09.02.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 18.01.2004 Om Shanti Madhuban
உலக அதிகாரியின் நேரடிக் குழந்தைகளாக இருக்கும் விழிப்புணர்வைப் பேணி, உங்களின் சக்திகள் அனைத்தையும் ஒழுங்காக வைத்திருங்கள்.
இன்று, எங்கும் உள்ள குழந்தைகளான நீங்கள் எல்லோரும் அன்பு அலைகளில் அமிழ்ந்துள்ளீர்கள். தந்தை பிரம்மாவின் விசேடமான ஞாபகங்கள் எல்லோரின் இதயங்களிலும் வெளிப்படுகின்றன. அமிர்த வேளையில் இருந்து, சாகார் பராமரிப்பையும் அவ்யக்த பராமரிப்பையும் பெற்றுள்ள இரண்டு வகையான இரத்தினங்களின் இதயங்களின் ஞாபகங்களின் மாலை பாப்தாதாவை வந்தடைந்த வண்ணம் உள்ளன. பாப்தாதாவைப் பற்றிய உங்களின் ஞாபகங்களின் சித்திரங்கள் எல்லோருடைய இதயங்களிலும் தென்படுகின்றன. தந்தையின் இதயத்தில் குழந்தைகள் எல்லோருடைய அன்பும் கலந்துள்ளது. எல்லோருடைய இதயத்திலும், ஒரேயொரு அன்புப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது: ‘எனது பாபா!’ தந்தையின் இதயத்திலும், ‘எனது இனிமையிலும் இனிமையான குழந்தைகளே!’ என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தானாகவே ஒலிக்கும் இந்தப் பாடல், இந்த எல்லையற்ற பாடல், மிகவும் அழகானது. உங்களின் அன்பான ஞாபகங்களுக்குப் பலனாக, பாப்தாதா தனது இதயபூர்வமான பல மில்லியன் மடங்கு அன்பு நிறைந்த ஆசீர்வாதங்களை வழங்குகிறார்.
இப்போதும் இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் குழந்தைகளான நீங்கள் அன்புக்கடலில் மூழ்கி இருப்பதை பாப்தாதா பார்க்கிறார். இந்த நினைவு நாளானது குழந்தைகள் எல்லோரையும் சக்திசாலிகள் ஆக்குவதற்கான விசேடமான நாளாகும். இன்றைய தினமே, குழந்தைகள் தந்தை பிரம்மாவால் முடி சூட்டப்பட்ட தினமாகும். தந்தை பிரம்மா உலகச் சேவைக்கான பொறுப்புக் கிரீடத்தைக் கருவிக் குழந்தைகளின் மீது வைத்தார். அவர் தெரியாதவர் ஆகி, குழந்தைகளை பௌதீக ரூபத்தில் கருவிகள் ஆக்குவதற்கான விழிப்புணர்வுத் திலகத்தைக் குழந்தைகளுக்கு இட்டார். தனது அவ்யக்த தேவதை ரூபத்தைப் போன்ற ஒளிக் கிரீடத்தைக் குழந்தைகளுக்கு வழங்கினார். அவர் கரவன்ஹாராகி (மற்றவர்களைச் செய்ய வைப்பவர்) குழந்தைகளைக் கரன்ஹார் (பணியைச் செய்பவர்) ஆக்கினார். இதனாலேயே, இந்தத் தினம் நினைவு தினம், அதாவது, சக்தி தினம் என்று அழைக்கப்படுகிறது. இது விழிப்புணர்விற்கான தினம் மட்டுமல்ல. ஏனென்றால், இந்த விழிப்புணர்வுடன் கூடவே, குழந்தைகளான நீங்கள் எல்லோரும் இந்தச் சக்திகள் அனைத்தையும் ஆசீர்வாதமாகப் பெற்றுள்ளீர்கள். குழந்தைகள் எல்லோரையும் சகல விழிப்புணர்வின் சொரூபங்களாக பாப்தாதா பார்க்கிறார். அவர் உங்களை மாஸ்ரர் சர்வசக்திவான்களின் ரூபங்களில் பார்க்கிறார். சில சக்திகளைக் கொண்டவர்கள் அல்ல, ஆனால் சகல சக்திகளையும் கொண்டவர்கள். ஒவ்வொரு குழந்தையும் தந்தையிடம் இருந்து இந்த சக்திகள் அனைத்தையும் ஓர் ஆசீர்வாதமாகப் பெற்றுள்ளார். நீங்கள் உங்களின் தெய்வீகப் பிறவியை எடுத்ததுமே, பாப்தாதா உங்களுக்கு இந்த ஆசீர்வாதத்தை வழங்கினார்: நீங்கள் சகல சக்திகளாலும் நிறைந்தவர் ஆகுவீர்களாக. இதுவே ஒவ்வொரு பிறந்த நாளுக்குமான ஆசீர்வாதம் ஆகும். ஆசீர்வாதமாக நீங்கள் பெற்ற சக்திகளைப் பயன்படுத்துங்கள். குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் அவற்றைப் பெற்றுள்ளீர்கள். ஆனால், அவற்றைப் பயன்படுத்துவதில் நீங்கள் வரிசைக்கிரமமாக இருக்கிறீர்கள். காலத்திற்கேற்ப, உங்களால் ஒவ்வொரு சக்தி என்ற ஆசீர்வாதத்திற்குக் கட்டளை இடமுடியும். நீங்கள் ஆசீர்வாதங்களை அருள்பவரிடம் இருந்து பெற்ற ஆசீர்வாதங்களின் சொரூபம் ஆகினால், நேரத்திற்கேற்ப ஒவ்வொரு சக்திக்கும் கட்டளை இட்டால், அந்தச் சக்தி நிச்சயமாக பிரசன்னம் ஆகிவிடும். ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ள மாஸ்ரர் ஆன நீங்கள், விழிப்புணர்வின் சொரூபமாக இருந்து சக்திகளுக்குக் கட்டளை இட்டால், அவை அந்த வேளையில் பயன்படாமல் போகும் என்பது சாத்தியமே இல்லை. எவ்வாறாயினும் மாஸ்ரர், ஒரு மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற விழிப்புணர்வின் ஆசனத்தில் அமர்ந்திருக்க வேண்டும். ஆசனத்தில் அமர்ந்திருக்காமல் கட்டளை இட்டால், அந்தக் கட்டளைகள் எவையும் பின்பற்றப்பட மாட்டாது. ‘பாபா, நான் உங்களை நினைக்கிறேன், நீங்கள் என்னிடம் வாருங்கள்’ எனக் குழந்தைகள் சொல்லும்போது, பிரபு அங்கே வந்து நிற்கிறார். பிரபுவால் வர முடியுமானால், ஏன் சக்திகளால் வர முடியாது? ஒரு மாஸ்ரர் என்ற அதிகாரத்துடன் சரியான முறையில் அவற்றுக்குக் கட்டளை இடுங்கள். இந்தச் சக்திகள் எல்லாமே சங்கமயுகத்தில் உங்களின் விசேடமான இறைசொத்துக்கள் ஆகும். யாருக்கு இந்தச் சொத்துக்கள்? சொத்துக்கள் எப்போதும் குழந்தைகளுக்கே. எனவே, விழிப்புணர்வின் சொரூபம் என்ற ஆசனத்தில் அமர்ந்திருந்த வண்ணம் அவற்றுக்கு உரிமையுடன் கட்டளை இடுங்கள். ஏன் நீங்கள் சிரமப்படுகிறீர்கள்? அவற்றுக்குக் கட்டளை இடுங்கள்! நீங்கள் உலக அதிகாரியின் நேரடிக் குழந்தைகள். இந்த விழிப்புணர்வின் போதை சதா வெளிப்பட்டிருக்க வேண்டும்.
நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே சோதித்துப் பாருங்கள்: நான் உலக சர்வசக்திவானிடம் உரிமையுள்ள ஓர் ஆத்மா என்ற இயல்பான விழிப்புணர்வை சதா கொண்டிருக்கிறேனா? இந்த விழிப்புணர்வு சதா உங்களிடம் உள்ளதா அல்லது சிலவேளைகளில் மட்டும்தானா? தற்காலத்தில், சகல உரிமைகளும் வேண்டும் என்றே அவர்களின் சண்டைகள் நடக்கின்றன. ஆனால் நீங்கள் எல்லோரும் பிறந்தபோதே உங்களின் இறை உரிமைகளையும் இறை அதிகாரத்தையும் பெற்றுள்ளீர்கள். எனவே, உங்களின் உரிமைகளின் சக்தியைப் பேணுங்கள். நீங்களும் சக்திசாலியாகி, ஏனைய ஆத்மாக்களும் சக்திகளைப் பெறச் செய்யுங்கள். இந்த வேளையில், ஆத்மாக்கள் எல்லோரும் சக்திக்காக (சமர்த்), அதாவது, சக்திகளுக்காக (சக்தியா) பிச்சை எடுக்கிறார்கள். உங்களின் உயிரற்ற விக்கிரகங்களின் முன்னால் சென்று தொடர்ந்தும் யாசகம் கேட்கிறார்கள். எனவே, தந்தை கூறுகிறார்: ஓ சக்திசாலி ஆத்மாக்களே, ஆத்மாக்கள் எல்லோருக்கும் சக்தி கொடுங்கள். அவர்களுக்கு சக்தியைக் (சமர்த்தி) கொடுங்கள். இதற்கு, ஒவ்வொரு குழந்தையும் ஒரு விடயத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும். பாப்தாதா இதற்காக உங்களுக்கு ஒரு சமிக்கை கொடுத்துள்ளார். பெரும்பாலான குழந்தைகளின் எண்ணங்களும் நேரமும் வீணாக்கப்படுவதையும் அவர் பெறுபேற்றிலே கண்டார். உதாரணமாக, ஒரு மின்சார இணைப்பு சிறிது தளர்வாக இருந்தாலும் அல்லது ஒரு ஒழுக்கு ஏற்பட்டாலும் உங்களால் சரியான ஒளியைப் (மின்சார சக்தி) பெற முடியாது. அதேபோல், இந்த வீணானவை என்ற ஒழுக்கும் உங்களை சக்திவாய்ந்த ஸ்திதியையும் சதா விழிப்புணர்வையும் உருவாக்க அனுமதிப்பதில்லை. அதனால், வீணானதைச் சிறந்ததாக மாற்றுங்கள். சேமிப்புத் திட்டம் ஒன்றை உருவாக்குங்கள். நாள் முழுவதும் சிறந்த முறையில் எத்தனை சதவீதம் பயன்படுத்தப்பட்டது என்றும் எத்தனை சதவீதம் வீணாக்கப்பட்டது என்றும் சோதியுங்கள். 40 வீதம் அல்லது 20 வீதம் வீணாக்கப்பட்டிருந்தால், அதைச் சேமியுங்கள். சிறிதளவுதானே வீணாகியது, எஞ்சிய நாள் முழுவதும் நன்றாகத்தானே இருந்தது என நினைக்காதீர்கள். வீணாக்குகின்ற இந்தப் பழக்கம் நீண்ட காலத்திற்கு இருக்குமாக இருந்தால், அது உங்களைக் கடைசிக் கணங்களில் ஏமாற்றிவிடும். அது உங்களை வரிசைக்கிரமம் ஆக்கிவிடும். அது உங்களை முதலாம் இலக்கத்தவர் ஆக அனுமதிக்காது. ஆரம்பத்தில், தன்னைச் சோதிப்பதற்காகத் தந்தை பிரம்மா ஒவ்வோர் இரவும் ஒரு சபையைக் கூட்டுவதுண்டு. எதன் சபை? குழந்தைகளின் சபை அல்ல. ஆனால், அவர் தனது சொந்த பௌதீக அங்கங்களின் சபையைக் கூட்டுவார். அவர் அவற்றுக்குக் கட்டளை இடுவார்: ஓ மனமே, பிரதம மந்திரியே, உன்னுடைய இந்தச் செயல் நன்றாகவே இல்லை. நீ இப்போது கட்டளைப்படி நடக்க வேண்டும். ஓ சம்ஸ்காரங்களே, நீங்கள் கட்டளைகளின்படி நடக்க வேண்டும். ஏன் இந்தத் தடுமாற்றம்? அதற்கான காரணம் என்ன? ஒரு தீர்வைக் கண்டுபிடியுங்கள்! ஒவ்வொரு நாளும், அவர் உத்தியோகபூர்வ சபையைக் கூட்டினார். அதேபோல் உங்களின் சபையையும் - சுய இராச்சிய சபையைக் கூட்டுங்கள். சில குழந்தைகள் பாப்தாதாவுடன் இதயபூர்வமாக உரையாடுகிறார்கள். அவர்கள் தனிப்பட்ட சம்பாஷணைகளைச் செய்கிறார்கள். பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? பலர் தனிப்பட்ட முறையில் சம்பாஷணை செய்கிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள்: ‘நான் எதிர்காலத்தில் என்னவாக ஆகுவேன் என்ற சித்திரத்தை எனக்குக் காட்டுங்கள்.’ ஆதி இரத்தினங்களான உங்களுக்கு நினைவிருக்கக்கூடும், நீங்கள் உங்களின் சொந்தச் சித்திரத்தைப் பற்றி அன்னை ஜெகதாம்பாவிடம் கேட்பதுண்டு: ‘மம்மா, நாங்கள் எப்படி இருப்போம் என எங்களின் படத்தைக் காட்டுங்கள்’. எனவே, பாப்தாதாவுடன் சம்பாஷணை செய்யும்போது, சில குழந்தைகள் இன்னமும் தமது சொந்தப் படத்தைப் பற்றிக் கேட்கிறார்கள். உங்கள் எல்லோருக்கும் இந்த ஆசை இருக்கக்கூடும்: உங்களின் சொந்தப் படம் கிடைத்தால் நன்றாக இருக்கும். எவ்வாறாயினும், பாப்தாதா கூறுகிறார்: பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்துவமான கண்ணாடியைக் கொடுத்திருக்கிறார். அது என்ன கண்ணாடி? தற்சமயம், நீங்கள் உங்களுக்கே அதிபதிகள்தானே? அப்படித்தானே? நீங்கள் சுய இராச்சிய அதிகாரிகளா? நீங்கள் அத்தகையவர்கள் என்றால், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் சுய இராச்சிய அதிகாரிகளா? அச்சா. உங்களில் சிலர் கைகளை உயர்த்தவில்லை. நீங்கள் சிறிய அளவில் மட்டுமே அதிபதிகளா? அச்சா. நீங்கள் சுய இராச்சிய அதிகாரிகள். அதற்காகப் பாராட்டுக்கள்! எனவே, சுய அதிபதியாக இருக்கும் ஒருவரின் அட்டவணையே உங்களின் எதிர்கால அந்தஸ்தின் முகத்தைக் காட்டும் கண்ணாடி ஆகும். உங்களிடம் இந்தக் கண்ணாடி இருக்கிறதா? நீங்கள் எல்லோரும் இதைப் பெற்றுள்ளீர்கள்தானே? இது தெளிவாக இருக்கிறதல்லவா? அதில் எந்தவிதமான கறைகளும் இல்லையல்லவா? அதில் கறைகள் எவையும் இல்லாதிருக்கலாம். ஆனால் சிலவேளைகளில், சுடுநீர் இருக்கும்போது, கண்ணாடியில் நீராவிப் படலம் படிந்துவிடுகிறது. உதாரணமாக, பனிமூட்டமாக இருக்கும்போது, கண்ணாடியில் தெளிவாக உங்களால் பார்க்க முடியாமல் போகிறது. குளிக்கும்போது இதை எல்லோரும் அனுபவம் செய்திருப்பீர்கள். எனவே, இப்போதும் உங்களின் பௌதீக அங்கங்களில் ஒன்று முற்றிலும் உங்களின் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் - அவை உங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன, ஆனால் சிலவேளைகளில் அவை அப்படி இருப்பதில்லை - உதாரணமாக, ஏதாவதொரு பௌதீக அங்கம், உங்களின் கண்கள், வாய், காதுகள் அல்லது உங்களின் பாதங்களேனும் சிலவேளைகளில் தவறான சகவாசத்திற்குள் போகுமாக இருந்தால், அப்போது உங்களின் பாதங்களும் உங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை என்றே அர்த்தம். நீங்கள் சென்று ஓர் ஒன்றுகூடலில் அமர்ந்திருப்பீர்கள். நீங்கள் அங்கே அமர்ந்திருந்து இராமாயணம் அல்லது பாகவதத்தின் தவறான கதைகளைக் கேட்கக்கூடும். சரியானவை அல்ல. எனவே, உங்களின் பௌதீக அங்கங்கள் ஏதாவது உங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாவிட்டால், அது எண்ணங்களையும் நேரத்தையும் உள்ளடக்குகின்றன, இதில் இருந்து உங்களையே சோதித்துப் பார்க்க முடியும். உங்களின் சொந்த இராச்சியத்தின் மீதே கட்டுப்படுத்தும் சக்தி இல்லாதபோது, எப்படி நீங்கள் உலக இராச்சியத்தைக் கட்டுப்படுத்துவீர்கள்? எனவே, எப்படி நீங்கள் ஓர் அரசன் ஆகுவீர்கள்? அங்கே, எல்லாமே மிகச்சரியாக இருக்கும். நீங்கள் சங்கமயுகத்தில் செய்த முயற்சிகளின் வெகுமதியாக இயல்பாகவே கட்டுப்படுத்தும் சக்தியையும் ஆள்கின்ற சக்தியையும் கொண்டிருப்பீர்கள். எனவே, சங்கமயுகத்தில் உங்களுக்குக் கட்டுப்படுத்தும் சக்தியும் ஆள்கின்ற சக்தியும் இல்லாவிட்டால், முயற்சி இல்லை என்பதே அதன் அர்த்தம். அப்படியாயின், வெகுமதி என்னவாக இருக்கும்? நீங்கள் இதைக் கணக்கிடுவதில் கெட்டிக்காரர்கள்தானே? ஆகவே, இந்தக் கண்ணாடியில் உங்களின் முகத்தைப் பாருங்கள். உங்களின் சொந்த முகத்தைப் பாருங்கள். உங்களின் முன்னால் என்ன முகம் வருகிறது? ஓர் அரசனின் முகமா, அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் முகமா, ஓர் இராஜ பிரஜையின் முகமா அல்லது சாதாரண பிரஜையின் முகமா? எனவே, நீங்கள் உங்களின் சித்திரத்தைப் பார்த்தீர்களா? இந்த ரூபத்துடன் சோதித்துப் பாருங்கள். ஒவ்வொரு நாளும் சோதியுங்கள். ஏனென்றால், நீண்ட காலத்திற்கான பெறுபேறு, நீண்ட காலம் நீங்கள் செய்யும் முயற்சிகளிலேயே தங்கியுள்ளது. இறுதியில் இயல்பாகவே உங்களுக்கு எல்லையற்ற விருப்பமின்மை ஏற்படும் என நீங்கள் நினைத்தால், இறுதிக்கணங்களின்போது, அந்த விருப்பமின்மை இறுதிக்கணங்களுக்கு உரியதாக இருக்குமா அல்லது நீண்ட காலத்திற்கு உரியதாக இருக்குமா? அதை நீண்ட காலத்திற்கு உரியது என நீங்கள் சொல்ல மாட்டீர்கள்தானே? எனவே, நீங்கள் 21 பிறவிகளுக்கு உங்களின் சம்பூரணமான அதிபதி ஆகிவிட்டீர்களா? நீங்கள் சிம்மாசனத்தில் அமராமல் விடலாம், ஆனால் உங்களுக்கு இராச்சியத்தின் உரிமை இருக்க வேண்டும். இந்த நீண்ட காலம் என்பது நீண்ட காலத்திற்கான வெகுமதியுடன் தொடர்புடையது. ஆகவே, கவனயீனம் ஆகாதீர்கள். இன்னமும், விநாசத்திற்கான திகதி நிச்சயம் செய்யப்படவில்லை. அது இன்னமும் எட்டு வருடங்களா அல்லது பத்து வருடங்களா என உங்களுக்குத் தெரியாது. அது உங்களுக்குத் தெரியாது. எனவே, இனி வரும் காலங்களில் அது நடக்கும் என நினைக்காதீர்கள். இல்லை. உலகின் முடிவைப் பற்றிச் சிந்திப்பதற்கு முன்னர், அனைத்திற்கும் முதலில், உங்களின் சொந்த வாழ்க்கையின் இறுதிக் காலத்தைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் ஒரு திகதியை நிச்சயம் செய்துவிட்டீர்களா? இந்தத் திகதியில்தான் இறக்கப் போகின்றீர்கள் என உங்களில் யாருக்காவது தெரியுமா? யாருக்காவது இது தெரியுமா? உங்களுக்குத் தெரியாது, அப்படித்தானே? உலகம் முடிவடையப் போகிறது. அது அதற்குரிய நேரத்தில் நடக்கும். ஆனால், அனைத்திற்கும் முதலில், உங்களின் சொந்தக் கடைசிக் காலத்தைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். ஜெகதாம்பாவின் சுலோகனை நினையுங்கள். அவரின் சுலோகன் என்ன? ‘ஒவ்வொரு கணத்தையும் உங்களின் இறுதிக் கணமாகக் கருதுங்கள்.’ அது சடுதியாக நடக்கும். உங்களுக்கு ஒரு திகதி கொடுக்கப்பட மாட்டாது. உலகிற்கும் இல்லை, உங்களின் இறுதிக் கணங்களுக்கும் இல்லை. இவை அனைத்துமே சடுதியாக நடப்பதற்கான விளையாட்டே. ஆகவே, உங்களின் சபையைக் கூட்டுங்கள். ஓ அரசரே! ஓ சுய இராச்சிய அதிகாரி அரசரே! உங்களின் சொந்த சபையைக் கூட்டுங்கள். அதை ஒழுங்காக வைத்திருங்கள். ஏனென்றால், எதிர்காலத்தின் புகழே, அங்கே நீதியும் ஒழுங்குமுறையும் இருக்கும் என்பதேயாகும். அது அங்கே இயல்பாக இருக்கும். அங்கே அன்பிற்கும் சட்டத்திற்கும் இடையில் சமநிலை இருக்கும். அது இயல்பாக இருக்கும். ஒருவர் அரசராக இல்லாவிட்டால், அவரால் அந்தச் சட்டத்தை அமுலாக்க முடியாது என்றொரு சட்டம் உள்ளது. தற்காலத்தில், மக்கள் தொடர்ந்தும் சட்டங்களை உருவாக்குகிறார்கள். தற்காலத்தில் பொலிஸ்காரர்களும் சட்டத்தைத் தமது கைகளில் எடுத்துக் கொள்கிறார்கள். எவ்வாறாயினும், அங்கே, இயல்பாகவே அன்பிற்கும் சட்டத்திற்கும் இடையில் சமநிலை இருக்கும்.
எனவே, இப்போது சர்வசக்திவான் ஆசனத்தில் அமர்ந்திருங்கள். அப்போது, அந்தப் பௌதீக அங்கங்கள், சக்திகள், நற்குணங்கள் என்பவை உங்களுக்கு ‘ஆம், எனது பிரபுவே! ஆம், எனது பிரபுவே!’ எனக் கூறும். அவை உங்களை ஏமாற்றாது. ஆம், நான் வந்தேன். எனவே, இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அடுத்த வருடம் நினைவு நாளில் நீங்கள் என்ன கொண்டாட்டத்தைக் கொண்டாடுவீர்கள்? பிராந்தியங்கள் அனைத்தும் கொண்டாடுவார்கள்தானே? நீங்கள் பல கௌரவிக்கும் விழாக்களையும் நடத்தினீர்கள். இப்போது, ஒவ்வோர் எண்ணத்திலும் ஒவ்வொரு கணமும் வெற்றி விழாவைக் கொண்டாடுங்கள். இந்த விழாவைக் கொண்டாடுங்கள். வீணானவை அனைத்தும் இப்போது முடிவடைய வேண்டும். ஏனென்றால், நீங்கள் வெற்றி ரூபங்கள் ஆகும்போது, ஆத்மாக்கள் முழுமையாக மனநிறைவடையும் வெற்றியை அடைவார்கள். நம்பிக்கை இழந்தவர்களாக இருப்பதில் இருந்து, எங்கும் தூய நம்பிக்கைத் தீபங்கள் ஏற்றப்படும். ஏதாவது வகையான வெற்றி ஏற்படும்போது, அவர்கள் தீபங்களை ஏற்றுகிறார்கள்தானே? இப்போது, உலகில் நம்பிக்கைத் தீபங்களை ஏற்றுங்கள். ஒவ்வோர் ஆத்மாவிலும் ஏதாவதொரு வகையான நம்பிக்கையின்மை உள்ளது. நம்பிக்கை இழந்திருப்பதனால், அவர்கள் துயரத்துடனும் பதட்டத்துடனும் இருக்கிறார்கள். ஆகவே, ஓ அழியாத தீபங்களே, இப்போது நம்பிக்கைத் தீபங்களுடன் தீபாவளியைக் கொண்டாடுங்கள். முதலில் நீங்கள், பின்னரே அனைவரும். நீங்கள் இதைக் கேட்டீர்களா?
பாப்தாதா குழந்தைகளான உங்களின் அன்பைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். அன்பெனும் பாடத்தின் சதவீதம் நன்றாக உள்ளது. அதிகளவு முயற்சி செய்து நீங்கள் ஏன் இங்கே வந்துள்ளீர்கள்? எது உங்களை இங்கே அழைத்து வந்தது: அது புகைவண்டியா அல்லது விமானமா? அன்பே உங்களை இங்கே அழைத்து வந்தது. நீங்கள் இங்கே அன்பெனும் விமானத்தில் வந்துள்ளீர்கள். எனவே, நீங்கள் அன்பெனும் பாடத்தில் சித்தி அடைந்துள்ளீர்கள். நீங்கள் இப்போது மாஸ்ரர் சர்வசக்திவான்கள். அதனால் அந்தப் பாடத்தில் நீங்கள் சித்தி அடைந்துள்ளீர்கள். எனவே, இந்தப் பஞ்சபூதங்களும் மாயையும் சம்ஸ்காரங்களும் உங்களின் சேவகர்கள் ஆகிவிடும். அவை தமது அதிபதியின் கட்டளைகளுக்காக ஒவ்வொரு கணமும் காத்திருக்கும். தந்தை பிரம்மாவும் ஓர் அதிபதியாக, இத்தகைய உள்ளார்ந்த சூட்சும முயற்சியைச் செய்தார். அதனால் அவர் எப்படிச் சம்பூரணம் ஆகினார் என்பதையே நீங்கள் உணரவில்லை. கூண்டு திறந்தது, பறவை பறந்து சென்றது. பௌதீக உலகினதும் பௌதீக சரீரத்தினதும் கர்மக்கணக்குகள் என்ற கூண்டு திறந்தது, பறவை பறந்து சென்றது. தந்தை பிரம்மாவும் இப்போது குழந்தைகளான உங்கள் எல்லோரையும் தனது இதயத்தின் ஆழத்தில் இருந்து அதிகளவு அன்புடன், ‘விரைவாக வாருங்கள்! விரைவாக வாருங்கள்! இப்போதே வாருங்கள்! இப்போதே வாருங்கள்!’ என்று கூறி, அழைக்கிறார். எனவே, நீங்கள் இறக்கைகளைப் பெற்றுள்ளீர்கள்தானே? இப்போது, நீங்கள் எல்லோரும் ஒரு விநாடியில் உங்களின் இதயங்களில் இந்த அப்பியாசத்தைச் செய்ய வேண்டும். அதை இப்போதே செய்யுங்கள். சகல எண்ணங்களையும் முடியுங்கள். இந்த அப்பியாசத்தைச் செய்யுங்கள்: ஓ பாபா! இனிய பாபா! அன்பான பாபா! நாம் இப்போதே உங்களைப் போல் அவ்யக்த ரூபங்களாக ஆகப் போகிறோம். (பாபா அப்பியாசத்தைச் செய்வித்தார்). அச்சா.
எங்கும் உள்ள அன்பான, சக்திவாய்ந்த குழந்தைகள் எல்லோருக்கும் சுய இராச்சிய அதிகாரம் கொண்டிருப்பதனால் உலகிற்கான உரிமையைக் கொண்டிருக்கும் குழந்தைகள் எல்லோருக்கும் மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற ஆசனத்தில் அமர்ந்திருக்கும் தீவிர முயற்சியாளர் குழந்தைகள் எல்லோருக்கும் பஞ்சபூதங்களுக்கும் சம்ஸ்காரங்களுக்கும் சக்திகளுக்கும் நற்குணங்களுக்கும் கட்டளை இடும் அவற்றின் சதா அதிபதிகளான உலக இராச்சிய அதிகாரம் உள்ள குழந்தைகளுக்கும் தந்தையைப் போல் சம்பூரணத்தையும் முழுமையையும் நெருக்கமாகக் கொண்டு வருபவர்களுக்கும் இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் ஒவ்வொரு மூலையிலும் உள்ள குழந்தைகள் எல்லோருக்கும் சக்தி தினத்திற்காக பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.
இப்போது குறிப்பாக பாப்தாதா யாரை நினைக்கிறார்? குழந்தை ஜனக்கை. அவர் நிச்சயமாக ஒன்றுகூடலில் பிரசன்னமாக இருப்பார் என்று விசேடமான செய்தியை அனுப்பியுள்ளார். எனவே, நீங்கள் இலண்டன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, ஆசியா அல்லது பாரதம் முழுவதில் இருந்தும் வந்திருந்தாலும் குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் உங்களின் பெயருக்கும் சிறப்பியல்புக்கும் அன்பும் நினைவுகளும் உரித்தாகட்டும். நீங்கள் எல்லோரும் தனிப்பட்ட அன்பையும் நினைவுகளையும் பெறுகிறீர்கள்தானே? அச்சா.
இன்று, மதுவனத்தைச் சேர்ந்தவர்களையும் பாபா நினைத்தார். அவர்கள் முன்னால் அமர்ந்திருக்கிறார்கள். மதுவனத்தில் உள்ள நீங்கள் எல்லோரும் குறிப்பாக உங்களின் துறவறத்தின் பாக்கியத்தைச் சூட்சுமமான முறையில் பெறுகிறீர்கள். ஏனென்றால், நீங்கள் பாண்டவ பவன், மதுவனம் மற்றும் சாந்திவானில் வசிக்கிறீர்கள். எவ்வாறாயினும், பாபாவைச் சந்திக்க இருப்பவர்கள் ஒரு வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஆனால் மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் பார்வையாளர்களாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எவ்வாறாயினும், பாபா எப்போதும் மதுவனத்தைச் சேர்ந்தவர்களை, தனது இதயத்தில் இருப்பவர்களாகவே நினைவு செய்கிறார். மதுவனத்தில் வீணானவற்றின் பெயரும் சுவடும் முடிவடைய வேண்டும். சேவை செய்வதிலும் உங்களின் ஸ்திதியிலும் மகத்தானவர்களாக இருங்கள். எல்லாவற்றிலும் மகத்தானவர்களாக இருங்கள். இது சரிதானே? பாபா மதுவனத்தைச் சேர்ந்தவர்களை மறக்கவில்லை. ஆனால், மதுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தியாகம் செய்வதற்கான வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசீர்வாதம்:
நீங்கள் மற்றவர்களுக்கு உங்களின் நெற்றியில் திருப்தியின் ஜொலிப்பின் காட்சியை வழங்கி, காட்சிகளை அருளும் ரூபம் ஆகுவீர்களாக.திருப்தியின் ஜொலிப்பு, சதா திருப்தியாக இருப்பவர்களின் நெற்றிகளில் எப்போதும் ஜொலிக்கும். யாராவது சந்தோஷம் இல்லாத ஆத்மா அவர்களைப் பார்த்தாலும் அந்த ஆத்மாவும் சந்தோஷம் அடைவார். அவரின் சந்தோஷம் அற்ற நிலை முடிவடைந்துவிடும். திருப்தியின் சந்தோஷம் என்ற பொக்கிஷத்தைக் கொண்டவர்களை நோக்கி எல்லோரும் இயல்பாகவே கவரப்படுவார்கள். அவர்களின் சந்தோஷமான முகங்கள், தங்களை அவ்வாறு ஆக்கிய ஒரேயொருவரின் அறிமுகத்தைக் கொடுக்கும் உயிருள்ள பலகைகளாக விளங்கும். எனவே, திருப்தியாக இருப்பதுடன் மற்றவர்களையும் திருப்திப்படுத்துகின்ற திருப்தி இரத்தினங்கள் ஆகுங்கள். அப்போது பலரும் காட்சிகளைப் பெற முடியும்.
சுலோகம்:
மற்றவர்களைப் புண்படுத்துபவர்களின் வேலை, அவர்களைப் புண்படுத்துவதே. ஆனால் உங்களின் கடமை, உங்களைப் பாதுகாத்துக் கொள்வதே.ஏகாந்தத்தின் மீது அன்பு வைத்து, ஒற்றுமையையும் ஒருமுகப்படுத்தலையும் கிரகியுங்கள்.
ஒரு திறப்பு விழாவின் போது, தேங்காய் உடைத்து, ரிப்பன் வெட்டுவதைப் போல், எல்லோருடனும் ஒரே வழிகாட்டல், ஒரே பலம், ஒரே நம்பிக்கையும் ஒற்றுமையும் என்ற ரிப்பனை வெட்டி, திருப்தி மற்றும் சந்தோஷம் என்ற தேங்காயை உடையுங்கள். இதனால் நிலத்திற்கு நீர் ஊற்றுங்கள். அதன்பின்னர் உங்களுக்கு எவ்வளவு வெற்றி கிடைக்கிறது எனப் பாருங்கள்.