08.01.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையின் ஸ்ரீமத் உங்களுக்கு 21 சந்ததிகளுக்கான சந்தோஷத்தைக் கொடுக்கின்றது. தந்தையைத் தவிர வேறு எவராலும் அத்தகைய தனித்துவமான அறிவுறுத்தல்களைக் கொடுக்க முடியாது. நீங்கள் தொடர்ந்தும் அவரின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும்.

கேள்வி:
இராச்சிய திலகத்தை உங்களுக்கு நீங்களே இட்டுக் கொள்வதற்கான இலகுவான வழி என்ன?

பதில்:
1) இராச்சிய திலகத்தை உங்களுக்கு நீங்களே இட்டுக்கொள்வதற்கு, தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற கற்பித்தல்கள் அனைத்தையும் தொடர்ந்தும் முழுமையாகப் பின்பற்றுங்கள். இதில் ஆசீர்வாதங்கள் அல்லது கருணை என்ற கேள்விக்கே இடமில்லை.

பாடல்:
ஓம் நமசிவாய.

ஓம் சாந்தி.
பாபாவும், தாதாவும் “ஓம் சாந்தி” எனக் கூறும்போது, அவர்கள் அதனை இருமுறை கூறலாம். ஏனெனில் தனித்தனியான இருவர் ஒருவரில் உள்ளனர். ஒருவர் சரீரதாரி, மற்றவர் அசரீரியானவர். அவர்கள் ஒருமித்தோ அல்லது ஒவ்வொருவரும் தனித்தனியாகவோ அதைக் கூறலாம். இது ஓர் அற்புதமே. பரமாத்வாகிய பரமதந்தை இவரின் சரீரத்தில் இருந்து ஞானத்தைக் கொடுக்கின்றார் என்பது உலகிலுள்ள எவருக்குமே தெரியாது. இது வேறு எதிலுமே எழுதப்படவில்லை. ஒரு சக்கரத்திற்கு முன்பு பாபா கூறியதைப் போன்று இப்பொழுதும் அவர் கூறுகின்றார்: நான் இவரின் சாதாரண சரீரத்தில் இவரது பல பிறவிகளின் இறுதிப் பிறவிக் காலத்தில் பிரவேசிக்கின்றேன். நான் இந்த சரீரத்தின் ஆதாரத்தை எடுக்கின்றேன். கீதையில் உள்ள சில வார்த்தைகள் நிஜமானவை. “நான் அவரின் பல பிறவிகளின் இறுதிப் பிறவிக் காலத்தில் அவர் இளைப்பாறும் வயதிலிருக்கும் போது பிரவேசிக்கின்றேன்.” என்ற வார்த்தைகள் உண்மையானவை. இவரைப் பொறுத்தவரை இது மிகச்சரியான கூற்று ஆகும். சத்திய யுகத்தில் முதற் பிறவி எடுப்பவரும் இவரே. இறுதியில் அவர் இளைப்பாறும் ஸ்திதியில் இருக்கும்போது தந்தை இவரில் பிரவேசிக்கிறார். ஆகையால் அவர் எத்தனை மறுபிறவிகள் எடுத்துள்ளார் என்பது இவருக்குத் தெரியாது என இவரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. சமயநூல்களில் 8.4 மில்லியன் மறுபிறவிகள் பற்றி அவர்கள் எழுதியுள்ளனர். அவை யாவும் பக்தி மார்க்கத்திற்கு உரியவையாகும். அது பக்தியின் மரபு என அழைக்கப்படுகிறது. ஞான மார்க்கத்தின் செயற்பாடுகள் பக்தி மார்க்கத்தின் செயற்பாடுகளிலிருந்து வேறுபட்டன. பக்தர்கள் பக்தி செய்துவருகையில் தொடர்ந்து கீழிறங்குகின்றார்கள். நீங்கள் இந்த ஞானத்தை ஒரு முறை மாத்திரமே பெறுகின்றீர்கள். அனைவருக்கும் ஜீவன் முக்தி வழங்குவதற்காக தந்தை இந்த யுகத்தில் மாத்திரமே வருகின்றார். இந்நேரத்தில் மாத்திரமே தந்தை வந்து உங்கள் அனைவரையும் உங்களது எதிர்கால வெகுமதியை உருவாக்கச் செய்கின்றார். எதிர்கால புதிய உலகிற்குச் செல்வதற்காகவே இப்பொழுது நீங்கள் கற்கின்றீர்கள். உங்கள் புதிய இராச்சியத்தை உருவாக்குவதற்காகவே தந்தை வருகின்றார். இதனாலேயே இது இராஜயோகம் என அழைக்கப்படுகிறது. ஆதலால், இந்த இராஜயோகம் மிக முக்கியமானது எனக் கருதப்படுகின்றது. மக்கள் பாரதத்தின் இந்த புராதன இராஜயோகத்தைக் கற்க விரும்புகின்றார்கள். இக்காலத்தில் சந்நியாசிகள் வெளிநாடுகளுக்குச் சென்று, புராதன இராஜயோகத்தையே கற்பிக்க வந்துள்ளதாக உரிமை கோருகின்றார்கள். வைகுந்தம் யோகத்தின் மூலம் உருவாக்கப்படுகின்றது என மக்கள் நம்புவதால், அவர்கள் அதனைக் கற்க வேண்டும் என உணர்கின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: யோகசக்தியின் மூலமே நீங்கள் வைகுந்தத்தின் அதிபதிகள் ஆகுவீர்கள். தந்தை வைகுந்தத்தை உருவாக்குகின்றார். ஆனால் அவர் எவ்வாறு அதனை உருவாக்கினார் என்பது எவருக்குமே தெரியாது. ஆன்மீகத் தந்தை மாத்திரமே இந்த இராஜயோகம் கற்பிக்கின்றார். இதனைச் சரீரதாரிகளான மனிதர்களால் கற்பிக்க முடியாது. இந்நாட்களில் கலப்படமும், சீரழிவும் காணப்படுகிறது. இதனாலேயே தந்தை கூறுகிறார்: தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குபவர் நானே. ஆகவே நிச்சயமாக ஆத்மாக்களைத் தூய்மை அற்றவர்கள் ஆக்குகின்ற எவராவது இருக்க வேண்டும். இப்போது இது சரியா அல்லது பிழையா எனத் தீர்மானியுங்கள். நானே வந்து அனைத்து வேதங்களினதும் சமய நூல்களினதும் சாராம்சத்தைக் கொடுக்கின்றேன். இந்த ஞானத்தைக் கற்பதன் மூலம், நீங்கள் 21 பிறவிகளுக்குச் சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். பக்தி மார்க்கத்தில், தற்காலிகமான கணநேரச் சந்தோஷமே உள்ளது. இங்கே தந்தை 21 சந்ததிகளுக்கு நீடித்திருக்கும் சந்தோஷத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். ஜீவன் முக்தியைப் பெறுவதற்காகத் தந்தை கொடுக்கும் ஸ்ரீமத் மிகவும் தனித்துவமானது. தந்தை ஒருவரே அனைவரின் இதயங்களையும் கவர்ந்தவர். அது உயிரற்ற தில்வாலா ஆலயம், ஆனால் இதுவோ உயிருள்ள தில்வாலா ஆலயம். அந்த உருவங்களில் உள்ள உங்கள் செயற்பாடுகள் மிகச்சரியானவை. இந்நேரத்திலேயே அவர்கள் சித்தரித்துள்ள உங்கள் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. உங்கள் இதயத்தை வென்றவரும், அனைவருக்கும் ஜீவன் முக்தியை அளிப்பவரும், உங்கள் துன்பத்தை அகற்றி, உங்களுக்கு சந்தோஷத்தை அருள்பவருமாகிய தந்தையை நீங்கள் கண்டுகொண்டீர்கள். அவர் அதி மேன்மையானவராக நினைவு செய்யப்படுகின்றார். கடவுள் சிவனே, அனைவரிலும் பார்க்க அதி மேன்மையானவராகப் போற்றப்படுகின்றார். சிவனின் நீள்வட்ட வடிவான உருவம் சங்கரர் போன்றவர்களின் முன்னால் வைக்கப்பட்டுள்ளது. உண்மையில், தேவர்களின் முன்னால் சிவனின் உருவத்தை வைப்பது தவிர்க்கப்பட வேண்டும். ஏனென்றால், தேவர்கள் பக்தி செய்வதில்லை. தேவர்களும் பக்தி செய்வதில்லை, சந்நியாசிகளும் பக்தி செய்வதில்லை. அவர்களிடம் பிரம்ம தத்துவத்தின் ஞானம் மாத்திரமே உள்ளது. ஆகாயம் பஞ்சபூதங்களில் ஒன்றாக இருப்பதைப் போல், அது பிரம்ம தத்துவம், ஒளித் தத்துவம் ஆகும். அவர்கள் தந்தையை நினைவு செய்வதோ, அல்லது அவரிடமிருந்து மகாமந்திரத்தைப் பெறுவதோ இல்லை. தந்தை மாத்திரமே இந்தச் சங்கம யுகத்தில் வந்து உங்களுக்கு இந்த மகாமந்திரத்தைக் கொடுக்கின்றார். அனைவருக்கும் ஜீவன் முக்தி அருளும் தந்தை இந்த ஒரு யுகத்தில் மாத்திரமே வந்து, மன்மனாபவ எனும் மந்திரத்தைக் கொடுக்கின்றார். அவர் கூறுகிறார்: குழந்தைகளே, உங்கள் சொந்த சரீர உணர்வுகள் உட்பட அனைத்துச் சரீர சமயங்களையும் துறந்து, உங்களைச் சரீரமற்ற ஆத்மாக்களாகக் கருதி, உங்கள் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். இதனை அவர் மிக இலகுவான முறையில் விளங்கப்படுத்துகின்றார். இது இராவண இராச்சியம், ஆகையால் நீங்கள் அனைவரும் சரீர உணர்வு உடையவர்கள் ஆகிவிட்டீர்கள். இப்போது தந்தை உங்களை ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆக்குகின்றார். அவர் கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, உங்கள் தந்தையாகிய என்னை நினைவு செய்வதால் தற்போது உங்களில் கலந்திருக்கும் கலப்படத்தை உங்களால் அகற்ற முடியும். நீங்கள் உங்கள் சதோபிரதான் ஸ்திதியில் இருந்து இறங்கி சதோ ஸ்திதிக்கு வந்ததும் உங்கள் சுவர்க்கக் கலைகளும் குறைவடைகின்றன. தங்கத்தின் தூய்மை அதில் எவ்வளவு கரட் இருக்கிறது என்பதில் தங்கியுள்ளது. இப்பொழுது கலியுக இறுதியில் இங்கே தங்கம் காணப்படுவதில்லை. சத்தியயுகத்தில் தங்கத்தினால் கட்டப்பட்ட மாளிகைகள் இருக்கும். அதன் வித்தியாசம் பகலும் இரவும் போன்றது. அது சத்தியயுக உலகம் என அழைக்கப்படுகிறது. அதனால் அங்கு செங்கட்டிகளும் கற்களும் தேவைப்படுவதில்லை. அங்கு கட்டப்படும் கட்டடங்களுக்கு தங்கமும் வெள்ளியுமே பயன்படுத்தப்படுகின்றன. அன்றி, குப்பைகள் எதுவும் பயன்படுத்தப்படுவது இல்லை. அங்கு அவர்களுக்கு விஞ்ஞானத்தினால் பெருமளவு சந்தோஷம் இருக்கின்றது. இதுவும் நாடகத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் மக்கள் விஞ்ஞானத்தின் அகங்காரத்தைக் கொண்டிருக்கின்றார்கள். சத்தியயுகத்தில் மக்களுக்கு விஞ்ஞானத்தின் அகங்காரம் இருப்பதில்லை. நீங்கள் அங்கு இருக்கும்போது, உங்களுக்கு விஞ்ஞானத்தினால் சந்தோஷம் மாத்திரமே கிடைக்கும். இங்கே, சந்தோஷம் தற்காலிகமானது. அத்துடன் இப்போது விஞ்ஞானத்தினால் பெருமளவு துன்பமும் ஏற்படுகிறது. விநாசத்துக்காக குண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அவர்கள் மற்றவர்களுக்கு அந்தக் குண்டுகளைத் தயாரிக்க வேண்டாம் எனக் கூறினாலும், தாங்கள் இன்னும் தொடர்ந்து அவற்றைத் தயாரிக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் அந்தக் குண்டுகளினாலேயே மரணிப்பார்கள் எனத் தெரிந்திருந்தும், தொடர்ந்தும் அவற்றைத் தயாரிக்கின்றார்கள். ஆகவே அவர்களின் புத்தி ஏற்கனவே மரணித்துவிட்டது. இவை அனைத்தும் நாடகத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளன. அவற்றைச் செய்வதை அவர்களால் நிறுத்த முடியாது. அவர்கள் அனைவரும் அந்தக் குண்டுகளினால் மரணிப்பார்கள் என்பதை அறிந்திருந்தாலும், அவற்றைத் தயாரிப்பதற்கு யார் தூண்டுகிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களால் அவற்றைத் தயாரிப்பதை நிறுத்த முடியாது. அந்தக் குண்டுகள் நிச்சயமாகத் தயாரிக்கப்பட வேண்டும். விநாசமும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் அதிகளவு அமைதிக்கான பரிசில்களைப் பெற்றிருந்தாலும், ஒரேயொரு தந்தையே அமைதியை உருவாக்குபவர் ஆவார். அவரே அமைதிக் கடல். அவர் ஒருவரே உங்கள் ஆஸ்தியான அமைதி, சந்தோஷம், அத்துடன் தூய்மையையும் உங்களுக்குக் கொடுக்கின்றார். சத்திய யுகத்தில் எல்லையற்ற செல்வமுள்ளது. அங்கே பாலாறுகள் ஓடுகின்றன. விஷ்ணு பாற்கடலில் மிதப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். அந்தப் படம் பாற்கடலுக்கும் இந்த நச்சுக்கடலுக்கும் உள்ள பாரிய வித்தியாசத்தை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகவே வரையப்பட்டுள்ளது. பக்தி மார்க்கத்தில் அவர்கள் குளங்கள் போன்றவற்றை உருவாக்கி அங்கு ஓர் கல்பீடத்தில் விஷ்ணுவின் சிலையை வைக்கிறார்கள். பக்தியில் அவர்கள் பெருமளவு பணத்தைச் செலவு செய்கின்றார்கள். அது பெருமளவு நேரத்தையும் பணத்தையும் வீணாக்குவதாகும். அவர்கள் தேவியரின் சிலைகளை உருவாக்குவதற்கு பெருமளவு செலவு செய்கின்றார்கள். பின்னர் அவற்றைக் கடலில் மூழ்கடிக்கிறார்கள். ஆகவே அந்தப் பணம் வீணாக்கப்படுகின்றது. இது பொம்மைகளின் வழிபாடே. வழிபாடு செய்பவர்கள் எவருமே அவர்கள் வழிபடுபவர்களின் தொழில்களை அறிந்திருக்கவில்லை. இப்பொழுது நீங்கள் எவருடைய ஆலயங்களுக்குச் சென்றாலும், அவர்களின் தொழிலை அறிந்துள்ளீர்கள். அதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் எங்கு செல்வதற்கும் தடை செய்யப்படுவதில்லை. முன்னர் நீங்கள் எதனையும் புரிந்து கொள்ளாமல் சென்றீர்கள். இப்பொழுது நீங்கள் விவேகம் உடையவர்களாகிச் செல்கின்றீர்கள். அவர்களுடைய 84 பிறவிகளைப் பற்றி உங்களுக்கும் தெரியும் என நீங்கள் கூறுகிறீர்கள். பாரத மக்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பைப் பற்றியேனும் தெரிந்திருக்கவில்லை. இந்த ஞானம் அனைத்தும் உங்கள் புத்தியில் உள்ளது. இந்த ஞானம் உங்கள் வருமானத்தின் மூலாதாரமாகும். வேதங்களையும் சமயநூல்கள் போன்றவற்றையும் கற்பதில் எந்தவித இலக்கோ, இலட்சியமோ இருப்பதில்லை. ஒரு பாடசாலையில் எதனையாவது கற்கும்போது, எப்பொழுதும் ஏதாவது இலக்கும் இலட்சியமும் இருக்கும். நீங்கள் இக்கல்வியினால் பெரும் செல்வந்தர்கள் ஆகுகின்றீர்கள். இக்கல்வியைக் கற்பதனால் நீங்கள் ஜீவன் முக்தியைப் பெறுவதுடன், பெரும் செல்வந்தர்களாகவும் ஆகுவீர்கள். எந்த ஆலயத்துக்கு நீங்கள் சென்றாலும் அங்கு யாருடைய நினைவுச் சின்னம் இருக்கின்றது என்பதை நீங்கள் மிக விரைவில் புரிந்துகொள்வீர்கள். அந்த தில்வாலா ஆலயம் உயிரற்றவர்களுக்கானது. ஆனால் இதுவோ உயிர் உள்ளவர்களுடையது. விருட்சப் படத்தில் இங்கு நீங்கள் சித்தரிக்கப்பட்டிருப்பதைப் போன்று, அந்த ஆலயத்திலும் நீங்கள் தபஸ்யாவில் கீழே அமர்ந்திருப்பதுடன், மேலே கூரையில் சுவர்க்கம் முழுவதும் காட்டப்பட்டுள்ளது. அதனை உருவாக்குவதற்கு பெருமளவு பணம் செலவிடப்பட்டுள்ளது. இங்கே உங்களுக்கு எவ்விதமான செலவும் இ;ல்லை. பாரதம் 100வீதம் செழிப்பாகவும் தூயதாகவும் இருந்தது. இப்பொழுது பாரதம் 100வீதம் கடனாளியாகவும் தூய்மையற்றதாகவும் ஆகிவிட்டது. அனைவரும் காம விகாரத்தின் மூலமே பிறக்கின்றார்கள். அங்கே அசுத்தம் என்ற கேள்வியே இல்லை. கருட புராணத்தில் மக்கள் தங்கள் நடத்தையை மாற்றுவதற்காக பல பயங்கரமான கதைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அந்நேரத்தில் மக்கள் மாறுவார்கள் என்பது நாடகத்தில் இல்லை. கடவுளின் ஸ்தாபனை இப்பொழுது இடம்பெறுகின்றது. கடவுள் ஒருவரே சுவர்க்கத்தை உருவாக்குகின்றார். அவரே தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் என அழைக்கப்படுகின்றார். மற்றைய போர்வீரர்கள் தங்கள் ஆட்சியாளருக்காகப் போராடுகிறார்கள். ஆனால் போர்வீரர்களான நீங்கள் இப்பொழுது உங்கள் சொந்த நன்மைக்காக மாயையை வெற்றி கொள்கிறீர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். நீங்கள் அதிகளவு செய்தால் அதிகளவு பெறுவீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் பாரதத்தைச் சுவர்க்கமாக மாற்றுவதற்கு உங்கள் மனம், சரீரம், செல்வத்தைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் அதிகளவு செய்யும்போது, உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். இங்கே எதுவும் எஞ்சியிருக்கப் போவதில்லை. “சிலரின் செல்வம் புதைந்தே இருக்கும்” என்ற கூற்று சக்கரத்தின் இந்த நேரத்தையே குறிக்கிறது. தந்தை இப்பொழுது வந்து, உங்கள் இராச்சிய பாக்கியத்தை நீங்கள் பெறுவதற்கு உதவுகின்றார். அவர் கூறுகிறார்: இப்பொழுது உங்கள் மனம், சரீரம், செல்வம் அனைத்தையும் இதற்காகப் பயன்படுத்துங்கள். இந்த பிரம்மா தன்னிடமிருந்த அனைத்தையும் அர்ப்பணித்தார். அவர் ஒரு மகாதானி என அழைக்கப்பட்டார். அநாதியான செல்வத்தைக் கொடுத்ததுடன் அவர் தனது அழியும் செல்வத்தையும் தானம் செய்தார். ஒவ்வொருவரும் உங்கள் தெரிவுக்கேற்ப போதியளவு கொடுக்கலாம். தானம் செய்து புகழ் பெற்றோர் பெரும் கொடையாளிகள் என அழைக்கப்பட்டார்கள். அவர்கள் தங்களுக்கென ஒரு பெயரை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் மறைமுகமாக கடவுளின் பெயரில் கொடுத்தாலும், அவர்களின் இராச்சியம் உருவாக்கப்படுவதில்லை. உங்களுடைய இராச்சியமே இப்போது உருவாக்கப்படுகிறது. ஆகவே நீங்கள் முழுமையான கொடையாளிகள் ஆகவேண்டும். பக்தி மார்க்கத்தில் அவர்கள் தங்களையே தாங்கள் அர்ப்பணிப்பார்கள் எனக் கூறுகின்றார்கள். இங்கே எவ்வித செலவும் இருப்பதில்லை. அந்த அரசாங்கம் அதிகளவு செலவு செய்யவேண்டும். நீங்கள் என்னென்ன இங்கு செய்கின்றீர்களே, அவற்றை நீங்கள் உங்களுக்காகவே செய்கின்றீர்கள். நீங்கள் எட்டு மாலையிலோ, நூற்றியெட்டு மாலையிலோ, அல்லது பதினாறாயிரத்து நூற்றியெட்டு மாலையிலோ வருவது உங்களிலேயே தங்கியுள்ளது. நீங்கள் திறமைச்சித்தி எய்த வேண்டும். நீங்கள் தண்டனையை அனுபவம் செய்யாது, கர்மாதீத நிலையை அடையும் வகையில், அத்தகைய வருமானத்தை யோகத்தின் மூலம் சம்பாதிக்க வேண்டும். நீங்கள் அனைவரும் போர்வீரர்கள். உங்கள் யுத்தம் இராவணனுடன் ஆகும். மனிதர்களுடன் அல்ல. தோல்வி அடைந்தவர்கள் 2 கலைகள் குறைவாக இருப்பார்கள். திரேதா யுகம் 2 கலைகள் குறைந்த சுவர்க்கம் எனக் கூறப்படும். பாபாவை முழுமையாகப் பின்பற்றுவதற்கு நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். எவ்வாறாயினும், இதற்கு நீங்கள் மனதினாலும் புத்தியினாலும் அனைத்தையும் அர்ப்பணிக்க வேண்டும். “பாபா இவை அனைத்தும் உங்களுடையவை” என நீங்கள் கூறுவீர்கள். அதற்குத் தந்தை பதில் அளிக்கின்றார்: அதனைச் சேவைக்குப் பயன்படுத்துங்கள். உங்கள் பணியை நான் கொடுக்கும் அறிவுறுத்தல்களின்படி செய்யுங்கள். அனைவரும் நன்மை அடைவதற்காக ஒரு பல்கலைக்கழகத்தைத் திறவுங்கள். நிலையங்களையும் திறவுங்கள். இந்தச் செய்தியைக் கொடுங்கள்: தந்தையை நினைவு செய்து உங்கள் ஆஸ்தியைக் கோருங்கள். குழந்தைகளாகிய நீங்கள் தூதுவர்கள் என அழைக்கப்படுகின்றீர்கள். ஆகவே அனைவருக்கும் இந்தச் செய்தியைக் கொடுங்கள். தந்தை, பிரம்மாவின் மூலம் கூறுகின்றார்: என்னை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் ஜீவன் முக்தி அடைவீர்கள். இப்பொழுது உங்களிடம் பந்தன வாழ்க்கை உள்ளது. ஆனால் பின்னர் நீங்கள் விடுதலையுள்ள வாழ்க்கை வாழ்வீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் பாரதத்தில் மாத்திரமே வருகின்றேன். இந்த நாடகம் அநாதியாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. அது எப்போது உருவாக்கப்பட்டது, எப்போது முடிவடையும் என்ற கேள்வியை எழுப்பமுடியாது. அநாதியான இந்த நாடகம் தொடர்கிறது. ஆத்மாக்கள் சின்னஞ்சிறிய புள்ளிகள் என்பதுடன் ஒவ்வொருவரும் அநாதியாக நிச்சயிக்கப்பட்ட பாகத்தைத் தம்முள் கொண்டுள்ளார்கள். இவை மிகவும் ஆழமான விடயங்களாகும். ஒவ்வோர் ஆத்மாவும் நட்சத்திரம் போன்ற சின்னஞ்சிறிய புள்ளி ஆவார். தாய்மார் தங்கள் நெற்றியில் திலகம் (புள்ளி) இடுவார்கள். இப்பொழுது முயற்சி செய்வதன் மூலம், குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இராச்சிய திலகத்தை உங்களுக்கு நீங்களே இடுகிறீர்கள். நீங்கள் தந்தையின் கற்பித்தல்களை மிகச் சரியாகப் பின்பற்றினால், நீங்களே உங்களுக்கு இராச்சிய திலகத்தைக் இடுகிறீர்கள். இதில் எவ்வித கருணை அல்லது விசேட ஆசீர்வாதங்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் உங்களுக்கு இராச்சிய திலகத்தை இடவேண்டும். அந்தத் திலகம் ஆதியான இராச்சிய திலகத்தைக் குறிக்கிறது. இப்பொழுது நீங்கள் அந்தளவிற்கு பெருமுயற்சி செய்வதுடன் தந்தையைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் மற்றவர்களைப் பார்க்கக்கூடாது. இதுவே மன்மனாபவ ஆகுவது என்பதாகும். இதன் மூலம் இயல்பாகவே நீங்கள் உங்கள் திலகத்தைப் பெறுவீர்கள். தந்தை இதனை உங்களுக்குக் கொடுக்கமாட்டார். பிச்சைக்காரரில் இருந்து உங்களை இளவரசர் ஆக்குகின்ற இந்தக் கல்வி இராஜயோகம் ஆகும். ஆகவே நீங்கள் அதற்கேற்றவாறு மிக நல்ல முயற்சி செய்வதுடன் இவரையும் பின்பற்ற வேண்டும். இந்த விடயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இக்கல்வி மூலம் நீங்கள் ஒரு வருமானத்தை ஈட்டிக் கொள்கிறீர்கள். நீங்கள் அதிகளவு யோகம் செய்தால் அதிகளவு ஞானத்தைக் கிரகிப்பீர்கள். யோகத்திற்கே முயற்சி தேவைப்படுகிறது. இதனாலேயே பாரதத்தின் இராஜயோகம் நினைவு கூரப்படுகிறது. எவ்வாறாயினும், உங்கள் வாழ்நாள் முழுவதிலும் கங்கை போன்றவற்றில் நீராடினாலும் உங்களால் தூய்மையாக முடியாது. பக்தி மார்க்கத்தில் மக்கள் கடவுளின் பெயரால் ஏழைகளுக்குக் கொடுக்கின்றார்கள். கடவுள் தானே இங்கே வந்து ஏழைகளுக்கு உலக இராச்சியத்தைக் கொடுக்கின்றார். அவர் ஏழைகளின் அதிபதியாவார். 100வீதம் செழிப்பாக இருந்த பாரதம் இப்போது 100வீதம் கடனாளி ஆகிவிட்டது. ஏழைகளுக்கே எப்பொழுதும் தானங்களும் கொடுக்கப்படுகின்றன. தந்தை உங்களை மிகவும் மேன்மையானவர்கள் ஆக்குகின்றார். எனினும் நீங்கள் அத்தகைய தந்தையை அவதூறு செய்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் இவ்வாறு என்னை அவதூறு செய்யும்போதே நான் வரவேண்டியுள்ளது. அதுவும்கூட நாடகத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர் உங்கள் தந்தையும் உங்கள் ஆசிரியரும் ஆவார். அமரத்துவமான சற்குருவைப் பற்றி சீக்கியர்கள் பேசுகிறார்கள். ஆனால் பக்தி மார்க்கத்தில் பல குருமார் உள்ளனர். இந்தச் சிம்மாசனம் அமரத்துவமானவருக்கு உரியது. அவரும் குழந்தைகளாகிய உங்களின் சிம்மாசனங்களையும் உபயோகிக்கின்றார். அவர் கூறுகின்றார்: அனைவருக்கும் நன்மை அளிப்பதற்காகவே நான் இவரின் சரீரத்தில் பிரவேசிக்கின்றேன். இது இந்நேரத்திற்குரிய இவரின் பாகமாகும். இந்த விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும். புதியவர்களினால் இவ்விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அநாதியான ஞானச் செல்வத்தைத் தானம் செய்வதன் மூலம், நீங்கள் மகாதானி ஆகவேண்டும். தந்தை பிரம்மா தன்னிடம் இருந்த அனைத்தையும் சேவைக்காகப் பயன்படுத்தியதைப் போன்று, தந்தையைப் பின்பற்றி அந்த இராச்சியத்தில் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருங்கள்.

2. தண்டனையில் இருந்து விடுபடுவதற்கு, யோகத்தின் மூலம் உங்கள் கர்மாதீத நிலையை அடையக்கூடியதாக அத்தகைய வருமானத்தைச் சம்பாதியுங்கள். திறமைச் சித்தியடைவதற்கு முழு முயற்சி செய்வதுடன், மற்றவர்களைப் பார்க்காதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தை பிரம்மாவைப் போல், களைப்பற்றவராகி, கண்டிப்பான கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதுடன் திடசங்கற்பத்தைக் கொண்டிருப்பதன் மூலம் கவனயீனத்தை முடிப்பீர்களாக.

தந்தை பிரம்மாவைப் போல் களைப்பற்றவர் ஆகுவதற்கு, கவனயீனத்தை முடியுங்கள். இதற்கு, உங்களில் கண்டிப்பான கட்டுப்பாட்டைக் கடைப்பிடியுங்கள். திடசங்கற்பத்தைக் கொண்டிருப்பதுடன் சதா உங்களின் கவனம் செலுத்துகின்ற காவலாளிகளை விழிப்புடன் வைத்திருங்கள். அப்போது கவனயீனங்கள் முடிவிற்கு வந்துவிடும். உங்களில் முதலில் செயல்படுங்கள். பின்னர் சேவை செய்யுங்கள். அப்போது அந்த நிலம் மாற்றம் அடையும். இப்போது, ‘நான் அதைச் செய்வேன், அது நடக்கும்’ என்ற சௌகரியமான எண்ணங்களின் டன்லப் தலையணையைக் கைவிடுங்கள். உங்களின் தலையில் 'நான் இதைச் செய்ய வேண்டும்’ என்ற சுலோகனை வைத்திருங்கள். அப்போது மாற்றம் நிகழும்.

சுலோகம்:
சக்திவாய்ந்த வார்த்தைகள் என்றால், அவற்றில் ஆத்ம உணர்வுகளும் நல்லாசிகளும் இருக்கும்.

உங்களின் சக்திவாய்ந்த மனதால், சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.

காலம் நெருங்கி வருவதால், அந்தளவிற்கு வீணான எண்ணங்களும் அதிகரிக்கின்றன. ஆனால், அவை இல்லாமல் போவதற்காகவே வெளிப்படுகின்றன. அவற்றின் கடமை, வருவது. உங்களின் பறக்கும் ஸ்திதியாலும் சகாஷாலும் அவற்றை மாற்றுவது உங்களின் கடமை. பயப்படாதீர்கள். அவற்றால் பாதிக்கப்படாதீர்கள்.