07.08.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நினைவு யாத்திரை மூலம் நீங்கள் ஒரு வருமானத்தைச் சேகரிக்கிறீர்கள். செலவிலிருந்து, நீங்கள் வரவிற்குள் செல்வதுடன், உலக அதிபதிகளும் ஆகுகின்றீர்கள்.
பாடல்:
“சத்திய சகவாசம் உங்கள் படகை அக்கரைக்கு இட்டுச் செல்கிறது, பொய்மையின் சகவாசம் உங்கள் படகை மூழ்கடிக்கிறது” என்பதன் அர்த்தம் என்ன?பதில்:
குழந்தைகளாகிய நீங்கள் சத்திய சகவாசத்தை, அதாவது, தந்தையின் சகவாசத்தைப் பெறும்பொழுது, உங்கள் ஸ்திதி உயர்கிறது. இராவணனின் சகவாசம் தீய சகவாசமாகும். இராவணனின் சகவாசத்தின் மூலம் நீங்கள் வீழ்கிறீர்கள். அதாவது, அவன் உங்கள் படகை மூழ்கச் செய்கிறான், ஆனால், தந்தை உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கிறார். தந்தை தனது சகவாசத்தை உங்களுக்குக் கொடுப்பதன் மூலம், நீங்கள் ஒரு விநாடியில் முக்தியையும். ஜீவன்முக்தியையும் அனுபவம் செய்வது, அவரின் அற்புதமாகும். இதனாலேயே அவர், மந்திரவாதி என்றும் அழைக்கப்படுகிறார்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் நினைவில் அமர்ந்திருந்தீர்கள். இது நினைவு யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. தந்தை கூறுகிறார்: “யோகம்” என்ற வார்த்தையைப்; பயன்படுத்தாதீர்கள். தந்தையை நினைவு செய்யுங்கள்; அவரே பரம தந்தையும், தூய்மையாக்குபவருமான, ஆத்மாக்களின் தந்தை ஆவார். நீங்கள், அந்தத் தூய்மையாக்குபவரை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். தந்தை கூறுகிறார்: உங்கள் சரீர உறவுகள் அனைத்தையும் துறந்து, ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நீங்கள் மரணிக்கும்பொழுது, உங்களுக்கு உலகமே மரணித்துவிடுவதாகக் கூறப்படுகிறது. உங்கள் சரீர உறவுகள் போன்றோரையோ அல்லது நீங்கள் பார்க்கும் சரீரத்தையோ நினைவு செய்யாதீர்கள். ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் பல பிறவிகளாக, பாவாத்மாக்களாக இருந்தீர்கள். இது பாவாத்மாக்களின் உலகமாகும். சத்தியயுகம் புண்ணியாத்மாக்களின் உலகமாகும். இப்பொழுது நீங்கள், எவ்வாறு உங்கள் பாவங்கள் அனைத்தையும் அழித்து, புண்ணியத்தைச் சேகரிக்க முடியும்? தந்தையை நினைவு செய்வதால் மாத்திரமே உங்களால் அதனைச் சேகரித்துக் கொள்ள முடியும். ஆத்மாவிலேயே மனமும், புத்தியும் உள்ளன. ஆகவே, ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் புத்தியால் பாபாவை நினைவு செய்ய வேண்டும். தந்தை கூறுகிறார்: உங்கள் நண்பர்கள், உறவினர்கள் போன்ற ஏனைய அனைவரையும் மறந்துவிடுங்கள். அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் துன்பத்தை விளைவிக்கிறார்கள். காம வாளை உபயோகிப்பதே அவர்கள் செய்கின்ற முதலாவது பாவமாகும். அவர்கள் செய்கின்ற இரண்டாவது பாவம் எது? அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும், குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுப்பவருமான, அதாவது, உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்ற தந்தையைச் சர்வவியாபி என்று அவர்கள் அழைப்பதாகும். இது ஒரு பாடசாலை, நீங்கள் கற்பதற்காக இங்கு வந்துள்ளீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனுமே உங்கள் இலக்கும், குறிக்கோளுமாகும். வேறு எவராலும் இதனைக் கூற முடியாது. நீங்கள் இப்பொழுது தூய்மையாகி, தூய உலகின் அதிபதிகள் ஆகவேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரியும். மிகச்சரியாக 5000 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் உலக அதிபதிகள் ஆகினோம். தேவர்களே உலக அதிபதிகளாவர். அது அத்தகைய உயர்ந்த அந்தஸ்தாகும்! நிச்சயமாகத் தந்தையே உங்களை அவ்வாறு ஆக்கியவர் ஆவார். தந்தை பரமாத்மா என்று அழைக்கப்படுகிறார். அவரது உண்மையான பெயர் சிவனாகும். பின்னர், அவர்கள் அவருக்குப் பல பெயர்களை வழங்குகிறார்கள். உதாரணமாக, பம்பாயில் முட்களின் பிரபுவிற்கு (பபுல்நாத் ஆலயம்) ஓர் ஆலயம் உள்ளது∙ அதாவது, அவரே முட்காடுகளை, பூந்தோட்டமாக மாற்றுபவராவார். உண்மையில் அவருக்கு சிவன் என்ற ஓர் உண்மையான பெயர் மாத்திரமே உள்ளது. அவர் இவரில் பிரவேசிக்கும்பொழுதும், அவரின் பெயர் சிவனாகும். நீங்கள் இந்த பிரம்மாவை நினைவு செய்யக்கூடாது; அவர் ஒரு சரீரதாரியாவார். சரீரமற்றவரையே நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் தூய்மையாக்கப்பட வேண்டும். “மகாத்மா”, “பாவாத்மா” என்று கூறப்படுகிறது. “மகா பரமாத்மா” என்று ஒருபொழுதும் கூறப்படுவதில்லை. வேறு எவரும் தன்னைப் பரமாத்மா என்றோ அல்லது ஈஸ்வர் (கடவுள்) என்றோ அழைக்க முடியாது. ஒரு மகாத்மா ஒரு தூய ஆத்மா ஆவார் எனக் கூறப்படுகிறது. சந்நியாசிகள் அனைத்தையும் துறக்கிறார்கள். இதனாலேயே, அவர்கள் தூய ஆத்மாக்கள் என அழைக்கப்படுகிறார்கள். அவர்களும் மறுபிறப்பு எடுக்கிறார்கள் என்று தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். சரீரதாரிகள் நிச்சயமாக மறுபிறவி எடுக்கவேண்டும். அவர்கள் விகாரத்தின் மூலம் பிறப்பெடுக்கிறார்கள், பின்னர் அவர்கள் வளரும் பொழுது, துறவறத்தை மேற்கொள்கிறார்கள். தேவர்கள் அவ்வாறு செய்வதில்லை. அவர்கள் சதா தூய்மையானவர்கள். தந்தை இப்பொழுது உங்களை அசுரர்களிலிருந்து, தேவர்களாக மாற்றுகிறார். தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பதனால், நீங்கள் தேவ சமுதாயத்திற்கு உரியவர்கள் ஆகுவீர்கள். தேவ சமுதாயத்தினர் சத்தியயுகத்தில் வாழ்கிறார்;கள். ஆனால், அசுர சமுதாயத்தினர் கலியுகத்தில் வாழ்கிறார்;கள். இது இப்பொழுது சங்கமயுகமாகும். இப்பொழுது நீங்கள் தந்தையைக் கண்டுகொண்டீர்கள். அவர் கூறுகிறார்: இப்பொழுது நீங்கள் நிச்சயமாக மீண்டும் ஒருமுறை தேவ சமுதாயத்திற்கு உரியவர்களாக வேண்டும். தேவ சமுதாயத்திற்கு உரியவர்கள் ஆகுவதற்காக நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். தேவ சமுதாயத்தினர் எல்லையற்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்கிறார்;கள். இந்த உலகம் வன்முறையானது என அழைக்கப்படுகிறது. தேவர்கள் அகிம்சாவாதிகள். தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே, தந்தையை நினைவு செய்யுங்கள்! உங்கள் குருமார்கள் அனைவரும் சரீரதாரிகளே ஆவார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது பரமாத்மாவாகிய தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் புண்ணியாத்மாக்கள் ஆகும்பொழுது, சந்தோஷத்தைப் பெறுவீர்கள். நீங்கள் 84 பிறவிகளை எடுக்கும்பொழுது, பாவாத்மாக்கள் ஆகுகிறீர்கள். இப்பொழுது நீங்கள் புண்ணியத்தைச் சேகரிக்கிறீர்கள். நீங்கள் யோகசக்தியின் மூலம் உங்கள் பாவங்களை முடித்துவிடுகிறீர்கள். இந்த நினைவு யாத்திரையில் செல்வதன் மூலமே நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள். நீங்கள் நிச்சயமாக உலக அதிபதிகளாக இருந்தீர்கள். பின்னர் நீங்கள் எங்கு சென்றீர்கள்? தந்தை இதனையும் உங்களுக்குக் கூறுகிறார். நீங்கள் 84 பிறவிகளை எடுத்து, சூரிய வம்சத்தவர்களாகவும், பின்னர் சந்திர வம்சத்தவர்களாகவும் ஆகினீர்கள். கடவுள் பக்தியின் பலனைக் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. சரீரதாரி எவரையும் கடவுள் என்று அழைக்க முடியாது; அவர் அசரீரியான சிவன். மக்கள் சிவனின் பிறப்பைக் கொண்டாடுவதால், அவர் நிச்சயமாக வந்திருக்கவேண்டும். எவ்வாறாயினும் அவர் கூறுகிறார்: நீங்கள் பிறப்பெடுக்கின்ற விதத்தில் நான் பிறப்பெடுப்பதில்லை. நான் ஒரு சரீரத்தைக் கடனாகப் பெறவேண்டியுள்ளது. எனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. எனக்கு அவ்வாறு இருந்தால், அதற்கு ஒரு பெயர் இருந்திருக்கும். பிரம்மா என்ற பெயர் இவருக்கு உரியதாகும். இவர் துறவறத்தை மேற்கொண்டபொழுதே இவருக்கு “பிரம்மா” என்ற பெயர் வழங்கப்பட்டது. நீங்கள் பிரம்ம குமாரர்களும், குமாரிகளுமாவீர்கள். இல்லாவிட்டால், பிரம்மா எங்கிருந்து வந்தார்? பிரம்மா சிவனின் புத்திரர் ஆவார். சிவபாபா, தனது புத்திரர் பிரம்மாவில் பிரவேசித்து, உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார். பிரம்மாவும், விஷ்ணுவும், சங்கரும் அவரது குழந்தைகள். அசரீரியான தந்தையின் குழந்தைகள் அனைவரும் அசரீரியானவர்கள். ஆத்மாக்கள் கீழே இறங்கி வந்து, தங்கள் பாகங்களை நடிப்பதற்காக சரீரங்களைப் பெறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் தூய்மையற்றவர்களைத் தூய்மையானவர்கள் ஆக்குவதற்கு வருகிறேன். நான் இந்தச் சரீரத்தைக் கடனாகப் பெறுகிறேன். கடவுள் சிவனே பேசுகிறார். கிருஷ்ணரைக் கடவுள் என்று அழைக்க முடியாது. ஒரேயொரு கடவுளே உள்ளார். கிருஷ்ணரின் புகழ் முற்றிலும் வேறானது. இராதையும், கிருஷ்ணருமே முதல் இலக்கத் தேவர்கள் ஆவார்கள். அவர்களின் திருமணத்திற்குப் பின்னர் அவர்கள் இலக்ஷ்மி, நாராயணன் ஆகுகிறார்கள். எவ்வாறாயினும் எவருக்கும் இது தெரியாது. எவருக்கும் இராதை கிருஷ்ணரைப் பற்றியோ அல்லது அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்றோ தெரியாது. இராதையும், கிருஷ்ணரும் தங்களின் திருமணத்திற்குப் பின்னர் இலக்ஷ்மி, நாராயணன் ஆகுகிறார்கள். அவர்கள் வெவ்வேறு சக்கரவர்த்திகளின் குழந்தைகள். விகாரங்களின் வடிவமான இராவணன் அங்கு இல்லாததால், அங்கு தூய்மையின்மையின் சுவடுகூட இருக்க மாட்டாது. அது இராம (கடவுளின்) இராச்சியமாகும். இப்பொழுது தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் சதோபிரதானாக இருந்து இப்பொழுது தமோபிரதான் ஆகிவிட்டீர்கள். நீங்கள் இழக்க நேர்ந்ததால், இப்பொழுது சேமிக்க வேண்டும். கடவுள் ஒரு வியாபாரி என்றும் அழைக்கப்படுகிறார். வெகு சிலராலேயே அவருடன் வியாபாரம் செய்ய முடியும். அவர் மந்திரவாதி என்றும் அழைக்கப்படுகிறார். முழு உலகிற்கும் சற்கதியை அருள்வதே அவர் செய்கின்ற அற்புதமாகும். அவர் அனைவருக்கும் முக்தியையும், ஜீவன்முக்தியையும் அருள்;கிறார். இது ஒரு மந்திர வித்தையாகும். மனிதர்களால், மனிதர்களுக்குச் சற்கதியை அளிக்க முடியாது. நீங்கள் 63 பிறவிகளாகப் பக்தி செய்தீர்கள். பக்தி செய்வதன் மூலம் எவராவது சற்கதியைப் பெற்றார்களா? சற்கதி அருளக்கூடிய எவராவது இருந்தார்களா? அது சாத்தியமாக இருக்கவில்லை. ஒருவராலுமே வீடு திரும்ப முடியாது. எல்லையற்ற தந்தை மாத்திரம் வந்தே, அனைவரையும் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். கலியுகத்தில் பல அரசர்கள் இருக்கிறார்கள். உங்களில் வெகுசிலரே அங்கு ஆட்சி செய்கிறீர்;கள். ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் முக்திக்குள் செல்கிறார்கள். ஆனால் நீங்களோ முக்தி தாமத்தினூடாக, ஜீவன்முக்திக்குள் செல்கிறீர்கள். சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. ஆத்மாக்களாகிய உங்களுக்கு இப்பொழுது படைப்பவர், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியான உலகச் சக்கரம் காட்டப்பட்டுள்ளது. இந்த ஞானத்தின் மூலம் நீங்களே சாதாரண மனிதர்களிலிருந்து, நாராயணன் ஆகுபவர்கள். தேவர்களின் இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டதும், இந்த ஞானத்திற்கான தேவை இருக்க மாட்டாது. கடவுள் அரைக் கல்பத்திற்குச் சந்தோஷம் எனும் உங்கள் பக்தியின் பலனைப் பக்தர்களாகிய உங்களுக்குக் கொடுக்கிறார். அதன்பின்னர், இராவண இராச்சியத்தில் துன்பம் ஆரம்பமாகுகிறது. நீங்கள் படிப்படியாகத் தொடர்ந்தும் ஏணியில் கீழிறங்குகிறீர்கள். நீங்கள் சத்தியயுகத்தில் இருக்கும்பொழுது, கடந்து செல்கின்ற ஒவ்வொரு நாளும் ஏணியிலிருந்து கீழிறங்க வேண்டியிருந்தது. நீங்கள் 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்களாகி, பின்னர் தொடர்ந்தும் ஏணியிலிருந்து கீழிறங்குகிறீர்கள். ஒவ்வொரு விநாடியும் கடந்து செல்லும்பொழுதும், நீங்கள் தொடர்ந்தும் கீழிறங்குகிறீர்கள். காலம் தொடர்ந்தும் கடந்து செல்கையில் நீங்கள் இங்கே வந்தடைந்திருக்கிறீர்கள்! அங்கும் காலம் அவ்வாறே தொடர்ந்து செல்லும். நாங்கள் விரைவாக ஏணியில் ஏறுகிறோம். பின்னர் நாங்கள் மெதுவாகவே, ஒரு பேனைப் போல ஏணியில் கீழ் இறங்குகிறோம். தந்தை கூறுகிறார்: நானே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். மனிதர்கள் விகாரம் மூலம் பிறந்தவர்கள்∙ ஆகவே, அவர்கள் தூய்மையற்றவர்கள் என்பதால், மனிதர்களால், மனிதர்களுக்குச் சற்கதியை அருள முடியாது. உண்மையில் கிருஷ்ணரை மாத்திரம் உண்மையான மகாத்மா என்று அழைக்க முடியும். இங்குள்ள அந்த மகாத்மாக்கள் விகாரம் மூலம் பிறப்பெடுத்து, பின்னர் துறவறத்தை மேற்கொள்கிறார்கள்∙ ஆனால், அவர்களோ தேவர்கள், தேவர்கள் எப்பொழுதும் தூய்மையானவர்கள்; அவர்கள் எந்த விகாரத்தையும் கொண்டிருக்க மாட்டார்கள். அந்த உலகம், விகாரமற்ற உலகம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வுலகம், தூய்மையற்ற, விகார உலகம் என்று அழைக்கப்படுகிறது. அவர்களுடைய நடத்தை மிகவும் தீயது. தேவர்களின் நடத்தை மிகவும் நல்லது. அனைவரும் அவர்களுக்கு வந்தனம் (நமஸ்தே) செலுத்துகிறார்கள். அவர்களுடைய நடத்தை மிகவும் நல்லது என்பதால், தூய்மையற்ற மனிதர்கள் தூய்மையான தேவர்களின் விக்கிரகங்களை வீழ்ந்து வணங்குகிறார்கள். இப்பொழுது அதிகளவு சண்டையும், சச்சரவும் உள்ளன. பெருமளவு குழப்பம் உள்ளது. இப்பொழுது மக்கள் வாழ்வதற்குப் போதிய இடம்கூட இல்லை. சனத்தொகையைக் குறைப்பதற்கு அவர்கள் விரும்புகிறார்கள், ஆனால், அந்தப் பணி, தந்தைக்கு மாத்திரமே உரியதாகும். சத்தியயுகத்தில், மிகச்சில மனிதர்களே இருக்கிறார்கள். அனைத்துச் சரீரங்களும் எரிக்கப்படும், ஆத்மாக்கள் அனைவரும் தங்கள் இனிய வீட்டிற்குத் திரும்பிச் செல்வார்கள். நிச்சயமாக அனைவரும், வரிசைக்கிரமமாகத் தண்டனையை அனுபவம் செய்கிறார்கள். முழு முயற்சி செய்து, வெற்றி மாலையின் மணி ஆகுபவர்களே தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். மாலை ஒருவரை மாத்திரம் கொண்டதல்ல. அவர்களை அவ்வாறு ஆக்கியவர், மலரினால் (குஞ்சம்) காட்டப்படுகிறார். பின்னர் இல்லறப் பாதையைக் குறிக்கின்ற இரட்டை மணிகள் உள்ளன. மாலை தம்பதிகளைக் கொண்டதாகும்; ஒற்றையர்களுக்கு மாலை இருப்பதில்லை. சந்நியாசிகளுக்கான மாலையும் இல்லை, அவர்கள் துறவறப்பாதைக்கு உரியவர்கள். இல்லறப்பாதையை சேர்ந்தவர்களுக்கு அவர்களால் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. தூய்மையாகுவதற்கான அவர்களின் துறவறம் எல்லைக்குட்பட்டதாகும். அவர்கள் ஹத்தயோகிகள்∙ ஆனால் இதுவோ, இராஜயோகமாகும். உங்களை ஓர் இராச்சியத்தைப் பெறச் செய்வதற்காகத் தந்தை உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். தந்தை 5000 வருடங்களுக்கு ஒருமுறை வருகிறார். அரைக்கல்பத்திற்கு நீங்கள் சந்தோஷமாக ஆட்சிசெய்வீர்கள். பின்னர் நீங்கள் படிப்படியாக இராவண இராச்சியத்தில் சந்தோஷமற்றவர்கள் ஆகுகிறீர்கள். இது சந்தோஷமும், துன்பத்திற்குமான நாடகம் என்று அழைக்கப்படுகிறது. பாண்டவர்களாகிய நீங்கள் வெற்றியாளர்கள் ஆக்கப்படுகிறீர்கள். நீங்கள் இப்பொழுது வழிகாட்டிகள். நீங்கள் வீட்டுக்குத் திரும்புகின்ற யாத்திரையில் மற்றவர்களை அழைத்துச் செல்கிறீர்கள். மனிதர்கள் பிறவிபிறவியாக அந்த யாத்திரைகள் சென்று வருகிறார்கள். இப்பொழுது உங்கள் யாத்திரை வீட்டிற்குத் திரும்பிச் செல்வதாகும். தந்தை வந்து, அனைவருக்கும் முக்திக்கும், ஜீவன்முக்திக்குமான பாதையைக் காட்டுகிறார். நீங்கள் ஜீவன்முக்தி அடைவீர்கள். ஏனைய அனைவரும் முக்திக்குள் செல்வார்கள். விரக்திக்குரல்களின் பின்னர், வெற்றிக் குரல்கள் ஒலிக்கும். இது இப்பொழுது கலியுக இறுதியாகும். பல அனர்த்தங்கள் வரவுள்ளன. அந்நேரத்தில் உங்களால் நினைவு யாத்திரையில் நிலைத்திருக்க முடியாதிருக்கும், ஏனெனில் அப்பொழுது அதிகளவு குழப்பம் நிலவும். ஆகவே தந்தை கூறுகிறார்: இப்பொழுது உங்கள் நினைவு யாத்திரையை அதிகரிப்பதால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, உங்களுக்காகச் சேமித்துக் கொள்ள முடியும். குறைந்தபட்சம் சதோபிரதான் ஆகுங்கள்! தந்தை கூறுகிறார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும், மங்களகரமான சங்கமயுகத்தில் வருகிறேன். இது மிகச்சிறிய, பிராமணர்களின் யுகமாகும். உச்சிக் குடுமியே பிராமணர்களாகிய உங்களின் அடையாளமாகும். நீங்கள் பிராமணர்களாகவும், தேவர்களாகவும், சத்திரியர்களாகவும், வைசியர்களாகவும், பின்னர் சூத்திரர்களாகவும் ஆகுகிறீர்கள். இந்தச் சக்கரம் தொடர்ந்து சுழல்கிறது. பிராமணர்களாகிய உங்கள் குலம் மிகவும் சிறியதாகும். இந்தக் குறுகிய யுகத்தில் உங்களுக்குக் கற்பிப்பதற்காகத் தந்தை வருகிறார். நீங்கள் அவரின் குழந்தைகளும், அவரின் மாணவர்களும், அவரைப் பின்பற்றுபவர்களும் ஆவீர்கள். நீங்கள் அனைவருமே, ஒருவருக்கே உரியவர்கள். உலகில் வேறு எந்த ஒரு மனிதராலுமே, ஒரு தந்தையாகவோ அல்லது கற்பித்தல்களைக் கொடுக்கின்ற ஆசிரியராக அதாவது உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொடுப்பவராகவோ அல்லது உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்பவராகவோ இருக்க முடியாது. அவ்வாறான ஒரு மனிதர் இருக்க முடியாது. இப்பொழுது நீங்கள் இவ்விடயங்களைப் புரிந்துகொள்கிறீர்கள். ஆரம்பத்தில், சத்தியயுகத்தில், விருட்சம் மிகவும் சிறியதாக உள்ளது. ஏனைய அனைவரும் அமைதி தாமத்திற்குச் சென்றிருப்பார்கள். தந்தை அனைவருக்கும், சற்கதியை அருள்;பவர் என அழைக்கப்படுகிறார். அவர்கள் தந்தையைக் கூவியழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குகின்ற பாபாவே, வாருங்கள்! மறு பக்கத்தில் அவர்கள், கடவுள் கூழாங்கற்களிலும், கற்களிலும், பூனைகளிலும், நாய்களிலும் இருக்கிறார் என்று கூறுகிறார்கள். அவர்கள் எல்லையற்ற தந்தையை அவதூறு செய்கிறார்கள். அவர்கள் தங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்ற தந்தையை அவதூறு செய்கிறார்கள். இது, இராவணனின் தீய சகவாசத்தின் செல்வாக்கில் இருப்பதென அழைக்கப்படுகிறது. சத்திய சகவாசம் உங்களின் படகை அக்கரைக்கு இட்டுச் செல்கிறது, பொய்மையின் சகவாசம் உங்கள் படகை மூழ்கடிக்கிறது. இராவண இராச்சியம் ஆரம்பிக்கும்பொழுது, நீங்கள் விழ ஆரம்பிக்கிறீர்கள். தந்தை வந்து உங்கள் ஸ்திதியை உயர்வடையச் செய்கிறார். தந்தை வந்து, உங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுகிறார். ஆகவே, இதில் அனைவருக்கும் நன்மையுள்ளது. இப்பொழுது ஏறத்தாழ அனைவரும் இங்கு உள்ளனர். இன்னமும் மேலே உள்ளவர்கள் தொடர்ந்தும் கீழிறங்கி வருவார்கள். அசரீரி உலகில் இன்னமும் உள்ள ஆத்மாக்கள் அனைவரும் கீழிறங்கி வரும்வரை, நீங்கள் உங்கள் பரீட்சையில் தொடர்ந்தும் வரிசைக்கிரமமாகச் சித்தியடைவீர்கள். இது ஓர் ஆன்மீகக் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது. ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிப்பதற்கு வருகிறார். பின்னர், இராவணனின் இராச்சியம் வரும்பொழுது, நீங்கள் உங்கள் தூய சரீரங்களைத் துறந்து, தூய்மையற்ற அரசர்களாகி, தூய்மையான விக்கிரகங்களை வழிபட ஆரம்பிக்கிறீர்கள். ஆத்மாவே தூய்மையானவராகவும், தூய்மையற்றவராகவும் ஆகுகிறார். ஆத்மாக்கள் தூய்மையற்றவர்களாக இருக்கும்பொழுது, அவர்கள் தூய்மையற்ற சரீரங்களைப் பெறுகிறார்கள். தூய தங்கத்தில், கலப்படம் கலக்கப்படும்பொழுது, அதிலிருந்து செய்யப்படும் ஆபரணத்திலும் கலப்படம் இருக்கிறது. இப்பொழுது, எவ்வாறு ஆத்மாக்களிலிருந்து கலப்படம் அகற்றப்பட முடியும்? யோகத் தீ தேவையாகும், இதனூடாகவே உங்கள் பாவங்கள் அழிக்கப்பட முடியும். வெள்ளி, செப்பு, மற்றும் இரும்பு ஆகிய கலப்படங்கள் ஆத்மாக்களில் கலக்கப்பட்டுள்ளன. ஆத்மாக்கள் நிஜத் தங்கமாக இருந்தனர்; இப்பொழுது அவர்கள் செயற்கை ஆகியுள்ளனர். அந்தக் கலப்படத்தை எவ்வாறு அகற்ற முடியும்? இது யோகத் தீயாகும். நீங்கள் யோகச் சிதையில் அமர்ந்திருக்கிறீர்கள். முன்னர் நீங்கள், காமச்சிதையில் அமர்ந்திருந்தீர்கள். தந்தை, உங்களை ஞானச் சிதையில் அமர்த்துகிறார். ஞானக்கடலான, தந்தையைத் தவிர, வேறு எவராலும், உங்களை ஞானச் சிதையில் அமர்த்த முடியாது. பக்தி மார்க்கத்தில் மனிதர்கள் தொடர்ந்தும் பெருமளவு பூஜிக்கிறார்கள், ஆனால் அவர்களுக்குத் தாங்கள் பூஜிக்கின்ற எவரையும் தெரியாது. இப்பொழுது உங்களுக்கு அவர்களைத் தெரியும். நீங்கள் அனைவரும் தேவர்கள் ஆகும்பொழுது, வழிபாட்டுக்குரிய அனைத்து விடயங்களும் முடிவடைந்துவிடுகிறது. இராவண இராச்சியம் ஆரம்பிக்கும்பொழுது, பக்தி மார்க்கம் ஆரம்பிக்கிறது. அச்சாஇனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து, இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு, வெற்றிமாலையின் மணி ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஓர் ஆன்மீக வழிகாட்டியாகி, வீடான, அமைதி தாமத்திற்குச் செல்லும் யாத்திரையில் அனைவரையும் அழைத்துச் செல்லுங்கள்.2. உங்கள் நினைவு யாத்திரையைப் படிப்படியாக அதிகரிப்பதனால் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டவர்கள் ஆகுங்கள். யோகத் தீயின் மூலம் ஆத்மாவை நிஜத் தங்கம் ஆக்கி, சதோபிரதான் ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
ஒவ்வொரு கணத்தையும் உங்களுடைய இறுதி கணமாகக் கருதுவதன் மூலம் சதா எப்பொழுதுமே ஆயத்தமாக இருக்கின்ற ஒரு தீவிர முயற்சியாளன் ஆகுவீர்களாக.உங்கள் இறுதி கணத்திற்கான எந்தவொரு உத்தரவாதமும் இல்லை என்பதால் ஒவ்வொரு கணத்தையும் உங்கள் இறுதிக் கணமாகக் கருதி எப்பொழுதும் ஆயத்தமாக இருக்க வேண்டும். எப்பொழுதும் ஆயத்தமாக இருப்பது என்றால் தீவிர முயற்சியாளராக இருப்பது என்று அர்த்தமாகும். விநாசத்திற்கு இன்னமும் காலம் உள்ளது என்றும் அப்பொழுது நீங்கள் ஆயத்தமாகி விடுவீர்கள் என்றும் நினைக்காதீர்கள். இல்லை. ஒவ்வொரு கணமுமே இறுதிக் கணமாக இருக்க முடியும், ஆகையால் நீங்கள் சதா பற்றிலிருந்தும், பாவகரமான வீணான எண்ணங்களில் இருந்தும் விடுபட்டிருந்தால் நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாக இருப்பவர் எனப்படுவீர்கள். இன்னமும் என்னனென்ன பணிகள் நிறைவேற்றப்பட வேண்டியிருந்தாலும், உங்கள் ஸ்திதி எப்பொழுதும் அப்பால் இருந்தால் என்ன நடக்க உள்ளதோ அது நல்லதாகவே இருக்கும்.
சுலோகம்:
சட்டத்தை உங்கள் சொந்த கைகளில் எடுப்பதென்றால் கோபத்தின் சுவட்டை கொண்டிருப்பதாகும்.