06.03.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களின் சரீர வடிவில் ஒரு சிம்மாசனத்தைப் பெற்றுள்ளதைப் போன்றே, தனக்கென சுயமாக சிம்மாசனத்தைக் கொண்டிராத தந்தை, இந்த தாதாவின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

கேள்வி:
கடவுளின் குழந்தைகளாக இருக்கும் உணர்வைக் கொண்டவர்களின் அடையாளங்கள் எவை?

பதில்:
அவர்கள் தந்தையின் மீது உண்மையான அன்பைக் கொண்டிருப்பார்கள். கடவுளின் குழந்தைகள் ஒருபொழுதும் ஒருவரோடு ஒருவர் சண்டையிடவோ அல்லது வாக்குவாதம் செய்யவோ மாட்டார்கள். அவர்கள் ஒருபொழுதும் தூய்மையற்ற பார்வையைக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் பிரம்மா குமாரர்களும் குமாரிகளும் ஆகிவிட்டதால், அதாவது, அவர்கள் சகோதர சகோதரிகள் ஆகிவிட்டதால் அவர்களால் தூய்மையற்ற பார்வையுடன் ஒருவரையொருவர் பார்க்க முடியாது.

பாடல்:
உங்கள் ஆகாய சிம்மாசனத்தை விட்டு நீங்கி பூமிக்குக் கீழிறங்கி வாருங்கள்….

ஓம் சாந்தி.
பாபா இப்பொழுது தன்னுடைய ஆகாய சிம்மாசனத்தை விட்டு நீங்கி இந்த தாதாவின் சரீரத்தைத் தன்னுடைய சிம்மாசனம் ஆக்கியுள்ளார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர் அந்தச் சிம்மாசனத்தை விட்டு நீங்கி இங்கு வந்து இப்பொழுது இங்கு அமர்ந்திருக்கிறார். ஆகாய தத்துவம் மனிதர்களின் சிம்மாசனம் ஆகும். சரீரமின்றி ஆத்மாக்களாகிய நீங்கள் வசிக்கும் பெரும் ஒளித் தத்துவம் ஆத்மாக்களின் சிம்மாசனம் ஆகும். ஆகாயத்தில் நட்சத்திரங்கள் உள்ளதைப் போன்றே, அங்கு சின்னஞ்சிறிய ஆத்மாக்களாகிய நீங்கள் வசிக்கிறீர்கள். தெய்வீகப் பார்வை இல்லாமல் ஓர் ஆத்மாவைப் பார்க்க முடியாது. ஒளிப்புள்ளிகளைப் போன்று, ஆத்மாக்கள் சின்னஞ் சிறிய நட்சத்திரங்கள் ஆவார்கள் எனும் ஞானம் இப்பொழுது குழந்தைகளாகிய உங்களிடம் உள்ளது. தந்தை இப்பொழுது அந்தச் சிம்மாசனத்தை விட்டு நீங்கி வந்துள்ளார். தந்தை கூறுகிறார்: ஆத்மாக்களாகிய நீங்களும் அந்தச் சிம்மாசனத்தை விட்டு நீங்கி, உங்கள் சரீரத்தை உங்கள் சிம்மாசனமாக ஆக்கவேண்டும். எனக்கும் ஒரு சரீரம் நிச்சயமாகத் தேவையாகும். நீங்கள் என்னைப் பழைய உலகத்தினுள் அழைக்கிறீர்கள். பாடல் உள்ளது: தூரதேசவாசி அந்நிய தேசத்தினுள் வந்துள்ளார். ஆத்மாக்களாகிய நீங்கள் வசிக்கும் இடமும் பாபா வசிக்கும் இடமுமே ஆத்மாக்களின் வதிவிடம் ஆகும். பின்னர், அங்கிருந்து, நீங்கள் பாபா ஸ்தாபித்துக் கொண்டிருக்கின்ற, சுவர்க்கத்துக்குச் செல்கிறீர்கள். தந்தை சுவர்க்கத்துக்குள் வரமாட்டார். அவர் ஓய்வுபெறும் ஸ்திதியில், சப்தத்துக்கு அப்பால் வசிக்கிறார். சுவர்க்கத்தில் அவர் தேவைப்படுவதில்லை. அவர் சந்தோஷத்தினதும் துன்பத்தினதும் அனுபவத்திற்கு அப்பாற்பட்டவர். நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்வதுடன் துன்பத்தையும் அனுபவம் செய்கிறீர்கள். நீங்கள் சகோதர சகோதரிகள் என்பதை இப்பொழுது பிரம்மாகுமாரர்களும் குமாரிகளுமாகிய நீங்கள் அறிவீர்கள். ஆகவே ஒருபொழுதும் நீங்கள் ஒருவர் மீதொருவர் தூய்மையற்ற பார்வைக்கான ஓர் எண்ணத்தையேனும் கொண்டிருக்கக் கூடாது. நீங்கள் சகோதர சகோதரிகள் ஆவீர்கள், இங்கு நீங்கள் தந்தையின் முன்னிலையில் தனிப்பட்ட முறையில் அமர்ந்திருக்கிறீர்கள். தூய்மையாக இருப்பதற்கான இந்த வழிமுறையைப் பாருங்கள். இவ்விடயங்கள் சமய நூல்களில் குறிப்பிடப்படவில்லை. அனைவரதும் தந்தை ஒருவரே ஆவார். ஆகவே நீங்கள் அனைவரும் அவருடைய குழந்தைகள் ஆவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஒருபொழுதும் உங்கள் மத்தியில் சண்டையிடவோ அல்லது வாக்குவாதம் செய்யவோ கூடாது. தற்பொழுது, நீங்கள் கடவுளின் குழந்தைகள் என்பது உங்களுக்குத் தெரியும். முன்னர், நீங்கள் அசுரக் குழந்தைகளாக இருந்தீர்கள். இப்பொழுது, சங்கமயுகத்தில், நீங்கள் கடவுளின் குழந்தைகள் ஆகிவிட்டீர்கள். பின்னர் சத்தியயுகத்தில், நீங்கள் தேவ குழந்தைகளாக இருப்பீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இச்சக்கரத்தை அறிந்து கொள்கிறீர்கள். நீங்கள் பிரம்மாகுமார்களும் குமாரிகளும் ஆவீர்கள். ஆகவே, ஒருபொழுதும் தூய்மையற்ற பார்வை இருக்க முடியாது. சத்தியயுகத்தில் தீய பார்வை இல்லை. இராவண இராச்சியத்திலேயே தூய்மையற்ற பார்வை உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் தந்தையைத் தவிர வேறு எவரையும் நினைவு செய்யக்கூடாது. தந்தை ஒருவர்மீதே பெருமளவு அன்பு இருக்கவேண்டும்: என்னுடையவர் ஒரு சிவபாபாவே அன்றி வேறு எவருமல்லர். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது சிவாலயத்துக்குச் செல்ல வேண்டும். சிவபாபா சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். அரைக் கல்பமாக, இராவண இராச்சியம் இருந்து வந்துள்ளது. அதன் மூலம் நீங்கள் சீரழிவையே அடைந்தீர்கள். இராவணன் யார் என்றோ அல்லது நீங்கள் ஏன் அவனை எரிக்கிறீர்கள் என்றோ எவருக்கும் தெரியாது. அவர்களுக்கு சிவபாபாவையும் தெரியாது. அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை அலங்கரித்து, அவற்றைப் பூஜித்து, பின்னர் அவற்றை மூழ்கடிப்பதைப் போன்றே, சிவபாபாவின் களிமண் இலிங்க வடிவத்தையும் உருவாக்கி, அதைப் பூஜித்துப் பின்னர் அக்களிமண்ணை மீண்டும் களிமண்ணுடன் கலந்து விடுகிறார்கள். அதேபோன்று, அவர்கள் இராவணனின் கொடும்பாவியையும் உருவாக்கிப் பின்னர் அதை எரித்து விடுகிறார்கள். அவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. இப்பொழுது இராவண இராச்சியம் உள்ளதென்றும் இராம இராச்சியம் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென்றும் அவர்கள் கூறுகிறார்கள். காந்திஜியும் இராம இராச்சியத்தை விரும்பினார். ஆகவே, இது இராவண இராhச்சியம் என்பதே அதன் அர்த்தம். தந்தை வந்து, இராவண இராச்சியத்தில் காமச்சிதையில் அமர்ந்ததால் எரிக்கப்பட்டிருந்த குழந்தைகளாகிய உங்கள் மீது ஞான மழையைப் பொழிகிறார். அவர் அனைவருக்கும் நன்மை அளிக்கிறார். வறண்ட நிலத்தின்மீது மழை பொழியும் பொழுது, புற்கள் வளர ஆரம்பிப்பதைப் போன்றே, உங்களிடம் ஞான மழை இல்லாத காரணத்தால், நீங்கள் முற்றிலும் வறண்டு போய்விட்டீர்கள். மீண்டும் ஒருமுறை உங்கள் மீது ஞானம் பொழியப்படுகிறது, அதன் மூலம் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பங்களுடன் வசித்தாலும், நீங்கள் அதிகளவில் உள்ளார்ந்த சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். சில ஏழைக் குழந்தைகள் கற்பதால் சட்ட நிபுணர்கள் ஆகுகிறார்கள். அவர்கள் பின்னர் முக்கிய பிரமுகர்களுடன் அமர்ந்திருந்து, ஒன்றாக உண்டு, அருந்துகிறார்கள். இதுவே சமய நூல்களில் உள்ள ‘பில்’லின் (சுதேசிப்பெண்) கதை ஆகும். அதிகூடியளவு பக்தி செய்துள்ளவர்களே வந்து அதிகூடியளவுக்கு ஞானத்தைப் பெறுவார்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஆரம்பத்தில் இருந்து நாங்களே அதிகூடியளவுக்குப் பக்தி செய்துள்ளோம். ஆகவே, எல்லோருக்கும் முதலில் பாபா எங்களையே சுவர்க்கத்துக்கு அனுப்புகிறார். இவை ஞானம் நிறைந்த மிகச்சரியான விடயங்கள் ஆகும். நாங்களே பூஜிக்கத் தக்கவர்களாக இருந்தோம், பின்னர் நாங்கள் பூஜிப்பவர்கள் ஆகினோம். நாங்கள் தொடர்ந்தும் கீழிறங்கினோம். குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம் அனைத்தும் விளங்கப்படுத்தப்படுகிறது. தற்பொழுது முழு உலகிலுள்ள அனைவரும் நாஸ்திகர்கள் ஆவார்கள். அவர்களுக்குத் தந்தையைத் தெரியாது. அவர்கள் “நேற்றி, நேற்றி” (இதுவுமல்ல, அதுவுமல்ல) என்று கூறுகிறார்கள். நீங்கள் தொடர்ந்தும் முன்னேறுகையில், சந்நியாசிகள் வந்து, நிச்சயமாக ஆஸ்திகர்கள் ஆகுவார்கள். இங்கு ஒரு சந்நியாசி வந்திருந்தாலும், அவருடைய சிஷ்யர்கள் அனைவரும் அவரை நம்புவார்கள் என்பதல்ல. பிரம்மாகுமாரர்களும் குமாரிகளும் அவர் மீது ஏதோ மந்திரம் போட்டு விட்டார்கள் என்றே அவர்கள் கூறுவார்கள். அவர்கள் அந்தச் சந்நியாசியை கதியிலிருந்து அகற்றிவிட்டு, அவருடைய சிஷ்யர்களில் ஒருவரை அவருக்குப் பதிலாக அமர்த்துவார்கள். அத்தகைய பல சந்நியாசிகள் உங்களிடம் வந்தார்கள், ஆனால் பின்னர் அவர்கள் காணாமல் போய்விட்டார்கள். இது மிகவும் அற்புதமான நாடகம்! இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரையான அனைத்து விடயங்களையும் அறிவீர்கள். நீங்களும் இதை உங்கள் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாகவே கிரகிக்கிறீர்கள். தந்தையிடம் முழு ஞானமும் இருப்பதால், நீங்களும் அதைக் கொண்டிருக்க வேண்டும். நாளுக்கு நாள், தொடர்ந்தும் பல நிலையங்கள் திறக்கப்படும். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் கருணை நிறைந்தவர்கள் ஆகவேண்டும். தந்தை கூறுகிறார்: உங்கள்மீது கருணை கொண்டிருங்கள். கருணை அற்றவர்களாக இருக்காதீர்கள். உங்கள்மீது கருணை கொண்டிருங்கள். எவ்வாறு? அவர் தொடர்ந்து இதையும் விளங்கப்படுத்துகிறார்: தந்தையை நினைவு செய்து தூய்மை அற்றவர்களிலிருந்து தூய்மை ஆகுங்கள். நீங்கள் ஒருபொழுதும் மீண்டும் தூய்மையற்றவராக முயற்சி செய்யக்கூடாது. உங்கள் பார்வை மிகவும் சிறந்ததாக இருக்க வேண்டும். பிராமணர்களாகிய நாங்கள் கடவுளின் குழந்தைகள் ஆவோம். கடவுள் எங்களைத் தத்தெடுத்துள்ளார். நாங்கள் இப்பொழுது சாதாரண மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறவேண்டும். முதலில், நாங்கள் சூட்சும உலகில் வசிக்கும் தேவதைகள் ஆகுவோம். நீங்கள் இப்பொழுது தேவதைகள் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்குச் சூட்சும உலகின் இரகசியம் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு இது “பேசும்” உலகம் ஆகும். சூட்சும உலகில், அசைவு உள்ளது. அசரீரி உலகில் மௌனம் மட்டுமே உள்ளது. சூட்சும உலகம் தேவதைகளுக்கு உரியது. ஓர் ஆவிக்கு நிழலைப் போன்றதொரு உருவமே உள்ளது. ஓர் ஆத்மா புதிய சரீரத்தைப் பெறாதபொழுது, அவர் அலைந்து திரிகிறார். அது ஓர் ஆவி என்று அழைக்கப்படும். உங்கள் பௌதீகக் கண்களால் உங்களால் அதைப் பார்க்க முடியும். பின்னர், சூட்சும உலகில் வசிப்பவர்களான தேவதைகள் உள்ளார்கள். இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். உங்களிடம் அசரீரி உலகம், சூட்சும உலகம், பௌதீக உலகத்தின் ஞானம் உள்ளது. நீங்கள் நடந்தும் உலாவியும் திரிகையில், இந்த ஞானம் அனைத்தையும் உங்களின் புத்தியில் வைத்திருங்கள். நாங்கள் உண்மையிலே அசரீரி உலக வாசிகள் ஆவோம். இப்பொழுது நாங்கள் சூட்சும உலகினூடாக அங்கு திரும்பிச் செல்லவுள்ளோம். இந்நேரத்தில் மட்டுமே பாபா சூட்சும உலகை உருவாக்குகிறார். முதலில், சூட்சும உலகம் தேவைப்படுகிறது. பின்னர் பௌதீக உலகம் தேவைப்படுகிறது. இப்பொழுது இது சங்கமயுகம் ஆகும். இது இறை யுகம் என்று அழைக்கப்படுகிறது, புதிய உலகமோ தேவர்களின் யுகமாகிய, தெய்வீக யுகம் என்று அழைக்கப்படுகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். நீங்கள் தூய்மையற்ற பார்வையைக் கொண்டிருந்தால், உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாது. இப்பொழுது நீங்கள் பிராமணர்கள் ஆவீர்கள். நீங்கள் வீடு திரும்;பியதும், இதை மறந்து விடக்கூடாது. நீங்கள் தீய சகவாசத்தினுள் செல்லும்பொழுதே, இதை மறக்கிறீர்கள். அன்னங்களாகிய நீங்கள் கடவுளின் குழந்தைகள் ஆவீர்கள். இனியும் நீங்கள் எவருடனும் உள்ளார்த்தமாக எந்தவொரு பற்றின் இழைகளையும் கொண்டிருக்கக் கூடாது. உங்களுக்குப் பற்றின் இழைகள் இருப்பின், நீங்கள் ஒரு பற்றுடைய குரங்கு என்றே அழைக்கப்படுவீர்கள். அனைவரையும் தூய்மை ஆக்குவதே, உங்கள் பணி ஆகும். நீங்களே இவ்வுலகைச் சுவர்க்கம் ஆக்குபவர்கள் ஆவீர்கள். இராவணனின் அசுரக் குழந்தைகளுக்கும் கடவுளின் குழந்தைகளாகிய உங்களுக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. உங்கள் ஸ்திதியை நிலையானது ஆக்குவதற்கு, குழந்தைகளாகிய நீங்கள் அனைத்தையும் பார்த்தும் பார்க்காமல் இருப்பதைப் பயிற்சி செய்ய வேண்டும். உங்கள் புத்தியை உறுதியாகவும், நிலையாகவும் வைத்திருப்பதற்கு உங்களுக்கு தைரியம் தேவை. சம்பூரணம் ஆகுவதற்கு முயற்சி தேவையாகும். நீங்கள் சம்பூரணம் ஆகுவதற்கு உங்களுக்கு காலம் தேவைப்படுகிறது. உங்கள் கர்மாதீத நிலையை நீங்கள் அடையும் பொழுது மட்டுமே, இந்தப் பார்வை ஸ்திரமாக இருக்க முடியும். அதுவரைக்கும், ஏதோவொரு ஈர்ப்பு இருந்துகொண்டே இருக்கும். நீங்கள் முற்றாகவே அதற்கு அப்பால் இருக்க வேண்டும். உங்களுக்கு ஒரு தெளிவான இணைப்புத் தேவை. அனைத்தையும் பார்க்கையில், நீங்கள் எதையும் பார்க்காதது போன்று இருக்க வேண்டும். இப்பயிற்சியைக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவார்கள். இன்னமும் நீங்கள் அந்த ஸ்திதியை அடையவில்லை. சந்நியாசிகள் இவ்விடயங்களைப் புரிந்து கொள்வதில்லை. இங்கு, நீங்கள் அதிக முயற்சி செய்ய வேண்டும். இப்பொழுது நீங்கள் பழைய உலகைத் துறந்து விட்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இலகுவாக உங்கள் இனிய மௌன வீட்டுக்கு நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும். உங்கள் புத்திகளில் இருப்பதைப் போன்று, இது வேறு எவருடைய புத்தியிலும் இருப்பதில்லை. நீங்கள் இப்பொழுது வீடு திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் மட்டுமே அறிவீர்கள். கடவுள் சிவன் பேசுகிறார். அவரே தூய்மையாக்குபவரும், விடுதலையாக்குபவரும், வழிகாட்டியும் ஆவார். கிருஷ்ணர் வழிகாட்டி அல்லர். எவ்வாறு அனைவருக்கும் இந்தப் பாதையைக் காண்பிப்பது என்பதை இந்த நேரத்திலேயே நீங்கள் கற்கிறீர்கள். இதனாலேயே நீங்கள் பாண்டவர்கள் என்று பெயரிடப்பட்டுள்ளீர்கள். நீங்களே பாண்டவ சேனை ஆவீர்கள். இப்பொழுது நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதை அதாவது உங்கள் பழைய சரீரத்தை நீக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாம்பினதும் ரீங்காரமிடும் வண்டினதும் உதாரணங்கள் இவ்வேளையில் உங்களுக்குப் பொருந்துகின்றன. இப்பொழுது நீங்கள் அவற்றின் நடைமுறை வடிவங்களாக இருக்கிறீர்கள். அவைகளால் இதைச் செய்யமுடியாது. இவ்வுலகம் ஒரு மயானபூமி என்பதையும் அது தேவதைகளின் பூமியாக வேண்டும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டகரமானவை ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் எப்பொழுதும் அதிர்ஷ்டசாலிகள் ஆவீர்கள். ஒரு பாடசாலையில் புதிய குழந்தைகள் வியாழக்கிழமையிலே பதிவு செய்யப்படுகிறார்கள். ஆரம்பத்திலிருந்து இது சம்பிரதாயம் ஆகியுள்ளது. விருட்சத்தின் பிரபுவே இப்பொழுது உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார். பிறவி பிறவியாக உங்கள்மீது வியாழ சகுனங்களே இருக்கின்றன. இச்சகுனங்கள் எல்லையற்றவை. பக்தி மார்க்கத்தின் சகுனங்கள் எல்லைக்கு உட்பட்டவை. இப்பொழுது எல்லையற்ற சகுனங்கள் உள்ளதால், நீங்கள் முழு முயற்சி செய்யவேண்டும். ஒருவர் மட்டும் இலக்ஷ்மி அல்லது நாராயணன் ஆகுவார் என்பதல்ல. அங்கு அவர்களின் வம்சமும் இருக்கும். அங்கு நிச்சயமாகப் பலர் ஆட்சி செய்வார்கள். இலக்ஷ்மி நாராயணனின் சூரிய-வம்ச இராச்சியம் உள்ளது. இவ்விடயங்கள் உங்கள் புத்தியில் உள்ளன. எவ்வாறு அவர்கள் தங்கள் இராச்சியத் திலகத்தைப் பெறுகிறார்கள், எவ்வாறு சூரிய-வம்சத்து மக்கள் இராச்சியத்தைச் சந்திர-வம்ச மக்களுக்குக் கையளிக்கிறார்கள் என்றவோர் காட்சியையும் குழந்தைகளாகிய உங்களிற் சிலர் கண்டுள்ளீர்கள். பெற்றோர் குழந்தையின் பாதங்களைக் கழுவி இராச்சிய திலகத்தையும் இராச்சிய பாக்கியத்தையும் அவருக்கு அளிக்கிறார்கள். இக்காட்சிகள் அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. இது பற்றிக் குழந்தைகளாகிய நீங்கள் குழப்பமடையக் கூடாது. தந்தையை இலகுவில் நினைவுசெய்து சுயதரிசனச் சக்கரதாரிகளாகி ஏனையோரையும் இவ்வாறு ஆக்குங்கள். நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றும் உண்மையான பிராமணர்களாகிய, பிரம்மாவின் வாய்வழித் தோன்றல் குழந்தைகள் ஆவீர்கள். சமய நூல்களில் சுயதரிசனச் சக்கரத்தைப் பயன்படுத்துவதில் அதிக வன்முறை காண்பிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது தந்தை உண்மையான கீதையைக் குழந்தைகளாகிய உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். ஆகவே, நீங்கள் அதை உங்கள் இதயத்தால் கற்க வேண்டும். இது மிகவும் இலகுவானது. உங்கள் முழுத் தொடர்பும் கீதையுடனேயே உள்ளது. கீதையில், ஞானமும் யோகமும் உள்ளன. நீங்கள் ஒரு புத்தகத்தை மட்டுமே உருவாக்க வேண்டும். நீங்கள் ஏன் யோகத்தைப் பற்றிய புத்தகங்களை வெவ்வேறாக உருவாக்க வேண்டும்? எவ்வாறாயினும், இந்நாட்களில், யோகம் மிகவும் பிரபல்யமானது. ஆகவே, மக்களை வந்து புரிந்துகொள்ளச் செய்வதற்காக வேறுபட்ட பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தாங்கள் ஒரு தந்தையுடனேயே யோகம் செய்திருக்க வேண்டும் என்பதை அவர்கள் இறுதியில் புரிந்து கொள்வார்கள். இதைச் செவிமடுப்பவர்கள், பின்னர் தங்கள் சொந்த சமயத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள்மீது கருணை கொண்டிருங்கள். உங்கள் பார்வையை மிகவும் சிறந்ததாகவும் தூய்மையானதாகவும் ஆக்குங்கள். உங்களை சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுவதற்காகக் கடவுள் உங்களைத் தத்தெடுத்துள்ளார். ஆகவே, நீங்கள் ஒருபொழுதும் தூய்மையற்றவர் ஆகுவதற்கான எந்த எண்ணத்தையும் கொண்டிருக்கக் கூடாது.

2. முழுமையான கர்மாதீத ஸ்திதியை அடைவதற்கு, சதா அப்பால் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். இப்பழைய உலகிலுள்ள அனைத்தையும் பார்த்தும் பார்க்காதிருங்கள். இதைச் சதா பயிற்சி செய்வதால், நீங்கள் உங்களுடைய ஸ்திதியை நிலையானதாக ஆக்குவீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒவ்வோர் அடியிலும் பலமில்லியன்கள் வருமானத்தைச் சேகரிப்பதன் மூலம் சகல பொக்கிஷங்களாலும் நிரம்பியவராகி, மனநிறைவு அடைவீர்களாக.

தந்தையின் நினைவில் ஒவ்வோர் அடியையும் எடுத்து வைக்கும் குழந்தைகள், ஒவ்வோர் அடியிலும் பலமில்லியன்கள் வருமானத்தைச் சம்பாதிக்கிறார்கள். இந்தச் சங்கமயுகத்தில் மட்டுமே நீங்கள் பலமில்லியன்கள் வருமானத்தின் சுரங்கத்தைப் பெறுகிறீர்கள். சங்கமயுகம் சேகரிப்பதற்கான யுகமாகும். உங்களால் இப்போது நீங்கள் விரும்பிய அளவிற்குச் சேகரிக்க முடியும். ஓர் அடிகூட, அதாவது, ஒரு விநாடிகூட நீங்கள் எதையும் சேகரிக்காமல் விடுபடக்கூடாது. அதாவது, அது வீணாகக்கூடாது. உங்களின் பொக்கிஷக் களஞ்சியம் சதா நிரம்பியிருக்க வேண்டும். உங்களின் உலகமானது எந்தவிதக் குறைவும் இல்லாமல் இருக்க வேண்டும். இத்தகைய சம்ஸ்காரங்களே இருக்க வேண்டும். இப்போது நீங்கள் அவ்வாறு நிரம்பியவர்களாகவும் மனநிறைவு உடையவர்களாகவும் ஆகினால், எதிர்காலத்தில் நீங்கள் எல்லையற்ற பொக்கிஷங்களின் அதிபதி ஆகுவீர்கள்.

சுலோகம்:
எந்தவொரு சூழ்நிலையிலும் குழப்பம் அடைவதற்குப் பதிலாக, ஞானம் நிறைந்த ஆத்மா என்ற ஆசனத்தில் அமர்ந்திருங்கள்.

அவ்யக்த சமிக்கை: சத்தியத்தினதும் நல்ல பண்புகளினதும் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.

உங்களின் வார்த்தைகளில் அன்பும் இனிமையும் மகத்துவமும் இருக்க வேண்டும். அவற்றில் சத்தியம் இருக்க வேண்டும். ஆனால் உங்களின் ரூபத்தில் பணிவும் இருக்க வேண்டும். பயமற்றவர் ஆகி, அதிகாரத்துடன் பேசுங்கள். ஆனால் உங்களின் வார்த்தைகள் மரியாதைக் கோட்டுக்குள் இருக்க வேண்டும். இரண்டின் சமநிலையும் இருக்க வேண்டும். எங்கே சமநிலை இருக்கிறதோ, அங்கே அற்புதங்களைக் காண்பீர்கள். அந்த வார்த்தைகள் கடினமானவையாக இருக்காது. அவை இனிமையாக இருக்கும். எனவே, இப்போது அதிகாரத்திற்கும் பணிவிற்குமான சமநிலையின் அற்புதத்தைக் காட்டுங்கள். இதுவே தந்தையை வெளிப்படுத்துவதற்கான வழிமுறை ஆகும்.

மாதேஷ்வரியின் விலைமதிப்பற்ற வாசகங்கள்

அரைக்கல்பத்திற்கு, ஞானம், பிரம்மாவின் பகலும் அரைக்கல்பத்திற்கு, பக்தி, பிரம்மாவின் இரவும் இருக்கும்.

அரைக்கல்பத்திற்கு, பிரம்மாவின் பகல் இருக்கும். அரைக்கல்பத்திற்கு, பிரம்மாவின் இரவு இருக்கும். இரவு இப்போது முடிவிற்கு வரவேண்டும். காலை வரவேண்டும். கடவுள் இப்போது வந்து இருளை அகற்றி ஒளியைக் கொண்டு வர ஆரம்பிக்கிறார். ஞானத்தின் மூலம் ஒளி ஏற்படுகிறது. பக்தியின் மூலம் இருள் ஏற்படுகிறது. பாடலில் கூறப்படுகிறது: இந்தப் பாவ உலகில் இருந்து எங்களை இதயத்திற்கு ஓய்வும் சௌகரியமும் உள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். இது ஓய்வற்ற உலகம், இதில் எந்தவித சௌகரியமும் இல்லை. முக்தி நிலையில், ஓய்வோ அல்லது ஓய்வற்ற நிலையோ இருக்காது. சத்திய, திரேதா யுகங்கள் ஓய்வும் சௌகரியமும் உள்ள உலகங்களாக இருக்கும். எல்லோரும் அந்த சந்தோஷ உலகை நினைவு செய்கிறார்கள். எனவே, நீங்கள் இப்போது அந்த ஓய்வும் சௌகரியமும் நிறைந்த உலகிற்குச் செல்கிறீர்கள். தூய்மையற்ற ஆத்மாக்கள் எவராலும் அங்கே செல்ல முடியாது. இறுதியில், அவர்கள் தர்மராஜிடம் இருந்து தண்டனையைப் பெற்று, கர்மத்தின் எந்தவிதமான பந்தனத்தில் இருந்தும் விடுபடுவார்கள். பின்னர் தமது தூய சம்ஸ்காரங்களைத் தம்முடன் எடுத்துச் செல்வார்கள். ஏனென்றால், அங்கே எந்தவிதமான தூய்மையற்ற அல்லது பாவ சம்ஸ்காரங்கள் இருக்காது. ஆத்மாக்கள் தமது உண்மையான தந்தையை மறக்கும் போது, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட அநாதியான புதிர் விளையாட்டுக்குரிய நாடகம், வெற்றி, தோல்விக்குரிய விளையாட்டு ஆரம்பம் ஆகுகிறது. இதனாலேயே, நாங்கள் இப்போது சர்வசக்திவானான இறைவனிடம் இருந்து சக்தியை எடுத்துக் கொள்கிறோம். இதன் மூலம் விகாரங்களை வென்று, 21 பிறவிகளுக்கு எமது இராச்சிய பாக்கியத்தைக் கோருகிறோம். அச்சா. ஓம் சாந்தி.