09.05.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இங்கு சுயத்தை உணர்ந்து கொள்வதற்கே வந்துள்ளீர்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதிப் பரமாத்மாவாகிய தந்தையை நினைவு செய்யுங்கள். ஆத்ம உணர்வில் இருப்பதற்குப் பயிற்சி செய்யுங்கள்.

கேள்வி:
நீங்கள் ஓர் ஆத்மாவின் காட்சியைக் கண்டிருக்கிறீர்களா என வினவும் மக்களுக்குக் குழந்தைகளாகிய நீங்கள் என்ன பதிலை அளிக்க வேண்டும்?

பதில்:
அவர்களுக்குக் கூறுங்கள்: ஆம், நாங்கள் ஓர் ஆத்மாவின் காட்சியைக் கண்டிருக்கிறோம். ஓர் ஆத்மா ஓர் ஒளிப்புள்ளி வடிவமானவர். ஆத்மாவே நல்ல, தீய சம்ஸ்காரங்களைக் கொண்டிருக்கிறார். நாங்கள் இப்பொழுது ஆத்மாவைப் பற்றிய ஞானம் அனைத்தையும் பெற்றுவிட்டோம். நாங்கள் ஓர் ஆத்மாவின் காட்சியைக் காண்பதற்கு முன்னர் நாங்கள் சரீர உணர்வு உடையவர்களாக இருந்தோம். நாங்கள் இப்பொழுது பரமாத்மாவிடம் இருந்து கடவுளைப் பற்றி புரிந்துணர்வையும், ஆத்மாவைப் பற்றிய புரிந்துணர்வையும் பெற்றுவிட்டோம்.

பாடல்:
அவர் எங்களிடம் இருந்து பிரிக்கப்படவும் மாட்டார், அங்கு எந்தத் துன்பமும் இருக்கவும் மாட்டாது.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பாடலைக் கேட்டீர்கள். ஆன்மீகக் குழந்தைகள் சரீரத்தினூடாக இதனைப் பாடுகிறார்கள். அவர்களில் எவரும் தாங்கள் சாதுக்களுக்கு அல்லது புனிதர்களுக்குத் தங்களை அர்ப்பணிப்பதாகக் கூற மாட்டார்கள். நாங்கள் அவருடன் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதையும், இங்கு எங்கள் சரீரங்களை விட்டு நீங்கவேண்டும் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இதனாலேயே கூறப்பட்டுள்ளது: நாங்கள் இச்சரீரங்களை விட்டு நீங்கித் தந்தையுடன் திரும்பவும் வீட்டுக்குச் செல்வோம். எங்களைத் திரும்பவும் அவருடன் அழைத்துச் செல்வதற்குத் தந்தை வந்துவிட்டார். இது பெரும் புரிந்துணர்வுக்குரிய ஒரு விடயமாகும். குழந்தைகள் இப்போது அழைக்கிறார்கள்: வந்து தூய்மையற்ற எங்களைத் தூய்மை ஆக்குங்கள். ஆகவே, நான் என்ன செய்ய வேண்டும்? இங்கு நான் உங்களைத் தனியே விட்டுப் போக மாட்டேன். இம்முழு உலகமும் தூய்மை அற்றதாகும், உங்களை இந்தத் தூய்மையற்ற உலகத்தில் இருந்து தூய உலகத்துக்கு அழைத்துச் செல்வதற்குத் தந்தை வந்துவிட்டார். அவர் ஆத்மாக்களாகிய எங்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்வார். இம்முழு உலகமும் விகாரமானது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் ஒருவரை விகாரம் உடையவரும், தூய்மை அற்றவரும் என அழைத்தால், அவர் குழப்பம் அடைவார். நீங்கள் மக்களுக்கு மிகவும் சாதுரியமாக விளங்கப்படுத்த வேண்டும். ஒரு தந்தையைப் புகழுங்கள்! இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தைப் பெற்று விட்டீர்கள். நீங்கள் மிகவும் விவேகமாகப் பேச வேண்டும். ஒருவர் மிகவும் அதிகமாகக் கேள்விகளைக் கேட்பதைப் பார்க்கும் பொழுது, நீங்கள் இன்னமும் இதில் பலவீனமாக இருக்கிறீர்கள் எனவும், உங்கள் சிரேஷ்ட சகோதரி வந்து உங்களுக்குப் பதிலளிப்பார் எனவும் கூறுங்கள். சிவபாபாவே பேசுகிறார் எனக் கூறுங்கள். கடவுள் கூறுகிறார்: மனிதர்கள் அனைவரும் தூய்மை அற்றவர்கள்! தூய்மையற்ற மனிதர்களைக் கடவுள் என அழைக்கப்பட முடியாது. மக்கள் தூய்மை அற்றவர்கள் என்பதால், அவர்கள் தூய்மையாக்குபவரை அழைக்கிறார்கள். சரீரதாரிகள் கடவுள் என அழைக்கப்பட முடியாது. அசரீரியான சிவனே கடவுள் என அழைக்கப்படுகிறார். சிவனுக்குப் பல ஆலயங்கள் உள்ளன. அவர்கள் இவ்விடயத்தைப் புரிந்து கொள்ளும் பொழுது மாத்திரமே, அவர்களால் பின்னர் இங்கு இருக்க முடியும். எல்லாவற்றுக்கும் முதலில், அவர்களுக்குக் கூறுங்கள்: கடவுள் சிவனே பேசுகிறார்: சிவபாபா கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். அவருக்குத் தனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்கும் கூட அவர்களுடைய சொந்தச் சூட்சும சரீரங்கள் உள்ளன, அவர்கள் கண்களுக்குத் தென்படுகின்றார்கள். அவர் கண்களுக்குத் தென்படுவதில்லை. அவர் பரமாத்மாவாகிய பரமதந்தை என அழைக்கப்படுகிறார். நீங்களும் கூறுகிறீர்கள்: ஆத்மாவாகிய நான், ஒரு சரீரத்தை விட்டு நீங்கி, இன்னுமொன்றை எடுக்கிறேன். நீங்கள் ஆத்மாவாகிய உங்களின் காட்சியைக் கண்டிருக்கிறீர்கள். பக்திமார்க்கத்தில், ஒரு காட்சியைப் பெறுவதற்காக மக்கள் தீவிர பக்தி செய்கிறார்கள். எவ்வாறாயினும், பக்தி செய்பவர்கள் ஒருபொழுதும் கடவுளின் காட்சியைக் கண்டிருக்கவில்லை. அவர் என்னவாக இருக்கிறார் என்பதை அவர்கள் முற்றாகவே அறிய மாட்டார்கள்! அவர் அசரீரியானவர் என அவர்கள் இலகுவாகக் கூறுகிறார்கள். ஆத்மாவே பேசுகிறார். ஆத்மாவிலேயே சம்ஸ்காரங்களும் இருக்கின்றன. ஓர் ஆத்மா தனது சரீரத்தை விட்டு நீங்கும்பொழுது, ஆத்மாவினாலோ அல்லது சரீரத்தினாலோ பேச முடியாது. ஆத்மா இன்றிச் சரீரத்தினால் எதையும் செய்ய முடியாது. எல்லாவற்றுக்கும் முதலில், ஆத்மாவை இனங்கண்டு கொள்ளுங்கள்! தந்தையினூடாக மாத்திரமே உங்களால் தந்தையை இனங்காண இயலும். ஓர் ஆத்மாவால் தன்னை அறியவோ அல்லது பார்க்கவோ முடியாமல் இருக்கையில், அவரால் எவ்வாறு பரமாத்மாவாகிய பரமதந்தையின் காட்சியைக் காண முடியும்? ஓர் அற்புதமான நட்சத்திரம் நெற்றியின் மத்தியில் பிரகாசிப்பதாக அவர்கள் பேசினாலும், ஆத்மாவில் 84 பிறவிகளின் பாகம் பதியப்பட்டுள்ளது என்பதை எவரும் அறியார். மனிதர்கள் முற்றாகவே சரீர உணர்வு உடையவர்கள் ஆவர். தந்தை கூறுகிறார்: இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, பின்னர் கூறுவதைச் செவிமடுங்கள். ஆத்மாவே செவிமடுப்பதனால், ஆத்மாவுக்கு விளங்கப்படுத்துகின்ற பரமாத்மாவும் இருக்க வேண்டும். மனிதர்களே மனிதர்களுக்கு விளங்கப்படுத்துகிறார்கள். ஆத்மாக்களின் ஞானம் எவருக்கும் கிடையாது. இதனாலேயே முதலில் நீங்கள் ஆத்மாவை அறிந்துகொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. சுயத்தை உணர்ந்து கொள்ளுங்கள். ஆத்மாவே வினவுகிறார்: நான் எவ்வாறு ஆத்மாவை உணர்ந்து கொள்ள முடியும்? எவ்வாறு ஓர் ஆத்மாவில் முழுப் பாகமும் பதியப்பட்டுள்ளது என்பதை எவரும் அறியார். சாதுக்கள் அல்லது சந்நியாசிகளில் எவருமே இவ்விடயங்களை உங்களுக்குக் கூற முடியாது. தந்தையே வந்து உங்களை உணர்ந்து கொள்ளுமாறு செய்ய வேண்டும். தந்தை கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தையான நான் கூறுவதைச் செவிமடுங்கள்! ஆத்மாக்கள் பரமாத்மாவைச் சந்திக்கும் பொழுது மாத்திரமே இச்சம்பாஷணை நடைபெற முடியும். எப்பொழுது பரமாத்மாவாகிய பரமதந்தை வருகிறார் என்பதையோ அல்லது எவ்வாறு அவர் வந்து விளங்கப்படுத்துகிறார் என்பதையோ உலகம் அறியாது. மக்கள் இதனை அறிந்து கொள்ளாத காரணத்தினால், குழப்பமடைய வைக்கின்ற அபிப்பிராயங்கள் உள்ளன. அவை அனைத்தும் சமயநூல்களில் தங்கியுள்ளது. தந்தை கூறுகிறார்: அவற்றிலிருந்து நீங்கள் என்னையோ அல்லது உங்களையோ உணர்ந்து கொள்ள இயலாது. ஆத்மாவே, பரமாத்மா என அவர்கள் கூறுகிறார்கள். அதனைக் கூறுவதனால் என்ன நடைபெறும்? அப்பொழுது யார் எங்களைத் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மை ஆக்குவார்கள்? யாரால் எங்களைத் திரிகாலதரிசி ஆக்க முடியும்? வேறு எவராலும் ஆத்மாவினதோ அல்லது பரமாத்மாவினதோ இந்த ஞானத்தை எங்களுக்குக் கொடுக்க முடியாது. இதனாலேயே தங்கள் தந்தையை அறியாத ஆத்மாக்களே நாஸ்திகர்கள் என நீங்கள் கூறுகிறீர்கள். பின்னர் அம்மக்கள், பக்தி செய்யாதவர்களே நாஸ்திகர்கள் என கூறுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் எந்தப் பக்தியையும் செய்வதில்லை. உங்களிடம் பல சிறந்த படங்கள் உள்ளன. படங்களில் அனைத்து விடயங்களும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. ஒருவர் உலக வரைபடத்தைப் பார்த்து இருக்காவிட்டால், அவர் எவ்வாறு எங்கு இலண்டனோ அல்லது அமெரிக்காவோ உள்ளது என அறிந்து கொள்வார்? ஆசிரியர் அவர்களுக்கு வரைபடத்தைக் காண்பித்து, அவர்களுக்கு விளங்கப்படுத்தும் பொழுது மாத்திரமே அவர்கள் அதனை அறிந்து கொள்வார்கள். இதனாலேயே நீங்கள் படங்களை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். எவ்வாறாயினும், எவராலும் விவரமாக அறிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. சூரிய வம்சத்தினர் எங்கிருந்து தங்கள் இராச்சியத்தைக் கோரினார்கள்? பின்னர் எவ்வாறு சந்திர வம்சத்தவர்கள் தங்கள் இராச்சியத்தைக் கோரினார்கள்? அவர்கள் சூரிய வம்சத்தவர்களுடன் யுத்தம் செய்தார்களா? அனைவரும் தங்கள் ஆஸ்தியை ஒரு தந்தையிடம் இருந்தே பெறுகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சூரிய, சந்திர வம்சத்தவர்கள் உலக அதிபதிகளாக இருக்கிறார்கள். அங்கு வேறெந்தச் சமயங்களும் இல்லாததனால், எவருடனுமான யுத்தத்தைப் பற்றிய கேள்விக்கே இடமில்லை. நீங்கள் உலக அதிபதி ஆகுகிறீர்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். அங்கு ஒரு யுத்தம் நடைபெற்று, சூரியவம்சத்தைச் சந்திரவம்சம் தோற்கடித்தது என்பதல்ல. இல்லை, அவை இரண்டும் வேறுபட்ட வம்சங்கள் ஆகும். அனைத்துப் படங்களிலும் உள்ள ஞானம் அனைத்தும் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. மாணவர்கள் ஒரு பாடசாலையில் கற்கும்பொழுது, அவர்கள் புத்தியில் ஞானம் அனைத்தும் உள்ளது. சிறிய குழந்தைகளுக்குப் புத்தகங்களில், இது ஒரு யானை என அல்லது இது இன்னது என்று படங்கள் காண்பிக்கப்படுகின்றன. நீங்கள் இப்பொழுது இந்நாடகத்தை அறிவீர்கள். உங்கள் புத்தியில் முழுச் சக்கரமும் உள்ளது. இவ்விடயங்கள் அனைத்தும் புதியவை, பிராமண குலத்துக்கு உரியவர்கள் மாத்திரமே இவ்விடயங்களைப் புரிந்து கொள்வார்கள். ஏனையோர் வெறுமனே அமர்ந்திருந்து பயனின்றி வாதிடுகிறார்கள். அனைவருக்கும் அனைத்து விடயங்களும் ஒரேநேரத்தில் விளங்கப்படுத்தப்படும் என்பதல்ல, இல்லை. நீங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் விளங்கப்படுத்த வேண்டும். முதலில் அவர்கள் வகுப்பில் அமரும் முன்னர் தந்தையையும், ஆத்மாவையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது ஒரு நியதியாகும். இல்லாவிட்டால், அவர்களால் எதையும் புரிந்து கொள்ள இயலாதிருக்கும். அவர்கள் தொடர்ந்தும் சந்தேகங்களை எழுப்புவார்கள். ஒரு கடவுள் மாத்திரமே இருக்கிறார் எனவும், அவர் அதிமேன்மையானவர் எனவும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். தேவர்களைக் கூடக் கடவுள் என்று அழைக்க முடியாது. நீங்கள் இப்பொழுது ஆத்மாவின் ஞானத்தைப் பெற்றுவிட்டீர்கள். ஆத்மாவே செயலின் பலனை அனுபவம் செய்கிறார். ஆத்மாவிலேயே சம்ஸ்காரங்கள் இருக்கின்றன. ஆத்மா இப்புலன்களினூடாகச் செவிமடுக்கிறார். பகவான் ஒரேயொருவரே தந்தையாகிய கடவுள், நீங்கள் அவரிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். பாபா விளங்கப்படுத்தி உள்ளார்: நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா எனும் நம்பிக்கையைக் கொண்டிருந்து, உங்கள் புத்தியின் யோகத்தைத் தந்தையுடன் தொடர்புபடுத்துங்கள். நீங்கள் பிறவிபிறவியாகப் பக்தி செய்து வந்துள்ளீர்கள். அனுமனை வழிபடுபவர்கள் தொடர்ந்தும் அனுமனை நினைவு செய்வார்கள், ஸ்ரீகிருஷ்ணரை வழிபடுபவர்கள் தொடர்ந்தும் ஸ்ரீகிருஷ்ணரை நினைவு செய்வார்கள். நீங்கள் ஆத்மாக்கள் எனவும், பரமாத்மா உங்கள் பரமதந்தை எனவும் இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவரை நினைவு செய்வதனால் மாத்திரமே சுவர்க்கத்தைப் படைப்பவராகிய தந்தையிடம் இருந்து நீங்கள் ஓர் ஆஸ்தியைப் பெறுவீர்கள். நாங்கள் நிச்சயமாகச் சுவர்க்கத்தில் பிரவேசிப்போம். பாரதம் சுவர்க்கமாக இருந்தது. இப்பொழுது சுவர்க்கம் இல்லை, ஆகவே சுவர்க்க இராச்சியம் இல்லை. நரகத்தில் அது இராவண இராச்சியமாக இருக்கிறது. நீங்கள் எவ்வாறு உங்கள் இராச்சியத்தை ஆட்சிசெய்தீர்கள் அல்லது பின்னர் நீங்கள் எவ்வாறு கீழிறங்கி வந்தீர்கள் என்பதைப் பற்றிய எதையும் நீங்கள் அறிந்திருக்கவில்லை. மறுபிறவி எடுக்கும் பொழுது நீங்கள் கீழிறங்கி வர வேண்டும் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்வதனால், நீங்கள் தூய்மையாகி, உங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெறுவீர்கள். நாங்கள் தந்தைக்கு உரியவர்களாக இருக்கும்பொழுது, நாங்கள் தந்தையின் ஆஸ்தியைப் பெறுகிறோம். எவ்வாறாயினும், நாங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகி, யோகசக்தியின் மூலம் தூய்மையாகும் வரையில், எங்களால் ஓர் ஆஸ்தியைப் பெற முடியாது. தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் பாவச் செயல்களை வென்றவர்கள் ஆகுவீர்கள். இதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இவ்விளக்கம் கொடுக்கப்பட வேண்டும். சிலர் புரிந்து கொள்வார்கள், ஆனால் ஏனையோரோ சண்டை செய்யும் குணம் உடையவர்களாகி, உரத்துச் சத்தமிட ஆரம்பிப்பார்கள். தடைகளை உருவாக்குகின்ற ஒருவரோ அல்லது இன்னுமொருவரோ இருப்பார்கள். எவராவது குழப்பங்களை உருவாக்கினால், அவருக்குக் கூறுங்கள்: நீங்களே வந்து இதனைப் புரிந்து கொள்ளுங்கள். இவ்விடயங்கள் அனைத்தையும் புரிந்து கொள்வதற்கு நீங்கள் ஏழு நாட்களுக்கு ஒரு பத்தியில் இருக்க வேண்டும் என்பது இங்கே ஒரு நியதியாகும். இது புதிய ஞானம் என்பதனால், மக்கள் குழப்பம் அடைகிறார்கள். ஒரு புதிய நிலையம் திறக்கப்படும் பொழுது, அனைவருக்கும் விளங்கப்படுத்தக்கூடிய திறமைசாலியான ஒருவர் அங்கு இருக்க வேண்டும். அனைவரினதும் கடவுள் ஒருவரே, ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள் ஆவார்கள். பரமாத்மாவே அனைவரினதும் தந்தை ஆவார். மக்கள் அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! ஆகவே, அவர் நிச்சயமாகத் தூய்மையாக இருக்க வேண்டும். அவர் ஒருபொழுதும் தூய்மையற்றவர் ஆகுவதில்லை. தந்தை மாத்திரமே வந்து தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குகிறார். சத்தியயுகத்தில் அனைவரும் தூய்மையானவர்கள் ஆவார்கள். கலியுகத்தில் அனைவரும் தூய்மை அற்றவர்கள் ஆவார்கள். தூய்மை அற்றவர்கள் பலர் இருக்கிறார்கள், மிகச்சொற்பளவினரே தூய்மையானவர்கள் ஆவார்கள். அனைவருமே சத்தியயுகத்துக்குச் செல்வார்கள் என்றில்லை. தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆகுபவர்களே தூய உலகத்துக்குச் செல்வார்கள். ஏனைய அனைவரும் நிர்வாணா தாமத்துக்குச் செல்வார்கள். உலகில் உள்ள அனைவரும் இங்கு வழிகாட்டல்களைப் பெறுவதற்கு வருவார்கள் என்றில்லை என்பதை நீங்களும் அறிவீர்கள். முழு உலகத்துக்கும் வழிகாட்டல்களைக் கொடுப்பது உங்களுக்குச் சிரமமாக இருக்கும். இது இப்பொழுது அனைவரும் கணக்கைத் தீர்த்துக் கொள்வதற்குரிய காலமாகும். அனைத்தும் அழிக்கப்பட வேண்டும். மக்கள் எந்தத் தொந்தரவையும் உருவாக்காமல் அனைத்தையும் அமைதியாக அமர்ந்திருந்து செவிமடுக்கும் வண்ணம் இவை அனைத்தையும் விளங்கப்படுத்துவதற்கு ஒரு மிகச்சிறந்த வழிமுறை தேவை. எல்லாவற்றுக்கும் முதலில், தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். சிவபாபாவே மட்டுமே தூய்மையாக்குபவர் ஆவார். அவர் மாத்திரமே எங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். கீதையின் இக்கூற்றுக்கள் மிகவும் பிரபல்யமானவை: தூய்மையாக்குபவராகிய தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இவ்வார்த்தைகள் கீதையுடன் மாத்திரமே தொடர்புபட்டுள்ளன. சிவபாபா கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! நானே தூய்மை ஆக்குபவராகிய, சர்வசக்திவான் ஆவேன். நானே கீதா ஞானத்தை அளிப்பவரும், ஞானக்கடலும் ஆவேன். இவை கீதையின் வார்த்தைகள் ஆகும். இவை பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் வாசகங்கள் என மக்கள் கூறுகிறார்கள், ஆனால் நீங்களோ அவை கடவுள் சிவனின் வாசகங்கள் எனக் கூறுகிறீர்கள். கடவுள் அசரீரியானவர் ஆவார். அவர் ஒருபொழுதும் மறுபிறவி எடுப்பதில்லை. அவர் ஒரு தெய்வீகமானதும், தனித்துவமானதுமான பிறவியை எடுக்கிறார். அவரே விளங்கப்படுத்துகிறார்: நான் பாக்கிய இரதம் (பகீரத்) என்று அழைக்கப்படுகின்ற, ஒரு சாதாரண பழைய சரீரத்தில் பிரவேசிக்கிறேன். அவர் பிரம்மாவின் மூலம் படைப்பைப் படைக்கிறார். இதனாலேயே ஒரு மனிதருக்குப் பிரம்மா எனப் பெயரிடப்பட்டது. பௌதீகப் பிரம்மாவாக இருப்பதில் இருந்து அவர் ஒரு தூய சூட்சும தேவதை ஆகுகிறார். தந்தை தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குவதற்கே வருகிறார். ஆகவே, அவர் நிச்சயமாகத் தூய்மையற்ற உலகில், ஒரு தூய்மையற்ற சரீரத்தில் பிரவேசிப்பார். இது விரிவான விளக்கமாகும். எல்லாவற்றுக்கும் முதலில், கடவுள் கூறுகிறார் என விளங்கப்படுத்துங்கள்: நீங்கள் முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்றே, என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்! தூய்மை அற்றதிலிருந்து தூய்மை ஆகுங்கள்! அவர்கள் பாடவும் செய்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! கங்கை எல்லா வேளைகளிலும் இருக்கிறது. நீங்கள் அழைப்பதனால், அவர் நிச்சயமாக எங்கிருந்தாவது வருகிறார். தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குகின்ற அவருடைய பாகத்தை நடிப்பதற்குத் தூய்மையாக்குபவர் வருகிறார். தந்தை கூறுகிறார்: நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள், பின்னர் உங்களில் கலப்படம் கலக்கப்பட்டது. அது யோகசக்தியால் அகற்றப்பட முடியும். நீங்கள் தூய்மை ஆகும்பொழுது, நீங்கள் தூய உலகத்துக்குச் செல்வீர்கள், இந்தத் தூய்மையற்ற உலகம் அழிக்கப்பட்டுவிடும். உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகின்ற அனைத்தையும் மிகவும் நன்றாகக் கிரகியுங்கள். நாங்கள் அதிமேன்மையான தந்தையைப் புகழ்கிறோம். உங்கள் 84 பிறவிகளின் பாகங்களை நடிக்கும் பொழுது, நீங்கள் மிகவும் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டீர்கள் என எல்லையற்ற தந்தை விளங்கப்படுத்துகிறார். நீங்கள் முதலில் தூய்மையாக இருந்தீர்கள், நீங்கள் இப்பொழுது தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். இப்பொழுது, நினைவு யாத்திரையில் நிலைத்து இருப்பதனால், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் ஏணியில் கீழிறங்கி வந்துள்ளீர்கள். இது ஒரு மிகவும் இலகுவான விடயம்: இது குழந்தைகளாகிய உங்களின் புத்திகளில் இருக்க வேண்டும். அதிகாலையில் எழுந்திருந்து இநத ஞானக்கடலைக் கடைந்து, உங்களிடம் வருகின்ற எவருக்கேனும் விளங்கப்படுத்துங்கள். முரளியின் முக்கிய கருத்துக்களைக் குறித்து வைத்துக் கொண்டு, பின்னர் உங்களுக்குள் மீண்டும் மீண்டும் கூறுவதனால், அவை உங்கள் இதயத்தில் உறுதியாக ஆகும். தந்தையை நினைவு செய்வதே முதலாவதும் பிரதானதுமான விடயமாகும். தந்தை கூறுகிறார்: மன்மனாபவ! என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்! நீங்கள் இதனைச் செய்வதும் செய்யாததும் உங்களைப் பொறுத்ததாகும். நீங்கள் தந்தையின் கட்டளையைப் பெற்று விட்டீர்கள். நீங்கள் தூய உலகத்துக்குச் செல்ல விரும்பினால், உங்கள் புத்தியின் யோகம் தூய்மையற்ற உலகத்தை நோக்கி, திசை திருப்பப்படக் கூடாது. விகாரத்தில் ஈடுபடாதீர்கள்! நீங்கள் தொடர்ந்தும் பல விளக்கங்களைப் பெறுகிறீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அதிகாலையில் எழுந்திருந்து, இந்த ஞானக்கடலைக் கடையுங்கள். தந்தை உங்களுக்குக் கூறுகின்ற அனைத்தையும் குறித்து வைத்து, உங்களுக்குள் மீண்டும் மீண்டும் கூறுவதுடன், பின்னர் அவற்றை ஏனையோருக்கும் கூறுங்கள். எல்லாவற்றுக்கும் முதலில், அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தை கொடுங்கள்.

2. தூய உலகத்துக்குச் செல்வதற்கு, உங்கள் புத்தியின் யோகத்தை இந்தத் தூய்மையற்ற உலகத்திலிருந்து அகற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு முதல் இலக்க வியாபாரியாகி, உங்களின் ஒவ்வொரு வினாடியையும் எண்ணத்தையும் பயன்படுத்தி வருமானத்தைச் சேமித்து, அதனால் பல்கோடீஸ்வரர் ஆகுவீர்களாக.

முதல் இலக்க வியாபாரிக்கு தன்னை மும்முரமாக வைத்திருக்கும் வழிமுறை தெரியும். ஒரு வியாபாரி என்றால், ஓர் எண்ணத்தையேனும் வீணாக்காதவர் என்று அர்த்தம். ஆனால், ஒவ்வோர் எண்ணத்தாலும் சம்பாதிப்பவர் ஆவார். எப்படி அந்த வியாபாரிகள் ஒவ்வொரு சதத்தையும் பயன்படுத்தி, அதைப் பல்கோடிகளாக ஆக்குகிறார்களோ, அதேபோல், ஒவ்வொரு விநாடியும் ஒவ்வோர் எண்ணத்தாலும் நீங்கள் எதையாவது சம்பாதிக்கும்போது, நீங்கள் பல்கோடீஸ்வரர் ஆகுவீர்கள். இவ்வாறு செய்வதன் மூலம், உங்களின் புத்தி அலைபாய்வதில் இருந்து நின்றுவிடும். வீணான எண்ணங்களைக் கொண்டிருக்கும் முறைப்பாடும் முடிந்துவிடும்.

சுலோகம்:
எதையாவது வேண்டிக் கொண்டே இருப்பவர்களால் ஒருபோதும் சந்தோஷப் பொக்கிஷத்தால் நிரம்பியவர் ஆகமுடியாது.

அவ்யக்த சமிக்ஞை: சதா ஆட்ட அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவயுங்கள்.

சதா மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற ஆசனத்தில் சதா அமர்ந்திருப்பவர்களால் மட்டுமே சதா ஆட்ட, அசைக்க முடியாமல் இருக்க முடியும். பாப்தாதா கூறுகிறார்: நீங்கள் உங்களின் சரீரத்தைத் துறக்க வேண்டி இருந்தாலும், உங்களின் சந்தோஷத்தைக் கைவிடக் கூடாது. அதனுடன் ஒப்பிடும்போது பணம் எதுவுமே இல்லை. சந்தோஷப் பொக்கிஷத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு, எதுவும் கஷ்டம் இல்லை. ஏனென்றால், சதா ஒத்துழைக்கும் சேவையாளர் குழந்தைகளுடன் பாப்தாதா எப்போதும் இருப்பதனால், எதையிட்டும் பயப்பட வேண்டியதில்லை.