05.03.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, சந்தோஷத்தைப் போன்ற போஷாக்கு வேறு எதுவுமில்லை. நடக்கும்போதும், உலாவித் திரியும்போதும் தந்தையைச் சந்தோஷத்துடன் நினைவு செய்தால், நீங்கள் தூய்மையாகுவீர்கள்.
கேள்வி:
எந்தப் பாவச் செயலையும் செய்யாதிருப்பதற்கான வழிமுறை என்ன?பதில்:
ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதே, பாவச் செயல்கள் செய்வதிலிருந்து உங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறையாகும். தந்தையின் முதலாவது ஸ்ரீமத்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். இந்த ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால். நீங்கள் பாவச் செயல்களை வெற்றி கொள்வீர்கள்.ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளான நீங்கள் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள். அத்துடன் சகல நிலையங்களிலும் இருக்கின்றார்கள். இப்பொழுது ஆன்மீகத் தந்தை இங்கு வந்துள்ளார் என்பது குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்த அசுத்தமான பழைய உலகிலிருந்து, எம்மை அவர் மீண்டும் ஒரு முறை வீட்டிற்கு அழைத்துச் செல்வார். உங்களைத் தூய்மையாக்குவதற்காகவே தந்தை வந்துள்ளார். அவர் ஆத்மாக்களுடன் மாத்திரம் பேசுகின்றார். ஆத்மாவே தனது செவிகளினூடாகச் செவிமடுக்கின்றார். தந்தையிடம் தனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. ஆதலால் தந்தை கூறுகின்றார்: எனது அறிமுகத்தை உங்களுக்குக் கொடுப்பதற்காக, நான் இந்த சரீரத்தின் ஆதாரத்தை எடுத்துள்ளேன். நான் இந்தச் சாதாரண சரீரத்தில் பிரவேசித்து, குழந்தைகளாகிய உங்களுக்குத் தூய்மையாகுகின்ற வழிமுறையைக் காட்டுகின்றேன். ஒவ்வொரு சக்கரத்திலும் நான் வந்து இந்த வழிமுறையை உங்களுக்குக் காட்டுகின்றேன். இந்த இராவண இராச்சியத்தில் நீங்கள் மிகவும் சந்தோஷம் அற்றவர்களாகி விட்டீர்கள். நீங்கள் துன்பக் குடிலான இராவண இராச்சியத்தில் உள்ளீர்கள். கலியுகம் துன்ப உலகம் என அழைக்கப்படுகிறது. சந்தோஷ உலகம் கிருஷ்ணதாமமாகிய சுவர்க்கமாகும். அந்த உலகம் இப்பொழுதில்லை. எங்களுக்குக் கற்பிப்பதற்காகவே பாபா இப்பொழுது வந்துள்ளார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். தந்தை கூறுகின்றார்: உங்கள் வீட்டிலும் நீங்கள் ஒரு பாடசாலையைக் கட்டலாம். நீங்களும் தூய்மையாகி ஏனையோரையும் தூய்மையாக்க வேண்டும். நீங்கள் தூய்மையாகும் போது, உலகமும் தூய்மையாகும். இப்பொழுது உலகம் சீரழிந்து, தூய்மையற்றுள்ளது. இப்பொழுது இது இராவண இராச்சியமாகும். இவ்விடயங்களை மிக நன்றாகப் புரிந்து கொண்டவர்கள், ஏனையோருக்கும் அவற்றை விளங்கப்படுத்த வேண்டும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். இதே போன்று ஏனையோருக்கும் விளங்கப்படுத்துங்கள். தந்தை வந்திருக்கிறார். அவர் கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். அசுரச் செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். மாயை உங்களைக் கொண்டு என்ன செயல்களைச் செய்வித்தாலும், நிச்சயமாக அவை கண்ணியம் அற்றதாகவும் பாவச் செயல்களாகவுமே இருக்கும். கடவுள் சர்வவியாபி எனக் கூறியதே நீங்கள் செய்த முதலாவது தவறாகும். மாயையே உங்களை இவ்வாறு கூறச் செய்தாள். மாயை ஒவ்வொரு விடயத்திலும் உங்களைக் கொண்டு பாவமான செயல்களைச் செய்விக்கின்றாள். செயல், நடுநிலைச்செயல், பாவச்செயல் ஆகியவற்றின் இரகசியம் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் அடிப்படையில், ஒவ்வொரு கல்பத்தின் அரைவாசிக்கும் நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்தீர்கள். பின்னர் அடுத்த அரைக் கல்பத்திற்கு இராவணனின் கட்டளைகளைப் பின்பற்றுவதனால், நீங்கள் துன்பத்தையே அனுபவம் செய்கின்றீர்கள். இராவண இராச்சியத்தில் நீ;ங்கள் செய்த பக்தி எல்லாம், உங்களைக் கீழே மாத்திரமே கொண்டுவந்தன. இவ்விடயங்களை நீங்கள் அறியவில்லை. உங்கள் புத்திகள் முற்றிலும் கல்லாகிவிட்டன. “கல்லுப் புத்தியும், தெய்வீகப் புத்தியும்” என நினைவு கூரப்படுகிறது. பக்தி மார்க்கத்தில் அவர்கள் கூறுகின்றார்கள்: ஓ கடவுளே! இவருக்கு நல்லதொரு புத்தியைக் கொடுங்கள். அதனால் அவர் இந்த யுத்தம் போன்ற அனைத்தையும் நிறுத்துவார். இப்பொழுது பாபா உங்களுக்கு நல்ல புத்திகளைக் கொடுக்கிறார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். பாபா கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை அற்றவராக வேண்டி இருந்தது. இப்போது நினைவு யாத்திரையின் மூலம் நீங்கள் தூய்மையாக்கப்பட வேண்டும். நீங்கள் சுற்றுலாவுக்கும் செல்லலாம். நடத்தல் போன்றவற்றையும் செய்யலாம். நீங்கள் நீண்ட தூரத்திற்கும் நடக்கலாம். ஏனென்றால், எவ்வளவு தூரத்திற்கு நீங்கள் நடந்து சென்றாலும் பாபாவின் நினைவில் நடந்து செல்லும்போது, நீங்கள் உங்கள் சரீரத்தை மறந்து விடுவீர்கள். கூறப்பட்டுள்ளது: சந்தோஷத்தைப் போன்ற போஷாக்கு எதுவுமே இல்லை. மக்கள் பணம் சம்பாதிப்பதற்காக சந்தோஷமாகத் தொலை தூரத்திற்கும் செல்கிறார்கள். இங்கு நீங்கள் செல்வமும் செழிப்பும் உடையவர் ஆகுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் வந்து எனது அறிமுகத்தை ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கொடுக்கின்றேன். இக்காலத்தில் அனைவரும் தூய்மை அற்றுள்ளதால், அவர்கள் தொடர்ந்தும் அழைக்கின்றார்கள்: வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! ஆத்மாக்களே தந்தையை அழைக்கின்றார்கள். துன்பக் குடிலான இராவண இராச்சியத்தில் அனைவரும் சந்தோஷம் இல்லாமல் இருக்கிறார்கள். இராவண இராச்சியம் உலகம் முழுவதிலும் விரிவடைந்து உள்ளது. தற்பொழுது முழு உலகும் தமோபிரதானாக உள்ளது. சதோபிரதானான தேவர்களின் சிலைகளும் உள்ளன. அவர்களின் புகழும் உள்ளது. அமைதி தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்கும் செல்வதற்காக மக்கள் அதிகளவு பிரயத்தனம் செய்கின்றார்கள். கடவுள் வந்து, பக்திக்கான பலனை எப்படிக் கொடுக்கின்றார் என்பது எவருக்குமே தெரியாது. இப்போது கடவுளிடம் இருந்து நாங்கள் பலனைப் பெறுகின்றோம் என்பதனை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். பக்தியின் இருவகையான பலன்கள் உள்ளன: முதலில் முக்தி. இரண்டாவதாக ஜீவன்முக்தி. இவை புரிந்து கொள்ளப்பட வேண்டிய மிகவும் ஆழமான, சூட்சுமமான விடயங்களாகும். பக்தி ஆரம்பமான காலத்திலிருந்து அதிக பக்தி செய்தவர்கள், ஞானத்தை மிக நன்றாகப் புரிந்து கொள்கின்றார்கள். ஆகவே, அவர்கள் பெறுகின்ற பலனும் மிக நல்லதாகவே இருக்கும். குறைந்தளவு பக்தி செய்தவர்கள், சற்றுக் குறைவாகவே இந்த ஞானத்தைப் பெறுவதுடன் பலனும் குறைவாகவே கிடைக்கும். மிகச் சரியான கணக்கு உள்ளது. அந்தஸ்தும் வரிசைக் கிரமமானதே. தந்தை கூறுகின்றார்: எனக்கு உரியவராகிய பின்னரும், நீங்கள் விகாரத்தில் வீழ்ந்தால், என்னை விட்டு விலகிவிட்டீர்கள் என்பதே அதன் அர்த்தம். அது அந்த ஆத்மா முற்றாகவே கீழே வீழ்ந்துவிட்டார் போன்றாகும். சிலர் வீழ்ந்தாலும் பின்னர் மீண்டும் எழுந்து விடுவார்கள். ஆனால் ஏனையோர் முழுமையாகச் சாக்கடைக்குள் வீழ்ந்து விடுகின்றார்கள். அவர்களின் புத்திகள் சீராகுவதே இல்லை. சிலரின் மனச்சாட்சி அவர்களை உறுத்துவதால் துன்பத்தை அவர்கள் அனுபவம் செய்கிறார்கள். அவர்கள் உணர்கின்றார்கள்: நான் கடவுளுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்த பின் அவரை ஏமாற்றி, விகாரத்திலும் வீழ்ந்து விட்டேன். நான் தந்தையின் கரத்தை விட்டுச் சென்று, மாயைக்குச் சொந்தமாகி விட்டேன். அத்தகைய ஆத்மாக்கள் சுற்றுச் சூழலையும் மாசு அடையச் செய்து விடுவார்கள். அவர்கள் சபிக்கப்படுவார்கள். தந்தையுடன் தர்மராஜும் உள்ளார். அந்த நேரத்தில் என்ன செய்கின்றார் என்பதை அந்த ஆத்மா உணர்வதில்லை. ஆனால் பின்னர் அவர் வருந்துவார். அத்தகைய மக்கள் பலர் உள்ளனர். அவர்கள் எவரையாவது கொலை போன்றவற்றைச் செய்கிறார்கள். அதனால் அவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டியுள்ளது. பின்பு தான் காரணம் எதுவுமின்றி அந்த நபரைக் கொலை செய்து விட்டோமே என அவர் வருந்துவார். கோபத்துடன் இருக்கும் போதே பலர் பிறரைக் கொலை செய்கிறார்கள். அதைப் பற்றிய பல செய்திகள் செய்தித் தாள்களில் வருகின்றன. நீங்கள் செய்தித் தாள்களை வாசிப்பதில்லை. வெளி உலகில் என்ன நிகழ்கின்றதென உங்களுக்குத் தெரியாது. நாளுக்கு நாள் உலகின் நிலை மோசமடைந்து கொண்டே வருகின்றது. ஏணியில் இருந்து நீங்கள் கீழிறங்க வேண்டி உள்ளது. உங்களுக்கு இந்த நாடகத்தின் இரகசியங்கள் தெரியும். நீங்கள் பாபாவை மாத்திரம் நினைவு செய்ய வேண்டும் என்பது உங்கள் புத்திகளில் உள்ளது. உங்கள் பதிவேடு பழுதடையக் கூடியவாறு, தீய செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் உங்கள் ஆசிரியர். ஓர் ஆசிரியரிடம் அவரது மாணவர்கள் எப்படிப் படிக்கிறார்கள் என்றும் அவர்களின் நடத்தை எப்படிப்பட்டது என்றும் பதிவுகள் இருக்கும். சிலரின் நடத்தை மிகவும் நன்றாகவும், சிலருடையது குறைவாகவும், ஏனையோர்களினது முற்றிலும் மோசமாகவும் இருக்கும். அனைவரும் வரிசைக் கிரமமானவர்களே. பரமதந்தை உங்களுக்கு மேன்மையான விடயங்களையே கற்பிக்கின்றார். அவருக்கும் ஒவ்வொருவரது நடத்தையைப் பற்றித் தெரியும். நீங்களும் புரிந்து கொள்ளலாம்: என்னிடம் இப்பழக்கம் இருப்பதால் நான் தோல்வி அடைகிறேன். பாபா அனைத்தையும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். நன்றாகக் கற்காதவர்களும், பிறரைச் சந்தோஷமற்றவராக ஆக்குகின்றவர்களும், சந்தோஷம் இல்லாமலே மரணிப்பார்கள். அவர்களுடைய அந்தஸ்தும் அழிக்கப்படும். அவர்கள் அதிகளவு தண்டனையை அனுபவம் செய்வார்கள். இனிய குழந்தைகளே, உங்கள் சொந்த பாக்கியத்தையும் பிறரின் பாக்கியத்தையும் உருவாக்க விரும்பினால், கருணை என்ற சம்ஸ்காரத்தைக் கிரகித்துக் கொள்ளுங்கள். தந்தை கருணையுள்ளவர். அவர் உங்கள் ஆசிரியராகி உங்களுக்குக் கற்பிக்கின்றார். அதே போன்று, சில குழந்தைகள் நன்றாகக் கற்று, ஏனையோருக்கும் கற்பிக்கின்றார்கள். இதில் நீங்களும் கருணையுள்ளவர் ஆகவேண்டும். ஓர் ஆசிரியர் கருணையுள்ளவர். அவர் உங்களுக்கு ஒரு வருமானத்தை சம்பாதிப்பதற்கும் நல்லதொரு பதவியை அடைவதற்குமான வழியைக் காட்டுகின்றார். அக்கல்வியில் பலவகையான ஆசிரியர்கள் உள்ளார்கள். இங்கு ஒரே ஒரு ஆசிரியர் மாத்திரமே உள்ளார். மனிதரிலிருந்து தேவர்களாக மாறுவதற்காக இந்த ஒரு கல்வி மாத்திரமே உள்ளது. தூய்மையே பிரதான விடயம். அனைவரும் தூய்மையாக வேண்டும் என்றே விரும்புகிறார்கள். தந்தை இதற்கான பாதையை உங்களுக்குக் காட்டுகின்றார். எனினும், அது ஒருவரின் பாக்கியத்தில் இல்லை என்றால், அவர் என்ன முயற்சியைச் செய்வார்? ஒருவருக்கு உயர்ந்த மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்பது விதியில் இல்லாவிட்டால், எப்படி அவருடைய ஆசிரியர் அவரை முயற்சி செய்வதற்குத் தூண்ட முடியும்? அந்த ஒருவரே எல்லையற்ற ஆசிரியர் ஆவார். தந்தை கூறுகின்றார்: உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் வரலாற்றையும், புவியியலையும் உங்களுக்கு வேறு எவராலும் விளங்கப்படுத்த முடியாது. இந்த எல்லையற்ற விடயங்கள் அனைத்தும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் விருப்பமின்மை எல்லையற்றது. இது உங்களுக்குக் கற்பிக்கப்படுகின்றது. ஏனெனில் இப்பழைய உலகம் அழிக்கப்பட்டு புதிய உலகம் உருவாக்கப்படுகிறது. சந்நியாசிகள் துறவறப் பாதையை சேர்ந்தவர்கள். உண்மையில் அவர்கள் காடுகளில் இருக்க வேண்டியவர்கள். முன்னர் ரிஷிகளும், முனிவர் போன்றவர்களும் காடுகளிலே வசித்து வந்தார்கள். அவர்களின் சக்தி சதோபிரதானாக இருந்தபோது அது இடம் பெற்றது. அவர்கள் மக்களைக் கவர்ந்தார்கள். சில வேளைகளில் அவர்களுக்காக அவர்களின் குடிசைகளுக்கு உணவும் எடுத்துச் செல்லப்பட்டது. சந்நியாசிகளுக்கு ஆலயங்கள் என்றுமே கட்டப்படுவதில்லை. ஆலயங்கள் எப்பொழுதும் தேவர்களுக்கே கட்டப்படுகின்றன. நீங்கள் பக்தி செய்வதில்லை, நீங்கள் யோகத்தில் நிலைத்திருக்கிறீர்கள். அவர்களின் ஞானம் பிரம்ம தத்துவத்தை நினைவு செய்வதாகும். அவர்கள் பிரம்ம தத்துவத்துடன்(ஒளித்தத்துவம்) இரண்டறக் கலக்கவே விரும்புகிறார்கள். எனினும் தந்தையைத் தவிர வேறு எவராலும் அவர்களை அங்கு அழைத்துச் செல்ல முடியாது. தந்தை சங்கம யுகத்திலேயே வருகின்றார். அவர் வந்து தேவ தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். ஏனெனில் உங்களுக்கு ஒரு புதிய உலகம் தேவைப்படுகின்றது. ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் வீடு திரும்புவார்கள். பழைய உலகில் உள்ள எவருமே அங்கு தங்கியிருக்க முடியாது. நீங்கள் முழு உலகிற்கும் அதிபதிகள் ஆகுகின்றீரகள். முழு உலகின் மீதும் உங்கள் இராச்சியம் இருக்கும்போது, அங்கு நீங்கள் மாத்திரமே இருப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அங்கு வேறு எந்தக் கண்டங்களும் இருக்காது. அங்கு ஏராளமான நிலம் இருக்கும். இங்கும் பெருந்தொகையான நிலம் இருந்த போதும், சனத்தொகை அதிகரிப்பதினால், மேலும் நிலத்தை மீட்டெடுப்பதற்கு கடல் நீரை வற்றச் செய்கிறார்கள். அவர்கள் வெளிநாட்டவர்களிடம் இருந்தே நிலத்தை திரும்ப மீட்டெடுத்தல் பற்றிக் கற்றுக் கொண்டார்கள். முன்பு பம்பாய் எப்படி இருந்தது? எதிர்காலத்தில் அது இருக்காது. பாபா அனுபவசாலி. உதாரணமாக, ஒரு பூமியதிர்ச்சி அல்லது வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களால் வெளியே செல்ல முடியாதிருக்கும். பல இயற்கை அனர்த்தங்கள் ஏற்படவுள்ளன. வேறு எவ்வாறு விநாசம் இடம்பெறும்? சத்திய யுகத்தில் பாரதவாசிகள் ஒரு சிலரே இருப்பார்கள். அது இன்று எப்படி உள்ளது, அது நாளை என்னவாகும்? இவை அனைத்தும் குழந்தைகளாகிய உங்களுக்கே தெரியும். வேறு எவராலும் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் தூய்மை அற்றவர்களாகி விட்டீர்கள். இதனாலேயே வந்து உங்களைத் தூய்மை ஆக்குமாறு, நீங்கள் இப்பொழுது என்னை அழைக்கிறீர்கள். ஆகவே, அவர் நிச்சயமாக வரவேண்டும். அப்போதுதான் தூய உலகம் ஸ்தாபிக்கப்படும். பாபா வந்துவிட்டார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர் உங்களுக்கு மிக நல்ல வழிமுறைகளைக் காட்டுகின்றார். கடவுள் பேசுகின்றார்: மன்மனாபவ! உங்கள் சொந்தச் சரீரம் உட்பட சரீர உறவுகள் அனைத்தையும் துண்டித்து, என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். இதில் மாத்திரமே நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். இந்த ஞானம் மிகவும் இலகுவானது. இதனை ஒரு சிறு குழந்தையாலும் நினைவு செய்ய முடியும். எனினும், அவர் தன்னை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்வது அசாத்தியமாகும். இது முதிர்ந்தவர்களின் புத்திகளிலேயே நிலைத்திருக்கா விட்டால், எப்படி இது சிறு குழந்தைகளின் புத்திகளில் நிலைத்திருக்கும்? அவர் தொடர்ந்தும் “சிவபாபா, சிவபாபா” எனச் சொன்னாலும், தான் ஓர் ஒளிப் புள்ளி என்றும் பாபாவும் ஒரு புள்ளி என்ற புரிந்துணர்வை அவர் இன்னமும் கொண்டிருக்க மாட்டார். இதனை உணர்வில் வைத்திருப்பது சிரமமானது. இதனை நீங்கள் மிகச் சரியாக நினைவு செய்ய வேண்டும். அவர் பெரிய வடிவத்தைக் கொண்டவர் அல்ல. தந்தை கூறுகின்றார்: எனது மிகச் சரியான வடிவம் ஒரு புள்ளியாகும். இதனாலேயே என்னை, நானாகவும், நான் எவ்வாறானவர் என்றும் நினைவு செய்வதற்கு பெரும் முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் பரமாத்மாவே பிரம்ம தத்துவம் என்று கூறுகின்றார்கள். ஆனால் நாங்களோ அவர் மிகச் சின்னஞ்சிறிய புள்ளி எனக் கூறுகின்றோம். இதில் இரவுக்கும் பகலிற்குமான வேறுபாடு உள்ளது. பிரம்ம தத்துவம் என்பது ஆத்மாக்களாகிய நாங்கள் வசிக்கும் இடமாகும். அவர்கள் அதனை பரமாத்மா என அழைக்கிறார்கள். இதனை உங்கள் புத்திகளில் வைத்திருங்கள்: “நான் ஓர் ஆத்மா, பரமாத்மாவின் ஒரு குழந்தை. நான் இந்தக் காதுகள் மூலமாகக் கேட்கிறேன்.” பாபா இந்த வாய் மூலம் கூறுகின்றார்: நானே பரமாத்மா. நான் அப்பால் உள்ள உலகின் வாசியாவேன். நீங்களும் அப்பால் உள்ள உலகில் வாழ்ந்தீர்கள். ஆனால் நீங்கள் மறு பிறவிச் சக்கரத்தினுள் பிரவேசித்தீர்கள், நான் அப்படி வருவதில்லை. நீங்கள் இப்போது உங்கள் 84 பிறவிகளையும் புரிந்து கொண்டுள்ளீர்கள். நீங்கள் தந்தையின் பாகத்தையும் புரிந்துள்ளீர்கள். ஓர் ஆத்மா சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ ஆகுவதில்லை. ஆனால் அவர் கலியுகத்தினுள் வந்ததும் அசுத்தம் அடைகின்றார். அத்தகைய சிறிய ஆத்மாவில் இந்த ஞானம் அனைத்தும் உள்ளது! தந்தையின் தோற்றமும் மிகச் சிறியதே. எனினும் அவர் பரமாத்மா என அழைக்கப்படுகின்றார். அவர் ஞானக் கடலாவார். அவர் வந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இப்போது கற்கின்ற அனைத்தையும் நீங்கள் முன்னைய கல்பத்திலும் கற்றதன் மூலம் தேவர்கள் ஆகினீர்கள். உங்களிலும் தூய்மை அற்றவர்கள் ஆகியவர்களும், தங்கள் புத்திகளைச் சீரழித்துக் கொண்டவர்களும் மிகவும் துர்ப்பாக்கியசாலிகள் ஆவார்கள். இது ஏனெனில் அவர்களால் ஞானத்தைக் கிரகிக்க முடியவில்லை. அவர்களின் மனச்சாட்சி தொடர்ந்தும் உறுத்தும். அவர்களால் மற்றவர்களைத் தூய்மையாக இருக்குமாறு கூறமுடியாது. அவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகியதால் தோற்று விட்டோம் என்பதை உள்ளார்த்தமாகப் புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் சேமித்த வருமானம் முழுவதையும் இழந்து விடுகின்றார்கள். பின்னர் அதற்கு அதிக காலம் எடுக்கும். இந்த ஒரு குத்து அவர்களை முற்றிலும் மயக்கம் அடையச் செய்துவிடுகிறது. அவர்களுடைய பதிவேடு பழுதடைகின்றது. தந்தை கூறுவார்: நீங்கள் மாயையினால் தோற்கடிக்கப்பட்டு விட்டீர்கள். உங்களுடைய பாக்கியம் மிகவும் மோசமானது. நீங்கள் மாயையை வெற்றி கொள்ள வேண்டும். பின்னர் உலக அதிபதிகள் ஆக வேண்டும். சக்கரவர்த்திகள், சக்கரவர்த்தினிகள் மட்டுமே உலகை வென்றவர்கள் என அழைக்கப்படுவார்கள். பிரஜைகள் அவ்வாறு அழைக்கப்பட மாட்டார்கள். சுவர்க்கத்தின் தேவ இராச்சியம் இப்போது ஸ்தாபிக்கப்படுகின்றது. எவர் எதனைச் செய்தாலும் அவர் அதன் வெகுமதியைப் பெறுவார். அதிகளவில் தானம் செய்தவர்கள் அதன் பலனைப் பெறுவது போன்று, எந்தளவிற்கு நீங்களும் தூய்மையாகி, ஏனையோரையும் தூய்மை ஆக்குகின்றீர்களோ, அதற்கேற்பவே நீங்கள் அதன் பலனைப் பெறுகிறீர்கள். தானம் செய்தவர்கள் நினைவு கூரப்படுகிறார்கள். அவர்கள் தமது அடுத்த பிறவியில் தற்காலிக சந்தோஷத்தைப் பெறுகிறார்கள். இங்கே இது 21 பிறவிகளுக்கான விடயம். நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகவேண்டும். முன்னர் தூய்மை ஆகியவர்களே மீண்டும் தூய்மை ஆகுவார்கள். நீங்கள் இந்தப் பாதையில் தொடரும்போது, மாயை உங்களைக் குத்துகிறாள், நீங்கள் கீழே வீழ்ந்து விடுகிறீர்கள். மாயையும் பலம் குறைந்தவள் அல்ல. 8 தொடக்கம் 10 வருடங்கள் தூய்மையாக இருந்த பின்னரும் தூய்மைக்காகப் போராடிய பின்னரும் ஏனையவர்களையும் வீழ்ந்து விடாமல் பாதுகாத்த பின்னரும் அவர்கள் வீழ்ந்து விடுகின்றார்கள். இது அவர்களின் விதி என அழைக்கப்படும். தந்தைக்கு உரியவர்கள் ஆகியதன் பின்னர் அவர்கள் மாயைக்கு உரியவர்கள் ஆகுகின்றார்கள். அதனால் அவர்கள் எதிரிகள் ஆகுகின்றார்கள். கடவுளின் நண்பனாகிய ஒருவரைப் பற்றிய கதையும் உள்ளது. தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு அன்பைப் கொடுப்பதுடன் காட்சிகளையும் கொடுக்கின்றார். சிலர் பக்தி செய்யாமலே காட்சிகளைக் கண்டார்கள். ஆகவே அவர் உங்களைத் தனது நண்பர்கள் ஆக்கினார். பலருக்குப் பல காட்சிகள் கிடைத்தன. ஆனால் நீங்கள் அவர்கள் மீது மாயாஜாலம் செய்கிறீர்கள் என மக்கள் நினைத்துப் பல குழப்பங்களை விளைவித்தார்கள். அதனால் காட்சிகள் நிறுத்தப்பட்டன. இறுதியில், நீங்கள் மீண்டும் தொடர்ந்தும் பல காட்சிகளைக் காண்பீர்கள். ஆரம்பத்தில் நீங்கள் மிகவும் களிப்புடன் இருந்தீர்கள். அத்தகைய காட்சிகள் அனைத்தையும் கண்ட பின்பும் பலர் விலகிச் சென்றுவிட்டனர். சில செங்கற்கள் மிக நன்றாகப் பதப்படுத்தப்பட்டு சூளையிலிருந்து வெளிப்பட்டன. ஆனால் சிலது நன்றாகப் பதப்படுத்தப்படாமல் வெளிவந்தன. சிலது நொருங்கித் தூளாகிவிட்டன. பலர் விலகிச் சென்றுவிட்டனர். இப்பொழுது அவர்கள் இலட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் ஆகி விட்டனர். இப்போது தாங்கள் சுவர்க்கத்தில் இருப்பதாக அவர்கள் நினைக்கின்றார்கள். ஆனால் சுவர்க்கம் இங்கே எப்படி வரமுடியும்? புதிய உலகில் மட்டுமே சுவர்க்கம் இருக்கமுடியும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் பாக்கியத்தை மேன்மையானது ஆக்குவதற்கு, கருணை நிறைந்தவராகி, இந்த ஞானத்தைக் கற்று ஏனையோருக்கும் இதைக் கற்பியுங்கள். தீய பழக்கங்களின் ஆதிக்கத்தினால் ஒருபோதும் உங்கள் பதிவேட்டைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள்.2. சாதாரண மனிதனில் இருந்து தேவர் ஆகுவதற்கு நீங்கள் கிரகிக்க வேண்டிய பிரதான விடயம் தூய்மையாகும். அதனால், ஒருபோதும் தூய்மை அற்றவர்கள் ஆகாதீர்கள், அல்லது உங்கள் புத்தியை அசுத்தம் ஆக்காதீர்கள். உங்கள் மனச்சாட்சியை உறுத்தக் கூடியதாக அல்லது நீங்கள் மனம் வருந்தக் கூடியதாக எந்தச் செயலையும் ஒருபோதும் செய்யாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உலக உபகாரியாகி, உங்களின் விதை ஸ்திதியால் உலகிற்கே ஒளியின் நீரை வழங்குவீர்களாக.விதை ஸ்திதியே அதி சக்திவாய்ந்த ஸ்திதி ஆகும். இந்த ஸ்திதியானது வெளிச்ச வீட்டைப் போன்று செயல்படுகிறது. இந்த ஸ்திதியால் உங்களால் உலகம் முழவதற்கும் ஒளியைப் பரப்புவதற்குக் கருவி ஆகமுடியும். முழு மரமும் வேர்களினூடாக இயல்பாகவே நீரைப் பெறுவதைப் போல், நீங்கள் விதை ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கும்போது, உலகமும் ஒளியெனும் நீரைப் பெறும். எவ்வாறாயினும், உங்களின் ஒளியானது உலகம் பூராகவும் சென்று அடைவதற்கு, உலக உபகாரி என்ற சக்திவாய்ந்த ஸ்திதியை நீங்கள் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இதற்கு, ஒரு மின்குமிழாக அன்றி, ஒரு வெளிச்சவீடு ஆகுங்கள். ஒவ்வோர் எண்ணத்திலும் உலகம் முழுவதற்கும் நன்மை செய்கின்ற விழிப்புணர்வைக் கொண்டிருங்கள்.
சுலோகம்:
ஒத்திசைந்து போகும் சக்தியானது, சரியான நேரத்தில் நீங்கள் திறமைச் சித்தியை அடையச் செய்யும்.அவ்யக்த சமிக்கை: சத்தியத்தினதும் நல்ல பண்புகளினதும் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.
கடவுளை வெளிப்படுத்துவதற்கான அடிப்படை சத்தியம் ஆகும். சத்தியத்தின் ஊடாக மட்டுமே வெளிப்படுத்தல் இடம்பெறும். ஒன்று உங்களின் சொந்த ஸ்திதியின் சத்தியம். இரண்டாவது, சேவையின் சத்தியம். சத்தியத்தின் அடிப்படை, சுத்தமும் பயமற்ற தன்மையுமே ஆகும். இவை இரண்டையும் தாரணை செய்வதன் அடிப்படையில் உங்களால் சத்தியத்தினூடாக இறைவனை வெளிப்படுத்துவதற்குக் கருவி ஆகமுடியும். ஏதாவது வகையான அசுத்தம் இருக்குமாயின், அதாவது, சத்தியம் அல்லது சுத்தம் சிறிதளவேனும் குறைவாக இருக்குமாயின், வெளிப்படுத்தும் பணியில் வெற்றி ஏற்பட மாட்டாது.