07.03.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த ஆதியும் அநாதியுமான நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்து செல்லும் எந்தவொரு காட்சியும், ஒரு கல்பத்தின் பின்னரும் மீண்டும் நிகழும். எனவே, எப்போதும் கவலையற்றவராக இருங்கள்.

கேள்வி:
இந்த உலகம் இப்போது அதன் தமோபிரதான் ஸ்திதியை அடைந்து விட்டதைக் குறிப்பிடுகின்ற அறிகுறிகள் எவை?

பதில்:
நாளுக்கு நாள், கொந்தளிப்புக்கள் தொடர்ந்தும் நிகழ்வதுடன், அதிகளவு குழப்பங்களும் உள்ளன. கொள்ளையர்கள் மக்களைத் தாக்கிவிட்டு அனைத்தையும் கொள்ளை இடுகிறார்கள். பருவகாலம் தப்பிய மழையால் அதிகளவு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த அறிகுறிகள் அனைத்தும் இந்த உலகம் தமோபிரதான் என்பதைக் குறிக்கின்றன. தமோபிரதான் இயற்கை தொடர்ந்தும் துன்பத்தை விளைவிக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் நாடகத்தின் இரகசியங்களை அறிவீர்கள். எனவே, இது எதுவும் புதியதல்ல என நீங்கள் கூறுகிறீர்கள்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய உங்கள் மீது இப்போது ஞான மழை பொழியப்படுகிறது. இப்போது நீங்கள் அனைவரும் சங்கம யுகத்தவர்கள். ஏனைய மனிதர்கள் அனைவரும் கலியுகத்தில் வசிப்பவர்கள். தற்சமயம், உலகில் உள்ள மக்கள் பல்வேறு கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஒரேயொரு வழிகாட்டலை மாத்திரமே கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் கடவுளிடம் இருந்து மாத்திரமே இந்த ஒரேயொரு வழிகாட்டலைப் பெறுகிறீர்கள். பக்தி மார்க்கத்தில், மக்கள் மந்திரங்களை உச்சரித்து, விரதமிருந்து, யாத்திரைகள் செல்வது போன்றவற்றைச் செய்கிறார்கள். இவை கடவுளை அடைகின்ற வழிகள் என அவர்கள் நினைக்கிறார்கள். பக்தி செய்த பின்னர் மாத்திரமே ஒருவரால் கடவுளை அடைய முடியுமென அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், எப்போது பக்தி ஆரம்பம் ஆகுகின்றது என்றோ அல்லது எவ்வளவு காலம் அது நீடிக்கின்றது என்றோ அவர்களுக்குத் தெரியாது. பக்தியினூடாகத் தாங்கள் கடவுளை அடைவதாக அவர்கள் வெறுமனே கூறுகிறார்கள். இதனாலேயே, அவர்கள் பல வகைகளில் பக்தி செய்கிறார்கள். ஆரம்ப காலத்திலிருந்தே தாங்கள் தொடர்ந்து பக்தி செய்வதாக அவர்கள் நம்புகிறார்கள். ஒரு நாள் தாங்கள் நிச்சயமாகக் கடவுளை அடைவோம் என்றும், ஏதாவதொரு ரூபத்தில் தாங்கள் கடவுளை அடைவோம் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். அவர் என்ன செய்வார்? அவர் நிச்சயமாகச் சற்கதியை அருள்வார். ஏனென்றால் அவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் ஆவார். கடவுளைத் தூய்மையாக்குபவர் என்றும், ஞானக்கடல் என்றும் பலவாறாகப் புகழ்ந்து பாடினாலும், அவர்களுக்குக் கடவுள் யார் என்றோ அல்லது அவர் எப்போது வருகிறார் என்பதோ தெரியாது. இந்த ஞானத்தினூடாக மாத்திரமே சற்கதி கிடைக்கும். ஆத்மாக்களாகிய நாங்கள் அசரீரியானவர்களாக இருப்பதைப் போன்று, கடவுளும் அசரீரியானவர் என்பதை அவர்கள் அறிவார்கள். பின்னர் நாங்கள் சரீரங்களை எடுக்கிறோம். ஆத்மாக்களாகிய நாங்கள் பரந்தாமத்தில் எங்கள் தந்தையுடன் வசிக்கிறோம். நாங்கள் இவ்விடத்தில் வசிப்பவர்கள் அல்ல. நீங்கள் ஆதியில் எங்கே வசித்தீர்கள் என்பதை மிகச்சரியாக அவர்களால் உங்களுக்குக் கூறமுடியாது. சிலர் தாங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள் என நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், எவராலும் இங்கிருந்து நேரடியாகச் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. சிலர் தாங்கள் அநாதியான ஒளியுடன் இரண்டறக் கலப்பார்கள் எனக் கூறுகிறார்கள். அதுவும் தவறானதே. அவ்வாறாயின், ஆத்மாக்கள் அழியக் கூடியவர்கள் என்றாகி விடும். அநாதியான முக்தி (மோட்சம்) என்பதும் இருக்க முடியாது. அவர்கள் அநாதியான ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட நாடகத்தைப் பற்றிப் பேசுவதனால், அது சக்கரம் தொடர்ந்தும் சுழல்வதையே குறிக்கிறது, வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் தொடர்ந்தும் நிகழ்கின்றன. எவ்வாறாயினும், சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். அவர்களுக்குச் சக்கரத்தைப் பற்றியும் தெரியாது, கடவுளைப் பற்றியும் தெரியாது. அவர்கள் பக்தி மார்க்கத்தில் அதிகளவில் அலைந்து திரிகிறார்கள். கடவுள் யார் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் கடவுளைத் ‘தந்தை’ என அழைக்கிறீர்கள். எனவே, எங்களுக்கு ஒரு லௌதீகத் தந்தை இருந்தாலும், நாங்கள் அந்த ஒரேயொருவரை நினைவு செய்வதனால், இரு தந்தையர்கள் - லௌகீகமானவரும் (இந்த உலகிற்குரியவர்), பரலோகத்தில் உள்ளவரும் (இந்த உலகிற்கு அப்பாற்பட்டவர்) - இருக்கிறார்கள் என்பது புத்தியில் பிரவேசிக்க வேண்டும். அந்தப் பரலோகத் தந்தையை அடைவதற்கு, மக்கள் அதிகளவில் பக்தி செய்கிறார்கள். அவர் பரலோகத்தில் (அப்பாற்பட்ட உலகில்) வசிக்கிறார். அசரீரி உலகம் என்பது நிச்சயமாக உள்ளது. மக்கள் செய்கின்ற அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை என்பதை நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள். பக்தியும் பக்தி மட்டுமே இராவண இராச்சியத்தில் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது. இந்த ஞானம் அதில் இருக்க முடியாது. பக்தியினூடாக ஒருபோதும் சற்கதி இருக்க முடியாது. சற்கதியை அருளும் தந்தையை மக்கள் நினைவு செய்கிறார்கள். எனவே, அவர் நிச்சயமாக ஏதோவொரு வேளையில் வந்து, சற்கதியை அருளியிருக்க வேண்டும். இந்த உலகம் முற்றிலும் தமோபிரதானானது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது முன்னர் சதோபிரதானாக இருந்தது; இப்போது அது தமோபிரதானாகி விட்டது. கொந்தளிப்புக்கள் பல தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. அதிகளவு குழப்பங்கள் உள்ளன. கொள்ளையர்கள் தொடர்ந்தும் அனைத்தையும் கொள்ளை அடிக்கிறர்கள். அவர்கள் மக்களை அடித்துவிட்டு, அவர்களின் பணத்தைக் கொள்ளை அடிக்கிறார்கள். மக்களை மயக்கம் அடையச் செய்வதற்காக அவர்களை அனைத்து விதமான மயக்கமருந்து வகைகளையும் மணக்கச் செய்கிறார்கள். இது இராவண இராச்சியம். இது ஒரு மிகப்பெரிய, எல்லையற்ற நாடகம். சக்கரம் சுழல்வதற்கு, 5000 வருடங்கள் செல்கின்றன. ஒரு மேடை நாடகம் சினிமாப் படத்தைப் போன்றது; இதனை ஒரு மேடை நாடகம் என அழைக்க முடியாது. ஒரு மேடை நாடகத்தில் நடிகர் ஒருவர் சுகயீனமுற்றால், அவருக்காக இன்னொருவர் நடிக்க முடியும். ஆனால் இந்த நாடகத்தில் இது சாத்தியம் இல்லை. இந்த நாடகம் அநாதியானது. உதாரணமாக, யாராவது ஒருவர் சுகயீனம் அடைந்தால், அவர் அவ்வாறு நோய்வாய்ப்படுவது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படும். இந்த நாடகம் அநாதியாக ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த நாடகத்தைப் பற்றி நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தும்போது, அவர்கள் குழப்பம் அடைகிறார்கள். இந்த நாடகம் எல்லையற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதே நடிகர்களே ஒரு கல்பத்தின் பின்னரும் இருப்பார்கள். எவ்வாறு இப்போது மழை பொழிகிறதோ, அவ்வாறே ஒரு கல்பத்தின் பின்னரும் மழை பொழியும். அதேபோன்று, அதே கொந்தளிப்புக்களே நிகழும். இந்த ஞான மழை அனைவர் மீதும் பொழிவதில்லை எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எவ்வாறாயினும், ஞானக்கடலான கடவுள் வந்து விட்டார் எனும் ஒலி நிச்சயமாக அனைவரையும் சென்றடையும். உங்களுடைய பிரதானமான பாடம் யோகமாகும். நீங்கள் மாத்திரமே இந்த ஞான மழையைச் செவிமடுக்கிறீர்கள். ஆனால் அந்த மழையோ முழு உலகின் மீதும் பொழிகிறது. உங்கள் யோகத்தினூடாக சதா அமைதி கிடைக்கிறது. சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்குக் கடவுள் வந்திருக்கிறார் என நீங்கள் அனைவருக்கும் கூறுகிறீர்கள். ஆனால், பலரும் தங்களைக் கடவுள் என அழைக்கிறார்கள். எனவே, யார் உங்களை நம்புவார்கள்? இதனாலேயே, பலரில் வெகு சிலரே வெளிப்படுவார்கள் எனத் தந்தை கூறுகிறார். உங்கள் மத்தியிலும், தந்தையாகிய கடவுள் வந்து விட்டார் என்பதை நீங்கள் வரிசைக்கிரமமாகவே புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெற வேண்டும். நீங்கள் எவ்வாறு தந்தையை நினைவு செய்ய வேண்டும் என்றும் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதிக் கொள்ளுங்கள். மக்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகிவிட்டனர். தந்தை கூறுகிறார்: மனித ஆத்மாக்கள் அனைவரும் தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளபோது மாத்திரமே, நான் வருகிறேன். நீங்கள் முழுமையாகத் தமோபிரதான் ஆகிவிட்டீர்கள்! நான் இப்போது உங்களைச் சதோபிரதான் ஆக்குவதற்காக வந்துள்ளேன். முன்னைய கல்பத்திலும், உங்களால் எவ்வாறு தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகமுடியும் என நான் உங்களுக்கு விளங்கப்படுத்தினேன்: என்னை நினைவு செய்யுங்கள்! நான் உங்களுக்கு எனது சொந்த அறிமுகத்தையும், படைப்பின் அறிமுகத்தையும் வழங்குவதற்கு வந்து விட்டேன். இராவண இராச்சியத்தில் உள்ள அனைவரும் அந்தத் தந்தையை நினைவு செய்கிறார்கள். ஆத்மாக்கள் தங்கள் தந்தையை நினைவுசெய்கிறார்கள். தந்தை சரீரமற்றவர். அவர் ஒரு புள்ளி. அவருக்கு ஒரு பெயர் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள், சாலிகிராம்கள் என அழைக்கப்படுகிறீர்கள், தந்தை சிவன் என அழைக்கப்படுகிறார். குழந்தைகளாகிய உங்களுடைய சரீரங்களுக்கே பெயர்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், தந்தையோ பரமாத்மா. அவர் சரீரம் ஒன்றை எடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர் இவரில் பிரவேசித்துள்ளார். இது பிரம்மாவின் சரீரம்; இவர் சிவன் என அழைக்கப்படுவதில்லை. உங்கள் ஒவ்வொருவரின் பெயரும் ஆத்மா என்பதாகும். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சரீரத்தில் பிரவேசிக்கிறீர்கள். பரமாத்மாவே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை. எனவே, அனைவருக்கும் இரு தந்தையர்கள் இருக்கிறார்கள்: ஒருவர் அசரீரியானவர், மற்றவர் சரீரதாரி. இவர் பின்னர் அலௌகீக, அற்புதமான தந்தை என அழைக்கப்படுகிறார். பல குழந்தைகள் இருக்கிறார்கள். பல பிரஜாபிதா பிரம்மாகுமாரர்களும் குமாரிகளும் இருப்பதனால், மக்களால் இதனைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. இது என்ன வகையான தர்மம் என அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ‘குமார்களும் குமாரிகளும்’ என்ற வார்த்தைகள் இந்தக் குடும்பப் பாதைக்குரியவை என நீங்கள் அறிவீர்கள். பெற்றோர்களும் புதல்வர்களும் புதல்விகளும் இருக்கிறார்கள். பக்தி மார்க்கத்தில், அவர்கள் அவரை நினைவு செய்கிறார்கள்: தாயும் நீயே, தந்தையும் நீயே. நீங்கள் இப்போது தாயும் தந்தையுமாக இருப்பவரைக் கண்டு கொண்டீர்கள், அவர் உங்களைத் தத்து எடுத்துள்ளார். சத்திய யுகத்தில் எவரும் தத்து எடுக்கப்படுவது இல்லை; அங்கு தத்தெடுப்பது என்ற வார்த்தையே இல்லை. இந்த வார்த்தை இங்கேயே உள்ளது. ஏனைய தந்தையர் எல்லைக்கு உட்பட்டவர்கள். ஆனால், அந்த ஒரேயொருவரோ எல்லையற்ற தந்தை ஆவார். இது ஓர் எல்லையற்ற தத்தெடுத்தல் ஆகும். இது ஒரு மிக ஆழமான இரகசியமும், புரிந்து கொள்வதற்குத் தகுதியானதும் ஆகும். நீங்கள் எவருக்கும் எதையும் முழுமையாக விளங்கப்படுத்துவதில்லை. யாராவதொருவர் முதற்தடவையாக இங்கு வந்து, எங்கள் குருவின் தரிசனம் பெற வேண்டும் எனக் கேட்டால், அவருக்கு இவ்வாறு கூறுங்கள்: ‘இது ஓர் ஆலயம் அல்ல. பெயர்ப் பலகையில் என்ன எழுதியிருக்கிறது எனப் பாருங்கள். இங்கு பல பிரம்மாகுமார்களும் குமாரிகளும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பிரஜாபிதாவின் (மக்களின் தந்தை) குழந்தைகள். நீங்களும் மக்களில் ஒருவரே. கடவுள் உலகைப் படைக்கிறார். அவர் எங்களையும் பிரம்மாவின் கமலத் திருவாய் மூலம் படைக்கிறார். நாங்கள் புதிய உலகிற்கு உரியவர்கள். ஆனால் நீங்கள் பழைய உலகிற்கு உரியவர்கள். சங்கம யுகத்திலேயே, நாங்கள் புது உலகிற்கு உரியவர்கள் ஆக்கப்படுகிறோம். இதுவே அதிமேன்மையான மனிதர்கள் ஆகுவதற்குரிய யுகம்.’ நீங்கள் சங்கம யுகத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள், ஆனால் ஏனைய அனைவரும் கலியுகத்தில் இருக்கிறார்கள். இது பிரிவினை ஏற்படுத்தப்பட்டுள்ளது போன்றது. இப்போது, எவ்வளவு பிரிவினைகள் உள்ளன எனப் பாருங்கள். ஒவ்வொரு மதத் தலைவரும் தனது சொந்த மக்களைப் பராமரித்து, தனக்குச் சமமானவர்களையும் தனது சொந்த மதத்தைச் சார்ந்த அனைவரையும் சந்தோஷமாக வைத்திருக்க விரும்புகிறார். அதன் மூலம் எவரும் அவர்களின் பிரதேசத்தை விட்டுச் செல்ல மாட்டார்கள் என நினைக்கிறார்கள். முன்னர், ஓர் அரசர் தனது குடிமக்கள் அனைவரின் மீதும் உரிமையைக் கொண்டிருந்தார். அரசரே பெற்றோராகவும், உணவை அளிப்பவராகவும் கருதப்பட்டார். இப்போது அரசர்களோ அல்லது அரசிகளோ கிடையாது. அனைத்தும் துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு விட்டன. அதிகளவு கொந்தளிப்பும், குழப்பமும் உள்ளன. சடுதியாக வெள்ளப் பெருக்குகளும், பூமியதிர்ச்சிகளும் ஏற்படுகின்றன. இவை அனைத்தும் துன்பத்தில் மரணிப்பதாகும். இப்போது நீங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதைப் பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். எனவே, நீங்கள் ஒருவரோடு ஒருவர் பெரும் அன்புடன், பாலும் சீனியும் போன்று வாழ வேண்டும். நீங்கள் ஒரேயொரு தந்தையின் குழந்தைகள். எனவே, உங்களுக்கிடையே பெருமளவு அன்பு இருக்க வேண்டும். இங்கே ஆடும் சிங்கமும் மிக வலிமையான எதிரிகள். எனினும், இராம இராச்சியத்தில் அவை ஒரே குளத்தில் நீர் அருந்துகின்றன. இங்கு, ஒவ்வொரு வீட்டிலும் சண்டை நடக்கிறது. நாடுகளுக்கிடையே யுத்தங்கள் நடக்கின்றன. அவர்களின் பல்வேறுபட்ட அபிப்பிராயங்களால், அவர்கள் தங்கள் மத்தியிலும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். நீங்கள் பல தடவைகள் தந்தையிடமிருந்து உங்களுடைய ஆஸ்தியைக் கோரிப் பின்னர் அதனை இழந்தீர்கள் என்பதை இப்போது அறிவீர்கள். அதாவது, நீங்கள் இராவணனை வென்றீர்கள், பின்னர் அவனால் தோற்கடிக்கப்பட்டீர்கள். ஒரேயொரு தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் நாங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறோம். இதனாலேயே, அவர் அதிமேலான கடவுள் என அழைக்கப்படுகிறார். அவர் அனைவரின் துன்பத்தையும் அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர் என அழைக்கப்படுகிறார். அவர் இப்போது உங்களுக்குச் சந்தோஷப் பாதையைக் காட்டுகிறார். குழந்தைகளாகிய நீங்கள் ஒருவரோடு ஒருவர் பாலும் சீனியும் போன்றிருக்க வேண்டும். உலக மக்கள் அனைவரும் உப்புநீரைப் போன்றிருக்கிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் கொல்வதற்குக்கூட தாமதிப்பதில்லை. நீங்கள் கடவுளின் குழந்தைகள். எனவே, நீங்கள் பாலும் சீனியும் போன்றிருக்க வேண்டும். கடவுளின் குழந்தைகளாகிய நீங்கள் தேவதேவியர்களை விடவும் உயர்ந்தவர்கள். நீங்கள் அதிகளவில் கடவுளின் உதவியாளர்கள் ஆகுகின்றீர்கள். மக்களை மேன்மையானவர்கள் ஆக்குவதற்காக நீங்கள் அவருக்கு உதவி செய்கிறீர்கள். எனவே, நீங்களும் மேன்மையான மனிதர்களே என்பதை உங்கள் இதயத்தில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கொண்டிருக்கிறீர்களா? அசுர குணங்களைக் கொண்ட ஒருவர் தந்தையின் குழந்தை எனக் கருதப்பட மாட்டார். இதனாலேயே, சற்குருவை அவதூறு செய்பவரால் இலக்கினை அடைய முடியாது எனக் கூறப்படுகிறது. கலியுகக் குருமார்கள் இவ்வாறு தங்களைப் பற்றிக் குறிப்பிட்டு, மக்களை அச்சம் அடையச் செய்கிறார்கள். எனவே, தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: தகுதிவாய்ந்த குழந்தைகள், தந்தையின் பெயரைப் புகழ் அடையச் செய்வதுடன், பாலும் சீனியும் போன்று ஒன்றாக வாழ்வார்கள். தந்தை எப்போதும் கூறுகிறார்: பாலும் சீனியும் போன்று இருங்கள். சண்டையிட்டு, உப்புநீர் போன்று ஆகாதீர்கள். இங்கேயே நீங்கள் பாலும் சீனியும் போன்று ஆகவேண்டும். நீங்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் ஆதலால், நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பெருமளவு அன்பினைக் கொண்டிருக்க வேண்டும். கடவுள் அதி அன்பானவராக இருப்பதனாலேயே, அனைவரும் அவரை நினைவு செய்கிறார்கள். எனவே, நீங்கள் ஒருவருக்கொருவர் பெருமளவு அன்பைக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிடின், நீங்கள் தந்தையின் கௌரவத்தை இழக்கச் செய்கின்றீர்கள். கடவுளின் குழந்தைகள் எப்படி ஒருவரோடு ஒருவர் உப்புநீரைப் போன்றிருக்க முடியும்? அப்போது அவர்களால் எவ்வாறு ஓர் அந்தஸ்தைப் பெற முடியும்? தந்தை கூறுகிறார்: ஒருவரோடு ஒருவர் பாலும் சீனியும் போன்று வாழுங்கள். நீங்கள் உப்பு நீரைப் போன்று ஆகினால், உங்களால் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க முடியாது. நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றா விட்டால், எப்படி ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள்? நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகுவதனால், ஒருவரோடு ஒருவர் சண்டை செய்கிறீர்கள். நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்களாக இருந்தால், எந்தவிதமான முரண்பாடுகளும் இருக்க முடியாது. நீங்கள் தந்தையாகிய கடவுளைக் கண்டு கொண்டீர்கள். எனவே, நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையைப் போன்று ஆகவேண்டும். எவ்வாறு தந்தை தூய்மை, சந்தோஷம், அன்பு போன்றவற்றைக் கொண்டிருக்கிறாரோ, அவ்வாறே நீங்களும் அவரைப் போன்று ஆகவேண்டும். இல்லாவிடின், உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியாது. தந்தையிடம் கற்று, ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருங்கள். பலருக்கும் நன்மையை ஏற்படுத்துபவர்களால் அரசர்களாகவும் அரசிகளாகவும் ஆகமுடியும். எஞ்சிய அனைவரும் பணிப்பெண்களாகவும் வேலையாட்களாகவுமே ஆகுகிறார்கள். நீங்கள் என்னவாக ஆகுவீர்கள் என உங்களில் எவராலும் புரிந்து கொள்ள முடியும். அதனைக் கற்பவரால், அதற்கேற்ப, தான் எவ்வாறு பாபாவின் பெயரைப் புகழடையச் செய்யப் போகிறேன் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். கடவுளின் குழந்தைகளைப் பார்ப்பவர்கள் எவரும் மிகவும் சந்தோஷப்படும் வகையில், அவர்கள் அதி அன்பானவர்களாக இருக்க வேண்டும். பாபாவும் அவர்களை மிக இனிமையானவர்கள் எனக் கண்டுகொள்ள வேண்டும். அனைத்திற்கும் முதலில், ஒருவரின் சொந்த வீடு சீர்திருத்தப்பட வேண்டும் - முதலில் குடும்பம், பின்னர் மற்றவர்கள். உங்களுடைய இல்லறத்தில் வசிக்கும்போது, தாமரை போன்று தூய்மையாகவும், பாலும் சீனியும் போன்றும் வாழுங்கள். உங்களைப் பார்க்கும் எவரும், ‘ஓ, இதுவே சுவர்க்கம்!’ எனக் கூறவேண்டும். ஞானத்திற்கு முன்னர், பாபா இத்தகைய குடும்பங்களைக் கண்டுள்ளார். ஆறு அல்லது ஏழு புதல்வர்கள் திருமணம் செய்த பின்னரும் ஒரே குடும்பத்தில் வசிப்பதுடன், அனைவரும் அதிகாலையில் எழுந்திருந்து பக்தி செய்வதைப் பார்த்திருக்கிறார். அந்த வீட்டில் முழுமையான அமைதி நிலவியது. நீங்கள் கடவுளின் குடும்பத்துக்கு உரியவர்கள். அன்னங்களும் நாரைகளும் ஒன்றாக வாழ முடியாது. நீங்கள் அன்னங்களாக வேண்டும். நீங்கள் உப்புநீரைப் போன்று ஆகினால், பாபா அதனை விரும்ப மாட்டார். தந்தை இவ்வாறு கூறுவார்: நீங்கள் எனது பெயரை அதிகளவு அவதூறு செய்து விட்டீர்கள்! நீங்கள் பாலும் சீனியும் போன்று வாழாவிட்டால், உங்களால் சுவர்க்கத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாது. பெருமளவு தண்டனையும் அனுபவம் செய்யப்படும். தந்தைக்கு உரியவர்களாகிய பின்னர், நீங்கள் உப்புநீரைப் போன்று ஆகினால், நூறு மடங்கு தண்டனை அனுபவம் செய்வதுடன், நீங்கள் அடையப் போகும் அந்தஸ்தின் காட்சிகளையும் தொடர்ந்தும் பெறுவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் கடவுளின் குழந்தைகள் என்பதால், அதி அன்பானவர்கள் ஆகுவதில் எப்போதும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் ஒருவரோடு ஒருவர் உப்புநீரைப் போன்று இருக்கக்கூடாது. முதலில், உங்களைச் சீர்திருத்திப் பின்னர், மற்றவர்களும் சீர்திருந்துவதற்கான கற்பித்தல்களை அவர்களுக்கு வழங்குங்கள்.

2. எவ்வாறு தந்தை தூய்மை, சந்தோஷம், அன்பு, மற்றும் சகல நற்குணங்களையும் கொண்டிருக்கிறாரோ, அவ்வாறே, நீங்களும் தந்தையைப் போன்று ஆகவேண்டும். சற்குருவை அவதூறு செய்கின்ற எந்தச் செயல்களையும் செய்யாதீர்கள். உங்கள் நடத்தையினூடாக நீங்கள் தந்தையின் பெயரைப் புகழடையச் செய்ய வேண்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தையையும் உங்களின் பேறுகளையும் உணர்ந்தவராக இருப்பதன் மூலம் சதா ஸ்திரமாகவும் அசைக்க முடியாதவராகவும் இருப்பதுடன், எப்போதும் தைரியத்தையும் உற்சாகத்தையும் கொண்டவர் ஆகுவீர்களாக.

நீங்கள் பிறப்பு எடுத்ததில் இருந்து தந்தையிடமிருந்து நீங்கள் பெற்றுள்ள பேறுகள் எல்லாவற்றினதும் பட்டியலைச் சதா உங்களின் முன்னால் வைத்திருங்கள். ஏனென்றால் உங்களின் பேறு நிச்சயமானதாகவும் அசைக்க முடியாததாகவும் இருப்பதற்கு, உங்களின் தைரியமும் உற்சாகமும்கூட அசைக்க முடியாதவையாக இருக்க வேண்டும். அசைக்க முடியாதவராக இருப்பதற்குப் பதிலாக, உங்களின் மனம் சிலவேளைகளில் விஷமத்தனம் செய்யுமாயின் அல்லது உங்களின் ஸ்திதியில் ஏதாவது விஷமத்தனம் இருக்குமாயின், நீங்கள் சதா தந்தையையும், உங்களின் பேறுகளையும் உங்களுக்கு முன்னால் வைத்திருக்காததே அதற்கான காரணம் ஆகும். சகல பேறுகளும் சதா உங்களுக்கு முன்னாலும் உங்களின் விழிப்புணர்விலும் இருப்பதை நீங்கள் அனுபவம் செய்யும்போது, சகல தடைகளும் முடிவடைவதுடன், நீங்கள் எப்போதும் புதிய ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொண்டிருப்பீர்கள். அத்துடன் உங்களின் ஸ்திதியும் நிலையாகவும், அசைக்க முடியாததாகவும் இருக்கும்.

சுலோகம்:
எந்த வகையான சேவையைச் செய்யும்போதும் சதா திருப்தியாக இருத்தல் என்றால், நல்ல மதிப்பெண்களைப் பெறுதல் என்று அர்த்தம்.

அவ்யக்த சமிக்கை: சத்தியத்தினதும், நல்ல பண்புகளினதும் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.

பிராமணக் குழந்தைகளான நீங்கள் மிகவும் இராஜரீகமானவர்கள். உங்களின் முகத்திலிருந்தும், நடத்தையிலிருந்தும் மற்றவர்கள் உங்களின் நல்ல பண்புகளையும், உண்மைத்தன்மையையும் அனுபவம் செய்ய வேண்டும். இராஜரீகமான ஆத்மாக்கள் நல்ல பண்புகளின் தேவிகள் எனப்படுவார்கள். அவர்கள் பேசுகின்ற, மற்றவர்களை மதிக்கின்ற, நடக்கின்ற, உண்கின்ற, அருந்துகின்ற முறைகளும், அவர்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலும் அவர்களின் இயல்பான நல்ல பண்புகளையும், உண்மைத்தன்மையையும் வெளிப்படுத்தும். நீங்கள் உண்மையை நிரூபிக்க முயற்சி செய்வதாகவும் ஆனால், எந்தவிதப் பண்பகளும் கொண்டிராதவராகவும் இருக்கக் கூடாது. இது சரியாக இருக்காது.