விநாடியும் கடந்து சென்ற பின்னர் இப்பொழுது 5000 வருடங்கள் ஆகியுள்ளது. நீங்கள் இப்பொழுது மீண்டும் முதல் எண்ணிலிருந்து ஆரம்பிக்கவுள்ளீர்கள். இதுவே மிகச்சரியான கணக்காகும். இவர் எப்பொழுது பிறந்தார் என்று எவராவது உங்களை வினவினால் உங்களால் அதற்கு மிகச்சரியாகப் பதிலளிக்க முடியும். ஸ்ரீ கிருஷ்ணர் முதல் இலக்கப் பிறவியை எடுக்கின்றார். சிவன் எப்பொழுது பிறக்கின்றார் என்பதை உங்களால் நிமிடங்களிலும் விநாடிகளிலும் கணக்கிட்டுக் கூற முடியாது. ஸ்ரீ கிருஷ்ணரைப் பொறுத்தவரை, உங்களால் திகதி, நிமிடம், விநாடியில் கணக்கிட்டுக் கூற முடியும். மனிதர்களின் கடிகாரங்களின் கணக்கில் வித்தியாசம் இருக்க முடியும். சிவபாபா எப்பொழுது வருகின்றார் என்று உங்களால் கூற முடியாது. ஆனால் அவர் அவதரிக்கின்ற நேரத்தில் சற்றேனும் வித்தியாசம் இருக்க முடியாது. நீங்கள் அவரின் காட்சியைக் கண்ட போதே அவர் வந்தார் என்று உங்களால் கூற முடியாது. இல்லை. இதனை உங்களால் ஊகிக்க முடியும். ஆனால் உங்களால் நிமிடத்தையும் விநாடியையும் கணக்கிட முடியாது. அவரது அவதாரம் அலௌகீகமானது (பௌதீகமானது அல்ல). அவர் எல்லையற்ற இரவின் பொழுதே வருகின்றார். ஏனையோர் எடுக்கின்ற அவதாரங்களின் நேரத்தை உங்களால் கூற முடியும். உதாரணத்திற்கு, ஓர் ஆத்மா தனது சரீரத்தில் பிரவேசிக்கின்ற நேரத்தைக் குறிப்பிடலாம். ஓர் ஆத்மா எடுக்கின்ற ஆடை முதலில் சிறிதாகவே இருக்கின்றது. பின்னர் அந்த ஆடை நாளடைவில் வளர்கின்றது. கருப்பையிலிருந்து ஓர் ஆத்மா தனது சரீரத்துடன் வெளியேறுகின்றார். இந்த விடயங்களை நீங்கள் கடைந்து, பின்னர் அதனைப் பிறருக்கு விளங்கப்படுத்த வேண்டும். பல மனிதர்கள் இருக்கின்றார்கள், அவர்கள் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. உங்களிடம் ஒரு பெரிய மண்டபம் இருப்பதைப் போன்றே நீங்கள் நடிக்கின்ற இந்த எல்லையற்ற நாடகத்தின் மேடையும் மிகப் பெரியதாகும். மனிதர்களில் இருந்து நாராயணனாக மாறுவதற்காகவும் தந்தை படைக்கின்ற புதிய உலகில் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவதற்காகவுமே குழந்தைகளாகிய நீங்கள் இங்கே வருகின்றீர்கள். எவ்வாறாயினும் இந்தப் பழைய உலகம் அழிக்கப்பட உள்ளது. பாபாவின் ஊடாக புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகின்றது. பின்னர் அவர் அதனைப் பராமரிக்கவும் வேண்டும். அவர் இந்தச் சரீரத்தை நீக்கிய பின்னர் நிச்சயமாக மீண்டும் வந்து அவரால் புதிய உலகைப் பராமரிக்க முடியும். அதற்கு முன்னர் பழைய உலகம் அழிக்கப்பட வேண்டும். இந்த வைக்கோற்போர் எரியூட்டப்பட வேண்டும். இறுதியில் பாரதம் மாத்திரமே எஞ்சியிருக்கும். ஏனைய அனைத்தும் அழிக்கப்படும். பாரதத்தில் வெகுசிலரே எஞ்சியிருப்பார்கள். நீங்கள் இப்பொழுது முயற்சி செய்வதால் நீங்கள் விநாசத்தின் பின்னர் எந்தத் தண்டனையையும் அனுபவம் செய்வதில்லை. உங்கள் பாவங்கள் அழியாதிருந்தால் நீங்கள் தண்டனையை அனுபவம் செய்வதுடன் நீங்கள் எந்த அந்தஸ்தையும் பெறமாட்டீர்கள். நீங்கள் எங்கே செல்கின்றீர்கள் என்று மக்கள் உங்களிடம் வினவினால் பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசித்திருக்கும் சிவபாபாவைச் சந்திப்பதற்காகவே செல்கின்றேன் என நீங்கள் அவர்களிடம் கூறுங்கள். இந்த பிரம்மா சிவனல்ல. நீங்கள் தந்தையை அதிகளவில் அறிந்திருப்பதற்கு ஏற்ப, அவர் மீது உங்களுக்கு அன்பிருக்கும். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, வேறு எவர் மீதும் அன்பு செலுத்தாதீர்கள். நீங்கள் ஏனைய அனைவர் மீதுள்ள அன்பையும் துண்டித்து, ஒரேயொருவருடன் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அந்த காதலர்களைப் போன்றதேயாகும். 108 பேர் உண்மையான காதலர்கள் ஆகுகின்றார்கள். ஆனால், அவர்களிலும் 8 பேர் மாத்திரமே உண்மையிலேயே உண்மையான காதலர்கள் ஆகுகின்றார்கள். எட்டு பேரின் மணிமாலை உள்ளது. 9 இரத்தினங்கள் நினைவு கூரப்பட்டுள்ளன. இவர்களே எட்டு மணிகளாவார்கள், ஒன்பதாவது பாபா ஆவார். எட்டு பிரதான தேவர்கள் உள்ளனர். பின்னர் திரேதாயுக இறுதிவரை 16,108 இளவரசர்களும் இளவரசிகளும் கொண்ட குடும்பம் உள்ளது. பாபா தனது உள்ளங்கையில் உங்களுக்கு சுவர்க்கத்தைக் காட்டுகின்றார். நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்ற போதை குழந்தைகளாகிய உங்களுக்குள்ளது. நீங்கள் பாபாவுடன் இந்தப் பேரத்தைப் பேச வேண்டும். கூறப்படுகின்றது: அரிதாகவே எந்த வியாபாரியும் இந்த பேரத்தை பேசுகின்றார். அத்தகைய வியாபாரி எவரும் இல்லை. மேலே வசிக்கின்ற ஒரேயொரு பாபாவிடம் நீங்கள் செல்கின்றீர்கள் என்ற போதையைக் குழந்தைகளாகிய நீங்கள் பேணிக் கொள்ள வேண்டும். மக்களுக்கு அவரைத் தெரியாததால் அவர் இறுதியில் வருவார் என்று அவர்கள் கூறுகின்றார்கள். இப்பொழுது இது அதே கலியுகக் கடைசியாகும். இது கீதைக்கும் மகாபாரதத்திற்குமான அதே காலமாகும். அதே யாதவர்களே இப்பொழுது அந்த ஏவுகணைகளைத் தயாரிக்கின்றார்கள். இது அதே கௌரவர்களின் இராச்சியமாகும். இங்கு நிற்கும் நீங்களே அந்தப் பாண்டவர்கள் ஆவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் வீட்டில் இருந்தவாறே வருமானத்தை ஈட்டிக் கொள்கின்றீர்கள். நீங்கள் வீட்டில் அமர்ந்திருக்கும் போதே கடவுள் உங்களிடம் வந்துள்ளார். ஆகையாலேயே பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, உங்கள் வருமானத்தை ஈட்டிக் கொள்ளுங்கள்! இந்த வாழ்க்கை வைரத்தைப் போன்ற பெறுமதிமிக்கது என்று நினைவு கூரப்பட்டுள்ளது. சிப்பிகளைத் துரத்துவதில் உங்கள் நேரத்தை வீணாக்கி விடக்கூடாது. நீங்கள் முழு உலகையும் இப்பொழுது இராம (கடவுளின்) இராச்சியமாக மாற்றுகின்றீர்கள். நீங்கள் சிவனிடம் இருந்து சக்தியைப் பெறுகின்றீர்கள். எவ்வாறாயினும் இக்காலத்தில் பலரும் அகால மரணத்தை அனுபவம் செய்கின்றார்கள். பாபா உங்கள் புத்தியில் உள்ள பூட்டைத் திறக்கின்றார். ஆனால் மாயை அதனைப் பூட்டி விடுகின்றாள். தாய்மார்களாகிய உங்களிடம் ஞானக் கலசம் கொடுக்கப்படுகின்றது. கள்ளங்கபடமற்ற, பலவீனமான உங்களுக்கு அவரே சக்தியைக் கொடுக்கின்றார். இதுவே ஞான அமிர்தமாகும். சமயநூல்களில் எழுதப்பட்டிருக்கும் ஞானம் அமிர்தம் என்று அழைக்கப்படுவதில்லை. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஒரேயொரு தந்தையின் கவர்ச்சியில் நிலைத்திருந்து, ஒரு நறுமணம் கமழும் மலர் ஆகுங்கள். உங்கள் இனிய தந்தையின் நினைவில் நிலைத்திருந்து சரீர உணர்வு என்ற முட்கள் அனைத்தையும் எரித்து விடுங்கள்.2. வைரம் போன்ற பெறுமதிமிக்க இந்தப் பிறவியில் நீங்கள் அழியாத வருமானத்தைச் சேமித்துக் கொள்ள வேண்டும். பெறுமதியற்ற சிப்பிகளைத் துரத்துவதனால் அவற்றை வீணாக்கி விடாதீர்கள். ஒரேயொரு தந்தையின் மீது உண்மையான அன்பைக் கொண்டிருப்பதுடன் ஒரேயொருவரின் சகவாசத்தில் நிலைத்திருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் பிராமண வாழ்க்கையின் சந்தோஷ பாக்கியத்தைக் கொண்டிருந்து சதா சந்தோஷப் போஷாக்கை உண்பதுடன் மற்றவர்களுடனும் அதைப் பகிர்ந்து கொள்வீர்களாக.இந்த உலகில் எவராலும் பிராமணர்களான உங்களைப் போல் பாக்கியசாலிகள் ஆகமுடியாது. ஏனென்றால் நீங்கள் எல்லோரும் இந்த வாழ்க்கையில் மட்டுமே பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் சதா சந்தோஷப் போஷாக்கை உண்பதுடன் மற்றவர்களுடனும் அதைப் பகிர்ந்து கொள்கிறீர்கள். இந்த வேளையில் நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகள். கல்பம் முழுவதிலும் வேறெந்த வேளையிலும் உங்களுக்கு இத்தகைய கவலையற்ற வாழ்க்கை இருக்காது. சத்தியயுகத்தில் நீங்கள் கவலையற்றவர்களாக இருப்பீர்கள். ஆனால் அங்கே உங்களிடம் இந்த ஞானம் எதுவும் இருக்காது. இந்த வேளையில் உங்களுக்கு இந்த ஞானம் உள்ளது. இதனாலேயே உங்களைப் போல் பாக்கியசாலிகள் யாருமில்லை என்பது உங்களின் இதயங்களில் இருந்து வெளிப்படுகிறது.
சுலோகம்:
சங்கமயுகத்தில் சுய இராச்சிய உரிமையைக் கொண்டிருப்பவர்கள், எதிர்கால உலக இராச்சியத்தின் உரிமையைக் கோருவார்கள்.