12.11.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். கலியுகத்துப் பழைய உலகைப் பற்றிய எந்த எண்ணங்களையும் நீங்கள் கொண்டிருக்கக்கூடாது.

கேள்வி:
உங்கள் செயல்களைச் சீர்திருத்துவதற்கும், மேன்மையான செயல்களைச் செய்வதற்கும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை, காட்டியுள்ள வழிமுறை யாது?

பதில்:
உங்கள் செயல்களைச் சீர்திருத்துவதற்கு, உண்மையான தந்தையுடன் எப்பொழுதும் நேர்மையாக இருங்கள். நீங்கள் எப்பொழுதாவது தவறுதலாகவேனும், ஒரு தவறான செயலைச் செய்தால், அப்பொழுது அதனைப் பற்றி உடனடியாகவே பாபாவுக்கு எழுதுங்கள். நீங்கள் பாபாவுக்கு நேர்மையுடன் கூறினால், அதன் தாக்கம் குறைக்கப்படும். இல்லாவிட்டால், அது தொடர்ந்தும் அதிகரிக்கும். பாபா செய்தியைப் பெற்றவுடன், அதனைச் சீர்திருத்துவதற்கான ஸ்ரீமத்தை உங்களுக்குக் கொடுப்பார்.

ஓம் சாந்தி.
சிவபாபா பிரம்மாவினுடாக, குழந்தைகளாகிய உங்களிடம் வினவுகிறார்: நீங்கள் இன்று காலையில் இருந்து இங்கே அமர்ந்திருந்தவாறு என்ன செய்கிறீர்கள்? நீங்கள் மாணவர்கள். ஆகவே, இங்கே அமர்ந்திருக்கும் பொழுது, சிவபாபா உங்களுக்குக் கற்பிப்பதற்கு வந்து விட்டார் என நீங்கள் நிச்சயமாகச் சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். இந்தக்கல்வியினூடாக, நீங்கள் சூரிய வம்சத்தில் ஒருவர் ஆகுவீர்கள், ஏனெனில் நீங்கள் இராஜயோகத்தைக் கற்கிறீர்கள். நீங்கள் விஷ்ணு தாமத்தின் அதிபதிகள் ஆகுகிறீர்கள் எனும் எண்ணத்துடன் அமர்ந்திருக்கிறீர்களா அல்லது நீங்கள் உங்களுடைய பொறுப்புக்களையும் குழந்தைகளையும் வியாபாரம் போன்றவற்றையும் நினைவு செய்கிறீர்களா? இதுவே கீதையைக் கற்குமிடம் என்பதும், கடவுள் உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதும், நீங்கள் இலக்ஷ்மி நாராயணனாகவோ அல்லது அவர்களின் குலத்தில் ஒருவராகவோ ஆகுவீர்கள் என்பதும் உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். இது இராஜயோகம் ஆகும். நீங்கள் பாபாவை நேரடியாகச் செவிமடுத்து, சூரிய-வம்ச குலத்தின் அங்கத்தவர்கள் ஆகுகிறீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் இருக்க வேண்டும். உங்கள் முன்னிலையில் இலக்ஷ்மி நாராயணனின் படம் உள்ளது, பின்னர் அது எங்கள் இராச்சியமாகும். உலக மக்கள் சுவர்க்கம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வதில்லை. நீங்கள் பாபாவிடமிருந்து சுவர்க்க இராச்சியத்தை எவ்வாறு ஆட்சிசெய்வது என்பதைக் கற்கின்றீர்கள். நாங்களே சுவர்க்க அதிபதிகளாகப் போகின்றவர்கள். இதனை உங்களுக்குள் கடையுங்கள். தாங்கள் சட்டநிபுணர்களாகவோ அல்லது பொறியியலாளர்களாகவோ ஆகுவதற்குக் கற்கிறார்கள் என்பது பாடசாலை மாணவர்களின் புத்திகளில் உள்ளது. நீங்கள் எதனைக் கற்கிறீர்கள் என்பதை நினைவு செய்கிறீர்களா அல்லது நீங்கள் அதனையும் மறந்து விடுகிறீர்களா? நீங்கள் அதிமேன்மையான, கடவுளின் மாணவர்கள்! உங்களை அதிமேலான தேவர்கள் ஆக்குவதற்குத் தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார், நீங்கள் அவருடைய மாணவர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களுடைய சரீரங்களின் மூலம் உங்கள் எதிர்கால அந்தஸ்தை நினைவு செய்கிறீர்களா அல்லது நீங்கள் உங்களுடைய சரீர உறவினர்களையும், உடைமைகளையும், வியாபாரம் போன்றவற்றையும் நினைவு செய்கிறீர்களா? உங்களை எல்லையற்றதின் அதிபதிகள் ஆக்குவதற்காக உங்களுக்குக் கற்பிப்பதற்கு, எல்லையற்ற தந்தை இங்கு வருகிறார் என்பதை நீங்கள் இங்கு வரும்பொழுது, புரிந்துகொள்ள வேண்டும். பின்னர், நீங்கள் அரசர்களாக, அரசிகளாக அல்லது பிரஜைகளாக ஆகுவது உங்களைப் பொறுத்தது. குறைந்தபட்சம் நீங்கள் அதிபதிகள் ஆகுகிறீர்கள். புதிய உலகம் முழுவதும் சூரிய வம்சம் மாத்திரமே இருக்கும். நீங்கள் உங்கள் இராச்சியத்தை ஆட்சிசெய்வீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். வெளியே வாழ்ந்து, தங்கள் இல்லறம், வயல்கள் போன்றவற்றைப் பராமரிக்கும் பொழுது, சில குழந்தைகளால் பாபாவை அந்தளவுக்கு நினைவுசெய்ய இயலாதுள்ளது என்பதை பாபா அறிவார். நீங்கள் இங்கு வரும்பொழுது, அனைத்து விடயங்களையும் பற்றிய எண்ணங்கள் அனைத்தையும் ஒதுக்கி விட்டே வரவேண்டும். நீங்கள் இப்பொழுது அந்தக் கலியுகத்து உலகில் இல்லை. இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் கலியுகத்தைத் துறந்து விட்டீர்கள். வெளியே கலியுகமே உள்ளது. விசேடமான, மதுவனம் சங்கம யுகத்திலேயே உள்ளது. இதனாலேயே மதுவனம் நினைவு செய்யப்படுகிறது. இங்கு, நீங்கள் முரளியைக் கடைய வேண்டும். நீங்கள் செவிமடுத்தவற்றை மீட்டல் செய்து, இந்த ஞானக்கடலைக் கடைய வேண்டும். உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுதெல்லாம், சென்று, படங்களின் முன்னால் அமர்ந்திருங்கள். தொடர்ந்தும் அவற்றைப் பார்த்து, அவற்றிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். ஏனையோரை அழைத்து வரும் பிராமண ஆசிரியர்களுக்குப் பெருமளவு பொறுப்பு உள்ளது. சொற்ப மாணவர்கள் மாத்திரமே சித்தி எய்தினால், தங்கள் கௌரவம் இழக்கப்பட்டு விடும் என்பதனால், ஒரு பாடசாலையிலுள்ள ஆசிரியர்கள் அக்கறை கொண்டிருப்பதைப் போன்றே, இவர்களுக்கும் பெருமளவு அக்கறை இருக்க வேண்டும். ஒரு பாடசாலையில் பல மாணவர்கள் சித்தி எய்;தினால், ஆசிரியர் சிறந்தவர் எனக் கருதப்படுகிறார். பிராமண ஆசிரியர்கள் மாணவர்களில் கவனம் செலுத்த வேண்டும். பாபா நேரடியாக உங்களுடன் பேசுகின்ற, சங்கம யுகத்திலேயே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். இந்த இடத்தின் தாக்கம் மிகவும் சிறந்தது. நீங்கள் இங்கு உங்கள் வீடு, வியாபாரம் போன்றவற்றை நினைவு செய்தால், சாதாரணப் பிரஜைகள் ஆகுவீர்கள் என்பதை பாபா புரிந்து கொள்கிறார். நீங்கள் இங்கு அரசர்கள் ஆகுவதற்கே வந்தீர்கள், ஆனால்… இல்லாவிட்டால், குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளாரப் பெருமளவு சந்தோஷம் இருக்கும். படங்களும் உங்களுக்குப் பெருமளவு உதவி செய்கின்றன. நினைவு செய்யும்பொருட்டு, விசேடமான எட்டு இஷ்ட தெய்வங்களின் படங்களையும், தங்கள் குருமார்களின் படங்களையும் மக்கள் வீட்டில் வைத்திருக்கிறார்கள். எவ்வாறாயினும், அவர்களை நினைவு செய்வதனால், அவர்கள் எதனையும் பெறுவதில்லை. பக்தி மார்க்கத்தில் மக்கள் எதனைச் செய்திருந்தாலும், தொடர்ந்தும் கீழிறங்கியே வந்துள்ளார்கள். குழந்தைகளான நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் சிவபாபாவின் படமொன்றை வைத்திருங்கள், அப்பொழுது நீங்கள் அவரை மீண்டும் மீண்டும் நினைவு செய்வீர்கள். முன்னர், நீங்கள் அனுமாரையும், கிருஷ்ணரையும், இராமரையும் நினைவு செய்தீர்கள். இப்பொழுது சிவபாபா உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! திரிமூர்த்தியின் படம் மிகவும் சிறந்தது. உங்கள் சட்டைப் பையில் இந்தப்படத்தை எப்பொழுதும் வைத்திருங்கள். தொடர்ந்தும் அதனை மீண்டும் மீண்டும் பார்ப்பதனால், உங்களால் பாபாவை நினைவு செய்ய இயலும். பாபா ஒரு பக்தராக இருந்தார், இவர் தனது சட்டைப் பையில் இலக்ஷ்மி நாராயணனின் படமொன்றை வைத்திருந்தார். இவர் தனது கதிக்குக் கீழே (ஆசனத்தின் கீழ்) தன்னுடன் ஒரு படத்தை வைத்திருந்தார், ஆனால் இவர் அதிலிருந்து எதனையும் பெறவில்லை. இப்பொழுது பாபாவிடம் இருந்து பெருமளவு பேறு உள்ளது. நீங்கள் அந்த ஒரேயொருவரை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். எவ்வாறாயினும், இதிலேயே மாயை உங்களை எதிர்க்கிறாள். நீங்கள் பெருமளவு இந்த ஞானத்தைச் செவிமடுத்து, பேசி, அதில் திறமைசாலிகள் ஆகுகிறீர்கள். நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தை மறந்து விடுகிறீர்கள் எனக் கூறுவதில்லை. இங்கு வாழ்பவர்கள் கூட, பாபாவை மேலும் அதிகளவு நினைவு செய்கிறார்கள் என்பதல்ல. இல்லை, இங்கு வாழும்பொழுதும், சிலர் பெறுமதியற்ற விடயங்கள் அனைத்தையும் நினைவு செய்கின்றார்கள். இது தாங்கள் அழகானவர்கள் ஆகுவதற்குத் தாம் நாடி வந்துள்ள தந்தையைக் கூட அவர்கள் அறியாததைப் போல் உள்ளது. மாயையின் பெரும் நிழல் உள்ளது. நினைவே பிரதான விடயம். பல மிகச்சிறந்த குழந்தைகள் நினைவில் நிலைத்து இருப்பதில்லை என்பதை பாபா அறிவார். யோகத்தில் நிலைத்து இருப்பதனால் மாத்திரமே, உங்கள் சரீர உணர்வு அகற்றப்பட்டு, நீங்கள் மிகவும் இனிமையானவர்கள் ஆகுவீர்கள். சரீர உணர்வு உடையவர்களாக இருப்பதனால், உங்களால் இனிமையானவர்களாக முடியாதுள்ளது, நீங்கள் தொடர்ந்தும் குழப்பம் அடைகிறீர்கள். பாபா அனைவரையிட்டும் இதனைக் கூறவில்லை. சில கீழ்ப்படிவான, தகுதிவாய்ந்த குழந்தைகள் உள்ளார்கள். யோகத்தில் நிலைத்து இருப்பவர்களே, தகுதிவாய்ந்த குழந்தைகள் எனக் கூறப்படுகிறார்கள். அவர்கள் ஒருபொழுதும் தவறான விடயங்களைக் கூறுவதில்லை. அவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களையும் மறந்து விடுகிறார்கள். நாங்கள் சரீரமற்றவர்களாக வந்தோம், சரீரமற்றவர்களாகவே வீடு திரும்ப வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது ஞானமாகிய மூன்றாவது கண்ணைப் பெற்று விட்டீர்கள், அதன் மூலம் நீங்கள் உங்கள் வீட்டையும், உங்களின் இராச்சியத்தையும் அறிவீர்கள். எங்களுக்குக் காட்டப்பட்டுள்ளதைப் போன்று, சிவபாபா ஒரு கரிய நீள்கோள வடிவமல்ல, ஆனால் அவர் ஒரு புள்ளி என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நாங்கள் இதனை அறிவோம். நாங்கள் சரீரமற்றவர்களாக இருந்த இடமாகிய, வீட்டுக்கு இப்பொழுது திரும்பிச் செல்ல வேண்டும். இப்பொழுது நாங்கள் சரீரமற்றவர்களாக வேண்டும். உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தூய்மையாக்குபவராகிய, தந்தையை நினைவு செய்யுங்கள். ஆத்மாக்களான நீங்கள் அழிவற்றவர்கள் என்பதும், முடிவற்ற 84 பிறவிகளின் பாகங்கள் உங்களில் பதியப்பட்டுள்ளன என்பதும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு குறுகிய காலத்துக்கு முக்தி தாமத்துக்குச் சென்று, பின்னர் உங்கள் பாகங்களை நடிப்பதற்குக் கீழே வருகிறீர்கள். நீங்கள் சகல துறைப் பாகங்களை நடிக்கிறீர்கள். இதனை எப்பொழுதும் நினைவு செய்யுங்கள். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். பாபாவை நினைவு செய்வதனால், நாங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவோம். இங்கு, நீங்கள் உங்கள் வியாபாரம் போன்றவற்றை நினைவு செய்யக்கூடாது. இங்கு, நீங்கள் முழுமையாகச் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது ஒரு படகில் அமர்ந்திருக்கிறீர்கள். சிலர் வழியில் இறங்கி, பின்னர் அகப்பட்டு, மரணிக்கிறார்கள். சமயநூல்களில் இதனைப் பற்றிய கதையொன்று உள்ளது. நீங்கள் இப்பொழுது மறுகரைக்குச் செல்கிறீர்கள் என்பதையும், சிவபாபாவே படகோட்டி என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஸ்ரீகிருஷ்ணரைப் படகோட்டி எனவோ அல்லது பூந்தோட்டத்தின் அதிபதி எனவோ அழைக்க முடியாது. கடவுள் சிவன் பேசுகிறார். சிவபாபாவே தூய்மையாக்குபவர். உங்கள் புத்தி கிருஷ்ணரிடம் செல்லக்கூடாது. மக்களின் புத்திகள் சதா அலைந்து திரிகின்றன. பாபா வந்து, உங்களை அலைந்து திரிவதிலிருந்து விடுவிக்கிறார். அவர் கூறுகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி, பாபாவை நினைவு செய்தால், நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள். நீங்கள் இவ்விடயங்களை மறக்கக்கூடாது. நீங்கள் மிக்க புத்துணர்ச்சி ஊட்டப்பட்டு, இங்கிருந்து திரும்பிச் செல்கிறீர்கள். நீங்களும் உங்கள் அனுபவத்தைக் கூறுகிறீர்கள்: பாபா, நாங்கள் இங்கு வருவதற்கு முன்னர் என்னவாக இருந்தோமோ, பின்னர் அவ்வாறு ஆகுகிறோம். நாங்கள் எங்களுடைய நண்பர்களினதும், உறவினர்களினதும் முகங்களைப் பார்த்தவுடன், தூண்டப்படுகிறோம். குழந்தைகளாகிய நீங்கள் எனது காதலிகள். உங்கள் வேலையைச் செய்யும் பொழுதும், அன்பிற்கினியவரை நினைவுசெய்தால், நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். நீங்கள் இப்பொழுது முயற்சி செய்யாது விட்டால், ஒற்றைக் கிரீடத்தைக் கூடப் பெற மாட்டீர்கள். குழந்தைகள் இங்கு வரும்பொழுது, அவர்கள் தங்கள் நேரத்தை வீணாக்கக்கூடாது. இங்கு வேறு எதுவும் இல்லை. உங்கள் ஞாபகார்த்தமாகிய, தில்வாலா ஆலயம் உள்ளது. நீங்கள் சென்று, அதனைப் பார்க்க முடியும். மேலே, கூரையில், சுவர்க்கம் காட்டப்பட்டுள்ளது. உங்களுடைய விருட்சத்தின் படமும் மிகவும் தெளிவாக உள்ளது. நீங்கள் இராஜயோகத்தைச் செய்தவாறு அதன் கீழே அமர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு மேலே இராச்சியம் உள்ளது. அது முற்றிலும் தில்வாலா ஆலயத்தைப் போன்றே இருக்கிறது. சிவபாபா உங்களுக்கு மீண்டும் ஒருமுறை இந்த ஞானத்தைக் கொடுத்து, உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தக் கலியுகம் அழிக்கப்பட உள்ளது. ஆதிதேவரும், ஆதிநாதரும் யார்? நீங்கள் அனைவருடைய தொழிலையும் அறிவீர்கள். இந்நேரத்தில் நீங்கள் பேசுகின்ற விடயங்கள் பின்னர் பக்தி மார்க்கத்தில் தொடர்கின்றன. நீங்கள் கடைப்பிடிக்கின்ற விழாக்கள், விரதங்கள் அனைத்தும் இந்நேரத்தையே குறிக்கின்றன. மன்மனாபவவே உண்மையான விரதமாகும். எவ்வாறாயினும், உணவின்றி அல்லது நீரின்றி இருப்பது உண்மையில் ஒரு விரதமல்ல. இந்நேரத்தில், உலகில் மாயையின் பெரும் பகட்டுள்ளது. முன்னர், இங்கு மின்சாரமும், வாயுவும் இருக்கவில்லை; அவை அனைத்தும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டவை. அவை சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டன. மக்கள் அவ்விடயங்களில் முழுமையாகவே அகப்பட்டு விட்டனர். இதுவே தங்களுக்குச் சுவர்க்கம் என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் தந்தையை முற்றிலும் நினைவு செய்யாத வகையில், மாயையின் விசை அதிகளவுக்கு உள்ளது. அவர்கள் கூறுகிறார்கள்: எவ்வாறு நாங்கள் இப்பொழுது சுவர்க்கத்தில் இருக்கிறோம் என்பதை வந்து பாருங்கள். சுவர்க்கத்துடன் ஒப்பிடும் பொழுது, அவற்றில் எதுவுமே இல்லை. சுவர்க்கத்துக்கும், நரகத்துக்கும் இடையில் அதிகளவு வேறுபாடு உள்ளது. சுவர்க்கத்திலுள்ள ஒரு விடயமேனும் இங்கு இருக்க முடியாது. அங்கு, அனைத்தும் சதோபிரதானாக இருக்கும். பசுக்களும் முதற்தரமானவையாக இருக்கும். நீங்களும் முதற்தரமானவர்கள் ஆகுவதனால், உங்கள் தளபாடங்கள், உணவு, பானம், போன்றவையும் முதற்தரமானதாக இருக்கும். நீங்கள் சூட்சும லோகத்தில் பழத்தைப் பார்த்த பின்னர் திரும்பி வருகிறீர்கள். அதற்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயரே சுபிராஸ் (மாம்பழச் சாறு) ஆகும். சுவர்க்கம் எங்கே உள்ளது என்பதைக் கூட உலக மக்கள் அறியார்கள். அங்கு, அனைத்தும் சதோபிரதானாக உள்ளது. அங்கு, தூசு போன்ற எதுவும் இருப்பதில்லை. அங்கு துன்பம் எதுவும் இருப்பதில்லை. எவ்வாறாயினும், பாபாவே தங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குவதற்கு இந்தக் கல்வியைக் கற்பிக்கிறார் எனும் போதை சில குழந்தைகளுக்கு இன்னமும் இருப்பதில்லை. படங்கள் மிகவும் தெளிவானவை! படங்களை உருவாக்குவதற்குக் காலம் எடுக்கிறது. சேவை செய்வதற்காக பாபா தொடர்ந்தும் அனைத்தையும் உருவாக்கி உள்ளார். எவ்வாறாயினும், சிலர் பாபாவை நினைவு கூட செய்யாதபடிக்குத் தங்கள் வியாபாரம் போன்றவற்றில் நன்றாக அகப்பட்டுக் கொண்டுள்ளார்கள். கண்காட்சிப் படங்களின் சஞ்சிகை ஒன்று உள்ளது. நீங்கள் அதனையும் வாசிக்க வேண்டும். கீதையை ஒழுங்காகக் கற்று வரும் மாணவர்கள், தாங்கள் எங்கு சென்றாலும் கீதையைக் கற்பார்கள். நீங்கள் இப்பொழுது உண்மையான கீதையைப் படங்களுடன் கண்டுகொண்டு விட்டீர்கள். இப்பொழுது நீங்கள் மிகச்சிறந்த முயற்சியைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர இயலாதிருக்கும். உங்களுக்குக் காட்சிகள் கொடுக்கப்படும்பொழுது, நீங்கள் விரக்தியில் கதறி அழுவீர்கள். பரீட்சைகள் முடிவடைந்த பின்னர், அவர்கள் சென்று, அடுத்த வகுப்பில் வரிசைக்கிரமமாக அமர்கிறார்கள். இங்கும், காட்சிகள் அனைத்தும் கொடுக்கப்படும் பொழுது, நீங்கள் சென்று உருத்திர மாலையிலும், பின்னர் வெற்றி மாலையிலும் வரிசைக்கிரமமாகக் கோர்க்கப்படுவீர்கள். பாடசாலையில் மாணவர்கள் சித்தி எய்தாத பொழுது, அதிகளவு துன்பத்தை உணர்கிறார்கள். உங்களுடைய பேரம் ஒவ்வொரு கல்பத்துக்கும் உரியது. சில குழந்தைகள் முற்றாகவே சஞ்சிகைகளை வாசிப்பதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் சஞ்சிகைகளை வாசித்துச் சேவை செய்ய வேண்டும். சிலர் எழுதுகிறார்கள்: பாபா, இவரை வேறு எங்கேயாவது அனுப்பி விட்டு, இங்கு எங்களுக்கு ஓர் சிறந்த ஆசிரியரை அனுப்புங்கள். அவர்கள் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கான அன்பை விருத்தி செய்து கொள்கிறார்கள். தங்களுடைய ஆசிரியர் மாற்றப்பட்டதும், அவர்கள் நிலைதளர்ந்து போய், நிலையத்துக்குச் செல்வதை நிறுத்தி விடுகிறார்கள். நீங்கள் தவறான எதனையாவது செய்தால், பாபாவுக்கு உடனடியாகவே அதனைப் பற்றி உண்மையுடன் எழுதுவதனால், அந்தப் பாவத்தின் தாக்கம் குறைக்கப்படுகிறது. இல்லாவிட்டால், அது தொடர்ந்தும் அதிகரிக்கும். பாபா உங்களைச் சீர்திருத்துவதற்காகக் கூறுகிறார், ஆனால் உங்களிற் சிலர் சீர்திருத்தப்பட விரும்பாததனால், நீங்கள் பாவச் செயல்களைச் செய்வதை நிறுத்துவதில்லை. அது அவர்களின் பாக்கியத்தில் இல்லாவிட்டால், அவர்கள் பாபாவுக்குத் தங்களின் செய்தியை நேர்மையாகக் கொடுக்க மாட்டார்கள். பாபா ஒருவரைப் பற்றிய அறிக்கை ஒன்றைப் பெறும்பொழுது, அவர் அந்நபரைச் சீர்திருத்த முயற்சிக்கிறார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சரீரமற்றவர்கள் ஆகுவதைப் பயிற்சி செய்யுங்கள். தவறான விடயங்கள் எதனையும் கூற வேண்டாம். மிகவும் இனிமையானவர்கள் ஆகுங்கள். எதனைப் பற்றியும் குழப்பம் அடையாதீர்கள்.

2. முரளியை நினைவுசெய்து, நீங்கள் செவிமடுக்கின்ற ஞானக்கடலைக் கடையுங்கள். மன்மனாபவ என்னும் விரதத்தை மேற்கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சதா சரீர உணர்வில் இருந்தும் சரீரங்களின் துர்நாற்றத்தில் இருந்தும் அப்பால் விலகி இருப்பதன் மூலம் இந்திரப்பிரஸ்தில் (இந்திரசபை) வசிப்பவர் ஆகுவீர்களாக.

மனிதர்கள் எவருமன்றி, தேவதைகள் மட்டுமே இந்திரப்பிரஸ்தில் வசிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. ஒரு மனிதன் என்றால் தன்னை ஓர் ஆத்மாவெனக் கருதாமல் ஒரு சரீரம் எனக் கருதுபவர் என்று அர்த்தம். எனவே, சதா சரீர உணர்வு, சரீரங்களின் பழைய உலகம், பழைய உறவுமுறைகளில் இருந்து அப்பால் பறந்து கொண்டிருங்கள். ஒரு மனிதராக இருக்கும் துர்நாற்றம் சிறிதளவேனும் இருக்கக்கூடாது. ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள். இந்த ஞானம் மற்றும் யோகத்தின் இறக்கைகள் பலமானதாக இருக்க வேண்டும். அப்போது நீங்கள் இந்திரப்பிரஸ்தவாசி என்று அழைக்கப்படுவீர்கள்.

சுலோகம்:
தமது சரீரம், மனம், செல்வத்தைத் தகுதியான முறையில் பயன்படுத்தி, தமது பொக்கிஷங்கள் அனைத்தையும் அதிகரிப்பவர்கள் மட்டுமே விவேகிகள் ஆவார்கள்.

அவ்யக்த சமிக்ஞை: தந்தை பிரம்மாவைப் போல், சம்பூரணமான, முழுமையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

முழுமை என்பது வரிசைக்கிரமமாகவே இருக்கும். மாலையில் 108 மணிகள் உள்ளன. முதல் மணியும் 108 ஆம் மணியும் முழுமையானவர்கள், அதாவது வெற்றி இரத்தினங்கள் எனப்படுவார்கள். வெற்றி இரத்தினம் என்றால், அவர் தனது இலக்கத்திற்கு ஏற்ப முழுமையை அடைந்திருப்பார். அவருக்கு, முழு நாடகத்திலும் அதுவே முதல் நிலையாக இருக்கும்.