08.11.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் ஓர் இராச்சியத்தைக் கோரிக்கொள்வதற்காகவே இந்த இராஜ யோகத்தைக் கற்கின்றீர்கள். இது உங்களுடைய புதிய கல்வியாகும்.
பாடல்:
கற்கும் வேளையில் சில குழந்தைகள் ஏன் தோல்வியடைகின்றனர்?பதில்:
அவர்கள் கற்கும் வேளையில் மாயையுடன் குத்துச் சண்டை இடம்பெறுகின்றது. மாயையின் குத்துதலினால் புத்தி குரூரமாகக் காயப்படுத்தப்படுகின்றது. எனவே, காயப்பட்டிருப்பதனால், ஆத்மா, பாபாவிற்கு உண்மையானவராக இருப்பதில்லை. உண்மையானவர்களாக இருக்கின்ற குழந்தைகளே, எப்பொழுதும் பாதுகாப்பாக இருப்பார்கள்.ஓம் சாந்தி.
பரமாத்மாவாகிய தந்தையே, ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற நம்பிக்கையைக் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் கொண்டுள்ளீர்கள். எல்லையற்ற தந்தை ஒவ்வொரு 5000 வருடங்களுக்கு ஒரு தடவை மாத்திரமே வந்து எல்லையற்ற குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். புதியவர்கள் எவரேனும் இதனைக் கேட்டிருந்தால் அவர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியாதிருந்திருக்கும். ஆன்மீகத் தந்தை யார் என்பதையும், ஆன்மீகக் குழந்தைகள் யார் என்பதையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதையும், அந்த ஒருவரே உங்களுடைய தந்தையும், ஆசிரியரும், பரம குருவும் ஆவார் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நிச்சயமாக, குழந்தைகளாகிய நீங்கள் இதனை இயல்பாகவே நினைவு செய்ய வேண்டும். ஆத்மாக்கள் அனைவரதும் ஆன்மீகத் தந்தை ஒருவர் மாத்திரமே என்பதை இங்கிருக்கும் வேளையில் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அவர்கள் எச்சமயத்தவர்களாயினும், ஆத்மாக்கள் அனைவரும் அவரையே நினைவு செய்கின்றார்கள். மனிதர்கள் அனைவரும் நிச்சயமாக அவரை நினைவு செய்கின்றார்கள். ஒவ்வொருவரிலும் ஓர் ஆத்மா இருக்கின்றார் என்பதைத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். தந்தை இப்பொழுது கூறுகிறார்: சரீரத்தின் சமயங்கள் அனைத்தையும் துறந்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது உங்கள் பாகத்தை இங்கு நடிக்கின்றீர்கள். நீங்கள் என்ன பாகத்தை நடிக்கின்றீர்கள் என்பதும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் செய்கின்ற முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாகவே இதனைப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் இராஜ யோகிகள். கற்கின்ற அனைவரும் யோகிகளே. அவர்கள் நிச்சயமாகத் தங்களுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியருடன் யோகத்தைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்கள் இலக்கையும், குறிக்கோளையும் அறிந்திருப்பார்கள். தங்களின் கல்வி மூலம் தாங்கள் என்னவாக ஆகுவார்கள் என்பதையும் அவர்கள் அறிவார்கள். அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆகுவதற்கான கல்வி என அழைக்கப்படுவது இந்த ஒரு கல்வியேயாகும். இது இராஜ யோகமாகும். நீங்கள் இராச்சியத்தைப் பெறுவதற்காகத் தந்தையுடன் யோகம் செய்கின்றீர்கள். எந்த மனிதராலும் ஒருபோதும் இந்த இராஜ யோகத்தைக் கற்பிக்க முடியாது. உங்களுக்குக் கற்பிப்பவர் ஒரு மனிதர் அல்ல. பரமாத்மாவே ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார், பின்னர் நீங்கள் மற்றவர்களுக்குக் கற்பிக்கின்றீர்கள். அத்துடன் நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருத வேண்டும். தந்தை ஆத்மாக்களாகிய எங்களுக்குக் கற்பிக்கின்றார். இது நினைவு செய்யப்படாததாலேயே சக்தி சேகரிக்கப்படாமல் உள்ளது. இதனாலேயே இவ்விடயங்கள் பலரது புத்தியில் தங்கி நிற்பதில்லை. எனவே, தந்தை எப்பொழுதும் கூறுகின்றார்: சதா யோகத்தில் நிலைத்திருங்கள், நினைவு யாத்திரையில் இருந்த பின்னரே நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். நான் சகோதரர்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். நீங்கள் ஓர் ஆத்மா, அவரே அனைவரதும் தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார். நீங்கள் ஒவ்வொருவரையும் ஓர் ஆத்மாவாகவே பார்க்க வேண்டும். ஒரு விநாடியில் ஜீவன் முக்தி அடையப்பெறுவதாக நினைவுகூரப்பட்டுள்ளது. எனினும், இதற்குப் பெருமளவு முயற்சி தேவை. நீங்கள் ஆத்ம உணர்விற்கு வராததனாலேயே உங்கள் வார்த்தைகளில் சக்தி இல்லை. எனவே, தந்தை விளங்கப்படுத்துவது போன்று உங்களால் விளங்கப்படுத்த முடியாதுள்ளது. சிலர் மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றனர். முட்கள் யார், மலர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். குழந்தைகள் ஒரு பாடசாலையில் ஐந்தாம் அல்லது ஆறாம் தரம் வரை கற்ற பின்னர் மாற்றம் செய்யப்படுகின்றனர். சிறந்த குழந்தைகள் மாற்றம் செய்யப்படும்போது, எக்குழந்தைகள் மிகச் சிறந்த முயற்சி செய்கின்றனர், யார் மிக நன்றாகக் கற்று, உயர்ந்த இலக்கத்தைப் பெற்றுள்ளனர் என்பதை ஏனைய வகுப்பு ஆசிரியர்கள் அனைவரும் மிக விரைவாகவே புரிந்துகொள்கின்றனர். ஓர் ஆசிரியர் நிச்சயமாக இதனைப் புரிந்துகொள்வார். அவை லௌகீகக் கல்வியாகும், இங்கு அவ்வாறல்ல. இது பரலோகக் கல்வியாகும். ஒருவர் முன்னர் மிக நன்றாகக் கற்றதாலேயே, அவர் இப்பொழுதும் மிக நன்றாகக் கற்கின்றார் என இங்கு நீங்கள் கூறமுடியாது, இல்லை. அங்கு, பரீட்சையின் பின்னர் ஒரு மாணவர் மாற்றம் செய்யப்பட்டால், அவர் மிகச் சிறந்த முயற்சி செய்ததாலேயே முன்னணி இலக்கத்தைப் பெற்றுக்கொண்டார் என்பதை ஆசிரியர் புரிந்துகொள்கின்றார். இங்கு, இது ஒரு புதிய கல்வியாகும். இது ஒரு புதிய கல்வி என்பதால், எவருமே முன்னர் இதனைக் கற்றிருக்கவில்லை. கற்பிப்பவரும் புதியவர், அனைத்துமே புதியதாகும். அவர் புதியவர்களுக்குக் கற்பிக்கின்றார். அவர்களுள், நன்றாகக் கற்பவர்களே சிறந்த முயற்சியாளர்கள் எனப்படுகின்றனர். இது புதிய உலகிற்கான புதிய ஞானமாகும். வேறு எவருமே இதனைக் கற்பிப்பதில்லை. உங்கள் கல்வியில் நீங்கள் எந்தளவிற்குக் கவனம் செலுத்துகின்றீர்களோ, அதற்கேற்ப உயர்ந்த இலக்கத்தைக் கோரிக்கொள்வீர்கள். சிலர் மிக இனிமையானவர்களும், கீழ்ப்படிவானவர்களும் ஆவர். நீங்கள் அவர்களைப் பார்த்தவுடனேயே, அவர்கள் நன்றாகக் கற்பிக்கப்போகின்றவர்கள் என்பதை உணர்கின்றீர்கள். அவர்களின் நடத்தையிலிருந்தும், பேசுகின்ற முறையிலிருந்தும் அவர்களிடம் எக்குறைபாடுகளும் கிடையாது என்பதை உங்களால் புர்pந்துகொள்ள முடியும். பாபா அனைவரிடமும் கேட்கின்றார்: இவர் எவ்வாறு கற்பிக்கின்றார்? இவரிடம் ஏதாவது குறைபாடு உள்ளதா? தங்களைக் கேட்காது, எவரும் தங்களைப் பற்றிய செய்திகளை பாபாவிற்குக் கொடுக்கக்கூடாது எனப் பலர் கூறுகின்றனர். சிலர் மிக நன்றாகக் கற்பிக்கின்றனர். சிலரிடம் கூர்மையான புத்தி கிடையாது, அவர்கள் மாயையால் பெருமளவில் தாக்கப்படுகின்றனர். யார் மாயையால் பெருமளவில் ஏமாற்றப்படுகின்றனர் என்பதைத் தந்தை அறிவார். அவர்கள் பத்து வருடங்களாகக் கற்பித்து வந்தபோதிலும், அவர்களைச் சரீர உணர்வுடையவர்களாக்கி, சிக்க வைக்குமளவிற்கு மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள். உறுதியானவர்கள்கூட மாயையால் காயப்படுத்தப்படுகின்றார்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். மாயையும் சக்தி வாய்ந்தவளாகி, சக்தி வாய்ந்தவர்களுடன் சண்டையிடுகின்றாள். பாபா பிரவேசித்திருப்பவர் முதலாம் இலக்கத்தவர் என்பதையும், அவருக்குப் பின்னர் வரிசைக்கிரமமாகப் பலர் உள்ளனர் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். பாபா ஓரிருவரின் உதாரணங்களையே கொடுக்கின்றாராயினும், வரிசைக்கிரமமாகப் பலர் உள்ளனர். டெல்கியிலுள்ள குழந்தை கீதா மிகவும் புத்திசாலி. அவர் மிகவும் இனிமையான குழந்தை. இந்த கீதையே உண்மையான கீதை என பாபா எப்பொழுதும் கூறுகின்றார். மக்கள் அந்த கீதையை வாசிக்கின்றார்களாயினும், எவ்வாறு கடவுள் இராஜ யோகத்தைக் கற்பித்து, உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆக்குகின்றார் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. சத்திய யுகத்தில், ஒரேயொரு தர்மம் மாத்திரமே இருந்தது. அது நேற்றைய கேள்வியாகும். தந்தை கூறுகின்றார்: நேற்று, நான் உங்களை மிகுந்த செல்வந்தர்கள் ஆக்கினேன். நீங்கள் பல்கோடி மடங்கு பாக்கியசாலிகளாக இருந்தீர்கள். இப்பொழுது என்னவாகிவிட்டீர்கள் எனப் பாருங்கள்! உங்களால் இதை உணர முடியும். மற்றைய கீதையை உரைப்பவர்களிடமிருந்து நீங்கள் எந்த உணர்வையும் பெறமாட்டீர்கள். அவர்கள் சற்றேனும் புரிந்துகொள்வதில்லை. ஸ்ரீமத் பகவத் கீதையே அதி மேன்மையானதாக நினைவுகூரப்படுகின்றது. அவர்கள் அமர்ந்திருந்து கீதையைக் கற்று, மற்றவர்களுக்கும் உரைக்கின்றனர். தந்தை எந்த நூல்களையும் கையில் எடுப்பதில்லை, வேறுபாடு உள்ளது. அவர்கள் நினைவு யாத்திரையைக் கொண்டிருப்பதேயில்லை, அவர்கள் தொடர்ந்தும் வீழ்கின்றார்கள். சர்வவியாபி என்ற கருத்தைக் கொண்டிருந்ததால், அனைவரும் என்னவாகி விட்டார்கள் எனப் பாருங்கள்! கல்பம் கல்பமாக இது நிகழும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்குக் கற்பித்து, உங்களை நச்சுக் கடலில் இருந்து, அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றேன். பாரிய வேறுபாடு உள்ளது. சமய நூல்களைக் கற்பது பக்தி மார்க்கமாகும். தந்தை கூறுகிறார்: அச்சமய நூல்களைக் கற்பதனூடாக எவரும் என்னைச் சந்திக்க முடியாது. நீங்கள் எந்த மார்க்கத்தை எடுத்துக்கொண்டாலும், ஒரே இடத்தையே சென்றடைவீர்கள் என்றே அவர்கள் நினைக்கின்றனர். சிலவேளைகளில், கடவுள் ஏதோவொரு ரூபத்தில் வந்து எங்களுக்குக் கற்பிப்பார் என அவர்கள் கூறுகின்றனர். அவ்வகையில் பார்க்கும்போது, கற்பிப்பதற்குத் தந்தை வந்தாக வேண்டுமாயின், அவர்கள் கற்பித்துக் கொண்டிருப்பதெல்லாம் என்ன? ஒரு மூடை மாவினுள் ஒரு துளி உப்பு இருப்பதைப் போன்று, கீதையிலும் சரியான வாசகங்கள் சில உள்ளன எனத் தந்தை கூறுகின்றார். அவற்றுடன் இந்தக் கருத்துகளையும் உங்களால் எடுத்துக்கொள்ள முடியும். சத்தியயுகத்தில் சமய நூல்கள் எதுவும் கிடையாது. இச்சமய நூல்கள் பக்தி மார்க்கத்தைச் சார்ந்தவையாகும். அவை அநாதியாக, தொன்றுதொட்டு இருந்து வருவதாக நீங்கள் கூறமுடியாது, இல்லை. ‘அநாதியாக’ என்பதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இந்த அநாதியான நாடகம் உண்மையில் அநாதியானதே எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். தந்தை உங்களுக்கு இராஜ யோகம் கற்பிக்கின்றார். அவர் கூறுகின்றார்: நான் இப்பொழுது உங்களுக்குக் கற்பித்துவிட்டு, பின்னர் மறைந்துவிடுகின்றேன். உங்களின் இராச்சியம் அநாதியானது என நீங்கள் கூறுகின்றீர்கள். இது, அதே இராச்சியமாகும். அது தூய்மையானதிலிருந்து தூய்மையற்றதாகியதால், அதன் பெயர் மாத்திரமே மாற்றப்பட்டது. நீங்கள் தேவர்கள் என அழைக்கப்படுவதற்குப் பதிலாக, இந்துக்கள் என்றே அழைக்கப்படுகின்றீர்கள். எனினும், நீங்கள் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்களே. ஏனையவர்கள் சதோபிரதான், சதோ, ரஜோ, தமோ நிலைகளைக் கடந்து செல்வதைப் போன்றே, நீங்களும் கீழிறங்குகின்றீர்கள். நீங்கள் ரஜோ ஆகியபோது, தூய்மையின்மை காரணமாக, தேவர்கள் என அழைக்கப்படுவதற்குப் பதிலாக இந்துக்கள் என அழைக்கப்படுகின்றீர்கள். உண்மையில், “இந்து” என்ற பெயர் ஹிந்துஸ்தான் பிரதேசத்திற்குரியதாகும். ஆதியில், நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள். தேவர்கள் எப்பொழுதும் தூய்மையானவர்கள். மனிதர்கள் இப்பொழுது தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டதால், அவர்களுக்கு இந்துக்கள் என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடம் கேளுங்கள்: இந்து சமயம் எப்பொழுது உருவாக்கப்பட்டது? அதை உருவாக்கியவர் யார்? அவர்களால் உங்களுக்குப் பதிலளிக்க முடியாது. ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் முன்னர் இருந்தது. அதற்கு, வைகுந்தம் போன்ற பல அழகான பெயர்கள் வழங்கப்பட்டன. கடந்து சென்றவை மீண்டும் இடம்பெறும். இந்நேரத்தில், ஆரம்பம் முதல் இறுதி வரையான அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் தொடர்ந்தும் கற்று, உயிர் வாழ்வீர்கள், சிலர் மரணித்தும் விடுவார்கள். நீங்கள் தந்தைக்குரியவராகும்போதே மாயையுடன் உங்கள் யுத்தம் ஆரம்பமாகின்றது. ஆனால், சிலர் துரோகிகளாகவும் ஆகுகின்றனர். நீங்கள் இராவணனுக்குரியவர்களாக இருந்தீர்கள், பின்னர் இராமருக்குரியவர்கள் ஆகினீர்கள். பின்னர் இராவணன், இராமரின்(கடவுள்) குழந்தைகளை ஏமாற்றி, அவர்களைத் தன்வசம் ஈர்க்கின்றான். உங்களில் சிலர் நோய்வாய்ப்படுகின்றீர்கள். அதன் பின்னர், அங்கும் இல்லாமல், இங்கும் இல்லாமல் இருக்கின்றீர்கள். நீங்கள் களிப்பும் இல்லாமல், துன்பத்தையும் அனுபவிக்காமல் இடையில் நிற்கின்றீர்கள். உங்கள் மத்தியிலும்கூட, பலர் தந்தைக்கும் முற்றாகச் சொந்தமாகாமல், இராவணனுக்கும் முற்றாகச் சொந்தமாகாமல் இடையில் நிற்கின்றனர். நீங்கள் அதி மங்களகரமான சங்கமயுகத்தில் உள்ளீர்கள். நீங்கள் அதிமேலான மனிதர்களாகுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். இவ்விடயங்கள் மிக நன்றாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். பாபா உங்களிடம் எதையாவது கேட்கும்போது, குழந்தைகளாகிய உங்களில் பலர் கைகளை உயர்த்துகின்றீர்கள், ஆனால் உங்களிடம் அத்தகைய புத்தி இல்லை என்பது புரிந்துகொள்ளப்படுகின்றது. பாபா கூறுகின்றார்: எந்தவிதத்திலும் மங்களகரமான வார்த்தைகளையே பேசுங்கள். நீங்கள் அனைவரும் சாதாரண மனிதனில் இருந்து நாராயணனாக மாறுவீர்கள் எனக் கூறுகின்றீர்கள். இது சாதாரண மனிதனில் இருந்து நாராயணனாக மாறும் கதையாகும். அறியாமைப் பாதையில் நீங்கள் சத்திய நாராயணனாகின்ற கதையைச் செவிமடுத்து வந்தீர்கள், ஆனால் அங்கு, எவருமே இக்கேள்வியைக் கேட்டிருக்க முடியாது. இங்கு, தந்தை உங்களிடம் கேட்கின்றார்: நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? உங்களிடம் போதியளவு தைரியம் உள்ளதா? நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாகவும் வேண்டும். எவராவது வரும்போது, “நீங்கள் இந்தப் பிறவியில் ஏதேனும் பாவம் செய்துள்ளீர்களா?” என அவரிடம் வினவப்படுகின்றது. பிறவி பிறவியாக அனைவரும் பாவிகளாகவே இருந்துள்ளனர். நீங்கள் இந்தப் பிறவியின் பாவங்களைப் பற்றிக் கூறினால், இலேசாகிவிடுவீர்கள். இல்லாவிடில் உள்ளுக்குள் மனச்சாட்சி உங்களை உறுத்தும். உண்மையைக் கூறுவதால் நீங்கள் இலேசாகிவிடுவீர்கள். சில குழந்தைகள் உண்மையைக் கூறாததால், மாயை அவர்களைக் கடுமையாகக் குத்துகின்றாள். உங்கள் குத்துச் சண்டை மிகவும் கடுமையானது. அந்தக் குத்துச் சண்டையில் உங்கள் சரீரம் காயப்படுகின்றது. ஆனால் இங்கு, உங்கள் புத்தி மிகவும் மோசமாகக் காயப்படுகின்றது. பாபாவும் இதனை அறிவார். இந்த பிரம்மா கூறுகின்றார்: நான் எனது பல பிறவிகளின் இறுதிப் பிறவியை அடைந்துவிட்டேன். நான் அதி தூய்மையானவராக இருந்து, இப்போது அதி தூய்மையற்றவர் ஆகிவிட்டேன். நான் மீண்டும் ஒரு தடவை தூய்மையாகின்றேன். என்னை ஒரு மகாத்மா என நான் கூறமாட்டேன். தந்தையும் இதனை உறுதி செய்து கூறுகின்றார்: இவரே அதி தூய்மையற்றவர் ஆவார். பாபா கூறுகின்றார்: நான் அந்நிய தேசத்திற்கு வந்து, அந்நிய சரீரம் ஒன்றினுள் பிரவேசிக்கின்றேன். முழுமையான 84 பிறவிகளை எடுத்தவரின் இறுதிப் பிறவியில் நான் அவரினுள் பிரவேசிக்கின்றேன். அவர் இப்போது மீண்டும் ஒரு தடவை தூய்மையாகுவதற்கு முயற்சி செய்கின்றார். நீங்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தந்தை இதனை அறிவார். பாபாவின் இந்தக் குழந்தை மிகவும் நெருக்கமானவர். அவரால் ஒருபோதும் பாபாவை விட்டுப் பிரிந்திருக்க முடியாது. அவரை விட்டு நீங்கிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தையேனும் என்னால் கொண்டிருக்க முடியாது. அவர் சரியாக எனக்கு அருகிலேயே அமர்ந்திருக்கின்றார். பாபா என்னுடையவர், அவர் எனது வீட்டில் அமர்ந்திருக்கின்றார். பாபா இதனை அறிந்தவராக, அவருடன் சிரித்து நகைச்சுவையும் செய்கின்றார். இவர் கூறுகின்றார்: பாபா, இன்று நீங்கள் என்னை நீராட்டி, எனக்கு உணவூட்டவும் வேண்டும், நான் உங்களின் சிறு குழந்தை. நான் பல்வேறு வழிகளில் பாபாவை நினைவு செய்கின்றேன், பின்னர், இவ்வாறு பாபாவை நினைவுசெய்யுங்கள் எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். பாபா, நீங்கள் மிக இனிமையானவர். நீங்கள் எங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றீர்கள். இவ்விடயங்கள் வேறு எவரது புத்தியிலும் இருக்க முடியாது. தந்தை தொடர்ந்தும் அனைவருக்கும் புத்துணர்ச்சி ஊட்டுகின்றார். அனைவரும் தொடர்ந்து முயற்சி செய்கின்றீர்கள், ஆனால் உங்கள் நடத்தையும் அதற்கேற்ப இருக்க வேண்டும். நீங்கள் ஏதேனும் தவறு செய்தால், உடனடியாகவே பாபாவுக்கு இவ்வாறு எழுதவேண்டும்: பாபா நான் இத் தவறைச் செய்துவிட்டேன். “பாபா நான் ஒரு தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” எனச் சிலர் எழுதுகின்றார்கள். எனது குழந்தை ஆகிய பின்னர் நீங்கள் ஒரு தவறு செய்தால், அத்தவறு நூறு மடங்காக அதிகரிக்கும். நீங்கள் மாயையினால் தோற்கடிக்கப்பட்டால், முன்பு இருந்தது போலவே ஆகிவிடுவீர்கள். பலர் தோற்கடிக்கப்படுகின்றார்கள். இது மிகவும் சக்திவாய்ந்த குத்துச்சண்டையாகும். இது இராமருக்கும், இராவணனுக்கும் இடையிலான யுத்தமாகும். கடவுள் குரங்குச் சேனையுடன் சென்றதாக அவர்கள் காட்டுகின்றார்கள். அது குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு நாடகமாகும். சிறு குழந்தைகள் பெருமளவு புரிந்துணர்வைக் கொண்டிருக்கமாட்டார்கள். தந்தை கூறுகின்றார்: இவர்களின் புத்தியும் ஒரு சில சதங்கள் பெறுமதியையே கொண்டுள்ளது. ஒவ்வொருவரும் கடவுளின் ரூபம் என அவர்கள் கூறுகின்றார்கள். ஒவ்வொருவருமே கடவுளாகி, படைத்து, பராமரித்து, அழிக்கின்றார்கள் என்பதா அதன் அர்த்தம்? கடவுள் எதனையும் அழிப்பதில்லை. அவ்வாறு கூறுவது அத்தகைய அறியாமையே ஆகும்! இதனாலேயே, மக்கள் தொடர்ந்தும் பொம்மைகளை வழிபடுகின்றார்கள் எனக் கூறப்படுகின்றது. மனிதர்களின் புத்தி எப்படியாகிவிட்டது என்பது ஓர் அற்புதமே! அவர்கள் அதிகளவு பணத்தைச் செலவிடுகின்றார்கள்! தந்தை உங்களிடம் முறைப்பாடு செய்கின்றார்: நான் உங்களை அதி மகத்தானவர்கள் ஆக்கினேன், ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள், பின்னர் சக்கரத்தில் சுற்றி வந்து, இப்போது பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் பின்னர் மீண்டும் தேவர்கள் ஆகுவீர்கள். இது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். நீங்கள் இங்கு அமர்ந்திருக்கையில், இந்த ஞானம் உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். பாபா ஞானம் நிறைந்தவர். அவர் சாந்தி தாமத்தில் வசித்தாலும், ஞானம் நிறைந்தவர் என்றே அழைக்கப்படுகின்றார். ஆத்மாக்களாகிய உங்களுக்குள்ளும் முழு ஞானமும் உள்ளது. இந்த ஞானத்தினால் தங்கள் கண்கள் திறக்கப்பட்டதாக மக்கள் கூறுகின்றார்கள். தந்தை உங்களுக்கு ஞானக் கண்ணைக் கொடுக்கின்றார். ஆத்மா இப்போது உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறிவார். சக்கரம் தொடர்ந்து சுழல்கின்றது. பிராமணர்களே சுயதரிசன சக்கரத்தைப் பெறுபவர்கள். தேவர்களுக்கு எவரும் கற்பிப்பதில்லை. அவர்களுக்கு எக்கற்பித்தல்களும் தேவையில்லை. தேவர்கள் ஆகவேண்டிய நீங்களே கற்கவேண்டும். தந்தை இப்பொழுது இங்கிருந்து இப்புதிய விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். இப்புதிய ஞானத்தைக் கற்பதால் நீங்கள் மேன்மையானவர்கள் ஆகின்றீர்கள். முதலாவதாக இருப்பவர்கள் இறுதியாகவும், இறுதியாக இருப்பவர்கள் முதலாவதாகவும் ஆகுகின்றார்கள். இது ஒரு கல்வியாகும். பாபா ஒவ்வொரு கல்பத்திலும் வந்து, உங்களைத் தூய்மையற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆக்குகின்றார் என்பதை நீங்கள் இப்போது புரிந்துகொள்கின்றீர்கள். பின்னர், இந்த ஞானம் முடிவடைந்துவிடும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கின்றார்.தாரணைக்கான சாராம்சம்:
1. மிக மிகக் கீழ்ப்படிவானவராக இருந்து, இனிமையாகப் பழகுங்கள். எவ்வித சரீர அகங்காரத்தையும் அனுமதிக்காதீர்கள். தந்தையின் குழந்தையாகிய பின்னர், தவறுகள் எதுவும் செய்யாதீர்கள். மாயையுடனான குத்துச் சண்டையில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.2. உங்கள் வார்த்தைகளைச் சக்தியால் நிரப்புவதற்கு, ஆத்ம உணர்விலிருக்கும் பயிற்சியைச் செய்யுங்கள். தந்தை உங்களுக்குக் கற்பித்தவற்றையே நீங்கள் கூறுகின்றீர்கள் என்பது உங்கள் உணர்வில் இருக்கட்டும். அப்பொழுதே உங்கள் வார்த்தைகளில் சக்தி இருக்கும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு தேவதை ஆகப்போகின்ற பிராமணராக இருக்கும் அழியாத போதையைப் பேணுவதன் மூலம் ஆன்மீக மகிழ்ச்சியையும் சுகத்தையும் அனுபவம் செய்வீர்களாக.தேவதைகள் ஆகப் போகின்ற பிராமணர்களான நீங்கள், தேவதேவியரை விட உயர்ந்தவர்கள். தந்தையைப் பற்றிய ஞானம், தேவர்களின் வாழ்க்கைகளில் வெளிப்படமாட்டாது. இறைவனைச் சந்திக்கும் அனுபவமேனும் இருக்காது. ஆகவே, இப்போது, நீங்கள் தேவதைகள் ஆகப்போகின்ற பிராமணர்கள் என்ற போதையையும் தேவர்களை விட உயர்ந்தவர்கள் என்ற போதையையும் கொண்டிருங்கள். இந்த அழியாத போதை மட்டுமே, உங்களை ஆன்மீக மகிழ்ச்சியையும் சுகத்தையும் அனுபவம் பெறச் செய்யும். உங்களுக்குள் சதா இந்த போதை இல்லாவிட்டால், நீங்கள் சிலவேளைகளில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், சிலவேளைகளில் குழப்பத்துடன் இருப்பீர்கள்.
சுலோகம்:
உங்களின் சேவையைக்கூடத் தந்தைக்கு நீங்கள் அர்ப்பணிக்கும்போதே, உங்களை அர்ப்பணித்த ஆத்மா என்று அழைக்க முடியும்.