07.11.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, சிவபாபா உங்கள் பொக்கிஷக் களஞ்சியங்கள் அனைத்தையும் முழுமையாக நிரப்புவதற்கே வந்துள்ளார். உங்கள் பொக்கிஷக் களஞ்சியங்கள் நிறையும் பொழுது, அனைத்துத் துன்பமும் அகன்றுவிடும் எனக் கூறப்பட்டுள்ளது.

பாடல்:
ஞானம் நிறைந்த குழந்தைகளின் புத்தியில் எந்த நம்பிக்கை மிகவும் உறுதியாக இருக்கிறது?

பதில்:
தங்கள் பாகம் ஒருபொழுதும் அழிக்கப்படவோ அல்லது மாற்றப்படவோ முடியாது, என்ற உறுதியான நம்பிக்கை அவர்களிடம் இருக்கிறது. ‘ஆத்மாவாகிய என்னில், அழிவற்ற 84 பிறவிகளின் பாகம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது’. இந்த ஞானம் உங்கள் புத்தியில் இருக்குமானால், நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள் ஆகுவீர்கள். இல்லாவிட்டால், உங்கள் புத்தியிலிருந்து ஞானம் அனைத்தும் மறைந்து விடுகிறது.

ஓம் சாந்தி.
தந்தை வந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு என்ன கூறுகின்றார்? அவர் என்ன சேவை செய்கின்றார்? இந்த நேரத்தில், தந்தை உங்களுக்கு ஆன்மீகக் கல்வியைக் கற்பிக்கும் சேவையைச் செய்கின்றார். இதனை நீங்கள் அறிவீர்கள். அவர் தந்தையின் பாகத்தையும், ஆசிரியரின் பாகத்தையும், குருவின் பாகத்தையும் நடிக்கின்றார். அவர் மூன்று பாகங்களையும் மிகவும் நன்றாக நடிக்கின்றார். அவர் தந்தையும், அனைவருக்கும் சற்கதியை அருளும் குருவும் ஆவார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் அனைவருக்கும் உரியவர். இளையவர்களுக்கும், முதிர்ச்சி அடைந்தவர்களுக்கும், முதியவர்களுக்கும் வாலிபப் பருவத்தினர்களுக்கும் ஒரேயொருவரே உள்ளார். அவரே பரம தந்தையும், பரம ஆசிரியரும் ஆவார். அவர் எல்லையற்ற கற்பித்தல்களைக்; கொடுக்கின்றார். அனைவரினதும் சுயசரிதத்தை நீங்கள் அறிவீர்கள் என்பதை மகாநாடுகளி;ல் நீங்கள் விளங்கப்படுத்த முடியும். நீங்கள் பரமாத்மாவாகிய பரமதந்தை சிவபாபாவின் சுயசரிதத்தையும் அறிவீர்கள். இவை அனைத்தையும் உங்கள் புத்தி வரிசைக்கிரமமாகவே நினைவுசெய்கிறது. முழுமையான எல்லையற்ற பல்வகை ரூபம் உங்கள் புத்தியில் நிச்சயமாக இருக்க வேண்டும். இப்போது நீங்கள் பிராமணர்களாகி விட்டீர்கள், நீங்கள் தேவர்களாகவும், சத்திரியர்களாகவும், வைசியர்களாகவும் பின்னர் சூத்திரர்களாகவும் ஆகுவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இதனை நினைவுசெய்கின்றீர்கள், இல்லையா? குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவரும் இவ் விடயங்களை நினைவு செய்யமாட்டார்கள். எழுச்சியினதும் வீழ்ச்சியினதும் முழுமையான உட்பொருளும் உங்கள் புத்தியில் இருக்கட்டும். நாங்கள் எழுச்சி ஸ்திதியில் இருந்து வீழ்ச்சி ஸ்திதிக்குச் சென்று, இப்போது மத்திய நிலையில் இருக்கின்றோம். நாங்கள் இனிமேலும் சூத்திரர்கள் அல்ல, எனினும் இன்னமும் முழுமையான பிராமணர்களாகவும் ஆகவில்லை. நாங்கள் உறுதியான பிராமணர்களாக இருந்தால், சூத்திர செயற்பாடுகள் எதனையும் செய்ய மாட்டோம். பிராமணர்களிலும் சில சூத்திர சுவடுகள் உள்ளன. நீங்கள் காமச்சிதையில் ஏற ஆரம்பித்த காலத்திலிருந்து பாவம் செய்தீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். சக்கரம் முழுவதும் உங்கள் புத்தியில் உள்ளது. அனைத்துக்கும் மேலே தந்தையாகிய பரமபிதா பரமாத்மாவும், பின்னர் ஆத்மாக்களாகிய நீங்களும் உள்ளீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாக இந்த விடயங்களை உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். நாங்கள் இப்போது பிராமணர்கள், தேவர்களாக ஆகப் போகின்றவர்கள். பின்னர் நாங்கள் வைசிய வம்சத்துக்குள்ளும், சூத்திர வம்சத்துக்குள்ளும் செல்வோம். தந்தை வந்து சூத்திரர்களாகிய எங்களைப் பிராமணர்களாக மாற்றுகின்றார். பின்னர் பிராமணர்களிலிருந்து நாங்கள் தேவர்கள் ஆகுகின்றோம். நாங்கள் பிராமணர்களாகி, எங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைந்து பின்னர் வீடு திரும்புகின்றோம். நீங்கள் தந்தையை அறிவீர்கள். நீங்கள் குட்டிக்கரணத்தையும், சக்கரத்தின் 84 பிறவிகளையும் அறிவீர்கள். பாபா உங்களுக்குக் குட்டிக்கரணத்தை உதாரணமாகப் பயன்படுத்தி மிக இலகுவாக விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் உங்களைப் புள்ளிகளாகக் கருதி, வீட்டிற்கு விரைந்து செல்வதற்காக அவர் உங்களை மிகவும் இலேசானவர்கள் ஆக்குகின்றார். மாணவர்கள் வகுப்பில் அமர்ந்திருக்கும்போது, கல்வியை மாத்திரம் தங்கள் புத்தியில் வைத்திருப்பார்கள். நீங்களும் இந்தக் கல்வியை நினைவுசெய்ய வேண்டும். நாங்கள் இப்போது சங்கமயுகத்தில் இருக்கின்றோம். பின்னர் நாங்கள் இவ்வாறாகச் சுற்றி வருவோம். இந்தச் சக்கரம் சதா உங்கள் புத்தியில் சுழல வேண்டும். பிராமணர்களாகிய உங்களுக்கு மாத்திரமே இச் சக்கரத்தின் ஞானம் போன்றவை உள்ளன. சூத்திரர்களிடம் அவை இருப்பதில்லை. தேவர்களிடமும் இந்த ஞானம் கிடையாது. பக்தி மார்க்கத்தில் உருவாக்கப்பட்ட படங்கள் அனைத்தும் குறைபாடுள்ளவை என்பது இப்போது உங்களுக்குப் புரிகின்றது. நீங்கள் மிகச்சரியானவர்கள் ஆகுவதால், மிகச்சரியான படங்களையே நீங்கள் வைத்துள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள், இதனாலேயே பக்தி எனக் குறிப்பிடப்படுவது எது எனவும், ஞானம் எனக் குறிப்பிடப்படுவது எது எனவும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்ற, ஞானக்கடலாகிய, தந்தையைக் கண்டுள்ளீர்கள். பாடசாலையில் கல்வி கற்கும் போது, நீங்கள் உங்களுடைய இலக்கையும் இலட்சியத்தையும் அறிந்துள்ளீர்கள். பக்தி மார்க்கத்தில், இலக்கோ அல்லது இலட்சியமோ இருப்பதில்லை. நீங்கள் மேன்மையான தேவர்களாக இருந்தீர்கள், பின்னர் வீழ்ந்து விட்டீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. இப்பொழுது நீங்கள் பிராமணர்களாகியதால், இதனை அறிந்து கொண்டீர்கள். முன்னரும் நீங்கள் நிச்சயமாக பிரம்மா குமாரர்கள், குமாரிகளாக ஆகினீர்கள். பிரஜாபிதா பிரம்மாவின் பெயரும் போற்றப்படுகின்றது. பிரஜாபிதா ஒரு மனிதரே. அவருக்குப் பல குழந்தைகள் உள்ளனர், எனவே அவர்கள் நிச்சயமாகத் தத்தெடுக்கப்பட்டவர்களே. பலர் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்களே. உங்கள் புத்தி இப்பொழுது தொலைதூரத்திற்குச் செல்கின்றது. மேலே நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றைத் தொலைதூரத்திலிருந்து பார்க்கும் பொழுது மிகவும் சிறியவையாகத் தோன்றுவதைப் போலவே, நீங்களும் மிகவும் சின்னஞ்சிறிய ஆத்மாக்களே. ஓர் ஆத்மா ஒருபோதும் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ ஆகுவதில்லை. உங்கள் அந்தஸ்து மிகவும் உயர்ந்தது. அவர்கள் அவற்றைச் சூரியதேவன் என்றும், சந்திரதேவன் என்றும் அழைக்கின்றார்கள். சூரியன் தந்தையெனவும், சந்திரன் தாயெனவும் ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் ஆகாயத்து நட்சத்திரங்கள் என்றும் கூறப்படுகின்றது. ஆகவே ஆத்மாக்கள் அனைவரும் சின்னஞ்சிறியவர்களும், ஒரே மாதிரியானவர்களும் ஆவர். ஆத்மாக்கள் இங்கு வந்து நடிகர்கள் ஆகுகிறார்கள். நீங்கள் மாத்திரமே தேவர்கள் ஆகுகின்றீர்கள். நாங்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள் ஆகுகின்றோம். தந்தையை நினைவு செய்வதால், நாங்கள் சதோபிரதான் தேவர்கள் ஆகுவோம். அதில் வரிசைக்கிரமமாகச் சொற்ப வேறுபாடு உள்ளது. ஆத்மாக்களில் சிலர் தூய்மையாகி, சதோபிரதான் தேவர்கள் ஆகுகின்றார்கள், ஆனால் ஏனைய ஆத்மாக்கள் முற்றிலும் தூய்மையாகுவதில்லை. அவர்களுக்கு இந்த ஞானம் எதுவுமே இல்லை. தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: அனைவரும் நிச்சயமாகத் தந்தையின் அறிமுகத்தைப் பெறவே வேண்டும். இறுதியில் அவர்கள் தந்தையை அறிந்து கொள்வார்கள். விநாச காலத்தின் போது, தந்தை வந்துவிட்டார் என அனைவரும் உணர்ந்து கொள்வார்கள். இப்பொழுதும் சிலர் கூறுகிறார்கள்: “நிச்சயமாகக் கடவுள் ஏதோ ஓர் இடத்தில் வந்துள்ளார்”. ஆனால் எங்கே என்று அவர்களால் கூற முடியாதுள்ளது. அவரால் எந்த ரூபத்திலும் வர முடியும் என அவர்கள் எண்ணுகிறார்கள். மனித கட்டளைகள் பல உள்ளன. உங்களுடையது ஒன்றே ஆகும் - அது கடவுளின் வழிகாட்டல் ஆகும். கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதால் நீங்கள் என்னவாக ஆகுவீர்கள்? ஒன்று மனித கட்டளைகள், அடுத்தது கடவுளின் வழிகாட்டல்கள், மூன்றாவதாக தேவர்களின் வழிகாட்டல்கள். யார் தேவர்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுத்தது? தந்தையே ஆவார். தந்தையின் ஸ்ரீமத்தே உங்களை மேன்மை ஆக்குகின்றது. மனிதர்கள் அன்றி, தந்தை மாத்திரமே ஸ்ரீ ஸ்ரீ என அழைக்கப்படுகின்றார். ஸ்ரீ ஸ்ரீ வந்து உங்களை ஸ்ரீ (மேன்மையானவர்கள்) ஆக்குகின்றார். தந்தை மாத்திரமே தேவர்களை மேன்மையானவர்கள் ஆக்குகின்றார். அவர் ஸ்ரீ ஸ்ரீ என அழைக்கப்படுகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் உங்களை மிகவும் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகின்றேன். அம்மக்கள் தங்களுக்குத் தாங்களே ஸ்ரீ ஸ்ரீ என்ற பட்டத்தைக் கொடுத்துள்ளார்கள். நீங்கள் மாநாடுகளில் விளங்கப்படுத்த முடியும். நீங்கள் மாத்திரமே அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்குக் கருவிகளாக ஆகியுள்ளீர்கள். ஒரேயொரு சிவபாபா மாத்திரமே, எங்களை ஸ்ரீ தேவர்கள் ஆக்குகின்ற, ஸ்ரீ ஸ்ரீ ஆவார். அம்மக்கள் சமயநூல்கள் அல்லது வேறு கல்விகளைக் கற்று ஒரு பட்டம் பெறுகின்றார்கள். ஸ்ரீ ஸ்ரீயான தந்தையே உங்களை ஸ்ரீ ஆக்குகின்றார், அதாவது மேன்மையானவர்கள் ஆக்குகின்றார். இது தமோபிரதானான, சீரழிந்த உலகம். மக்கள் சீரழிவின் மூலம் பிறப்பெடுக்கின்றார்கள். தந்தையின் பட்டத்திற்கும், தூய்மையற்ற மனிதர்கள் தங்களுக்கே கொடுக்கின்ற பட்டத்திற்கும் இடையில் பெரும் வித்தியாசம் உள்ளது. உண்மையில் தேவர்களே மேன்மையான மகாத்மாக்கள் ஆவார்கள். சதோபிரதான் உலகில், தமோபிரதான் மனிதர்கள் எவரும் இருக்க முடியாது. ரஜோ ஸ்திதியில், தமோகுணி மனிதர்கள் இருக்கமாட்டார்கள், ரஜோ நிலையில் உள்ள மனிதர்கள் மாத்திரமே இருப்பார்கள். குலங்களும் நினைவுகூரப்படுகின்றன. இதனை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். ஆனால் முன்னர் நீங்கள் எதனையும் புரிந்துகொள்ளவில்லை. தந்தை இப்பொழுது உங்களை மிகவும் விவேகிகள் ஆக்குகின்றார். நீங்கள் பெருஞ் செல்வந்தர்கள் ஆகுகின்றீர்கள். சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியம் முழுமையாக நிறைந்துள்ளது. சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியம் என்றால் என்ன? (அது அழிவற்ற ஞான இரத்தினங்களைக் கொண்டது) சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியம் முழுமையாக நிரம்பியுள்ளது. அதனால் அனைத்துத் துன்பமும் அகற்றப்படுகிறது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு ஞான இரத்தினங்களைக் கொடுக்கின்றார். அவரே கடலாவார். அவரே ஞான இரத்தினங்களின் கடலாவார். குழந்தைகளாகிய உங்களின் புத்தி எல்லையற்றதிற்குள் செல்ல வேண்டும். அந்த பில்லியன் கணக்கான ஆத்மாக்கள் அனைவரும் தங்கள் சரீரங்கள் எனும் சிம்மாசனங்களில் அமர்ந்துள்ளார்கள். இது எல்லையற்றதொரு நாடகம். ஆத்மாக்கள் அச் சிம்மாசனங்களில் அமர்ந்துள்ளார்கள். இரு சிம்மாசனங்கள் ஒரேமாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவரின் முகச்சாயல்களும் வேறுபட்டிருக்கின்றன. இது இயற்கையின் அற்புதம் என அழைக்கப்படுகின்றது. ஒவ்வொருவரும் ஓர் அழிவற்ற பாகத்தைக் கொண்டுள்ளார்கள். அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மாவில் 84 பிறவிகளின் பாகம் பதியப்பட்டுள்ளது. அது முற்றிலும் சூட்சுமமானது. இதையும் விட அதி சூட்சுமமான எதுவும் இருக்க முடியாது என்பது அற்புதமே. அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மாவில் முழுப் பாகமும் நிரம்பியுள்ளதுடன், இங்கேயே அப்பாகம் நடிக்கப்படுகின்றது. சூட்சும உலகில் பாகம் எதுவும் நடிக்கப்படுவதில்லை. தந்தை உங்களுக்கு மிகவும் நன்றாக விளங்கப்படுத்துகிறார். தந்தையிடமிருந்தே நீங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டீர்கள். இது ஞானமாகும். அவர் ஒவ்வொருவருக்குள்ளும் என்ன இருக்கிறது என அறிந்து கொள்கிறார் என்றில்லை. அவர் இந்த ஞானத்தை அறிவார், இப்பொழுது இந்த ஞானம் உங்களிடமிருந்தும் வெளிப்படுகின்றது. அத்துடன் இந்த ஞானத்தின் மூலமே நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுகிறீர்கள்! உங்களுக்கு இந்தப் புரிந்துணர்வு உள்ளது, இல்லையா? தந்தையே விதையாவார். விருட்சத்தின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தை அவர் கொண்டுள்ளார். மனிதர்கள் அதற்கு நூறாயிரக்கணக்கான வருடங்கள் என்ற கால எல்லையைக் கொடுத்துள்ளார்கள், எனவே அவர்களிடம் இந்த ஞானம் எதுவும் இருக்க முடியாது. நீங்கள் இந்த ஞானம் அனைத்தையும் சங்கமயுகமாகிய இப்பொழுது பெறுகிறீர்கள். இப்பொழுது நீங்கள் தந்தையிடமிருந்து முழுச் சக்கரத்தையும் அறிந்து கொண்டுள்ளீர்கள். இதற்கு முன்னர் உங்களுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் உள்ளீர்கள், இது உங்கள் இறுதிப்பிறவி ஆகும். முயற்சி செய்வதினால் நீங்கள் இறுதியில் முழுமையான பிராமணர்கள் ஆகுவீர்கள். நீங்கள் இப்பொழுது அவ்வாறில்லை. இப்பொழுது மிகச்சிறந்த குழந்தைகள் கூட பிராமணர்களில் இருந்து மீண்டும் ஒருமுறை சூத்திரர்களாகி விடுகின்றனர். இது மாயையினால் தோற்கடிக்கப்படுவது என அழைக்கப்படுகிறது. நீங்கள் பாபாவின் மடியிலிருந்து தோற்கடிக்கப்பட்டு, இராவணனின் மடிக்குச் செல்கிறீர்கள். உங்களை மேன்மையானவர்கள் ஆக்குகின்ற தந்தையின் மடிக்கும், உங்களைச் சீரழிந்தவர்கள் ஆக்குகின்ற மற்றைய மடிக்கும் இடையில் அத்தகையதொரு வேறுபாடு உள்ளது. நீங்கள் ஒரு வினாடியில் ஜீவன்முக்தியைப் பெறுகின்றீர்கள். ஒரு வினாடியில் நீங்கள் முற்றிலும் சீரழிந்த ஸ்திதியை அடைகிறீர்கள். எப்படிச் சீரழிவு ஏற்படுகிறது எனப் பிராமணக் குழந்தைகளான உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். நீங்கள் இன்று தந்தைக்கு உரியவர்கள். ஆனால், நாளை, நீங்கள் மாயையின் பிடியில் அகப்பட்டு, இராவணனுக்கு உரியவர்கள் ஆகுகிறீர்கள். பின்னர் நீங்கள் அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்யும் பொழுது, ஒரு சிலரே காப்பாற்றப்படுகின்றனர். ஒருவர் மூழ்குவதை நீங்கள் பார்க்கும் போது, தொடர்ந்து முயற்சி செய்து அவரைக் காப்பாற்றுகிறீர்கள். இதில் அதிகளவு முரண்பாடு உள்ளது. தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் இங்கே பாடசாலையில் கற்கின்றீர்கள். எப்படி நீங்கள் இந்தச் சக்கரத்தைச் சுற்றி வருகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீமத்தைப் பெறுகிறீர்கள்: இதனையும், இதையும் செய்யுங்கள். நிச்சயமாகக் கடவுளின் வாசகங்களும் உள்ளன. இவை அவரது மேன்மையான வழிகாட்டல்கள்: இப்பொழுது நான் குழந்தைகளாகிய உங்களைச் சூத்திரர்களிலிருந்து தேவர்கள் ஆக்குவதற்கே வந்துள்ளேன். இப்பொழுது, கலியுகத்தில், சூத்திர சமுதாயமே உள்ளது. கலியுகம் முடிவிற்கு வருகின்றது என்பதையும், நீங்கள் சங்கம யுகத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதையும் அறிவீர்கள். நீங்கள் இந்த ஞானத்தைத் தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள். உருவாக்கப்பட்டுள்ள சமயநூல்கள் அனைத்திலும் மனிதர்களின் கட்டளைகளே உள்ளன. கடவுள் சமயநூல்கள் எதனையும் எழுதவில்லை. அவர்கள் ஒரே ஒரு கீதைக்கே, காந்தி கீதை, தாகூர்கீதை போன்ற பல பெயர்களைக் கொடுத்துள்ளார்கள். பல்வேறு பெயர்கள் உள்ளன. மக்கள் ஏன் கீதையை அதிகளவில் கற்கின்றார்கள்? அவர்கள் முற்றாகவே எதனையும் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் சில அத்தியாயங்களில் இருந்து தங்கள் சொந்தக் கருத்துக்களை எடுத்துக் கொண்டார்கள். அவை அனைத்தும் மனிதர்களினால் உருவாக்கப்பட்டவை. அவர்களிடம் நீங்கள் கூற முடியும்: மனிதர்களினால் எழுதப்பட்ட கீதையைக் கற்பதனால், இன்றைய நிலைமை இவ்வாறு ஆகிவிட்டது. கீதை முதற்தரமான சமயநூல் ஆகும். இதுவே தேவ தர்மத்தின் சமயநூலாகும். இது உங்கள் பிராமணக் குலமாகும். இதுவும் பிராமணத் தர்மம் ஆகும். பல்வேறு சமயங்கள் உள்ளன. ஒரு சமயத்தை யார் உருவாக்குகிறாரோ, அவருடைய பெயரே தொடர்கிறது. ஜெயின்கள் மகாவீர் பற்றிப் பேசுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் மகாவீர்களே. உங்களின் ஞாபகார்த்தம் தில்வாலா ஆலயத்தில் உள்ளது. அங்கு இராஜயோகம் உள்ளது. நீங்கள் கீழே தபஸ்யாவில் அல்லது யோகத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள். மேலே கூரையில் இராச்சியத்தின் படங்கள் உள்ளன. அது இராஜயோகத்தின் மிகச்சரியான ஆலயமாகும். பின்னர், அதற்குச் சிலர் ஒரு பெயரையும், வேறு சிலர் இன்னொரு பெயரையும் இட்டனர். ஞாபகார்த்தம் முற்றிலும் மிகச்சரியானதே. அவர்கள் தங்கள் புத்தியைப் பயன்படுத்தி, அதனை மிக நன்றாகச் செய்துள்ளார்கள். பின்னர், என்ன பெயரை எவர் கொடுத்தாலும் அந்தப் பெயரையே அவர்கள் வைத்தார்கள். அது அவர்கள் உருவாக்கிய ஒரு மாதிரி ஆகும். சுவர்க்கமும், இராஜயோகமும் சங்கமயுகத்திலேயே உருவாக்கப்பட்டன. உங்களுக்கு ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றித் தெரியும். நீங்கள் ஆரம்பத்தையும் பார்த்துள்ளீர்கள். நீங்கள் சங்கமயுகத்தையோ அல்லது சத்தியயுகத்தையோ ஆரம்பம் என அழைக்கலாம். சங்கமயுகத்தின் காட்சியே கீழே காட்டப்பட்டுள்ளது. இராச்சியம் மேலேயே காட்டப்பட்டுள்ளது. எனவே, சத்தியயுகம் ஆரம்பமும், துவாபரயுகம் மத்திய காலப்பகுதியுமாகும். இறுதிக் காலப்பகுதியை நீங்கள் இப்பொழுது பார்க்கின்றீhகள். இவை அனைத்தும் முடிவடைய உள்ளன. ஒரு மிகச்சரியான ஞாபகார்த்தம் உருவாக்கப்பட்டுள்ளது. தேவர்கள் தாங்களாகவே பாவப்பாதையில் செல்கிறார்கள். பாவப்பாதை துவாபரயுகத்திலிருந்து ஆரம்பமாகுகிறது. ஞாபகார்த்தம் மிகவும் சரியானது. அவர்கள் பல ஆலயங்களை ஞாபகார்த்தங்களாக உருவாக்கியுள்ளார்கள். அனைத்து அடையாளங்களும் இங்குள்ளன. ஆலயங்களும் இங்கேயே உருவாக்கப்பட்டுள்ளன. பாரதவாசிகளான தேவர்கள் ஆட்சி புரிந்த பின்னர், சென்றுவிட்டார்கள். பின்னர் அவர்கள் பல ஆலயங்களைக் கட்டினார்கள். சீக்கியர்கள் பலர் இருந்தால், அவர்கள் தங்கள் சொந்த ஆலயத்தைக் கட்டுகிறார்கள். இராணுவத்தினரும் தங்கள் சொந்த ஆலயத்தைக் கட்டுகிறார்கள். கிருஷ்ணர், இலக்ஷ்மி நாராயணன், அனுமான், கணேஷ் போன்றோருக்கு பாரத மக்கள் ஆலயங்களைக் கட்டுகிறார்கள். உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றதெனப் பாருங்கள்! ஸ்தாபனையும், விநாசமும், பராமரிப்பும் எவ்வாறு இடம்பெறுகிறது. இதனை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். இதுவே காரிருள் என அழைக்கப்படுகிறது. பிரம்மாவின் பகலும் இரவும் நினைவுகூரப்படுகின்றது. ஏனெனில் பிரம்மாவே முழுச்சக்கரத்தையும் சுற்றிவருபவர். நீங்கள் இப்பொழுது பிராமணர்கள், பின்னர் தேவர்கள் ஆகுவீர்கள். பிரம்மாவே பிரதானமானவர் ஆவார். அது பிரம்மாவின் பெயராகவா அல்லது விஷ்ணுவின் பெயராகவா இருக்க வேண்டும்? பிரம்மா இரவிலும், விஷ்ணு பகலிலும் இருக்கின்றார். அவரே இரவிலிருந்து பகலுக்கும் செல்கிறார். பின்னர், பகலில் இருந்து 84 பிறவிகளுக்குப் பின்னர், அவர் இரவிற்குள் வருகிறார், விளக்கம் மிகவும் இலகுவானது. அதுவும் முழுமையாக நினைவுகூரப்படுவதில்லை. நீங்கள் நன்றாகக் கற்காவிட்டால், நீங்கள் செய்யும் முயற்சியின் அளவுக்கேற்ப வரிசைக்கிரமமாக ஓர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். சதோபிரதான் பாரதம், பின்னர் தமோபிரதான் ஆகுகின்றது. குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு ஞானம் உள்ளது: நீங்கள் இந்த ஞானத்தைக் கடைய வேண்டும். இந்த ஞானம் புதிய உலகிற்கானது. அதனை எல்லையற்ற தந்தையே வந்து உங்களுக்குக் கொடுக்கின்றார். மனிதர்கள் அனைவரும் எல்லையற்ற தந்தையை நினைவுசெய்கிறார்கள். “ஓ தந்தையாகிய கடவுளே, விடுதலை அளிப்பவரே, வழிகாட்டியே!” என ஆங்கிலேய மக்கள் கூறுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை உங்கள் புத்தியில் வைத்திருக்கிறீர்கள். தந்தை வந்து, துன்ப உலகமாகிய கலியுகத்திலிருந்து உங்களை அகற்றி, சத்திய உலகிற்கு அழைத்துச் செல்கிறார். நிச்சயமாக சத்தியயுகம் கடந்து சென்றது, இதனாலேயே அவர்கள் அதை நினைவுகூருகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் உள்ளார்த்தமாக பெருஞ் சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் தெய்வீகச் செயல்களையும் செய்ய வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் தந்தையிடமிருந்து பெற்ற முடிவற்ற பொக்கிஷமான அழிவற்ற ஞான இரத்தினங்களை உங்கள் விழிப்புணர்வில் வைத்திருப்பதுடன், உங்கள் புத்தியை எல்லையற்றதிற்குள் கொண்டு செல்லுங்கள். இயற்கையின் அற்புதத்தையும், இந்த எல்லையற்ற நாடகத்தில், ஆத்மாக்கள் எவ்வாறு தங்கள் சொந்தச் சிம்மாசனங்களில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதையும் ஒரு பற்றற்ற பார்வையாளராகப் பாருங்கள்.

2. நாங்கள் சங்கமயுகத்துப் பிராமணர்கள் என்பதை உங்கள் புத்தி எப்பொழுதும் நினைவு செய்ய வேண்டும். நாங்கள் தந்தையின் மேன்மையான மடியைப் பெற்றுவிட்டோம். எங்களால் இராவணனின் மடிக்குச் செல்ல முடியாது. மூழ்குகின்றவர்களைக் காப்பாற்றுவதே எங்கள் கடமையாகும்.

ஆசீர்வாதம்:
வீணான எண்ணங்களின் தூண்களை உங்களின் ஆதாரம் ஆக்கிக் கொள்வதற்குப் பதிலாக, நீங்கள் உண்மையான அன்புடையவராகி, சகல உறவுமுறைகளின் உங்களின் அனுபவத்தை அதிகரிப்பீர்களாக.

உங்களின் பலவீனமான எண்ணங்களை வலுவூட்டுவதற்காக மாயை பல இராஜரீகமான தூண்களைக் கட்டுவாள். ‘இது எல்லா வேளையும் நடக்கிறது, மூத்தவர்களே இதைச் செய்கிறார்கள், எவரும் இன்னமும் சம்பூரணம் ஆகவில்லை, நிச்சயமாக ஏதாவது பலவீனம் எஞ்சியிருக்கும்’ போன்ற எண்ணங்களை அவள் மீண்டும் மீண்டும் கொண்டு வருகிறாள். இந்த வீணான எண்ணங்களின் தூண்கள், பலவீனங்களை மேலும் வலுவூட்டுகிறது. இப்போது, இத்தகைய தூண்களின் ஆதாரத்தை எடுப்பதற்குப் பதிலாக, சகல உறவுமுறைகளுக்கான உங்களின் அனுபவத்தை அதிகரியுங்கள். பௌதீக ரூபத்தில் சகவாசத்தை அனுபவம் செய்து, உண்மையான அன்புடையவர் ஆகுங்கள்.

சுலோகம்:
திருப்தி என்பது மிகவும் மகத்தான பண்பு. சதா திருப்தியாக இருப்பவர்கள், இறைவனாலும் மக்களாலும் தங்களாலும் நேசிக்கப்படுகிறார்கள்.