11.12.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இந்தச் சங்கமயுகத்தில், பிராமண சமூகத்திற்கு உரியவர்கள். நீங்கள் இப்பொழுது மரண பூமியிலுள்ள மனிதர்களில் இருந்து அமரத்துவ பூமியிலுள்ள தேவர்களாக மாறவேண்டும்.

கேள்வி:
எந்த ஞானத்தின் புரிந்துணர்வின் அடிப்படையில், குழந்தைகளாகிய உங்களால் எல்லையற்ற துறவறத்தை மேற்கொள்ள முடிகின்றது?

பதில்:
நீங்கள் நாடகத்தின் மிகச்சரியான ஞானத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். நாடகத்திற்கேற்ப, மரணபூமி முழுவதும் எரிய வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த உலகம் ஒரு சதத்திற்கும் பெறுமதியற்றது. நாங்கள் ஒரு பவுண்ட் பெறுமதியானவர்களாக வேண்டும். நாடகத்தில் என்ன நடக்கின்றதோ, ஒரு கல்பத்தின் பின்னர், அதேபோன்று மீண்டும் இடம்பெறும். இதனாலேயே நீங்கள் முழு உலகையிட்டும் எல்லையற்ற துறவறத்தைக் கொண்டிருக்கின்றீர்கள்.

பாடல்:
நீங்களே நாளைய பாக்கியம் ஆவீர்கள்….

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலின் ஒரு வரியைக் கேட்டீர்கள். அமரத்துவபூமி வரவுள்ளது. இது மரணபூமியாகும். இது மரணபூமிக்கும், அமரத்துவ பூமிக்கும் இடையிலான மேன்மையான சங்கமயுகமாகும். தந்தை இப்பொழுது சங்கமயுகத்தில் எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் ஆத்மாக்களுக்கே கற்பிக்கின்றார். ஆகையினால் அவர் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: ஆத்ம உணர்வில் அமர்ந்திருங்கள்! எல்லையற்ற தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். எங்களுடைய இலக்கும் குறிக்கோளும் இலக்ஷ்மி நாராயணன் ஆகுவதே. அதாவது, மரணபூமியிலுள்ள மனிதர்களில் இருந்து, அமரத்துவப் பூமியிலுள்ள தேவர்களாக மாறுவதாகும். உங்களுடைய காதுகள் இவ்வாறான கற்பித்தல்களை ஒருபொழுதும் செவிமடுத்திருக்கவும் மாட்டாது. எவரும் குழந்தைகளை ஆத்ம உணர்வில் அமர்ந்திருக்குமாறு கூறுவதை நீங்கள் கண்டிருக்கவும் மாட்டீர்கள். எல்லையற்ற தந்தை எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். எந்தத் தந்தை? எல்லையற்ற தந்தை. அவர் அசரீரியான சிவன் ஆவார். நாங்கள் மேன்மையான சங்கமயுகத்தில் இருக்கின்றோம் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது பிராமண சமூகத்தினர் ஆகியுள்ளீர்கள். நீங்கள் பின்னர் தேவர்களாக வேண்டும். முன்னர் நீங்கள் சூத்திர சமூகத்திற்கு உரியவர்கள். தந்தை வந்து, கல்லுப் புத்தியுடைய உங்களைத் தெய்வீகப் புத்தி உடையவர்களாக மாற்றுகின்றார். நீங்கள் ஆதியில் சதோபிரதான், தெய்வீகப்புத்தியை உடையவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் மீண்டும் ஒருமுறை அவ்வாறு ஆகுகின்றீர்கள். நீங்கள் சத்தியயுகத்தின் அதிபதிகளாக இருந்தீர்கள் எனக் கூறக்கூடாது. சத்தியயுகத்தில் நீங்கள் உலகின் அதிபதிகளாக இருந்தீர்கள். 84 பிறவிகள் எடுத்து, ஏணியில் கீழ் இறங்கியதால் நீங்கள் சதோபிரதானில் இருந்து சதோ, ரஜோ, தமோ நிலைக்கு மாறினீர்கள். ஆதியில் நீங்கள் சதோபிரதானாக இருந்த பொழுது, உங்கள் புத்தி தெய்வீகமாக இருந்தது. பின்னர் ஆத்மாக்களில் கலப்படம் கலந்தது. மனிதர்கள் இதைப் புரிந்து கொள்வதில்லை. தந்தை கூறுகின்றார்: நீங்கள் எதையும் அறிந்திருக்கவில்லை. நீங்கள் குருட்டு நம்பிக்கையைக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் ஒருவரைத் தெரிந்து கொள்ளாது பூஜிப்பது அல்லது நினைவு செய்வதே குருட்டு நம்பிக்கை என அழைக்கப்படுகின்றது. உங்களுடைய மேன்மையான தர்மத்தையும், மேன்மையான செயல்களையும் மறப்பதால், நீங்கள் செயல்களிலும், தர்மத்திலும் சீரழிந்தவர்கள் ஆகுகின்றீர்கள். பாரதமக்களும் தங்களது தெய்வீகத் தர்மத்திலிருந்து, சீரழிந்தவர்களாகி விட்டார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: உண்மையில், நீங்களே இல்லறப் பாதைக்கு உரியவர்கள். அந்தத் தேவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகும்பொழுது, அவர்களை மேலும் தேவர்கள் என அழைக்க முடியாது. இதனாலேயே அவர்கள் தங்களது பெயரை மாற்றி, தங்களை இந்துக்கள் என அழைத்தார்கள். இதுவும் நாடகத் திட்டத்திற்கு ஏற்பவே நடக்கின்றது. அனைவரும் ஒரேயொரு தந்தையை அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குவரே, வாருங்கள்! அவர் மாத்திரமே மறுபிறவியில் இருந்து விடுதலையான இறைதந்தை ஆவார். பெயர், ரூபமில்லாது எதுவுமே இருக்க முடியும் என்பதல்ல. ஆத்மாவினதும், பரமாத்மாவினதும் ரூபம் மிகவும் சூட்சுமமானது. ஓர் ஆத்மா நட்சத்திரம் எனவும், ஒரு புள்ளி எனவும் அழைக்கப்படுகின்றார். சிவன் பூஜிக்கப்படுகின்றார், ஆனால் அவருக்குச் சரீரமில்லை. ஆனால் ஒரு புள்ளியான ஆத்மா பூஜிக்கப்பட முடியாது. ஆகையினால், அவரைப் பூஜிப்பதற்காக அவரது பெரிய ரூபத்தைச் செய்கின்றார்கள். அவர்கள் சிவனைப் பூஜிப்பதாக நம்புகின்றார்கள், ஆனால் அவரது பெயரையோ அல்லது ரூபத்தையோ அவர்கள் அறியமாட்டார்கள். தந்தை இப்பொழுது மாத்திரமே வந்து இந்த விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். தந்தை கூறுகின்றார்: உங்கள் பிறவிகள் பற்றி நீங்கள் அறியமாட்டீர்கள். அவர்கள் 8.4 மில்லியன் ஜீவராசிகள் பற்றிப் பொய் கூறியுள்ளார்கள். தந்தை இப்பொழுது இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இப்பொழுது பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள், பின்னர் தேவர்கள் ஆகவுள்ளீர்கள். கலியுக மக்கள் சூத்திரர்கள். பிராமணர்களாகிய உங்களது இலக்கும் குறிக்கோளும் சாதாரண மனிதரிலிருந்து தேவராக ஆகுவதாகும். இந்த மரணபூமி, தூய்மையற்ற உலகமாகும். தேவர்கள் ஆட்சிசெய்த பொழுது, அது புதிய உலகமாக இருந்தது. அவர்களுடைய இராச்சியம் மாத்திரமே அங்கு இருந்தது. அவர்கள் முழு உலகின் அதிபதிகளாக இருந்தார்கள். உலகம் இப்பொழுது தமோபிரதான் ஆகியுள்ளது. பல சமயங்கள் இருக்கின்றன. தேவதர்மம் மறைந்து விட்டது. தேவர்கள் எப்பொழுது அல்லது எவ்வளவு காலம் ஆட்சி செய்தார்கள் என்பது பற்றிய உலக வரலாறையும், புவியியலையும் பற்றி எவருமே அறியமாட்டார்கள். தந்தை மாத்திரமே வந்து, உங்களுக்கு இதனை விளங்கப்படுத்துகின்றார். உங்களை அமரத்துவ பூமியின் தேவர்கள் ஆக்குகின்ற இலக்கையும், குறிக்கோளையும் கொண்ட இறைதந்தையின் உலகப் பல்கலைக்கழகம் இதுவாகும். இது அமரத்துவக் கதை எனவும் அறியப்படுகின்றது. நீங்கள் இந்த ஞானத்தின் மூலம் தேவர்கள் ஆகி, மரணத்தை வெல்கின்றீர்கள். அங்கு நீங்கள் மரணத்திற்கு உட்பட மாட்டீர்கள். அங்கு மரணம் என்ற குறிப்பே இருக்க மாட்டாது. நீங்கள் நாடகத்திற்கு ஏற்ப, மரணத்தை வெல்கின்றீர்கள். பாரத மக்களும் ஐந்து முதல் பத்து வருடங்களுக்கான திட்டங்களை உருவாக்குகின்றார்கள். அவர்கள் இராம இராச்சியத்தை ஸ்தாபிப்பதாக நம்புகின்றார்கள். எல்லையற்ற தந்தையும் இராம இராச்சியத்தைப் படைக்கும் திட்டத்தைக் கொண்டிருக்கின்றார். அவர்கள் அனைவரும் மனிதர்கள், மனிதர்களால் இராம இராச்சியத்தை ஸ்தாபிக்க முடியாது. சத்தியயுகமே இராம இராச்சியம் என அறியப்படுகின்றது. எவருமே இந்த விடயங்களைப் பற்றி அறியமாட்டார்கள். மனிதர்கள் அதிகளவு பக்தி செய்து பௌதீக யாத்திரைகள் செல்கின்றார்கள். பகல் என்பதன் அர்த்தம் சத்திய, திரேதா யுகங்களில் தேவர்களின் இராச்சியம் இருந்த காலமாகும். பக்தி மார்க்கம் இரவிலே ஆரம்பம் ஆகுகின்றது. சத்தியயுகத்தில் பக்தி இருக்க மாட்டாது. தந்தை இந்த ஞானம், பக்தி, விருப்பமின்மை பற்றி விளங்கப்படுத்துகின்றார். இரண்டு விதமான விருப்பமின்மை இருக்கின்றது. ஒன்று ஹத்தயோகிகளின் துறவறப் பாதை ஆகும். அவர்கள் தங்களுடைய வீடுகளை விட்டுக் காடுகளுக்குச் செல்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது முழு மரணபூமியிலும் எல்லையற்ற துறவறத்தை மேற்கொள்ள வேண்டும். தந்தை கூறுகின்றார்: இந்த முழு உலகமும் முற்றாக எரியப் போகின்றது. நீங்கள் நாடகத்தை மிக நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அது பேனைப் போன்று தொடர்ந்து ஊர்ந்து செல்கின்றது. இப்பொழுது என்ன நடைபெறுகின்றதோ, அது சக்கரத்தின் 5000 வருடங்களின் பின்னரும் அதேபோன்று மீண்டும் மீண்டும் நடைபெறும். நீங்கள் இதை நன்றாகப் புரிந்துகொண்டு, எல்லையற்ற துறவை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒருவர் வெளிநாட்டுக்குச் செல்கின்ற பொழுது, “நான் இந்த ஞானத்தை அங்கே கற்க முடியுமா?” எனக் கேட்கின்றார். தந்தை பதில் அளிக்கின்றார்: நீங்கள் எங்கே இருந்தாலும் இந்த ஞானத்தைக் கற்கமுடியும். இதற்கு நீங்கள் முதலில் ஏழு நாள் பாடநெறியை எடுக்க வேண்டும். ஓர் ஆத்மாவிற்கு இந்த விடயங்கள் அனைத்தையும் புரிந்துகொள்வது மிக இலகுவானது. நீங்கள் சதோபிரதான் உலகின் அதிபதிகளாக இருந்த பொழுது, நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது தமோபிரதானாகி விட்டீர்கள். 84 பிறவிகள் எடுத்ததனால், நீங்கள் முற்றிலும் ஒரு சதத்திற்கும் பெறுமதி அற்றவர்களாகி விட்டீர்கள். எவ்வாறு நீங்கள் ஒரு பவுண்ட் பெறுமதியானவர்கள் ஆகுகின்றீர்கள்? இப்பொழுது இது கலியுகம், இது பின்னர் நிச்சயமாக சத்தியயுகம் ஆகும். தந்தை மிக இலகுவான முறையில் விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் எவ்வாறு சதோபிரதானில் இருந்து தமோபிரதான் ஆகினீர்கள் என்ற ஏழு நாட் பாடநெறியைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் காமச்சிதையில் அமர்ந்ததனால், தமோபிரதான் ஆகினீர்கள். நீங்கள் இப்பொழுது இந்த ஞானச்சிதையில் அமர்ந்து சதோபிரதான் ஆகவேண்டும். உலக வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் நடைபெறும், சக்கரமும் தொடர்ந்து சுழலும். இப்பொழுது இது சங்கமயுகம், பின்னர் அது சத்தியயுகமாக ஆகும். நீங்கள் இப்பொழுது கலியுகத்தில் விகாரமானவர்கள் ஆகியுள்ளீர்கள். எனவே எவ்வாறு நீங்கள் சத்தியயுகத்தில் உள்ளது போன்று விகாரம் அற்றவர்கள் ஆகுவீர்கள்? தந்தை இதைச் செய்வதற்கான வழியைக் காட்டுகின்றார். அவர்கள் அழைக்கின்றனர்: எங்களிடம் தெய்வீகக் குணங்கள் இல்லை. எங்களை முற்றிலும் தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்கள் ஆக்குங்கள்! ஒரு கல்பத்துக்கு முன்னர் இவ்வாறு ஆகியவர்கள் மாத்திரமே மீண்டும் அவ்வாறு ஆகுவார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: முதலில் உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள்! ஓர் ஆத்மா சரீரத்தை நீக்கி இன்னொன்றை எடுக்கின்றார். நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வுடையவராக வேண்டும். இப்பொழுதே எவ்வாறு ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவது என்ற ஞானத்தை நீங்கள் பெறுகின்றீர்கள். உங்களால் சதா ஆத்ம உணர்வில் இருக்க முடியும் என்றில்லை. இல்லை. சத்தியயுகத்தில் உங்கள் சரீரங்களுக்குப் பெயர்கள் இருக்கும். இலக்ஷ்மி, நாராயணனின் செயற்பாடுகள் அனைத்தும் அவர்களின் பெயர்களின் மூலமே நடைபெறுகின்றன. இப்பொழுது இது தந்தை விளங்கப்படுத்துகின்ற சங்கமயுகமாகும். நீங்கள் சரீரமற்றே வந்தீர்கள், சரீரமற்றே திரும்ப வேண்டும். உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள்! இது ஆன்மீக யாத்திரையாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் ஆன்மீகத் தந்தையை நினைவு செய்கிறீர்கள். தந்தையை நினைவு செய்வதனால் மாத்திரமே உங்கள் பாவங்கள் எரிக்கப்படும். இதுவே யோக அக்கினி என அழைக்கப்படுகின்றது. நீங்கள் எங்கேயிருந்தும் அவரை நினைவு செய்யலாம். ஏழு நாட்களில் நீங்கள் எவ்வாறு சக்கரம் சுழல்கின்றது என்றும், எவ்வாறு நாங்கள் ஏணியில் கீழ் இறங்குகின்றோம் எனவும் விளங்கப்படுத்த வேண்டும். இந்த ஒரு பிறவியிலேயே மேலேறுகின்ற ஸ்திதி உள்ளது. முரளி வெளிநாடுகளுக்கும் அங்கு வசிக்கின்ற குழந்தைகளுக்காக அனுப்பப்படுகின்றது. இது ஒரு பாடசாலை. உண்மையில் இது இறை தந்தையின் பல்கலைக்கழகமாகும். இதுவே கீதையில் குறிப்பிடப்பட்டுள்ள இராஜயோகமாகும். எவ்வாறாயினும், ஸ்ரீகிருஷ்ணர் கடவுளாக இருக்க முடியாது, பிரம்மா, விஷ்ணு, சங்கரரும் தேவர்கள் ஆவார்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் தேவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். பிரஜாபிதா பிரம்மாவும், நிச்சயமாக இங்கேயே இருப்பார். மக்களின் தந்தையும் ஒரு மனிதர் ஆவார். மக்கள் நிச்சயமாக இங்கேயே உருவாக்கப்படுகின்றார்கள். தந்தை ‘ஹம்சோ’ என்பதன் அர்த்தத்தின் மிக இலகுவான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். பக்திமார்க்கத்தில் அவர்கள் ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மா எனக் கூறுகின்றார்கள். இதனாலேயே அவர்கள் கடவுளைச் சர்வவியாபி என்று கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: ஓர் ஆத்மாவே ஒவ்வொருவரிலும் பிரசன்னமாகி இருக்கின்றார். நான் எவ்வாறு ஒவ்வொருவரிலும் பிரசன்னமாகி இருக்க முடியும்? “ஓ தூய்மையாக்குபவரே, வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்!” என நீங்கள் என்னை அழைக்கின்றீர்கள். அசரீரியான ஆத்மாக்கள் வந்து, தங்கள் சொந்த இரதங்களை எடுக்கின்றார்கள். அவை அமரத்துவ ஆத்மாக்கள் அனைவரினதும் சிம்மாசனங்கள் ஆகும். நீங்கள் அதைச் சிம்மாசனம் என்றோ அல்லது இரதம் என்றோ அழைக்கலாம். தந்தைக்கெனச் சொந்தமாக ஓர் இரதம் இல்லை. அவர் அசரீரியானவர் என நினைவு செய்யப்படுகின்றார். அவருக்குப் பௌதீகமான சரீரமோ, அல்லது சூட்சுமமான சரீரமோ இல்லை. அசரீரியானவர் ஓர் இரதத்தில் அமரும் பொழுது மாத்திரமே, அவரால் பேசமுடியும். ஓர் இரதம் இல்லாது, அவர் எவ்வாறு தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்க முடியும்? தந்தை கூறுகின்றார்: அசரீரியானவராகிய நான், வந்து இவரைக் கடனாக எடுக்கின்றேன். இது தற்காலிகக் கடனாகும். அவர் “பாக்கிய இரதம்” என அழைக்கப்படுகின்றார். தந்தை உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை விளங்கப்படுத்துவதனால், குழந்தைகளாகிய உங்களைத் திரிகாலதரிசியாக ஆக்குகின்றார். வேறு எந்த மனிதர்களும்; இந்த ஞானத்தை அறிய முடியாது. தற்போது அனைவரும் நாஸ்திகர்கள் ஆவார்கள். தந்தை வந்து உங்களை ஆஸ்திகர்கள் ஆக்குகின்றார். அவர் படைப்பவரதும், படைப்பினதும் இரகசியங்களை உங்களுக்குக் கூறுகின்றார். உங்களைத் தவிர, வேறு எவராலும் இதை விளங்கப்படுத்த முடியாது. இந்த ஞானத்தின் மூலம், நீங்கள் அத்தகையதோர் உயர்ந்த அந்தஸ்தை அடைகின்றீர்கள். இந்நேரத்தில் மாத்திரமே பிராமணர்களாகிய நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். தந்தை இப்பொழுது சங்கமயுகத்திலேயே இந்த ஞானத்தைக் கொடுக்க வருகின்றார். தந்தை ஒருவர் மாத்திரமே சற்கதி அருள்பவர் ஆவார். எந்த மனிதராலும், மற்றவர்களுக்குச் சற்கதியை அருள முடியாது. அந்தக் குருமார்கள் அனைவரும் பக்தி மார்க்கத்திற்கு உரியவர்கள். சற்குரு ஒருவரே ஆவார். “ஆஹா சற்குரு! ஆஹா” என அவரைப் பற்றியே கூறப்பட்டுள்ளது. இது ஒரு பாடசாலை என்று அழைக்கப்படுகின்றது. சாதாரண மனிதரிலிருந்து நாராயணன் ஆகுவதே இலக்கும், குறிக்கோளும் ஆகும். அந்தக் கதைகள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. கீதையைப் படிப்பதன் மூலம் உங்களுக்கு எந்தப் பேறுமில்லை. தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு நேரடியாகக் கற்பிக்க வருகின்றேன். இதன் மூலமே நீங்கள் அந்த அந்தஸ்தை அடைகின்றீர்கள். இதில் பிரதான விடயம் தூய்மை ஆகுவதாகும். நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இதிலேயே மாயை தடைகளை உருவாக்குகின்றாள். உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்காக, நீங்கள் தந்தையை நினைவு செய்கின்றீர்கள். இந்த ஞானம் குழந்தைகள் அனைவருக்கும் அனுப்பப்படுகின்றது. ஒரு முரளியும் ஒருபோதும் தவற விடப்படக்கூடாது. ஒரு முரளியைத் தவற விடுவது எனில், சமூகம் அளிக்காதிருப்பதற்கான புள்ளியைப் பெறுவதாகும். நீங்கள் எங்கிருந்தாலும், முரளியினால் புத்துணர்வு ஊட்டப்பட முடியும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் வெளிநாட்டுக்குச் சென்றாலும், நிச்சயமாகத் தூய்மையாக இருக்க வேண்டும்! நீங்கள் ஒரு வைஷ்ணவராக இருக்க வேண்டும். இரண்டு விதமான வைஷ்ணவர்கள் இருக்கின்றார்கள். உண்மையான வைஷ்ணவர்களும், விகாரத்தில் ஈடுபடுகின்ற வல்லபாச்சாரிகளும் ஆவார்கள். அவர்கள் தூய்மையானவர்கள் அல்ல. நீங்கள் தூய்மையாகுவதுடன் விஷ்ணுவின் வம்சத்தினரும் ஆகுகின்றீர்கள். நீங்கள் அங்கு வைஷ்ணவர்களாக இருக்கின்றீர்கள். நீங்கள் விகாரத்தில் ஈடுபட மாட்டீர்கள். அது அமரத்துவ பூமியாகும். இது மக்கள் விகாரத்தில் ஈடுபடுகின்ற மரண பூமி ஆகும். நீங்கள் இப்பொழுது விகாரம் ஏதுமற்ற விஷ்ணு பூமிக்குச் செல்கின்றீர்கள். அது விகாரமற்ற உலகமாகும். உங்கள் யோக சக்தியால் நீங்கள் உலக அரசுரிமையைக் கோருகின்றீர்கள். அந்த இரு பக்கங்களும் ஒருவருடன் ஒருவர் சண்டையிடும் பொழுது, நீங்கள் மத்தியிலுள்ள வெண்ணெயை எடுக்கின்றீர்கள். நீங்கள் உங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். இந்தச் செய்தியை அனைவருக்கும் கொடுங்கள். சிறிய குழந்தைகளுக்கும் இதைச் செவிமடுக்க உரிமை உள்ளது. அவர்கள் சிவபாபாவின் குழந்தைகள், ஆகையினால் அவர்கள் அனைவருக்கும் இதில் உரிமை உள்ளது. அனைவருக்கும் கூறுங்கள்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள்! தாய்க்கும் தந்தைக்கும் இந்த ஞானம் இருக்கும் பொழுது, அவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கும் சிவபாபாவை நினைவு செய்யக் கற்றுக் கொடுப்பார்கள். வேறு எவருமன்றி, சிவபாபாவே நினைவு செய்யப்பட வேண்டும். ஒருவரின் நினைவைக் கொண்டிருப்பதனால், நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். இதை நீங்கள் மிக நன்றாகக் கற்பது அவசியம். நீங்கள் வெளிநாடுகளில் வாழும்பொழுதும் அதைக் கற்கலாம். இதற்கு உங்களுக்கு எந்தப் புத்தகங்களும் தேவை இல்லை. நீங்கள் இதை எங்காவது அமர்ந்திருக்கும் பொழுதும் கற்கலாம். நீங்கள் உங்கள் புத்தியினால், நினைவுசெய்ய முடியும். இந்தக் கல்வி மிக இலகுவானது. நீங்கள் நினைவாகிய, யோகத்தின் மூலம், சக்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். தந்தை உங்களுக்கு இராஜயோகம் கற்பிப்பதனால், உங்களைத் தூய்மையானவர்கள் ஆக்குகின்றார். அது ஹத்தயோகம், இது இராஜயோகம் ஆகும். நீங்கள் இதில் பெருமளவு முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் இலக்ஷ்மி, நாராயணன் போன்று அனைத்துத் தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்களாக வேண்டும். நீங்கள் உங்களுடைய உணவிலும், பானத்திலும் முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் உங்களின் பல பிறவிப் பாவங்கள் அழியும் வகையில், தந்தையையும் நினைவுசெய்ய வேண்டும். இதுவே இராச்சியத்தைப் பெறுவதற்கான, இலகு இராஜயோகம் என அறியப்படுகின்றது. நீங்கள் இராச்சியத்தைக் கோராது விட்டால் ஏழை ஆகுகின்றீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தை முழுமையாகப் பின்பற்றுவதன் மூலம், மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் சீரழிந்தவர்களில் இருந்து, மேன்மையானவர்கள் ஆக வேண்டும். இதற்கு நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். நீங்களே இந்த ஞானத்தை ஒரு கல்பத்துக்கு முன்னரும் பெற்றவர்கள், அதை மீண்டும் பெறுகின்றீர்கள். சத்தியயுகத்தில் வேறு எந்த இராச்சியமும் இருக்க மாட்டாது. அது சந்தோஷ தாமம் என அழைக்கப்படுகின்றது. இப்பொழுது இது துன்ப தாமமாகும். எங்கிருந்து ஆத்மாக்களாகிய நாங்கள் வந்தோமோ, அது அமைதி தாமமாகும். இந்த உலகில் மனிதர்கள் செய்கின்ற செயற்பாடுகளினால் சிவபாபா ஆச்சரியம் அடைகின்றார்! குறைந்த எண்ணிக்கையான குழந்தைகளே பிறக்க வேண்டுமென மக்கள் பெரும் பிரயத்தனம் செய்கின்றார்கள். அப்பணி தந்தையின் பணி மாத்திரமே என அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. தந்தை உடனடியாகவே ஒரேயொரு தர்மத்தை ஸ்தாபித்து, ஏனைய அனைத்தினதும் விநாசத்தைத் தூண்டுகிறார். அம்மக்கள் குடும்பக் கட்டுப்பாட்டிற்காகப் பலவிதமான மருந்துகளை உருவாக்குகின்றார்கள். தந்தை ஒரு மருந்தை மாத்திரம் வைத்திருக்கின்றார். ஒரேயொரு தர்மம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். நீங்கள் அனைவரும் தூய்மையாகி விட்டீர்கள் என்று நீங்கள் கூறுகின்ற ஒரு நேரம் வரும். அப்பொழுது எந்த மருந்திற்கான தேவையும் இருக்காது. பாபா உங்களுக்கு “மன்மனாபவ” எனும் மருந்தைக் கொடுத்துள்ளார், அதன்மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்குத் தூய்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தூய்மையாக இருப்பதன் மூலம் ஓர் உண்மையான வைஷ்ணவர் ஆகுங்கள். உங்கள் உணவிலும் பானத்திலும் முழுமையாக முன்னெச்சரிக்கையோடு இருங்கள். மேன்மையானவர்கள் ஆகுவதற்கு, நீங்கள் நிச்சயமாக ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும்.

2. முரளியினால் உங்களைப் புத்துணர்வு ஊட்டுங்கள். நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், சதோபிரதான் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒருபொழுதும் முரளியை ஒரு நாளேனும் தவறவிடக் கூடாது.

ஆசீர்வாதம்:
உங்களுக்கு நீங்கள் நன்மை செய்வதை நடைமுறை எடுத்துக் காட்டாகக் கொண்டிருப்பதன் மூலம், உலக நன்மைக்காக நீங்கள் செய்கின்ற சேவையில் சதா வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

இக்காலத்தில், அதிகளவில் காணப்படும் நோய், இதய வழுவலாகவே உள்ளது. அவ்வாறாகவே, ஆன்மீக முன்னேற்றத்தைப் பொறுத்த வரையில் விரக்தி அடைவதே அதிகளவில் காணப்படும் நோயாக உள்ளது. ஒரு விரக்தியடைந்த ஆத்மாவில் ஏற்படுகின்ற நடைமுறை மாற்றத்தைப் பார்க்கையில், மக்கள் தைரியத்தையும் சக்தியையும் வளர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் அதிகளவு செவிமடுத்து விட்டார்கள், இப்பொழுது அவர்கள் எதையாவது பார்க்க விரும்புகிறார்கள். ஓர் எடுத்துக் காட்டைப் பார்ப்பதனாலேயே தமக்குள் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறார்கள். எனவே, உலக நன்மைக்காக, முதன்முதலில், உங்களுக்கு நீங்கள் நன்மை செய்வதை, நடைமுறையில் எடுத்துக் காட்டுங்கள். உலக நன்மைக்காக நீங்கள் செய்கின்ற சேவையில் வெற்றி சொரூபம் ஆகுவதற்கு, நீங்கள் நடைமுறை எடுத்துக்காட்டாக இருப்பதே வழியாகும். இதனூடாக மாத்திரமே தந்தையை வெளிப்படுத்துதல் இடம்பெறும். நீங்கள் பேசுகின்ற அனைத்தையும், உங்கள் நடைமுறை ரூபத்தில் அவர்கள் பார்க்கின்ற போதே, அவர்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வார்கள்.

சுலோகம்:
பிறருடைய அபிப்பிராயங்களுடன் உங்கள் அபிப்பிராயங்களை ஒத்திசைக்கச் செய்வதே மரியாதை கொடுப்பதாகும்.

அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது முழுமையாகவும் கர்மாதீத்தாகவும் ஆகுகின்ற ஆழமான அக்கறையைக் கொண்டிருங்கள்.

கர்மாதீத் ஆகுவதற்கு, உங்கள் செயல்களின் எந்தவொரு பந்தனத்தில் இருந்தும் நீங்கள் எந்தளவிற்கு பற்றற்றவராக ஆகியுள்ளீர்கள் எனச் சோதியுங்கள். நீங்கள் உங்களின் லௌகீகம், அலௌகீகம், செயல்கள் மற்றும் உறவுமுறைகளைப் பொறுத்தவரையில் எந்தளவிற்கு சுயநல நோக்கத்தில் இருந்து விடுபட்டிருக்கின்றீர்கள்? நீங்கள் கர்மக் கணக்குகளின் எந்தவோர் ஆதிக்கத்தில் இருந்தும் எந்தவொரு வீணான சுபாவம் அல்லது சம்ஸ்காரத்தின் ஆதிக்கத்தில் இருந்தும் விடுபடும் போது, உங்களால் கர்மாதீத் ஸ்திதியை அடைய முடியும். எவ்வகையான சேவையும், ஒன்றுகூடலும், பாதகமான சூழ்நிலையும் உங்கள் ஆதியும் மேன்மையுமான ஸ்திதியிலிருந்து உங்களைத் தளம்பல் அடையச் செய்யக்கூடாது. இந்த பந்தனத்தில் இருந்தும் நீங்கள் விடுபட்டிருப்பதே கர்மாதீத் ஸ்திதியை நெருங்கி வருவதாகும்.