08.02.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்களே உண்மையான மீட்புப் படையினரான, கடவுளின் உதவியாளர்கள் ஆவீர்கள். நீங்கள் அனைவருக்கும் அமைதியை மீட்டெடுக்க அருள்புரிய வேண்டும்.
கேள்வி:
அமைதியை மீட்டுத் தாருங்கள் என்று வேண்டி நிற்கும் எவருக்கும் குழந்தைகளாகிய நீங்கள் என்ன கூறுவீர்கள்?பதில்:
அவர்களுக்குக் கூறுங்கள்: இந்த வேளையில் இங்குதான் உங்களுக்கு அமைதி வேண்டுமா? எனத் தந்தை வினவுகிறார். இது அமைதி தாமம் அல்ல. உண்மையான இல்லம் என அழைக்கப்படுகின்ற அமைதி தாமத்தில் மட்டுமே உண்மையான அமைதி இருக்க முடியும். ஆத்மாக்கள் சரீரங்களைக் கொண்டிராதபோது, அமைதி நிலவுகிறது. சத்தியயுகத்தில், தூய்மை, சந்தோஷம், அமைதி என அனைத்துமே உள்ளன. தந்தை மட்டுமே வந்து இந்த ஆஸ்தியை வழங்குகிறார். தந்தையை மாத்திரமே நினைவு செய்யுங்கள்.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். மனிதர்கள் அனைவருமே தமக்குள் ஆத்மா இருப்பதை அறிவார்கள். அவர்கள் ‘‘உயிருள்ளவர்’’ என்றும் கூறுகிறார்கள், அல்லவா? உண்மையில் நாங்கள் ஆத்மாக்கள். பின்னர் நாங்கள் சரீரங்களைப் பெறுகின்றோம். எவருமே தனது ஆத்மாவைக் கண்டதில்லை. தாங்கள் ஆத்மாக்கள் என்பதை மட்டும் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். எவ்வாறு அவர்கள் ஆத்மாவை அறிந்திருந்தும், அதனைக் கண்டதில்லையோ, அவ்வாறே, அவர்கள் பரமாத்மா என்றால் ஆத்மாக்களில் உயர்ந்தவர் எனப் பரமாத்மாவைப் பற்றியும் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், அவரையும் பார்க்க முடியாது. அவர்கள் தம்மையும் பார்த்ததில்லை, தந்தையையும் பார்த்ததில்லை. ஆத்மா ஒரு சரீரத்தை நீக்கி இன்னொன்றை ஏற்றுக்கொள்வதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் இதனை மிகச்சரியாக அறியமாட்டார்கள். அவர்கள் 8.4 மில்;லியன் உயிரினங்களைப் பற்றியும் பேசுகிறார்கள். உண்மையில், 84 பிறவிகள் உள்ளன. ஆனால் எந்த ஆத்மாக்கள் எத்தனை பிறவிகளை எடுக்கிறார்கள் என்பதேனும் அவர்களுக்குத் தெரியாது. ஆத்மாக்கள் தந்தையை அழைக்கிறார்கள். ஆனால், அவர்கள் அவரைக் கண்டதுமில்லை, அவரை அவர்கள் மிகச்சரியாக அறிந்து கொள்ளவுமில்லை. அனைத்திற்கும் முதலில், ஆத்மா என்றால் என்ன என்று அவர்கள் மிகச் சரியாக அறிந்திருந்தார்களாயின், அவர்கள் தந்தையையும் அறிந்திருப்பார்கள். அவர்களுக்குத் தம்மையே தெரியாத போது, அவர்களுக்கு விளங்கப்படுத்துவது யார்? இது ‘சுயத்தை உணர்தல்’ எனப்படுகிறது. தந்தையைத் தவிர வேறு எவராலும் இதைச் செய்ய முடியாது. எவருக்கும் ஆத்மா என்றால் என்ன, அது எத்தகையது, ஆத்மா எங்கிருந்து வருகிறார், எவ்வாறு ஆத்மா பிறப்பெடுக்கிறார் அல்லது இத்தகையதொரு சிறிய ஆத்மாவில் எவ்வாறு 84 பிறவிகளின் பாகம் பதிந்துள்ளது என்பவை தெரியாது. அவர்கள் தங்களையே அறியாவிட்டால், எப்படித் தந்தையை அறிவார்கள்? இலக்ஷ்மியும் நாராயணனும் மனித அந்தஸ்தையே கொண்டுள்ளனர். அவர்கள் எவ்வாறு அந்த அந்தஸ்தைப் பெற்றார்கள்? எவருக்கும் இது தெரியாது. மனிதர்களே நிச்சயமாக இதனை அறிந்திருக்க வேண்டும். அவர்கள் சுவர்க்கத்தின் அதிபதிகளாக இருந்தார்கள் எனக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் அந்தத் தகுதியை எவ்வாறு பெற்றார்கள்? அதன் பின்னர் அவர்கள் எங்கு சென்றார்கள்? அவர்களுக்கு எதுவும் தெரியாது. நீங்கள் இப்போது அனைத்தையும் அறிவீர்கள். முன்னர், உங்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. உதாரணமாக, ஒரு குழந்தைக்கு வழக்கறிஞர் என்பவர் யார் என்பது தெரியுமா? அவர் தொடர்ந்தும் கற்கும்போது ஒரு வழக்கறிஞர் ஆகுகிறார். அதுபோன்றே இந்த இலக்ஷ்மியும் நாராயணனும் கற்றதன் மூலமே இவ்வாறு ஆகினார்கள். சட்டம், மருத்துவம் போன்றவற்றிற்கான புத்தகங்கள் உள்ளன, அவர்களுடைய புத்தகம் கீதையாகும். அதைப் பேசியவர் யார்? இராஜயோகத்தைக் கற்பித்தவர் யார்? எவருக்கும் இது தெரியாது. அதில் (கீதையில்) அவர்கள் பெயரை மாற்றிவிட்டனர். அவர்கள் சிவஜெயந்தியையும் கொண்டாடுகிறார்கள். அவர்தான் வந்து ஸ்ரீகிருஷ்ணரின் உலகிற்கு உங்களை அதிபதிகள் ஆக்குகிறார். ஸ்ரீகிருஷ்ணரே சுவர்க்கத்தின் அதிபதியாக இருந்தார். ஆனாலும், அவர்கள் சுவர்க்கத்தை அறியமாட்டார்கள். இல்லையேல், ஸ்ரீகிருஷ்ணர் துவாபரயுகத்தில் கீதையைக் கூறினாரென்று எவ்வாறு கூறுவார்கள்? அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரை துவாபர யுகத்திலும், இலக்ஷ்மி, நாராயணனைச் சத்திய யுகத்திலும், இராமரைத் திரேதா யுகத்திலும் காட்டியுள்ளனர். இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியத்தில் அனர்த்தங்களும், குழப்பங்களும் காட்டப்படுவதில்லை. கம்சன் (அசுரன்) ஸ்ரீகிருஷ்ணரின் இராச்சியத்தில் காட்டப்படுகிறான். ஆனால் இராவணன் போன்றோர் இராம இராச்சியத்தில் காட்டப்படுகிறார்கள். இராதையும் கிருஷ்ணருமே, இலக்ஷ்மியாகவும் நாராயணனாகவும் ஆகுகிறார்களென்பது எவருக்கும் தெரியாது. நிச்சயமாக இது அறியாமையின் காரிருளாகும். அறியாமை இருள் எனவும், இந்த ஞானம் ஒளி எனவும் கூறப்படுகிறது. இப்போது ஒளியைக் கொண்டுவருபவர் யார்? தந்தையே ஆவார். ஞானம் பகல் என்றும், பக்தி இரவு என்றும் கருதப்படுகின்றது. பக்தி மார்க்கமானது பிறவி பிறவியாகத் தொடர்கிறது என்பதை நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் ஏணியில் தொடர்ந்து கீழிறங்கி வந்துள்ளீர்கள். உங்கள் சுவர்க்கக் கலைகளும் தொடர்ந்தும் குறைவடைகின்றன. ஒரு புதிய வீடு கட்டப்பட்ட பின்னர், அதன் ஆயுட்காலம் நாளுக்கு நாள் குறைவடையும். அது முக்காற்பங்கு பழைமை அடைந்ததும், நிச்சயமாகப் பழையது எனப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் முதலில், அவரே அனைவரதும் தந்தை என்பதிலும், அனைவருக்கும் சற்கதி அளிப்பவர் என்பதிலும், அத்துடன் அனைவருக்கும் இக்கல்வியைக் கற்பிப்பவர் என்பதிலும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். அவர் அனைவரையும் முக்தி தாமத்திற்கு அழைத்துச் செல்வார். உங்களுக்கு இலக்கும் குறிக்கோளும் உள்ளன. நீங்கள் இக்கல்வியைக் கற்ற பின்னர் உங்கள் சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்வீர்கள். ஏனையோர் முக்தி தாமத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். நீங்கள் சக்கரத்தின் படத்தை விளங்கப்படுத்தும்போது, சத்திய யுகத்தில் பல்வேறுபட்ட சமயங்கள் இல்லையெனக் காட்டுங்கள். அந்த நேரத்தில், அந்த ஆத்மாக்கள் அசரீரி உலகில் இருப்பார்கள். ஆகாயமென்பது ஒரு வெட்டவெளி என்பதை நீங்கள் அறிவீர்கள். காற்று, காற்றெனவும், ஆகாயம் ஆகாயமெனவும் அழைக்கப்படுகிறது. அனைவரும் பரமாத்மா என்பதல்ல. கடவுள் காற்றில் இருப்பதாகவும், ஆகாயத்தில் இருப்பதாகவும் மனிதர்கள் நம்புகிறார்கள். இப்போது தந்தை இங்கிருந்து அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். உங்களுக்கு இந்தப் பிறப்பு தந்தையினால் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில், உங்களுக்குக் கற்பிப்பவர் யார்? தந்தையே ஓர் ஆன்மீக ஆசிரியராகி உங்களுக்குக் கற்பிக்கிறார். அச்சா. நீங்கள் நன்கு கற்று கல்வியைப் பூர்த்தி செய்வீர்களாயின், தந்தை உங்களைத் தன்னுடன் திருப்பி அழைத்துச் செல்வார். நீங்கள் மீண்டும் உங்கள் பாகங்களை நடிக்க வருவீர்கள். நிச்சயமாக முதலில் நீங்கள் சத்திய யுகத்திற்கே இறங்கி வந்தீர்கள். இப்பொழுது மீண்டும் ஒருமுறை நீங்கள் சகல பிறவிகளினதும் இறுதிக்கு வந்துவிட்டீர்கள். பின்னர் நீங்களே முதலில் கீழே வருவீர்கள். இப்போது தந்தை கூறுகிறார்: ஓட்டப்பந்தயத்தில் ஓடுங்கள்! தந்தையை நன்கு நினைவில் வைத்து ஏனையோருக்கும் கற்பியுங்கள். இல்லையேல், பெருந்தொகையினருக்கு யார் கற்பிப்பார்கள்? நீங்கள் நிச்சயமாகத் தந்தையின் உதவியாளர்கள் ஆகுவீர்கள், அல்லவா? ‘கடவுளின் உதவியாளர்கள்’ என்ற பெயர் உள்ளது. ஆங்கிலத்தில் அது சல்வேஷன் ஆர்மி (மீட்புப் படை) எனப்படுகிறது. அவர்கள் வேண்டி நிற்கும் மீட்சி எது? எங்களுக்கு அமைதியை மீட்டுத் தாருங்கள் என அனைவரும் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் அமைதியை மீட்டுத் தருவதாக இல்லை. அமைதியை மீட்டுத் தருமாறு வேண்டி நிற்பவர்களிடம் தந்தை வினவுவதாகக் கூறுங்கள்: இங்கேதானா உங்களுக்கு அமைதி வேண்டும்? இதுவோ அமைதிதாமம் அல்ல. உண்மையான இல்லம் என அழைக்கப்படும் அமைதி தாமத்திலேயே அமைதி இருக்க முடியும். ஆத்மா ஒருவர் சரீரம் அற்றிருக்கும்போதே, அமைதியாக இருப்பார். தந்தையே வந்து இந்த ஆசீர்வாதத்தை வழங்குகிறார். உங்கள் மத்தியிலும், உங்களிற் சிலர் மிகவும் சாதுரியமாக விளங்கப்படுத்த வேண்டும். ஒரு கண்காட்சியின் நடுவில் நின்று பாபா அனைவரையும் செவிமடுப்பாரானால், பல தவறுகளைச் சுட்டிக்காட்ட முடியும். ஏனெனில் விளங்கப்படுத்துபவர்களும் வரிசைக்கிரமமானவர்களே. அனைவரும் சமமானவர்களாக இருந்தால், இன்னாரின்னார் வந்து விரிவுரை நிகழ்த்த வேண்டும் என ஆசிரியர்கள் ஏன் எழுதிக் கேட்கிறார்கள்? ஓ! ஆனால் நீங்களும் ஒரு பிராமணர் அல்லவா? பாபா, இன்னார் என்னைவிட சாமர்த்தியசாலி. சாமர்த்தியத்தைப் பொறுத்தே மனிதர்கள் அந்தஸ்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் வரிசைக்கிரமமானவர்கள். பரீட்சை முடிவுகள் வெளிவரும்போது, உங்களுக்கு இயல்பாகவே ஒரு காட்சி கிடைக்கும். அப்போது, நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றவில்லை என்பதை உணர்வீர்கள். தந்தை கூறுகிறார்: பாவச் செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். சரீரதாரிகள் மீது பற்று வைக்காதீர்கள். இந்தச் சரீரம் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டுள்ளது, அல்லவா? பஞ்ச பூதங்களையும் நீங்கள் வணங்கவோ அல்லது நினைவு செய்யவோ வேண்டியதில்லை. நீங்கள் அந்தக் கண்களின் மூலம் பார்க்கலாம், ஆனால் அந்தத் தந்தையையே நினைவு செய்யவேண்டும். ஆத்மா இப்போது ஞானம் பெற்றுள்ளார். நாங்கள் இப்போது வீட்டிற்குச் சென்று பின்னர் சுவர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். ஓர் ஆத்மாவைப் புரிந்து கொள்ளலாம், ஆனால் பார்க்க முடியாது. ஆம், உங்கள் தெய்வீகப் பார்வையின் மூலம் உங்கள் சொந்த வீட்டையும் சுவர்க்கத்தையும் பார்க்க முடியும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, மன்மனாபவ, மதியாஜிபவ என்பதன் அர்த்தம் தந்தையையும், விஷ்ணு தாமத்தையும் நினைவு செய்யுங்கள் என்பதாகும். இதுவே உங்கள் இலட்சியமும் குறிக்கோளும் ஆகும். நாங்கள் இப்போது சுவர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஏனையோர் அனைவரும் முக்திக்குச் செல்லவேண்டும். அனைவருமே சத்திய யுகத்திற்குச் செல்ல முடியாது. உங்கள் தர்மம் தேவதர்மம் ஆகும். இதுவோ மனிதர்களின் தர்மமாகும். அசரீரி உலகில் மனிதர்கள் எவருமில்லை. இது மனிதர்களின் உலகமாகும். மனிதர்களே தமோபிரதானாகி பின்னர் சதோபிரதான் ஆகுகிறார்கள். முன்னர் நீங்கள் சூத்திர குலத்திற்கு உரியவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் பிராமண குலத்தில் இருக்கிறீர்கள். இந்தக் குல வேறுபாடுகள் பாரத மக்களுக்கே உரியது. பிராமண வம்சம், சூரிய வம்சம் என வேறெந்த மதத்திலும் குறிப்பிடப்படுவதில்லை. இவ்வேளையில் அனைவரும் சூத்திர குலத்திற்கு உரியவர்கள். அவர்கள் முற்றிலும் சீரழிந்த நிலையை அடைந்து விட்டார்கள். நீங்கள் முதுமை அடைந்ததும், முழு விருட்சமும் உக்கிப் போய், தமோபிரதான் நிலையை அடைந்தது. எனவே, முழு விருட்சமும் சதோபிரதான் நிலையை அடைவது எவ்வாறு? புதிய சதோபிரதான் விருட்சத்தில் தேவதர்மத்தைச் சார்ந்தவர்களே இருக்கிறார்கள். பின்னர் நீங்கள் சூரிய வம்சத்திலிருந்து சந்திர வம்சத்தினர் ஆகுவீர்கள். நீங்கள் மறுபிறவி எடுப்பீர்கள். பின்னர் நீங்கள் வைசிய வம்சத்தினராகி, இறுதியில் சூத்திர வம்சத்தினர் ஆகுவீர்கள். இவை யாவும் புதிய விடயங்களே. எங்களுக்குக் கற்பிப்பவர் ஞானக் கடல் ஆவார். அவரே தூய்மையாக்குபவரும் அனைவருக்கும் சற்கதி அருள்பவரும் ஆவார். தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு ஞானத்தை வழங்குகிறேன். நீங்கள் தேவர்கள் ஆகுகிறீர்கள். அந்நேரத்தில் இந்த ஞானம் இருக்காது. ஞானம் என்பது அறியாமையில் இருப்பவர்களுக்கே கொடுக்கப்படுகிறது. மனிதர்கள் அனைவருமே அறியாமை இருளில் இருக்கிறார்கள். நீங்கள் ஒளியில் இருக்கிறீர்கள். இவரின் 84 பிறவிகளின் வரலாறு உங்களுக்குத் தெரியும். குழந்தைகளாகிய உங்களிடம் ஞானம் உள்ளது. மனிதர்கள் வினவுகிறார்கள்: கடவுள் ஏன் இந்த உலகைப் படைத்தார்? நாங்கள் அநாதியான மோட்சத்தை அடைய முடியாதா? ஓ! இது ஒரு நிச்சயிக்கப்பட்ட நாடகம் ஆகும். இது ஓர் அநாதியான நாடகம் ஆகும். ஆத்மா தனது சரீரத்தை விட்டு நீங்கி இன்னொன்றை எடுக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதனையிட்டுக் குழப்பமடையவேண்டிய தேவை என்ன? அந்த ஆத்மா தனது அடுத்த பாகத்தை நடிக்கச் சென்றுவிட்டார். அவர் உங்களுக்கு மீண்டும் கிடைப்பாராயின் நீங்கள் அழுவதில் நியாயம் இருக்கிறது, ஆனால் அவர் திரும்பி வரப்போவதில்லை. எனவே அழுவதில் என்ன நன்மை இருக்கிறது? நீங்கள் அனைவரும் பற்றை வென்றவர்கள் ஆகவேண்டும். ஓர் இடுகாட்டின்மீது ஏன் பற்று உள்ளது? இதில் துன்பமே உள்ளது. துன்பத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை. இன்று ஒருவர் குழந்தையாக இருக்கிறார். ஆனால் நாளையே அக்குழந்தை தனது தந்தையை அவதூறு செய்வதற்கு அதிக காலம் எடுக்காது. அவர்கள் தமது தந்தையுடன் சண்டையிடவும் செய்கிறார்கள். இது அநாதைகளின் உலகம் எனக் கூறப்படுகிறது. அவர்களுக்குக் கற்பித்தல்கள் வழங்குவதற்கு எந்தவொரு பிரபுவோ, ஆசிரியரோ கிடையாது. அத்தகையதொரு நிலையில் தந்தை அவர்களைப் பார்க்கும்போது, அவர் வந்து அவர்களைப் பிரபுவிற்கும், அதிபதிக்கும் உரியவர்கள் ஆக்குகிறார். தந்தை மாத்திரமே வந்து அனைவரையும் பிரபுவிற்கும் அதிபதிக்கும் உரியவர்கள் ஆக்குகிறார். பெற்றவர் வந்து அவர்களின் சண்டை அனைத்தையும் முடிக்கின்றார். சத்திய யுகத்தில் சண்டை கிடையாது. முழு உலகிலுமுள்ள சண்டைகளை அவர் முடித்த பின்னர் வெற்றிக்குரல்கள் ஒலிக்கும். இங்கு பெரும்பான்மையானோர் தாய்மார்களே ஆவார்கள். மக்கள் அவர்களைச் சேவகர்களாகக் கருதுகிறார்கள். அவளது மணிக்கட்டில் திருமண பந்தத்திற்குரிய நூலைக் கட்டும்போது, அவர்கள் அவளிடம், உனது கணவனே உனது கண்கண்ட தெய்வம், குரு அனைத்தும் ஆவான் எனக் கூறுகிறார்கள். முதலில் திரு, பின்னர் திருமதி. தந்தை இப்போது வந்து தாய்மாரை முன்னிலைப்படுத்தி உள்ளார். எவரும் உங்களை வெற்றி கொள்ள முடியாது. தந்தை உங்களுக்கு அனைத்துச் சட்டங்களையும் கற்பிக்கின்றார். மோஹ்ஜீத் மன்னனின் (பற்றை வென்றவன்) கதை உள்ளது. அவையெல்லாம் கற்பனைக் கதைகளே ஆகும். சத்தியயுகத்தில் அகால மரணம் கிடையாது. சரியான நேரத்தில் நீங்கள் உங்களுடைய சரீரத்தை நீக்கிப் பின்னர் இன்னொன்றைப் பெறுகிறீர்கள். உங்களுக்கு ஒரு காட்சி கிடைக்கிறது: இந்தச் சரீரம் இப்போது பழையதாகி விட்டது, புதியதொன்றை ஏற்க வேண்டும். நான் சென்று, சிறிய குழந்தையாக வேண்டும். அவர்கள் சந்தோஷத்துடன் சரீரத்தை விட்டு நீங்குவார்கள். இங்கு, எவ்வாறாயினும், அவர்கள் எவ்வளவுதான் வயதானவர்களாக இருந்தாலும், எவ்வளவுதான் நோயுற்றிருந்தாலும், தமது சரீரத்தை விட்டால் நல்லதென்று அவர்கள் புரிந்து கொண்டிருந்தாலும், பதிலாக, மரணிக்கும் வேளையில் அவர்கள் நிச்சயமாக அழுகிறார்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் இப்போது அழுகைக்குரிய எந்தவொரு சுவடும் அற்ற இடத்திற்குச் செல்கிறீர்கள். அங்கு சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. நீங்கள் அத்தகைய எல்லையற்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஆஹா, நாம் உலக அதிபதிகள் ஆகுகின்றோம்! பாரதம் முழு உலகினதும் அதிபதியாக இருந்தது. இப்போது, அது துண்டுகளாகி விட்டது. நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவதேவியர்களாக இருந்தீர்கள். அதன்பின்னர் பூஜிப்பவர்கள் ஆகுகிறீர்கள். கடவுள் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவராகவும் பின்னர் பூஜிப்பவராகவும் ஆகுவதில்லை. அவர் பூஜிப்பவர் ஆகினால், உங்களைப் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குவது யார்? நாடகத்தில் தந்தையின் பாகம் முற்றாகவே வேறுபட்டது. ஒரேயொரு ஞானக்கடலே இருக்கிறார். அந்த ஒரேயொருவரின் புகழ் மட்டுமே உள்ளது. ஞானக்கடல் இருக்கிறார். ஆனால் சற்கதி கிடைக்கும் வகையில் அவர் எப்போது வந்து ஞானத்தைக் கொடுக்க முடியும்;? அவர் நிச்சயமாக இங்கேயே வரவேண்டும். அனைத்திற்கும் முதலில், எமக்குக் கற்பிப்பவர் யார் என்பதை உங்களுடைய புத்தியில் பதியச் செய்யுங்கள்! திரிமூர்த்தி, உலகச்சக்கரம், விருட்சம் என்பவையே பிரதானமான படங்களாகும். விருட்சத்தைப் பார்க்கையில், தாம் எந்தத் தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தம்மால் சத்திய யுகத்திற்கு வரமுடியாது என்பதையும் அவர்கள் விரைவாகப் புரிந்து கொள்வார்கள். இந்தச் சக்கரம் மிகப் பெரியதாக இருக்கவேண்டும். எழுத்தும் பூரணமானதாக இருக்க வேண்டும். பிரம்மாவினூடாக சிவபாபா, தேவ தர்மத்தை, அதாவது, புதிய உலகை ஸ்தாபிக்கிறார். பழைய உலகம் சங்கரரினூடாக அழிக்கப்படவுள்ளது. அதன்பின்னர், அவர் விஷ்ணுவினூடாகப் புதிய உலகைப் பராமரிக்கிறார். இது நிரூபிக்கப்பட வேண்டும். பிரம்மா விஷ்ணு ஆகிறார். விஷ்ணு பிரம்மா ஆகிறார். இருவருக்கும் இடையே தொடர்பு உள்ளது. பிரம்மாவும் சரஸ்வதியும் பின்னர் இலக்ஷ்மியும் நாராயணனும் ஆகுகிறார்கள். உயர்கின்ற ஸ்திதி ஒரு பிறவியில் ஏற்படுகிறது. இறங்குகின்ற ஸ்திதி 84 பிறவிகளில் இடம்பெறுகிறது. இப்போது, தந்தை கூறுகிறார்: சமயநூல்கள் போன்றவை சரியானவையா அல்லது நான் சரியா? நானே உங்களுக்கு சத்திய நாராயணனின் உண்மைக் கதையைக் கூறுபவர். நீங்கள் இப்போது உண்மையான தந்தையினூடாக சாதாரண மனிதனில் இருந்து நாராயணன் ஆகுகிறீர்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறீர்கள். அனைத்திற்கும் முதலில், ஒரு மனிதன் ஒருபோதும் தந்தையும், ஆசிரியரும், குருவும் என அழைக்கப்படுவதில்லை என்ற பிரதான விடயம் உள்ளது. நீங்கள் எப்போதாவது தந்தையை குரு என்றோ அல்லது ஆசிரியர் என்றோ அழைப்பீர்களா? இங்கு, நீங்கள் சிவபாபாவிடம் பிறப்பெடுக்கிறீர்கள். பின்னர், சிவபாபா உங்களுக்குக் கற்பிக்கிறார். அதன்பின்னர், அவர் உங்களைத் தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்கிறார். தந்தை, ஆசிரியர், குரு என அழைக்கக்கூடிய எந்தவொரு மனிதனும் இல்லை. அவர் ஒருவரே தந்தை ஆவார். அவர் பரமதந்தை என அழைக்கப்படுகிறார். பௌதீகத் தந்தை ஒருபோதும் பரமதந்தை என அழைக்கப்படுவதில்லை. உண்மையில், அவரையே அனைவரும் நினைவு செய்கிறார்கள். அவர் நிச்சயமாகவே தந்தை ஆவார். அனைவரும் அவரைத் துன்பத்திலேயே நினைவு செய்கிறார்கள். எவரும் அவரை சந்தோஷத்தில் நினைவு செய்வதில்லை. எனவே, அந்தத் தந்தை நிச்சயமாக வந்து உங்களை அதிபதிகள் ஆக்குகிறார். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்ட இச்சரீரங்களைப் பார்க்கையில், தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள். சரீரதாரியிடம் எவ்வித பற்றும் கொண்டிருக்காதீர்கள். பாவச் செயல்களைச் செய்யாதீர்கள்.2. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட இந்நாடகத்தில், ஒவ்வொரு ஆத்மாவும் ஓர் அநாதியான பாகத்தைக் கொண்டிருக்கிறார். ஆத்மா ஒரு சரீரத்தை நீக்கி, இன்னொன்றை எடுக்கிறார். இதனாலேயே, நீங்கள் சரீரத்தை நீக்குவதைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. நீங்கள் பற்றை வெற்றிகொள்ள வேண்டும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் முழுமையான தியாகத்தைச் செய்வதற்கான திடசங்கற்பத்தைக் கொண்டிருந்து, உங்களின் மாற்றத்திற்குரிய விழாவைக் கொண்டாடுவீர்களாக.நீங்கள் மரணிக்க வேண்டியிருந்தாலும், உங்களின் தர்மத்தைக் கைவிடக்கூடாது என்றொரு கூற்று உள்ளது. எனவே, என்ன சூழ்நிலைகள் வந்தாலும், மகாவீரரின் வடிவத்தில் மாயை உங்களின் முன்னால் வந்தாலும் நீங்கள் உங்களின் கொள்கைகளைக் கைவிடக்கூடாது. உங்களின் மனதில் இருந்து விட்டுவிட்ட பயனற்ற விடயங்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். சதா மேன்மையான நடிகர் ஆகுங்கள். உங்களின் மேன்மையான சுயமரியாதை, மேன்மையான விழிப்புணர்வு, மேன்மையான வாழ்க்கை என்ற சக்திவாய்ந்த ரூபத்தால் தொடர்ந்து உங்களின் மகத்தான செயலைச் செய்யுங்கள். பலவீனமான செயல்கள் அனைத்தையும் முடித்துவிடுங்கள். இத்தகைய முழுமையான தியாகம் செய்வதற்கான திடசங்கற்பத்தை நீங்கள் கொண்டிருக்கும்போது, உங்களின் மாற்றத்தின் விழா இடம்பெறும். இப்போது, ஒன்றுகூடி இந்த விழாவிற்கு ஒரு திகதியை நிச்சயம் செய்யுங்கள்.
சுலோகம்:
ஒரு உண்மையான வைரம் ஆகி, உங்களின் அதிர்வலைகளின் ஜொலிப்பை உலகில் பரப்புங்கள்.ஏகாந்தத்தில் அன்பு வைத்து, ஒற்றுமையையும் ஒருமுகப்படுத்தலையும் கிரகியுங்கள்.
சாதாரணமான சேவை செய்வது பெரிய விஷயம் இல்லை. ஆனால், பாழாகிப் போன ஒன்றைச் சீராக்கி, வேற்றுமையில் ஒற்றுமையை ஏற்படுத்துவது பெரிய விடயம் ஆகும். பாப்தாதா எப்போதும் கூறுகிறார்: முதலில், ஒரே வழிகாட்டல், ஒரே பலம், ஒரே நம்பிக்கையில் ஒற்றுமை இருக்க வேண்டும். அதன்பின்னர், சகபாடிகளுக்கு இடையேயும் சேவையிலும் சூழலிலும் ஒற்றுமை இருக்க வேண்டும்.