12.12.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்ற, கல்வியை கற்பதன் மூலம் ஓர் எல்லையற்ற வருமானம் சம்பாதிக்கப்படவுள்ளது. ஆகவே, தொடர்ந்தும் நன்றாகக் கற்பதுடன் உங்கள் கல்வியுடனான இந்த இணைப்பு துண்டிக்கப்படுவதை ஒருபொழுதும் அனுமதிக்க வேண்டாம்.

கேள்வி:
விநாசவேளையில், அன்பற்ற புத்தியுடையவர்கள் உங்களுடைய எந்த விடயங்களைப் பார்த்து நகைக்கின்றார்கள்?

பதில்:
விநாசவேளை மிகவும் அண்மித்து விட்டது என்று நீங்கள் அவர்களிடம் கூறும்பொழுது, அவர்கள் உங்களைப் பார்த்து நகைக்கிறார்கள். தந்தை தொடர்ந்தும் இங்கு இருக்க மாட்டார் என்பது உங்களுக்குத் தெரியும். உங்களைத் தூய்மையாக்குவது தந்தையின் கடமையாகும். நீங்கள் தூய்மையாகியதும், இப்பழைய உலகம் அழிக்கப்பட்டுப் புதிய உலகம் உருவாகும். உங்கள் முன்னிலையில் உள்ள யுத்தம் விநாசத்துக்கானதாகும். நீங்கள் தேவர்களாக இருக்கும்பொழுது, உங்களால் இந்தத் தீய கலியுக உலகிற்குள் பிரவேசிக்க முடியாது.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் முற்றிலும் விவேகமற்றவர்கள் ஆகினீர்கள் என்பதையும் இராவணனாகிய, மாயை உங்களை விவேகமற்றவர்கள் ஆக்கினாள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். புதிய உலகம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதால், தந்தை நிச்சயமாக இங்கு வரவேண்டும் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். “பிரம்மாவின் மூலம் படைப்பும், விஷ்ணுவின் மூலம் பராமரிப்பும், சங்கரரின் மூலம் விநாசமும்” என்று எழுதப்பட்டுள்ள திரிமூர்த்தியின் படம் (மூன்று தேவர்கள்) உள்ளது. ஏனெனில் தந்தை கரன்கரவன்கார் ஆவார். அவர் ஒருவரே செய்பவரும் ஏனையோரை செய்யத் தூண்டுபவரும் ஆவார். ஆகவே, முதலில் யாருடைய பெயரைப் போட வேண்டும்? செய்பவரின் பெயரே. அவர் யார் மூலமாகச் செயற்படுகிறாரோ அவர் பெயரின் முன்னால் வர வேண்டும். இதனாலேயே அவர் கரன்கரவன்கார் என்று அழைக்கப்படுகிறார். பிரம்மாவினூடாக அவர் புதிய உலகை ஸ்தாபிக்கிறார். இப்பொழுது ஸ்தாபிக்கப்பட்டு வருகின்ற, எங்கள் புதிய உலகமானது, தேவ உலகம் என்று அழைக்கப்படுகிறது என்பது குழந்தைகளாகிய உங்களுக்கும் தெரியும். சத்தியயுகத்தில் மட்டுமே தேவர்கள் இருக்கிறார்கள். வேறு எவரையும் தேவர்கள் என்று அழைக்க முடியாது. அங்கு சாதாரண மனிதர்கள் இருப்பதில்லை. அங்கு தேவதர்மம் மாத்திரமே அல்லாது, வேறு சமயங்கள் எவையும் கிடையாது. உண்மையில் நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள் என்பது இப்பொழுது உங்கள் உள்ளுணர்வில் உள்ளது. அதற்கான அடையாளங்களும் உள்ளன. இஸ்லாமியர்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் தங்கள் சொந்த அடையாளங்களைக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் இராச்சியத்தை நாங்கள் ஆட்சிசெய்தபொழுது, அங்கு வேறு எந்தச் சமயங்களும் இருக்கவில்லை, ஆனால் தற்பொழுதோ ஏனைய அனைத்துச் சமயங்களும் இருந்த போதிலும் தேவதர்மம் இல்லை. கீதையில் பல நல்ல வார்த்தைகள் உள்ளன, ஆனால் மக்கள் அதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. தந்தை கூறுகிறார்: விநாசவேளையில், அன்பற்ற புத்தி உள்ளவர்களும் அன்பான புத்தி உள்ளவர்களும் இருக்கிறார்கள். விநாசம் இவ்வேளையில் நடைபெற வேண்டும். தந்தை மாற்றம் நடைபெறுகின்ற, சங்கமயுகத்தில் வருகிறார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்குப் பிரதிபலனாக, அனைத்தையும் புதிதாகக் கொடுக்கிறார். அவர் பொற்கொல்லரும், சலவை செய்பவரும், வியாபாரியும் ஆவார். மிகச் சில குழந்தைகளே தந்தையுடன் இவ்வியாபாரத்தைச் செய்கிறார்கள். இவ்வியாபாரத்தில் அதிகளவு இலாபம் ஈட்டப்படவுள்ளது. கற்பதன் மூலமும் அதிகளவு வருமானம் ஈட்ட முடியும். ஒரு கூற்று உள்ளது: “ஞானம் வருமானத்துக்கான மூலாதாரம்”. அது பிறவி பிறவியாக நீடிக்கும் ஒரு வருமானம் ஆகும். ஆகவே, நீங்கள் இந்த ஞானத்தை மிக நன்றாகக் கற்க வேண்டும். நான் உங்களுக்குக் கற்பிக்கின்ற ஞானம் மிகவும் இலகுவானதாகும். நீங்கள் அனைத்தையும் செவிமடுத்து, அதை ஏழு நாட்களுக்குப் புரிந்து கொண்ட பின்னர் நீங்கள் விரும்பிய இடத்திற்குச் செல்லலாம். தொடர்ந்தும் உங்களுக்கு இக்கல்வி அனுப்பப்படும். நீங்கள் தொடர்ந்தும் ஒவ்வொரு முரளியையும் பெறுவதால், ஒருபொழுதும் உங்கள் கற்றலின் இணைப்பு துண்டிக்கப்படுவதில்லை. இந்த இணைப்பு பரமாத்மாவுடன் ஆத்மாக்களுக்குரிய இணைப்பாகும். “விநாசவேளையில் தங்கள் புத்திகளில் அன்பற்றவர்கள் அழிக்கப்படுவதுடன், ஆனால், தங்களில் புத்திகளில் அன்பு உள்ளவர்கள் வெற்றியடைகிறார்கள்” எனும் கூற்று கீதையில் உள்ளது. தற்சமயம், மனிதர்கள் அனைவரும் தொடர்ந்தும் ஒருவர் மற்றவருக்குத் துன்பம் கொடுக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது அவர்களுக்கு உள்ளதைப் போன்று, அதிகளவு விகாரமோ அல்லது கோபமோ எவருக்கும் இருப்பதில்லை. திரௌபதி கடவுளை வருந்தி அழைத்தது நினைவுகூரப்பட்டு வருகின்றது. நீங்கள் அனைவரும் திரௌபதிகள் என்று தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். இவையே கடவுளின் வாசகங்கள் ஆகும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, விகாரத்தில் ஈடுபட வேண்டாம். நான் உங்களைச் சுவர்க்கத்துக்கு அழைத்துச் செல்கின்றேன். உங்கள் தந்தையான, என்னை நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். இப்பொழுது விநாசவேளை ஆகும். ஆகவே, எவரும் எவர் கூறுவதையும் கேட்பதில்லை. ஆனால், அனைவரும் தொடர்ந்து ஒருவரோடொருவர் சண்டையிடுகிறார்கள். நீங்கள் அமைதியாக இருக்குமாறு அவர்களுக்கு எவ்வளவுதான் கூறினாலும், அவர்கள் அமைதியாக இருப்பதில்லை. அவர்கள் தமது குழந்தைகளையும் பிரிந்து, யுத்தத்துக்குச் செல்கிறார்கள். தொடர்ந்தும் பலர் இறக்கிறார்கள். மனிதர்களுக்குப் பெறுமதி கிடையாது. எந்தப் பெறுமதியும், எந்தப் புகழும் தேவர்களுக்கே உரியதாகும். நீங்கள் அவர்களைப் போன்று ஆகுவதற்கு இப்பொழுது முயற்சி செய்கிறீர்கள். உண்மையில், தேவர்களின் புகழை விடவும் உங்கள் புகழ் மிகவும் மகத்தானதாகும். அத்தகையதொரு மேன்மையான கல்வியை இப்பொழுது தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். தங்களின் பல பிறவிகளின் இறுதியில் இருப்பவர்களும் முற்றிலும் தமோபிரதான் ஆகிவிட்டவர்களுமே, கற்றுக் கொண்டிருக்கிறார்கள். எவ்வாறாயினும், நான் எப்பொழுதும் சதோபிரதானாகவே இருக்கின்றேன். தந்தை கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களின் மிகவும் பணிவுள்ள சேவகனாக வந்திருக்கின்றேன். இதைப் பற்றிச் சிந்தியுங்கள். நீங்கள் மிகவும் அழுக்காகவும், அவலட்சணமாகவும் ஆகியுள்ளீர்கள்! தந்தை மாத்திரமே உங்களைச் சுத்தமாகவும் அழகாகவும் ஆக்குவதற்காக வந்திருக்கின்றார். கடவுள் இங்கமர்ந்து மனிதர்களாகிய உங்களுக்குக் கற்பித்து உங்களை மிகவும் மேன்மையாக்குகிறார். தந்தையே கூறுகிறார்: நான் உங்களுடைய பல பிறவிகளின் இறுதியில் வந்து உங்கள் அனைவரையும் முழுமையாகத் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆக்குகிறேன். நான் இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்றேன். தந்தை கூறுகிறார்: நான் உங்களைச் சுவர்க்கவாசிகள் ஆக்கினேன். நீங்கள் எப்படி நரகவாசிகள் ஆகினீர்கள்? உங்களை இவ்வாறு ஆக்கியது யார்? விநாசத்தின் போது அன்பற்ற புத்தியுள்ளவர்கள் அழிக்கப்படுகிறார்கள் என்றும் விநாசத்தின் போது அன்பான புத்தியுள்ளவர்கள் வெற்றி ஈட்டுகின்றார்கள் என்றும் ஒரு கூற்றுள்ளது. உங்கள் புத்தி அன்பைக் கொண்டிருக்கும் அளவிற்கு, அதாவது, நீங்கள் எந்தளவிற்கு ஆழமாக நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் நன்மையைப் பெறுவீர்கள். இதுவே அந்த யுத்தகளம் ஆகும். கீதையில் குறிப்பிடப்பட்டுள்ள யுத்தம் எது என்பது எவருக்கும் தெரியாததால், கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் மத்தியிலான யுத்தம் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். கௌரவ சமுதாயமும் பாண்டவ சமுதாயமும் உள்ளன, ஆனால் அவர்கள் மத்தியில் யுத்தம் எதுவும் கிடையாது. தந்தையை அறிந்தவர்களும் தந்தை மீது அன்பான புத்திகளைக் கொண்டவர்களுமே பாண்டவர்கள் ஆவர். தங்கள் தந்தை மீது அன்பற்ற புத்தியுள்ளவர்களே கௌரவர்கள் ஆவார்கள். இவ்வார்த்தைகள் மிகவும் சிறந்தவையும் புரிந்துகொள்வதற்குப் பெறுமதியானவையும் ஆகும். இப்பொழுது சங்கமயுகம் ஆகும். இப்பொழுது புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகிறது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் அனைத்து விடயங்களையும் புரிந்துகொள்வதற்கு உங்கள் புத்திகளைப் பயன்படுத்த வேண்டும். இப்பொழுது உலகம் அதிகளவு வளர்ந்துள்ளது. சத்தியயுகத்தில் மிகச்சொற்ப மனிதர்களே இருப்பார்கள். விருட்சம் முதலில் சிறியதாக இருந்து பின்னர் அவ்விருட்சம் பெரியதாக வளர்கிறது. இதுவே மனித உலகின் தலைகீழ் விருட்சம் என்பதை எவரும் புரிந்துகொள்வதில்லை. அது கல்ப விருட்சம் எனவும் அழைக்கப்படுகிறது. உங்களுக்கு இவ்விருட்சத்தின் ஞானம் இருப்பது அவசியமாகும். ஏனைய அனைத்து விருட்சத்தின் ஞானம் புரிந்துகொள்வதற்கு மிகவும் இலகுவானது, விரைவிலேயே நீங்கள் அதைப் பற்றிப் பேச முடியும். இவ்விருட்சத்தின் ஞானமும் இலகுவானதாகும். எவ்வாறாயினும், இவ்விருட்சமே மனித விருட்சம் ஆகும். தங்கள் சொந்த விருட்சத்தின் ஞானம் மனிதர்களுக்குக் கிடையாது. கடவுளே படைப்பவர் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆகவே, அவர் நிச்சயமாக உயிர்வாழ்பவர் ஆவார். தந்தையே சத்தியமும், உயிர்வாழ்பவரும், ஞானக்கடலும் ஆவார். அவர் எந்த ஞானத்தைக் கொண்டிருக்கிறார் என்பதை எவரும் புரிந்துகொள்வதில்லை. உயிர்வாழ்பவராகிய, தந்தையே விதை ஆவார். படைப்புக்கள் அனைத்தும் அவரால் படைக்கப்படுகின்றன. தங்கள் சொந்த விருட்சத்தைப் பற்றி மனிதர்களுக்குத் தெரியாது, ஆனால் அவர்களுக்கு ஏனைய விருட்சங்களைப் பற்றி மிக நன்றாகத் தெரியும் எனத் தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். அவ்விருட்சங்களின் விதைகள் உயிருடன் இருந்திருந்தால், அவை உங்களுக்குத் தங்களைப் பற்றிக் கூறும், ஆனால் அவை உயிரற்ற விருட்சங்கள் ஆகும். படைப்பவரினதும் படைப்பினதும் இரகசியங்கள் இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவரே சத்தியமும், உயிர்வாழ்பவரும், ஞானக்கடலும் ஆவார். அவர் உயிர்வாழ்பவர் எனும் காரணத்தினால், அவரால் உங்களுடன் பேச இயலும். மனித சரீரம் மிகவும் பெறுமதிமிக்கது எனவும் அதன் பெறுமதியை வார்த்தைகளில் போடுவது சாத்தியமல்ல எனவும் கூறப்பட்டுள்ளது. தந்தை இங்கமர்ந்திருந்து இவ்விடயங்களை ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் ரூப் பசந்த் (ஞான இரத்தினங்களை பொழிபவரான ஒரு யோகி சொரூபம்) ஆவீர்கள். தந்தையே ஞானக்கடல் ஆவார். நீங்கள் அவரிடமிருந்து இந்த இரத்தினங்களைப் பெறுகிறீர்கள். இந்த இரத்தினங்களே ஞான இரத்தினங்கள், இந்த இரத்தினங்களை எடுத்துக் கொள்வதினூடாக, ஏனைய இரத்தினங்களை நீங்கள் ஏராளமாகப் பெறுகிறீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் எவ்வளவு இரத்தினங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்! அவர்கள் வைரங்களும் இரத்தினங்களும் பதிக்கப்பட்ட மாளிகைகளில் வசிக்கிறார்கள். அதன் பெயரே சுவர்க்கம், நீங்கள் அதன் அதிபதிகள் ஆகுகிறீர்கள். ஓர் ஏழை திடீரென்று ஓர் அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வெல்லும்பொழுது, அவருக்குப் பித்துப் பிடிக்கிறது. தந்தை கூறுகிறார்: நீங்கள் உலக இராச்சியத்தைப் பெறுவதால், மாயை உங்களுக்கு அதிகளவு எதிர்ப்பை ஏற்படுத்துகிறாள். நீங்கள் மேலும் முன்னேறுகையில், எவ்வாறு மாயை மிகவும் சிறந்த குழந்தைகளைக் கூட விழுங்குகிறாள் என்பதைப் பார்ப்பீர்கள். அவள் அவர்களை முற்றாகவே விழுங்குகிறாள். எவ்வாறு பாம்புகள் தவளைகளைப் பிடிக்கின்றன என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பெரிய முதலை யானையை முழுமையாக உண்டுவிடுவதைப் போன்று, பாம்பும் முழுத் தவளையையும் விழுங்கிவிடுகிறது. மாயையும் அவ்வாறானவளே - அவள் குழந்தைகளை உயிருடன் பிடித்து அவர்களை முழுமையாக முடித்து விடுவதனால், அவர்கள் ஒருபொழுதுமே தந்தையின் பெயரை மீண்டும் குறிப்பிடுவதே இல்லை. உங்களிடம் மிகக் குறைவான யோக சக்தியே உள்ளது. அனைத்தும் யோகசக்தியிலேயே தங்கியுள்ளன. பாம்பு தவளையை விழுங்குவதைப் போன்று, குழந்தைகளாகிய நீங்கள் முழு இராச்சியத்தையும் விழுங்குகிறீர்கள். ஒரு விநாடிக்குள், முழு உலக இராச்சியத்தையும் உங்களால் கோர முடியும். தந்தை உங்களுக்குப் பின்பற்றுவதற்குப் பல்வேறு இலகு வழிகளைத் கொடுக்கிறார். உங்களிடம் எந்த ஆயுதங்களும் கிடையாது. ஞானம், யோகம் என்னும் ஆயுதங்கள் மூலம் தந்தை உங்களை அலங்கரிக்கிறார். அதனாலேயே தேவர்கள் பௌதீக ஆயுதங்களுடன் சித்தரிக்கப்படுகிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் கூறுகிறீர்கள்: ‘நாங்கள் முன்னர் இருந்த நிலையிலிருந்து இப்போது என்னவாக ஆகியுள்ளோம் என்று பாருங்கள்! நீங்கள் விரும்பியதைக் கூறுங்கள், அவ்வாறே நாங்கள் இருந்தோம் என்பது எங்களுக்குத் தெரியும்.’ நீங்கள் மனிதர்களாக இருந்தாலும், உங்களுக்குச் சில நற்குணங்களும் குறைபாடுகளும் உள்ளன. தேவர்களுக்கு மட்டுமே தெய்வீகக் குணங்கள் உள்ளன. இதனாலேயே மக்கள் அவர்களின் விக்கிரகங்களின் முன்னால் புகழ் பாடுகிறார்கள்: ‘நீங்கள் நற்குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்களும், முழுமையாக விகாரமற்றவர்களும் ஆவீர்கள். ஆனால், நாங்கள் முழுமையாகவே நற்குணமற்றவர்கள், எங்களிடம் முற்றிலும் நற்குணம் கிடையாது’. தற்பொழுது, முழு உலகின் சனத்தொகையினருக்கும் முற்றிலும் நற்குணம் கிடையாது. ஒரு தெய்வீகக் குணமேனும் உள்ள எவரும் கிடையாது என்பதே இதன் அர்த்தமாகும். தெய்வீகக் குணங்களைக் கற்பிப்பவராகிய தந்தையை அவர்களுக்குத் தெரியாததால், விநாசவேளையில் அன்பற்ற புத்திகளைக் கொண்டவர்கள் என்று அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். புதிய உலகம் உருவாக்கப்பட்டு, பழைய உலகம் அழிக்கப்படுகின்ற சங்கமயுகத்தின் போது விநாசம் இடம்பெற வேண்டும். இதுவே விநாச காலம் என்று அழைக்கப்படுகிறது. இதுவே இறுதி விநாசம் ஆகும். பின்னர் அரைக் கல்பத்துக்குப் யுத்தங்கள் இருக்காது. அம்மக்களுக்கு எதுவும் தெரியாது. விநாசவேளையில் அன்பற்ற புத்தியுடையவர்கள் இருக்கும் வரையில், நிச்சயமாகப் பழைய உலகின் விநாசமும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும். இப்பழைய உலகில் பல்வேறு அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன. மக்கள் தொடர்ந்தும் மரணிக்கிறார்கள். தந்தை உங்களுக்கு நிகழ்கால உலக நிலையைக் கூறுகிறார். பாரதத்தின் இன்றைய நிலைக்கும் பாரதத்தின் நாளைய நிலைக்கும் இடையில் ஒரு பாரிய வித்தியாசம் உள்ளது. இன்றைய நிலை எவ்வாறுள்ளது என்பதை நீங்கள் பார்க்கின்றீர்கள், ஆனால் நாளையோ நீங்கள் எங்கிருப்பீர்கள்? ஆரம்பத்தில் புதிய உலகம் மிகவும் சிறியதாக இருக்கிறது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அங்குள்ள மாளிகைகளில் பல வைரங்களும் இரத்தினங்களும் பதிக்கப்பட்டுள்ளன. பக்தி மார்க்கத்திலுள்ள உங்கள் ஆலயங்களும் குறைந்தன அல்ல. சோமநாத்துக்கு ஓர் ஆலயம் மட்டும் இருக்காது. ஒருவர் மாதிரிக்காக ஓர் ஆலயத்தைக் கட்டியிருப்பார். பின்னர் ஏனையோர்கள் அதைப் பார்த்து, மேலும் பல ஆலயங்களைக் கட்டுவார்கள். சோம்நாத் ஆலயத்திலிருந்து அதிகளவு கொள்ளையிடப்பட்டன. பின்னர், அவர்கள் அமர்ந்து தங்கள் சொந்த ஞாபகார்த்தங்களை உருவாக்கினார்கள். அவர்கள் சுவர்களில் இரத்தினங்களைப் பதித்தார்கள். அந்த இரத்தினங்கள் என்ன பெறுமதியைக் கொண்டிருந்திருக்கும்? ஒரு சிறிய வைரத்துக்குக் கூட இப்பொழுது அதிக பெறுமதி உள்ளது. பாபா வைர வியாபாரியாக இருந்தபொழுது, வைரத்தின் ஒரு ராட்டி கூட (11 ராட்டிகள் ஒரு கிராம் ஆகும்) 90 ரூபாய்கள் பெறுமதி உடையது. அது இப்பொழுது ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியாக உள்ளது. இப்பொழுது ஒரு வைரத்தைக் காண்பதே கஷ்டமாக உள்ளது. அவற்றின் பெறுமதி அதிகளவு அதிகரித்துவிட்டது. தற்பொழுது வெளிநாடுகளில் அதிகளவு செல்வம் உள்ளது. சத்தியயுகத்துடன் ஒப்பிட்டால், வெளிநாடுகளில் உள்ள தற்போதைய செல்வம் அனைத்தும் எதுவுமே இல்லை. தந்தை கூறுகிறார்: இவ்விநாச வேளையில் இப்பொழுது அவர்கள் அனைவருக்கும் அன்பற்ற புத்திகள் உள்ளன. விநாசவேளை அண்மையில் உள்ளது என்று நீங்கள் மக்களுக்குக் கூறும்பொழுது, உங்களைப் பார்த்து அவர்கள் நகைக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: எவ்வளவு காலத்துக்கு நான் இங்கு அமர்ந்திருக்க முடியும்? இங்கு அமர்ந்திருப்பதில் எனக்குச் சந்தோஷம் கிடையாது. நான் சந்தோஷத்தை அனுபவம் செய்வதுமில்லை, துன்பத்தை அனுபவம் செய்வதுமில்லை. உங்களைத் தூய்மையாக்குவதே என்னுடைய கடமை ஆகும். நீங்கள் அவ்வாறு இருந்தீர்கள், இப்பொழுது இவ்வாறு ஆகிவிட்டீர்கள்! அவர்களைப் போன்று இப்பொழுது நீங்கள் மேன்மையாக வேண்டும். நீங்கள் அவர்களைப் போன்றவர்கள் ஆகப் போகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் தேவ குலத்தின் அங்கத்தவர்களாக இருந்தீர்கள் என்பதையும் உங்களுக்கான இராச்சியத்தைக் கொண்டிருந்தீர்கள் என்பதையும் நீங்கள் இராச்சியத்தை இழந்ததால், ஏனைய இராச்சியங்கள் உருவாகின என்பதையும் இப்பொழுது நீங்கள் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். இப்பொழுது கல்பம் ஒரு முடிவுக்கு வருகிறது. இச்சக்கரம் நூறாயிரக்கணக்கான வருடங்களுக்கான விடயமல்ல என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். இந்த யுத்தம் விநாசத்துக்கானதாகும். நீங்கள் அங்கு இருக்கும்பொழுது, நீங்கள் பெரும் சௌகரியத்தில் மரணிப்பீர்கள். எது எப்படியிருப்பினும் அங்கு சிரமம் இருக்காது. அங்கு வைத்தியசாலைகள் போன்றன எவையும் இருக்காது. யார் அங்கு வேலை செய்து ஏனையோர்களுக்குச் சேவை செய்வார்கள் அல்லது அழப் போகிறார்கள்? அங்கு இச்சம்பிரதாயம் இருப்பதில்லை. அங்கு, மரணம் மிகவும் இலகுவாக இடம்பெறும். இங்கு, மக்கள் மரணிக்கும்பொழுது, அதிகளவு துன்பத்தை அனுபவம் செய்கிறார்கள். நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைப் பார்த்துள்ள காரணத்தினால், அதிகளவு துன்பத்தையும் பார்க்க வேண்டும். இங்கேயே இரத்த ஆறுகள் பாயும். இந்த யுத்தம் கட்டுப்படுத்தப்படும் என்று அவர்கள் நினைக்கின்றார்கள், ஆனால் அவ்வாறு கட்டுப்படுத்தப்பட மாட்டாது. “வேடனுக்குக் கொண்டாட்டமும் இரைக்குத் திண்டாட்டமும்” என்னும் கூற்று உள்ளது. நீங்கள் தேவர்களாக இருக்கும்பொழுது, உங்களால் அழுக்கான, கலியுக உலகிற்குள் பிரவேசிக்க முடியாது. கீதை கூறுகிறது: ‘கடவுள் பேசுகிறார்: நீங்கள் விநாசத்தையும் ஸ்தாபனையையும் பார்க்க வேண்டும்’. உங்களில் சிலர் இதன் ஒரு காட்சியைக் கொண்டிருந்தீர்கள், இல்லையா? இறுதியில் இன்ன இன்னார் என்னவாக ஆகுவார்கள் என்னும் காட்சிகள் உங்களுக்குக் கிடைக்கும். பின்னர், அக்கணத்தில் அவர்கள் அழுது, பெருமளவு வருந்தி, அதிகளவு தண்டனையை அனுபவம் செய்வார்கள். அவர்கள் தங்கள் பாக்கியத்தையிட்டு அழுவார்கள் (வருந்துவார்கள்). அந்நேரத்தில் உங்களால் என்ன செய்ய இயலும்? இது 21 பிறவிகளுக்கான ஓர் அதிர்ஷ்ட இலாபச் சீட்டு ஆகும். இவை அனைத்தையும் நீங்கள் நினைவுசெய்கிறீர்கள், இல்லையா? அவர் என்ன செய்தார் என்பதற்கான காட்சிகளைக் கொடுக்காமல், எவரும் தண்டனையை அனுபவம் செய்ய முடியாது. தீர்ப்பு மன்றம் கூடும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஞான இரத்தினங்களைக் கிரகித்து, ரூப் பசான்ட் ஆகுங்கள். உலக இராச்சியமாகிய அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வெல்வதற்கு, உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஞான இரத்தினங்களைப் பயன்படுத்துங்கள்.

2. இவ்விநாசவேளையில், நீங்கள் தந்தைக்கான அன்பைக் கொண்டிருப்பதுடன், ஒருவரையே நினைவுசெய்வதில் நிலைத்திருக்க வேண்டும். உங்கள் பாக்கியத்தைப் பற்றி நீங்கள் இறுதியில் வருந்தி அழ நேரிடும் வகையில் நீங்கள் செயற்படக் கூடாது.

ஆசீர்வாதம்:
வெற்றியின் உத்தரவாதத்தைக் கொண்டிருப்பதன் மூலம் சதா அன்பானவர்களாகவிருந்து, பறக்கின்ற ஸ்திதியின் ஆசீர்வாதத்தைப் பெற்று கவலையற்றவர்களாக இருப்பீர்களாக.

அன்பான குழந்தைகள் பறக்கின்ற ஸ்திதியின் ஆசீர்வாதத்தை பாப்தாதாவிடமிருந்து பெற்றுள்ளார்கள். பறக்கின்ற ஸ்திதியினூடாக ஒரு விநாடியில் பாப்தாதாவிடம் செல்லும் போது, மாயை எந்த வடிவத்தில் தோன்றினாலும், அவளால் உங்களைத் தொடவேனும் முடியாது. கடவுளின் பாதுகாப்புக் குடையின் கீழ் மாயையின் நிழலும் கூட வர முடியாது. அன்பு, முயற்சியை களிப்பானதாக ஆக்குகின்றது. அன்பு, ஒவ்வொரு செயலிலும் வெற்றிக்கான உத்தரவாதத்தின் ஸ்திதிக்கான அனுபவத்தைக் கொடுக்கின்றது. அன்பான குழந்தைகள் ஒவ்வொரு கணத்திலும் கவலையற்றவர்களாகவே இருக்கின்றார்கள்.

சுலோகம்:
‘எதுவும் புதியது அல்ல’ என்ற விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம் சதா அசைக்க முடியாதவராக இருந்தால் நீங்கள் தொடர்ந்தும் சந்தோஷ நடனம் ஆடுவீர்கள்.