11.11.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் மீது முழுக்கவனம் செலுத்துங்கள். நீங்கள் சட்டத்திற்கு மாறாக எந்தச் செயலையும் செய்யக்கூடாது. ஸ்ரீமத்திற்குக் கீழ்ப்படியாவிட்டால், நீங்கள் வீழ்ந்து விடுவீர்கள்.

பாடல்:
ஒரு பல்கோடீஸ்வரர் ஆகுவதற்கு நீங்கள் என்ன முன்னெச்சரிக்கையை எடுக்க வேண்டும்?

பதில்:
எப்போதும் இந்தக் கவனம் இருக்கட்டும்: நான் எந்தச் செயல்களைச் செய்தாலும் என்னைப் பார்ப்பவர்களும், அவ்வாறே செய்வார்கள். நீங்கள் எந்தப் போலியான அகங்காரத்தையும் கொண்டிருக்கக்கூடாது. நீங்கள் என்றுமே முரளியைத் தவறவிடக் கூடாது. உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில், கவனமாக இருங்கள். உங்கள் கண்கள் உங்களை ஏமாற்றக் கூடாது. அப்போது, உங்களால் பல்கோடி வருமானத்தை ஈட்டக்கூடியதாக இருக்கும். இதனை அடைவதற்கு அகநோக்கில் நிலைத்திருந்து, தந்தையை நினைவு செய்வதுடன், பாவச் செயல்கள் அனைத்திலிருந்தும் பாதுகாப்பாக இருங்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும்போது உங்கள் புத்தியில் அந்த ஒரேயொருவரே எங்கள் பாபாவும், எங்கள் ஆசிரியரும், எங்கள் சற்குருவும் ஆவார் என்ற எண்ணம் நிச்சயமாக இருக்க வேண்டும். நீங்கள் பாபாவை நினைவு செய்வதன் மூலம் தூய்மையாகுவதுடன், தூய்மையான உலகிற்கும் செல்வீர்கள் என்பதையும் நீங்கள் உணர்கிறீர்கள். நீங்கள் தூய உலகிலிருந்து இறங்கி வருகிறீர்கள் என்பதையும் பாபா விளங்கப்படுத்தியுள்ளார். அது தூய உலகம் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் நீங்கள் சதோபிரதான் ஸ்திதியிலிருந்து சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளுக்கூடாகச் செல்கிறீர்கள். நீங்கள் வீழ்ந்து விட்டீர்கள் என்பதை இப்போது புரிந்து கொள்கிறீர்கள். அதாவது நீங்கள் விலைமாதர் இல்லத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் சங்கமயுகத்தில் இருந்தாலும், ஞானத்தின் மூலம் நீங்கள் இந்த உலகைக் கடந்துவிட்டீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் சிவபாபாவை நினைவு செய்து கொண்டிருந்தால், சிவாலயம் (சிவனின் ஆலயம்) வெகு தூரத்தில் இருக்காது. நீங்கள் சிவபாபாவை நினைவு செய்யாவிட்டால் சிவாலயம் வெகு தூரத்திலேயே இருக்கும். நீங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டியிருந்தால், தூரவிலகி இருப்பீர்கள். ஆகவே தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு அதிக சிரமத்தைக் கொடுப்பதில்லை. முதலாவதாக, அவர் மீண்டும் மீண்டும் கூறுகிறார்: உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் நீங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். அந்தப் பௌதீகக் கண்கள் உங்களை அதிகளவு ஏமாற்றலாம். நீங்கள் அவற்றையிட்டு அதிக கவனம் செலுத்தவேண்டும். திரான்ஸ் என்பது யோகத்திலிருந்து முற்றாக வேறுபட்டது என்பதைத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். யோகம் என்றால் நினைவு ஆகும். நீங்கள் உங்கள் கண்களைத் திறந்தவாறே நினைவு செய்யலாம். திரான்ஸ் யோகம் அல்ல. நீங்கள் போக் படைக்கும்போது, உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வழிகாட்டல்களுக்கு ஏற்ப நீங்கள் மேலே செல்ல வேண்டும். இதில் மாயை அதிகளவு தலையிடுகிறாள். மாயை (உங்களைத் துன்புறுத்தி) உங்கள் மூக்கைப் பிடிக்கும் அளவிற்கு இருக்கிறாள்! தந்தை எவ்வளவு சக்தி வாய்ந்தவரோ, அவ்வாறே மாயையும் மிகவும் சக்தி வாய்ந்தவள். அவள் மிகவும் சக்தி வாய்ந்தவள். முழு உலகையுமே விலைமாதர் இல்லத்திற்குள் தள்ளிவிட்டாள். ஆகவே நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் தந்தையை மிகச் சரியாகவும், ஒழுங்குமுறையுடனும் நினைவு செய்யவேண்டும். நீங்கள் சட்டத்திற்கு விரோதமாக ஏதாவது செயல்களைச் செய்தால் அவள் உங்களை முற்றாக வீழ்த்திவிடுகிறாள். நீங்கள் திரான்ஸ் போன்றவற்றில் எந்த ஆசையையும் கொண்டிருக்கக்கூடாது. ஆசைகள் என்றால் என்னவென்றே அறியாதவர்கள் ஆகுங்கள். நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றினால், உங்களுடைய ஆசைகள் அனைத்தும், நீங்கள் கேட்காமலேயே பூர்த்தி செய்யப்படும். அவருடைய அறிவுறுத்தல்களைப் பின்பற்றாது, தவறான பாதையில் சென்றால், சுவர்க்கத்திற்குச் செல்வதற்குப் பதிலாக நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடுவீர்கள். முதலை யானையை விழுங்கியது நினைவுகூரப்படுகிறது. இந்த ஞானத்தைப் பலருக்குக் கொடுத்து, போக் படைத்தவர்களும் இன்று இங்கு இல்லை. அவர்களின் முறைகேடான நடத்தையினால், அவர்கள் முற்றாக மாயையின் ஆதிக்கத்திற்கு உள்ளாகிவிட்டார்கள். தேவர்கள் ஆகிக்கொண்டிருக்கையில் அவர்கள் அசுரர்கள் ஆகிவிட்டார்கள். மிகச் சிறந்த முயற்சி செய்து, தேவர்கள் ஆகுபவர்கள் அசுரர்கள் போலாகி அசுர குணமுடையவர்களுடன் வாழ்கின்றார்கள் என்பது பாபாவிற்குத் தெரியும். அவர்கள் துரோகிகள் ஆகிவிட்டார்கள். பாபாவிற்கு உரியவர்களாகி, பின்னர் மாயைக்கு உரியவர்கள் ஆனவர்களே துரோகிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். நீங்கள் உங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் ஸ்ரீமத்திற்குக் கீழ்ப்படியாவிட்டால், வீழ்ந்துவிடுவீர்கள். அதனை உணரவும் மாட்டீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களை எச்சரிப்பதுடன், உங்கள் நடத்தை உங்களை ஆழ் நரகத்திற்கு அழைத்துச் செல்வதாக இருக்கக்கூடாது என்றும் கூறுகிறார். பல சகோதரர்கள் தங்களுக்கிடையே நிர்வாக சபைகளை உருவாக்கி, ஸ்ரீமத்தைப் பின்பற்றாது, அனைத்தையும் செய்வதால் அவச் சேவை செய்கிறார்கள் என்று பாபா நேற்று விளங்கப்படுத்தினார். ஸ்ரீமத் இன்றி நீங்கள் எதனைச் செய்தாலும் தொடர்ந்து நீங்கள் விழுந்து விடுவீர்கள். ஆரம்பத்தில் பாபா தாய்மார்களைக் கொண்ட நிர்வாக சபை ஒன்றை உருவாக்கினார். ஏனெனில், தாய்மார்களிடமே அமிர்த கலசம் கொடுக்கப்பட்டது. தாய்மார்களுக்கு வந்தனங்கள் என்பது நினைவுகூரப்படுகிறது. சகோதரர்கள் நிர்வாக சபைகளை உருவாக்கினாலும், சகோதரர்களுக்கு வந்தனங்கள் என்று கூறப்படுவதில்லை. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றவில்லை என்றால் மாயையின் வலையில் அகப்பட்டுக் கொள்வீர்கள். பாபா தாய்மார்களைக் கொண்ட நிர்வாக சபை ஒன்றை உருவாக்கி, அனைத்தையும் அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். பொதுவாக பெண்களன்றி, ஆண்களே கடன்தீர்க்க முடியாத நிலையை ஏற்படுத்துகிறார்கள். அதனாலேயே தந்தை கலசத்தைத் தாய்மாரிடம் கொடுத்துள்ளார். இந்த ஞானப்பாதையில் தாய்மார்களும் கடன்தீர்க்க முடியாத நிலையை அடையலாம். பல்கோடி மடங்கு பாக்கியசாலி ஆகக்கூடியவர்களும் மாயையால் தோற்கடிக்கப்பட்டு கடன் தீர்க்க முடியாத நிலையை அடையலாம். இங்கு ஆண், பெண் இருவரும் கடன்தீர்க்க முடியாத நிலையை அடையலாம். அவர்கள் கடனைத் தீர்க்க வகையற்றவர் ஆகிறார்கள்! பலர் தோற்கடிக்கப்பட்டு விலகிச்சென்று விடுகிறார்கள். அவர்கள் கடன் தீர்க்க முடியாத நிலையை அடைந்துவிட்டார்கள் என்பதே அதன் அர்த்தமாகும். பாரத மக்கள் முற்றாகக் கடன் தீர்க்கமுடியாத நிலையை அடைந்துவிட்டார்கள் என்று பாபா விளங்கப்படுத்துகிறார். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள். மக்கள் தாங்கள் எவ்வாறு இருந்தோம் என்பதையும், எவ்வாறு தாங்கள் முற்றாக வீழ்ந்துவிட்டோம் என்பதையும் புரிந்துகொள்ள முடியாது இருக்கிறார்கள். இங்கும், உங்களிற் சிலர் ஏறும்பொழுது, ஸ்ரீமத்தை மறந்து, உங்கள் சொந்த வழிகாட்டல்களைப் பின்பற்றி, பின்னர் கடன்தீர்க்க முடியாத நிலையை அடைகிறீர்கள். அந்த மக்கள் கடன்தீர்க்க முடியாத நிலையை அடைந்த பின்னர் ஐந்து முதல் ஏழு வருடங்களில் அதிலிருந்து மீண்டு விடலாம். ஆனால் இங்கு நீங்கள் 84 பிறவிகளுக்கு கடன்தீர்க்க முடியாத நிலையை அடைகிறீர்கள். அப்போது உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாது. நீங்கள் தொடர்ந்து கடன் தீர்க்க முடியாத நிலையை அடைகிறீர்கள். பாபாவிடம் புகைப்படங்கள் இருந்தால், அவர் உங்களுக்குக் காட்டுவார். பாபா உங்களுக்குக் கூறுகின்றவை முற்றிலும் சரியானவை என்று நீங்கள் கூறுவீர்கள். இவர் ஒரு சிறந்த மஹாராத்தியாக இருந்து பலரை ஈடேற்றினார். இன்று அவர் இங்கு இல்லை. ஆனால் அவர் கடன் தீர்க்க முடியாத நிலையை அடைந்துவிட்டார். பாபா மீண்டும், மீண்டும் குழந்தைகளாகிய உங்களை எச்சரிக்கை செய்கிறார். உங்களுடைய சொந்த வழிகாட்டல்களுக்கு ஏற்ப நீங்கள் நிர்வாக சபைகள் போன்றவற்றை அமைப்பதால் எவ்வித இலாபமும் இல்லை. அப்போது நாள் முழுவதும் நீங்கள் சந்திக்கும் போதெல்லாம் “இவர் இதனைச் செய்கிறார், அவர் அதனைச் செய்கிறார்” என்று அரட்டை அடிப்பீர்கள். உங்கள் புத்தியின் யோகம் தந்தையுடன் மாத்திரம் இருக்கும்போதே, நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். தந்தைக்குச் சொந்தமானவர் ஆகிய பின்னர், உங்கள் யோகம் அவருடன் தொடர்புபடவில்லை என்றால், நீங்கள் தொடர்ந்து வீழ்வீர்கள். உங்களுடைய தொடர்பு துண்டிக்கப்படுகிறது. உங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டால் நீங்கள் பயப்பட்டு, மாயை ஏன் இவ்வளவு துன்பத்தைக் கொடுக்கிறாள் என்று கேள்வி எழுப்பக்கூடாது. நீங்கள் மீண்டும் தந்தையுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சி செய்யவேண்டும். அவ்வாறில்லாவிட்டால், உங்கள் மின்கலத்திற்கு (பற்றரி) எவ்வாறு சக்தி ஏற்றப்படும்? பாவச் செயல்கள் ஏதாவது இருந்தால், மின்கலத்தின் சக்தி இல்லாமல் போய்விடும். ஆரம்பத்தில் பலர் வந்து, பாபாவிற்குச் சொந்தமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் பத்தியில் இணைந்து கொண்டார்கள். இன்று அவர்கள் எங்கே? அவர்கள் பழைய உலகை நினைவு செய்ததால் வீழ்ந்துவிட்டார்கள். தந்தை கூறுகிறார்: எல்லையற்ற ஆர்வமின்மையைக் கொண்டிருப்பதற்கு உங்களை நான் இப்பொழுது தூண்டுகிறேன். உங்கள் இதயம் இந்தப்பழைய உலகில் பற்றைக் கொண்டிருக்க அனுமதிக்காதீர்கள். உங்கள் இதயம் சுவர்க்கத்துடன் இணைந்திருக்கட்டும். நீங்கள் இலக்ஷ்மி, நாராயணன் போன்று ஆகுவதற்கு விரும்பினால், நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். உங்கள் புத்தியின் யோகம் ஒரேயொரு தந்தையுடன் இருக்கவேண்டும். அத்துடன் பழைய உலகில் ஆர்வமின்மையும் இருக்கவேண்டும். சந்தோஷ தாமத்தையும், அமைதி தாமத்தையும் நினைவு செய்யுங்கள். நீங்கள் நடந்தும், உலாவித் திரியும்போதும் உங்களால் முடிந்த அளவுக்கு நீங்கள் பாபாவை நினைவு செய்யவேண்டும். இது முற்றிலும் இலகுவானதாகும். நீங்கள் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாறுவதற்காக இங்கு வந்துள்ளீர்கள். திரும்பிச் செல்லும் நேரம் இதுவாகையால், அவர்கள் தமோபிரதானிலிருந்து, சதோபிரதான் ஆகவேண்டும் என்று நீங்கள் அனைவருக்கும் கூறுங்கள். உலகின் வரலாறும், புவியியலும் மீண்டும் இடம்பெறுகிறது. நரகம் சுவர்க்கமாகிறது, சுவர்க்கம் நரகமாகிறது என்பதே அதன் அர்த்தமாகும். இந்தச் சக்கரம் தொடர்ந்து சுழல்கிறது. தந்தை கூறுகிறார்: நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும்போது, சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் (சுயதரிசன சக்கரதாரி) ஆகுங்கள். நீங்கள் பல தடவைகள் சக்கரத்தைச் சுற்றி வந்தீர்கள் என்ற நினைவில் அமர்ந்திருங்கள். இப்போது நீங்கள் மீண்டும் ஒரு தடவை தேவர்கள் ஆகுகிறீர்கள். உலகிலுள்ள எவரும் இதன் மகிமையைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். தேவர்களிடம் இந்த ஞானம் இல்லை. எவ்வாறாயினும் அவர்கள் தூய்மையானவர்கள். அவர்களிடம் ஞானம் இல்லாததால், அவர்களால் சங்கை ஊத முடியாது. அவர்கள் தூய்மையானவர்கள் என்பதால், இந்த அடையாளங்களை அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய தேவையில்லை. இருவரும் ஒன்றாக இருக்கும்போதே அடையாளங்கள் கொடுக்கப்படுகின்றன. உங்களுக்கும் இந்த அடையாளங்கள் கொடுக்கப்படுவதில்லை. ஏனெனில் இன்று நீங்கள் தேவர்களாகுகின்றீர்கள், நாளை நீங்கள் அசுரர்கள் ஆகுகிறீர்கள். தந்தை உங்களைத் தேவர்கள் ஆக்குகிறார். மாயை உங்களை அசுரர்கள் ஆக்குகிறாள். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தும்போது, உங்களுடைய ஸ்திதி உண்மையில் வீழ்ந்துவிட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பல அபாக்கியசாலிகள் சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்திற்குக் கொடுத்தார்கள். ஆனால் பின்னர் அவர்கள் அவற்றைக் கேட்டு வாங்கி, அசுரர்கள் ஆகிவிட்டார்கள். யோகம் இல்லாததாலேயே இவ்வாறு ஏற்பட்டது. யோகத்தின் மூலமே உங்களால் தூய்மையாக முடியும். பாபா, வந்து எங்களைத் தூய்மையற்றவர்களில் இருந்து தூய்மையானவர்களாக மாற்றுங்கள். அப்போது எங்களால் சுவர்க்கத்திற்குச் செல்லமுடியும் என்று நீங்கள் அழைத்தீர்கள். நீங்கள் நினைவு யாத்திரையில் இருக்கிறீர்கள். அதனால் நீங்கள் தூய்மையாகி, ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறலாம். சிறிதளவு ஞானத்தைச் செவிமடுத்த பின்னர், மரணித்தவர்கள், அவர்கள் என்ன அந்தஸ்தைக் கோரினாலும், நிச்சயமாக அவர்கள் சிவாலயத்திற்குச் (சிவனின் ஆலயம்) செல்வார்கள். அவர்கள் நினைவு செய்ததும் நிச்சயமாக சுவர்க்கத்திற்குச் செல்வார்கள். ஆனால், அவர்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாது. சுவர்க்கம் என்ற பெயரைக் கேட்டதும் நீங்கள் சந்தோஷப்பட வேண்டும். சித்தியடையாது, சதப் பெறுமதியான அந்தஸ்தைப் பெறுவதையிட்டு நீங்கள் சந்தோஷப்படக் கூடாது. நீங்கள் அங்கே ஒரு வேலைக்காரன் என்ற உணர்வு நிச்சயமாக உங்களுக்கு இருக்கும். இறுதியில் நீங்கள் என்னவாக ஆகப்போகின்றீர்கள் என்ற காட்சி கிடைப்பதுடன், நீங்கள் என்ன பாவச் செயல்களைச் செய்ததால், அந்த நிலை உங்களுக்கு உண்டானதென்றும், ஏன் நீங்கள் ஒரு சக்கரவர்த்தினி ஆகவில்லை என்றும் அறிந்துகொள்வீர்கள். ஒவ்வொரு படியிலும் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் நீங்கள் பல்கோடீஸ்வரர்கள் ஆகலாம். ஆலயங்களில் தேவர்களின் விக்கிரகங்கள் தாமரையின் அடையாளத்துடன் காட்டப்பட்டுள்ளது. அந்தஸ்தில் வித்தியாசம் உள்ளது. இன்றுள்ள இராச்சியம் தற்காலிகமானது என்றபோதிலும், அதிகளவு பகட்டு உள்ளது. அவர்கள் எப்போதும் அரசர்களாக இருக்கமாட்டார்கள். ஆகவே தந்தை கூறுகிறார்: நீங்கள் இலக்ஷ்மி, நாராயணன் போன்று ஆகுவதற்கு விரும்பினால், அதற்கேற்ப முயற்சி செய்ய வேண்டும். எத்தனை பேருக்கு நீங்கள் நன்மை செய்திருக்கிறீர்கள்? எவ்வளவு நேரத்திற்கு நீங்கள் அகநோக்கிலிருந்து, பாபாவை நினைவு செய்கிறீர்கள்? இப்போது நாங்கள் எங்கள் இனிய வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். பின்னர் நாங்கள் சந்தோஷ தாமத்திற்கு இறங்கி வருவோம். இந்த ஞானம் அனைத்தையும் நீங்கள் உள்ளார்ந்தமாகக் கடையவேண்டும். தந்தையிடம் ஞானம், யோகம் இரண்டும் உள்ளன. நீங்களும் இவை இரண்டையும் உங்களில் கொண்டிருக்கவேண்டும். சிவபாபா உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே இது ஞானமும், நினைவுமாகும். கியானும், யோகமும் இணைந்துள்ளன. நீங்கள் யோகத்தில் அமர்ந்திருந்து, தொடர்ந்து பாபாவின் நினைவில் இருந்தால், ஞானம் மறக்கப்பட்டுவிடுமென்று இருக்கக்கூடாது. தந்தை யோகத்தை உங்களுக்குக் கற்பிக்கும்போது அவர் ஞானத்தை மறந்துவிடுகிறாரா? அனைத்து ஞானமும் அவருக்குள் உள்ளது. குழந்தைகளாகிய நீங்களும் இந்த ஞானத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் கற்கவேண்டும். நான் செய்யும் செயல்களை மற்றவர்கள் பார்க்கும்போது, அவர்களும் அவ்வாறே செய்வார்கள். நான் முரளியைக் கற்கவில்லை என்றால், மற்றவர்களும் கற்கமாட்டார்கள். அவர்களிடம் போலியான அகங்காரம் உள்ளது. ஆகவே மாயை மிக விரைவாக அவர்களைத் தாக்குகிறாள். நீங்கள் ஸ்ரீமத்தை ஒவ்வொரு அடியிலும் பின்பற்ற வேண்டும். அவ்வாறில்லையேல், ஏதோவொரு பாவச் செயல் இருக்கும். பல குழந்தைகள் தவறொன்றைச் செய்தபின்னர் தந்தைக்குக் கூறுவதில்லை. அவர்கள் தங்களை முற்றாக அழித்துவிடுகிறார்கள். நீங்கள் கவனயீனமாக இருந்தால் மாயை உங்களை அறைந்துவிடுகிறாள். அவள் உங்களை ஒரு சதப் பெறுமதியும் அற்றவர்களாக ஆக்குகிறாள். நீங்கள் அகங்காரம் உடையவர்களாக ஆகும்போது மாயை உங்களைப் பல பாவச் செயல்களைச் செய்வதற்குத் தூண்டுகிறாள். சகோதரர்களுக்கான நிர்வாக சபை ஒன்றை உருவாக்கும்படி பாபா ஒருபோதும் சகோதரர்களுக்குக் கூறியதில்லை. நிர்வாக சபையில் ஒருவர் அல்லது இரண்டு விவேகமான சகோதரிகள் இருக்கவேண்டும். அவர்களின் ஆலோசனைப்படி, வேலைகளை மேற்கொள்ளலாம். கலசம் இலக்ஷ்மியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அமிர்தம் கொடுக்கப்பட்டபோது, யக்ஞத்தில் தடைகள் இருந்தது என நினைவுகூரப்படுகிறது. அவர்கள் பல வகையான தடைகளை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் முழு நாளையும் அரட்டை அடிப்பதில் செலவிடுகிறார்கள். அது மிகவும் தீயதாகும். ஏதாவது நடந்தால், நீங்கள் அதனைத் தந்தைக்கு அறிவிக்கவேண்டும். தந்தை ஒருவரால் மாத்திரமே அனைவரையும் சீராக்க முடியும். நீங்கள் சட்டத்தை உங்கள் கைகளில் எடுக்கக்கூடாது. நீங்கள் தந்தையின் நினைவில் அமர்ந்திருக்க வேண்டும். தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுங்கள். அப்போது நீங்கள் அவ்வாறு ஆகுவீர்கள். மாயை மிகவும் பலம் வாய்ந்தவள். அவள் எவரையும் விட்டுவிடுவதில்லை. நீங்கள் உங்கள் செய்திகளை எப்போதும் தந்தைக்குத் தெரிவிக்க வேண்டும். நீங்கள் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். உண்மையில் நீங்கள் எப்பொழுதும் வழிகாட்டல்களைப் பெறுகிறீர்கள். உங்கள் மனதில் உள்ள குறிப்பிட்ட விடயம் பற்றி பாபா விளங்கப்படுத்தும்போது, உங்களுக்குள்ளே உள்ள இரகசியங்கள் அனைத்தும் பாபாவிற்குத் தெரியும் என்று குழந்தைகளாகிய நீங்கள் நினைக்கிறீர்கள். எவ்வாறாயினும் பாபா கூறுகிறார்: இல்லை. நான் உங்களுக்கு ஞானத்தை மாத்திரமே கற்பிக்கிறேன். உங்களுக்குள்ளே உள்ள இரகசியங்களைத் தெரிந்துகொள்வது என்ற கேள்விக்கே இடமில்லை. ஆம். நீங்கள் அனைவரும் எனது குழந்தைகள் என்பது எனக்குத் தெரியும். ஒவ்வொரு சரீரத்திலுமுள்ள குழந்தையும் என்னுடையவர். ஆனால், அது தந்தை ஒவ்வொருவரிலும் இருக்கிறார் என்று அர்த்தமல்ல. மக்கள் அனைத்தையும் தவறாகப் புரிந்துள்ளார்கள். தந்தை கூறுகிறார்: ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் சிம்மாசனங்களில் அமர்ந்திருக்கிறீர்;கள் என்பது எனக்குத் தெரியும். இது அத்தகைய இலகுவான விடயமாகும்! உயிருள்ள ஆத்மாக்கள் அனைவரும் தங்கள் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இருந்தபோதும் அவர்கள் கடவுள் சர்வ வியாபி என்று கூறுகிறார்கள்! இதுவே பெரிய தவறாகும். இதனாலேயே பாரதம் மிகவும் கீழே வீழ்ந்துள்ளது. தந்தை கூறுகிறார்: நீங்கள் என்னை அதிகளவு அவதூறு செய்தீர்கள். உங்களை உலக அதிபதிகள் ஆக்கிய ஒரேயொருவரை நீங்கள் அவதூறு செய்தீர்கள். இதனாலேயே, தந்தை கூறுகிறார்: அதர்மம் தழைத்தோங்கும் போது நான் வருகிறேன். வெளிநாட்டவர்கள் சர்வ வியாபி என்ற நம்பிக்கையை பாரத மக்களிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள். பாரத மக்கள் அவர்களிடமிருந்து செயற்திறன்களை கற்கிறார்கள், அவர்களோ தவறான விடயங்களைக் கற்கிறார்கள். நீங்கள் ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவு செய்வதுடன், அனைவருக்கும்; தந்தையின் அறிமுகத்தையும் கொடுக்க வேண்டும். நீங்களே குருடர்களின் ஊன்றுகோல்கள். ஊன்று கோலினால் பிறருக்குப் பாதை காட்டப்படுகின்றது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளான உங்களுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் ஒவ்வொரு செயலையும் தந்தையின் அறிவுறுத்தலுக்கேற்ப செய்ய வேண்டும். நீங்கள் ஒருபோதும் ஸ்ரீமத்திற்குக் கீழ்ப்படியாது இருக்கக்கூடாது. அப்பொழுதே நீங்கள் எதையுமே கேட்காமல், உங்கள் ஆசைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். திரான்ஸ் அல்லது காட்சிகள் காணவேண்டும் என்ற ஆசையை நீங்கள் கொண்டிருக்கக்கூடாது. ஆசைகள் என்றால் என்னவென்றே அறியாதவர்களாக இருங்கள்.

2. நீங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து அரட்டை அடிக்கக்கூடாது. அகநோக்கிலிருந்தவாறு, உங்களைச் சோதித்துப் பாருங்கள்: எவ்வளவு நேரத்திற்கு நான் பாபாவின் நினைவில் இருக்கிறேன்? நான் இந்த ஞானத்தைக் கடைகின்றேனா?

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடன் தொடர்பில் அல்லது உறவுமுறையில் வருகின்ற ஒவ்வோர் ஆத்மாவிற்கும் தானங்களை வழங்கும் மகாதானியாகவும் ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்மாகவும் ஆகுவீர்களாக.

1)நாள் முழுவதும் உங்களுடன் தொடர்பில் அல்லது உறவுமுறையில் வருகின்ற எவருக்கும் ஏதாவதொரு சக்தியை, இந்த ஞானக்கருத்தை அல்லது நற்குணத்தைத் தானம் செய்யுங்கள். உங்களிடம் இந்த ஞானப் பொக்கிஷங்களும் அத்துடன் சக்திகள் மற்றும் நற்குணங்களின் பொக்கிஷங்களும் உள்ளன. எனவே, எந்தவொரு நாளும் நீங்கள் தானம் செய்யாமல் கழியக்கூடாது. அப்போது நீங்கள் மகாதானி எனப்படுவீர்கள். 2) தானம் என்ற வார்த்தையின் ஆன்மீக அர்த்தம், ஒத்துழைப்பாகும். ஒவ்வோர் ஆத்மாவிற்கும் ஒத்துழைப்பை வழங்குவதற்கு, உங்களின் மேன்மையான ஸ்திதியின் சூழலையும் உங்களின் மனோபாவத்தின் அதிர்வலைகளையும் பயன்படுத்துங்கள். அப்போது நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்மா எனப்படுவீர்கள்.

சுலோகம்:
பாப்தாதாவிற்கும் குடும்பத்திற்கும் நெருக்கமானவர்களின் முகங்கள், திருப்தியாகவும் ஆன்மீகத்துடனும் சந்தோஷமாகவும் புன்னகைக்கும்.