06.10.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது கற்பதுடன், ஆசிரியர்களாகவும் ஆகி ஏனையோருக்கும் கற்பிக்க வேண்டும். இந்தக் கல்வி இந்த இறுதிப் பிறவிக்கு உரியது, ஆகவே நன்றாகக் கற்று ஏனையோருக்கும் கற்பியுங்கள்.
கேள்வி:
சத்தியயுக இராச்சியம் எதன் அடிப்படையில் ஸ்தாபிக்கப்படுகிறது?பதில்:
எவ்வாறு நீங்கள் சங்கமயுகத்தில் கற்கின்றீர்கள் என்பதன் அடிப்படையில். நன்றாகக் கற்று தம் மீது வியாழ சகுனங்களைக் கொண்டிருப்பவர்கள், சூரிய வம்சத்தினுள் செல்வார்கள். நன்றாகக் கற்காது சேவையும் செய்யாதவர்கள்; தம் மீது புத்து (விவேகம் குறைந்தவர்கள்) சகுனங்களைக் கொண்டிருப்பதால், அவர்கள் முட்டாள்களைப் போலுள்ளனர். அவர்கள் பிரஜைகளில் ஒருவர் ஆகுகின்றனர். தற்பொழுது எவ்வாறு நீங்கள் கற்கின்றீர்கள் என்பதன் அடிப்படையிலேயே மேன்மையான பிரஜைகளும், பணிப்பெண்கள், வேலையாட்கள் போன்ற அனைவரும் உருவாக்கப்படுகின்றனர்.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை, அதாவது, பரமாத்மா இங்கே அமர்ந்திருந்து ஆத்மாக்களாகிய உங்களுக்கு, ஆன்மீகக் குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆன்மீகத் தந்தை பரமாத்மா என்று அழைக்கப்படுகிறார். ஒரேயொரு பரமாத்மாவாகிய பரமதந்தையே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை ஆவார். அவர் இங்கே அமர்ந்திருந்து பிரம்மாவின் சரீரம் மூலம் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். பக்தி மார்க்கத்தில் மக்கள் “திரிமூர்த்தி பிரம்மா” பற்றிப் பேசுகிறார்கள். பிராமணர்களாகிய நீங்கள் இதைக் கூற மாட்டீர்கள். நீங்கள் “திரிமூர்த்தி சிவன்” பற்றி, அதாவது, பிரம்மா, விஷ்ணு, சங்கரரைப் படைப்பவராகிய, சிவனைப் பற்றிப் பேசுகின்றீர்கள். ‘திரிமூர்த்தி பிரம்மா” எனக் கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. சிவனே இம் மூன்று தேவர்களையும் படைப்பவர் ஆவார். இதனாலேயே திரிமூர்த்தி சிவன் எனக் கூறப்படுகிறது. படைப்பவர் ஒருவரே உள்ளார், ஏனைய அனைத்தும் படைப்புக்களே. ஒரேயொரு எல்லையற்ற தந்தையே உள்ளார். அனைவருக்கும் சொந்தமாக ஒரு லௌகீகத் தந்தை உள்ளார். இந்நேரத்தில் அனைவரும் சிவபாபாவின் குழந்தைகளாகி உள்ளனர். ஆத்மாக்களாகிய நாங்கள் 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வருவதால், எங்களுக்கு 84 எல்லைக்கு உட்பட்ட தந்தையர் உள்ளனர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சத்தியயுகத்தில் பெற்றோர் உங்களுக்கு ஓர் எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுப்பதில்லை. இப்பொழுதே நீங்கள் சத்தியயுகத்திற்கான எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். அங்கு அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் ஆகும். ஏனைய இராஜ குடும்ப குழந்தைகள் அனைவரும் தங்கள் ஆஸ்தியைத் தங்கள் லௌகீகத் தந்தையரிடம் இருந்து பெறுவார்கள். இருந்த பொழுதும் அங்கு பெருமளவு சந்தோஷம் இருக்கின்றது. இந்நேரத்தில் எல்லையற்ற தந்தை உங்களை எல்லையற்ற உலகின் அதிபதிகள் ஆக்குகின்றார். நீங்கள் 21 பிறவிகளுக்கான சதா சந்தோஷம் என்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். அங்கு துன்பத்தின் பெயரோ, சுவடோ இல்லை. பாவப் பாதை ஆரம்பித்தவுடன், துன்பமும் ஆரம்பிக்கிறது. எவர் வந்தாலும் விளங்கப்படுத்துங்கள்: உங்களுக்கு இரண்டு தந்தையர் உள்ளனர். நீங்கள் 84 பிறவிகளை எடுப்பதால், உங்களுக்கு 84 எல்லைக்கு உட்பட்ட தந்தையர்கள் உள்ளனர். உங்களுக்கு ஒரேயொரு எல்லையற்ற தந்தையே உள்ளார். அசரீரி உலகம் என்றால் என்ன என்பது பற்றிய புரிந்துணர்வைக் குழந்தைகளாகிய உங்களது புத்தி கொண்டிருக்கிறது. நீங்கள் காட்டுகின்ற படங்களில் அசரீரி உலகம் பற்றிய படம் மிகப் பெரிதாக செய்யப்பட்டு, அதில் சின்னஞ்சிறிய ஆத்மாக்கள் நட்சத்திரங்களைப் போல் பிரகாசிப்பதாகக் காட்டப்பட வேண்டும். முன்னர் நீங்கள் மின்மினிப் பூச்சிகளினாலான மாலையைச் செய்வதைப் போல், அசரீரி உலகையும் நீங்கள் உருவாக்க வேண்டும். நீங்கள் ஒரு புரெஜெக்டரில் படம் காட்டும்பொழுது, அசரீரி உலகின் படத்தையும் அதேபோல் காட்ட வேண்டும். விருட்சத்தின் படம் பெரிதாக இருப்பின், ஆத்மாக்களாகிய நாங்கள் அங்கு வசிக்கின்றோம் என்பதைத் தெளிவாகக் காண முடியும். அது குழந்தைகள் புரிந்து கொள்வதற்கு இலகுவாக இருக்கும். இவரே பிரம்மாவின் மூலம் தேவ சமுதாயத்தை ஸ்தாபிக்கின்ற, எல்லையற்ற பாபா ஆவார். நீங்கள் இப்பொழுது பிராமணர்கள், பின்னர் நீங்கள் தெய்வீகக் குணங்கள் நிறைந்த, தேவர்கள் ஆகுவீர்கள். இப்பொழுது அனைவரும் அசுர குணங்களையே கொண்டுள்ளனர்; அவை அசுரத் தன்மையின் குறைபாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. பாவப் பாதையுடன் துன்பம் ஆரம்பிக்கிறது. நீங்கள் ரஜோபிரதான் ஆகியவுடனேயே சந்தோஷம் அற்றவர்கள் ஆகுகிறீர்கள் என்றல்ல, இல்லை, உங்களது கலைகள் படிப்படியாகவே குறைவடைகின்றன. திரிமூர்த்தி, சக்கரம், சுவர்க்கத்தினதும் நரகத்தினதும் பூகோளப் படங்கள் போன்றவையே பிரதானமான படங்கள். இவற்றை முதலில் விளங்கப்படுத்துவது அவசியம். விருட்சத்தின் படத்தில் அரைக் கல்பமும், பின்னர் மற்றைய அரைக் கல்பமும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. அது மிகச்சரியாக செய்யப்பட்டிருந்தால், அவற்றை அவர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். வேறு எவருமன்றி தந்தையால் மாத்திரமே இவற்றை விளங்கப்படுத்த முடியும். நீங்கள் திரிமூர்த்திப் படத்தை நிச்சயமாக மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்துவது அவசியம். இவரே அனைவரும் நினைவு செய்கின்ற, அசரீரியான எல்லையற்ற தந்தை. அவரே எங்களது எல்லையற்ற தந்தை என்பதை ஆத்மாக்கள் அறிவார்கள். துன்ப வேளையிலேயே அனைவரும் அவரை நினைவு செய்கின்றனர். சத்தியயுகத்தில் அவரை நினைவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அது சந்தோஷதாமம் ஆகும். தேவர்கள் தொடர்ந்தும் மறுபிறவி எடுத்துள்ளார்கள். இதுவும் எவருக்கும் தெரியாது. சதோபிரதானில் இருந்து நாங்கள் எவ்வாறு சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்கின்றோம் என்பது உங்களுக்குத் தெரியும். ஆத்மாக்களினுள் கலப்படம் கலக்கப்பட்டுள்ளது. உங்கள் 84 பிறவிகளின் பாகங்களை நீங்கள் நடிக்க வேண்டும் என்பதும், இது மிகச்சரியாக ஆத்மாவாகிய எங்களுக்குள் பதியப்பட்டுள்ளது என்பதையும் ஆத்மாக்களான நீங்கள் அறிவீர்கள். அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மாக்களுள் முழுப் பாகங்களும் பதியப்பட்டுள்ளன. இது புரிந்து கொள்வதற்கு மிக ஆழமான விடயம். எந்த மனிதரோ, சாதுவோ, சந்நியாசியோ தனது புத்தியில் இவ்விடயங்களைக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் ஒரு கூத்தைப் பற்றிப் பேசிய பொழுதிலும், கூத்து நாடகமல்ல. இது ஒரு நாடகம். முன்னர் அவர்கள் நாடகங்கள், திரைப்படங்கள் போன்றவற்றைக் கொண்டிருக்கவில்லை. முதலில் மௌனப் படங்களே இருந்தன, ஆனால் இப்பொழுது பேசும் படங்கள் உள்ளன. ஆத்மாக்களாகிய நாங்களும் மௌனத்தில் இருந்து சப்தத்திற்கு (பேச்சு) வருகிறோம். நாங்கள் சப்தத்திலிருந்து அசைவுக்குச் சென்று, பின்னர் மௌனத்திற்குச் செல்கிறோம். இதனாலேயே அதிகம் பேச வேண்டாம் எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு கூறப்படுகிறது. இராஜரீகமானவர்கள் மிகவும் மென்மையாகவே பேசுவார்கள். நீங்கள் சூட்சும உலகிற்குச் செல்ல வேண்டும். தந்தை சூட்சும உலகின் ஞானத்தை உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். இது பேசும் உலகம். அது அசைவு உலகம். அங்கு நீங்கள் இறைவனுடன் பேசுகிறீர்கள். அங்கு வெண்ணிற ஒளி வடிவம் இருக்கும், ஆனால் சப்தம் இருக்க மாட்டாது. அங்கு அவர்கள் ஒருவரை ஒருவர் அசைவு மொழி மூலமே புரிந்து கொள்வார்கள். இப்பொழுது நீங்கள் அசைவினூடாக மௌனத்திற்குள் செல்ல வேண்டும். தந்தை கூறுகிறார்: நான் முதலில் சூட்சும உலகை உருவாக்கிய பின்னரே, பௌதீக உலகை உருவாக்க வேண்டும். நினைவு கூரப்படுகிறது: அசரீரி உலகம், சூட்சும உலகம், பௌதீக உலகம். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோர் சூட்சும உலகவாசிகளே என்பது கூட மக்களுக்குத் தெரியாது. அங்கு உலகம் ஒன்றில்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோர் மாத்திரமே அங்கு காணப்படுகின்றனர். நீங்கள் நான்கு கரங்களுடன் விஷ்ணுவைப் பார்க்கிறீர்கள். இது இல்லறப் பாதை என்பதையே அது காண்பிக்கிறது. சந்நியாசிகள் துறவறப் பாதையைச் சார்ந்தவர்கள். அதுவும் தந்தை உங்களுக்குக் கூறி விளங்கப்படுத்துகின்ற நாடகமே ஆகும். தந்தை கூறுகிறார்: “மன்மனாபவ” என்பதே பிரதான விடயம். ஏனைய அனைத்தும் விபரங்கள். அதைப் புரிந்து கொள்வதற்குக் காலம் எடுக்கிறது. இரத்தினச் சுருக்கமாகக் கூறின், விதையும், விருட்சமும் உள்ளன. நீங்கள் விதையைப் பார்க்கும் பொழுது, உங்கள் புத்தியால் முழு விருட்சத்தின் படத்தையும் பார்க்க முடியும். தந்தையே விதையானவர், அவரிடம் இந்த விருட்சத்தினதும், உலகச் சக்கரத்தினதும் ஞானம் அனைத்தும் உள்ளது. உலகச் சக்கரம் பற்றிய விளக்கமானது விருட்சத்தின் விளக்கத்தில் இருந்து வேறுபட்டது. இந்த ரூபங்கள் அனைத்தும் விருட்சத்தின் படத்தில் காட்டப்பட்டுள்ளன. வேறு எந்தச் சமயத்தைச் சேர்ந்த எவரிடமும் விருட்சத்தின் படத்தை நீங்கள் காட்டும்பொழுது, தன்னால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். புராதன பாரதத்தில் தேவர்கள் மாத்திரமே வாழ்ந்தனர், ஏனைய அனைவரும் அமைதி தாமத்தில் இருந்தனர். உங்களுக்கு விதை, விருட்சம் ஆகிய இரண்டையும் தெரியும். விதையானவர் மேலே உள்ளார், அவரே விருட்சத்தின் பிரபு என அழைக்கப்படுகிறார். நீங்கள் இப்பொழுது தந்தைக்கு உரியவர்கள், ஆகவே உங்கள் மீது வியாழ சகுனங்கள் உள்ளன. தந்தைக்கு உரியவர்கள்; மீது வியாழ சகுனங்கள் உள்ளன எனக் கூறப்படுகிறது. பின்னர் சுக்கிரனின் சகுனங்கள் (நன்றி செலுத்துதல்) உள்ளன, அதன் பின்னர் புத்து சகுனங்களும் (விவேகம் குறைந்த) உள்ளன. வியாழ சகுனங்களைத் தம் மீது கொண்டிருப்பவர்கள் சூரிய வம்சத்தினுள் ஒருவர் ஆகுகின்றனர். புத்து சகுனங்களைக் கொண்டிருப்போர் பிரஜைகளில் ஒருவர் ஆகுகின்றனர். அவர்களால் சேவை செய்ய முடியாது. அவர்களால் தந்தையை நினைவுசெய்ய முடியாதிருப்பின், அவர்கள் முட்டாள்கள். அதிலும் அவர்கள் வரிசைக்கிரமமாக உள்ளனர். சிலர் மேன்மையான பிரஜைகளாகவும் சிலர் தாழ்ந்த பிரஜைகளாகவும் ஆகுகின்றனர். செல்வந்தப் பிரஜைகளுக்கும், அவர்களது பணிப்பெண்கள், வேலையாட்களுக்கும் இடையில் பெரும் வேறுபாடுள்ளது. எவ்வாறு நீங்கள் கற்கின்றீர்கள் என்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. கற்பதிலும் சதோகுணி, ரஜோகுணி, தமோகுணி என்பன உள்ளன. ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. திறமைசாலிகள் தந்தையின் நினைவில் நிலைத்திருக்கின்றனர்; முழு விருட்சமும் அவர்களின் புத்தியில் உள்ளது. கற்பதன் மூலமே உங்களால் ஓர் ஆசிரியராகவோ, சட்டநிபுணராகவோ ஆக முடியும். ஓர் ஆசிரியர் பின்னர் ஏனையோருக்குக் கற்பிக்கின்றார். அனைவரும் கற்கின்றனர். ஒரேயொரு கல்வியே உள்ளது: சிலர் கற்று மேன்மையானவர்கள் ஆகுகின்ற அதேவேளை, ஏனையோர் கற்ற இடத்தில் ஆசிரியர்கள் ஆகுகின்றனர். அவர்கள் எதைக் கற்றுள்ளார்களோ, அதையே அவர்கள் கற்பிக்கின்றனர். நீங்களும் இப்பொழுது கற்கின்றீர்கள். சிலர் கற்று, ஆசிரியர்கள் ஆகுகின்றனர். ஓர் ஆசிரியரது கடமை ஏனையோரையும் தன்னைப் போல் ஆக்குவதே என்று அவர்களே கூறுகின்றனர். நீங்கள் ஆசிரியர்கள் ஆகாமல் விட்டால், எவ்வாறு ஏனையோருக்கு நன்மை அளிப்பீர்கள்? மிகக் குறுகிய காலமே எஞ்சியிருப்பதுடன், விநாசம் இடம்பெறும் வரை நீங்கள் தொடர்ந்தும் கற்பீர்கள். அதன்பின்னர் உங்கள் கல்வி முடிவடையும். அதன்பின்னர் 5000 ஆண்டுகளின் பின்பு, பாபா மீண்டும் வந்து உங்களுக்குக் கற்பிப்பார். இந்தக் கல்வி நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குத் தொடர மாட்டாது. இந்தக் கல்வி இந்த இறுதிப் பிறவிக்கு உரியது. நீங்கள் கற்று, பின்னர் கற்பிக்க வேண்டும். அனைவராலும் ஆசிரியராக முடியாது. அனைவரும் ஆசிரியராக முடிந்தால், பலரும் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவார்கள்; அது வரிசைக்கிரமமானது. வருகின்ற அனைவருக்கும் முதலில் இரண்டு தந்தையரதும் அறிமுகத்தைக் கொடுங்கள். இந்தப் படத்தை நீங்கள் வைத்திருந்தால், அவர்களால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் நிச்சயமாகத் திரிமூர்த்தியின் படத்தை உங்களுடன் வைத்திருக்க வேண்டும். அவர் சிவபாபா ஆவார், இவர் அனைவரதும் முப்பாட்டனாராகிய, பிரஜாபிதா பிரம்மாவும் ஆவார். ஆகவே அவர் நிச்சயமாக முன்னரும் வந்திருக்க வேண்டும். பிரம்மா அனைவருக்கும் முன்னால் இருக்கிறார். அவர் மூலமாகப் படைப்பு இப்பொழுது படைக்கப்படுகிறது. நீங்கள் இப்பொழுது பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள், பின்னர் பிராமணர்களாகிய நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள். பிராமணர்களது விருட்சம் சிறியது. அங்கு வெகுசில தேவர்களே இருக்கின்றனர், பின்னர் அவர்களது எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கிறது. உங்களது புதிய விருட்சம் ஸ்தாபிக்கப்படுகிறது. ஏனைய சமய ஆத்மாக்கள் தங்கள் பாகங்களை நடிப்பதற்காக மேலிருந்து கீழிறங்கி வருகின்றனர். வீழ்தல் என்ற கேள்விக்கே இடமில்லை. உங்கள் புதிய விருட்சம் ஸ்தாபிக்கப்படுகிறது. மாயையும் உங்கள் முன்னால் நிற்கிறாள். நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக வேண்டும்;. உலகம் மாறுவதால், நீங்களும் இடம்மாற்றப்பட வேண்டும், இதனாலேயே முயற்சி தேவை. இங்கு சங்கமயுகத்திலேயே தேவதர்மம் ஸ்தாபிக்கப்படுகிறது. சத்தியயுகம் எவ்வளவு காலத்திற்கு உள்ளது என்றும், பின்னர் சத்தியயுகம் எவ்வாறு கலியுகமாக மாறுகிறது என்றும் நீங்கள் காட்டுகிறீர்கள். கலியுகத்தில் அனைவருமே தமோபிரதானாக வேண்டும். நீங்கள் தமோபிரதான் ஆகும்பொழுது மாத்திரமே, உங்களால் சதோபிரதானாக முடியும். நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள், பின்பு உங்களில் கலப்படம் தொடர்ந்தும் கலந்தது. இப்பொழுது, ஒரு புதிய ஆத்மா மேலிருந்து வந்து இரண்டு மூன்று பிறவிகளை எடுத்தாலும், கலப்படம் மிக விரைவாக அவரினுள் கலந்துவிடும். அந்தக் குறுகிய காலத்தினுள் அந்த ஆத்மா சந்தோஷத்தையும், துன்பத்தையும் அனுபவம் செய்வார். சில ஆத்மாக்கள் ஒரு பிறவியை மாத்திரமே எடுக்கின்றனர். மேலிருந்து ஆத்மாக்கள் வருவதை நிறுத்தும் பொழுது, விநாசம் இடம்பெறும். அதன்பின்னர் சகல ஆத்மாக்களும் வீடு திரும்ப வேண்டும். பாவாத்மாக்களும், புண்ணியாத்மாக்களும் சேர்ந்து ஒன்றாகவே வீடு திரும்புகின்றனர். பின்னர் புண்ணியாத்மாக்கள் கீழிறங்கி வருகின்றனர். சங்கமயுகத்தில் அனைத்தும் மாறுகின்றது. ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் முழு நாடகத்தையும் உங்கள் புத்திகளில் வைத்திருக்க வேண்டும். தந்தை இந்த முழு ஞானத்தையும் கொண்டிருக்கிறார். அவர் கூறுகிறார்: நான் வந்து, உலகச் சக்கரத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்கள் அனைத்தையும் உங்களுக்குக் கூறுகிறேன். நான் பக்தி மார்க்கத்தில் இந்த ஞானத்தைப் பேசுவதில்லை. பக்தர்கள் என்னை நினைவு செய்யும் பொழுது, நான் அவர்களுக்குக் காட்சிகளை வழங்குகிறேன். பக்திமார்க்கம் ஆரம்பிக்கும் பொழுது, எனது பாகமும் ஆரம்பிக்கிறது. சத்திய, திரேதா யுகங்களில் நான் ஓய்வு ஸ்திதியில் இருக்கிறேன். குழந்தைகளைச் சந்தோஷத்திற்குள் அனுப்பிய பின்னர் நான் செய்வதற்கு வேறு என்ன உள்ளது? நான் ஓய்வு பெறுகின்றேன். ஓய்வு எடுக்கும் வழமை (குருவை ஏற்பது) பாரதத்தில் மாத்திரமே உள்ளது. எல்லையற்ற தந்தை கூறுகிறார்: நான் ஓய்வில் இருக்கிறேன். எல்லையற்ற தந்தையே குருவாக வந்து எங்களை ஓய்விற்குள் அழைத்துச் செல்கிறார். கடவுளைக் கண்டடைவதற்காக, மக்கள் குருமார்களின் சகவாசத்தை நாடுகின்றனர். அவர்கள் சமயநூல்களைக் கற்பதுடன், யாத்திரைகளும் செய்து, கங்கையிலும் நீராடுகின்றனர், ஆனால் அவர்கள் எதனையும் கண்டடையவில்லை. நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையைக் கண்டு கொண்டு விட்டீர்கள். அவர் உங்களைத் துன்பத்தில் இருந்து விடுவித்து, இராவண இராச்சியத்தில் இருந்து அகற்றி, இராம இராச்சியத்திற்கு அனுப்புகிறார். எல்லையற்ற தந்தை உங்களை இராவண இராச்சியத்தில் இருந்து விடுவிப்பதற்காக ஒரேயொரு தடவை மாத்திரமே வருகின்றார், இதனாலேயே அவர் விடுதலை அளிப்பவர் எனப்படுகின்றார். சத்தியயுகத்தில் இராம இராச்சியம் உள்ளதுடன், ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் அமைதிதாமத்திற்குச் சென்றிருப்பார்கள். ஆத்மாவின் சுய தர்மம் அமைதியே என்பது எவருக்கும் தெரியாது. ஆத்மாக்கள் தங்கள் பாகங்களை நடிப்பதற்காக இங்கு வந்த பின்னர், அமைதியற்றவர்கள் ஆகுவதால், அவர்கள் அந்த அமைதியை நினைவு செய்கின்றனர். ஆதியில் ஆத்மாக்கள் அமைதிதாம வாசிகள். ஆத்மா இப்பொழுது கூறுகின்றார்: எனக்கு அமைதி வேண்டும். எனக்கு மன அமைதி வேண்டும். ஒவ்வோர் ஆத்மாவினுள்ளும் மனமும், புத்தியும் இருக்கின்றன என்பது விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆத்மாக்கள் அமைதி சொரூபங்கள், பின்னர் அவர்கள் இங்கே நடிப்பதற்கு வருகிறார்கள். இங்கே அவர்களால் எவ்வாறு அமைதியை அனுபவம் செய்ய முடியும்? இது அமைதியற்ற உலகம். சத்தியயுகத்திலே அமைதி, சந்தோஷம் ஆகிய இரண்டும் உள்ளன. அங்கு தூய்மையும், செழிப்பும் உள்ளன. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் சந்தோஷம், அமைதி, செழிப்பு, அனைத்தையும் அதிகளவில் கொண்டிருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது மற்றவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். கடந்த கல்பத்தில் தங்கள் ஆஸ்தியைப் பெற்றவர்கள், இதை மிக நன்றாகப் புரிந்து கொள்ள முயல்வார்கள். சிலர் காலம் தாழ்ந்து வந்திருந்தாலும், அவர்களால் விரைவில் பழையவர்களை முந்திச் செல்ல முடியும். நாளுக்கு நாள், இந்தக்கல்வி இலகுவாக ஆகுவதால், இறுதிக் காலத்தில் வருபவர்கள் முன்பை விட நல்ல கருத்துக்களைப் பெறுகிறார்கள். அனைத்தையும் தாங்கள் புரிந்து கொண்டுள்ளதை அவர்கள் அறிவார்கள். ஆனாலும் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவதற்கு அவர்கள் இப்பொழுது முயற்சி செய்ய வேண்டும். ஆகவே, சொற்ப காலமே எஞ்சியுள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதால், அவர்கள் தீவிர முயற்சி செய்வதற்கு ஆரம்பிக்க வேண்டும். தங்களால் இயன்றளவு முயற்சியைச் செய்வதில் ஈடுபட வேண்டும் என அவர்கள் உணர்கிறார்கள். மரணம் வருவதற்கு முன்பாகவே அவர்கள் முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் தங்களுடைய அட்டவணைகளையும் வைத்திருக்க வேண்டும். இந்தக் கல்வி மிகவும் இலகுவானது. அத்துடன் நினைவு எனும் கேள்வியும் உள்ளது. “ஓ மனமே, அதிகாலையில் இராமரை நினைவு செய்வாய்!” என நினைவு கூரப்படுகிறது. ஆத்மா கூறுகின்றார்: ஓ எனது மனமே, இராமரை நினைப்பாயாக! பக்தி மார்க்கத்திலுள்ள எவருக்கும் இராமர் யார் என்று தெரியாது. ரகு குலத்தின் தலைவரான, அரசர் இராமரைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். அவர்கள் அதிகளவு குழப்பத்தை விளைவித்துள்ளனர். அனைவருக்கும் கடவுளான இராமர் யார்? மக்கள் எதனையும் முற்றிலும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் தொடர்ந்தும் தங்கள் நேரத்தையும், பணத்தையும் வீணாக்குகிறார்கள். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு உலக இராச்சியம் என்ற உங்கள் பாக்கியத்தை வழங்கினேன். நீங்கள் அதனை என்ன செய்தீர்கள்? 5000 வருடங்களுக்கு முன்னர் உங்களுக்குச் சுவர்க்க இராச்சியம் கொடுக்கப்பட்டது. நீங்கள் அதை எவ்வாறு இழந்தீர்கள்? நீங்கள் எவ்வாறு தொடர்ந்தும் கீழிறங்கினீர்கள் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் மேலேற வேண்டும். மேலேறுவதற்கு ஒரு விநாடியும், கீழிறங்குவதற்கு 5000 வருடங்களும் எடுக்கின்றன. பிரம்மா, விஷ்ணு ஆகுவதற்கு ஒரு விநாடியும் விஷ்ணு, பிரம்மா ஆகுவதற்கு 5000 வருடங்களும் எடுக்கின்றன. பாபா பல்வேறு கருத்துக்களையும் விளங்கப்படுத்துகிறார். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் இப்பொழுது 'சப்தத்தில்” இருந்து 'அசைவிற்குச்” சென்று, பின்னர் 'அசைவில்” இருந்து 'மௌனத்திற்குச்;" செல்ல வேண்டும். ஆகவே மிகவும் குறைவாகப் பேசுங்கள், மிகவும் மென்மையாகவும் இராஜரீகத்துடனும் பேசுங்கள்.2. இந்த ஞானத்தைப் புரிந்துகொண்ட பின்னர், சதோபிரதான் ஆகுவதற்குத் தீவிர முயற்சி செய்யுங்கள். உங்களது நினைவு அட்டவணையைப் பேணுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் இந்த உலகின் பற்றில் இருந்து விடுபட்டு, ஒரு பறக்கும் பறவையாகி, சூட்சும வதனத்தில் சுற்றுலா செல்வீர்களாக.சூட்சும வதனத்தையும் அசரீரி உலகையும் உங்களின் புத்தியெனும் விமானத்தால் சுற்றி வருவதற்கு, ஒரு பறக்கும் பறவை ஆகுங்கள். நீங்கள் விரும்பிய இடத்திற்கு, விரும்பிய நேரத்தில் செல்வதற்கு உங்களின் புத்தியைப் பயன்படுத்துங்கள். இந்த உலகின் பற்றில் இருந்து நீங்கள் முற்றிலும் விடுபடும்போது மட்டுமே இது சாத்தியமாகும். இந்த உலகம் உருசி அற்றது. இந்த உருசியற்ற உலகுடன் உங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லாதபோது, பேறுகள் எதுவும் இல்லாதபோது, உங்களின் புத்தியால் அங்கே செல்வதை நிறுத்துங்கள். இந்த உலகம் ஆழ்நரகமாக உள்ளது. அதனால் இந்த உலகிற்குள் செல்கின்ற எந்தவோர் எண்ணமோ அல்லது கனவுகளோ இருக்கக்கூடாது.
சுலோகம்:
உங்களின் முகத்தாலும் நடவடிக்கைகளாலும் சத்தியம் மற்றும் நல்ல நடத்தையின் அனுபவத்தைக் கொடுப்பதே மகத்துவம் ஆகும்.அவ்யக்த சமிக்ஞை: மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்து, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.
ஈடேற்றுதல் மற்றும் கருணைக்கான உணர்வுகளால் நிரம்பி உள்ளவர்கள், சதா திருப்தி இரத்தினங்களாக இருப்பார்கள். அவர்கள் தாமும் திருப்தியாக இருப்பதுடன் மற்றவர்களையும் திருப்தி செய்வார்கள். நம்பிக்கை இழந்தவர்களிலும் நம்பிக்கையை ஏற்படுத்துவது அவர்களின் அற்புதம் ஆகும். மற்றவர்கள் தமது நம்பிக்கை இழந்து விட்ட மனிதர்கள் மற்றும் சூழ்நிலைகளிலும் அவர்களின் நம்பிக்கைத் தீபம் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும். மற்றவர்களை ஈடேற்றும் அவர்களின் நல்லாசிகளால் அவர்கள் அன்பு, சக்தி, இனிய வார்த்தைகள், ஊக்கம் மற்றும் உற்சாகத்தின் ஒத்துழைப்பு என்பவற்றை வழங்கி, மனவிரக்தியில் உள்ள ஆத்மாக்களை சக்திசாலிகள் ஆக்குவார்கள். அதாவது, அவர்கள் பிச்சைக்காரர்களை சக்கரவர்த்திகள் ஆக்குவார்கள்.