05.10.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இன்றுவரை நீங்கள் புகழ்ந்து கொண்டிருந்தவர், இப்பொழுது உங்கள் முன்னிலையில் உள்ளார், ஆகவே நீங்கள் சதா சந்தோஷத்தில் நடனமாட வேண்டும், எதனையிட்டும் கவலையை அனுபவம் செய்யக்கூடாது.

கேள்வி:
முயற்சி செய்கின்ற குழந்தைகள் நிச்சயமாகத் தங்கள் இதயங்களில் எதனைச் சோதித்துப் பார்ப்பார்கள்?

பதில்:
ஆத்மாவான தனக்குள் இன்னமும் பெரிய அல்லது சிறிய முள் ஏதேனும் உள்ளதா? காமம் என்ற முள்ளே அனைத்திலும் மிகவும் கூரான முள்ளாகும். கோபம் என்ற முள்ளும் மிகவும் தீயது. தேவர்கள் என்றுமே கோபப்படுவதில்லை. ஆகவே, இனிய குழந்தைகளே, ஏதேனும் முட்கள் இருந்தால், அவற்றை அகற்றுங்கள். உங்களுக்கு ஓர் இழப்பை ஏற்படுத்தாதீர்கள்.

பாடல்:
நீங்களே தாயும் தந்தையும்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள், தந்தையின் புகழைச் செவிமடுத்தீர்கள். அங்கே, அவர்கள் இதனைத் தொடர்ந்தும் பாடுகின்றார்கள், ஆனால் இங்கே, நீங்கள் பாபாவிடம் இருந்து நடைமுறை ரீதியில் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். பாபா எங்கள் மூலம் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதனை அவர் யார் மூலம் அவ்வாறு ஆக்குகின்றாரோ, அவர்கள் நிச்சயமாகச் சந்தோஷ உலகின் அதிபதிகள் ஆகுவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். பாபாவின் புகழ் எல்லையற்றது, நாங்கள் அவரிடம் இருந்தே எங்களது ஆஸ்தியைப் பெறுகின்றோம். இப்பொழுது வியாழ சகுனங்கள் உள்ளன, அது குழந்தைகளாகிய உங்கள் மீது மாத்திரமல்ல, ஆனால் முழு உலகிலும் உள்ளன. பிராமணர்களாகிய உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். குறிப்பாகப் பாரதத்தின் மீதும், பொதுவாக முழு உலகிலும் இப்பொழுது வியாழ சகுனங்களே உள்ளன, ஏனெனில் நீங்கள் இப்பொழுது 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள் ஆகுகின்றீர்கள். இந்த நேரத்தில் உங்களிடம் எந்தக் கலைகளும் எஞ்சியிருக்கவில்லை. குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு சந்தோஷமாக இருக்க வேண்டும். நீங்கள் இங்கிருக்கும் பொழுது சந்தோஷமாக இருக்கின்றீர்கள், ஆனால் வெளியில் சென்றவுடன் அது மறைந்து விடுகின்றது என்றிருக்கக்கூடாது. நீங்கள் யாருடைய புகழைப் பாடிக் கொண்டிருந்தீர்களோ, அவர் இப்பொழுது உங்கள் முன்னிலையில் பிரசன்னமாகி உள்ளார். 5000 வருடங்களின் முன்னரும் தான் உங்களுக்கு இராச்சியத்தைக் கொடுத்த பின்னர் சென்றதாக பாபா விளங்கப்படுத்துகின்றார். படிப்படியாக அனைவரும் தொடர்ந்தும் அழைப்பார்கள் என்பதை இப்பொழுது நீங்கள் பார்க்க முடியும். உங்கள் சுலோகங்கள் அனைத்தும் வெளிப்படும். உதாரணத்திற்கு, சிலர் கூறுகின்றார்கள்: ஒரேயொரு தர்மமும், ஒரேயொரு இராச்சியமும், ஒரேயொரு மொழியும் மாத்திரமே இருக்க வேண்டும். ஆத்மாக்களே இவ்வாறு கூறுகின்றார்கள். பாரதத்தில் உண்மையில் ஒரேயொரு தேவர்களின் இராச்சியம் மாத்திரமே இருந்தது என்பதை ஆத்மாக்கள் அறிவார்கள். இந்த நறுமணம் தொடர்ந்தும் பரவும். நீங்களே தொடர்ந்தும் இந்த நறுமணத்தைப் பரப்புகிறீர்கள். நாடகத் திட்டத்திற்கு ஏற்ப, யுத்தத்திற்கான அறிகுறிகளும் உங்கள் முன்னிலையில் உள்ளன. இது எதுவும் புதியதல்ல. பாரதம் நிச்சயமாக 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்ததாக வேண்டும். இந்த யோக சக்தியினால் நீங்கள் 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். ‘தானம் செய்தால், கிரணத்தின் சகுனங்கள் அகற்றப்படும்’ என்று கூறப்படுகின்றது. தந்தையும் கூறுகின்றார்: உங்கள் விகாரங்களையும், பலவீனங்களையும் தானம் செய்யுங்கள். இது இராவண இராச்சியம், அல்லவா? தந்தை வந்து, அதிலிருந்து உங்களை விடுவிக்கின்றார். காம விகாரமே மாபெருங் குறைபாடாகும். நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகினீர்கள், இப்பொழுது நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்களாக வேண்டும்; நீங்கள் சரீரங்களின் உணர்வையும் நீக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இவ்விடயங்களைப் புரிந்து கொள்கின்றீர்கள்; அவற்றை உலகம் புரிந்து கொள்வதில்லை. பாரதம் பதினாறு சுவர்க்கக் கலைகளும் நிறைந்திருந்த பொழுது, சம்பூரணமான தேவர்களின் இராச்சியமாக இருந்தது. அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தபொழுது, பாரதம் சுவர்க்கமாக இருந்தது. அது இப்பொழுது ஐந்து விகாரங்கள் என்ற கிரகணத்தால் பீடிக்கப்பட்டுள்ளது, இதனாலேயே தந்தை கூறுகின்றார்: தானம் ஒன்று செய்தால், சகுனங்களின் கிரகணம் அகற்றப்படும். இந்தக் காம விகாரமே உங்களை வீழ்த்துகின்றது. ஆகவே தந்தை கூறுகின்றார்: இதனைத் தானம் செய்தால், நீங்கள் பதினாறு சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் அதனைத் தானம் செய்யாது விட்டால், 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்கள் ஆக மாட்டீர்கள். ஆத்மாக்கள் தங்களுடைய சொந்தப் பாகங்களைப் பெற்றுள்ளார்கள். ஆத்மாக்களாகிய உங்களின் பாகங்கள் எத்தனை மகத்துவமானவை என்பது உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் உலக இராச்சியம் என்ற உங்கள் பாக்கியத்தைப் பெறுகின்றீர்கள். இது ஓர் எல்லையற்ற நாடகம், அத்துடன் இதில் பல நடிகர்களும் உள்ளார்கள். இலக்ஷ்மியும் நாராயணனுமே முதற்தரமான நடிகர்கள் ஆவார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் முதல் இலக்கப் பாகங்களைக் கொண்டிருக்கின்றார்கள். விஷ்ணுவே பிரம்மாவும், சரஸ்வதியும் ஆகுகின்றார், பின்னர் பிரம்மாவும், சரஸ்வதியும் விஷ்ணு ஆகுகின்றார்கள். அவர்கள் எவ்வாறு 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வருகின்றார்கள் போன்ற அனைத்தும் உங்கள் புத்திகளில் உள்ளது. வியாபாரிகள் தங்கள் கணக்குப் புத்தகங்களை வைத்திருக்கும் பொழுது, அவற்றில் சுவஸ்திகாவை வரைகின்றார்கள். அவர்கள் கணேசரை (சுவாஸ்திகா) வழிபடுகின்றார்கள். இது ஓர் எல்லையற்ற கணக்குப் புத்தகமாகும். சுவஸ்திகாவில் நான்கு பாகங்கள் உள்ளன. அதேபோன்று, ஜெகநாத்புரியில் அவர்களிடம் உள்ள ஒரு பானை அரிசி, சமைக்கப்படும் பொழுது, வெந்ததும் நான்கு சம பாகங்களாகப் பிரிகின்றது. அங்கே அவர்கள் சோற்றை மாத்திரமே போக்காகப் படைக்கின்றார்கள். இப்பொழுது குழந்தைகளான உங்களுக்குக் கற்பிப்பவர் யார்? அதி அன்பிற்கினிய தந்தையே வந்து, உங்கள் சேவகராகி, உங்களுக்குச் சேவை செய்கின்றார். ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு உட்படுவதில்லை என்று மக்கள் கூறுகின்றார்கள். ஆத்மாக்களாகிய உங்களுக்குள் 84 பிறவிகளின் பாகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். அதற்கும், ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு உட்படுவதில்லை என்று கூறுவதற்கும் இடையில் பகலுக்கும் இரவிற்குமான வேறுபாடு உள்ளது. இவ்விடயங்கள் அனைத்தையும் ஒருவர் ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்கு அமர்ந்திருந்து புரிந்து கொண்டால் மாத்திரமே, இக்கருத்துக்கள் அவரது புத்தியில் பதியும். நாளுக்கு நாள், பல கருத்துக்கள் தொடர்ந்தும் வெளிப்படுகின்றன. இது ஒரு கஸ்தூரி வாசனை போன்றது; சமயநூல்களில் எந்தச் சாராம்சமும் இல்லை. பாபா கூறுகின்றார்: இப்பொழுது அவை அனைத்தையும் உங்கள் புத்திகளில் இருந்து அகற்றுங்கள். நான் மாத்திரமே ஞானக்கடல். இந்த உறுதியான நம்பிக்கை உங்களுக்குள் இருக்கும் பொழுது, அவை அனைத்தும் உண்மையில் பக்தி மார்க்கத்திற்கானவை என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பரமாத்மாவான பரமதந்தை மாத்திரமே நீங்கள் சீரழிவில் உள்ளபொழுது வந்து உங்களுக்குச் சற்கதியை அருள்கின்றார். ஏணிப் படத்தில் நீங்கள் இதனை மிகவும் தெளிவாகக் காட்ட முடியும். பக்தி மார்க்கம் ஆரம்பமாகும் பொழுது, இராவண இராச்சியமும் ஆரம்பம் ஆகுகின்றது. கீதையின் அத்தியாயம் இப்பொழுது மீண்டும் இடம்பெறுகின்றது. தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும், கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகின்றேன். அவர் மீனாகவும், முதலையாகவும் அவதாரம் எடுக்கின்றார் என்று பின்னர் அவர்கள் கூறியுள்ளார்கள். அவர்கள் 24 அவதாரங்களைப் பற்றிப் பேசுகின்றார்கள். பாபா கூறுகின்றார்: இப்பொழுது உங்கள் மீது வியாழ சகுனங்கள் உள்ளன. நான் உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்கினேன். பின்னர் இராவணன் உங்கள் மீது கிரகணம் என்ற தீய சகுனங்களை ஏற்படுத்தினான். தந்தை மீண்டும் உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குவதற்கு வந்துள்ளார். ஆகவே நீங்கள் உங்களுக்கு ஓர் இழப்பை ஏற்படுத்தக்கூடாது. வியாபாரிகள் எப்பொழுதும் தங்களது கணக்கை ஒழுங்குமுறையாக வைத்திருக்கின்றார்கள். இழப்பை ஏற்படுத்துபவர்கள் பொது அறிவு அற்றவர்கள் (அநாரி) என்று அழைக்கப்படுகின்றார்கள். அவரே மாபெரும் வியாபாரி. அவருடன் அரிதாகவே எவரேனும் இவ்வியாபாரத்தைச் செய்கின்றார்கள். இது ஓர் அழியாத வியாபாரம், ஏனைய அனைத்து வியாபாரங்களும் தூசாகப் போகின்றன. நீங்கள் இப்பொழுது உண்மையான வியாபாரம் செய்கின்றீர்கள். தந்தையே இரத்தின வியாபாரியான, எல்லையற்ற வியாபாரி, அவர் ஞானக்கடல் என்றும் அழைக்கப்படுகின்றார். கண்காட்சிகளுக்கு எவ்வளவு பேர் வருகின்றார்கள் என்று பாருங்கள்! ஒரு நிலையத்திற்கு அரிதாகச் சிலரே வருவார்கள். பாரதம் மிகப் பெரியது. நீங்கள் சகல இடங்களுக்கும் செல்ல வேண்டும். கங்கை நீர் பாரதம் எங்கும் பாய்வதில்லை. கங்கை நீர் தூய்மையாக்குபவரல்ல என்பதையும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இந்த ஞானத்தின் ஞான கங்கைகளாகிய நீங்களே அங்கு செல்ல வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் எங்கும் கண்காட்சிகளையும், விழாக்களையும் நடத்துகின்றீர்கள். நாளுக்கு நாள், தொடர்ந்தும் சிறந்த படங்களும் உருவாக்கப்படும். மக்கள் பார்த்தவுடனேயே சந்தோஷப்பட்டு, நீங்கள் சரியானதொரு விடயத்தையே விளங்கப்படுத்துகின்றீர்கள் என்று உணரும் வகையில் படங்கள் மிகவும் அழகாக இருக்க வேண்டும். இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. பிராமண தர்மமும் ஸ்தாபிக்கப்படுகின்றது. பிராமணர்களாகிய நீங்களே பின்னர் தேவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது முயற்சி செய்கின்றீர்கள். ஆகவே, உங்கள் இதயங்களையே கேளுங்கள்: எனக்குள் பெரிய அல்லது சிறிய முட்கள் உள்ளனவா? எனக்குள் காமம் என்ற முள் உள்ளதா? மிகச்சிறிய கோபம் என்ற முள் இருப்பதுமே மிகவும் தீமையானது. தேவர்கள் என்றும் கோபப்படுவதில்லை. சங்கரர் தனது மூன்றாவது கண்ணைத் திறந்த பொழுது, விநாசம் ஏற்பட்டதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அது சங்கரரைப் பற்றி உருவாக்கப்பட்டுள்ள, பொய்யான குற்றச்சாட்டு. விநாசம் இடம்பெற வேண்டும். சூட்சும உலகில் சங்கரர் எவ்வாறு பாம்பு போன்றவற்றைக் கொண்டிருக்க முடியும்? அங்கே பாம்புகள் போன்றன வெளிப்படுவதற்கு எந்த நிலப்பரப்பும் இருப்பதில்லை. பாம்புகள் ஆகாயத்தில் அலைந்து திரிவதில்லை. சூட்சும உலகிலோ அல்லது அசரீரி உலகிலோ பூந்தோட்டங்கள் அல்லது பாம்புகள் போன்றவை எதுவும் இருப்பதில்லை. அவ்விடயங்கள் அனைத்தும் இங்கேயே இருக்கின்றன. சுவர்க்கமும் இங்கேயே உள்ளது. இந்நேரத்தில் மனிதர்கள் முட்களைப் போன்றுள்ளார்கள், இதனாலேயே இவ்விடம் ஒரு முட்காடு என்று அழைக்கப்படுகின்றது. சத்தியயுகம் பூந்தோட்டம் ஆகும். பாபா எவ்வாறு ஒரு பூந்தோட்டத்தை உருவாக்குகின்றார் என்பதை உங்களால் பார்க்க முடிகின்றது. அவர் உங்களை அதி அழகானவர்கள் ஆக்குகின்றார். அவர் உங்கள் அனைவரையும் அழகானவர்கள் ஆக்குகின்றார். அவரே என்றென்றும் அழகானவராக இருக்கின்றார். அவர் குழந்தைகளான உங்களை, மணவாட்டிகளான உங்கள் அனைவரையும் அழகானவர்கள் ஆக்குகின்றார். இராவணன் உங்களை முற்றிலும் அவலட்சணமாக ஆக்கியுள்ளான். உங்கள் மீது வியாழ சகுனங்கள் உள்ளன என்பதையிட்டுக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது சந்தோஷத்துடன் இருக்க வேண்டும். அரைவாசிக் காலத்திற்கு நீங்கள் சந்தோஷத்தையும், ஏனைய அரைவாசிக் காலத்திற்குத் துன்பத்தையும் கொண்டிருப்பதில் என்ன நன்மை இருக்கும்? இல்லை, முக்கால்வாசி காலத்திற்கு நீங்கள் சந்தோஷத்தில் இருக்கின்றீர்கள். இந்த நாடகம் முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது. அத்தகையதொரு நாடகம் ஏன் உருவாக்கப்பட்டது என்று பலரும் கேட்கின்றார்கள். ஓ! ஆனால் அது அநாதியானது; அது ஏன் உருவாக்கப்பட்டது என்ற கேள்வி எழ முடியாது. இது ஆதியும் அநாதியுமான முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்ட நாடகம். முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டதே நடைபெறுகின்றது. எவராலும் அநாதியான முக்தியைப் பெற முடியாது. இதுவே தொடர்ந்து வருகின்ற, அநாதியான உலகம், அது தொடரும். பிரளயம் என்றுமே இடம்பெறுவதில்லை. பாபா உலகைப் புதியதாக ஆக்குகின்றார், ஆனால், அதில் எந்தளவிற்கு ஓர் எல்லை உள்ளது? மக்கள் தூய்மை அற்றவர்களாகவும், சந்தோஷம் அற்றவர்களாகவும் ஆகும்பொழுது, அழைக்கின்றார்கள். பாபா வந்து, அனைவரது சரீரங்களையும் கல்ப விருட்சத்தைப் (அமரத்துவம்) போன்று ஆக்குகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகும் பொழுது, தூய சரீரங்களைப் பெறுகின்றீர்கள். தந்தை உங்கள் சரீரங்களை அநாதியானவை ஆக்குகின்றார், அதாவது, அரைக்கல்பத்திற்கு நீங்கள் அகால மரணத்தை அனுபவம் செய்ய மாட்டீர்கள்; நீங்கள் மரணத்தை வெல்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள்; பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருகின்றீர்களோ, அந்தளவிற்கு அது சிறப்பாக இருக்கும். ஒவ்வொருவரும் பெரும் வருமானத்தை ஈட்ட முயற்சிக்க வேண்டும். விறகு பொறுக்குபவர்கள் கூட, தாங்கள் மேலும் பெருமளவு விறகுகளைப் பொறுக்கும் பொழுது, பெருமளவு வருமானம் ஈட்டுவார்கள் என்று கூறுகின்றார்கள். சிலர் ஏமாற்றிச் சம்பாதிக்கின்றார்கள். அங்கே அத்தகைய துன்பம் இருக்க மாட்டாது. இப்பொழுது நீங்கள் தந்தையிடம் இருந்து அத்தகைய மகத்தானதோர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குத் தகுதியானவர்களா என்று உங்களை நீங்களே சோதித்துப் பார்க்க வேண்டும். (நாரதரின் உதாரணமும் உள்ளது.) அவர்கள் சமயநூல்களில் பல விடயங்களை எழுதியுள்ளார்கள். இப்பொழுது, அந்த யாத்திரைகள் அனைத்திற்கும் முடிவு கட்டுங்கள். ஒரு பாடலும் உள்ளது: நீங்கள் சகல திசைகளில் சென்றபொழுதும், தொலைவிலேயே இருந்தீர்கள். தந்தை இப்பொழுது உங்களுக்கு அத்தகைய நல்ல யாத்திரையைக் கற்பிக்கின்றார். இதில் எவ்விதமான சிரமமும் இல்லை. தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நான் உங்களுக்கு மிகவும் நல்ல வழிமுறையைக் கூறுகின்றேன். குழந்தைகளே, நீங்கள் செவிமடுக்கின்றீர்களா? இது நான் கடனாகப் பெற்றுள்ள, எனது இரதம். இந்தத் தந்தை (பிரம்மபாபா) அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றார்: நான் எனது சரீரத்தைத் தந்தைக்குக் கடனாகக் கொடுத்திருக்கின்றேன், அவர் என்னை ஓர் உலக அதிபதி ஆக்குகின்றார். அதன் பெயரே பகீரதன் (பாக்கிய இரதம்). குண்டுகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். நெருப்பும் இருக்கும். இராவணனைக் கொல்வதற்காக, அவர்கள் அவனது கொடும்பாவியை எரிக்கின்றார்கள். இங்கே, இராவணனைக் கொல்வது என்ற கேள்விக்கே இடமில்லை. ஒருபுறம் இராவணனைக் கொல்வதும், மறுபுறம் இராவண இராச்சியத்தின் முடிவும் உள்ளன. குழந்தைகளாகிய நீங்கள் இராமரின் பூமிக்குச் செல்வதற்கு முயற்சி செய்கின்றீர்கள், ஆகவே நீங்கள் முழு முயற்சி செய்ய வேண்டும். முட்கள் ஆகாதீர்கள். நீங்கள் பிராமணர்கள். உங்களது அனைத்தும் முரளியிலேயே தங்கியுள்ளது. உங்களுக்கு முரளிகள் கிடைக்காமல் போனால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒரு நபரால் மாத்திரமே இந்த ஞானத்தைக் கொடுக்க முடியும் என்று நினைக்காதீர்கள். எவராலும் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியும். நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்துவதற்காக, மிகச் சிறந்த படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதான படங்களை உங்கள் கடைகளில் நீங்கள் வைத்திருந்து, ஏனைய பலருக்கும் நன்மை அளிக்கலாம். அந்தப் பேரத்தைச் செய்வதுடன், இந்தப் பேரத்தையும் பேசுங்கள். இது பாபாவின் இந்த அழியாத ஞான இரத்தினங்களின் கடையாகும். பாபா உங்களை வீடுகள் போன்றவற்றைக் கட்ட வேண்டாம் என்று தடைவிதிப்பதில்லை. அவற்றை நீங்கள் கட்டலாம், இல்லாவிட்டால் பணம் மண்ணோடு மண்ணாகிப் போகும். எனவே பதிலாக, நீங்கள் ஒரு வீட்டைக் கட்டி, சௌகரியமாக வாழ்ந்தால் என்ன? உங்களிடம் உள்ள பணத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும். வீடுகள் கட்டுவதற்கும், அதிலிருந்து நீங்கள் உண்பதற்கும், தானம் செய்வதற்கும் உங்கள் பணத்தைப் பயன்படுத்துங்கள். காஷ்மீர் அரசர் மரணித்த பொழுது, தனது தனிப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் ஆரிய சமாஜத்திற்குத் தானமாகக் கொடுத்தார். அவர்கள் தமது சொந்தச் சமயத்திற்கே அனைத்தையும் கொடுக்கின்றார்கள். இங்கே அவ்வாறில்லை. அனைவருமே குழந்தைகள், தானம் போன்றவற்றைச் செய்தல் என்ற கேள்விக்கே இடமில்லை. அவை எல்லைக்கு உட்பட்ட தானங்கள். நான் உங்களுக்கு உலக இராச்சியத்தைக் கொடுக்கின்றேன். நாடகத்திற்கேற்ப, பாரத மக்கள் தங்களது இராச்சிய பாக்கியத்தைப் பெறுவார்கள். பக்தி மார்க்கத்தில் வியாபாரிகள் நிச்சயமாகச் சமய சம்பந்தமான விடயங்களுக்கெனச் சிறிதளவு பணத்தை ஒதுக்கி வைக்கின்றனர், அவர்கள் தமது அடுத்த பிறவியில் அதற்கான எல்லைக்கு உட்பட்ட வெகுமதியைப் பெறுகின்றார்கள். நான் இப்பொழுது நேரடியாக இங்கு வந்திருக்கின்றேன். ஆகவே, உங்களிடம் உள்ள அனைத்தையும் நீங்கள் இப்பணிக்காகப் பயன்படுத்த வேண்டும். எனக்கு எதுவும் தேவையில்லை. சிவபாபாவிற்குத் தனக்கென்று ஒரு வீடு கட்ட வேண்டிய அவசியம் உள்ளதா? இவை அனைத்தும் பிராமணக் குழந்தைகளாகிய உங்களுக்கு உரியது. ஏழைகள், செல்வந்தவர்கள் அனைவரும் ஒன்றாக வாழ்கின்றார்கள். எனவே, இவை அனைத்தும் குழந்தைகளாகிய உங்களுக்கானது. ஒருவர் தனது வீட்டில் எவ்வாறு சௌகரியமாக வாழ்கின்றார் என்பது பார்க்கப்பட்டு, இங்கேயும் அந்தச் சௌகரியங்கள் அனைத்தும் கொடுக்கப்பட வேண்டும். இதனாலேயே நீங்கள் அனைவருக்கும் விருந்தோம்பல் வழங்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. உங்களிடம் ஏதாவது ஒன்று இல்லாவிட்டால், அது உங்களுக்குக் கொடுக்கப்பட முடியும். தந்தை குழந்தைகளாகிய உங்கள் மீது அன்பு வைத்திருக்கிறார். வேறு எவராலும் அந்தளவிற்கு அன்பு வைக்க முடியாது. குழந்தைகளான உங்களிடம் முயற்சி செய்யுமாறு அடிக்கடி கூறப்படுகின்றது. பிறருக்காகவும் நீங்கள் பல்வேறு வழிமுறைகளை உருவாக்குங்கள். குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் விளங்கப்படுத்துவதற்கு, மூன்று சதுர அடி நிலம் மாத்திரமே தேவைப்படுகின்றது. ஒரு முக்கியஸ்தரிடம் மண்டபம் ஒன்று இருந்தால், அவரிடம் கூறுங்கள்: நாங்கள் பிரதானமான, அவசியமான படங்களை இங்கே வைத்து விட்டு, காலையில் இரண்டு மணித்தியாலங்களுக்கும், மாலையில் இரண்டு மணித்தியாலங்களுக்கும் வகுப்புக்கள் நடத்தி விட்டுச் சென்று விடுகின்றோம். அதற்குத் தேவையான பணத்தை நாங்கள் கொடுப்போம், உங்கள் பெயரும் போற்றப்படும். பலரும் வந்து சிப்பிகளிலிருந்து வைரங்களாக மாறுவார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அநாதியான தந்தையுடன், உண்மையான அழியாத வியாபாரத்தைச் செய்யுங்கள். அந்த வியாபாரத்துடன், இந்த வியாபாரத்திற்கும் உங்கள் நேரத்தைக் கொடுங்கள். இந்த ஞானத்தின் ஞான கங்கையாகி, அனைவரையும் தூய்மையாக்குங்கள்.

2. பிராமண வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள முரளியை நீங்கள் பெருமளவு அன்புடன் செவிமடுப்பதுடன், பிறருக்கும் அதனை வாசிக்க வேண்டும். உங்களுக்குள் எந்த முள்ளாவது இருந்தால், அதனை அகற்றுங்கள். குறைபாடுகளைத் தானம் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் கருணை நிறைந்த உணர்வுகளைக் கொண்டிருந்து, உங்களின் தூய மற்றும் சாதகமான எண்ணங்களால் உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுவீர்களாக.

உங்களுடன் சதோகுணி அல்லது தமோகுணி என்று எந்த வகையான ஆத்மா தொடர்பில் வந்தாலும் நீங்கள் அவர்களுக்காக சதா தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருப்பவர்கள். அதாவது, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுபவர்கள். எந்தவோர் ஆத்மாவின் மீதும் வெறுப்பான பார்வையைக் கொண்டிராதீர்கள். ஏனென்றால், அந்த ஆத்மா அறியாமையின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறார், அவர் புரிந்துணர்வு இல்லாமல் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த ஆத்மாவின் மீது வெறுப்புக் கொள்ளாமல், கருணையும் அன்பும் கொண்டிருங்கள். மற்றவர்களுக்காகத் தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருக்கும் ஆத்மாக்கள் ஒருபோதும், இவர் ஏன் இப்படிச் செய்தார்? என்று நினைக்க மாட்டார்கள். எப்படி இத்தகையதோர் ஆத்மாவிற்கு நன்மை செய்ய முடியும் என்றே அவர்கள் எப்போதும் நினைப்பார்கள். இதுவே நலம் விரும்பும் ஸ்திதி ஆகும்.

சுலோகம்:
அசாத்தியத்தை சாத்தியம் ஆக்குவதற்கு தபஸ்யாவின் சக்தியைப் பயன்படுத்தி, வெற்றி சொரூபம் ஆகுங்கள்.

அவ்யக்த சமிக்ஞை: மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்து, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.

அவர்கள் திரிகாலதரிசியாக இருப்பதன் மூலமும் தமக்கு முன்னால் இருக்கும் ஆத்மாவுடன் முழுமையாக ஒத்துழைப்பதன் மூலமும் ஒவ்வோர் ஆத்மாவின் பலவீனங்களை இனங்கண்ட போதும் அவர்கள் அந்தப் பலவீனத்தை கிரகிப்பதில்லை, அவர்கள் அதைப் பற்றிப் பேசுவதில்லை. ஆனால் தமது உபகாரி ரூபத்தால் ஆத்மாக்கள் அனைவரின் பலவீனங்கள் என்ற முட்களை முடிப்பார்கள். முட்கள் ஆகுவதற்குப் பதிலாக, அவர்கள் முட்களை மலர்களாக மாற்றுவார்கள்.