09.06.24    Avyakt Bapdada     Tamil Lanka Murli    15.02.20     Om Shanti     Madhuban


உங்களின் மனதைச் சுத்தமாகவும் புத்தியைத் தெளிவாகவும் வைத்திருந்து, ஒளியாலான, இலேசான தேவதை ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.


இன்று, பாப்தாதா தங்களுக்கே அதிபதிகளாக இருக்கும் குழந்தைகளைப் பார்க்கிறார். சுய இராச்சியம் என்பது பிராமண வாழ்க்கையின் பிறப்புரிமையாகும். ஒவ்வொரு பிராமணரையும் பாப்தாதா சுய இராச்சிய சிம்மாசனத்தில் இருத்தியுள்ளார். ஒவ்வொரு பிராமண ஆத்மாவும் பிறவி எடுத்தவுடனேயே சுய இராச்சியத்திற்கான உரிமையைப் பெற்றுள்ளார். எந்தளவு அதிகமாக உங்களின் சுய இராச்சிய ஸ்திதியில் நீங்கள் ஸ்திரமாக இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்களுக்குள் அதிகளவு ஒளியையும் சக்தியையும் நீங்கள் அனுபவம் செய்வீர்கள்.

இன்று, பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும் ஒளிக்கிரீடத்தைப் பார்க்கிறார். எந்தளவிற்கு நீங்கள் உங்களுக்குள் சக்தியைக் கிரகிக்கிறீர்களோ, அந்தளவிற்கு, உங்களின் ஒளிக்கிரீடமும் வரிசைக்கிரமமாகப் பிரகாசிக்கும். பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் சகல சக்திகளையும் உங்களின் உரிமையாகக் கொடுத்துள்ளார். நீங்கள் ஒவ்வொருவருமே மாஸ்ரர் சர்வசக்திவான் ஆவீர்கள். ஆனால், அதைக் கிரகிப்பதில் நீங்கள் வரிசைக்கிரமமானவர்கள் ஆகுகிறீர்கள். உங்கள் எல்லோரிடமும் சகல சக்திகளின் ஞானமும் இருப்பதையும் நீங்கள் அவற்றைக் கிரகித்திருப்பதையும் பாப்தாதா பார்த்துள்ளார். எவ்வாறாயினும், ஒரு விடயத்தில் வேறுபாடு காணப்படுகிறது. நீங்கள் எந்தவொரு பிராமண ஆத்மாவையும் கேட்டால், அவர்கள் எந்தவொரு சக்தியைப் பற்றியும் மிக நன்றாகப் பேசுவார்கள். அவர்கள் தமது பேறுகளைப் பற்றியும் மிக நன்றாகப் பேசுவார்கள். எனினும், ஒரு குறிப்பிட்ட சக்தி தேவைப்படும்போது, அந்தச் சக்தி இல்லாமல் போவதே அங்குள்ள வேறுபாடு ஆகும். காலம் கடந்து சென்ற பின்னர், குறிப்பிட்ட எந்தச் சக்தி தேவைப்பட்டது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்கிறீர்கள். பாப்தாதா குழந்தைகளான உங்களுக்குக் கூறுகிறார்: சகல சக்திகள் என்ற உங்களின் ஆஸ்தியானது மிகவும் சக்திவாய்ந்தது. எந்தவொரு பிரச்சனையும் உங்களின் முன்னால் நிற்க முடியாது. நீங்கள் சகல பிரச்சனைகளில் இருந்தும் விடுபட வெண்டும். சகல சக்திகளும் உங்களின் விழிப்புணர்வில் வைக்கப்பட வேண்டும். அப்போது, குறிப்பிட்ட வேளையில் எந்தச் சக்தி தேவையோ, அது உங்களின் உபயோகத்திற்காக வெளிப்படும். இதைச் செய்வதற்கு, உங்களின் புத்தியின் இணைப்பைத் தெளிவாக வைத்திருங்கள். உங்களின் புத்தியின் இணைப்பானது எந்தளவிற்கு அதிகமாகச் சுத்தமாகவும் தெளிவாகவும் இருக்கிறதோ, அந்தளவிற்கு, உங்களின் கூர்மையான தீர்மானிக்கும் சக்தியால், உங்களால் அந்த நேரத்திற்குத் தேவையான குறிப்பிட்ட சக்தியைப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். காலத்திற்கேற்ப, ஒவ்வொரு குழந்தையும் தடைகளில் இருந்து விடுபட்டவராக, பிரச்சனைகளில் இருந்து விடுபட்டவராக, கடின உழைப்பில் இருந்து விடுபட்டவராக இருப்பதையே பாப்தாதா பார்க்க விரும்புகிறார். நீங்கள் எல்லோரும் இப்படி ஆகவேண்டும். அதனால், இதை நீண்ட காலம் நீங்கள் பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. பிரம்மாபாபாவிடம் காணப்பட்ட விசேடமான சம்ஸ்காரம் என்னவென்பதை நீங்கள் கண்டீர்கள்: உடனடித் தானங்களும் பெரும் புண்ணியமும். அவரின் வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருந்தே, அவர் கொடுத்த தானங்கள் எல்லாமே உடனடியாகச் செய்யப்பட்டன. அவர் எல்லாவற்றையும் உடனடியாகப் பயிற்சி செய்தார். தந்தை பிரம்மாவின் சிறப்பியல்பு என்னவென்றால், அவரின் தீர்மானிக்கும் சக்தி எப்போதும் மிக வேகமானதாக இருந்தது. பாப்தாதா பெறுபேற்றைப் பார்த்தார். அவர் எல்லோரையும் தன்னுடன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. நீங்கள் எல்லோரும் பாப்தாதாவுடன் சேர்ந்தே செல்லப்போகின்றீர்கள், அப்படித்தானே? அல்லது, அவரைப் பின்பற்றப் போகின்றீர்களா? நீங்கள் அவருடனேயே திரும்ப இருப்பதால், தந்தை பிரம்மாவைப் பின்பற்றுங்கள். செயல்களைச் செய்வதில், தந்தை பிரம்மாவைப் பின்பற்றுங்கள். உங்களின் ஸ்திதியில், அசரீரியான சிவத்தந்தையைப் பின்பற்றுங்கள். எப்படிப் பின்பற்றுவது என உங்களுக்குத் தெரியும்தானே?

இரட்டை வெளிநாட்டவர்களான உங்களுக்கு எப்படிப் பின்பற்றுவது என்று தெரியுமா? பின்பற்றுவதென்பது இலேசானதுதானே? நீங்கள் பின்பற்றுவது மட்டுமே என்பதனால், ‘ஏன்? என்ன? எப்படி?’ என்ற உங்களின் கேள்விகள் எல்லாம் முடிவிற்கு வந்துவிடும். வீணான எண்ணங்களின் அடிப்படையே, ‘ஏன்? என்ன? எப்படி?’ எந்த இந்தக் கேள்விகளே என்பதை நீங்கள் எல்லோரும் அனுபவம் செய்திருக்கிறீர்கள். இவையே வீணான எண்ணங்களுக்கான கருவிகள் ஆகுகின்றன. நீங்கள் தந்தையைப் பின்பற்றும்போது, இந்த வார்த்தைகள் முடிந்துவிடும். ‘எப்படி?’ என்பதல்ல, ஆனால், ‘இப்படி’ என்றிருக்க வேண்டும். ‘தொடர்ந்து இந்த முறையில் செய். இதை இப்படிச் செய்’ என உங்களின் புத்தியானது உடனடியாகவே நிர்ணயிக்கும். ஆகவே, பாப்தாதா குறிப்பாக இந்தச் சமிக்கையைக் குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் கொடுக்கிறார். நீங்கள் இங்கே முதல் தடவை வந்திருந்தாலும் அல்லது பழையவர்களாக இருந்தாலும், உங்களின் மனதைச் சுத்தமாக வைத்திருங்கள்! உங்களில் பலருக்கும் இன்னமும் உங்களின் மனதில் வீணான மற்றும் எதிர்மறையான எண்ணங்களின் சிறிய அல்லது பெரிய கறைகள் காணப்படுகின்றன. இந்தக் கறைகளால், உங்களின் மேன்மையான முயற்சியின், உங்களின் தீவிர முயற்சியின் வேகத்தில் ஒரு நிறுத்தம் ஏற்படுகிறது. பாப்தாதா சதா உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார். அவர் உங்களுக்கு என்ன ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார்? ஒவ்வோர் ஆத்மாவிற்கும் சதா தூய உணர்வுகளையும் தூய ஆசிகளையும் கொண்டிருங்கள். இதுவே சுத்தமான மனதாகும். உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றும் மனோபாவத்தைக் கொண்டிருங்கள். இதுவே சுத்தமான மனதாகும். சுயத்தைப் பற்றியோ அல்லது மற்றவர்களைப் பற்றியோ வீணான எண்ணங்களைக் கொண்டிருத்தல் என்றால், சுத்தமற்ற மனதைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். ஆகவே, உங்களின் மனதைச் சுத்தமாகவும் உங்களின் புத்தியைச் சுத்தமாகவும் தெளிவாகவும் வைத்திருங்கள். உங்களையே நிர்ணயித்துப் பாருங்கள்! உங்களைக் கவனமாகச் சோதித்துப் பாருங்கள். மேலோட்டமாக, ‘நான் நன்றாகத்தான் இருக்கிறேன்! நான் நன்றாகவே இருக்கிறேன்!’ என்றல்ல. இல்லை! இதைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்து, உங்களையே சோதியுங்கள். உங்களின் மனமும் புத்தியும் தெளிவாக இருக்கின்றனவா? அவை மேன்மையானவையாக இருக்கின்றனவா? இப்படி இருக்கும்போது மட்டுமே உங்களின் ஸ்திதியும் டபிள் லைற்றாக இருக்கும். இதுவே உங்களின் ஸ்திதியைத் தந்தையின் ஸ்திதிக்குச் சமமானது ஆக்குவதற்கான இலகுவான வழிமுறையாகும். இதை உங்களால் இறுதியில் பயிற்சி செய்ய முடியாது. நீங்கள் இதை நீண்ட காலத்திற்குப் பயிற்சி செய்ய வேண்டும். எனவே, எப்படிச் சோதிப்பது என்பதை நீங்கள் அறிவீர்களா? உங்களைச் சோதியுங்கள். மற்றவர்களை அல்ல! முன்னரும் பாப்தாதா உங்களுக்கு வியப்பான ஒரு விடயத்தைப் பற்றிக் கூறியுள்ளார். பல குழந்தைகளின் நீண்ட தூரப் பார்வை மிகவும் சக்திவாய்ந்தது. ஆனால் அவர்களின் குறும்பார்வை பலவீனமாக உள்ளது. இதனாலேயே, மற்றவர்களை எடை போடுவது என்று வரும்போது, அவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். உங்களைச் சோதிப்பது என்று வரும்போது, பலவீனம் ஆகாதீர்கள்.

நீங்கள் இப்போது உங்களை பிரம்மாகுமார்கள் என்றோ அல்லது பிரம்மாகுமாரிகள் என்றோ நினைப்பதில் மிகவும் உறுதியானவர்கள் ஆகியுள்ளீர்கள் என பாப்தாதா முன்னரும் உங்களுக்குக் கூறியுள்ளார். நீங்கள் நடக்கும்போதும் செயல்களைச் செய்யும்போதும் என்ன நினைக்கிறீர்கள்? ‘நான் ஒரு பிரம்மாகுமாரி’. ‘நான் ஒரு பிரம்மாகுமார்’. ‘நான் ஒரு பிராமண ஆத்மா’. உங்களின் விழிப்புணர்வையும் சுபாவத்தையும் இந்த முறையில் இயல்பானது ஆக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் அமிர்த வேளையில் விழித்தெழுந்ததும், ‘நான் ஒரு தேவதை’ என நினையுங்கள். இதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: தேவதையான நான், இறைவனின் ஸ்ரீமத்தின்படி, எல்லோருக்கும் செய்தியைக் கொடுப்பதற்காகவும் மேன்மையான செயல்களைச் செய்வதற்காகவும் இந்த பௌதீகச் சரீரத்திற்குள் பிரவேசித்திருக்கிறேன். உங்களின் பணி முடிந்தவுடனேயே, உங்களின் அமைதி ஸ்திதியில் ஸ்திரமாகுங்கள். உங்களின் மேன்மையான ஸ்திதிக்குச் செல்லுங்கள். மற்றவர்களையும் அவர்களின் தேவதை ரூபங்களில் பாருங்கள். உங்களின் இந்த மனோபாவம், படிப்படியாக மற்றவர்களையும் தேவதைகள் ஆக்கும். உங்களின் பார்வை, மற்றவர்களின் மீது ஓர் ஆதிக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் ஒரு தேவதை என்பது உறுதியா? ‘நான் ஒரு தேவதை’ என்பதை நீங்கள் உங்களுக்குள் உறுதியாக்கிக் கொண்டீர்களா? நீங்கள் எல்லோரும் தேவதையாக இருக்கும் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளீர்கள். உங்களால் ஒரு தேவதை ஆகமுடியுமா? அதாவது, ஒரு விநாடியில் உங்களால் டபிள் லைற் ஆகமுடியுமா? உங்களால் இப்படி ஆகமுடியுமா? நீங்கள் இதை நினைப்பதையும் இவ்வாறு ஆகுவதையும் ஒரு விநாடியில் பயிற்சி செய்கிறீர்களா? ஒரு நிமிடத்தில் இல்லையல்லவா? பத்து விநாடிகளில் இல்லை, ஆனால் ஒரு விநாடியில்? அச்சா, ஒரு விநாடியில் இப்படி ஆகக்கூடியவர்கள், இரண்டு விநாடிகளில் அன்றி, ஒரு விநாடியில் ஆகக்கூடியவர்கள், ஒரு கையைத் தட்டுங்கள் (உங்களின் கைகளை உயர்த்துங்கள்). இரண்டு கைகளால் அல்ல! உங்களால் இப்படி ஆகமுடியுமா? வெறுமனே உங்களின் கைகளை உயர்த்தாதீர்கள்! இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள் இல்லை. இதற்கு நேரம் எடுக்குமா? அச்சா, தமக்குச் சிறிது நேரம் தேவை என நினைப்பவர்கள், ஒரு விநாடியில் இப்படி ஆக முடியாது, ஆனால் சிறிது நேரம் எடுக்கும் என நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! (பலர் தமது கைகளை உயர்த்தினார்கள்). இது நல்லது! எவ்வாறாயினும், இறுதிக்கணத்தில் வருகின்ற பரீட்சைத்தாள் ஒரு விநாடியிலேயே வரும். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அது சடுதியாக வரும். அது ஒரு விநாடிக்குரியதாக இருக்கும். அது பரவாயில்லை. நீங்கள் உங்களின் கைகளை உயர்த்தினீர்கள், அத்துடன் இதை உணர்ந்து கொண்டீர்கள்! இதுவும் மிகவும் நல்லது. எவ்வாறாயினும், நீங்கள் புறச் சூழ்நிலைகளின் காரணத்தினால் கட்டாயத்தின் பேரில் பயிற்சி செய்யக்கூடாது. ஆனால் இதை நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். இதைப் பயிற்சி செய்வது மிக, மிக, மிக அத்தியாவசியமானதாகும். ஓகே! அப்படியிருந்தும், பாப்தாதா உங்களுக்குச் சிறிது நேரத்தை மேலதிகமாகத் தருகிறார். உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவை? உங்களுக்கு 2000 ஆம் ஆண்டின் இறுதிவரை நேரம் தேவையா? நீங்கள் எல்லோரும் 21 ஆம் நூற்றாண்டிற்காக ஒரு சவால் விடுத்துள்ளீர்கள். நீங்கள் அந்த முரசங்களை அடிக்கிறீர்கள். உங்களுக்கு இது நினைவிருக்கிறதா? ஒன்றில் சத்தியயுக உலகம் வரும் அல்லது நீங்கள் அந்தச் சூழலை உருவாக்குவீர்கள் என்ற சவாலை நீங்கள் விடுத்தீர்கள். நீங்கள் இந்தச் சவாலை விடுத்தீர்கள்தானே? ஆகவே, அந்தக் கணம்வரை, தாராளமாக நேரம் இருக்கிறது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்களால் முடியுமா என்ற கேள்வி இல்லை. ஆனால் நீங்கள் நிச்சயமாக உங்களின் மீது கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, சரீர உணர்வில் வருவதற்கு உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கிறது? இரண்டு விநாடிகளா? நீங்கள் விரும்பாவிட்டாலும், சரீர உணர்வுடையவர் ஆகும்போது, அதற்கு உங்களுக்கு எவ்வளவு காலம் எடுக்கிறது? அதற்கு எவ்வளவு காலம் எடுக்கிறது? ஒரு விநாடியா? அல்லது, அதைவிடக் குறைந்தளவு நேரமா? நீங்கள் சரீர உணர்வில் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்வதே இல்லை. ஆகவே, இதையும் பயிற்சி செய்யுங்கள். என்னதான் நடந்தாலும், நீங்கள் என்னதான் செய்து கொண்டிருந்தாலும், நீங்கள் இயல்பாகவே ஆத்ம உணர்வுடையவர் ஆகியுள்ளீர்கள் என்றும் சக்திவாய்ந்த ஸ்திதியுடன் இருக்கிறீர்கள் என்பதையும் உணராத வகையில் இருக்க வேண்டும். உங்களின் தேவதை ஸ்திதி இயல்பாக இருக்க வேண்டும். உங்களின் சுபாவத்தை நீங்கள் தேவதை போன்று ஆக்கிக் கொள்ளும்போது, இந்தச் சுபாவம் உங்களின் இயல்பான ஸ்திதி ஆகிவிடும். ஆகவே, மீண்டும் எவ்வளவு காலத்தின் பின்னர் பாப்தாதா உங்களை இதைப் பற்றிக் கேட்கட்டும்? உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவை? ஜெயந்தி, பேசுங்கள்! உங்களுக்கு எவ்வளவு காலம் தேவை? வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லோரின் சார்பாகவும் கூறுங்கள். வெளிநாட்டவர்களான உங்களுக்கு எவ்வளவு காலம் தேவை? ஜனக், கூறுங்கள்! (தாதிஜி கூறினார்: அது இன்றே நடக்கும். நாளை என்று இருக்காது) அது இன்றே நடக்குமாக இருந்தால், நீங்கள் எல்லோரும் இப்போது தேவதைகள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் அப்படி ஆகுவீர்கள் என்பதல்ல, ஆனால் நீங்கள் அப்படி ஆகியுள்ளீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் அப்படி ஆகவேண்டும் என்றால், எப்போது? பிரம்மாபாபாவின் எந்த சம்ஸ்காரத்தை இன்று பாப்தாதா வெளிப்படுத்தினார்? உடனடித் தானங்கள், பெரும் புண்ணியம்!

பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் நேசிக்கிறார். ஆகவே, தனது எந்தவொரு குழந்தையும் எதிலும் குறைந்தவராக ஆகக்கூடாது என அவர் நினைக்கிறார். நீங்கள் ஏன் வரிசைக்கிரமமானவர் ஆகவேண்டும்? நீங்கள் எல்லோரும் முதலாம் இலக்கத்தவர் ஆகினால் நன்றாக இருக்கும்! அச்சா.

பாப்தாதா நிர்வாகப் பிரிவைச்; சேர்ந்த சகோதர, சகோதரிகளுடன் பேசுகிறார்:

உங்களுக்குள்ளே என்ன நிகழ்ச்சியை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள்? மேன்மையான ஆத்மாக்களான நீங்கள், இந்தப் பணியை உங்களின் கைகளில் எடுத்துக் கொள்ளும் வகையில் தீவிர முயற்சிக்கான ஒரு திட்டத்தை நீங்கள் உருவாக்கினீர்களா? நீங்கள் உலகை மாற்ற விரும்புகிறீர்கள். ஆகவே, முழு நிர்வாகமும் மாற்றப்பட வேண்டும், இல்லையா? இந்தப் பணியை எப்படி இலகுவாக நடத்தலாம் என்றும் அதை எப்படிப் பரப்பலாம் என்றும் நீங்கள் சிந்தித்தீர்களா? குறைந்தபட்சம், பெரிய நகரங்களில் உள்ள கருவிகளுக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு செய்தியைக் கொடுப்பதற்கான திட்டத்தைச் செய்தீர்களா? மாற்றம் என்பது ஆன்மீகத்தினூடாகவே நிகழ முடியும் என்றும் அது நிகழ வேண்டும் என்றும் அவர்கள் குறைந்தபட்சம் புரிந்து கொள்ள வேண்டும். இதனாலேயே, இந்தப் பிரிவானது உங்களின் சொந்தத் தொழில் துறையைச் சார்ந்தவர்களை விழித்தெழச் செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்தப் பிரிவினர் செய்யும் சேவையைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். எவ்வாறாயினும், ஒவ்வொரு பிரிவினரும் எந்தளவிற்குத் தமது சொந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்குச் சேவை செய்து, இந்தச் செய்தியைக் கொடுத்துள்ளார்கள் என்ற பெறுபேறுகளையும் அவர் பார்க்க விரும்புகிறார். அல்லது, நீங்கள் அவர்களைச் சிறிதளவு மட்டுமே விழித்தெழச் செய்துள்ளீர்களா? நீங்கள் அவர்களை உங்களின் சகபாடிகள் ஆக்கியுள்ளீர்களா? ஒத்துழைக்கும் சகபாடிகளாக ஆக்கியுள்ளீர்களா? நீங்கள் அவர்களை பிரம்மாகுமார்களாக ஆக்காதிருக்கலாம். ஆனால் நீங்கள் அவர்களை ஒத்துழைக்கும் சகபாடிகளாக ஆக்கியுள்ளீர்களா?

பாப்தாதா இதைச் சகல பிரிவினருக்கும் சொல்கிறார். மதத் தலைவர்கள் வந்தார்கள். முதன்மையான ஆத்மாக்கள் வரவில்லை. ஆனால், குறைந்தபட்சம் வந்திருந்த அனைவரும் ஒரு மேடையில் ஒன்றாக இருந்தார்கள். நாம் இப்போது ஒன்றாகச் சேர்ந்து, ஆன்மீகத்தின் சக்தியைப் பரப்ப வேண்டும் என எல்லோரும் சொன்னார்கள். அதேபோல், எந்தவொரு பிரிவினைச் சேர்ந்த எல்லோரும் மூன்று வகையான பெறுபேறுகளைப் பெற வேண்டும். முதலில், அந்தத் தொழில் துறையைச் சேர்ந்த ஒவ்வொருவரும் எந்தளவிற்குச் செய்தியைப் பெற்றுள்ளார்கள்? இரண்டாவது, ஆன்மீகமே அத்தியாவசியமானது என்பதும் அவர்களாலும் ஒத்துழைக்க முடியும் என்ற பெறுபேறு. அவர்கள் ஒழுங்கான மாணவர்கள் ஆகமாட்டார்கள். ஆனால் அவர்களால் ஒத்துழைக்க முடியும். இதுவரை, ஒவ்வொரு பிரிவினரும் எத்தகைய சேவையைச் செய்திருந்தாலும், இப்போது மதத்தலைவர்கள் வந்ததைப்போல, ஒவ்வொரு பிரிவில் இருந்தும் ஒரு நபரை அழையுங்கள். முதலில், அதை இந்தியாவில் செய்யுங்கள். பின்னர் உங்களால் அதைச் சர்வதேச அளவில் செய்ய முடியும். ஒவ்வொரு பிரிவிலும் உள்ள வெவ்வேறு மட்டங்களில் உள்ளவர்கள் ஒன்றுசேர்ந்து, தாங்கள் ஒத்துழைக்க வேண்டும் என உணர வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் இந்த வகையான சேவையின் பெறுபேறு இதுவரை எப்படி இருக்கிறது? எதிர்காலத்திற்காக நீங்கள் என்ன திட்டத்தைச் செய்துள்ளீர்கள்? ஒவ்வொரு பிரிவிலும் உள்ள ஒவ்வொருவரும் இந்த இலக்கை வைத்திருந்து, மற்றவர்களை நெருக்கமாகக் கொண்டு வரவேண்டும். அப்போது, ஒவ்வொரு பிரிவிலும் உள்ள, சகல நெருக்கமான, ஒத்துழைக்கும் ஆத்மாக்களும் ஒரு குழுவாக ஒன்றுசேர முடியும். அந்தக் குழு அதன்பின்னர் பெரியதாக்கப்பட வேண்டும். அவர்கள் ஒருவரையொருவர் பார்க்கும்போது, அவர்களுக்குள்ளும் ஊக்கமும் உற்சாகமும் ஏற்படும். இப்போது அவர்கள் எல்லோரும் அங்குமிங்கும் சிதறியுள்ளார்கள். ஒரு நகரத்தில் இவ்வளவு பேர் இருக்கிறார்கள், இன்னொரு நகரத்தில் இவ்வளவு பேர் இருக்கிறார்கள். மிக நல்லவர்கள் இருக்கிறார்கள். எவ்வாறாயினும், முதலில், இந்த ஆத்மாக்களின் ஒன்றுகூடலை ஒழுங்கு செய்யுங்கள். பின்னர், அவர்கள் அனைவரையும் மதுவனத்தில் ஒரு ஒன்றுகூடலுக்கு அழையுங்கள். எனவே, இத்தகைய திட்டங்கள் எதையாவது நீங்கள் செய்துள்ளீர்களா? நீங்கள் நிச்சயமாக எதையாவது செய்திருப்பீர்கள். இத்தகைய திட்டங்கள் ஏதாவது உங்களிடம் உள்ளதா? வெளிநாட்டில் இருப்பவர்களும் எல்லா இடங்களிலும் பலர் அங்குமிங்கும் இருக்கிறார்கள் என்ற செய்தியை அனுப்பியுள்ளார்கள். பாரதத்தை மட்டும் பாருங்கள்! நல்ல ஆத்மாக்கள் பலர் வெவ்வேறு இடங்களில் இருந்து வெளிப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் இன்னமும் மறைமுகமாகவே இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து, தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக விசேடமான நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யுங்கள். இது அதிகளவில் வித்தியாசத்தை ஏற்படுத்தும். அத்துடன் அவர்களை நெருக்கமாகக் கொண்டுவரும். ஒரு பிரிவில் ஐந்து பேரும், இன்னொரு பிரிவில் எட்டுப் பேரும், வேறொரு பிரிவில் 25 அல்லது 30 பேரும் இருக்கக்கூடும். அவர்களை இவ்வாறான ஒரு ஒன்றுகூடலில் அழைத்து வாருங்கள். அவர்களால் முன்னேற முடியும். அவர்களின் ஊக்கமும் உற்சாகமும் அதிகரிக்கும். எனவே, இதுவரை நீங்கள் சேவை செய்த சகல பிரிவுகளின் பெறுபேறும் இப்போது உங்களிடம் இருக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் இதைக் கேட்டீர்களா? சகல பிரிவுகளையும் சேர்ந்த எல்லோரும் இதைக் கேட்கிறீர்களா? இன்று இங்கே வந்திருக்கும் ஒவ்வொரு பிரிவையும் சேர்ந்த விசேடமானவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களில் பலர் இருக்கிறீர்கள். ஆகவே, யார் மற்றும் எத்தனை பேர் உங்களுடன் ஒத்துழைத்தார்கள், எந்தளவிற்கு ஒத்துழைத்தார்கள் என்ற பெறுபேற்றை இப்போது கையளியுங்கள். நீங்கள் அவர்களுக்காகச் செய்ய வேண்டிய நிகழ்ச்சியைப் பற்றி உங்களுக்குப் பின்னர் கூறப்படும். அவர்களுக்காக ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி செய்யப்படும். இது சரிதானே?

மதுவனம்: மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் சும்மா இருக்கக்கூடாது. நீங்கள் சும்மா இருக்க விரும்புகிறீர்களா? நீங்கள் மும்முரமாக இருக்கவே விரும்புகிறீர்கள், அப்படித்தானே? அல்லது, நீங்கள் களைப்படைந்து விடுகிறீர்களா? உங்களுக்கு அவ்வப்போது பதினைந்து நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. உங்களுக்கு இது தேவை. எவ்வாறாயினும், ஒரு நிகழ்ச்சிக்குப் பின் இன்னொரு நிகழ்ச்சி என்றிருக்க வேண்டும். அப்போது நீங்கள் உங்களின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பேணுவீர்கள். இல்லாவிட்டால், தாதி கூறுவார்: அவர்களுக்குச் செய்வதற்கு சேவை இல்லாதபோது, முறைப்பாடு ஏற்படுகிறது. பாபா இந்த முறைப்பாட்டைப் பற்றிச் சொல்லட்டுமா? நீங்கள் எல்லோரும் உங்களின் சொந்த நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் செல்ல விரும்புகிறீர்கள் என தாதி கூறுகிறார். நீங்கள் சென்று அவர்களைப் பார்க்க வேண்டும், அவர்களிடம் சென்று, அவர்களுக்கு அங்கே ஏதாவது சேவை செய்ய வேண்டும் என நீங்கள் கூறுகிறீர்கள். இதனாலேயே உங்களை பிஸியாக வைத்திருப்பது நல்லதே. நீங்கள் பிஸியாக இருந்தால், எந்தவிதமான முரண்பாடுகளும் இருக்காது. உங்களின் ஒரு சிறப்பியல்பினால், பாப்தாதா மதுவனவாசிகளுக்குப் பலமில்லியன் மடங்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். நூறு மடங்கல்ல, ஆனால் பலமில்லியன்மடங்கு! எந்தச் சிறப்பியல்பிற்காக? மதுவனைச் சேர்ந்தவர்கள், வருகின்ற எவருக்கும் ஆழ்ந்த அன்புடன் சேவை செய்கிறார்கள். இதனால் அவர்களுக்குள் இருக்கும் எதுவும் மறைந்துவிடுகிறது. அவர்கள் மிகவும் அவ்யக்தமாக இருக்கிறார்கள். களைப்பற்றவர்களாக இருக்கிறார்கள். இங்கே வருகின்ற எவரும் இங்கிருந்து செல்லும்போது, இங்கிருக்கும் ஒவ்வொருவரும் ஒரு தேவதை போல் இருக்கிறார்கள் என்றே சொல்கின்றார்கள். அந்த வேளையில், உங்களுக்குள் விசேடமான அகசக்தி உருவாகிறது. அதனால் உங்களின் இந்தச் சிறப்பியல்பு மிகவும் நல்லது. உங்களிடம் சேவையின் பிரகாசம் உள்ளது. எனவே, பாப்தாதா உங்களுக்கு இந்தச் சான்றிதழை வழங்குகிறார். உங்களுக்குப் பாராட்டுக்கள் வழங்கப்பட வேண்டும்தானே? ஆகவே, மதுவனத்தைச் சேர்ந்தவர்களே குறைந்தபட்சம் கைதட்டுங்கள்! மிகவும் நல்லது! அந்த வேளையில், பாப்தாதாவும் உங்கள் எல்லோரையும் பார்க்க வருகிறார். உங்களில் எல்லோரும் இதை உணர்வதில்லை. ஆனால், பாப்தாதாவும் உங்களைப் பார்க்க வருகிறார். ஆகவே, மதுவனத்தின் இந்தச் சிறப்பியல்பானது மேலும் அதிகரிக்கும். அச்சா.

ஊடகப் பிரிவு: வெளிநாட்டிலும் ஊடகப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதல்லவா? ஊடகத்துறையில் இப்போது நல்ல முயற்சிகள் செய்யப்படுவதை பாப்தாதா பார்க்கிறார். இங்கிருந்து செய்திகள் பத்திரிகைகளில் வர ஆரம்பித்துள்ளன. நீங்கள் அவர்களுக்கு அன்புடன் சேவை செய்கிறீர்கள். குறைந்தபட்சம், நீங்கள் அவர்களுக்குச் சேவை செய்துள்ளீர்கள்! எனவே, நீங்கள் செய்த முயற்சியின் பலனை நீங்கள் பெறுகிறீர்கள். நீங்கள் தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்களுக்கு நேரம் ஒதுக்குவதைப் போல், விசேடமாக பத்திரிகைத் துறையினருக்கும் நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டும். அது ஒவ்வொரு நாளும் வருகின்றதல்லவா? (ஷீலு பென்னின் சொற்பொழிவுகள்). ஆகவே, இது நல்லதொரு முன்னேற்றமாகும். அதைக் கேட்கும்போது எல்லோருக்கும் மிக நல்ல அனுபவம் ஏற்படுகிறது. அதேபோல், குறிப்பாகப் பத்திரிகைகளிலும், ஒரு வாரத்திற்கு ஒரு தடவை அல்லது ஒன்று விட்ட ஒருநாள் என்று ஒரு கட்டுரை வரவேண்டும். அதில் ஆன்மீக சக்தியை அதிகரிப்பதற்கான நேரம் இதுவே எனக் குறிப்பிட வேண்டும். இத்தகைய முயற்சியைச் செய்யுங்கள்! உண்மையில், நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள். உங்களின் தொடர்புகளும் அதிகரிக்கின்றன. இப்போது, பத்திரிகைகளினூடாகச் சில அற்புதங்களைச் செய்யுங்கள். உங்களால் இதைச் செய்ய முடியுமா? இந்தக் குழுவால் இதைச் செய்ய முடியுமா? இதைச் செய்யப் போகின்றவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். ஊக்கமும் உற்சாகமும் இருக்கும்போது, வெற்றி ஏற்படும். இது எப்படி சாத்தியம் இல்லாமல் போகும்? சகல வசதிகளையும் நீங்கள் பயன்படுத்தும்படி உங்களுக்குக் கொடுக்கின்ற அந்தக் காலமும் இறுதியில் வரும். உங்களுக்கு அதற்கான வாய்ப்புக்கள் வரும். அவர்கள் இந்த வாய்ப்புக்களை உங்களுக்குக் கொடுப்பார்கள். அதற்குப் பிரதிபலனாக, ‘எங்களுக்கு எதையாவது கொடுங்கள், எங்களுக்கு ஏதாவது கொடுங்கள்!’ என அவர்கள் கேட்பார்கள். எமது உதவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்! தற்சமயம், ‘ஒத்துழையுங்கள்!’ என நீங்கள் அவர்களுக்குக் கூற வேண்டியுள்ளது. பின்னர், ‘நாங்கள் உங்களுடன் ஒத்துழைக்க விரும்புகிறோம்!’ என அவர்கள் கேட்பார்கள். இந்த விடயத்தை உறுதியாக்கிக் கொள்ளுங்கள்: தேவதை! தேவதை! தேவதை! அதன்பின்னர், எப்படி எல்லாமே விரைவாக நடக்கிறது எனப் பாருங்கள். நீங்கள் அவர்களின் பின்னால் ஓட வேண்டியதில்லை. ஆனால், தானாகவே அவர்கள் உங்களை ஒரு நிழல் போல் துரத்திக் கொண்டு வருவார்கள். உங்களின் ஸ்திதி இன்னமும் காத்திருப்பதனாலேயே, அவர்களும் காத்திருக்கிறார்கள். என்றும் தயார் ஆகுங்கள். அதன்பின்னர், ஓர் ஆளியைப் போடுகின்ற நிலை மட்டுமே, அவ்வளவுதான்! நீங்கள் மிக நன்றாகச் செய்கிறீர்கள். தொடர்ந்தும் அப்படியே செய்வீர்கள்.

இந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் எங்கும் உள்ள சுய இராச்சிய அதிகாரிகள் எல்லோருக்கும், தமது பௌதீக ரூபங்களிலோ அல்லது தமது சூட்சும ரூபங்களிலோ ஒரு சந்திப்பைக் கொண்டாடுபவர்களுக்கும் தமது நடத்தையினூடாகவும் தமது முகங்களிலும் தமது மேன்மையான உரிமையை வெளிப்படுத்தும் விசேடமான ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவை ஒவ்வோர் அடியிலும் பின்பற்றுபவர்களுக்கும், சதா தமது மனங்களைச் சுத்தமாகவும் தமது புத்திகளைத் தெளிவாகவும் ஆக்கிக் கொள்பவர்களுக்கும், இத்தகைய இயல்பான தீவிர முயற்சியைச் செய்யும் ஆத்மாக்களுக்கும் சதா தந்தையுடன் இருந்து, தந்தையுடனேயே ஒன்றாக வீடு திரும்புகின்ற டபிள் லைற் குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரமும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டும் பற்றற்றவராகவும் இருந்து, சகல வசதிகளையும் பயன்படுத்தும் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டவர் ஆகுவீர்களாக.

எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருப்பவர் என்றால், எதிலும் பற்று வைக்காமல், சதா தந்தையிடம் அன்பாக இருத்தல் என்று அர்த்தம். இந்த அன்பான சுபாவம் உங்களைப் பற்றற்றவர் ஆக்கும். உங்களுக்குத் தந்தையிடம் அன்பு இல்லாவிட்டால், உங்களுக்குள் பற்றற்ற தன்மை இருக்காது. ஏதாவது பற்று உங்களுக்குள் இருக்கும். தந்தையிடம் அன்புடையவர்கள் சகல கவர்ச்சிகளில் இருந்தும் அப்பாற்பட்டிருப்பார்கள். அதாவது, அவர்கள் பற்றற்றவர்களாக இருப்பார்கள். இதுவே எதிலும் பாதிக்கப்படாத ஸ்திதி எனப்படுகிறது. அத்துடன் எந்தவிதமான எல்லைக்குட்பட்ட கவர்ச்சியினதும் ஆதிக்கத்திற்கு உட்படாதவர் எனப்படுவார். ஏதாவது படைப்பை அல்லது வசதியை அவற்றினால் பாதிக்கப்படாத வண்ணம் பயன்படுத்துபவர்கள், எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டுள்ள இராஜரிஷிகள் ஆவார்கள்.

சுலோகம்:
உங்களின் இதயத்தில் சுத்தமும் நேர்மையும் இருக்கும்போது, பிரபு மகிழ்ச்சி அடைகிறார்.