09.12.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, விநாசம் இடம்பெறுவதற்கு முன்னர், தந்தையின் அறிமுகத்தை நீங்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். ஞானத்தைக் கிரகித்து, பின்னர், அதனைப் பிறருக்கு விளங்கப்படுத்துங்கள். அப்பொழுதே உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியும்.

கேள்வி:
இராஜயோகி மாணவர்களுக்குத் தந்தை கொடுக்கும் வழிகாட்டல்கள் யாவை?

பதில்:
தந்தைக்கு உரியவராகிய பின்னர், உங்கள் இதயம் வேறெவர் மீதும் பற்று வைக்கக்கூடாது என்ற வழிகாட்டல்கள் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. தூய்மையாக இருப்போம் என்ற சத்தியத்தைச் செய்த பின்னர், நீங்கள் ஒருபொழுதும் தூய்மையற்றவர் ஆகக்கூடாது. நீங்கள் இயல்பாகவே தந்தையினதும், ஆசிரியரினதும் நினைவில் சதா நிலைத்திருக்கும் வகையில், முற்றிலும் தூய்மையானவர் ஆகுங்கள். ஒரேயொரு தந்தையின் மீது மாத்திரமே அன்பு கொண்டிருந்து, அவரை மாத்திரமே நினைவு செய்யுங்கள், அப்பொழுது நீங்கள் அதிகளவு சக்தியைப் பெறுவீர்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். அவர் இந்தச் சரீரத்தை எடுக்கும் பொழுது மாத்திரமே அவரால் விளங்கப்படுத்த முடியும். அவர் நேரடியாகவும் விளங்கப்படுத்த வேண்டும். நேரடியாக விளங்கப்படுத்தப்பட்ட விடயங்களே பின்னர் அச்சடித்து எங்கும் அனுப்பப்படுகின்றன. நீங்கள் பாபா கூறுவதை நேரடியாகக் கேட்பதற்கே இங்கே வருகின்றீர்கள். எல்லையற்ற தந்தை ஆத்மாக்களாகிய உங்களுடன் பேசுகின்றார். ஆத்மாவே செவிமடுக்கின்றார். ஆத்மாவே சரீரத்தின் மூலம் அனைத்தையும் செய்கின்றார். ஆகையால், எல்லாவற்றுக்கும் முதலில், நிச்சயமாக உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். ஆத்மாக்கள் நீண்டகாலம் பரமாத்மாவை விட்டுப் பிரிந்திருந்தார்கள் என்று நினைவுகூரப்படுகிறது. முதன்முதலில் தந்தையிடமிருந்து பிரிந்து, இங்கே, கீழே தமது பாகத்தை நடிக்க வருபவர்கள் யார்? 'நீங்கள் எவ்வளவு காலமாகத் தந்தையிடமிருந்து பிரிந்திருக்கின்றீர்கள்?' என்று உங்களிடம் எவராவது வினவினால், '5000 வருடங்கள்' என நீங்கள் பதிலளிக்கின்றீர்கள். இதுவே முழுக் கணக்காகும். நீங்கள் எவ்வாறு வரிசைக்கிரமமாகக் கீழிறங்கினீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். மேலே இருந்த தந்தையும், அனைவரதும் மின்கலத்தைச் சக்தியூட்டவே வருகின்றார். நீங்கள் இப்பொழுது தந்தையை நினைவுசெய்ய வேண்டும். தந்தை இப்பொழுது நேரடியாக உங்கள் முன்னிலையில் இருக்கின்றார். பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தந்தையின் தொழில் என்ன என்பது தெரியாது. அவரது பெயர், வடிவம், தேசம், காலம் ஆகியவற்றை அவர்கள் அறிய மாட்டார்கள். நீங்கள் பெயர், வடிவம் தேசம், காலம் அனைத்தையும் அறிவீர்கள். இந்த இரதத்தின் மூலம் தந்தை அனைத்து இரகசியங்களையும் விளங்கப்படுத்துகின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் படைப்பவரதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் விளங்கப்படுத்தியுள்ளார். அது மிகவும் சூட்சுமமானதாகும். தந்தை மனித உலக விருட்சத்தின் விதையாவார். அவர் நிச்சயமாக இங்கே வருகின்றார். புதிய உலகை ஸ்தாபிப்பது அவரது பணியாகும். அவர் மேலே இருந்தவாறே அதனை ஸ்தாபிக்கின்றார் என்றில்லை. பாபா உங்களுக்குத் தனிப்பட்டரீதியில் நேரடியாக இந்தச் சரீரத்தின் மூலம் விளங்கப்படுத்துகின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இதுவும் தந்தையின் அன்பாகும். எவருக்கும் அவரது வாழ்க்கை வரலாறு தெரியாது. கீதையே ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தின் நூலாகும். இந்த ஞானத்தின் பின்னர், விநாசம் இடம்பெறும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். விநாசம் நிச்சயமாக நடைபெற வேண்டும். ஏனைய சமய ஸ்தாபகர்கள் வரும்போது, விநாசம் இடம்பெறுவதில்லை. இது இப்பொழுது விநாசத்திற்கான காலமாகும். ஆகையாலேயே உங்களுக்கு இப்பொழுது கொடுக்கப்படும் ஞானம் பின்னர் அற்றுப் போய்விடுகின்றது. இவ்விடயங்கள் அனைத்தும் இப்பொழுது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் படைப்பவரையும் படைப்பையும் அறிந்து கொண்டிருக்கின்றீர்கள். இரண்டுமே அநாதியானவையும், எப்பொழுதும் உள்ளவையும் ஆகும். சங்கமயுகத்திலேயே தந்தையின் பாகம் வருகின்றது. பக்தி அரைக்கல்பத்திற்கு இருக்கின்றதாயினும், ஞானம் அவ்வாறு இருப்பதில்லை. நீங்கள் ஞானத்தின் ஆஸ்தியையே அரைக்கல்பத்திற்குப் பெறுகின்றீர்கள். ஞானத்தை ஒருமுறை, சங்கமயுகத்தில் மாத்திரமே பெற்றுக் கொள்கின்றீர்கள். ஒரேயொரு முறை மாத்திரமே உங்களால் அவ்வாறானதொரு வகுப்பைப் பெற முடியும். இவ் விடயங்களை நீங்கள் மிகத்தெளிவாகப் புரிந்து கொண்டு பிறருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் கோருகின்ற அந்தஸ்து, நீங்கள் எவ்வளவு சேவை செய்கிறீர்கள் என்பதிலேயே தங்கியுள்ளது. புதிய உலகிற்குச் செல்வதற்கான முயற்சியையே நீங்கள் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் எந்தளவிற்குக் கிரகித்து, பிறருக்கு விளங்கப்படுத்துகின்றீர்கள் என்பதிலேயே உங்கள் அந்தஸ்து தங்கியுள்ளது. விநாசத்திற்கு முன்னர் நீங்கள் தந்தையின் அறிமுகத்தையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் அறிமுகத்தையும் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். உங்கள் பல பிறவிப் பாவங்கள் அழிவதற்காகவே நீங்கள் தந்தையை நினைவு செய்கின்றீர்கள். தந்தை உங்களுக்குக் கற்பிக்கும் காலம் வரை, நீங்கள் நிச்சயமாக அவரை நினைவுசெய்ய வேண்டும். கற்பிப்பவருடன் யோகம் இருக்க வேண்டும். ஓர் ஆசிரியர் கற்பிக்கும் போது, அவருடன் நீங்கள் யோகம் செய்வீPர்கள். அவருடன் யோகம் செய்யாது, எவ்வாறு உங்களால் கற்க முடியும்? உங்களுக்குக் கற்பிப்பவரை நினைவு செய்வதே யோகம் என்பதன் அர்த்தமாகும். அவரே தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார். நீங்கள் அவரை மூன்று வடிவங்களிலும் மிகச்சரியாக நினைவுசெய்ய வேண்டும். இந்தச் சற்குருவை நீங்கள் ஒருமுறை மாத்திரமே சந்திக்கின்றீர்கள். ஞானத்தின் மூலம் நீங்கள் சற்கதியை அடைந்த பின்னர், குருமாரை ஏற்றுக் கொள்ளுதல் என்ற சம்பிரதாயம் முடிவடைகிறது. தந்தையையும், ஆசிரியரையும் கொண்டிருத்தல் என்ற சம்பிரதாயம் தொடர்ந்த போதிலும், குரு ஒருவரை ஏற்றுக்கொள்ளல் என்ற சம்பிரதாயம் முடிவடைந்திருக்கும், ஏனெனில் நீங்கள் சற்கதியைப் பெற்றிருப்பீர்கள். நீங்கள் நடைமுறை ரீதியாகவே சப்தத்திற்கு அப்பாற்பட்ட தாமத்துக்குச் சென்று, பின்னர் உங்களுக்குரிய நேரத்தில், உங்கள் பாகங்களை நடிப்பதற்காக இங்கே வருகின்றீர்கள். நீங்கள் முக்தி, ஜீவன்முக்தி இரண்டையும் பெறுகின்றீர்கள். நீங்கள் நிச்சயமாக முக்தியையும் பெறுகின்றீர்கள். நீங்கள் வீட்டிற்குச் சென்று குறுகியதொரு காலத்திற்கே அங்கிருப்பீர்கள். இங்கே, நீங்கள் உங்கள் சரீரங்களின் ஊடாக உங்கள் பாகங்களை நடிக்க வேண்டும். இறுதியில் அனைத்து நடிகர்களும் கீழே வந்திருப்பார்கள். ஒரு நாடகம் முடிவடையும் போது, நடிகர்கள் அனைவரும் மேடைக்கு வருவதுண்டு. இப்பொழுதும் கூட, நடிகர்கள் அனைவரும் மேடையில் ஒன்று கூடியுள்ளார்கள். அதிகளவு குழப்பமும் உள்ளது. சத்தியயுகத்தில் குழப்பங்கள் எதுவும் இருக்க மாட்டாது. இப்பொழுது அதிகளவு அமைதியின்மை உள்ளது. தந்தையிடம் உலகச் சக்கரத்தின் ஞானம் உள்ளதைப் போன்று, குழந்தைகளாகிய உங்களிடமும் அந்த ஞானம் உள்ளது. எங்கள் விருட்சம் எவ்வாறு வளர்கிறது, பின்னர் எவ்வாறு அது அழிகின்றது என்ற ஞானம் விதையிடம் உள்ளது. புதிய உலக விருட்சத்தின் மரக்கன்றை, அதாவது, ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தின் மரக்கன்றை நாட்டுவதற்கே நீங்கள் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் எவ்வாறு தங்கள் இராச்சியத்தைப் பெற்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் புதிய உலகிற்குச் சென்று இளவரசர்கள் ஆகுவீர்கள் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். அவ் உலகில் வசிப்பவர்கள் அனைவருமே தங்களை அதிபதிகள் என்றே அழைப்பார்கள். இப்பொழுதும், பாரதம் தங்கள் நாடு என்றே அனைவரும் கூறுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள் என்பதையும், நீங்கள் சிவாலயத்திற்குச் செல்வீர்கள் என்பதையும் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது செல்லும் தறுவாயில் உள்ளீர்கள். நீங்கள் சென்று சிவாலயத்திற்கு அதிபதிகள் ஆகுவீர்கள். இதுவே உங்கள் இலக்கும் குறிக்கோளும் ஆகும். அரசர், அரசி, பிரஜைகள் அனைவரும் சிவாலயத்தின் அதிபதிகள் ஆகுவார்கள். எவ்வாறாயினும், ஓர் இராச்சியத்தில், அந்தஸ்தில் வெவ்வேறு தராதரங்கள் உள்ளன. அங்கே ஆலோசகர்கள் இருப்பதில்லை. மக்கள் தூய்மையற்றவர்கள் ஆகும்போதே, ஆலோசகர்களின் தேவை உள்ளது. இலக்ஷ்மி நாராயணனுக்கோ அல்லது இராமர் சீதைக்கோ ஆலோசகர்கள் இருந்தனர் என நீங்கள் ஒருபோதும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஏனெனில் அவர்களுக்குத் தூய்மையான, சதோபிரதான் புத்தி உள்ளது. மக்கள் தூய்மையற்றவர்கள் ஆகும்போதே, அரசரும் அரசியும் தங்களுக்கு ஆலோசனை கூறுவதற்காக ஆலோசர்களை நியமிக்கிறார்கள். பாருங்கள், இப்பொழுது எண்ணிக்கையற்ற ஆலோசகர்கள் உள்ளனர். இந்த நாடகம் மிகவும் களிப்பூட்டுவது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். ஒரு நாடகம் பொதுவாகக் களிப்பூட்டுவதாகவே இருக்கும். அதில் இன்பம், துன்பம் இரண்டும் இருக்கும். இந்த எல்லையற்ற நாடகத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். இதில் விம்முதல், அழுதல் போன்றவற்றிற்கான கேள்விக்கு இடமில்லை. கூறப்படுகிறது: கடந்தவற்றைக் கடந்தவையாகவே கருதுங்கள். நடப்பது அனைத்தும் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டதாகும். இந்த நாடகம் உங்கள் புத்தியில் உள்ளது. இந்த நாடகத்தில் நீங்கள் அனைவரும் நடிகர்கள். 84 பிறவிகளின் பாகங்கள் மிகவும் சரியானவையும், அழிவற்றவையும் ஆகும். ஒவ்வொரு பிறவியிலும் நீங்கள் என்ன பாகத்தை நடித்தீர்களோ, நீங்கள் அதனை மீண்டும் நடிப்பீர்கள். இன்றிலிருந்து 5000 வருடங்களின் முன்னரும், உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டது. இவ் வார்த்தைகள் கீதையிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. 'உங்கள் சரீரம், உங்கள் சரீர சமயங்கள் அனைத்தையும் துறந்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள்' என ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் ஸ்தாபிக்கப்பட்ட போது, தந்தை கூறினார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தந்தை 'மன்மனாபவ' என்பதன் அர்த்தத்தை மிகவும் தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளார். இதுவே அவர் பயன்படுத்துகின்ற மொழியாகும். இப்பொழுது எத்தனை மொழிகள் உள்ளன என்று பாருங்கள். பல மொழிகள் இருப்பதால் அதிகளவு குழப்பங்களும் இருக்கின்றன. ஒரு மொழி இல்லாது எதுவும் இடம்பெறவும் முடியாது. மக்கள் தமது தாய்மொழியை மறந்து விடுகின்ற அளவிற்கு அதிகளவு மொழிகளைக் கற்கின்றார்கள். பல மொழிகளைக் கற்பவர்களுக்குப் பரிசும் கிடைக்கின்றது. மொழிகள் இருக்கின்ற அளவிற்குச் சமயங்களும் இருக்கின்றன. உங்களுக்கென அங்கே ஓர் இராச்சியம் இருக்கும் என்பதையும், அங்கு ஒரேயொரு மொழியே இருக்கும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இங்கே, ஒவ்வொரு 100 மைல்களுக்கும் இடையில் வேறுபட்ட ஒரு மொழியே உள்ளது. அங்கே ஒரேயொரு மொழியே உள்ளது. தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்கு இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். ஆகையால், அந்தத் தந்தையை மாத்திரமே தொடர்ந்தும் நினைவு செய்யுங்கள். சிவபாபா பிரம்மாவின் மூலம் விளங்கப்படுத்துகின்றார். அவருக்கு நிச்சயமாக ஓர் இரதம் தேவையாகும். சிவபாபா எங்கள் தந்தை ஆவார். பாபா கூறுகின்றார்: எனக்கு எண்ணிக்கையற்ற குழந்தைகள் உள்ளனர். பாபா இவரின் ஊடாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் ஒருபோதும் உங்கள் ஆசிரியரை அணைக்க மாட்டீர்கள். தந்தை உங்களுக்குக் கற்பிக்கவே வந்திருக்கின்றார். அவர் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். ஆகையால் அவர் ஆசிரியர், நீங்கள் மாணவர்கள் ஆவீர்கள். மாணவர்கள் என்றாவது தமது ஆசிரியரை அணைப்பார்களா? தந்தைக்கு உரியவர்கள் ஆகிய பின்னர் உங்கள் இதயம் வேறெவர் மீதும் பற்று வைக்கக்கூடாது. தந்தை கூறுகின்றார்: நான் இராஜயோகம் கற்பிக்கவே வந்துள்ளேன். நீங்கள் சரீரதாரிகள், நானோ மேலே வசிக்கின்ற சரீரமற்றவர் ஆவேன். நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! நீங்கள் தூய்மையற்றவராக இருக்கின்றீர்கள் என்பதே இதன் அர்த்தமாகும். எனவே உங்களால் என்னை எவ்வாறு அணைக்க முடியும்? நீங்கள் சத்தியம் செய்கிறீர்கள், பின்னர், தூய்மையற்றவராக ஆகுகின்றீர்கள். இறுதியில், நீங்கள் முற்றிலும் தூய்மையானவர் ஆகும்போது, நீங்கள் தொடர்ந்தும் ஆசிரியரினதும், குருவினதும் நினைவில் நிலைத்திருப்பீர்கள். அழுக்காகுவதால் பலரும் இப்பொழுது வீழ்ந்து விடுகின்றார்கள். அவர்கள் நூறு வீத தண்டனையைப் பெறுவார்கள். நீங்கள் இவரை இடையில் உள்ள முகவராகவே காணுகின்றீர்கள். நீங்கள் அந்த ஒரேயொருவரையே நினைவுசெய்ய வேண்டும். பாபா கூறுகின்றார்: நான் அவரது விசேடமான குழந்தை ஆவேன். இருப்பினும் என்னால் அவரை அணைக்க முடியாது! உங்களுக்காயினும் இச் சரீரம் மூலமாக அவரைச் சந்திக்க முடிகின்றது. என்னால் எவ்வாறு அவரை அணைக்க முடியும்? தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவு செய்யுங்கள். அவரை மாத்திரமே நேசியுங்கள். இந்த நினைவின் மூலம் நீங்கள் சக்தியைப் பெறுகின்றீர்கள். தந்தை சர்வசக்திவான் ஆவார். தந்தையிடம் இருந்தே நீங்கள் அதிகளவு சக்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் அதிகளவு சக்திவாய்ந்தவர் ஆகுகின்றீர்கள். உங்கள் இராச்சியத்தை எவராலும் வெற்றி கொள்ள முடியாது. இராவண இராச்சியம் முடிவடைந்திருக்கும். எனவே துன்பம் விளைவிப்பதற்கு அங்கு எவருமே இருக்க மாட்டார்கள். அது சந்தோஷ தாமம் என்று அழைக்கப்படுகின்றது. இராவணனே முழு உலகிலும், அனைவருக்கும் துன்பத்தைக் கொடுப்பவன் ஆவான். மிருகங்கள் கூட துன்பப்படுகின்றன. அங்கே, மிருகங்கள் அதிகளவு அன்புடன் ஒருமித்து வாழ்கின்றன. இங்கேயோ அன்பில்லை. இந்த நாடகம் எவ்வாறு தொடர்ந்தும் சுழல்கின்றது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். தந்தை மாத்திரமே அதன் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார். சிலர் மிகவும் நன்றாகக் கற்கின்றார்கள். ஆனால் ஏனையோர் குறைவாகக் கற்கின்றார்கள். அனைவரும் கற்கின்றார்கள். இவ் உலகில் உள்ள அனைவருமே கற்பார்கள். அதாவது, அவர்கள் அனைவரும் தந்தையை நினைவு செய்வார்கள். தந்தையை நினைவு செய்வதும் கற்பதே ஆகும். அவர்கள் தந்தையை அனைவருக்கும் சற்கதியை அளிப்பவரும், அனைவருக்கும் சந்தோஷம் அளிப்பவரும் என நினைவு செய்கின்றார்கள். அவர்கள் அழைக்கின்றார்கள்: வந்து, எங்களைத் தூய்மையாக்குங்கள்! ஆகையால் அவர்கள் நிச்சயமாகத் தூய்மையற்றவர்களாகவே இருந்திருக்க வேண்டும். அவர் விகாரமானவர்களை விகாரமற்றவர்கள் ஆக்குவதற்காகவே வருகின்றார். நீங்கள் அழைக்கின்றீர்கள்: ஓ அல்லா, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள். இது அவரது வியாபாரமாகும்; இதனாலேயே நீங்கள் அவரை அழைக்கின்றீர்கள். உங்கள் மொழியும் சரியாக இருக்க வேண்டும். சிலர் 'அல்லா' என்றும், சிலர் 'கடவுளே' என்றும் இன்னும் சிலர் 'தந்தையான கடவுளே' என்றும் கூறுகின்றார்கள். இறுதியில் வருகின்றவர்களின் புத்தி இன்னமும் நன்றாகவே உள்ளது. அவர்கள் அதிகளவு துன்பத்தை அனுபவம் செய்வதில்லை. நீங்கள் இங்கே நேரடியாக முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? நீங்கள் பாபாவை இவரின் நெற்றியில் பார்க்கின்றீர்கள். பாபா உங்கள் நெற்றியில் உங்களைப் பார்க்கின்றார். நான் எவரில் பிரவேசிக்கின்றேனோ அவரை என்னால் பார்க்க முடியுமா? அவர் எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கின்றார். இது மிகவும் நன்றாக புரிந்துகொள்ளப்பட வேண்டும். நான் அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கின்றேன். எனக்குப் பக்கத்தில் தான் அமர்ந்திருப்பதையும் இவரும் புரிந்து கொள்கின்றார். நீங்கள் உங்கள் முன்னிலையில் இருவரைப் பார்க்கின்றீர்கள் எனக் கூறுகின்றீர்கள். நீங்கள் இரு ஆத்மாக்களையும் பார்க்கின்றீர்கள்: பாபாவும் தாதாவும். பாப்தாதா என்று அழைக்கப்படுவது யார் என்பதன் ஞானம் இப்பொழுது உங்களுக்கு உள்ளது. ஆத்மாக்களாகிய நீங்கள் பாப்தாதாவின் முன்னிலையிலேயே அமர்ந்திருக்கின்றீர்கள். பக்தி மார்க்கத்தில், அவர்கள் தமது கண்களை மூடியவாறு அமர்ந்திருந்து செவிமடுக்கின்றார்கள். உங்களால் அவ்வாறு கற்க முடியாது. நீங்கள் ஆசிரியரைப் பார்க்க வேண்டும். அவர் தந்தையும் ஆசிரியரும் ஆவார். எனவே நீங்கள் அவரைப் பார்க்க வேண்டும். நீங்கள் அவரின் முன்னிலையில் அமர்ந்திருந்து, கண்களை மூடிக் கொண்டும், தொடர்ந்தும் தூங்கி விழுந்தால், உங்களால் அவ்வாறு கற்க முடியாது. ஒரு மாணவன் நிச்சயமாகத் தனது ஆசிரியரைத் தொடர்ந்து பார்க்கின்றார். தவறினால், ஆசிரியர் கூறுவார்: நீங்கள் தொடர்ந்தும் தூங்கி விழுகின்றீர்கள். நீங்கள் போதை தரும் பானம் எதனையாவது அருந்தினீர்களா? பாபா இந்தச் சரீரத்தில் இருக்கின்றார் என்பது உங்கள் புத்தியில் உள்ளது: நான் பாபாவைப் பார்க்கின்றேன். நீங்கள் கண்களை மூடியவாறே அமர்ந்திருப்பதற்கு இது சாதாரண வகுப்பல்ல. ஒரு பாடசாலையில் எவராவது தமது கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருப்பார்களா? ஏனைய சத்சங்கங்கள், பாடசாலைகள் என்று அழைக்கப்படுவதில்லை. அவர்கள் அமர்ந்திருந்து கீதையைக் கூறினாலும், அவை பாடசாலைகள் என்று அழைக்கப்படுவதில்லை. நீங்கள் அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கு அவர்கள் தந்தை அல்ல. சமயக் கதைகளை தமது செவிகளினால் கேட்டுக் கொண்டே சிவனை நினைவு செய்கின்ற சில சிவ பக்தர்கள் உள்ளனர். சிவனை வழிபடுகின்றவர்கள் சிவனை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். ஏனைய சத்சங்கங்களில் கேள்வி பதில்கள் இல்லை, ஆனால் இங்கு அவை உள்ளன. இங்கே நீங்கள் அதிகளவு வருமானத்தை ஈட்ட முடியும். ஒருவர் வருமானத்தை ஈட்டும் போது, கொட்டாவி விடுவதில்லை. நீங்கள் செல்வத்தைப் பெறும் போது, சந்தோஷப்படுகின்றீர்கள். கொட்டாவி விடுதல், துன்பத்தின் அறிகுறியாகும். ஒருவர் நோய்வாய்ப்படும் போதும், கடனாளியாகும் போதும் கொட்டாவி விடுகின்றார்கள். நீங்கள் தொடர்ந்தும் வருமானத்தை ஈட்டுவீர்களாயின், நீங்கள் கொட்டாவி விட மாட்டீர்கள். பாபாவும் ஒரு வியாபாரியாக இருந்தவரே. நீராவிக் கப்பல் இரவில் வந்தால், அவர் விழித்திருக்க நேரிடும். சில பெண்கள் (பேகம்) இரவிலேயே கடைக்கு வருவார்கள், ஆகவே கடைகள் பெண்களுக்காக மாத்திரம் திறந்து வைக்கப்பட வேண்டியிருந்தது. பாபா கூறுகின்றார்: குறித்தவொரு நாளில் பெண்களுக்காக மாத்திரம் விசேடமாக ஒரு கண்காட்சியை நடாத்துங்கள், அப்பொழுது ஏராளமானோர் வருவார்கள். முக்காடிட்டவர்களும் வருவார்கள். மருமகள்மார்கள் முக்காடு இட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தமது கார்களில் அமர்ந்திருக்கும் போது கூட முக்காடுடனேயே இருக்கிறார்கள். இங்கே இது ஆத்மா பற்றிய விடயம் ஆகும். நீங்கள் ஞானத்தைப் பெற்றுக் கொண்டதும், உங்கள் முக்காடுகள் அகற்றப்படுகின்றன. சத்தியயுகத்தில், முக்காடுகள் இருப்பதில்லை. இங்கே தூய இல்லறப் பாதைக்கான ஞானம் உங்களுக்குக் கொடுக்கப்படுகின்றது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளான உங்களுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த நாடகம் அதிகளவு களிப்படைவதற்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த நாடகத்தில் இன்ப, துன்ப பாகங்கள் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டவையாகும். ஆகையால் அழுதல், விம்முதல் போன்றவற்றிற்கான அவசியம் இல்லை. நடப்பவை அனைத்தும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டவை என்பதை உங்கள் புத்தி நினைவு செய்ய வேண்டும். கடந்தவற்றை நீங்கள் என்றுமே நினைத்துக் கொண்டிருக்கக்கூடாது.

2. இது சாதாரணமானதொரு வகுப்பல்ல. இங்கு நீங்கள் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருக்கக்கூடாது. ஆனால் உங்கள் முன்னிலையில் அமர்ந்திருக்கின்ற ஒரேயோரு ஆசிரியரையே நீங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் கொட்டாவி விடக்கூடாது. கொட்டாவி விடுதல் துன்பத்தின் அறிகுறியாகும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் திருப்தியின் மூன்று சான்றிதழ்களையும் பெற்று, ஓர் இலகு யோகியாக உங்களின் யோகி வாழ்க்கையால் மற்றவர்களின் மீது ஓர் ஆதிக்கத்தை ஏற்படுத்துவீர்களாக.

உங்களின் யோகி வாழ்க்கையில் திருப்தியே விசேடமான இலட்சியம் ஆகும். சதா திருப்தியாக இருப்பதுடன் மற்றவர்களையும் திருப்திப்படுத்துபவர்கள், இயல்பாகவே தமது யோகி வாழ்க்கையால் மற்றவர்களின் மீது ஓர் ஆதிக்கத்தை ஏற்படுத்துவார்கள். விஞ்ஞானத்தின் வசதிகள் சூழலில் ஓர் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதைப் போன்று, இலகு யோகி வாழ்க்கையும் ஓர் ஆதிக்கத்தை ஏற்படுத்தும். யோகி வாழ்க்கையின் மூன்று சான்றிதழ்களும் தன்னுடன் திருப்தியாக இருத்தல், தந்தையுடன் திருப்தியாக இருத்தல் மற்றும் உங்களின் பௌதீக, ஆன்மீகக் குடும்பங்களுடன் திருப்தியாக இருத்தல் என்பவையாகும்.

சுலோகம்:
சுய இராச்சிய திலகத்தையும் உலக நன்மை என்ற கிரீடத்தையும் அணிந்து, தமது ஸ்திதி என்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்கள், இராஜயோகிகள் ஆவார்கள்.