07.12.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, அனைத்தும் உங்களுடைய கர்மத்திலேயே தங்கியுள்ளது. மாயையின் ஆதிக்கத்தின் கீழ் வந்து, தண்டனையைப் பெறக்கூடிய தவறான எதனையும் செய்யாதிருப்பதில் எப்பொழுதும் கவனம் செலுத்துங்கள்.

கேள்வி:
தந்தையின் பார்வையில் அனைவரிலும் விவேகமானவர்கள் யார்?

பதில்:
தூய்மையைக் கிரகித்துள்ளவர்களே, அதிவிவேகமானவர்கள். தூய்மையற்றவர்கள் விவேகம் அற்றவர்கள். தூய்மையானவர்களே விவேகமானவர்கள். இலக்ஷ்மியும் நாராயணனுமே அனைவரிலும் விவேகமானவர்கள் எனக் கூறப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்களும் விவேகமானவர்கள் ஆகுகின்றீர்கள். இதற்குத் தூய்மை அவசியமாகும். ஆகையினால், தந்தை உங்களை எச்சரிக்கின்றார்: குழந்தைகளே, உங்களுடைய கண்கள் உங்களை ஏமாற்றாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். இந்தப் பழைய உலகைப் பார்த்தும், பார்க்காதிருங்கள். சுவர்க்கமாகிய புதிய உலகை நினைவு செய்யுங்கள்.

ஓம் சாந்தி.
நீங்கள் இப்பொழுது இப்பழைய உலகில் இன்னமும் சில நாட்களுக்கு மாத்திரமே பயணிகளாக இருப்பீர்கள் என்பதை இனிமையிலும் இனிமையான வெகுநாட்களுக்கு முன் தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். உலக மக்கள் இன்னமும் 40,000 வருடங்கள் இங்கே இருக்க வேண்டும் என நம்புகிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது. இவ்விடயங்களை மறந்துவிடாதீர்கள். இங்கு அமர்ந்திருக்கும்பொழுது குழந்தைகளாகிய உங்களுடைய இதயம் தொடர்ந்தும் உணரவேண்டும், உங்கள் கண்களால் பார்க்கக்கூடிய அனைத்துமே அழியப்போகின்றன. ஆத்மாக்கள் அமரத்துவமானவர்கள். இந்த ஆத்மாவாகிய நான் 84 பிறவிகள் எடுத்துள்ளேன். பாபா எங்களை வீட்டுக்குத் திரும்ப அழைத்துச் செல்வதற்கு வந்திருக்கிறார். பழைய உலகம் அழிக்கப்படவுள்ளபோது, தந்தை புதிய உலகை ஸ்தாபிக்க வருகின்றார். எவ்வாறு இந்த உலகம் புதியதிலிருந்து பழையதாகவும், பழையதிலிருந்து புதியதாகவும் மாறுகின்றது என்பதை உங்களுடைய புத்தி புரிந்துகொள்கின்றது. நாங்கள் முன்னரும் பல தடவைகள் இச்சக்கரத்தை சுற்றி வந்தோம். இப்பொழுது சக்கரமும் முடிவுக்கு வருகின்றது. புதிய உலகில் தேவர்கள் சிலர் மாத்திரமே இருப்பார்கள். அங்கு மனிதர்கள் இருக்கமாட்டார்கள். அனைத்தும் உங்களுடைய கர்மத்திலேயே தங்கியுள்ளது. மக்கள் தவறான செயல்களைச் செய்யும்பொழுது அவர்களுடைய மனச்சாட்சி அவர்களை உறுத்தும். இதனாலேயே தந்தை வினவுகின்றார்: இப்பிறவியில் அத்தகைய பாவத்தை நீங்கள் செய்யவில்லை, அப்படித்தானே? இந்த உலகம் இராவணனின் தீய, தூய்மையற்ற இராச்சியமாகும். இந்த உலகில் காரிருள் சூழ்ந்துள்ளது. தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு, உங்களுடைய ஆஸ்தியைக் கொடுக்கின்றார். நீங்கள் மென்மேலும் பக்தி செய்வதில்லை. பக்தி மார்க்கத்தில் இருளிலே தடுமாறித்திரிந்த பின்னர், நீங்கள் இப்பொழுது இங்கு வந்திருக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது தந்தையின் கரத்தைப் பிடித்திருக்கின்றீர்கள். தந்தையின் ஆதாரம் இல்லாததால், நீங்கள் நச்சாற்றில் மூழ்கிக் கொண்டிருந்தீர்கள். பக்தி மார்க்கம் அரைக்கல்பத்திற்குத் தொடரும். இந்த ஞானம் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பின்னர், நீங்கள் புதிய உலகமாகிய சத்தியயுகத்திற்குச் செல்வீர்கள். தூய்மையற்ற, அழுக்கானவர்களிலிருந்து, தூய்மையான, அழகானவர்களாகுகின்ற மங்களகரமான சங்கமயுகம் இதுவாகும். நீங்கள் முட்களிலிருந்து மலர்களாக மாறுகின்றீர்கள். உங்களை இவ்வாறு ஆக்கியவர் யார்? எல்லையற்ற தந்தையாவார். ஒரு லௌகீகத் தந்தையை நீங்கள் எல்லையற்ற தந்தை என அழைக்கமாட்டீர்கள். பிரம்மா, விஷ்ணுவினுடைய பணி என்னவென்று உங்களுக்குத் தெரியும். எனவே நீங்கள் எத்தகைய தூய போதையைக் கொண்டிருக்கவேண்டும்! பரந்தாமம், சூட்சுமலோகம், சரீர உலகம் அனைத்தும் சங்கம யுகத்திலேயே இருக்கின்றன. இது பழைய உலகினதும், புதிய உலகினதும் சங்கமம் என்பதைத் தந்தை இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். மக்கள் அழைக்கின்றார்கள்: வந்து தூய்மையற்ற எங்களைத் தூய்மையாக்குங்கள்! தந்தையின் பாகம் சங்கமயுகத்தில் மாத்திரமே நடிக்கப்படுகின்றது. அவர் இந்நாடகத்தைப் படைப்பவரும் இயக்குநனரும் என்பதால், அவருக்கும் நிச்சயமாகச் சில செயற்பாடுகள் இருக்கவே வேண்டும். அவரை ஒரு மனிதர் என்று அழைக்க முடியாது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அவருக்கென சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. ஏனையவர்கள் மனிதர்களோ அல்லது தேவர்களோ ஆவார்கள். சிவபாபா ஒரு மனிதராகவோ அல்லது ஒரு தேவராகவோ இருக்கமுடியாது. இச்சரீரம் தற்காலிகமாகக் கடனாக எடுக்கப்பட்டது. அவர் ஒரு கருப்பையினூடாக பிறக்கவில்லை. தந்தையே கூறுகின்றார்: குழந்தைகளே, ஒரு சரீரமின்றி எவ்வாறு நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்க முடியும்? பரமாத்மா கற்களிலும், கூழாங்கற்களிலும் இருக்கின்றார் என மக்கள் கூறுகின்றபோதிலும், நான் எவ்வாறு வருகின்றேன் எனக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது இராஜயோகம் கற்கின்றீர்கள். எந்த மனிதராலும் இதைக் கற்பிக்க முடியாது. எந்த தேவராலும் இராஜயோகத்தைக் கற்கமுடியாது. இங்கு, இந்த மேன்மையான சங்கமயுகத்தில், இராஜயோகத்தை கற்பதன்மூலம் நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது 84 பிறவிகளின் சக்கரத்தைப் பூர்த்தி செய்கின்றீர்கள் என்ற மகத்தான சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். தந்தை ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும் வருகின்றார். தந்தையே கூறுகின்றார்: இவருடைய பல பிறவிகளின் கடைசிப் பிறவி இதுவாகும். ஸ்ரீகிருஷ்ணர் சத்தியயுகத்தின் இளவரசராக இருந்தார். அவர் 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வந்துள்ளார். சிவபாபா 84 பிறவிச் சக்கரத்தில் பிரவேசிப்பதில்லை. ஸ்ரீ கிருஷ்ணரின் ஆத்மா, அவலட்சணமானவரிலிருந்து அழகானவர் ஆகுகின்றார். வேறு எவருமே இவ்விடயங்களை அறியமாட்டார்கள். நீங்களும் வரிசைக்கிரமமாகவே இதை அறிந்திருக்கின்றீர்கள். மாயை மிகவும் பலசாலி ஆவாள். அவள் எவரையும் விட்டு வைக்கப்போவதில்லை. தந்தை அனைத்தையும் அறிந்திருக்கின்றார். மாயை என்ற முதலையால் எவரையும் முழுமையாக விழுங்கிவிட முடியும். தந்தை இதை மிக நன்றாக அறிவார். எவ்வாறாயினும், தந்தையை அந்தர்யாமி (ஒவ்வொருவரது இதயத்தின் இரகசியங்களையும் அறிந்தவர்) என நினைக்காதீர்கள். இல்லை. எவ்வாறாயினும், ஒவ்வொருவரினதும் செயற்பாடுகளைத் தந்தையால் பார்க்கமுடியும். செய்திகள் பாபாவிற்கும் வருகின்றன. மாயை உங்களை முழுமையாகப், பச்சையாகவே விழுங்கி விடுகின்றாள். குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்ள முடியாத அத்தகைய பல விடயங்கள் உள்ளன. தந்தைக்கு அனைத்துமே தெரியும். பரமாத்மாவுக்கு அனைவருக்குள்ளேயும் இருக்கும் அனைத்து இரகசியங்களும் தெரியும் என மக்கள் நினைக்கிறார்கள். தந்தை கூறுகின்றார்: ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அனைத்து இரகசியங்களும் எனக்குத் தெரியாது. உங்களுடைய நடத்தையிலிருந்து உங்களைப் பற்றிய அனைத்தையும் நான் அறிந்து கொள்வேன். சிலருடைய நடத்தை மிகவும் தீயதாக உள்ளது. ஆகையால் தந்தை மீண்டும் மீண்டும் குழந்தைகளாகிய உங்களை எச்சரிக்கின்றார். மாயையையிட்டு மிகவும் கவனமாக இருங்கள். காமமே கொடிய எதிரி எனத் தந்தை விளங்கப்படுத்தியபோதிலும், இது சிலரது புத்தியில் இருப்பதில்லை. தாங்கள் விகாரத்தில் ஈடுபடுகின்றார்கள் என்பதைக்கூட அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. இதுவும் இடம்பெறுகின்றது. ஆகையால் பாபா கூறுகின்றார்: நீங்கள் தவறுகள் செய்தால், பாபாவிடம் உண்மையைக் கூறுங்கள். அதை மறைக்காதீர்கள். இல்லாவிடில், பாவம் நூறு மடங்காக அதிகரிக்கும். உங்கள் மனச்சாட்சி உள்ளார்ந்தமாக உறுத்திக்கொண்டேயிருக்கும். நீங்கள் முழுமையாக விழும்வரை பாவம் தொடர்ந்தும் அதிகரிக்கும். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையுடன் முழுமையாக உண்மையானவர்களாக இருக்கவேண்டும். இல்லையெனில் பெருமளவு இழப்புக்காக வருந்துவீர்கள். இது இராவணனின் உலகம். நாங்கள் ஏன் இராவணனின் உலகை நினைவு செய்யவேண்டும்? நாங்கள் புதிய உலகிற்குச் செல்லவேண்டும். ஓர் தந்தை ஒரு புதிய வீட்டைக் கட்டும்பொழுது, அவரது குழந்தைகள் சந்தோஷமடைவார்கள், ஏனெனில் அவர்களுக்காகவே புதிய வீடு கட்டப்படுகின்றது என அவர்கள் புரிந்து கொள்கின்றார்கள். இது ஓர் எல்லையற்ற விடயமாகும். சுவர்க்கமாகிய புதிய உலகம் எங்களுக்காகவே உருவாக்கப்படுகின்றது. நாங்கள் இப்பொழுது புதிய வீட்டிற்குச் செல்ல இருக்கின்றோம். எந்தளவிற்கு தந்தையை நினைவு செய்யுகிறோமோ அந்தளவிற்கு நாங்கள் அழகானவர்களாக ஆகுகின்றோம். நாங்கள் விகாரங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதனால் முட்களாகினோம். இங்கு வருவதை நிறுத்தியவர்கள், மாயையின் ஆதிக்கத்திற்குள் இருக்கின்றார்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர்கள் தந்தையுடன் இல்லை. ஆனால் நம்பிக்கைத் துரோகிகளாகி பழைய எதிரியிடம் சென்றுவிட்டார்கள். மாயை இவ்வாறு பலரை விழுங்கிவிட்டாள். பலர் மரணித்துவிட்டார்கள். இதையும், அதையும் செய்யப் போகின்றோம் என்று கூறிய மிகவும் நல்லவர்கள் பலர் இருந்தார்கள். அவர்கள் யக்ஞத்திற்காக தமது வாழ்க்கையையே கொடுக்கத் தயாராக இருந்தார்கள். இன்று, அவர்கள் இங்கேயில்லை. உங்களுடைய யுத்தம் மாயையுடனாகும். மாயையுடன் யுத்தம் எவ்வாறு இடம்பெறுகின்றது என உலகிலுள்ள எவருக்கும் தெரியாது. எவ்வாறு கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பமாகியது என்றும், அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்றதாகவும் புராணங்களில் சித்தரித்துள்ளார்கள். புராணங்களிலுள்ள இந்த இரண்டு விடயங்களும் எவ்வாறு சாத்தியமாகும் என நீங்கள் எவரிடமும் வினவலாம். தேவர்கள் வன்முறையற்றவர்கள். அவர்கள் சத்தியயுகத்தில் இருப்பவர்கள். அவர்கள் சண்டையிடுவதற்காகக் கலியுகத்திற்கு வந்திருப்பார்களா? கௌரவர்கள் யார், பாண்டவர்கள் யார் என எவரும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் புராணங்களில் எழுதப்பட்டுள்ளவற்றை வாசித்துவிட்டு, அதனை மற்றவர்களுக்கும் கூறுகின்றார்கள். பாபா கீதை முழுவதையும் கற்றார். நான் இந்த ஞானத்தைப் பெற்றவுடன் கீதையிலே எழுதப்பட்டுள்ள யுத்தம் பற்றிய விடயங்களைச்; சிந்திக்கத் தொடங்கினேன். கீதையின் கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் அல்லர். தந்தை இவருக்குள் இருக்கின்றார், எனவே இவர் மூலமாக அவர் எங்கள் அனைவரையும் அந்தக் கீதையை ஒருபுறம் வைக்கச்செய்தார். நாங்கள் இப்பொழுது தந்தையிடமிருந்து பேரோளியைப் பெற்றுள்ளோம். ஆத்மாக்களே ஒளியைப் பெறுகின்றார்கள். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி, எல்லையற்ற தந்தையை நினைவு செய்யுங்கள். பக்தியில் நீங்கள் அவரை நினைவு செய்தபோது, “நீங்கள் வரும்பொழுது நான் என்னை உங்களுக்கு அர்ப்பணிப்பேன்” என்று கூறினீர்கள். எவ்வாறாயினும், அவர் எவ்வாறு வருகின்றார் அல்லது எவ்வாறு உங்களை அவருக்கு அர்ப்பணிப்பது என்று நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. ஆத்மாக்களாகிய நாங்கள் தந்தையைப் போன்றவர்கள், ஆனால் தந்தையின் பிறப்பு தனித்துவமானது என குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு மிக நன்றாகக் கற்பிக்கின்றார். ‘அவர் அதே தந்தையே’ என நீங்கள் கூறுகின்றீர்கள். அந்த ஒருவரே ஒவ்வொரு கல்பத்திலும் எங்கள் தந்தையாகின்றார். நாங்கள் அனைவரும் “பாபா, பாபா” என்று கூறுகின்றோம். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, குழந்தைகளே. அவர் உங்களுடைய ஆசிரியராக இராஜயோகத்தைக் கற்பித்து, உங்களை உலகின் அதிபதிகள் ஆக்குகின்றார். இத்தந்தைக்குச் சொந்தமாகும்பொழுதே, அவர் ஆசிரியராகி கொடுக்கின்ற கற்பித்தல்களையும் நீங்கள் பெற்றுக் கொள்கின்றீர்கள். இதை நீங்கள் செவிமடுக்கும்பொழுது, உங்களுடைய இதயம் சந்தோஷத்தில் குதூகலிக்க வேண்டும். எவராவது அழுக்காகிவிட்டால் அந்த சந்தோஷம் இருக்கமாட்டாது. அவர்கள் கடினமாக முயற்சி செய்தாலும், அவர்கள் எங்களின் குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. மக்களுக்கு பல முதற்பெயர்கள் இருக்கின்றன. அந்த விடயங்கள் அனைத்தும் எல்லைக்குட்பட்டவை. உங்களுடைய முதற்பெயர் எவ்வளவு மகத்தானது என்று பாருங்கள். முப்பாட்டனார் பிரம்மா அதி மகத்துவமானவர். வேறு எவரும் அவரை அறியமாட்டார்கள். சிவபாபா சர்வவியாபகர் என அவர்கள் கூறுகின்றனர். பிரம்மாவைப் பற்றி எவருமே அறியமாட்டார்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் படங்களை அவர்கள் வைத்திருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் பிரம்மாவை சூட்சும உலகத்தில் காட்டியுள்ளார்கள். அவருடைய சுயசரிதத்தை அவர்கள் அறியமாட்டார்கள். பிரம்மா எவ்வாறு சூட்சும உலகில் இருக்கமுடியும்? அங்கிருந்து எவ்வாறு உங்களைத் தத்தெடுக்க முடியும்? தந்தை கூறுகின்றார்: இது எனது இரதமாகும். நான் அவருடைய பல பிறவிகளின் கடைசிப் பிறவியில் அவரினுள் பிரவேசிக்கின்றேன். கீதையின் அத்தியாயம் இடம்பெறுகின்ற மங்களகரமான சங்கமயுகம் இதுவாகும். இதில் தூய்மையே பிரதான விடயமாகும். தூய்மையற்றவரில் இருந்து எவ்வாறு தூய்மையாகுவது என்பது வேறு எவருக்கும் தெரியாது. சாதுக்கள், புனிதர்கள் போன்றோர் உங்களிடம் என்றுமே கூறமாட்டார்கள்: உங்களின் சரீரத்தையும், சரீர சம்பந்தமான உறவினர்களையும் மறந்து, தந்தையாகிய என்னை மாத்திரம் நினைவு செய்தால், மாயையினால் நீங்கள் செய்த அனைத்துப் பாவச்செயல்களும் அழிக்கப்படும். அவர்கள் தந்தையை அறியமாட்டார்கள். தந்தை கீதையில் கூறியுள்ளார். நான் இந்த சாதுக்கள் போன்றோரையும் ஈடேற்றவே வருகின்றேன். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: கல்பத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரைக்கும் தங்களுடைய பாகங்களை நடிக்கின்ற அனைத்து ஆத்மாக்களினதும் இறுதிப்பிறவி இதுவாகும். இவருடைய கடைசிப் பிறவியும் இதுவாகும். இவர் மீண்டும் பிரம்மா ஆகியுள்ளார். அவருடைய குழந்தைப் பருவத்தில் அவர் ஒரு கிராமத்துப் பையனாக இருந்தார். அவர் முதலாவதிலிருந்து இறுதியானது வரை, தனது 84 பிறவிகளை முடித்துள்ளார். இப்பொழுது உங்களுடைய புத்தியின் பூட்டுத் திறக்கப்பட்டு, நீங்கள் விவேகமானவர்கள் ஆகுகின்றீர்கள். முன்னர் நீங்கள் விவேகமற்றவர்களாக இருந்தீர்கள். இலக்ஷ்மி, நாராயணன் விவேகமானவர்கள். ஒரு தூய்மையற்ற ஆத்மா விவேகமற்றவர் என்று கூறப்படுகின்றார். தூய்மையே முதன்மையான விடயமாகும். நீங்கள் எழுதுகின்றீர்கள்: மாயை எங்களை வீழ்த்திவிட்டாள். எங்களுடைய கண்கள் குற்றமுள்ளவை ஆகிவிட்டன. தந்தை மீண்டும் மீண்டும் உங்களை எச்சரிக்கை செய்கின்றார். அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, மாயையினால் தோற்கடிக்கப்படாதீர்கள். நீங்கள் இப்பொழுது வீடு திரும்பவேண்டும். ஆகையினால், உங்களை ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். இந்தப் பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது. நாங்கள் தூய்மையாகின்றோம். எனவே, எங்களுக்கு புதிய உலகம் தேவையாகும். குழந்தைகளாகிய நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து, தூய்மையாக வேண்டும். தந்தை யோகம் செய்வதில்லை. பாபா யோகம் செய்வதற்கு, அவர் தூய்மையற்றவர் ஆகுவதில்லை. பாபா கூறுகின்றார்: நான் உங்களுக்குச் சேவை செய்வதற்காகவே இங்கிருக்கின்றேன். தூய்மையற்ற உங்களை வந்து தூய்மையாக்குமாறு நீங்கள் என்னை அழைத்தீர்கள். நீங்கள் என்னை வருமாறு அழைத்ததனால் நான் வந்துள்ளேன். நீங்கள் பின்பற்றுவதற்கு மிக இலகுவான வழிமுறையை நான் காட்டியுள்ளேன். மன்மனாபவ என இருங்கள். இவை கடவுளின் வார்த்தைகளாகும். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைக் குறிப்பிட்டதால், அனைவரும் தந்தையை மறந்துவிட்டார்கள். தந்தையே முதலாமவர். ஸ்ரீகிருஷ்ணர் இரண்டாமவர். பாபா பரந்தாமத்தின் அதிபதியாவார், ஸ்ரீகிருஷ்ணரோ சுவர்க்கத்தின் அதிபதியாவார். சூட்சும உலகில் எதுவுமே நடைபெறுவதில்லை. அனைவருக்குள்ளேயும் ஸ்ரீகிருஷ்ணர் முதல்தரமானவர். அனைவரும் அவரை நேசிக்கின்றனர். மற்றவர்கள் அனைவரும் அவரைப் பின்பற்றுகின்றனர். அனைவரும் சுவர்க்கத்திற்குச் செல்லமுடியாது. ஆகையினால், இனிமையிலும், இனிமையான குழந்தைகளே, உங்களுடைய சந்தோஷம் ஆழமாக உங்கள் எலும்புகளையும் ஊடறுத்துச் செல்லவேண்டும். பாபாவிடம் வந்த பல குழந்தைகள் என்றுமே தூய்மையாக இருக்க முடியாது. “நீங்கள் பாவத்தைச் செய்துகொண்டு, பாபாவிடம் ஏன் வருகின்றீர்கள்”? என பாபா அவர்களை வினவும்பொழுது, “நான் என்ன செய்யமுடியும்? என்னால் வராமல் இருக்க முடியவில்லை” என்று அவர்கள் பதில் அளிக்கின்றார்கள். நான் இங்கே வரும்பொழுது, ஒரு வேளை அம்பு இலக்கைத் தாக்கும். தந்தையாகிய உங்களைத் தவிர வேறு யாரால் எனக்கு சத்கதி அளிக்க முடியும்? ஆகையாலேயே நான் இங்கே வந்து அமருகின்றேன். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள். பாபா என்னைத் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாகவும் அழகாகவும் ஆக்குவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது, ஆனால் நான் என்ன செய்யமுடியும்? உண்மையைக் கூறுவதன் மூலம், நான் முன்னேற முடியும். உங்களின் மூலமாக நான் சீரமைக்கப்பட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பாபா அப்படியான குழந்தைகள் மீது கருணை கொள்கின்றார். இவ்வாறு மீண்டும் இடம்பெறும். எதுவுமே புதியதல்ல! பாபா ஒவ்வொரு நாளும் உங்கள் அனைவருக்கும் ஸ்ரீமத் கொடுக்கின்றார். ஆனால் உங்களில் சிலர் மாத்திரமே நடைமுறையில் இடுகின்றீர்கள். பாபா இதற்கு என்ன செய்யமுடியும்? பாபா கூறுகின்றார்: அவர்களுடைய பாகம் அவ்வாறானதாகும். அனைவரும் அரசன் அல்லது அரசியாக ஆகிவிட முடியாது. ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. இராச்சியத்துக்கு அனைத்து வகையினரும் தேவைப்படுகின்றார்கள். இருந்தபோதிலும், பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, தைரியத்தை இழக்காதீர்கள். உங்களால் முன்னேற முடியும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கின்றார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. எப்பொழுதும் தந்தைக்கு உண்மையானவர்களாக இருங்கள். இப்பொழுது, நீங்கள் ஏதாவது தவறு செய்தால் அதை மறைக்காதீர்கள். உங்கள் கண்கள் எப்பொழுதுமே குற்றமற்றதாக இருப்பதில் கவனம் செலுத்துங்கள்.

2. எல்லையற்ற தந்தை உங்களைத் தூய்மையற்ற, அவலட்சணமானவர்களிலிருந்து அழகானவர்களாகவும், முட்களிலிருந்து மலர்களாகவும் ஆக்குகின்றார் என்ற தூய போதையை எப்பொழுதும் கொண்டிருங்கள். நாங்கள் இப்பொழுது தந்தையின் கரத்தைப் பற்றியுள்ளோம், இந்த ஆதாரத்துடன் நச்சாற்றைக் கடப்போம்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு சக்திவாய்ந்த தடையால் ஒரு விநாடியில் உங்களின் எதிர்மறையான எண்ணங்களையும் சம்ஸ்காரங்களையும் சாதகமானதாக மாற்றுகின்ற ஒரு சுய மாற்றத்தை ஏற்படுத்துபவர் ஆகுவீர்களாக.

உங்களிடம் எதிர்மறையான, அதாவது, வீணான எண்ணங்கள் இருக்கும்போது, அவற்றின் வேகம் மிகவும் துரிதமாகின்றது. நீங்கள் அவற்றின் மீது சக்திவாய்ந்த தடையை மிக வேகமாகப் போட்டு, ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதைப் பயிற்சி செய்ய வேண்டிய தேவை உள்ளது. நீங்கள் ஒரு மலையின் மேலே ஏறுவதற்கு முன்னால், உங்களின் பிரேக்குகளை முதலில் சோதித்துக் கொள்வீர்கள். உங்களின் ஸ்திதியை மேன்மையானது ஆக்குவதற்கு, ஒரு விநாடியில் உங்களின் எண்ணங்களுக்கு ஒரு பிரேக் போடும் பயிற்சியை அதிகரியுங்கள். உங்களின் எண்ணங்களையும் சம்ஸ்காரங்களையும் ஒரு விநாடியில் எதிர்மறையானதில் இருந்து சாதகமானதாக மாற்றினால், சுய மாற்றத்தின் மூலம் உலக மாற்றத்திற்கான பணி பூர்த்தியாகும்.

சுலோகம்:
தங்களின் மீதும் மற்றவர்களின் மீதும் மேன்மையான மாற்றத்திற்கான சக்தியைப் பயன்படுத்துபவர்கள், உண்மையான கர்மயோகிகள் ஆவார்கள்.