12.05.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, விநாச காலம் இப்பொழுது மிகவும் நெருங்கிவிட்டது. எனவே, எந்தவொரு சரீரதாரிகளிலும் அன்றி, ஒரேயொரு தந்தைமீது உண்மையான அன்பு கொண்டிருங்கள்.
கேள்வி:
ஒரேயொரு தந்தைமீது உண்மையான அன்பு கொண்ட குழந்தைகளின் அறிகுறிகள் யாவை?பதில்:
1. அவர்களின் புத்திகளின் யோகம் சரீரதாரிகளை நோக்கிச் செல்லாது. அவர்கள் ஒருவருக்கொருவர் காதலிகளாகவோ, அன்பிற்கு இனியவர்களாகவோ ஆகுவதில்லை. 2. உண்மையான அன்பு கொண்டவர்கள், சதா வெற்றியாளர்களாக இருப்பார்கள். வெற்றியாளராக இருப்பதென்றால், சத்திய யுகத்தில் ஒரு சக்கரவர்த்தியாகவோ, சக்கரவர்த்தினியாகவோ ஆகுவதாகும். அன்பான புத்தியைக் கொண்டவர்கள் சதா தந்தையுடன் நேர்மையாக இருப்பார்கள், அவர்கள் எதையும் மறைக்க மாட்டார்கள். 4. அவர்கள் தினமும் அமிர்தவேளையில் விழித்தெழுந்து தந்தையை அன்புடன் நினைவு செய்வார்கள். 5. அவர்கள் ததீசி ரிஷி செய்தது போன்று தங்களின் எலும்புகளையும் சேவைக்காகக் கொடுப்பார்கள். 6. அவர்களின் புத்தி உலக விடயங்களில் அலைபாயாது.பாடல்:
அவர் எங்களை விட்டுப் பிரியவும் மாட்டார், எங்களின் இதயத்தில் துன்பமும் ஏற்படாது.ஓம் சாந்தி.
வாய்வழித் தோன்றல்களான நீங்கள், பிராமண குலத்தின் அலங்காரங்களான நீங்கள், இந்தச் சத்தியத்தைச் செய்கிறீர்கள். ஏனென்றால், உங்களின் அன்பு ஒரேயொரு தந்தையுடனேயே இணைக்கப்பட்டுள்ளது. இது விநாச காலம் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். விநாசம் நிகழ்ந்தாக வேண்டும் எனத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். விநாச காலத்தில் எவரின் அன்பு தந்தையுடன் இணைக்கப்பட்டிருக்கின்றதோ, அவர்கள் வெற்றியாளர்கள் ஆகுகின்றார்கள். அதாவது, அவர்கள் சத்திய யுகத்தின் அதிபதிகள் ஆகுகின்றார்கள். அரசர்கள், பிரஜைகள் இருசாராருமே உலக அதிபதிகள் ஆகுகின்றார்கள் என்று சிவபாபா உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். எனினும், அந்தஸ்தில் பெருமளவு வேறுபாடுள்ளது. நீங்கள் எந்தளவிற்குத் தந்தை மீது அதிக அன்பு கொண்டிருந்து, அவரை அதிகமாக நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். தந்தையை நினைவு செய்வதால் மாத்திரமே உங்கள் பாவச் சுமை எரிக்கப்படும் என பாபா விளங்கப்படுத்தி உள்ளார். விநாச காலத்தில் அன்பற்ற புத்தியைக் கொண்டவர்கள் அழிவிற்கே இட்டுச் செல்லப்படுவார்கள் என்று நீங்கள் எழுதலாம். இதை எழுதுவதில் பயம் என்ற கேள்விக்கு இடமில்லை. தந்தை கூறுகின்றார்: அவர்கள் அழிவிற்கு இட்டுச் செல்லப்படுவார்கள் என்றும், அன்பான புத்தி கொண்டவர்கள் வெற்றியாளர்களாக இருப்பார்கள் என்றும் நானே உங்களுக்குக் கூறுகின்றேன். பாபா உங்களுக்கு அனைத்தையும் மிகத் தெளிவாகக் கூறுகின்றார். குழந்தைகளாகிய உங்களைத் தவிர உலகிலுள்ள வேறு எவருமே அன்பு கொண்டிருக்க மாட்டார்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, பரமாத்மாவினதும், ஸ்ரீ கிருஷ்ணரினதும் புகழை வெவ்வேறாக எழுதுங்கள். அதன் மூலம் கீதையின் கடவுள் யாரென்பதை நிரூபிக்க முடியும். இது அவசியமானது. இரண்டாவதாக, பாபா வினவுகின்றார்: தூய்மையாக்குபவர், ஞானக்கடலான பரமாத்மாவா அல்லது ஆற்று நீரா? அது ஞான கங்கைகளா அல்லது கங்கை நீரா? இது மிக இலகுவானது. மூன்றாவதாக, நீங்கள் ஒரு கண்காட்சியை நடாத்தும்போது, முதலில் கீதைப் பாடசாலைகளில் உள்ளவர்களுக்கு அழைப்பிதழ்களை அனுப்புங்கள். அவர்களில் பலர் உள்ளனர். நீங்கள் விசேடமாக அவர்களை அழைக்க வேண்டும். முதலில், ஸ்ரீமத் பகவத் கீதையை உபதேசிப்பவர்களை அழைக்க வேண்டும். ஏனெனில், அவர்களே முதலில் மறந்து விட்டவர்களும், மற்றவர்களையும் மறக்கச் செய்பவர்களும் ஆவர். வந்து, அவர்களே சீர்தூக்கிப் பார்த்து, பின்னர் எது சரியென்று தோன்றுகின்றதோ அதைச் செய்யலாம் எனக்கூறி, அவர்களை நீங்கள் அழைக்க வேண்டும். அப்பொழுது, நாங்கள் கீதையைப் படிப்பவர்களையும்கூட அழைக்கின்றோம் என்பதையும், நாங்கள் கீதையையே உபதேசிப்பதாக இருக்கலாம் என்றும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். கீதை மூலமாகவே சுவர்க்கம் ஸ்தாபிக்கப்பட்டது. கீதைக்குப் பெரும் புகழ் உள்ளது, ஆனால் அது பக்தி மார்க்கத்தின் கீதைக்கு உரியதல்ல. தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்கு சத்தியத்தை மாத்திரமே கூறுகின்றேன், சத்தியத்தைத் தவிர வேறெதுவுமல்ல. மக்கள் என்ன விளக்கங்களைக் கொடுத்திருந்தாலும், அவையனைத்தும் முற்றிலும் தவறானவை. வேறு எவருமே உண்மை பேசுவதில்லை. நான் மாத்திரமே உங்களுக்கு உண்மையைக் கூறுகின்றேன். கடவுள் சர்வவியாபகர் எனக் கூறுவது உண்மையல்ல. அவையனைத்தும் அழிவிற்கே இட்டுச் செல்லும். தொடர்ந்தும் ஒவ்வொரு கல்பத்திலும் அவ்வாறே நிகழும். இதுவே நீங்கள் விளங்கப்படுத்த வேண்டிய, முதலாவதும் முதன்மையானதுமான விடயமாகும். தந்தை கூறுகின்றார்: யாதவர்கள் (விஞ்ஞானிகள்) அன்பற்ற புத்தியைக் கொண்டவர்கள். அவர்கள் விநாசத்திற்கு மிகச் சிறந்த ஆயத்தங்களைச் செய்கின்றார்கள். எவ்வாறாயினும், கல்லுப் புத்தி கொண்டவர்களால் எதையும் புரிந்து கொள்ள முடியாது. நீங்களும் கல்லுப் புத்தியையே கொண்டிருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் தெய்வீகப் புத்தி கொண்டவர்கள் ஆகவேண்டும். தெய்வீகப் புத்தியைக் கொண்டிருந்த நீங்கள், எவ்வாறு இப்பொழுது கல்லுப் புத்தியுடையவர்கள் ஆகினீர்கள் என்பது ஓர் அற்புதமே. தந்தை ஞானம் நிறைந்தவர் என்றும், கருணை நிறைந்தவர் என்றும் அழைக்கப்படுகின்றார். தங்களுக்கு நன்மை செய்யத் தெரியாதவர்கள், எவ்வாறு மற்றவர்களுக்கு நன்மை செய்வார்கள்? இந்த ஞானத்தைக் கிரகிக்காதவர்கள் அதற்கேற்பவே அந்தஸ்தையும் பெறுவார்கள். சேவை செய்பவர்களே உயர்ந்த அந்தஸ்தைக் கோருவார்கள். அவர்களையே தந்தை நேசிக்கின்றார். அது நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமானது. அவர்கள் தந்தையை நேசிக்காததால், ஓர் அந்தஸ்தைப் பெறமாட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்வதில்லை. நிஜக் குழந்தைகள் ஆயினும்சரி, தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் ஆயினும்சரி, விநாச காலத்தில் அன்பான புத்தியைக் கொண்டிருக்கா விட்டாலோ, தந்தையைப் பின்பற்றா விட்டாலோ அவர்கள் தாழ்ந்த அந்தஸ்தையே பெறுவார்கள். அவர்களுக்கு தெய்வீகக் குணங்களும் தேவை. நீங்கள் ஒருபோதும் பொய் பேசக்கூடாது. தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்கு உண்மையையே கூறுகின்றேன். என்னை நேசிக்காத எவரும் ஓர் அந்தஸ்தைப் பெறமாட்டார்கள். நீங்கள் முயற்சி செய்து, 21 பிறவிகளுக்கான உங்களின் ஆஸ்தியை முழுமையாகப் பெறவேண்டும். முதலில், கீதைப் பாடசாலைகளைச் சேர்ந்தவர்களை மேலாக்களுக்கும், கண்காட்சிகளுக்கும் அழையுங்கள். ஏனெனில் அவர்கள் பக்தர்களாவர். கீதையைப் படிப்பவர்கள் நிச்சயமாக ஸ்ரீகிருஷ்ணரை நினைவு செய்வார்கள். எவ்வாறாயினும், அவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. ஸ்ரீகிருஷ்ணர் புல்லாங்குழல் வாசித்தார், அப்போது ராதை எங்கு சென்றார்? அவர்கள் சரஸ்வதிக்கு வீணையையும், ஸ்ரீகிருஷ்ணருக்குப் புல்லாங்குழலையும் வழங்கியுள்ளனர். அல்லாவே தங்களைப் படைத்ததாக மக்கள் கூறுகின்றனர். எனினும், அவர்களுக்கு அல்லாவைத் தெரியாது. இது பாரதத்தையே குறிக்கின்றது. பாரதத்தில் தேவர்களின் இராச்சியம் இருந்தது. அவர்களின் விக்கிரகங்கள் ஆலயங்களில் பூஜிக்கப்படுகின்றன. அவர்கள் அரசர்கள் போன்றோரின் சிலைகளை வெளியிலேயே வைக்கின்றனர். அவற்றின்மீது பறவைகள் அமர்ந்திருந்து எச்சம்போட்டு அவற்றை அழுக்காக்குகின்றன. அவர்கள் இலக்ஷ்மி நாராயணனையும், இராதை கிருஷ்ணரையும் முதற்தரமான இடத்தில் வைத்துள்ளனர்! அவர்கள் சக்கரவர்த்தி, சக்கரவர்த்தினி என்று அழைக்கப்படுகின்றனர். 'கிங்" என்பது ஆங்கிலச் சொல்லாகும். சக்கரவர்த்தி தூய்மையானவர் என்பதால், அவர்கள் ஓர் ஆலயத்தைக் கட்டுவதற்காக நூறாயிரக் கணக்கில் செலவு செய்கின்றார்கள். அரசன், அரசி, பிரஜைகள் யாவரும் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களாக இருந்தனர். நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகவும், பின்னர் பூஜிப்பவர்களாகவும் ஆகுகின்றீர்கள். எனவே, தந்தையை நினைவு செய்வதே முதலாவது விடயமாகும். நீங்கள் தந்தையை நினைவு செய்யும் பயிற்சியைக் கொண்டிருக்கும் போது, உங்களால் இந்த ஞானத்தைக் கிரகிக்க முடியும். ஒருவர் மீது அன்பு இல்லாததால், உங்களின் அன்பு ஏனையவர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. சில புத்திரிகள் ஒருவர் மீதொருவர் பெருமளவு அன்பு கொண்டிருக்கின்றார்கள், அந்தளவு அன்பை அவர்கள் சிவபாபா மீது கொண்டிருப்பதில்லை! சிவபாபா கூறுகின்றார்: நீங்கள் உங்களின் புத்தியின் யோகத்தை என்னுடன் இணைக்க வேண்டும். அல்லது, நீங்கள் ஒருவருக்கொருவர் காதலிகளாகவும், அன்பிற்கினியவர்களாகவும் ஆகப்போகின்றீர்களா? அதன் பின்னர் நீங்கள் என்னை முற்றாகவே மறந்து விடுவீர்கள். நீங்கள் உங்களின் புத்தியின் யோகத்தை என்னுடன் இணைக்க வேண்டும். இதற்கு முயற்சி தேவை. உங்களின் புத்திகள் ஏனையவர்களிடம் இருந்து துண்டிக்கப்படுவதே இல்லை. சிவபாபாவை நினைவு செய்வதற்குப் பதிலாக, நீங்கள் ஒருவரையொருவர் இரவு பகலாக நினைவு செய்கின்றீர்கள். பாபா அவர்களின் பெயர்களைக் குறிப்பிடும்போது, அவர்கள் துரோகிகள் ஆகுகின்றனர். பின்னர், பாபாவை அவதூறு செய்ய ஆரம்பிப்பதற்கு அவர்களுக்கு அதிக காலம் எடுப்பதில்லை. நீங்கள் இந்த பாபாவை அவதூறு செய்யும்போது, சிவபாபாவும் உடனடியாகவே அதைக் கேட்கின்றார். நீங்கள் பிரம்மாவுடன் கற்காவிட்டால், சிவபாபாவுடனும் உங்களால் கற்க முடியாது. பிரம்மா இல்லாது, சிவபாபாவால் நீங்கள் கூறுவதைக் கேட்கவும் முடியாது. இதனாலேயே அவர் பௌதீக பாபாவிடம் சென்று கேட்குமாறு உங்களிடம் கூறுகின்றார். சில நல்ல குழந்தைகள் பிரம்மா பாபாவும் முயற்சியாளர்தானே என உணர்வதால், அவரை ஏற்றுக் கொள்வதில்லை. அனைவரும் முயற்சியாளர்களே, எனினும் நீங்கள் தாயையும், தந்தையையும் பின்பற்ற வேண்டும். சிலர் நீங்கள் விளங்கப்படுத்தும்போது புரிந்து கொள்கின்றார்கள். சிலரின் பாக்கியத்தில் அது இல்லாவிட்டால் அவர்கள் எதையும் புரிந்து கொள்ள மாட்டார்கள், அவர்கள் சேவையாளர்கள் ஆகமாட்டார்கள். எவ்வாறாயினும், நீங்கள் உங்களின் புத்தியைத் தந்தையொருவருடனேயே இணைக்க வேண்டும். சிவபாபா தமக்குள் வருவதாகக் கூறுகின்ற பலர் இந்நாட்களில் தோன்றியுள்ளனர். நீங்கள் இதனையிட்டு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாயையின் தலையீடு அதிகளவில் உள்ளது. ஸ்ரீ நாராயணன் யார் யாரில் வந்தாரோ, அவர்களும் இன்று இங்கில்லை. அவர்கள் உங்களுக்குள் பிரவேசிப்பதால் எதுவுமே நிகழாது. தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். எவராவது தம்முள் வருகிறார் எனக் கூறுவது மாயை ஆகும்! நீங்கள் என்னை நினைவு செய்யாவிட்டால், எதைப் பெறுவீர்கள்? நீங்கள் தந்தையுடன் நேரடியாக யோகம் செய்யாவிட்டால், எவ்வாறு ஓர் அந்தஸ்தைப் பெறவோ, இந்த ஞானத்தைக் கிரகிக்கவோ முடியும்? தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். நான் பிரம்மா மூலமே உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். பிரம்மா மூலமாகவே ஸ்தாபனை நடைபெறுகிறது. திரிமூர்த்திகளும் நிச்சயமாகத் தேவைப்படுகின்றனர். சிலர் பிரம்மாவின் படத்தைப் பார்க்கும்போது கோபப்படுகிறார்கள். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் 84 பிறவிகளைப் பற்றிக் கேள்விப்படும்போது கோபப்படுகின்றார்கள். அவர்கள் படத்தைக் கிழித்தும் விடுகிறார்கள். தந்தையே அப்படங்களைச் செய்வித்துள்ளார். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: மறக்காமல் தந்தையைத் தொடர்ந்தும் நினைவு செய்யுங்கள்! பந்தனத்தில் இருப்பவர்களும் விரத்தியில் அழக்கூடாது. வீட்டில் இருந்தவாறே தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள். பந்தனத்தில் இருப்பவர்களால் இன்னமும் உயர்ந்த அந்தஸ்தை அடைய முடியும். ஞானக்கடலே குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். தந்தை ஒருவரைத் தவிர வேறெவரிடமும் இந்த ஆன்மீக ஞானம் இல்லை. பரமதந்தை, பரமாத்மா மாத்திரமே ஞானக்கடல் ஆவார். அவரே விடுதலையளிப்பவர் எனவும் அழைக்கப்படுகிறார். இதிலே பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார், பின்னர் நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் சற்கதி அடைவீர்கள். இராம (கடவுள்) இராச்சியம் கலியுகத்திலன்றி, சத்திய யுகத்திலேயே உள்ளது. சத்திய யுகத்தில் ஓர் இராச்சியமே உள்ளது. இவ்விடயங்கள் அனைத்தையும் உங்களின் புத்தி எவ்வாறு கிரகிக்கின்றது என்பதில் நீங்கள் வரிசைக்கிரமமாகவே உள்ளீர்கள். இந்த ஞானத்தைக் கிரகிக்க முடியாதவர்கள், விநாச காலத்தில் அன்பற்ற புத்தியைக் கொண்டவர்கள் என்று அழைக்கப்படுவதுடன், அவர்களால் ஓர் அந்தஸ்தைப் பெறவும் முடியாது. அனைவரும் அழிக்கப்பட வேண்டும். இவை சிறிய விடயமல்ல! சிவபாபா கூறுகிறார்: விநாச காலத்தில் அன்பான புத்தியைக் கொண்டவர்கள் ஆகுங்கள்! இதுவே உங்களின் இறுதிப் பிறவியாகும். எனவே, இப்பொழுது உங்களிடம் அன்பு இல்லாவிட்டால், நீங்கள் ஓர் அந்தஸ்தைப் பெறமாட்டீர்கள். நேர்மையான இதயமே பிரபுவைப் பூரிப்படையச் செய்கின்றது. ததீசி ரிஷி செய்ததைப் போன்று உங்களின் எலும்புகளையும் சேவைக்காக வழங்குங்கள். அவர்கள் மீது தீய சகுனங்கள் உள்ளபோது, அவர்களின் போதை அற்றுப் போவதுடன் பலவிதமான புயல்கள் தொடர்ச்சியாக வருகின்றன. அப்பொழுது அவர்கள் தாம் இங்கே எதையும் அனுபவிக்கவில்லை எனவும் தமது லௌகீகப் பெற்றோரிடம் திரும்பிச் செல்வதே மேலானது எனவும் கூறுகின்றனர். அங்கே நாடகங்கள், திரைப்படங்கள் போன்றன உள்ளன. அவற்றிற்குப் பழக்கப்பட்டவர்களால் இங்கிருக்க முடியாது. அது அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். ஆம், முயற்சி செய்தால் உயர்ந்த அந்தஸ்தை அடைவது சாத்தியமே. நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். பாபாவே கூறுகிறார்: அதிகாலையில் எழுந்து நினைவில் அமராது விட்டால், எனக்கு சுவாரசியமாக இருக்க மாட்டாது, கட்டிலில் படுத்திருந்தால் நீங்கள் தூங்கி விழ நேரிடும். நினைவில் அமர்ந்திருந்தால், நல்ல கருத்துக்கள் பல தோன்றுவதுடன், மிகவும் சுவாரசியமாகவும் இருக்கும். இன்னமும் ஒரு சில நாட்களே எஞ்சியுள்ளன. நாங்கள் தந்தையிடம் இருந்து உலக இராச்சியத்தைக் கோருகின்றோம். அமர்ந்திருந்து இதை நினைவு செய்தால், உங்கள் சந்தோஷப் பாதரசம் உயரும். இவ்விடயங்களைப் பற்றி நீங்கள் அதிகாலையில் சிந்திப்பீர்களாயின், அந்தச் சந்தோஷம் நாள் முழுவதும் நிலைத்திருக்கும். சந்தோஷம் இல்லையெனில், நிச்சயமாக உங்கள் புத்தி தந்தைமீது அன்பு கொண்டிருக்கவில்லை. அமிர்த வேளையில், மிக நல்ல ஏகாந்தம் உள்ளது. எனவே எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்கள் சந்தோஷப் பாதரசம் உயரும். நீங்கள் தந்தையை மறக்கும்போது, இக்கல்வியில் தீய சகுனங்கள் உண்டாகின்றன. நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற விரும்பினால், உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் மூலமாகச் சேவை செய்யுங்கள். உங்களின் இந்த இறுதிப் பிறவியை இச்சேவை செய்வதில் செலவிடுங்கள். நீங்கள் உலக விடயங்களில் ஈடுபட்டிருந்தால், எப்பொழுது உங்களால் இந்தச் சேவையைச் செய்யமுடியும்? நாளைக்கென எதையும் தள்ளிப் போடுவீர்களாயின், இறுதியில் நீங்கள் மரணித்து, எதையுமே செய்யமுடியாது போய்விடும். தந்தை உங்களைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லவே வந்துள்ளார். இங்கே யுத்தத்தால் பலர் மரணம் அடைகிறார்கள், பலர் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். அங்கே யுத்தம் போன்றவை இல்லை. அனைத்துமே அழிக்கப்பட வேண்டிய இறுதிக் காலத்தையே அவை குறிக்கின்றன. அநாதைகள் இவ்விதமாக மரணம் அடைவார்கள். பிரபுவிற்கும், அதிபதிக்கும் சொந்தமானவர்கள் தமது இராச்சிய பாக்கியத்தைப் பெறுவார்கள். நீங்கள் உங்களின் சொந்த வருமானத்தின் மூலமாகவும், உங்களது சரீரம், மனம், செல்வம் என்பவற்றின் மூலமாகவும் உங்களது சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் என்பதையும் கண்காட்சிகளில் விளங்கப்படுத்த வேண்டும். நாங்கள் எதற்காகவும் இரப்பதில்லை, ஏனெனில் அதற்கான அவசியமே இல்லை. பல சகோதர, சகோதரிகள் ஒன்றுசேர்ந்து எமது இராச்சியத்தை ஸ்தாபிக்கிறோம். நீங்கள் பல மில்லியன்களைச் சேர்த்து, உங்களுக்கே அழிவை ஏற்படுத்துகின்றீர்கள். நாங்களோ ஒவ்வொரு சதத்தையும் சேர்த்து, உலகின் அதிபதிகள் ஆகுகிறோம். இவை மிகவும் அற்புதமான விடயங்கள் ஆகும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. அமிர்தவேளையில் ஏகாந்தமாக அமர்ந்திருந்து தந்தையை அன்புடன் நினைவு செய்யுங்கள். உலக விடயங்கள் அனைத்தையும் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, உங்களை இறை சேவையில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.2. உங்களின் இதயம் தந்தையுடன் நேர்மையாக இருக்கட்டும். ஒருவருக்கொருவர் காதலியாகவோ, அன்பிற்கினியவராகவோ ஆகாதீர்கள். உங்களின் அன்பை எந்தவொரு சரீரதாரிகள் மீதுமன்றி, ஒரேயொரு தந்தையுடன் மாத்திரம் இணைத்துக் கொள்ளுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சகல சக்திகளின் செல்வத்தால் நிரம்பியவராகி, ஓர் அருள்பவராகவும் இந்த ஞானத்தை அருள்பவராகவும் ஆசீர்வாதங்களை அருள்பவராகவும் ஆகுவீர்களாக.சகல சக்திகள் என்ற செல்வத்தைக் கொண்டுள்ள குழந்தைகளான நீங்கள், சம்பூரணமான மற்றும் முழுமையான ஸ்திதிக்கு நெருக்கமாக இருப்பதை அனுபவம் செய்கிறீர்கள். பக்தருக்குரிய அல்லது யாசகருக்குரிய எந்தவிதமான சம்ஸ்காரங்களும் உங்களுக்குள் வெளிப்பட முடியாது. எனக்குத் தந்தையின் உதவி தேவை, எனக்கு ஆசீர்வாதங்கள் தேவை, எனக்கு ஒத்துழைப்புத் தேவை, எனக்கு சக்திகள் தேவை என்ற இந்த வேண்டும் என்ற வார்த்தைகள், அருள்பவரின், ஞானத்தை அருள்பவரின், ஆசீர்வாதங்களை அருள்பவரின் குழந்தைகளான உங்களுக்குப் பொருந்தாது. நீங்களே உலகிலுள்ள ஒவ்வோர் ஆத்மாவிற்கும் தானங்களையும் (தான்) அல்லது ஆசீர்வாதங்களையும் (வரதான்) கொடுப்பவர்கள் ஆவீர்கள்.
சுலோகம்:
ஆத்மாக்களுக்கு ஏதாவதொரு வகையான பேறுகளைக் கொடுக்கும் வார்த்தைகளே, உண்மையான வாசகங்கள் ஆகும்.அவ்யக்த சமிக்ஞை: சதா ஆட்ட, அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
மற்றவர்கள் உங்களை எவ்வளவுதான் அசைக்க முயற்சி செய்தாலும், நீங்கள் அசைக்க முடியாதவர்களாக இருக்க வேண்டும். இக்கட்டான சூழ்நிலைகள் மேன்மையானவையா அல்லது உங்களின் ஆதி ஸ்திதி மேன்மையானதா? சிலவேளைகளில் இக்கட்டான சூழ்நிலைகள் உங்களைத் தாக்குகின்றனவா? அந்த இக்கட்டான சூழ்நிலைகள் சக்திவாய்ந்தவையா அல்லது உங்களின் ஆதி ஸ்திதி சக்தி வாய்ந்ததா என்று சிந்தித்துப் பாருங்கள். இந்த விழிப்புணர்வு உங்களுக்கு இருக்கும்போது, நீங்கள் பலவீனத்தில் இருந்து சக்திசாலியாக மாறுவீர்கள். எப்படி தபஸ்வி ஆத்மாக்களான நீங்கள் உங்களின் நிலையான மற்றும் ஸ்திரமான ஸ்திதியில் கவனம் செலுத்துகிறீர்களோ, அதேபோல், ஹத்தயோகிகள் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். எனவே, நிலையான, ஸ்திரமான ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதற்கும் ஒற்றைக் காலில் நிற்பதற்கும் இடையில் ஒரு வேறுபாடு உள்ளது.