07.04.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
இனிமையான குழந்தைகளே, அனைத்திலும் அதிமேலான தெய்வீகக் குணம் மௌனமாக இருப்பதாகும். அதாவது, சப்தமாகப் பேசாது, இனிமையாகப் பேசுவதாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்த ‘சப்த’ உலகில் இருந்து ‘அசைவு’ உலகிற்குச் செல்ல உள்ளீர்கள். அதன் பின்னர் ‘அசைவில்’ இருந்து நீங்கள் மௌனத்திற்குச் செல்கின்றீர்கள். ஆகையால், அதிகம் பேசாதீர்கள்.
கேள்வி:
எந்தப் பிரதானமான குணத்தைக் கிரகிப்பதன் மூலம், உங்களால் இயல்பாகவே ஏனைய அனைத்து தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க முடியும்?பதில்:
தூய்மையே பிரதானமாகக் கிரகிக்க வேண்டிய குணம் ஆகும். தேவர்கள் தூய்மையானவர்கள். ஆகையாலேயே அவர்களிடம் தெய்வீகக் குணங்கள் உள்ளன. இவ்வுலகில் வேறு எவரிடமும் தெய்வீகக் குணங்கள் இருக்க முடியாது. இராவண இராச்சியத்தில் எவ்வாறு தெய்வீகக் குணங்கள் இருக்க முடியும்? இராஜரீகமான குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தெய்வீகக் குணங்களை கிரகிக்கின்றீர்கள்.பாடல்:
கள்ளங்கபடமற்ற பிரபுவைப் போன்ற தனித்துவமானவர் வேறு எவரும் இல்லை.ஓம் சாந்தி.
சீரழிந்ததை சீராக்குபவர் ஒரேயொருவரே என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். பக்தி மார்க்கத்தில் மக்கள் பலரிடமும் செல்கின்றார்கள். அவர்கள் பல யாத்திரைகள் போன்றவற்றுக்கும் செல்கின்றார்கள். சீரழிந்தவற்றை சீராக்குபவரும், தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குபவரும் ஒரேயொருவரே ஆவார். ஜீவன்முக்தியை அருள்பவரும், வழிகாட்டியும், முக்தியளிப்பவரும் ஒரேயொருவரே ஆவார். இதுவே அவரது புகழாகும். எவ்வாறாயினும், அதிகளவு எண்ணிக்கையான மக்களும், பல சமயங்களும், பிரிவுகளும், உபபிரிவுகளும், சமயநூல்களும் இருப்பதால் மக்கள் பல வழிகளில் கடவுளைத் தேடுகின்றார்கள். அமைதி, சந்தோஷத்திற்காக அவர்கள் சற்சங்கங்களுக்குச் (ஆன்மீகக் கூட்டங்கள்) செல்கின்றார்கள். அந்த சற்சங்களுக்குச் செல்லாதவர்கள் மாயையின் போதையில் இருக்கின்றார்கள். இது இப்பொழுது கலியுகத்தின் முடிவு என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். சத்தியயுகம் எப்பொழுது வரும் என்பதையோ இப்பொழுது இது எந்த யுகம் என்பதையோ மக்கள் அறியவில்லை. நிச்சயமாகப் புதிய உலகில் சந்தோஷமும் பழைய உலகில் துன்பமும் உள்ளன என்பதை எந்தக் குழந்தையாலும் புரிந்து கொள்ள முடியும். இந்தப் பழைய உலகில் மனிதர்கள் பலர் உள்ளனர், சமயங்களும் பல உள்ளன. சத்தியயுகம் முன்னர் இருந்தது என்பதையும், இப்பொழுது இது கலியுகம் என்பதையும் நீங்கள் எவருக்குமே விளங்கப்படுத்தலாம். சத்தியயுகத்தில் ஒரேயொரு ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் மாத்திரமே இருந்தது. அங்கே வேறு எந்த சமயங்களும் இருக்கவில்லை. பாபா ஏற்கனவே உங்களுக்கு பல தடவைகள் விளங்கப்படுத்தி உள்ளார், மீண்டும் உங்களுக்குக் கூறுகின்றார். உங்களிடம் வருகின்ற எவருக்கும் பழைய உலகினதும் புதிய உலகினதும் வித்தியாசத்தைக் எடுத்துக் காட்டுங்கள். அவர்கள் என்ன கூறினாலும் பரவாயில்லை. சிலர் ஒவ்வொரு சக்கரமும் 10000 வருட கால எல்லை உடையது என்று கூறுகின்றார்கள். ஏனையோர் அது 30000 வருடங்கள் என்றும் கூறுகின்றார்கள். எண்ணற்ற அபிப்பிராயங்கள் உள்ளன. சமயநூல்களின் வழிகாட்டல்களும் உள்ளன. பல சமயநூல்களும் பல வழிகாட்டல்களும் உள்ளன. அவை மனிதர்களின் வழிகாட்டல்கள். சமயநூல்களும் மனிதர்களாலேயே எழுதப்பட்டுள்ளன. தேவர்கள் அவற்றை எழுதுவதில்லை. சத்தியயுகத்தில் தேவ தர்மம் உள்ளது. அவர்கள் மனிதர்கள் என்றுகூட அழைக்கப்படுவதில்லை. நீங்கள் சந்திக்கின்ற உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் இவற்றைப் பற்றிக் கூறுங்கள். இவை சிந்திக்கப்பட வேண்டிய விடயங்கள். புதிய உலகில் வெகுசிலரே உள்ளனர். ஆனால் பழைய உலகின் சனத்தொகை அதிகரித்துள்ளது. சத்தியயுகத்தில் ஒரேயொரு தேவ தர்மம் மாத்திரமே உள்ளது. அங்கே வெகுசில மக்களே வாழ்கின்றனர். தேவர்களுக்கு மாத்திரமே தெய்வீகக் குணங்கள் உள்ளன. மனிதர்களுக்கு அவை இருப்பதில்லை. இதனாலேயே மனிதர்கள் தேவர்களை வணங்கி, அவர்களின் புகழையும் பாடுகின்றார்கள். தேவர்கள் சுவர்க்கத்தில் வாழ்கின்றார்கள் என்பதையும், ஆனால் தாம் இந்தக் கலியுகவாசிகளாக, நரகத்தில் வாழ்கின்றோம் என்பதையும் அவர்கள் அறிந்துள்ளார்கள். மனிதர்களிடம் தெய்வீகக் குணங்கள் இருக்க முடியாது. ஒருவர் இன்னார் மிகவும் நல்ல, தெய்வீகக் குணங்களைக் கொண்டிருக்கின்றார் என்று கூறுவாராயின், அவரிடம் கூறுங்கள்: இல்லை, தேவர்கள் மட்டுமே தூய்மையானவர்கள் என்பதால் அவர்களிடம் மாத்திரமே தெய்வீகக் குணங்கள் இருக்க முடியும். இங்கே எவரிடமும் தூய்மை இல்லாததால், எவரிடமும் தெய்வீகக் குணங்கள் இருக்க முடியாது. இது இராவணனனின் அசுர இராச்சியமாகும். தெய்வீகக் குணங்கள் நிறைந்த தேவர்கள் புதிய விருட்சத்திற்கு உரியவர்கள். அதன் பின்னர் அந்த விருட்சம் பழையது ஆகுகின்றது. தெய்வீகக் குணங்கள் நிறைந்த எவரும் இராவண இராச்சியத்தில் இருக்க முடியாது. சத்தியயுகத்தில் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தின் இல்லறப் பாதையே உள்ளது. இல்லறப் பாதையில் உள்ளவர்கள் போற்றப்படுகின்றார்கள். சத்தியயுகத்தில் நாங்கள் தூய தேவர்களாக இருந்தோம். அங்கே துறவறப்பாதை இருப்பதில்லை. நீங்கள் பல கருத்துக்களைப் பெறுகின்றீர்கள். எவ்வாறாயினும் இக் கருத்துக்கள் அனைத்தும் அனைவரது புத்தியிலும் நிலைத்திருக்க முடியாது. நீங்கள் கருத்துக்களை மறப்பதாலேயே தோல்வி அடைகிறீர்கள். நீங்கள் தெய்வீகக் குணங்களை கிரகிப்பதில்லை. இந்த ஒரு தெய்வீகக் குணம் மிகவும் சிறந்தது: அவசியமற்ற முறையில் எவருடனும் அளவுக்கு அதிகமாகப் பேசாதிருத்தல், இனிமையாகப் பேசுதல், குறைவாகப் பேசுதல். ஏனெனில் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்த ‘பேசும்’ உலகில் இருந்து, ‘அசையும்’ உலகிற்குச் செல்ல வேண்டும். அதன் பின்னர் மௌன உலகிற்குச் செல்ல வேண்டும். ஆகையால் அதிகளவு பேசுவதை நிறுத்துங்கள். மிகவும் குறைவாகவும் மிகவும் மெதுவாகவும் பேசுகின்ற ஒருவர் இராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று புரிந்து கொள்ளப்படுகின்றது. இரத்தினங்கள் மாத்திரமே உங்கள் வாயிலிருந்து சதா வெளிப்பட வேண்டும். நீங்கள் யாரிடம் பேசினாலும், அது ஒரு சந்நியாசியாக இருந்தாலும், பழைய உலகிற்கும் புதிய உலகிற்கும் உள்ள வேறுபாட்டை அவருக்கு விளங்கப்படுத்துங்கள்: சத்தியயுகத்தில், தெய்வீகக் குணங்கள் நிறைந்த தேவர்கள் இருந்தார்கள். அது இல்லறப்பாதை ஆகும். சந்நியாசிகளான உங்களின் பாதை முற்றிலும் வேறுபட்டது. இருப்பினும், புதிய உலகம் சதோபிரதானாக இருந்தது என்றும் இப்பொழுது இது தமோபிரதானான உலகம் என்பதையும் நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். ஆத்மாக்கள் தமோபிரதான் ஆகும் பொழுது, அவர்கள் தமோபிரதானான சரீரங்களையே பெறுகின்றார்கள். இப்பொழுது இது தூய்மையற்ற உலகமாகும். அனைவருமே தூய்மையற்றவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். அது தூய, சதோபிரதான் உலகம். அந்தப் புதிய உலகம் பின்னர் பழையது ஆகுகின்றது. இப்பொழுது, மனிதர்கள் அனைவருமே நாஸ்திகர்கள். ஆகையாலேயே அதிகளவு குழப்பம் நிலவுகின்றது. அவர்களுக்கு தமது பிரபுவையும் அதிபதியையும் தெரியாததால், அவர்கள் தொடர்ந்தும் தமக்குள் சண்டை சச்சரவில் ஈடுபடுகிறார்கள். படைப்பவரையும் படைப்பையும் அறிந்தவர்கள் ஆஸ்திகர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். துறவறப் பாதையைச் சேர்ந்தவர்களுக்கு புதிய உலகைப் பற்றித் தெரியாது. ஆகையால், அவர்கள் அங்கு செல்வதும் இல்லை. இந்த நேரத்தில் ஆத்மாக்கள் அனைவரும் தமோபிரதானாக உள்ளார்கள் என்று தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். ஆத்மாக்கள் அனைவரையும் இப்பொழுது யாரால் சதோபிரதான் ஆக்க முடியும்? தந்தையால் மாத்திரமே இதனைச் செய்ய முடியும். அந்த சதோபிரதான் உலகில் மிகச் சிறிய எண்ணிக்கையான மக்களே உள்ளனர். அந்த நேரத்தில் ஏனைய அனைவரும் முக்திதாமத்தில் உள்ளனர். அது ஆத்மாக்களாக நாங்கள் வாழும் பிரம்ம தத்துவம் ஆகும். அது பிரம்மாண்ட் என்று அழைக்கப்படுகின்றது. ஆத்மாக்கள் அழியாதவர்கள். இது ஆத்மாக்கள் எல்லோரும் ஒரு பாகத்தைக் கொண்டிருக்கும் அநாதியான நாடகமாகும். இந்த நாடகம் எப்பொழுது ஆரம்பித்தது என்று எவராலும் கூற முடியாது. இந்த நாடகம் அநாதியானது. தந்தை வந்து இந்தப் பழைய உலகை புதியதாக மாற்ற வேண்டும். தந்தை புதிதாக ஒரு உலகைப் படைக்கின்றார் என்றில்லை. மக்கள் தூய்மை அற்றவர்கள் ஆகும் போது அவர்கள் கடவுளை அழைக்கின்றார்கள். சத்தியயுகத்தில் எவரும் அவரை அழைப்பதில்லை. ஏனெனில் அந்த உலகம் தூய்மையானது. இராவணன் உங்களைத் தூய்மை அற்றவர்களாக ஆக்குகின்றான். அதன் பின்னர் பரமாத்மா பரமதந்தை உங்களைத் தூய்மையானவர் ஆக்குகின்றார். பிரம்மாவின் பகலும் பிரம்மாவின் இரவும் அரைக்கு அரைவாசி என்று கூறப்படுகின்றது. இந்த ஞானத்தின் மூலம் பகல் உதயமாகின்றது. அங்கே அறியாமை இருக்க மாட்டாது. பக்தி மார்க்கம் அறியாமை என்ற இருளான பாதை என்று அழைக்கப்படுகின்றது. மறுபிறவி எடுக்கும் போது, தேவர்கள் இருளுக்குள் பிரவேசிக்கின்றார்கள். இதுவே ஏணிப்படத்தில் எவ்வாறு மக்கள் சதோ, இரஜோ, தமோ நிலைகளைக் கடக்கின்றார்கள் என்பது காட்டப்பட்டுள்ளது. இப்பொழுது அனைவருமே முற்றிலும் உக்கிய நிலையிலேயே உள்ளார்கள். தந்தை உங்களை மாற்றவே வந்துள்ளார். அதாவது, மனிதர்களை தேவர்களாக மாற்றவே வந்துள்ளார். தேவர்கள் இருக்கும் போது, அசுரத்தனமான மனிதர்கள் இருப்பதில்லை. இப்பொழுது, அசுரத்தனமானவர்களை தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்கள் ஆக மாற்றுவது யார்? இப்பொழுது பல சமயங்களும் உள்ளன, பல மக்களும் உள்ளனர். அவர்கள் தொடர்ந்தும் சண்டை சச்சரவில் ஈடுபடுகின்றார்கள். சத்தியயுகத்தில் ஒரேயொரு தர்மமே இருந்தது. அங்கே துன்பம் என்ற கேள்விக்கு இடமில்லை. சமயநூல்களில் பல கட்டுக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. மக்கள் அவற்றை பிறவிபிறவியாக வாசிக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அச் சமயநூல்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. அவற்றின் மூலம் எவராலும் என்னை அடைய முடியாது. ஒரேயொரு முறை மாத்திரமே நான் வந்து, அனைவருக்கும் சத்கதியை அருள்கின்றேன். எவராலும் இலகுவில் வீடு திரும்ப முடியாது. அவர்களை அமரச் செய்து, பொறுமையாக இவற்றை விளங்கப்படுத்துங்கள். விவாதங்கள் எதையும் செய்யக்கூடாது. அவர்களுக்கே உரிய அகங்காரம் அவர்களிடம் இருக்கும். சாதுக்களும் புனிதர்களும் தமது சீடர்களையும் தம்முடன் வைத்திருப்பார்கள். அவர்கள் உடனடியாகவே பிரம்மாகுமார், பிரம்மாகுமாரிகள் அவரை வசியம் செய்து விட்டார்கள் என்று கூறுவார்கள். இவ்விடயங்கள் சிந்திப்பதற்கு தகுதியானவை என்று விவேகமான எவரும் கூறுவார். கண்காட்சிகளுக்கும் மேலாக்களுக்கும் பலவிதமானோர் வருவார்கள். அவர்கள் உங்களுடைய கண்காட்சிகளுக்கு வரும் போது, பாபா உங்களுக்கு மிகவும் பொறுமையாக விளங்கப்படுத்துவதைப் போன்று நீங்களும் பொறுமையாக அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். மிகவும் சத்தமாகப் பேசாதீர்கள். கண்காட்சிகளில் பலரும் ஒன்று கூடுகின்றார்கள். ஆகையால் அவர்களிடம் கூறுங்கள்: உங்களுக்காக சிறிதளவு நேரத்தை ஒதுக்கி நீங்களாகவே வந்து புரிந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் படைப்பவரினதும் படைப்பினதும் இரகசியத்தைக் கூறுகின்றேன். படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியை படைப்பவரான தந்தையால் மாத்திரமே விளங்கப்படுத்த முடியும். ஏனைய அனைவரும் வெறுமனே ‘நேற்றி, நேற்றி’ (இதுவும் அல்ல, அதுவும் அல்ல) என்றே கூறுகின்றார்கள். எந்த ஒரு மனிதராலும் இப்பொழுது திரும்பிச் செல்ல முடியாது. இந்த ஞானத்தின் மூலம் சத்கதி கிடைத்ததும், அதன் பின்னர் ஞானத்தின் தேவை இருக்க மாட்டாது. தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்கு இந்த ஞானத்தை விளங்கப்படுத்த முடியாது. முதிர்ச்சியடைந்த ஒருவர் விளங்கப்படுத்தும் போது, அவர் அனுபவசாலி என்றும் அவர் சத்சங்கங்கள் போன்றவற்றிற்குச் சென்றுள்ளார் என்றும் மக்கள் நினைக்கின்றார்கள். சிறுபிள்ளைகள் விளங்கப்படுத்தும் போது அவர்கள் ‘இவருக்கு என்ன தெரியும்?’ என்று நினைக்கின்றார்கள். ஆகையால் அத்தகையவர்கள் முதிர்ச்சியடைந்த உங்களின் செல்வாக்கிற்கு உட்படலாம். இந்த ஞானத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக தந்தை ஒருமுறை மாத்திரமே வருகின்றார். அவர் உங்களைத் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆக்குகின்றார். தாய்மார்களாகிய நீங்கள் மற்றவர்களுடன் அமர்ந்திருந்து விளங்கப்படுத்தும் பொழுது, அவர்களால் சந்தோஷம் அடைய முடியும். ‘ஞானக்கடலான தந்தை, அமிர்தக் கலசத்தை தாய்மார்களாகிய எங்களிடம் தந்துள்ளார், நாங்கள் பின்னர் அதனை மற்றவர்களுக்கு வழங்குகின்றோம்’ என்று அவர்களிடம் கூறுங்கள். அதிகளவு பணிவுடன் தொடர்ந்தும் அவர்களுடன் உரையாடுங்கள். சிவன் மாத்திரமே ஞானக்கடல் ஆவார். அவர் இந்த ஞானத்தை எங்களுக்குக் கொடுக்கின்றார். அவர் கூறுகின்றார்: நான் தாய்மார்களாகிய உங்களின் மூலமே, முக்திக்கும் ஜீவன்முக்திக்குமான வாசலைத் திறக்கின்றேன். வேறு எவராலும் அதனைத் திறக்க முடியாது. நாங்கள் பரமாத்மாவுடன் அமர்ந்திருந்து கற்கின்றோம். எங்களுக்குக் கற்பிப்பவர் ஒரு மனிதரல்ல. பரமாத்மாவான பரமதந்தையே ஞானக்கடல் ஆவார். நீங்கள் அனைவரும் பக்திக் கடல் ஆவீர்கள். நீங்கள் பக்தியின் அதிகாரிகளே அன்றி, இந்த ஞானத்தின் அதிகாரிகள் அல்ல. நான் மாத்திரமே இந்த ஞானத்தின் அதிகாரி ஆவேன். மக்கள் ஒரேயொருவரையே புகழ்ந்து பாடுகின்றார்கள். அவர் மாத்திரமே அதிமேலானவர் ஆவார். நாங்கள் அவரை மாத்திரமே நம்புகின்றோம். அவர் எங்களுக்கு பிரம்மாவின் சரீரத்தின் ஊடாகக் கற்பிப்பதாலேயே பிரம்மா குமார்களும் பிரம்மா குமாரிகளும் நினைவு கூரப்படுகின்றார்கள். அவர்களுடன் அமர்ந்திருந்து இனிமையாக இவ்வாறு விளங்கப்படுத்துங்கள். ஒருவர் எவ்வளவு கற்றிருந்தாலும், அவரும் பல கேள்விகளைக் கேட்பார். முதன் முதலில் தந்தையின் மீது அவர்களை நம்பிக்கை வைக்கச் செய்யுங்கள். அவர்களிடம் கூறுங்கள்: முதலில் தந்தை படைப்பவரா இல்லையா என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சிவபாபா மாத்திரமே அனைவரையும் படைப்பவர். அவரே ஞானக் கடல் ஆவார். அவர் தந்தையும் ஆசிரியரும் குருவும் ஆவார். படைப்பவராகிய ஒரேயொரு தந்தையே எங்களுக்கு படைப்பினது ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொடுக்கின்றார் என்ற நம்பிக்கையைப் புத்தி கொண்டிருக்க வேண்டும். அவர் மாத்திரமே எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் எங்களுக்கு சரியானதை மாத்திரமே விளங்கப்படுத்துவார். வேறு எவராலும் எக் கேள்வியும் எழுப்ப முடியாது. தந்தை சங்கமயுகத்தில் மாத்திரமே வருகின்றார். அவர் கூறுகின்றார்: என்னை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குவதே எனது பணியாகும். உலகம் இப்பொழுது தமோபிரதானாக உள்ளது. தூய்மையாக்குபவரான தந்தை வரும் வரைக்கும் எவராலும் ஜீவன்முக்தியைப் பெற முடியாது. அவர்கள் அனைவரும் கங்கையில் நீராடச் செல்கின்றார்கள். ஆகையால் அவர்கள் அனைவருமே தூய்மை அற்றவர்களாகவே இருக்க வேண்டும். நான் உங்களை கங்கையில் நீராடுங்கள் என்று கூறுவதில்லை. ‘என்னை நினைவு செய்யுங்கள்’ என்றே நான் கூறுகின்றேன். நானே காதலர்களாகிய உங்கள் அனைவரினதும் அன்பிற்கினியவர் ஆவேன். அனைவரும் ஒரேயொரு அன்பிற்கினியவரையே நினைவு செய்கின்றார்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே படைப்பைப் படைத்தவர் ஆவார். அவர் கூறுகின்றார்: ஆத்ம உணர்வுடையர்கள் ஆகி என்னை நினைவு செய்தால், இந்த யோகத் தீயில் உங்கள் பாவங்கள் அழியும். இந்த நேரத்தில் மாத்திரமே அதாவது, பழைய உலகம் மாற வேண்டிய நேரத்தில், தந்தை இந்த யோகத்தைக் கற்பிக்கின்றார். விநாசம் முன்னிலையில் உள்ளது. நாங்கள் இப்பொழுது தேவர்கள் ஆகுகின்றோம். தந்தை எமக்குக் கூறுகின்ற அனைத்தும் மிகவும் இலகுவானவை. தந்தை கூறுவதை நேரடியாக செவிமடுத்துக் கொண்டிருக்கின்ற உங்களில் சிலர் செவிமடுக்கும் போது ஸ்திரமாக இருப்பதில்லை. உங்களின் புத்தி வேறு திசைகளில் அலைந்து திரிகின்றது. பக்தியிலும் இதுவே இடம்பெறுகின்றது. முழு நாளும் வீணாகுகின்றது. அவர்கள் பக்தி செய்வதற்கென ஒதுக்கிய அந்த நேரத்திலும், அவர்களின் புத்தி அங்கும் இங்கும் அலைந்து திரிகின்றது. மாயையினாலேயே எல்லோருக்கும் ஒரே விடயம் நடக்கின்றதாக இருக்க வேண்டும். தந்தையின் முன்னால் அமர்ந்திருக்கும் போது சில குழந்தைகள் திரான்ஸில் சென்று விடுகின்றார்கள். அந்த நேரமும் வீணாகுகின்றது. எந்த வருமானமும் ஈட்டப்படுவதில்லை. தந்தை கூறுகின்றார்: நினைவில் நிலைத்திருங்கள், உங்கள் பாவங்கள் அழியும். நீங்கள் திரான்ஸில் செல்லும் போது, உங்கள் புத்தி தந்தையை நினைவு செய்வதில்லை. இதனையிட்டு அதிகளவு குழப்பங்கள் இருக்கின்றன. நீங்கள் கண்களையும் மூடாதீர்கள். நீங்கள் நினைவில் அமர்ந்திருக்க வேண்டும். நீங்கள் கண்களைத் திறந்து கொண்டிருப்பதற்குப் பயப்பட வேண்டாம். உங்கள் கண்களைத் திறந்தவாறே, நீங்கள் புத்தியில் அன்பிற்கினியவரின் நினைவை வைத்திருங்கள். உங்கள் கண்களை மூடியவாறு அமர்ந்திருப்பது இங்கு நடைமுறையல்ல. தந்தை கூறுகின்றார்: நினைவில் அமர்ந்திருங்கள். அவர் கண்களை மூடுங்கள் என்று உங்களிடம் கூறுவதில்லை. நீங்கள் கண்களை மூடினால் அல்லது தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருந்தால், தந்தையால் எப்படி உங்களைப் பார்க்க முடியும்? கண்களை ஒருபோதும் மூடாதீர்கள். நீங்கள் கண்களை மூடினால் ஏதோ தவறு உள்ளது. நீங்கள் வேறு எவரையோ நினைவு செய்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் நீங்கள் நினைவு செய்தால், உங்களால் உண்மையான காதலராக இருக்க முடியாது. நீங்கள் உண்மையான காதலராக இருந்தால் மாத்திரமே, உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியும். இந்த நினைவிலேயே சகல முயற்சிகளும் தங்கியுள்ளன. சரீர உணர்வினாலேயே நீங்கள் தந்தையை மறந்து தடுமாறித் திரிகின்றீர்கள். மிகவும் இனிமையானவர் ஆகுங்கள். சூழலும் மிகவும் இனிமையாக இருக்க வேண்டும். எந்த சத்தமும் இருக்கக் கூடாது. நீங்கள் எவ்வளவு இனிமையாகப் பேசுகின்றீர்கள் என்பதை வருகின்ற எவரும் கேட்கக் கூடியதாக இருக்க வேண்டும். அதிகளவு மௌனம் பேணப்பட வேண்டும். நீங்கள் சண்டை சச்சரவில் ஈடுபடக் கூடாது. இல்லா விட்டால், நீங்கள் மூவரையும், அதாவது தந்தையையும், ஆசிரியரையும், குருவையும் அவதூறு செய்வதைப் போன்றதாகும். அப்பொழுது நீங்கள் குறைந்த அந்தஸ்தையே பெறுவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புரிந்துணர்வைப் பெற்றுள்ளீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைப் பெற வேண்டும் என்பதற்காகவே நான் உங்களுக்கு கற்பிக்கின்றேன். நீங்களும் கற்று, பிறருக்கும் கற்பிக்க வேண்டும். நீங்கள் எவருக்கும் இந்த ஞானத்தைக் கொடுக்கா விட்டால், நீங்கள் எந்த அந்தஸ்தைக் கோருவீர்கள் என்பதை நீங்களே புரிந்து கொள்ள முடியும். நீங்கள் பிரஜைகளை உருவாக்காவிடில், நீங்கள் என்னவாகுவீர்கள்? உங்களுக்கு யோகம் இல்லாதிருந்து, இந்த ஞானமும் இல்லாவிடின், கற்றவர்களின் முன்னிலையில் நீங்கள் நிச்சயமாகத் தலைவணங்க வேண்டியிருக்கும். உங்களையே சோதித்துப் பாருங்கள். நீங்கள் இப்பொழுது தோல்வி அடைந்து, குறைந்த அந்தஸ்தைப் பெற்றால், நீங்கள் கல்பம் கல்பமாக குறைந்த அந்தஸ்தையே கோருவீர்கள். உங்களுக்கு விளங்கப்படுத்த வேண்டியது தந்தையின் கடமையாகும். நீங்கள் புரிந்து கொள்ளா விட்டால், உங்கள் சொந்த அந்தஸ்தை நீங்கள் அழித்துக் கொள்கின்றீர்கள். நீங்கள் எப்படிப் பிறருக்கு விளங்கப்படுத்த வேண்டும் என்றும் தந்தை உங்களுக்குத் தொடர்ந்தும் கூறுகின்றார். குறைவாகவும், மெதுவாகவும் பேசுவது நல்லதாகும். சேவை செய்கின்றவர்களை பாபா புகழ்கின்றார். நன்றாக சேவை செய்கின்றவர்கள் பாபாவின் இதயத்தில் அமர்கின்றார்கள். சேவை செய்வதன் மூலம் உங்களால் அவரின் இதயத்தில் அமர முடியும். நினைவு யாத்திரையும் உங்களுக்கு நிச்சயமாக அவசியம். அப்பொழுதே நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். அதிகளவு தண்டனையை அனுபவம் செய்ய நேர்ந்தால், உங்கள் அந்தஸ்து குறைவடையும். உங்கள் பாவங்கள் அழியாதிருந்தால், அதிகளவு தண்டனையை அனுபவம் செய்ய நேரிடுவதுடன் உங்கள் அந்தஸ்தும் குறைவடையும். அது இழப்பு என்று அழைக்கப்படுகின்றது. இதுவும் ஒரு வியாபாரமே. நட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். மேன்மையானவர் ஆகுங்கள். நீங்கள் முன்னேறிச் செல்வதற்காக பாபா பல்வேறு விடயங்களைக் கூறுகின்றார். ஒன்றைச் செய்பவர்கள் அதற்கான வெகுமதியைப் பெற்றுக் கொள்கின்றார்கள். நீங்கள் தேவதை உலகத்தின் வாசிகள் ஆக வேண்டும். ஆகையால் அதற்கேற்ப தெய்வீகக் குணங்களை கிரகியுங்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. எவருக்கும் விளங்கப்படுத்தும் போது, அதிகளவு பணிவுடனும் பொறுமையுடனும் விளங்கப்படுத்துங்கள். உங்கள் வார்த்தைகளும் நடத்தையும் மிகவும் இனிமையாக இருக்க வேண்டும். மௌனமான சூழலை உருவாக்குங்கள். எந்த சப்தமும் இல்லாத போதே, சேவை வெற்றியடையும்.2. உண்மையான காதலராகி, ஒரேயொரு அன்பிற்கினியவரை நினைவு செய்யுங்கள். உங்கள் கண்களை மூடிக் கொண்டோ அல்லது தலையைக் குனிந்து கொண்டோ என்றுமே நினைவில் அமர்ந்திருக்காதீர்கள். ஆத்ம உணர்வில் இருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு சதா மகாதானியாகி, உங்களின் பொக்கிஷங்கள் அனைத்தையும் உங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் பயன்படுத்துவீர்களாக.தந்தையின் பொக்கிஷக் களஞ்சியம் (பண்டாரா) ஒவ்வொரு நாளும் இயங்குகிறது. அவர் ஒவ்வொரு நாளும் பகிர்ந்தளிக்கிறார். அதேபோல், நீங்களும் சதா தொடர்ந்து கொடுக்கலாம். ஏனென்றால், உங்களிடம் இந்த ஞானம், சக்திகள், சந்தோஷம் என்ற பொக்கிஷங்கள் நிரம்பி வழிகின்றன. இவற்றை உங்களுடன் வைத்திருந்து அவற்றைப் பயன்படுத்துவதில் எந்தவித அபாயமும் கிடையாது. உங்களின் பொக்கிஷக் களஞ்சியம் திறந்து இருக்கும்போது, கள்ளர்கள் வரமாட்டார்கள். அதை நீங்கள் மூடி வைத்தால், கள்ளர்கள் வருவார்கள். அதனால் ஒவ்வொரு நாளும் நீங்கள் பெற்றுள்ள பொக்கிஷங்களை மீண்டும் மீண்டும் பார்த்து, அவற்றை உங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் பயன்படுத்துங்கள். நீங்கள் சதா மகாதானி ஆகுவீர்கள்.
சுலோகம்:
நீங்கள் எதைக் கேட்டிருக்கிறீர்களோ, அதைக் கடையுங்கள். ஏனென்றால், கடைவதன் மூலம் மட்டுமே நீங்கள் சக்திசாலிகள் ஆகுவீர்கள்.அவ்யக்த சமிக்கை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வின் மூலம் சதா வெற்றி பெறுபவர் ஆகுங்கள்.
சேவையும் உங்களின் ஸ்திதியும் தந்தையும் நீங்களும் ஒன்றிணைந்த நிலையில் இருக்கிறீர்கள். ஒன்றிணைந்த ரூபத்தில் இருந்தவண்ணம் சேவை செய்யுங்கள். நீங்கள் சதா தேவதை ரூபத்தை அனுபவம் செய்வீர்கள். நீங்கள் சதா தந்தையுடன் இருக்கிறீர்கள். அத்துடன் நீங்கள் அவரின் சகபாடிகளும் ஆவீர்கள். இந்த இரட்டை அனுபவம் இருக்க வேண்டும். அவரிடம் நீங்கள் வைத்திருக்கும் அன்பால் சதா அவரின் சகவாசத்தை அனுபவம் செய்யுங்கள். சேவை செய்வதில், சதா உங்களின் சகபாடியை அனுபவம் செய்யுங்கள்.