10.11.24 Avyakt Bapdada Tamil Lanka Murli 14.11.2002 Om Shanti Madhuban
நம்பிக்கையுள்ள புத்தியே, பிராமண வாழ்க்கைக்கும் வெற்றிநிறைந்தவர் ஆகுவதற்கும் அத்திவாரம் ஆகும்.
இன்று, சர்வசக்திவான் தந்தை, எங்கும் உள்ள தனது சர்வசக்திவான் குழந்தைகளைப் பார்க்கிறார். ஒவ்வொரு குழந்தையும் சர்வசக்திவானாகி, தந்தைக்குச் சமமாகும் மேன்மையான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பாப்தாதா குழந்தைகளின் இந்த ஆழமான ஆசையைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். குழந்தைகளின் இந்தத் திடசங்கற்பத்தை பாப்தாதா விரும்புகிறார். பாப்தாதா குழந்தைகளிடம் கூறுகிறார்: உங்களால் தந்தையை விட முன்னால் செல்ல முடியும். ஏனென்றால், ஞாபகார்த்தங்களிலும், தந்தை ஒரேயொரு வடிவத்திலேயே பூஜிக்கப்படுகிறார். ஆனால், குழந்தைகளான நீங்களோ, இரட்டை வடிவத்தில் பூஜிக்கப்படுகிறீர்கள். நீங்கள் பாப்தாதாவின் தலையில் கிரீடமாகவும் இருக்கிறீர்கள். குழந்தைகளின் சுயமரியாதையைப் பார்க்கும்போது, பாப்தாதா எப்போதும், ஆஹா! மேன்மையான சுயமரியாதை கொண்டவர்களே, தங்களுக்கே அதிபதிகளாக இருக்கும் குழந்தைகளே! ஆஹா! எனக் கூறுகிறார். ஒவ்வொரு குழந்தையின் சிறப்பியல்பும் ஒவ்வொருவரின் நெற்றியிலும் பிரகாசிக்கிறது. அது தந்தைக்குப் புலப்படுகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் இப்போது உங்களின் சிறப்பியல்பை அறிந்து இனங்கண்டு, அதைத் தொடர்ந்தும் உலக சேவைக்காகப் பயன்படுத்துகிறீர்கள். எந்தளவிற்கு நீங்கள் இறைவனாலும் குடும்பத்தாலும் நேசிக்கப்படுகிறீர்கள் என்பதைச் சோதியுங்கள். ஏனென்றால், சங்கமயுகத்திலேயே தந்தை பிராமணக் குடும்பத்தை உருவாக்குகிறார். ஆகவே, இறைவனாலும் குடும்பத்தாலும் நேசிக்கப்படுவது அத்தியாவசியமானதாகும்.
இன்று, பாப்தாதா குழந்தைகள் எல்லோருடைய பிராமண வாழ்க்கையினதும் அத்திவாரத்தைப் பார்த்தார். உங்களின் நம்பிக்கையுள்ள புத்தியிலேயே அத்திவாரம் தங்கியுள்ளது. இதனாலேயே, எங்கு நம்பிக்கை உள்ளதோ, அங்கே ஒவ்வோர் எண்ணத்திலும் ஒவ்வொரு பணியிலும் வெற்றிக்கு ஏற்கனவே உத்தரவாதம் உள்ளது. பிறப்புரிமையின் வடிவத்தில் வெற்றி இயல்பாகவும் இலகுவாகவும் பெறப்படுகிறது. உங்களின் பிறப்புரிமைக்காகக் கடினமாக உழைக்க வேண்டிய தேவையில்லை. பிராமண வாழ்க்கையில், வெற்றி உங்களின் கழுத்து மாலை ஆகுகிறது. பிராமண வாழ்க்கை என்றால், வெற்றி சொரூபமாக இருத்தல் என்று அர்த்தம். பிராமண வாழ்க்கையில், வெற்றி இருக்குமா இருக்காதா என்ற கேள்வியே இல்லை. நம்பிக்கையுள்ள புத்திகளைக் கொண்டவர்கள், எப்போதும் தந்தையுடன் இணைந்தே இருப்பார்கள். ஆகவே, எங்கே தந்தை உங்களுடன் இணைந்திருக்கிறாரோ, அங்கே நீங்கள் சதா வெற்றி பெறுவீர்கள். எனவே, எந்தளவிற்கு நீங்கள் வெற்றி சொரூபம் ஆகியுள்ளீர்கள் எனச் சோதித்துப் பாருங்கள். வெற்றியில் சதவீதம் காணப்படுமாயின், அதற்கான காரணம், உங்களின் நம்பிக்கையில் சதவீதம் உள்ளது என்பதேயாகும். தந்தையில் மட்டும் நம்பிக்கை வைத்திருப்பது மிகவும் நல்லதே. ஆயினும், நம்பிக்கை என்றால், தந்தைமீது நம்பிக்கை, சுயத்தில் நம்பிக்கை, நாடகத்தில் நம்பிக்கை, அத்துடன் குடும்பத்தில் நம்பிக்கை. இந்த நான்கு விடயங்களிலும் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில், நீங்கள் இலகுவாகவும் இயல்பாகவும் வெற்றி பெறுவீர்கள்.
குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் தந்தையின் மீது நம்பிக்கை உள்ளது. இதனாலேயே, நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். தந்தைக்கும் உங்கள் எல்லோர் மீதும் நம்பிக்கை உள்ளது. இதனாலேயே, அவர் உங்களைத் தனக்குச் சொந்தமாக்கி உள்ளார். எவ்வாறாயினும், பிராமண வாழ்க்கையில் சம்பூரணமும் முழுமையும் அடைவதற்கு, சுயத்தில் நம்பிக்கை வைத்திருப்பது அத்தியாவசியமாகும். ‘நான் இறைவனிடமிருந்து மரியாதையைப் பெற்றுள்ள ஒரு மேன்மையான ஆத்மா’ என்ற பாப்தாதாவிடமிருந்து நீங்கள் பெற்ற, மேன்மையான ஆத்மாவாக இருக்கும் உங்களின் சுய மரியாதையை எப்போதும் உணர்ந்தவராக இருங்கள். நீங்கள் சாதாரணமான ஆத்மா இல்லை. ஆனால், நீங்கள் இறைவனிடமிருந்து மரியாதையைப் பெற்றுள்ளதோர் ஆத்மா. அதனால், ஒவ்வோர் எண்ணத்திலும் ஒவ்வொரு செயலிலும் சுயமரியாதையைக் கொண்டிருத்தல், நிச்சயமாக நீங்கள் வெற்றியைப் பெறச் செய்யும். நீங்கள் சாதாரணமான செயல்களைச் செய்யும் ஓர் ஆத்மா அல்ல. ஆனால், உங்களின் சுயமரியாதையில் ஸ்திரமாக இருக்கும் ஓர் ஆத்மா. ஒவ்வொரு செயலிலும் சுயமரியாதையைக் கொண்டிருத்தல், இலகுவாக நீங்கள் வெற்றி பெறச் செய்யும். உங்களின் புத்தியில் உங்களின் மீது நம்பிக்கை வைத்திருப்பதன் அடையாளம், நீங்கள் வெற்றியும் சித்தியும் அடைவீர்கள். அதேபோல், உங்களுக்குத் தந்தையின் மீது உறுதியான நம்பிக்கை உள்ளது. அதன் சிறப்பியல்பு என்னவென்றால், நீங்கள் சதா தந்தைக்குச் சொந்தமாக இருக்கிறீர்கள், தந்தையும் உங்களுக்குச் சொந்தமாக இருக்கிறார். இதுவே சதா வெற்றி அடைவதன் அடிப்படை. ‘எனது பாபா’. வெறுமனே பாபா என்பதல்ல, ஆனால், ‘எனது பாபா’. உங்களுக்கு உரியவற்றின் மீது உங்களுக்கு உரிமை உள்ளது. ‘எனது பாபா’ எனச் சொல்வதுடன், புத்தியில் நம்பிக்கை வைத்துள்ளதோர் ஆத்மா, சதா வெற்றியும் சித்தியும் அடைகின்ற உரிமையைக் கொண்டிருப்பார். அதேபோல், நாடகத்திலும் முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும். வெற்றியும் பிரச்சனைகளும் - இரண்டு வகையான சூழ்நிலைகளும் நாடகத்தில் வரும். எவ்வாறாயினும், பிரச்சனை வருகின்ற நேரத்தில், நம்பிக்கையுள்ள உங்களின் புத்தியின் அடையாளம், தீர்வுகளின் சொரூபமாக இருப்பதே ஆகும். தீர்வுகளின் சொரூபம் ஆகுவதன் மூலம், உங்களால் ஒரு விநாடியில் பிரச்சனைகளை மாற்ற முடியும். பிரச்சனைகளின் கடமை வருவது. புத்தியில் நம்பிக்கை வைத்திருக்கும் ஆத்மாக்களின் கடமை, தீர்வுகளின் சொரூபம் ஆகுவதன் மூலம் அந்தப் பிரச்சனைகளை மாற்றுவதேயாகும். ஏன்? பிராமண ஆத்மாக்களான நீங்கள் பிராமணப் பிறவி எடுத்ததுமே, நீங்கள் மாயைக்கு சவால் விட்டீர்கள். நீங்கள் அவளுக்குச் சவால் விடுத்தீர்கள்தானே? அல்லது, நீங்கள் மாயையை வென்றவர்கள் ஆகப் போகின்றீர்கள் என்பதை மறந்துவிட்டீர்களா? ஆகவே, எந்த வடிவத்தில் வருகின்ற பிரச்சனையும் மாயையின் வடிவமேயாகும். நீங்கள் அவளுக்குச் சவால் விட்டிருப்பதனால், மாயை உங்களை எதிர்ப்பாள். உங்களின் சவாலை நிறைவேற்றுவதற்காக அவள் உங்களிடம் வெவ்வேறு வகையான பிரச்சனைகளின் வடிவில் வருவாள். உங்களின் புத்தியில் நம்பிக்கை வைத்திருப்பதனால், வெற்றியாளர் ஆகுவதன் மூலம் நீங்கள் அவளை வெற்றி கொள்ள வேண்டும். ஏன்? எதுவும் புதியதல்ல! நீங்கள் எத்தனை தடவைகள் வெற்றியாளர் ஆகியுள்ளீர்கள்? சங்கமயுகத்தில் இந்தத் தடவை மட்டும் நீங்கள் வெற்றியாளர் ஆகுகிறீர்களா அல்லது முன்னர் எண்ணற்ற தடவைகள் நீங்கள் ஆகியதை இப்போது மீண்டும் செய்கிறீர்களா? இதனாலேயே, பிரச்சனைகளும் உங்களுக்குப் புதியவை அல்ல. எதுவும் புதியதல்ல! நீங்கள் பல தடவைகள் வெற்றியாளர் ஆகியுள்ளீர்கள். நீங்கள் இப்போது அப்படி ஆகுகிறீர்கள். எதிர்காலத்திலும் நீங்கள் தொடர்ந்து அப்படி ஆகுவீர்கள். இதுவே, நாடகத்தின் மீதான நம்பிக்கையை உங்களின் புத்தியில் கொண்டிருப்பதன் மூலம் வெற்றியாளர் ஆகுதல் எனப்படுகிறது. மற்றைய நம்பிக்கை, பிராமணக் குடும்பத்தின் மீதாகும். ஏன்? பிராமணக் குடும்பம் என்றால் ஒன்றுகூடல் என்று அர்த்தம். இது சிறியதொரு குடும்பம் அல்ல. தந்தை பிரம்மாவின் பிராமணக் குடும்பமே, சகல குடும்பங்களிலும் அதி மேன்மையானதும் மிகப் பெரியதும் ஆகும். ஆகவே, குடும்பத்தில், குடும்பத்தின் மீதான அன்பின் பொறுப்பை நிறைவேற்றுவதில் நீங்கள் வெற்றியாளர் ஆகுகிறீர்கள். ‘தந்தை எனக்குச் சொந்தமானவர், நான் தந்தைக்குச் சொந்தமானவன், அவ்வளவுதான்! இதில் எல்லாமே அடங்கியுள்ளது, எனக்கு பாபாவுடன் மட்டுமே தொடர்பு உள்ளது. குடும்பத்துடன் எனக்கு எந்தவிதத் தொடர்பும் கிடையாது’ என நீங்கள் சொல்லக்கூடாது. எவ்வாறாயினும், இதுவும் நம்பிக்கையின் சிறப்பியல்பாகும். நான்கு விடயங்களிலும் நம்பிக்கை வைத்திருத்தல், வெற்றிக்கு அத்தியாவசியமானது. பல சந்தர்ப்பங்களில் இந்தக் குடும்பமும் உங்களைப் பலசாலி ஆக்குகிறது. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் வரிசைக்கிரமமாக, தனிப்பட்ட தாரணையின் சொரூபமாக இருக்கிறார்கள் என்பது உங்களின் விழிப்புணர்வில் இருக்க வேண்டும். பல்வகைகள் உள்ளன. இதன் ஞாபகார்த்தமே, 108 மணி மாலையாகும். இதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்: முதல் இலக்கத்திற்கும் 108 ஆம் இலக்கத்திற்கும் இடையில் அதிகளவு வேறுபாடு உள்ளது. இது ஏன்? ஏன் எல்லோரும் முதலாம் இலக்கத்தவர் ஆகுவதில்லை? ஏன் 16000 பேர் இருந்தார்கள்? இதற்கான காரணம் என்ன? சம்ஸ்காரங்களின் வெவ்வேறு வகைகளைப் புரிந்து கொள்வதும், ஞானம் நிறைந்தவராக இருந்து பழகுவதும் அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதுமே, வெற்றிநிறைந்தவர் ஆகுகின்ற ஸ்திதியாகும். நீங்கள் எப்படியும் பழக வேண்டியுள்ளது. குடும்பத்தை விட்டுச் சென்றால் நீங்கள் எங்கே செல்வீர்கள்? இவ்வளவு பெரியதொரு குடும்பம் உங்களுக்கு இருக்கிறது என்ற போதையும் உங்களிடம் உள்ளது. எனவே, பெரியதொரு குடும்பத்தில், நீங்கள் ஒவ்வொருவரின் சம்ஸ்காரங்களையும் அறிந்தவண்ணம் பெரிய இதயத்துடன் பழக வேண்டும். நல்லாசிகள் மற்றும் தூய உணர்வுகளின் மனோபாவத்துடன், பணிவாக நடந்து கொள்வதே, உங்களின் புத்தியில் குடும்பத்தில் நம்பிக்கை வைத்திருப்பதன் மூலம் வெற்றியாளர் ஆகுவதன் அடையாளம் ஆகும். ஆகவே, நீங்கள் எல்லோரும் வெற்றியாளர்கள்தானே? நீங்கள் வெற்றியாளர்களா?
இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் வெற்றியாளர்களா? நீங்கள் உங்களின் கைகளை மிக நன்றாக அசைக்கிறீர்கள். இது மிகவும் நல்லது. பாப்தாதாவிற்கு மகிழ்ச்சி. அச்சா, ஆசிரியர்களான நீங்கள் வெற்றியாளர்களா? அல்லது, உங்களுக்குள் சிறிது, ‘நான் என்ன செய்வது?’ என்ற உணர்வு ஏற்படுகிறதா? இப்படி இல்லைத்தானே? கெய்ஸே (எப்படி) எனச் சொல்வதற்குப் பதிலாக, எய்ஸே (இப்படித்தான்) எனச் சொல்லுங்கள். ‘எப்படி இதை நான் செய்வது?’ என்றல்ல. ஆனால், ‘இப்படித்தான் நான் இதைச் செய்ய வேண்டும்’. உங்களுக்கு இந்தக் குடும்பத்துடன் 21 பிறவிகளுக்குத் தொடர்புள்ளது. இதனாலேயே, குடும்பத்தின் இந்த விடயத்தில் சித்தி அடைபவர்கள், எல்லாவற்றிலும் சித்தி அடைவார்கள்.
எனவே, நான்கு வகையான நம்பிக்கைகளையும் சோதித்துப் பாருங்கள். ஏனென்றால், இறைவனால் நேசிக்கப்படுவதன் கூடவே, குடும்பத்தால் நேசிக்கப்படுவதும் மிகமிக அத்தியாவசியமானதாகும். நான்கிலும் உங்களின் நம்பிக்கையின் சதவீதத்தின் அடிப்படையிலேயே நீங்கள் ஓரிலக்கத்தைப் பெறுவீர்கள். ‘நான் பாபாவிற்குச் சொந்தமானவன், பாபா எனக்குச் சொந்தமானவர், அவ்வளவுதான்!’ என நினைக்காதீர்கள். அப்படியில்லை. ‘எனது பாபா’ என மிக நல்ல முறையில் நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் இந்த நம்பிக்கையில் சதா அசைக்க முடியாதவராக இருக்கிறீர்கள். அதனால், அதற்காகப் பாராட்டுக்கள்! எவ்வாறாயினும், ஏனைய மூன்றும் உள்ளன. ஆசிரியர்களே, நான்கும் அவசியமா? அல்லது, இல்லையா? மூன்று மட்டுமே அவசியம், நான்காவது அவசியம் இல்லையா? நான்கிலும் நம்பிக்கை அவசியம் வேண்டும் என நம்புவர்கள், ஒரு கையை உயர்த்துங்கள். நீங்கள் நான்கு விடயங்களையும் விரும்புபவர்கள். மூன்று விடயங்களை மட்டும் விரும்புபவர்கள், உங்களின் கையை உயர்த்துங்கள்! எவருமேயில்லை. அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவது கஷ்டம் இல்லைத்தானே? மிகவும் நல்லது. உங்களின் இதயபூர்வமாக நீங்கள் உங்களின் கையை உயர்த்தியிருந்தால், நீங்கள் எல்லோரும் சித்தி அடைந்துள்ளீர்கள். அச்சா.
பாருங்கள், வெவ்வேறு பல பிராந்தியங்களில் இருந்து பல கிளைகள் மதுவனத்திற்கு வந்து, ஒரு மரம் ஆகியுள்ளது. நீங்கள் மதுவனத்தில் இருக்கும்போது, நீங்கள் டெல்லியில் இருந்து வந்துள்ளீர்கள், நீங்கள் கர்நாடகாவில் இருந்து வந்துள்ளீர்கள், நீங்கள் குஜராத்தில் இருந்து வந்துள்ளீர்கள் என்பதை நினைக்கிறீர்களா? நீங்கள் எல்லோரும் மதுவனவாசிகள். எனவே, இது ஒரு மரம், அப்படித்தானே? இந்த வேளையில் நீங்கள் எல்லோரும் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் மதுவனவாசிகளா அல்லது உங்களின் சொந்தப் பிராந்தியங்களின் வாசிகளா? நீங்கள் மதுவனவாசிகளா? நீங்கள் எல்லோரும் மதுவனவாசிகளே. மிகவும் நல்லது. எப்படியும், ஒவ்வொரு பிராமணரின் நிரந்தர முகவரியும் மதுவனமே. உங்களின் நிரந்தர முகவரி என்ன? அது பம்பாயா? அது டெல்லியா? அது பஞ்சாபா? மதுவனமே உங்களின் நிரந்தர முகவரியாகும். சேவை செய்வதற்காகவே நீங்கள் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளீர்கள். அது சேவை செய்வதற்கான இடம், மதுவனமே உங்களின் வீடு. இறுதியில், நீங்கள் எங்கே புகலிடம் பெறுவீர்கள்? நீங்கள் அதை மதுவனத்திலேயே பெறுவீர்கள். இதனாலேயே, பல பெரிய கட்டடங்கள் கட்டப்படுகின்றன, அப்படித்தானே?
உங்கள் எல்லோருக்கும் தந்தைக்குச் சமமாக இருக்கும் இலட்சியம் உள்ளது. ஆகவே, நாள் முழுவதும் இந்த அப்பியாசத்தைச் செய்யுங்கள் - மனதின் அப்பியாசம். நீங்கள் சரீரத்தின் நல்ல ஆரோக்கியத்திற்காக பௌதீக அப்பியாசம் செய்கிறீர்கள். தொடர்ந்து அதைச் செய்யுங்கள். ஏனென்றால், தற்காலத்தில், உடல் அப்பியாசம் மருந்தைவிட அதிகம் தேவைப்படுகிறது. அதைச் செய்யுங்கள். அதிகளவில் அதைச் செய்யுங்கள். ஆனால், சரியான நேரத்தில் அதைச் செய்யுங்கள். சேவை செய்யும் வேளையில், உடல் அப்பியாசத்தைத் தொடர்ந்து செய்யாதீர்கள். சரியான வேளையில் உடல் அப்பியாசம் செய்வதே நல்லது. எவ்வாறாயினும், அத்துடன்கூடவே, மீண்டும் மீண்டும் உங்களின் மன அப்பியாசத்தையும் செய்யுங்கள். நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆக விரும்புகிறீர்கள் - ஒருவர் அசரீரியானவர், மற்றவர் அவ்யக்த தேவதை. ஆகவே, உங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம், ஒரு விநாடியில் தந்தைக்குச் சமமாக, அசரீரி ஸ்திதியில் ஸ்திரமடையுங்கள். நீங்கள் தந்தைக்குச் சமமாக விரும்புவதால், அசரீரி ஸ்திதியே தந்தைக்குச் சமமான ஸ்திதியாகும். உங்களின் பணிகளைச் செய்யும்போது, சகல செயல்களையும் ஒரு தேவதையாகச் செய்யுங்கள். தேவதை என்றால், இலேசாகவும் ஒளியாகவும் இருத்தல் என்று அர்த்தம். பணியின் எந்தவிதமான சுமையும் இருக்கக்கூடாது. பணியின் சுமையானது, நீங்கள் அவ்யக்த தேவதை ஆகுவதற்கு அனுமதிக்காது. எனவே, இடையில், உங்களின் மனதை அசரீரி மற்றும் தேவதை ஸ்திதிகளில் பயிற்சி செய்யுங்கள். எந்தவிதமான களைப்பும் இருக்காது. நீங்கள் தந்தை பிரம்மாவை பௌதீக ரூபத்தில் கண்டீர்கள் - அவர் இலேசாகவும் ஒளியாகவும் இருந்தார். சேவையின் சுமையேனும் இருக்கவில்லை. அவ்யக்த தேவதை ரூபம். அப்போது உங்களால் இலகுவாகத் தந்தைக்குச் சமமானவர் ஆகமுடியும். ஆத்மாக்களான நீங்கள் அசரீரியானவர்கள். எனவே, ஆத்மாக்களான நீங்கள் அசரீரி ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கும்போது, அசரீரியான தந்தையின் நினைவானது இலகுவாக உங்களைச் சமமானவர் ஆக்கும். இப்போது ஒரு விநாடியில் உங்களால் அசரீரி ஸ்திதியில் ஸ்திரமாக்க முடியுமா? உங்களால் இதைச் செய்ய முடியுமா? (பாப்தாதா இந்தப் பயிற்சியைச் செய்வித்தார்). இதை மீண்டும் மீண்டும் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். நடக்கும்போதும் அசையும்போதும் எல்லாவற்றையும் செய்யும்போதும் இதில் கவனம் செலுத்துங்கள். இந்தப் பயிற்சியானது, உங்களின் மனதால் சேவை செய்வதற்கு உங்களுக்கு உதவி செய்யும். சக்திவாய்ந்த யோகா ஸ்திதியைக் கொண்டிருப்பதில் நீங்கள் அதிகளவு உதவியைப் பெறுவீர்கள். அச்சா.
இரட்டை வெளிநாட்டவர்களுடன் பேசுகிறார்: பாருங்கள், இந்தப் பருவகாலத்தில், இரட்டை வெளிநாட்டவர்கள், ஏதாவதொரு காரணத்தால் ஒவ்வொரு குழுவிலும் வருவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். ஒவ்வொரு குழுவிலும் உங்களால் வரமுடியும். உங்களுக்கு இந்தச் சுதந்திரம் உள்ளது. இது பாக்கியமல்லவா? இது இரட்டைப் பாக்கியம். எனவே, இந்தக் குழுவிலும், சிலர் முதல் தடவையாக வந்திருப்பதையும் சிலர் முதல் சந்திப்பில் இருந்தே இங்கிருப்பதையும் பாப்தாதா பார்க்கிறார். பாப்தாதாவின் திருஷ்டியானது சகல வெளிநாட்டவர்களின் மீதும் உள்ளது. நீங்கள் எந்தளவிற்குத் தந்தையை நேசிக்கிறீர்களோ, அந்தளவிற்குத் தந்தை உங்களின் மீது பலமில்லியன் மடங்கு அதிகமான அன்பை வைத்திருக்கிறார். இது சரிதானே? பாபா பலமில்லியன் மடங்கு அன்பு வைத்திருக்கிறாரா? உங்களின் அன்பும் இதயபூர்வமான அன்பே. இதனாலேயே, நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். இரட்டை வெளிநாட்டவர்கள், இந்த பிராமணக் குடும்பத்தின் அலங்காரம். நீங்கள் விசேடமான அலங்காரம் ஆவீர்கள். ஒவ்வொரு நாட்டிலும் அவர்கள் நினைவில் அமர்ந்திருப்பதை பாப்தாதா பார்க்கிறார். அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், அத்துடன் நினைவிலும் அமர்ந்திருக்கிறார்கள். மிகவும் நல்லது!
ஆசிரியர்கள்: ஆசிரியர்களின் குழு மிகவும் பெரியது. பாப்தாதா ஆசிரியர்களுக்கு ஒரு பட்டம் வழங்குகிறார். அவர் உங்களுக்கு என்ன பட்டத்தை வழங்குகிறார்? எல்லோரும் நண்பர்களே. அனைத்திற்கும் முதலில், இரட்டை வெளிநாட்டவர்கள், நண்பர்கள். அவர்கள் நண்பர் என்ற உறவுமுறையை விரும்புகிறார்கள். பாப்தாதா ஆசிரியர்களுக்கு ‘குருபாய்’ (ஒரே குருவின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி, அந்த குருவிற்குச் சமம் ஆகுகின்ற சகோதரர்கள்) என்ற பட்டத்தை வழங்குகிறார். ஆனால், இது தகுதிவாய்ந்த ஆசிரியர்களுக்கு மட்டுமே. எப்படி மூத்த மகன் தனது தந்தைக்குச் சமமானவர் ஆகுகிறாரோ, அதேபோல், ஆசிரியர்களும் ‘குருபாய்’ ஆவார்கள். ஏனென்றால், அவர்கள் தந்தையின் சேவையைச் செய்வதில் சதா கருவிகளாக இருக்கிறார்கள். நீங்கள் தந்தைக்குச் சமமான சேவையாளர்கள். பாருங்கள், ஆசிரியர்கள் முரளி வாசிப்பதற்காகத் தந்தையின் சிம்மாசனத்தைப் பெறுகிறார்கள். நீங்கள் குருவின் கதியைப் பெறுகிறீர்கள்தானே? இதனாலேயே, ஆசிரியர்கள் என்றால் சதா சேவையாளர்கள் என்று அர்த்தம். எண்ணங்களின் மூலமாகவோ, வார்த்தைகள் அல்லது செயல்களின் மூலமாகவோ, உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளின் மூலமாகவோ, சதா சேவையாளராக இருக்க வேண்டும். நீங்கள் அத்தகையவர்கள்தானே? நீங்கள் ஓய்வெடுக்க விரும்புவர்கள் இல்லையல்லவா? சேவையாளர்கள்! சேவை, சேவை, சேவை! இது சரிதானே? அச்சா.
இந்தத் தடவை சேவை செய்வதற்கு டெல்லியும் ஆக்ராவும் பொறுப்பானவர்கள்: ஆக்ரா ஒரு சகபாடி. டெல்லியின் சேனை மிகப் பெரியது. ஸ்தாபனையின் அத்திவாரம் டெல்லியில் ஏற்பட்டது, அது மிகவும் நல்லது. இப்போது, தந்தையை வெளிப்படுத்துவதற்கான அத்திவாரம் எங்கே இருக்கும்? டெல்லியிலா அல்லது மகாராஷ்டிராவா? கர்நாடகாவா அல்லது இலண்டனா? அது எங்கே நடக்கும்? அது டெல்லியில் நடக்குமா? அவர்கள் சதா சேவையும் தபஸ்யாவும் செய்கிறார்கள்! சேவையினதும் தபஸ்யாவினதும் சமநிலையால் வெளிப்படுத்தல் நிகழும். எப்படி நீங்கள் சேவைக்காக உரையாடல் முறையை உருவாக்கினீர்களோ, அதேபோல், டெல்லியிலும் அவர்கள் தபஸ்யாவைப் பற்றிப் பேசக்கூடிய வகையில் ஓர் உரையாடல் நிகழ்ச்சியை உருவாக்குங்கள். அப்போது மட்டுமே டெல்லியை டெல்லி என்று சொல்ல முடியும். உங்களின் இதயம் தந்தைக்கே சொந்தமானது. ஆனால், எதையாவது பெறுவதன் மூலம் நீங்கள் இதைச் செய்து காட்டும்போது, நீங்கள் தந்தையால் நேசிக்கப்படுவீர்கள். பாண்டவர்களே, நீங்கள் இதைச் செய்யப் போகிறீர்கள்தானே? நீங்கள் அதைச் செய்வீர்கள். நீங்கள் நிச்சயமாக அதைச் செய்வீர்கள். சகல விட்டில் பூச்சிகளும் ‘பாபா, பாபா!’ எனக் கூறிய வண்ணம் டெல்லி என்ற விசேடமான இடத்தை வந்தடையும் வகையில் தபஸ்யா செய்யுங்கள். விட்டில்பூச்சிகள் வந்து, ‘பாபா, பாபா!’ எனச் சொல்லும்போது, வெளிப்படுத்துகை இடம்பெற்றுள்ளது என உங்களால் சொல்ல முடியும். அதனால், நீங்கள் இதைச் செய்ய வேண்டும். அடுத்த வருடம் இந்த உரையாடல் நிகழ்ச்சியை உருவாக்குங்கள். எத்தனை விட்டில் பூச்சிகள் ‘பாபா, பாபா!’ எனக் கூறியவண்ணம் வந்து, தங்களை அர்ப்பணித்தார்கள் என்ற பெறுபேற்றை நீங்கள் பாபாவிடம் கொடுக்க வேண்டும். இது ஓகேயா? மிகவும் நல்லது! பல தாய்மார்களும் இருக்கிறார்கள்.
குமார்களும் குமாரிகளும்: மண்டபத்தின் அரைவாசி குமார்களாலும் குமாரிகளாலும் நிரம்பியுள்ளது. குமார்களும் குமாரிகளும் நன்றாக செய்துள்ளீர்கள். குமார்களும் குமாரிகளும் தீவிர அக்கினி ரூபமாகி, ஆத்மாக்களைத் தூய்மையாக்குபவர்கள். குமார்களும் குமாரிகளும், இன்றைய குமார்களுக்காகவும் குமாரிகளுக்காகவும் கருணை கொள்ள வேண்டும். அவர்கள் அதிகளவில் அலைந்து திரிகிறார்கள். அலைகின்ற உங்களுக்குச் சமமானவர்களைச் சரியான பாதைக்கு அழைத்து வாருங்கள். அச்சா, இங்கு வந்துள்ள குமார்களிலும் குமாரிகளிலும், இந்த வருடம் ஏனைய ஆத்மாக்களைச் சேவையில் உங்களுக்குச் சமமாக்கியவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். குமாரிகளான நீங்கள் யாரையாவது உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்கினீர்களா? நீங்கள் மிக நல்ல திட்டங்களைச் செய்கிறீர்கள். விடுதியில் இருந்து வந்திருப்பவர்கள், தமது கைகளை உயர்த்துகிறார்கள். நீங்கள் சேவைக்கான எந்தவொரு சாட்சியையும் கொண்டு வரவில்லை. ஆகவே, குமார்களும் குமாரிகளுமான நீங்கள், சேவைக்கான ஏதாவது சாட்சியைக் கொண்டு வரவேண்டும். ஓகேயா?
எங்கும் உள்ள வெற்றி இரத்தினங்களுக்கு, தமது புத்திகளில் சதா நம்பிக்கை வைத்திருப்பதன் மூலம் இலகு வெற்றியின் சொரூபங்களாக இருக்கும் குழந்தைகளுக்கு, ‘எனது பாபா’ என சதா கூறுகின்ற உரிமையுடன் தாம் செய்யும் ஒவ்வொரு சேவையிலும் வெற்றி பெறுகின்ற வெற்றி சொரூபங்களான குழந்தைகளுக்கு, சதா தீர்வுகளின் சொரூபங்களாக இருப்பவர்களுக்கு, பிரச்சனைகளை மாற்றுகின்ற, மாற்றத்தை ஏற்படுத்தும் ஆத்மாக்களுக்கு, சதா தந்தையை வெளிப்படுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற மேன்மையான குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் பாராட்டுக்களும் - பலமில்லியன் மடங்கு பாராட்டுக்கள் - நமஸ்காரங்களும்.
தாதிஜியிடம் பேசுகிறார்: எல்லோரும் உங்களை நேசிக்கிறார்கள். தந்தையும் உங்களை நேசிக்கிறார். (தாதி இரத்தன்மோகினியிடம்) ஒத்துழைப்பதன் மூலம், நீங்கள் சூட்சுமமான முறையில் அதிகளவைப் பெறுகிறீர்கள். அப்படித்தானே? நீங்கள் ஓர் ஆதி இரத்தினம். ஆதி இரத்தினமான நீங்கள், இப்போதும் ஒரு கருவியாக இருக்கிறீர்கள். அச்சா.
ஆசீர்வாதம்:
‘எல்லாம் உங்களுடையது’ எனக் கூறுவதன் மூலமும் ‘எனது’ என்ற உணர்வின் சிறிதளவு சுவட்டையேனும் முடிப்பதன் மூலமும் இலேசாகவும் ஒளியாகவும் ஆகுவீர்களாக.‘எனது’ என்ற எந்த வகையான உணர்வும், ‘எனது சுபாவம், எனது சம்ஸ்காரங்கள், எனது இயல்பு’ என ‘எனது’ என்ற எதுவும் ஒரு சுமையே. சுமையைச் சுமப்பவர்களால் பறக்க முடியாது. ‘எனது’ என்ற இந்த உணர்வானது உங்களை அழுக்காக்குகிறது. இதனாலேயே, நீங்கள் இப்போது, ‘உங்களுடையது, உங்களுடையது’ எனக் கூறி, சுத்தமாக வேண்டும். ஒரு தேவதையிடம் ‘எனது’ என்ற உணர்வின் சிறிதளவு சுவடேனும் இருக்காது. உங்களின் எண்ணங்களில் இன்னமும் ‘எனது’ என்ற உணர்வு இருக்குமாயின், நீங்கள் அழுக்காகி விட்டீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ‘எனது’ என்ற உணர்வின் சுமையை முடித்து, டபிள் லைற் ஆகுங்கள்.
சுலோகம்:
உலகின் ஒளிகள், பாப்தாதாவைத் தமது கண்களில் அமிழ்த்தி இருப்பார்கள்.