08.09.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஒரு புண்ணியாத்மா ஆகுவதற்கு, இயன்றவரை நற்செயல்களைச் செய்யுங்கள், சகலகலா வல்லவர் ஆகுங்கள், தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள்.

கேள்வி:
எம்முயற்சியைச் செய்வதன் மூலம் குழந்தைகளாகிய நீங்கள் பல்கோடீஸ்வரர்கள் ஆகுகின்றீர்கள்?

பதில்:
குற்றமுள்ள கண்களைக் குற்றமற்றது ஆக்குவதே மாபெரும் முயற்சியாகும். கண்களே உங்களைப் பெருமளவில் ஏமாற்றுகின்றன. தந்தை உங்களின் கண்களைக் குற்றமற்றது ஆக்குவதற்கான வழிமுறையைக் காண்பித்துள்ளார்: குழந்தைகளே, உங்கள் பார்வையை ஆத்ம உணர்வு உள்ளதாக ஆக்குங்கள்! சரீரங்களைப் பார்க்காதீர்கள். ‘நான் ஓர் ஆத்மா’ என்ற பயிற்சியை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். இம்முயற்சியைச் செய்வதன் மூலம் நீங்கள் பல பிறவிகளுக்கு பல்கோடீஸ்வரர்கள் ஆகுவீர்கள்.

பாடல்:
பொறுமையாக இரு, ஓ மனமே! உன் சந்தோஷ நாட்கள் வரப்போகின்றன…

ஓம் சாந்தி.
இவ்வாறு கூறியவர் யார்? சிவபாபாவே இச்சரீரத்தின் மூலமாக இதைக் கூறினார். சரீரமின்றி ஓர் ஆத்மாவால் பேசமுடியாது. தந்தையும் ஒரு சரீரத்தில் பிரவேசித்து ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது பௌதீகத் தொடர்புகள் எதனையும் கொண்டிருப்பதில்லை. இந்தத் தொடர்பு ஆன்மீகமானது. ஆத்மாக்களாகிய நீங்கள் பரமபிதா, பரமாத்மாவிடம் இருந்து இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். சரீரதாரியான நீங்களே கற்கின்றீர்கள். தந்தைக்கென ஒரு சரீரம் கிடையாது, எனவே அவர் இச்சரீரத்தின் ஆதாரத்தைக் குறுகிய காலத்திற்கு எடுத்துள்ளார். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையுடன் இங்கு அமர்ந்திருங்கள். எல்லையற்ற தந்தை ஆத்மாக்களாகிய எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவரைத் தவிர வேறு எவராலுமே உங்களுக்கு இவ்வாறு விளங்கப்படுத்த முடியாது. எவ்வாறு ஆத்மாக்களே ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்த முடியும்? ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்த பரமாத்மா தேவைப்படுகின்றார். எவரும் அவரை அறியமாட்டார்கள். அவர்கள் திரிமூர்த்தியில் இருந்து சிவனை அகற்றி விட்டனர். பிரம்மா மூலம் ஸ்தாபனையை மேற்கொள்பவர் யார்? பிரம்மா புதிய உலகைப் படைப்பவர் அல்ல. ஒரேயொரு சிவபாபா மாத்திரமே அனைவரதும் எல்லையற்ற தந்தையும் படைப்பவரும் ஆவார். இந்நேரத்தில் மாத்திரமே பிரம்மா உங்களின் தந்தை ஆகின்றார், அவர் வேறெந்த நேரத்திலும் இவ்வாறு ஆகுவதில்லை. அங்கு (சத்திய யுகத்தில்) உங்களுக்கு லௌகீகத் தந்தை மாத்திரமே உள்ளார். கலியுகத்தில் உங்களது லௌகீகத் தந்தையும், இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட தந்தையும் உள்ளனர். இப்பொழுது சங்கமயுகத்தில், மூன்று தந்தையர் உள்ளனர்: பௌதீகத் தந்தை, சூட்சுமமான தந்தை, அப்பாற்பட்ட தந்தை. தந்தை கூறுகின்றார்: சந்தோஷ தாமத்தில் எவருமே என்னை நினைவு செய்வதில்லை. தந்தை அவர்களை உலக அதிபதிகளாக ஆக்கிவிட்டார். எனவே, அவர்கள் ஏன் அழைக்க வேண்டும்? அங்கு வேறெந்த நாடுகளும் இருக்க மாட்டாது. அங்கு சூரிய வம்சம் மாத்திரமே இருக்கும், சந்திர வம்சம் பின்னரே வருகின்றது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, பொறுமையாக இருங்கள்! இன்னமும் ஒரு சில நாட்களே எஞ்சியுள்ளன. மிக நன்றாக முயற்சி செய்யுங்கள். நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கா விட்டால் உங்கள் அந்தஸ்து அழிக்கப்படும். இது மாபெரும் அதிர்ஷ்டலாபச் சீட்டாகும். ஒரு சட்ட நிபுணராக அல்லது ஒரு சத்திர சிகிச்சையாளராக ஆகுவதும் அதிர்ஷ்டலாபச் சீட்டேயாகும். அவர்கள் பெருமளவு பணம் சம்பாதிக்கின்றார்கள். அவர்கள் பலருக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றனர். நன்றாகக் கற்று, பிறருக்கும் கற்பிப்பவர்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருகின்றனர். தந்தையை நினைவு செய்வதால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் மீண்டும் மீண்டும் தந்தையை மறந்து விடுகின்றீர்கள். மாயை நீங்கள் நினைவு செய்வதை மறக்கச் செய்கின்றாள். எனினும் அவள் உங்களை இந்த ஞானத்தை மறக்கச் செய்வதில்லை. தந்தை கூறுகின்றார்: முன்னேறிச் செல்வதற்கு, நீங்கள் நாள் முழுவதும் ஏதாவது பாவச் செயல்கள் செய்தீர்களா எனப் பார்ப்பதற்கு உங்கள் அட்டவணையை வைத்திருங்கள். இல்லாவிடில், நூறு மடங்கு பாவம் சேர்க்கப்படும். இந்த யாகத்தைப் பராமரிப்பவர்களும் இங்கே உள்ளனர். எனவே, அவர்களின் ஆலோசனையுடனேயே அனைத்தையும் செய்யுங்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: நீங்கள் எதை எங்களுக்கு உண்ணக் கொடுத்தாலும், எங்கே எங்களை அமரவைத்தாலும் அவ்வாறே செய்வோம்! எனவே, ஏனைய ஆசைகள் அனைத்தையும் துறந்து விடுங்கள். இல்லாவிடில், பாவங்கள் தொடர்ந்தும் சேர்க்கப்படும். ஆத்மாக்களாகிய நீங்கள் எவ்வாறு தூய்மையாக முடியும்? இந்த யாகத்தில் எப்பாவச் செயல்களையும் செய்யாதீர்கள். நீங்கள் இங்கே புண்ணியாத்மாக்கள் ஆகுகின்றீர்கள். எதையாவது திருடுவது ஒரு பாவமாகும். மாயை தலையிடும்போது, உங்களால் யோகத்தில் இருக்கவோ, இந்த ஞானத்தைக் கிரகிக்கவோ முடியாதுள்ளது. உங்கள் இதயத்தைக் கேளுங்கள்: நான் குருடருக்கு ஒரு ஊன்றுகோலாக ஆகாவிட்டால், நான் எத்தகையவனாக இருப்பேன்? நானும்கூட ஒரு குருடன் என்றே அழைக்கப்படுவேன். இந்த நேரத்திலேயே திரிதராஷ்டிரனின் (கௌரவர்களின் குருட்டு அரசன்) குழந்தைகள் இதற்கு நினைவு கூரப்படுகின்றனர். அம்மக்கள் இராவண இராச்சியத்தில் உள்ளனர், நீங்களோ சங்கமயுகத்தில் உள்ளீர்கள். நீங்கள் இராம இராச்சியத்தில் சந்தோஷத்தை அடையப் போகின்றீர்கள். எவ்வாறு பரமபிதா, பரமாத்மா சந்தோஷத்தைக் கொடுக்கின்றார் என்பது எவரது புத்தியிலும் புகுவதில்லை. நீங்கள் எவ்வளவுதான் நன்றாக விளங்கப்படுத்தினாலும்கூட, அது எவரது புத்தியிலும் புகுவதில்லை. அவர்கள் தங்களை ஆத்மாக்களாகக் கருதினால் மாத்திரமே பரமாத்மாவால் கொடுக்கப்பட்ட இந்த ஞானத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஆத்மாக்கள் தாங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப ஏதோவொன்றாக ஆகுகின்றார்கள். நினைவு கூரப்படுகின்றது: நீங்கள் உங்களின் இறுதிக் கணங்களில் எதை நினைவு செய்கின்றீர்களோ…. தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்பவர்கள், என்னை அடைவார்கள். இல்லாவிடில், அவர்கள் பெருமளவு தண்டனையை அனுபவம் செய்துவிட்டே என்னிடம் வருவார்கள். அவர்கள் சத்தியயுகத்திற்கு வராமல், திரேதாயுகத்தின் இறுதியிலேயே வருவார்கள். சத்திய, திரேதா யுகங்கள் பிரம்மாவின் பகல் எனப்படுகின்றன. இங்கே பிரம்மா தனியாக இல்லை, பிரம்மாவிற்குப் பல குழந்தைகள் உள்ளனர். பிராமணர்களின் பகலும், பின்னர் பிராமணர்களின் இரவும் உள்ளது. தந்தை இப்பொழுது இரவைப் பகலாக்க வந்துள்ளார். பிராமணர்களாகிய நீங்கள் பகலுக்குள் செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்கின்றீர்கள். தேவ தர்மம் நிச்சயமாக ஸ்தாபனையாகப் போகின்றது எனத் தந்தை அதிகளவில் விளங்கப்படுத்துகின்றார். கலியுகத்தின் விநாசம் நிச்சயமாக இடம்பெறப் போகின்றது. தங்களுக்குள் சந்தேகங்கள் எதனையாவது கொண்டவர்கள் ஓடிவிடுவார்கள். முதலில் அவர்கள் நம்பிக்கை வைக்கின்றனர், பின்னர் சந்தேகத்தை வளர்த்துக் கொள்கின்றனர். அவர்கள் இங்கே மரணித்து, மீண்டும் பழைய உலகில் பிறப்பு எடுக்கின்றனர், அவர்கள் காணாமல் போய்விடுகின்றனர். தந்தையின் ஸ்ரீமத் பின்பற்றப்பட வேண்டும். பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு மிக நல்ல கருத்துக்களைக் கொடுக்கின்றார். அனைத்திற்கும் முதலில், ‘நீங்கள் ஓர் ஆத்மா, சரீரமல்ல’ என்று கூறுங்கள். இல்லாவிடில், அதிர்ஷ்டலாபச் சீட்டு முழுவதும் இழக்கப்பட்டுவிடும். அங்கு அரசர்கள், பிரஜைகள் அனைவருமே சந்தோஷமாக இருந்தாலும், நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவதற்கு முயற்சி செய்தாக வேண்டும். நீங்கள் எப்படியோ சந்தோஷ தாமத்திற்குச் செல்வீர்கள்தானே என எண்ணாதீர்கள். இல்லை, நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தையும் கோரவேண்டும். நீங்கள் அரசர்கள் ஆகுவதற்காகவே இங்கு வந்துள்ளீர்கள். எனவே, அத்தகைய விவேகமானவர்களும் தேவைப்படுகின்றனர். நீங்கள் தந்தையின் சேவையைச் செய்ய வேண்டும். உங்களால் ஆன்மீகச் சேவை செய்யமுடியா விட்டால், பௌதீகச் சேவை உள்ளது. சிலவேளைகளில், ஆண்கள்கூட தங்கள் மத்தியில் வகுப்புக்களை நடாத்துகின்றனர். பின்னர் ஒரு சகோதரி அவ்வப்போது அங்கு சென்று வகுப்புக்களை நடாத்துகின்றார். விருட்சம் படிப்படியாகத் தொடர்ந்தும் வளர்கின்றது. பலர் நிலையங்களுக்குச் செல்கின்றனர். இருந்த போதிலும், அவர்கள் முன்னேறிச் சென்று, பின்னர் காணாமல் போய்விடுகின்றனர். விகாரத்தில் வீழ்ந்த பின்னர், அவர்கள் தங்களின் நிலையத்திற்குச் செல்ல மிகவும் வெட்கப்படுகின்றனர். அவர்கள் பின்தங்கி விடுகின்றனர். அவர்கள் நோய்வாய்ப்பட்டிருப்பது போன்று இருக்கின்றனர். தந்தை தொடர்ந்தும் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். உங்களுக்காக நாளாந்த அட்டவணை ஒன்றை வைத்திருங்கள். உங்களின் இலாப, நட்டக் கணக்கு உள்ளது. ஓர் ஆத்மா தூய்மை ஆகின்றார் என்றால், அவர் 21 பிறவிகளுக்கான இலாபத்தைச் சேகரிக்கின்றார் என்றே அர்த்தமாகும். தந்தையின் நினைவின் மூலம் மாத்திரமே நீங்கள் அதைச் சேர்த்து, உங்கள் பாவங்களை அழித்துக் கொள்ள முடியும். அவர்கள் கூறுகின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே! பாபா! வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! வந்து, எங்களை உலகின் அதிபதிகள் ஆக்குங்கள் என அவர்கள் கூறுவதில்லை! இல்லை! குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதனை அறிவீர்கள். முக்தி, ஜீவன் முக்தி ஆகிய இரண்டும் தூய உலகங்களாகும். நீங்கள் முக்தி, ஜீவன் முக்தி என்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். நன்றாகக் கற்காதவர்கள் இறுதியிலேயே வருவார்கள். நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் தமக்கேயுரிய நேரத்தில் வருவார்கள். அனைத்தும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகின்றது. உங்களால் அனைத்தையும் உடனடியாகவே புரிந்து கொள்ள முடியாது. இங்கு, தந்தையை நினைவு செய்வதற்கு உங்களுக்கு அதிக நேரம் உள்ளது. யார் வந்தாலும் கூறுங்கள்: முதலில் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். சகல ஆத்மாக்களினதும் தந்தையாக உள்ள தந்தையே இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகவேண்டும். ஆத்மாவே இந்த ஞானத்தைப் பெறுகின்றார். பரமாத்மாவான தந்தையை நினைவு செய்வதன் மூலம் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பின்னர், அவர் உங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தைக் கொடுக்கின்றார். படைப்பவரை நினைவு செய்வதன் மூலம் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அதன் பின்னர், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இந்த ஞானத்தைப் புரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் பூகோளத்தை ஆட்சி புரிபவர்கள் ஆகுகின்றீர்கள். அவ்வளவே! நீங்கள் இந்த ஞானத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். உங்களிடம் படங்களும் உள்ளன. நீங்கள் நாள் முழுவதும் இந்த ஞானத்தை உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் மாணவர்கள். பல இல்லறத்தவர்களும் மாணவர்களாக உள்ளனர். நீங்கள் வீட்டில் வாழும்போதே தாமரை மலர் போன்று ஆகவேண்டும். சகோதர, சகோதரிகள் ஒருபோதும் ஒருவர் மீதொருவர் குற்றப் பார்வையைக் கொண்டிருக்கக் கூடாது. நீங்கள் பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்கள். குற்றமுள்ள கண்களைக் குற்றமற்றது ஆக்குவதற்கு, நீங்கள் பெருமளவு முயற்சி செய்யவேண்டும். நீங்கள் அரைக் கல்பமாக அப்பழக்கத்தைக் கொண்டிருந்தீர்கள். எனவே அதை நீக்குவதற்கு நீங்கள் பெருமளவு முயற்சி செய்யவேண்டும். அனைவரும் எழுதுகின்றனர்: குற்றமுள்ள கண்களைப் பற்றி பாபா பேசுகின்ற வார்த்தைகள் மிகவும் கடுமையானவை. எங்கள் புத்திகள் மீண்டும் மீண்டும் ஈர்க்கப்பட்டு, பல எண்ணங்கள் எழுகின்றன. எங்களின் கண்களை நாங்கள் என்ன செய்வது? சூர்தாஸின் உதாரணம் உள்ளது. அது அவர்கள் உருவாக்கிய ஒரு கதையே ஆகும். தனது கண்களே தன்னை ஏமாற்றுகின்றன என்பதை அவர் உணர்ந்து கொண்டதால், அக்கண்களை அவர் நீக்கிவிட்டார். அது அவ்வாறில்லை. அனைவருக்கும் கண்கள் இருக்கின்றன. ஆனால் குற்றமுள்ள கண்கள், குற்றம் அற்றது ஆக்கப்பட வேண்டும் என்பதையே அது குறிக்கின்றது. வீட்டில் வாழும்போது இது சாத்தியமற்றது என அம்மக்கள் நினைக்கின்றனர். தந்தை கூறுகின்றார்: அது சாத்தியமே. பெருமளவு வருமானம் சம்பாதிக்கப்பட வேண்டும். நீங்கள் பிறவி பிறவியாக பல்கோடீஸ்வரர்கள் ஆகுகின்றீர்கள். அங்கே நீங்கள் எதையும் எண்ணிப் பார்ப்பதில்லை. இந்நேரத்தில், பாபா உங்களுக்கு “பதம்பதி, பத்மாவதி” (திரு, திருமதி பல்கோடீஸ்வரர்) என்ற பட்டத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் பல்கோடீஸ்வரர் ஆகுகின்றீர்கள். அங்கு எண்ணிப் பார்த்தல் கிடையாது. ரூபாய்கள், நாணயங்கள் போன்றவை உள்ளபோதே நீங்கள் எண்ணிப் பார்க்கின்றீர்கள். அங்கு, அவர்கள் தங்க, வெள்ளி நாணயங்களை மாத்திரமே பயன்படுத்துகின்றனர். முன்னர், இராமர்-சீதையின் இராச்சியத்திற்குச் சொந்தமான தங்க, வெள்ளி நாணயங்கள் இருந்தன. அங்கு, சத்தியயுக நாணயங்கள் பற்றிய குறிப்பேதும் கிடையாது. சந்திரவம்ச நாணயங்களை மாத்திரமே நாங்கள் பார்த்திருக்கின்றோம். முதலில், தங்க, வெள்ளி நாணயங்கள் மாத்திரமே இருந்தன, செப்பு நாணயங்கள் பின்னரே தோன்றின. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒரு தடவை தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருகின்றீர்கள். சத்திய யுகத்தில் தொடரவேண்டிய சம்பிரதாயங்களும், நடைமுறைகளும் தொடர்ந்து நிகழும். இப்பொழுது நீங்கள் உங்களுக்காக முயற்சி செய்ய வேண்டும். சத்திய யுகத்தில் வெகு சிலரே இருப்பார்கள். அவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பார்கள். அங்கே அகால மரணம் கிடையாது. நீங்கள் மரணத்தை வெல்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். அங்கே மரணம் பற்றிய குறிப்பே கிடையாது. அது அமரத்துவ பூமி எனப்படுகின்றது. இது மரண பூமி எனப்படுகின்றது. அமரத்துவ பூமியில் விரக்திக் கூக்குரல்கள் இருக்க மாட்டாது. அங்கு வயதானவர்கள் மரணிக்கும்போது, அவர்கள் சிறு குழந்தையாகப் போகின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்வதால், சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றார்கள். இங்கு, ஒருவர் மரணித்ததும், அவர்கள் அழ ஆரம்பிக்கின்றார்கள். நீங்கள் அத்தகைய நல்ல ஞானத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டியிருப்பதால், இந்த ஞானத்தை நீங்கள் மிக நன்றாகக் கிரகிக்க வேண்டும். ஒருவர் தான் ஆன்மீக சேவை செய்ய விரும்புவதாக பாபாவிடம் கூறினால், பாபா உடனடியாகவே கூறுகின்றார்: ஆம், நீங்கள் அதைச் செய்யலாம். பாபா எவரையும் தடுப்பதில்லை. எவ்வாறாயினும், அங்கு எவ்வித இந்த ஞானமும் இல்லையெனில், அறியாமையே உள்ளது. பின்னர், அறியாமை காரணமாக பெருமளவு அவச்சேவை இடம்பெறுகின்றது. நீங்கள் மிக நன்றாகச் சேவை செய்யவேண்டும். அப்பொழுதே நீங்கள் அதிர்ஷ்டலாபச் சீட்டை வெற்றி கொள்வீர்கள். அதிர்ஷ்ட லாபச் சீட்டு மிகவும் பெரியது. இது இறை அதிர்ஷ்டலாபச் சீட்டாகும். நீங்கள் அரசர்களாகவும், அரசிகளாகவும் ஆகும்போது, உங்களின் பேரக் குழந்தைகள் தொடர்ந்தும் உங்களால் போஷாக்கு ஊட்டப்படுவார்கள். இங்கு, அனைவரும் தங்களின் சொந்தச் செயல்களுக்கான பலனைப் பெறுகின்றனர். சிலர் அதிகமாகத் தானம் செய்து, அதன் மூலம் அரசர்கள் ஆகின்றனர். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். அனைத்தையும் மிக நன்றாகப் புரிந்துகொண்டு, அவற்றைக் கிரகியுங்கள். நீங்கள் சேவையும் செய்ய வேண்டும். நூறாயிரக்கணக்கான மக்களுக்குச் சேவை செய்யப்படுகின்றது. சில இடங்களில், மிக நல்ல பக்தி உணர்வுகளைக் கொண்ட மக்களும் உள்ளனர். அவர்கள் அதிகளவு பக்தி செய்துள்ளபோது, இந்த ஞானத்தையும் களிப்புடன் அனுபவிக்கின்றனர். அவர்களின் முகங்களிலிருந்து உங்களால் அனைத்தையும் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் வெறுமனே அனைத்தையும் செவிமடுப்பதால் சந்தோஷம் அடைகின்றனர். புரிந்து கொள்ளாதவர்கள் தொடர்ந்தும் அங்கும் இங்கும் பார்க்கின்றார்கள் அல்லது தங்களின் கண்களை மூடியவாறு அமர்ந்திருக்கின்றார்கள். பாபா அனைத்தையும் பார்க்கின்றார். நீங்கள் மற்றவர்களுக்குக் கற்பிக்கா விட்டால், நீங்கள் எதையுமே புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தம். சிலர் ஒரு காதால் கேட்டு மற்றைய காதால் விட்டுவிடுகின்றனர். இதுவே எல்லையற்ற தந்தையிடம் இருந்து உங்களின் எல்லையற்ற ஆஸ்தியைக் கோருவதற்கான நேரமாகும். நீங்கள் எந்தளவிற்கு அவரிடமிருந்து இப்பொழுது அதைக் கோருகின்றீர்களோ, அந்தளவிற்கு பிறவி பிறவியாக, கல்பம் கல்பமாக அதைப் பெறுவீர்கள். இல்லாவிடில், இறுதியில் அதிகம் வருந்த நேரிடும். அந்நேரத்தில் அனைவரும் காட்சிகளைப் பெறுவார்கள். நீங்கள் முழுமையாகக் கற்காததால், உங்களால் ஓர் அந்தஸ்தைக் கோர முடியாமல் இருக்கும். நீங்கள் பின்னர் என்னவாக ஆகுவீர்கள்? பணிப்பெண்களாகவோ, வேலைக்காரர்களாகவோ, அல்லது சாதாரண பிரஜைகளாகவோ ஆகும். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. நீங்கள் செய்வதற்கேற்ற பலனையே பெறுவீர்கள். நீங்கள் மாத்திரமே புதிய உலகிற்காக முயற்சி செய்கின்றீர்கள். மக்கள் இவ்வுலகிற்காகத் தானங்கள் கொடுத்து, புண்ணியம் செய்கின்றார்கள். இது ஒரு பொதுவான விடயம். அவர்கள் நல்லதைச் செய்தால், அதற்கான பலனை அவர்களின் அடுத்த பிறவியில் பெறுவார்கள். உங்களுடையது 21 பிறவிகளுக்கானது. இயன்றவரை நற்செயல்களைச் செய்யுங்கள். சகலகலா வல்லவர்களாக ஆகுங்கள். முதலில், நீங்கள் ஞானி ஆத்மாவாகவும், யோகி ஆத்மாவாகவும் ஆகவேண்டும். நீங்கள் ஒரு ஞானியாக இருக்க வேண்டும். ஏனெனில், மகாராத்திகளே சொற்பொழிவுகள் ஆற்றுவதற்காக அழைக்கப்படுகின்றனர். எல்லாவகையான சேவைகளையும் செய்பவர்கள், நிச்சயமாக புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்கின்றனர். வெவ்வேறு வகையான பிரஜைகள் உள்ளனர். நீங்கள் யோகத்தில் இருந்தவாறு செய்யும் வேலைகளுக்குச் சிறந்த புள்ளிகளைப் பெறுகின்றீர்கள். உங்கள் இதயத்தைக் கேளுங்கள்: நான் சேவை செய்கின்றேனா? அல்லது, நான் வெறுமனே உண்டு, உறங்குகின்றேனா? இங்கு, இது ஒரு கல்வியே அன்றி, வேறு எதுவுமல்ல. நீங்கள் சாதாரண மனிதரிலிருந்து தேவர்களாக, அதாவது ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக ஆகுகின்றீர்கள். இது அமரத்துவக் கதையும், மூன்றாவது கண்ணின் கதையும் ஆகும். மனிதர்கள் இப்பொழுது சென்று, செவிமடுக்கின்ற கதைகள் யாவும் பொய்யானவை. வேறு எவராலுமன்றி, தந்தையால் மாத்திரமே உங்களுக்கு மூன்றாவது கண்ணைக் கொடுக்க முடியும். நீங்கள் இப்பொழுது மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ளீர்கள். அதன் மூலம் நீங்கள் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறிந்து கொள்கின்றீர்கள். குமார்களும், குமாரிகளும் இக்கல்வியில் முன்னேறிச் செல்ல வேண்டும். உங்களிடம் படங்களும் உள்ளன. கீதையின் கடவுள் யாரென நீங்கள் எவரையும் கேட்கலாம். இதுவே பிரதான விடயம். கடவுள் ஒருவரே இருக்கின்றார். அவரிடம் இருந்தே நீங்கள் முக்திதாமம் என்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நாங்கள் அவ்விடத்துவாசிகள் ஆவோம். எங்கள் பாகங்களை நடிப்பதற்காகவே நாங்கள் இங்கு வந்தோம். இப்பொழுது நாங்கள் எவ்வாறு தூய்மையாக முடியும்? தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர். குழந்தைகளாகிய நீங்கள் முன்னேறிச் செல்லும்போது, உங்கள் ஸ்திதியும் மிக நல்லதாகும். தந்தை தொடர்ந்தும் பல்வேறு வழிகளிலும் விளங்கப்படுத்துகின்றார். முதலில், தந்தையை நினைவு செய்யுங்கள், உங்களின் பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். உங்கள் இதயத்தைக் கேளுங்கள்: நான் எந்தளவிற்குத் தந்தையை நினைவு செய்கின்றேன்? அட்டவணை வைத்திருப்பது நல்லது. முன்னேற்றத்தை ஏற்படுத்துங்கள்! உங்கள் மீது கருணை கொண்டிருந்து, உங்கள் நடத்தையைச் சோதித்துப் பாருங்கள். நாங்கள் தொடர்ந்தும் தவறுகள் செய்தால், பதிவேடு பாழாகிவிடும். இதில், உங்களின் நடத்தை மிகவும் தெய்வீகமானதாக இருக்க வேண்டும். நினைவு கூரப்படுகின்றது: நீங்கள் எங்களுக்கு உண்ணக் கொடுப்பதை மாத்திரமே உண்போம். நீங்கள் எங்களை அமரவைக்கும் இடத்தில் மாத்திரமே அமர்வோம். நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் வழிகாட்டல்களை மாத்திரமே பின்பற்றுவோம். வழிகாட்டல்கள் ஒரு சரீரத்தின் மூலமாகவே கொடுக்கப்படுகின்றன. “சுவர்க்கத்திற்கான வாயில்”. இவ்வார்த்தைகள் மிக நல்லவை. இதுவே சுவர்க்கத்திற்கான வாயிலாகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஒரு புண்ணியாத்மா ஆகுவதற்கு, ஆசைகள் அனைத்தையும் விடுத்து, உங்களுக்குள் நீங்கள் உறுதியாக்கிக் கொள்ளுங்கள்: பாபா, நீங்கள் எதை எங்களுக்கு உண்ணக் கொடுத்தாலும், எங்கே எங்களை அமரச் செய்தாலும் அதையே செய்வோம். பாவச் செயல்கள் எதனையும் செய்யாதீர்கள்.

2. கடவுளின் அதிர்ஷ்டலாபச் சீட்டை வெல்வதற்கு, ஆன்மீகச் சேவை செய்வதில் மும்முரமாக இருங்கள். இந்த ஞானத்தைக் கிரகித்து, மற்றவர்களையும் அவ்வாறு செய்யத் தூண்டுங்கள். சிறந்த புள்ளிகளைப் பெறுவதற்கு, ஒவ்வொரு செயலையும் செய்யும்போதும் நினைவில் நிலைத்திருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சதா அன்பானவர்கள் ஆகி, மாயையையும் சடப்பொருளையும் உங்களின் பணியாட்கள் ஆக்குவீர்களாக.

சதா அன்பானவர்களாக இருக்கும் குழந்தைகள், அன்பிலே திளைத்திருப்பதன் மூலம் சதா சிரமப்படுவதில் இருந்தும் கஷ்டங்களில் இருந்தும் பாதுகாப்பாக இருப்பார்கள். சடப்பொருளும் மாயையும் அவர்களின் முன்னால் வேலையாட்கள் ஆகிவிடும். இதன் அர்த்தம், சதா அன்பாக இருக்கும் ஆத்மாக்கள் அதிபதிகள் ஆகுகிறார்கள். அதனால் சடப்பொருளுக்கும் மாயைக்கும் சதா அன்பான ஆத்மாக்களை அவர்களின் நேரத்தை அல்லது எண்ணங்களைத் தம்மீது (சடப்பொருளும் மாயையும்) வீணாக்குவதற்கான தைரியம் ஏற்படாது. அவர்களின் ஒவ்வொரு கணமும் ஒவ்வோர் எண்ணமும் தந்தையின் நினைவிற்காகவும் சேவைக்காகவுமே ஆகும். அன்பான ஆத்மாக்களின் ஸ்திதியின் புகழானது, அவர்கள் வேறு எவருக்கும் அன்றி தந்தைக்கே உரியவர்கள், தந்தையே அவர்களின் உலகம் என்பதாகும். அவர்களால் அவர்களின் எண்ணங்களிலேனும் எவர் மீதும் தங்கியிருக்க முடியாது.

சுலோகம்:
ஞானம் நிறைந்தவர்கள் ஆகுங்கள், எந்தப் பிரச்சனைகளும் களிப்பூட்டும் விளையாட்டுக்களாகவே அனுபவம் செய்யப்படும்.

அவ்யக்த சமிக்கை: இப்போது அன்பெனும் அக்கினியை ஏற்றி, உங்கள் யோகத்தை எரிமலை ஆக்குங்கள்.

இந்த கலியுக, தமோபிரதான், உக்கிப் போன மரத்தை எரிப்பதற்கு, ஒன்றுதிரட்டிய முறையில் உங்களின் எரிமலை யோகத்தை முழு விசையுடன் தீவிரமாக்குங்கள். எவ்வாறாயினும், நினைவின் இணைப்பானது சதா இணைக்கப்பட்டு இருக்கும்போது மட்டுமே இந்த எரிமலை நினைவு ஏற்படும். இந்த இணைப்பானது மீண்டும் மீண்டும் துண்டிக்கப்படுமாயின் அதை மீண்டும் இணைப்பதற்கு நேரம் எடுக்கும். அதற்கு முயற்சியும் தேவைப்படும். அதனால் சக்திசாலி ஆகுவதற்குப் பதிலாக நீங்கள் பலவீனம் ஆகிவிடுவீர்கள்.