06.10.24    Avyakt Bapdada     Tamil Lanka Murli    24.02.2002     Om Shanti     Madhuban


தந்தையை வெளிப்படுத்துவதற்கு, உங்களின் மனோபாவத்தையும், மற்றவர்களின் மனோபாவத்தையும் சாதகமானதாக மாற்றுங்கள்.


இன்று, உலக உபகாரியான பாப்தாதா, எங்கும் உள்ள தனது குழந்தைகளைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். அவர் ஒவ்வொரு குழந்தையினதும் மனங்களில் உள்ள உற்சாகத்தைப் பார்க்கிறார், அத்துடன் கேட்கிறார். உங்கள் எல்லோருக்கும் உங்களின் மனங்களில் ஒரே இலட்சியம் உள்ளது. அதாவது, விரைவில் தந்தைக்குச் சமமானவர் ஆகவேண்டும் என்பதேயாகும். உங்களின் இலட்சியத்தையும், உங்களின் தைரியத்தையும், மேன்மையான எண்ணத்தையும் பார்க்கும்போது, பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். அத்துடன் கூடவே, உங்கள் எல்லோருக்கும் அதியுயர்ந்த இலட்சியம் இருந்தாலும், அதற்கான தகைமைகள் தென்படும்போது, அதில் நீங்கள் வரிசைக்கிரமமாக இருப்பதையும் அவர் பார்க்கிறார். இலட்சியத்திற்கேற்ற தகைமைகளைக் கொண்டிருத்தல் என்றால், தந்தைக்குச் சமமானவர் ஆகுதல் என்று அர்த்தம். சேவை மேடையில் கருவிகளாக இருக்கும் குழந்தைகள், சதா தந்தையை எப்படி வெளிப்படுத்தலாம், அது எப்போது நடக்கும் என்ற ஒரேயொரு எண்ணத்தையே கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் இத்தகைய எண்ணங்கள் இருக்கிறதல்லவா? அதன்பின்னர் தந்தை குழந்தைகளான உங்களிடம் கேட்கிறார்: குழந்தைகளே, எப்போது நீங்கள் உங்களை உங்களின் சம்பூரணமான மற்றும் முழுமையான ஸ்திதியில் வெளிப்படுத்துவீர்கள்? நீங்கள் அதற்காக ஒரு திகதியை நிச்சயம் செய்துள்ளீர்களா என்ற கேள்வியைக் குழந்தைகளான உங்களிடம் தந்தை கேட்கிறார். அல்லது, அந்தத் திகதியை நிச்சயம் செய்யப் போவதேயில்லையா?

இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள், எந்தவொரு நிகழ்ச்சிக்கும் ஒரு வருடத்திற்கு முன்னரே திகதி நிச்சயம் செய்யப்படுகிறது எனச் சொல்கிறீர்கள். நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்தானே? எனவே, உங்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு திகதியை நீங்கள் நிச்சயம் செய்து விட்டீர்களா எனத் தந்தை கேட்கிறார். நீங்கள் பல மீட்டிங் வைத்தீர்கள்தானே? நீங்கள் தொடர்ந்தும் அவற்றை வைக்கிறீர்கள். இன்று, இதற்கான மீட்டிங், நாளை அதற்கான மீட்டிங். இப்போதும், உங்களில் பலரும் இங்கே மீட்டிங்குகளுக்காகவே வந்துள்ளீர்கள். மீட்டிங்குகளுக்கென மூன்று குழுக்கள் இங்கே வந்துள்ளார்கள். அது மிகவும் நல்லது. ஆனால், இந்த மீட்டிங்கிற்கான திகதி என்ன? உங்களின் எண்ணங்கள் என்னவோ, அதற்கேற்பவே உங்களின் வார்த்தைகளும், செயல்களும் இருக்க வேண்டும். உங்களின் எண்ணங்களும், வார்த்தைகளும் செயல்களும் உங்களின் மேன்மையான இலட்சியத்திற்கேற்ப அமைய வேண்டும். சகல ஆத்மாக்களுக்கும் நன்மையை ஏற்படுத்துவதற்குக் கருவிகளாக இருக்கும் உலக உபகாரிக் குழந்தைகளான நீங்கள் எல்லோரும் எப்போது புலப்படும் ரூபத்தில் மேடையில் வருவீர்கள் என பாப்தாதா பார்க்கிறார். நீங்கள் ஒவ்வொருவரும் மறைமுகமான முயற்சி செய்வதையும், நீங்கள் ஆழ்ந்த அன்பைக் கொண்டிருப்பதையும் பாப்தாதா பார்க்கிறார். எவ்வாறாயினும், எப்போது நீங்கள் இந்த விசேடமான எண்ணத்தின் அன்பிலே முற்றிலும் உங்களை மறந்தவர் ஆகுவீர்கள்? உங்கள் ஒவ்வொருவரிடமும் அந்த அன்பு உள்ளது. ஆனால், நீங்கள் எப்போதும் முற்றுமுழுதாக இந்த எண்ணத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதாவது, சதா இந்த எண்ணத்தை நிறைவேற்றும் ஒரு நடைமுறை ரூபமாக இருக்க வேண்டும். தற்சமயம், உங்களின் எண்ணங்களிலும், உங்களின் பௌதீகச் செயல்களிலும் வேறுபாடு காணப்படுகிறது. அது நடக்க வேண்டும். குழந்தைகளான நீங்களே அதைச் செய்ய வேண்டும். தந்தை எப்படியும் முதுகெலும்பாகவே இருக்கிறார்.

எனவே, உங்களின் மனோபாவத்தால் (விரித்தி) அதிர்வலைகளைப் பரப்புவதே, சேவை செய்வதற்கான அதிவேகமான வழிமுறை என்பதை பாப்தாதா பார்த்தார். மனோபாவம், வேகமான ஏவுகணையை விடவும் வேகமானது. ஒருவரின் மனோபாவத்தால் சூழலையே மாற்ற முடியும். இங்கே அமர்ந்திருந்த வண்ணம் உங்களால் உங்களின் மனோபாவத்தால் நீங்கள் விரும்பிய எந்த இடத்திற்கும், அத்துடன் நீங்கள் விரும்புகின்ற எத்தனை ஆத்மாக்களிடமும் உங்களால் சென்றடைய முடியும். உங்களின் மனோபாவத்தால் உங்களின் பார்வையையும், உலகையும் உங்களால் மாற்ற முடியும். எவ்வாறாயினும், உங்களின் மனோபாவத்தால் சேவை செய்வதில் - உங்களின் மனோபாவத்தால் அதிர்வலைகள் பரப்பப்படுகின்றன - ஏதோவொன்று ஒரு தடையை ஏற்படுத்துகிறது. உங்களின் உயிரற்ற விக்கிரகங்கள் இப்போதும், இந்தக் கடைசிப் பிறவியிலும், அதிர்வலைகளால் சேவை செய்கின்றன, அப்படித்தானே? நீங்கள் அதைப் பார்த்திருக்கிறீர்கள்தானே? நீங்கள் ஆலயங்களைப் பார்த்திருக்கிறீர்கள், அல்லவா? இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் அவற்றைப் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் அவற்றைப் பார்த்திருக்காவிட்டால், எப்படியாவது அவற்றைச் சென்று பாருங்கள். ஏனென்றால், அவை உங்களின் ஆலயங்கள். குமாரிகளே, அவை உங்களின் ஆலயங்களா? அல்லது இந்தியாவில் இருப்பவர்களின் ஆலயங்களா? அவை எல்லோருடைய ஆலயங்களும் ஆகும். அச்சா. பாராட்டுக்கள்! ஆலயங்களில் உள்ள விக்கிரகங்கள் நடைமுறையில் சேவை செய்கின்றன. அதாவது, அந்த ஆலயங்களின் விக்கிரகங்களாக விளங்கும் ஆத்மாக்களான நீங்கள், சேவை செய்கிறீர்கள். பக்தர்கள் பலரும் அதிர்வலைகளினூடாகத் தமது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ஓ உயிர்வாழும் விக்கிரகங்களே, இப்போது நல்லாசிகள் மற்றும் தூய உணர்வுகள் என்ற உங்களின் மனோபாவத்தின் மூலம் அதிர்வலைகளைச் சூழலுக்குள் பரவச் செய்யுங்கள். ‘ஆனால், ஆனால்.....’ எனச் சொல்வது நல்லதாகத் தென்படவில்லை. ஆனால், பாபா அதைச் சொல்ல வேண்டியுள்ளது. பாண்டவர்களே, நீங்கள் ‘ஆனால்’ என்ற இந்த வார்த்தையை விரும்புகிறீர்களா? நீங்கள் அதை விரும்பவில்லை. இன்னமும் ‘ஆனால்’ என்பது இருக்கிறதா அல்லது அது முடிந்து விட்டதா? இதற்கான இலகுவான வழிமுறை என்னவென்றால், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள்ளேயே அதைச் சோதிப்பதாகும். உங்களால் ஒரு விநாடியில் உங்களையே சோதிக்க முடியும். அதை இப்போதே செய்யுங்கள்! பாபா உங்களுக்கு ஒரு விநாடி கொடுக்கட்டுமா? அல்லது, அதைப் பற்றி இப்போது பேசும்போதே ஒரு விநாடியை நீங்கள் பெற்று விட்டீர்களா? இப்போது உங்களையே சோதித்துப் பாருங்கள்: எந்தவோர் ஆத்மாவை நோக்கியும் எனக்குள்ளே எதிர்மறையான அதிர்வலைகள் ஏதாவது இருக்கிறதா? நீங்கள் உலகச் சூழலை மாற்ற விரும்பினால், ஓர் ஆத்மாவிற்கேனும் உங்களின் மனதில் ஏதாவது வீணான அதிர்வலைகள் இருக்குமாயின், அல்லது, உங்களின் நிஜ அதிர்வலைகள் எதிர்மறையாக இருக்குமாயின், உங்களால் உலகை மாற்ற முடியாதிருக்கும். தொடர்ந்தும் தடைகள் ஏற்படும். அதற்கு நேரமும் எடுக்கும். சூழலில் எந்தவிதமான சக்தியும் இருக்காது. சில குழந்தைகள் கூறுகிறார்கள்: அவர் எப்போதும் அப்படித்தான். அவர் அப்படித்தான். அப்போது, அவரை நோக்கி அந்த அதிர்வலையே இருக்கும். அவர்கள் தந்தைக்கும் ஞானம் கொடுப்பார்கள். ‘பாபா, உங்களுக்குத் தெரியுமா, அந்த ஆத்மா அப்படிப்பட்டவர்’. எவ்வாறாயினும், தந்தை உங்களிடம் கேட்கிறார்: அந்த ஆத்மா தவறானவர், பிழை செய்கிறார். அப்படி இருக்கக்கூடாதுதான். ஆனால், அந்தத் தவறை உங்களின் மனோபாவத்தில் வைத்திருப்பதற்குத் தந்தை உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறாரா? தந்தை இதற்கு உங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என நினைப்பவர்கள், உங்களின் ஒரு கையை உயர்த்துங்கள். அதைத் தொலைக்காட்சியில் காட்டுங்கள். (தாதியிடம்) நீங்கள் இதைப் பார்க்கிறீர்கள்தானே? நீங்கள் எல்லோரும் உங்களின் கைகளை உயர்த்தினீர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். இரட்டை வெளிநாட்டவர்கள் தமது கைகளை உயர்த்தினார்களா? அது பாப்தாதாவின் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. ஒரு பிராமண ஆத்மாவிற்கு எந்தவோர் ஆத்மாவை நோக்கியும் எதிர்மறையான அதிர்வலை இருக்கும்வரை, அவரால் அவரின் மனோபாவத்தினூடாக உலக நன்மைக்காக அதிர்வலைகளைச் சூழலில் பரவச் செய்ய முடியாதிருக்கும். இதை மிக உறுதியாகப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு சேவை செய்தாலும், ஒரு நாளில் எட்டு சொற்பொழிவுகள் ஆற்றினாலும், யோகா முகாம்கள் நடத்தினாலும் அல்லது வெவ்வேறு வகையான பாடநெறிகளைக் கற்பித்தாலும், நீங்கள் எந்தவோர் ஆத்மாவிற்காகவும் உங்களின் மனோபாவத்தில் எந்தவொரு பழைய, எதிர்மறையான அதிர்வலையையும் கொண்டிருக்கக்கூடாது. ஓகே, அந்த நபர் தீயவர், பல தவறுகளைச் செய்துள்ளார், பலருக்குத் துன்பத்தை விளைவித்திருக்கிறார். ஆனால், அந்த நபருக்குத் துன்பத்தை விளைவிப்பதற்குப் பொறுப்பாக ஆகுவதற்குப் பதிலாக, உங்களால் ஓர் உதவியாளராகி, அவரை மாற்ற முடியாதா? அவர் துன்பத்தை விளைவிப்பதற்குப் பொறுப்பாகும் வகையில் நீங்கள் அவருக்கு உதவக்கூடாது. ஆனால், அவர் தன்னை மாற்றிக் கொள்வதற்கு உதவுகின்ற ஓர் உதவியாளர் ஆகுங்கள். ஒருபோதும் மாறவே போவதில்லை என நீங்கள் நினைக்கின்ற ஓர் ஆத்மா இருந்தாலும், அல்லது அவர் மாறவே போவதில்லை என நீங்கள் தீர்ப்பு வழங்கினாலும், எல்லோரும் வரிசைக்கிரமமானவர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். அப்படியிருக்கும்போது, அவர் ஒருபோதும் மாறப் போவதில்லை என நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? நீங்கள் ஏன் தீர்ப்பு அளிக்கிறீர்கள்? தந்தையே நீதிபதி ஆவார். நீங்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் நீதிபதிகள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் தீர்ப்புகள் வழங்குவதை தந்தை இன்னமும் காண்கிறார்: இவர் இப்படிப்பட்டவர், இவர் அப்படிப்பட்டவர், இவர் இப்படிப்பட்டவர்.

நீங்கள் தந்தை பிரம்மாவை நடைமுறையில் கண்டீர்கள். ஓர் ஆத்மா மீண்டும் மீண்டும் என்ன தவறிழைத்தாலும், பாப்தாதா, குறிப்பாகத் தந்தை பிரம்மா பௌதீக ரூபத்தில், சகல குழந்தைகளுக்கும் அன்பையும், நினைவுகளையும் வழங்கினார். அத்துடன் எப்போதும் ஒவ்வொரு குழந்தைக்கும், ‘இனிய குழந்தையே, இனிய குழந்தையே....’ என்றே கூறினார். இரண்டு, நான்கு பேர் கசப்பானவர்கள் என்றும், எஞ்சியோர் இனிமையானவர்கள் என்றும் அவர் கூறினாரா? அவர் இத்தகைய ஆத்மாக்களிடமும் எப்போதும் கருணைநிறைந்தவராகவே இருந்தார். அவர் மன்னிப்புக்கடலாக விளங்கினார். ஓகே, நீங்கள் எவருக்காவது உங்களின் மனோபாவத்தில் ஏதாவது எதிர்மறையான உணர்வுகளைக் கொண்டிருந்தால், அதனால் உங்களுக்கு என்ன நன்மை? உங்களுக்கு அதனால் நன்மை ஏற்படுமாக இருந்தால், நீங்கள் அப்படிச் செய்யலாம். அதற்கு உங்களுக்கு அனுமதி உண்டு. எவ்வாறாயினும், அதில் நன்மையே இல்லாதபோது, அதனால் துயரம் மட்டுமே ஏற்படும்போது...... அது உங்களின் முன்னால் வரும்போது, அந்த வேளையில் நீங்கள் கண்ணாடியில் உங்களைப் பார்க்க வேண்டும் என பாப்தாதா கூறுகிறார். எனவே, நன்மை தராத எதையும் உள்ளெடுக்கும் உங்களின் மனோபாவம் தவறானது. எதையும் பற்றி ஞானம் நிறைந்தவராக இருப்பது வேறு விடயம். எது தவறு, எது சரி என்ற ஞானம் உங்களிடம் உள்ளது. ஞானம் நிறைந்தவராக இருப்பது தவறல்ல. ஆனால், தவறான எதையும் உள்ளெடுக்கும் உங்களின் மனோபாவம் தவறானது. ஏனென்றால், மனநிலை சரியில்லாமல் போதல், வீணான எண்ணங்கள், குறைந்த நினைவு சக்தி போன்ற வடிவங்களில் நீங்கள் உங்களுக்கே ஓர் இழப்பை அனுபவம் செய்வீர்கள். நீங்கள்தான் பஞ்ச பூதங்களையும் தூய்மை ஆக்கப் போகின்றீர்கள். அதனால், அவர்கள் ஆத்மாக்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். மனோபாவம், அதிர்வலைகள், சூழல் என்பவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. உங்களின் மனோபாவத்தால், அதிர்வலைகள் உருவாக்கப்படுகின்றன. அந்த அதிர்வலைகள் ஓர் சூழலை உருவாக்கும். எவ்வாறாயினும், உங்களின் மனோபாவமே பிரதானமான விடயமாகும். தந்தையை வெளிப்படுத்துதல் விரைவாக இடம்பெற வேண்டும் என நீங்கள் நினைத்தால், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் மனோபாவத்தை உங்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் சாதமாக ஆக்கிக் கொள்வதே, அதைச் செய்வதற்கான துரிதமான வழியாகும். நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள் ஆகலாம். ஆனால், உங்களின் மனதில் எதிர்மறையான எதையும் கிரகிக்க அனுமதிக்காதீர்கள். எதிர்மறை என்பதன் அர்த்தம் குப்பை என்பதாகும். இப்போது உங்களின் மனோபாவத்தைச் சக்திவாய்ந்தது ஆக்குங்கள். சக்திவாய்ந்த அதிர்வலைகளை உருவாக்குங்கள். சூழலைச் சக்திவாய்ந்தது ஆக்குங்கள். ஏனென்றால், வார்த்தைகளாலும், கற்பித்தல்களாலும் மாற்றம் மிக மெதுவான வேகத்திலேயே இடம்பெறுவதை நீங்கள் எல்லோரும் அனுபவம் செய்துள்ளீர்கள். அது இடம்பெறுகிறது. ஆனால், மெதுவான வேகத்தில். நீங்கள் துரித கதியை விரும்பினால், ஞானம் நிறைந்தவராகவும், மன்னிப்பின் சொரூபமாகவும், கருணைநிறைந்தவராகவும் ஆகி, நல்லாசிகள் மற்றும் தூய உணர்வுகளால் சூழலை மாற்றுங்கள். பாருங்கள், மதுவனத்திற்கு வருகின்ற எவருக்கும் அதிகபட்சம் மனதில் பதிவது என்னவென்பதை நீங்கள் எல்லோரும் நடைமுறையில் கண்டுள்ளீர்கள். சூழல். இங்குள்ள எல்லோரும் வரிசைக்கிரமமாக இருந்தாலும், தந்தை பிரம்மாவின் செயற்களமும், பாப்தாதாவின் ஆசீர்வாத பூமியுமே சூழலை மாற்றுகின்றன. நீங்கள் இதை அனுபவம் செய்துள்ளீர்கள்தானே? எனவே, அதிர்வலைகளால் ஒரு சூழலை உருவாக்குவதென்றால், துரித கதியுடன் இதயத்தில் ஒரு முத்திரை பதித்தல் என்று அர்த்தம். இந்தச் சூழல் அவர்களின் இதயத்தில் பதிந்திருக்கும். அவர்கள் கேட்ட விடயங்கள் மறந்து போகக்கூடும். ஆனால் அவர்களின் இதயங்களில் பதிந்த இந்தச் சூழலை மறக்க முடியாது. அப்படித்தானே? எனவே, பாப்தாதா தொடர்ந்து கேட்கிறார்: எப்போது வெளிப்படுத்துகை இடம்பெறும்? நீங்கள் உங்களுக்கிடையே மிக நல்ல இதயபூர்வமான உரையாடல்கள் செய்கிறீர்கள். அது நல்லது. பாண்டவர்களே, பேசுங்கள். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? சூழலைச் சக்திவாய்ந்தது ஆக்குங்கள். அது நிலையமோ அல்லது வேறெந்த இடமோ, அல்லது நீங்கள் உங்களின் வீட்டில் குடும்பத்துடன் இருந்தாலும், அந்தச் சூழல்களைச் சக்திவாய்ந்தவை ஆக்குங்கள். எங்கும் உள்ள சூழல், முற்றிலும் தடைகளில் இருந்து விடுபட்டு, கருணை, நல்லாசிகள், தூய உணர்வுகளால் நிறைந்திருக்கும்போது, வெளிப்படுத்துகைக்கு நீண்ட காலம் எடுக்காது.

பாப்தாதாவிற்கு அவர் உங்களுக்குக் கொடுத்த திகதி நினைவிருக்கிறது. அவர் கணக்குகளைக் கேட்பார்தானே? நீங்கள் எல்லோரும் உங்களின் சொந்தக் கணக்குகளைப் பேணுகிறீர்கள்தானே? எனவே, நீங்கள் எத்தனை சதவீதம் உங்களின் மனோபாவம், பார்வை, வார்த்தைகளில் கருணையும் நல்லாசிகளும் தூய உணர்வுகளும் கொண்டிருக்கும் ஓர் ஆத்மாவாக இருந்தீர்கள் என்ற உங்களின் கணக்குகளை பாப்தாதா சோதிப்பார். இப்போதும், உங்களுக்குக் குறைந்தபட்சம் 15 நாட்கள் உள்ளன. உங்களுக்கு அதைவிட அதிகமாக உள்ளது. அச்சா. இதுவரை அதைச் செய்யாதவர்கள், இப்போதே செய்யுங்கள். நீங்கள் சித்தி அடைவீர்கள். கடந்த காலத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, கருணைக்கடல் ஆகுங்கள். மன்னிப்புக் கடல் ஆகுங்கள். (பாப்தாதா அப்பியாசத்தைச் செய்வித்தார்).

நீங்கள் எல்லோரும் கேட்டீர்களா? அச்சா, இங்கு மீட்டிங்களுக்காக வந்திருக்கும் மூன்று குழுக்கள்… ஸ்பார்க் குழுவைச் சேர்ந்தவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். அச்சா. மிகவும் நல்லது. இப்போது, இந்தத் தலைப்பில் ஆராய்ச்சி செய்யுங்கள்: எப்படி நீங்கள் சூழலை நடைமுறையில் அதிமேன்மையானது ஆக்க முடியும்? நீங்கள் இதை ஆராய்ச்சி செய்கிறீர்கள்தானே? இத்தகையதொரு சூழலை உருவாக்குவதற்கு, நீங்கள் எதை உங்களின் புத்திகளில் வைத்திருக்க வேண்டும், என்ன செயல்களை நீங்கள் செய்ய வேண்டும், உங்களின் தொடர்புகளுடனும் உறவுமுறைகளுடனும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் உங்களை மும்முரமாக வைத்திருப்பது நல்லதே. அது மிகவும் நல்லது. எவ்வாறாயினும், நீங்கள் நடைமுறையில் செய்த எல்லாவற்றினதும் நடைமுறை அனுபவத்தையும் அதன் பெறுபேறு என்னவென்பதையும் பாப்தாதா பார்க்க விரும்புகிறார். இடையில் ஏதாவது தடைகள் ஏற்படுமாயின், அது என்ன? இதை நடைமுறையில் அனுபவம் செய்து, நீங்களே பாருங்கள்! நீங்கள் இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என வெறுமனே கருத்துக்களைப் பிரித்தெடுக்காதீர்கள்! இல்லை! அதை நடைமுறையில் செய்யுங்கள்! நீங்களே அதை அனுபவம் செய்யுங்கள். ஓர் உதாரணமாகுவதன் மூலம் அதைச் செய்து காட்டுங்கள். அதன்பின்னர் அந்த உதாரணம் மற்றவர்களுக்கும் உதவி செய்யும். இது ஓகேயா? இவரே (ரமேஷ்பாய்) கருவி ஆவார். இது நல்லது. உங்களுக்கு இன்னமும் 15 நாட்கள் உள்ளன என பாப்தாதா கூறுகிறார். இது இன்னமும் முடியவில்லை. இப்போது, அதிகளவு நேரம் கடந்து சென்று விட்டது, ஆனால், சிறிது நேரமே இன்னமும் எஞ்சியுள்ளது. எனவே, ஸ்பார்க் குழுவினர் இதை நடைமுறையில் செய்து மற்றவர்களுக்கும் காட்ட வேண்டும். இது ஓகேயா? உங்களால் இதைச் செய்ய முடியுமா? இது சாத்தியமா? அச்சா. இது நல்லது. மிகவும் நல்லது. அச்சா.

இரண்டாவது மீட்டிங் குழு, போக்குவரத்துக் குழுவாகும்: போக்குவரத்துத் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள், எல்லோருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கிறார்கள். போக்குவரத்துத் திணைக்களத்தைச் சேர்ந்தவர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா. (சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இருசாராரும் இருக்கிறார்கள்.) சகோதரிகள் இல்லாமல் எந்தவிதச் சத்கதியும் கிடையாது. அச்சா. போக்குவரத்துத் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் மக்களைச் சுற்றுலா செல்ல அனுப்புவதை மட்டும் செய்வீர்களா? போக்குவரத்துத் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள், உங்களுக்குள்ளே ஒரு நிகழ்ச்சியைச் செய்ய வேண்டும். அதாவது, உங்களால் எந்தவோர் ஆத்மாவையும் குறுகிய நேரத்தில் துன்ப உலகிற்கு அப்பால் எடுத்துச் செல்லக்கூடியதாக இருக்க வேண்டும். அத்துடன் குறுகிய நேரத்தில் அவர்களை ஓர் அமைதி யாத்திரையில் அழைத்துச் செல்ல வேண்டும். ஓகே, அவர்களைப் பரந்தாமத்தினை அடையச் செய்வது கடினமே. ஆனால் அவர்கள் குறைந்தபட்சம் இந்தத் துன்ப உலகில் அமைதி யாத்திரை செய்ய வேண்டும். அதற்காகப் பல திட்டங்களைச் செய்யுங்கள். நான்கு வகையான யாத்திரைகளில் இருப்பவர்களுக்கும் பாப்தாதாவின் செய்தி சென்றடையச் செய்வதை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள். நீங்கள் நிச்சயமாக அவர்கள் அங்கே சென்றடையச் செய்வீர்கள். ஏனென்றால், எந்தவொரு பிரிவும் (திணைக்களமும்) விடுபடக்கூடாது. வெவ்வேறு பிரிவுகள் கண்டுபிடிக்கப்பட்டது நல்லதே. இது நல்லது. ஏனென்றால், வேறெந்த முறைப்பாடுகளும் இருக்கமாட்டாது. எந்தவொரு பிரிவும் விடுபட மாட்டாது. ஒவ்வொருவருக்கும் தமது சொந்தப் பிரிவை முன்னேற்றுவதற்கான உற்சாகம் உள்ளது. இது மிகவும் நல்லது. எவ்வாறாயினும், இதுவரை என்ன பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளனவோ – வெவ்வேறு பிரிவுகள் உருவாக்கப்பட்டு எத்தனை காலம் ஆகுகிறது? ஒன்றரை வருடங்களா அல்லது இரண்டு வருடங்களா? அல்லது, அதை விட நீண்ட காலமா? (10 இலிருந்து 12 வருடங்கள்). வெவ்வேறு பிரிவுகளின் சேவை ஆரம்பித்து 10 இலிருந்து 12 வருடங்கள் ஆகிவிட்டனவா? அச்சா. அது நீண்ட காலமே. பாப்தாதாவிற்கு வெவ்வேறு பிரிவுகளுக்கும் ஓர் எண்ணம் உள்ளது. பாப்தாதா அதை இரண்டு அல்லது மூன்று தடவைகள் கூறியுள்ளார். ஆனால், அது இன்னமும் இடம்பெறவில்லை. ஒவ்வொரு பிரிவும் எத்தனை வருடங்கள் சேவை செய்தாலும், ஒவ்வொரு பிரிவிலும் உள்ள சேவையாளர் குழந்தைகள் எல்லோரும், அவர்கள் ஒத்துழைப்பவர்களாக இருந்தாலென்ன அல்லது அரையோகிகளாக இருந்தாலென்ன, அல்லது அவர்கள் ஒழுங்காக அன்றி, சிலவேளைகளில் மட்டும் வந்தாலென்ன – குறைந்தபட்சம் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் இத்தகைய ஐந்து ஆத்மாக்களாவது இங்கே வரவேண்டும். ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 10 அல்லது 12 இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஐந்து மிகவும் உறுதியானவர்கள், மிகவும் ஒத்துழைக்கும் ஆத்மாக்களும், சேவைக்குக் கருவிகளாக இருப்பவர்களும் வெளிப்பட வேண்டும் என்பதை மதுவனத்தில் உள்ள ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும். குறைந்தபட்சம் உங்களால் இத்தகைய ஐந்து ஆத்மாக்களை இங்கே அழைத்து வரமுடியுமா? அவர்களால் வரமுடியுமாயின், அழைத்து வாருங்கள். எப்போது நீங்கள் அவர்களை அழைத்து வருவீர்கள்? அது தாதிகளைப் பொறுத்த விடயம். குறைந்தபட்சம், அவர்கள் பாப்தாதாவைச் சந்திப்பதற்குத் தகுதியானவர்கள் ஆகவேண்டும். குறைந்தபட்சம், ஐந்து பேரையாவது வெளிப்படச் செய்ய முடியும். பாபா அதிகமாகக் கேட்கவில்லை, ஐந்து பேர் மட்டுமே. அதன்பின்னர் இந்தத் தாதிகள் அவர்களைச் சரிபார்ப்பார்கள்.

மூன்றாவதாகச் சந்திக்கும் குழு பொறியியலாளர்களுக்கு உரியது: திட்டங்களைச் செய்யும் கடமை பொறியியலாளர்களுக்குரியது. எனவே, நீங்கள் தீவிர முயற்சிக்காக ஏதாவது திட்டங்களைச் செய்தீர்களா அல்லது சேவைக்காக மட்டும் திட்டங்களைச் செய்தீர்களா? பொறியியலாளர்கள் ஒவ்வொரு மாதமும் தீவிர முயற்சிக்காகப் புதிய திட்டங்களைச் செய்ய வேண்டும். நீங்கள் அறிவுரை சொல்லுங்கள். தாதிகள் பின்னர் அதை முடிவு செய்வார்கள். தாதிகள் உங்களின் சகபாடிகள். எவ்வாறாயினும், பொறியியலாளர்களும், விஞ்ஞானிகளும் புதிய உலகம் விரைவில் வரும்படியான திட்டங்களைச் செய்ய வேண்டும். நீங்கள் வெறுமனே இந்த மீட்டிங்குகள் வைத்து, திட்டங்களை மட்டும் தொடர்ந்து செய்வீர்களா? எவ்வளவு காலத்திற்கு? இப்போது துரித கதிக்கான திட்டங்களைச் செய்யுங்கள். ஏனென்றால், உங்களின் பிரிவின் இலட்சியமானது, உங்களின் இராச்சியம் எவ்வளவு விரைவில் வரமுடியுமோ, அதற்கான திட்டங்களை உருவாக்குவதேயாகும். எனவே, இத்தகைய திட்டங்களைச் செய்யுங்கள். சேவையிலும், குறுகிய நேரத்தில் பெரும் வெற்றியை வெளிப்படுத்தக்கூடிய திட்டங்களைச் செய்யுங்கள். நீங்கள் இத்தகைய திட்டங்களைச் செய்வீர்களா? நீங்கள் இத்தகைய திட்டங்களைச் செய்வீர்கள்தானே? பாபா கடைசிச் சந்திப்பில் சகல அறிக்கைகளைப் பற்றியும் கேட்பார். வெற்றியைத் துரிதம் ஆக்குவதற்காக ஒவ்வொரு பிரிவினரும் என்ன திட்டத்தைச் செய்துள்ளீர்கள்? நீங்கள் வெறுமனே திட்டங்களைச் செய்யக்கூடாது. ஆனால், 15 நாட்களில், அவற்றைப் பயிற்சி செய்து, நடைமுறை ரூபத்தில் கொண்டு வாருங்கள். இது ஓகேயா? இப்பொழுதே அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், அப்படித்தானே? நீங்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் சொல்கிறீர்கள் - ஏனென்றால், பாப்தாதா ஒவ்வொருவரின் இதயபூர்வமான உரையாடல்களையும் கேட்கிறார் - நீங்கள் எல்லோரும் வெளிப்படுத்தலைப் பற்றிப் பேசுகிறீர்கள். எவ்வாறாயினும், அனைத்திற்கும் முதலில், உங்களை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். தந்தையும் உங்களின் மூலம் வெளிப்படுத்தப்படுவார் அல்லவா? அச்சா. இப்போதே உங்களால் உங்களின் மனோபாவத்தை ஒருமுகப்படுத்த முடிகிறதா? எவரின் மனோபாவமும் எந்தவிதமான குழப்பத்திற்கும் உள்ளாகக்கூடாது. அது அசைக்க முடியாததாகவும், ஒருமுகப்பட்டதாகவும், சக்திவாய்ந்ததாகவும் இருக்க வேண்டும். (பாப்தாதா அப்பியாசத்தைச் செய்வித்தார்) அச்சா.

எங்கும் உள்ள சேவையாளர் குழந்தைகள் எல்லோருக்கும், தமது மேன்மையான அதிர்வலைகளால் சேவை செய்பவர்களுக்கும் தீவிர முயற்சி செய்யும் குழந்தைகளுக்கும், தமது சதா நல்லாசிகளாலும் தூய உணர்வுகளாலும் மிகவும் பலவீனமான ஆத்மாக்களைச் சக்திசாலிகள் ஆக்கும் மாஸ்ரர் மன்னிப்புக்கடல்களுக்கும், இத்தகைய மாஸ்ரர் சர்வசக்திவான் குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அதிக, அதிக அன்பும், நினைவும் நமஸ்தேயும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் காலத்திற்கேற்ப, ஒவ்வொரு பணியிலும் வெற்றி நிறைந்தவரான ஞானி மற்றும் யோகி ஆத்மா ஆகுவீர்களாக.

ஞானம் என்றால் புரிந்துணர்வு. விவேகி ஆத்மா ஒருவர் சரியான வேளையில் புரிந்துணர்வுடன் தனது பணிகளைச் செய்வதுடன், அவற்றில் வெற்றியும் பெறுவார். விவேகி (ஞானி) நபரின் அடையாளம், அவர் ஒருபோதும் ஏமாற்றப்பட மாட்டார். யோகி ஆத்மாவின் அடையாளம், அவரிடம் சுத்தமான, தெளிவான புத்தி இருக்கும். சுத்தமான, தெளிவான புத்திகளைக் கொண்டவர்கள், அது எப்படி நடந்தது என எனக்குத் தெரியவில்லை என ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். ஞானி மற்றும் யோகி ஆத்மாக்களால் இத்தகைய வார்த்தைகளைச் சொல்ல முடியாது. அவர்கள் தாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஞானத்தையும், யோகத்தையும் பயன்படுத்துவார்கள்.

சுலோகம்:
தமது ஆதியான, அநாதியான சம்ஸ்காரங்களையும் சுபாவங்களையும் உணர்ந்திருப்பவர்களால் மட்டுமே ஆட்ட, அசைக்க முடியாதவர்களாக இருக்க முடியும்.