11.12.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்தக் கலியுக மலையை, சத்திய யுகத்துக்கானதாக ஆக்குவதற்கு தந்தையின் உதவியாளர் ஆகுங்கள். புதிய உலகில் முதல்தர ஆசனத்தை முன்கூட்டியே பதிவு செய்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
கேள்வி:
தந்தையின் கடமை என்ன? எக்கடமையை நிறைவேற்றுவதற்காக, தந்தை சங்கம யுகத்தில் வரவேண்டியுள்ளது?பதில்:
நோய்வாய்ப்பட்ட, சந்தோஷமற்ற குழந்தைகளை மீண்டும் சந்தோஷமுள்ள, ஆரோக்கியமான குழந்தைகளாக்குவதே தந்தையின் கடமையாகும். அவர் மாயையின் பொறியில் இருந்து அவர்களை மீட்டு அவர்களுக்குப் பெருமளவு சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டியுள்ளது. தந்தை சங்கம யுகத்தில் இக்கடமையை நிறைவேற்றுகின்றார். பாபா கூறுகின்றார்: நான் உங்கள் அனைவரது நோயையும் குணப்படுத்தவே வந்துள்ளேன். அனைவர்மீதும் கருணை காட்டவே நான் வந்துள்ளேன். நீங்கள் அனைவரும் உங்களுடைய 21 பிறவிகளுக்கான மேன்மையான பாக்கியத்தை உருவாக்குவதற்கு இப்பொழுது முயற்சி செய்ய வேண்டும்.பாடல்:
கள்ளங்கபடமற்ற பிரபுவைப் போன்று தனித்துவமானவர் எவருமில்லை.ஓம் சாந்தி.
கள்ளங்கபடமற்ற பிரபுவான, கடவுள் சிவன் பிரம்மாவின் கமல வாய் மூலம் பேசுகிறார். தந்தை கூறுகிறார்: இது பல்வேறு சமயங்களினதும் மனித உலக விருட்சமாகும். நான் இக்கல்ப விருட்சத்தின் இரகசியங்களைக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். அதாவது, உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை உங்களுக்கு நான் கூறுகின்றேன். இப் பாடலில் சிவபாபாவே புகழப்படுகின்றார். சிவபாபாவின் பிறப்பு இங்கேயே நிகழ்கிறது. தந்தை கூறுகின்றார்: நான் பாரதத்தில் வந்திருக்கிறேன். கீதையில், ஸ்ரீ கிருஷ்ணரின் பெயர் புகுத்தப்பட்டிருப்பதால் சிவபாபா எப்போது வந்தாரென மக்களுக்குத் தெரியாது. அவர் துவாபர யுகத்தில் வருவதென்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, நான் 5000 வருடங்களுக்கு முன்னரும் வந்து உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்தேன். இக்கல்ப விருட்சத்தின் படங்களிலிருந்து அனைவரும் இதைப் புரிந்துகொள்ள முடியும். இந்த விருட்சத்தை மிகக் கவனமாக அவதானியுங்கள். சத்திய யுகத்தில் நிச்சயமாக தேவர்களின் இராச்சியம் இருந்தது. பின்னர் திரேதா யுகத்தில் இராமர் சீதையின் இராச்சியம் இருந்தது. பாபா உங்களுக்கு ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களைக் கூறுகின்றார். குழந்தைகள் வினவுகிறார்கள்: பாபா, நாங்கள் எப்போது மாயையின் பொறியில் சிக்கினோம்? பாபா கூறுகிறார்: துவாபர யுகத்தில் ஆகும். பின்னர் பல்வேறு சமயங்களும் வரிசைக்கிரமமாக வரத்தொடங்கின. காலத்தைக் கணித்துக்கொள்வதன் மூலம் நீங்கள் இந்த உலகில் மீண்டும் எப்போது வருவீர்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். சிவபாபா கூறுகிறார்: நான் 5000 வருடங்களுக்குப் பின்னர் வந்திருக்கிறேன். எனது கடமையை நிறைவேற்றுவதற்காக, நான் இச்சங்கம யுகத்தில் வரவேண்டியுள்ளது. பொதுவாக உலக மக்கள் அனைவரும், குறிப்பாக பாரத மக்களும் தற்போது மிகவும் சந்தோஷமற்றவர்களாக உள்ளனர். நாடகத்திற்கேற்ப நான் பாரதத்தை சந்தோஷமடையச் செய்கிறேன். நோய்வாய்ப்பட்ட தனது குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க வேண்டியது தந்தையின் கடமையாகும். இது மிகவும் கடுமையான நோயாகும். இந்த ஐந்து விகாரங்களுமே அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமாகும். இவை எப்போது ஆரம்பித்தன என்று குழந்தைகள் கேட்கின்றனர். அவை துவாபர யுகத்தில் ஆரம்பித்தன. நீங்கள் இராவணனைப் பற்றி விளங்கப்படுத்த வேண்டும். எவராலும் இராவணனைப் பார்க்க முடியாது. அவன் புத்தியாலேயே புரிந்துகொள்ளப்படுகிறான். தந்தையும் புத்தியாலேயே புரிந்துகொள்ளப்படுகிறார். ஆத்மாக்கள் தமது மனதையும் புத்தியையும் தமக்குள் கொண்டுள்ளனர். அவரே எமது தந்தையும் பரமாத்மாவும் ஆவார் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். ஆத்மாக்களே சந்தோஷத்தையும், துன்பத்தையும் அனுபவம் செய்வதுடன், ஆத்மாக்களே எதனுடைய செல்வாக்கிற்கும் உட்படுகின்றனர். ஆத்மாக்கள் தமது சரீரங்களில் இருக்கும்போது துன்பத்தை அனுபவம் செய்கின்றனர். “பரமாத்மாவான என்னை சந்தோஷமற்றவர் ஆக்காதீர்கள்” என்று அவர்கள் கூறுவதில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: எனக்கும் நடிப்பதற்கென ஒரு பாகமுண்டு. நான் எனது பாகத்தை கல்பம் கல்பமாக சங்கம யுகத்தில் நடிக்கின்றேன். சந்தோஷ தாமத்திற்கு நான் அனுப்பிய குழந்தைகளே சந்தோஷமற்றவர்கள் ஆகியுள்ளனர். இதனாலேயே நாடகத்திற்கேற்ப நான் வரவேண்டியுள்ளது. எனினும் நான், மீன், முதலை போன்றவற்றில் அவதாரம் எடுப்பதில்லை. பரசுராமர் (கோடரியுடனான இராமர்) கோடரியினால் போர்வீரர்களைக் கொன்றதாகக் கூறுகிறார்கள். அவையெல்லாம் கட்டுக்கதைகளே. தந்தை இப்போது கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! இவர்கள் இருவரும் ஜெகதாம்பாளும், ஜெகத்பிதாவும் ஆவார்கள். மக்கள் தாய், தந்தை, நாடு என்று பேசுகிறார்கள். பாரத மக்கள் அதனை நினைவுகூர்ந்து கூறுகிறார்கள்: நீங்களே தாயும் தந்தையும். கடவுளின் கருணையினால் நிச்சயமாக நாங்கள் எல்லையற்ற சந்தோஷத்தைப் பெறுகிறோம். ஆனாலும் அது ஒவ்வொருவரினதும் முயற்சியில் தங்கியுள்ளது. ஒரு திரைப்படம் பார்ப்பதற்குச் செல்லும்போது மக்கள் முதலாந்தர ஆசனங்களை முற்கூட்டியே பதிவு செய்துவிடுகின்றனர். தந்தை கூறுகிறார்: நீங்கள் சூரிய வம்ச ஆசனத்தையோ, சந்திர வம்ச ஆசனத்தையோ பதிவு செய்வது உங்களைப் பொறுத்ததாகும். நீங்கள் செய்யும் முயற்சியின் அளவிற்கேற்ப உங்களால் ஓர் அந்தஸ்தைக் கோரமுடியும். உங்கள் நோய்களையெல்லாம் குணப்படுத்தவே தந்தை வந்துள்ளார். இராவணன் எல்லோரையும் சந்தோஷமற்றவர்கள் ஆக்கிவிட்டான். எந்த மனிதனாலும், எந்தவொரு மனிதனுக்கேனும் முக்தியையோ, ஜீவன்முக்தியையோ வழங்க முடியாது. இப்போது இது கலியுகத்தின் முடிவாகும். குருமார் மரணித்ததும் இங்கு மீண்டும் பிறப்பெடுக்க வேண்டும். எனவே அவர்களால் எவ்வாறு எவருக்கேனும் ஜீவன்முக்தியை வழங்க முடியும்? எண்ணற்ற அந்த குருமாரெல்லாம் ஒன்றாகத்திரண்டு தூய்மையற்ற இந்த உலகைத் தூய்மையாக்க முடியுமா? அவர்கள் கோவர்த்தன மலையைப் பற்றிப் பேசுகிறார்கள். தாய்மார்களாகிய நீங்கள் இப்போது இந்தக் கலியுக மலையை சத்திய யுகத்துக்கானதாக ஆக்குகிறீர்கள். மக்கள் கோவர்த்தன மலையையும் வணங்குகிறார்கள். அது தத்துவங்களை வழிபடுதலாகும். சந்நியாசிகள் பிரம்மத்தை, அதாவது தத்துவத்தை நினைவு செய்கிறார்கள். அவர்கள் அந்தத் தத்துவத்தையே பரமாத்மாவெனக் கருதுகின்றனர். அவர்கள் பிரம்மத்தைக் கடவுளென நம்புகின்றனர். தந்தை கூறுகிறார்: அது அவர்களின் கற்பனையாகும். ஆத்மாக்கள் பிரமாண்டத்தில், அதாவது பிரம்ம தத்துவத்தில் நீள்கோள வடிவில் வாழ்கின்றனர். அசரீரி விருட்சமும் காட்டப்பட்டுள்ளது. ஆத்மாக்கள் அனைவரும் தத்தமது பகுதியில் வாழவேண்டும். பாரதத்தின் சூரிய, சந்திர வம்சங்களே இந்த விருட்சத்தின் அத்திவாரமாகும். அதன் பின்னர் விரிவாக்கம் இடம்பெறுகிறது. பிரதான மதங்கள் நான்கும் எவ்வெப்போது வந்தன என்பதை நீங்கள் மிகச்சரியாகக் கணக்கிடலாம். உதாரணமாக, குரு நானக் 500 வருடங்களுக்கு முன்னர் வந்தார். இதன் அர்த்தம், சீக்கியர்கள் 84 பிறவிகளின் பாகத்தை நடிப்பதில்லை என்பதாகும். தந்தை கூறுகிறார்: சகலகலா வல்லுநர்களான பிராமணர்களான நீங்களே 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள். நீங்களே சகலதுறை பாகங்களையும் கொண்டிருக்கிறீர்கள் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் பிராமணர்களாகவும், தேவர்களாவும், சத்திரியர்களாகவும், வைசியர்களாகவும், சூத்திரர்களாகவும் ஆகுகிறீர்கள். முதலில் தேவர்கள் ஆகுபவர்களே முழுச் சக்கரத்தையும் சுற்றி வருகின்றார்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் பல வேதங்களையும் சமய நூல்களையும் கேட்டு வந்திருக்கின்றீர்கள். இப்போது இதனைச் செவிமடுத்துவிட்டு, சமய நூல்கள் சரியானதா, குருமார்கள் சரியானவர்களா, அல்லது தந்தை உங்களுக்குக் கூறுவது சரியா எனத் தீர்மானியுங்கள். தந்தையே சத்தியமானவரென அழைக்கப்படுகிறார். நான் உங்களுக்குக் கூறும் சத்தியத்தின் மூலமாக தங்க யுகமான சத்திய யுகம் உருவாக்கப்படுகிறது. துவாபரயுகம் முதல் நீங்கள் பொய்மையையே செவிமடுத்து வந்ததால் இவ்வுலகம் நரகமாகிவிட்டது. தந்தை கூறுகின்றார்: நான் உங்கள் சேவகன். பக்தி மார்க்கத்தில் நீங்கள் பாடி வந்தீர்கள்: நான் ஒரு சேவகன், நான் உங்கள் சேவகன். நான் இப்போது உங்களுக்குச் சேவை செய்ய வந்திருக்கிறேன். தந்தை அசரீரியானவரெனவும் அகங்காரம் அற்றவரெனவும் நினைவு செய்யப்படுகின்றார். எனவே தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய உங்களைச் சதா மகிழ்விப்பதே எனது கடமையாகும். ஒரு பாடலுள்ளது - வருவதும் போவதுமான தனது லீலையைத் தந்தை வெளிப்படுத்துகிறார். மேளங்கள் கொட்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. எவ்வாறாயினும் ஆரம்பம், மத்தி, இறுதியின் செய்திகளை எல்லாம் அந்த ஒருவரே உங்களுக்குக் கூறுகிறார். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் அனைவரும் நடிகர்கள். இந்த நேரத்திலேயே நான் கரன்கரவன்ஹார் ஆகுகிறேன். இவர் மூலம் நான் ஸ்தாபனையை மேற்கொள்கின்றேன். கீதையில் கூறப்பட்டிருப்பவை யாவும் உண்மையானவையல்ல. அவை யாவும் இப்போது நடைமுறையில் சம்பவிக்கின்றன. குழந்தைகளாகிய உங்களுக்கு நான் இந்த இலகுவான ஞானத்தையும், இலகுவான யோகத்தையும் கற்பிக்கின்றேன். உங்களை யோகம் செய்யவும் தூண்டுகின்றேன். நான் யோகத்தைத் தூண்டுபவர் என்றும், உங்கள் புத்திகளை நிரப்புபவர் என்றும், நோய்களை எல்லாம் போக்குபவரென்றும் அழைக்கப்படுகிறேன். கீதையின் மிகச்சரியான கருத்தையும் பாபா விளங்கப்படுத்துகின்றார். நான் உங்களுக்கு யோகம் செய்யக் கற்பிப்பது மட்டுமல்ல, எவ்வாறு யோகம் செய்வது என்று பிறருக்கு நீங்கள் கற்பிக்கும் முறையையும் நான் கற்பிக்கின்றேன். குழந்தைகளாகிய நீங்கள் யோகத்தைக் கற்று, பிறருக்கும் யோகம் செய்யக் கற்பிக்கின்றீர்கள். அவர்கள் கூறுகிறார்கள்: நீங்களே யோகத்தின் மூலம் எங்களை ஒளியேற்றுகின்றீர்கள். இத்தகைய பாடல்களை வீட்டிலே நீங்கள் செவிமடுப்பதால், இந்த ஞானம் முழுவதும் உங்கள் புத்தியில் சுழன்று கொண்டிருக்கும். தந்தையை நினைவு செய்வதன் மூலம் உங்கள் ஆஸ்தி பற்றிய போதை மேலும் அதிகரிக்கும். “பரமபிதா” அல்லது “கடவுள்” என்று வெறுமனே கூறுவதன் மூலம் உங்கள் வாய் இனிமையாகாது. “பாபா” என்று கூறுவது ஓர் ஆஸ்தியையும் குறிக்கும். குழந்தைகளாகிய நீங்கள் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைச் செவிமடுக்கின்றீர்கள். பின்னர் நீங்கள் ஏனையோருக்குக் கூறுகின்றீர்கள். இதுவே சங்கை ஊதுவதென்று கூறப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் புத்தகங்கள் எதையும் வைத்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் இவற்றைக் கிரகிக்கவே வேண்டும். நீங்களே ஆன்மீகத் தந்தையின் குழந்தைகளான உண்மையான ஆன்மீக பிராமணர்கள். உண்மையான கீதையின் மூலம் பாரதம் சுவர்க்கமாக மாற்றப்படுகிறது. சமய நூலாசிரியர்கள் அமர்ந்திருந்து கதைகளை உருவாக்கினார்கள். நீங்கள் அனைவரும் பார்வதிகள் ஆவீர்கள். அமரத்துவக் கதையை நான் உங்களுக்குக் கூறிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அனைவரும் திரௌபதிகள். அங்கு எவருமே துகில் உரியப்படுவதில்லை. மக்கள் வினவுகிறார்கள்: “அவ்வாறாயின் அங்கு எப்படிக் குழந்தைகள் பிறக்க முடியும்? அவர்களுக்குக் கூறுங்கள்: அங்கிருப்பவர்கள் விகாரமற்றிருப்பதால், அங்கு விகாரமென்ற கேள்வி எவ்வாறெழும்? யோக சக்தியினால் குழந்தைகள் எவ்விதமாகப் பிறப்பெடுப்பார்கள் என்று உங்களால் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் வாதிட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். அந்த விடயங்கள் சமய நூல்களில் எழுதப்பட்டுள்ளன. அதுவோ முற்றிலும் தூய்மையான உலகம். இதுவோ விகாரம் நிறைந்த உலகம். நாடகத்திற்கேற்ப மாயை உங்களை மீண்டும் சந்தோஷமற்றவர்கள் ஆக்குவாளென்பது எனக்குத் தெரியும். எனது கடமையை நிறைவேற்ற கல்பம் கல்பமாக நான் வருகிறேன். கடந்த கல்பத்திலிருந்து வந்தவர்களும், நீண்ட காலம் தொலைந்து போயிருந்தவர்களும் மீண்டும் வந்து தமது ஆஸ்தியைக் கோருகின்றார்கள் என்பதை பாபா அறிவார். அந்த அறிகுறிகள் தென்படுகின்றன. இது அதே மகாபாரத யுத்தமாகும். நீங்கள் தேவர்கள் ஆகுவதற்கு, அதாவது மீண்டும் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவதற்கு முயற்சி செய்யவே வேண்டும். இதில் ஒரு பௌதீக யுத்தம் என்ற கேள்விக்கு இடமில்லை. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் எந்த யுத்தமும் இடம்பெறவில்லை. அங்கே உங்களை யுத்தம் புரிய வைப்பதற்கு மாயை இல்லை. அரைக் கல்பத்திற்கு எவருமே சண்டையிட மாட்டார்கள், அல்லது எந்தவொரு நோயோ, அமைதியின்மையோ, கவலையோ இருக்காது. அங்கு சதா சந்தோஷமே நிலவும். சதா வசந்த காலமே நிலவும். அங்கு வைத்தியசாலைகள் இல்லை. ஆனால் கற்பதற்குப் பாடசாலைகள் உண்டு. நீங்கள் ஒவ்வொருவரும் இங்கேயே உங்கள் ஆஸ்தியைக் கோருகிறீர்கள். மக்களுக்குக் கல்வியை வழங்கும்போதே, அவர்களால் தமது சொந்தக் கால்களில் நிற்க முடிகிறது. இதையிட்டு ஒரு கதையும் உள்ளது. தந்தையொருவர் தன் மகளிடம் அவள் யாருடைய பாக்கியத்தால் உணவருந்துகிறாள் என்று கேட்டபொழுது, அவள் தனது சொந்தப் பாக்கியத்தாலேயே உண்பதாகக் கூறினாள். எனினும் அது எல்லைக்குட்பட்ட பாக்கியமாகும். ஆனால் நீங்களோ இப்போது உங்கள் எல்லையற்ற பாக்கியத்தை உருவாக்குகிறீர்கள். நீங்கள் இப்போது உருவாக்கும் பாக்கியத்தின் சிறப்பினால் 21 பிறவிகளுக்கான உங்கள் இராச்சிய பாக்கியத்தை அனுபவம் செய்கிறீர்கள். அதுவே உங்கள் எல்லையற்ற சந்தோஷம் எனும் ஆஸ்தியாகும். குழந்தைகளாகிய நீங்கள் அந்த வேறுபாட்டை இப்போது மிகத் தெளிவாகப் புரிந்துகொள்கின்றீர்கள். பாரதம் மிகவும் சந்தோஷம் நிறைந்ததாக விளங்கியது! இப்போது பாரதம் எவ்வாறாகிவிட்டது? தங்கள் இராச்சிய பாக்கியத்தைக் கடந்த கல்பத்தில் அனுபவம் செய்தவர்களே மீண்டும் அதனைக் கோருபவர்கள் ஆவார்கள். எனினும் நாடகத்தில் விதிக்கப்பட்டது எதுவோ அதையே நான் மீண்டும் பெறுவேனென நீங்கள் கூறக்கூடாது. இல்லையேல் நீங்கள் பட்டினியால் மரணித்துவிட நேரிடும்! நீங்கள் நாடகத்தின் இரகசியங்களை மிகச்சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். சில சமயநூல்கள் சக்கரத்தின் காலமென ஒன்றையும், ஏனையவை வேறொன்றையும் கூறுகின்றன. பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன. சிலர் தாம் சதா சந்தோஷமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களுக்கு நோய் ஏற்படுவதில்லையா என்று கேட்கும்போது, சரீரமே நோயை அனுபவம் செய்கிறது என்றும் ஆத்மா எந்தப் பாதிப்பின் தாக்கத்திற்கும் அப்பாற்பட்டவரென்றும் அவர்கள் கூறுகின்றனர். எனினும் நீங்கள் காயப்படும்போது, ஆத்மாவே துன்பத்தை அனுபவம் செய்கிறார். இந்த விடயங்கள் மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இப்பாடசாலை, உங்களுக்குக் கற்பிக்கும் அந்தவோர் ஆசிரியரையே கொண்டுள்ளது. உங்கள் அனைவருக்கும் ஒரே ஞானமே உள்ளது. அத்துடன் நீங்கள் சாதாரண மனிதரில் இருந்து நாராயணனாகும் ஒரே இலக்கையும், குறிக்கோளையும் கொண்டிருக்கிறீர்கள். இதில் சித்தியடையாதவர்கள் சந்திர வம்சத்தினர் ஆகுவார்கள். தேவர்கள் வாழ்ந்த காலத்தில் சத்திரியர்கள் இருக்கவில்லை. சத்திரியர்கள் வாழ்ந்தபோது வைசியர்கள் இருக்கவில்லை. வைசியர்கள் வாழ்ந்த காலத்தில் சூத்திரர்கள் இருக்கவில்லை. இவை புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயங்கள் ஆகும். தாய்மார்களாகிய உங்களுக்கு இது மிக இலகுவானதாகும். பரீட்சை ஒன்றேயுள்ளது. “தாமதமாக வந்தவர்கள் எவ்வாறு கற்றுக்கொள்ள முடியும்?” என்று எண்ணாதீர்கள். புதியவர்கள் மிக விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இது நடைமுறையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மாயையாகிய இராவணனுக்கு சரீரமோ, வடிவமோ இல்லை. ஒருவரிடம் காமமெனும் தீய ஆவியுள்ளதென நீங்கள் கூறமுடியும். ஆனால் இராவணனுக்கு சரீரமோ வடிவமோ கிடையாது. அச்சா. அனைத்தினதும் “சக்கரீன்” (இனிய சாராம்சம்) “மன்மனாபவ” ஆகும். பாபா கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! அதனால் இந்த யோக அக்கினி மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தந்தை உங்கள் வழிகாட்டியாக வருகிறார். பாபா கூறுகிறார்: குழந்தைகளே, நான் உங்களுக்குக் கற்பிப்பதற்கு நேரிலேயே வருகிறேன். கல்பம் கல்பமாக எனது கடமையை நிறைவேற்றுவதற்கு நான் வருகிறேன். பரலோகத் தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய உங்கள் உதவியுடன் எனது கடமையை நிறைவேற்ற வந்துள்ளேன். நீங்கள் உதவி வழங்கும்போதே ஓர் அந்தஸ்தைப் பெற்றுக்கொள்வீர்கள். நான் அந்தளவிற்கு ஒரு மேன்மையான தந்தையாவேன். நான் மிகப்பெரிய யாகத்தை உருவாக்குகிறேன்! குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களாகிய பிராமண சகோதர, சகோதரிகள் ஆவீர்கள். நீங்கள் சகோதர, சகோதரி உறவில் நிலைத்திருக்கும் போது கணவன், மனைவி என்ற பார்வையை மாற்றிக்கொள்ள முடியும். தந்தை கூறுகிறார்: இந்த பிராமண குலத்தின் பெயரை அவதூறு செய்யாதீர்கள். நீங்கள் தூய்மையாக இருப்பதற்கான வழிமுறைகளுண்டு. ஒன்றாக வாழும்போது தீப்பற்றாமல் இருப்பதென்பது சாத்தியமில்லை என மக்கள் கூறுகின்றனர். பாபா கூறுகிறார்: உங்களுக்கிடையே ஞான வாள் இருக்கும்வரை, அந்தத் தீ மூட்டப்பட மாட்டாது. ஆனாலும் நீங்களிருவரும் மன்மனாபவ என்பதில் நிலைத்திருந்து, இருவரும் சிவபாபாவை நினைவு செய்து, உங்களை பிராமணர்களெனக் கருதும்போதே அது சாத்தியமாகும். மக்கள் இவ்விடயங்களைப் புரிந்துகொள்ளாத காரணத்தினாலேயே குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். அப்பொழுது நீங்கள் அவதூறைச் சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது. எவரும் ஸ்ரீ கிருஷ்ணரை அவதூறு செய்யமாட்டார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் இப்போது வருவாராயின், வெளிநாட்டவர்கள் இங்கு ஆகாய விமானங்களில் ஓடோடி வருவார்கள். பெரும் ஜனத்திரளே இருக்கும். பாரதத்தில் என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? அச்சா, இன்று போக் படைக்கும் நாளாகும். இது உங்கள் தந்தையின் இல்லம். அது உங்கள் புகுந்த வீடாகும். சங்கம யுகத்திலேயே சந்திப்பு இடம்பெறுகின்றது. சிலர் இதை ஒரு மாயாஜாலமெனக் கருதுகின்றனர். காட்சிகளென்பது என்ன என்பதையும் பக்தி மார்க்கத்தில் மக்கள் எவ்வாறு காட்சிகளைப் பெறுகின்றனர் என்பதையும் பாபா விளங்கப்படுத்தியுள்ளார். உங்கள் புத்தியில் இதையிட்டுச் சந்தேகங்கள் தோன்றுவதற்கு அனுமதிக்காதீர்கள். இதுவே உங்கள் சம்பிரதாயமாகும். இது சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியமாகும். எனவே நீங்கள் அவர் நினைவில் போக் படைக்கவேண்டும். யோகத்திலிருப்பது நல்லது. நீங்கள் பாபாவின் நினைவைக் கொண்டிருப்பீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களை பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களாகக் கருதி, உண்மையான, தூய பிராமணர்கள் ஆகுங்கள். இந்த பிராமண குலத்தின் பெயரை ஒருபோதும் அவதூறு செய்யாதீர்கள்.2. தந்தையைப் போன்று அசரீரியானவராகவும், அகங்காரமற்றவராகவும் இருந்து, உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள். ஆன்மீக சேவையில் ஈடுபட்டிருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் அன்பு சக்தியால் மாயையின் சக்தியை முடித்துவிடும் சம்பூரணமான ஞானோதயம் பெற்ற ஆத்மா ஆகுவீர்களாக.அன்பிலே திளைத்திருப்பதெனில், முழுமையான ஞானத்தைக் கொண்டிருப்பதாகும். அன்பு, பிராமண வாழ்க்கையின் ஆசீர்வாதம். சங்கமயுகத்தில், அன்புக்கடலே உங்களுக்குத் தட்டு நிறைந்த வைரங்களையும் முத்துக்களையும் வழங்குகிறார். அதனால் நீங்கள் அன்பினால் நிறைந்தவர்கள் ஆகுகிறீர்கள். அன்பு சக்தியால் மலையைப் போன்றதொரு சூழ்நிலையும் மாறி, நீரைப் போல் இலேசாகின்றது. மாயையின் எந்தவொரு வடிவமும் பயங்கரமாக அல்லது இராஜரீகமாக உங்களை எதிர்க்க வந்தாலும், ஒரு விநாடியில் அன்புக்கடலில் அமிழ்ந்து விடுங்கள். உங்களின் அன்பு சக்தியால் மாயையின் சக்தி முடிவிற்கு வந்துவிடும்.
சுலோகம்:
தந்தையின் பணியில் தமது சரீரம், மனம், செல்வத்தாலும் தமது எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களாலும் சதா தந்தையுடன் ஒத்துழைப்பவர்கள், யோகிகள் ஆவார்கள்.