13.11.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் துன்பத்தைச் சகிப்பதில் பெருமளவு நேரத்தை வீணாக்கி விட்டீர்கள். இந்த உலகம் இப்பொழுது மாறுகின்றது. தந்தையை நினைவுசெய்து, உங்கள் நேரத்தை தகுதிவாய்ந்த வழியில் உபயோகித்தால் நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள்.

கேள்வி:
21 பிறவிகளுக்கான அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வெல்வதற்கு நீங்கள் எம் முயற்சியைச் செய்வது அவசியமாகும்?

பதில்:
21 பிறவிகளுக்கான அதிர்ஷ்ட இலாபச்சீட்டை நீங்கள் வெல்ல விரும்பினால், பற்றை வென்றவர் ஆகுங்கள். உங்களை முழுமையாகத் தந்தையிடம் அர்ப்பணியுங்கள். இப்பழைய உலகம் இப்பொழுது மாறுகின்றது, நாங்கள் புதிய உலகிற்குச் செல்கின்றோம் என்ற விழிப்புணர்வை எப்பொழுதும் கொண்டிருங்கள். இப்பழைய உலகைப் பார்க்கும் பொழுதும் அதைப் பார்க்காதீர்கள். குசேலர் (சுதாமா) செய்தது போல, உங்கள் கைப்பிடி அரிசியைத் தகுதிவாய்ந்த வழியில் பயன்படுத்தி, சத்தியயுக இராச்சியத்தைக் கோருங்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். “ஆன்மீகக் குழந்தைகள்” என்றால், ஆத்மாக்கள் என்றும், “ஆன்மீகத் தந்தை” என்றால் ஆத்மாக்களின் தந்தை என்றும் அர்த்தம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இது ஆத்மாக்களினதும், பரமாத்மாவினதும் சந்திப்பு என அறியப்படுகின்றது. இச்சந்திப்பு ஒருமுறை மாத்திரமே இடம்பெறுகின்றது. குழந்தைகளாகிய உங்களுக்கு இவ்விடயங்கள் அனைத்தும் தெரியும். இது தனித்துவமான விடயமாகும். சரீரமற்ற தந்தை சரீரமற்ற ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். உண்மையில் ஆத்மாக்கள் சரீரமற்றவர்கள், அவர்கள் இங்கு வரும்பொழுதே, சரீரத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். தங்கள் சரீரங்களின் மூலம் அவர்கள் தங்கள் பாகங்களை நடிக்கின்றனர். ஒவ்வொருவரிலும் ஓர் ஆத்மா உள்ளார். சகல மிருகங்களிலும் ஓர் ஆத்மா உள்ளது. அவர்கள் 8.4 மில்லியன் வகையான உயிரினங்கள் இருப்பதாகக் கூறுகின்றார்கள், அதனுள் மிருகங்கள் அனைத்தும் உள்ளடங்குகின்றன. பல மிருகங்கள் உள்ளன. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அந்த விடயங்களில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இந்த ஞானம் அற்றவர்கள் தொடர்ந்தும் தங்கள் நேரத்தைப் பெருமளவு வீணாக்குகின்றனர். இந்த வேளையில் தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார், பின்னர் அரைக்கல்பத்திற்கு நீங்கள் அதன் வெகுமதியை அனுபவம் செய்கின்றீர்கள். அங்கு உங்களுக்கு எந்தச் சிரமமும் இருக்காது. துன்பத்தைச் சகித்துக் கொள்வதில் உங்கள் நேரம் விரயமாக்கப்படுகின்றது. இங்கு துன்பத்தைத் தவிர வேறேதுவும் இல்லை. இதனாலேயே அனைவரும், ‘எங்கள் நேரம் துன்பத்தில் வீணாக்கப்படுவதால், எங்களை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள்!’ எனத் தந்தையை நினைவு செய்கின்றார்கள். உங்கள் நேரம் சந்தோஷத்தில் வீணாக்கப்படுகின்றது என நீங்கள் ஒருபொழுதும் கூறமாட்டீர்கள். இந்த நேரத்தில் மனிதர்களுக்கு எந்தப் பெறுமதியும் இல்லை என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். எவ்வாறு மக்கள் சடுதியாக மரணிக்கின்றனர் என்பதை நீங்கள் காண முடியும். ஒரு புயலில் எத்தனையோ பேர் மரணிக்கின்றார்கள். இராவண இராச்சியத்தில் மனிதர்களுக்கு எந்தப் பெறுமதியும் இல்லை. தந்தை இப்பொழுது உங்களுக்கு அதிகளவு பெறுமதியை வழங்குகின்றார். ஒரு சதப் பெறுமதியும் இல்லாத உங்களை ஒரு பவுண்ட் பெறுமதி உள்ளவர்களாக அவர் மாற்றுகின்றார். வைரம் போன்ற பிறப்பு, பெறுமதிமிக்கது என நினைவு கூரப்படுகின்றது. இந்நேரத்தில் மக்கள் சிப்பிகளைத் துரத்திச் செல்கின்றனர். ஒருவேளை, அவர்கள் மில்லியன்களை, பல மில்லியன்களை, பல பில்லியன்களை உடையவர்களாக ஆகலாம், அவர்களுடைய புத்திகள் முழுநேரமும் அதிலேயே மூழ்கியுள்ளது. இவை அனைத்தையும் மறந்து, ஒரேயொரு தந்தையை நினைவு செய்யும்படி அவர்களுக்குக் கூறப்படுகின்றது, ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை. முன்னைய கல்பத்தில் எவருடைய புத்திகளில் இது பதிந்துள்ளதோ, அவர்களுடைய புத்திகளிலேயே இது பதியும். இல்லையேல் நீங்கள் எவ்வளவு தான் விளங்கப்படுத்தினாலும் அவர்களுடைய புத்திகளில் இது பதியாது. இவ்வுலகம் மாற்றம் அடைகின்றது என்பதை நீங்கள் வரிசைக்கிரமமாகப் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் வெளியே ஒரு பெயர்ப்பலகையில் ‘உலகம் மாற்றம் அடைகின்றது’ என்று எழுதினாலும், நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தும் வரை, அவர்கள் இதைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். சரி. ஒருவர் அதனைப் புரிந்துகொண்டு விட்டால் நீங்கள் பின்னர் அவருக்கு விளங்கப்படுத்த வேண்டும்: தந்தையை நினைவுசெய்து, சதோபிரதான் ஆகுங்கள். இந்த ஞானம் மிகவும் இலகுவானது. இது சூரியவம்சம், இது சந்திரவம்சம்… என்று இவ்வாறு தொடரும். இப்பொழுது இவ்வுலகம் மாற்றம் அடைகின்றது, ஒரேயொரு தந்தையே இதனை மாற்றுபவர். இதை நீங்கள் துல்லியமாக அறிவீர்கள். அதுவும் உங்கள் முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாகவே உள்ளது. நீங்கள் முயற்சி செய்வதை மாயை அனுமதிப்பதில்லை. அதனால் நாடகத்திற்கேற்ப உங்களால், அதிகளவு முயற்சி செய்ய முடியவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், நீங்கள் உங்களுக்காகவே இவ்வுலகை மாற்றுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். ஸ்ரீமத் என்பது ஒரேயொரு சிவபாபாவிடம் இருந்தே பெறப்படுகின்றது. “சிவபாபா சிவபாபா” என்று கூறுவது மிக இலகுவாகும். வேறு எவரும் சிவபாபாவையோ அல்லது ஆஸ்தியையோ அறியார்கள். ‘பாபா’ என்பது ஆஸ்தியாகும். உண்மையான சிவபாபா இருக்கவே வேண்டும். இந்நாட்களில் ஒரு மேயரையும் அவர்கள் ‘தந்தை’ என அழைக்கின்றார்கள். அவர்கள் காந்தியையும் ‘தந்தை’ என அழைக்கின்றார்கள். சிலர் முழு உலகினதும் குரு என அர்த்தப்படும் வகையில் ஜகத்குரு என்றும் அழைக்கப்படுகின்றார்கள். தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும் அந்த ஒரேயொரு தந்தையே, ஆகையால் எந்தவொரு மனிதரும் அவ்வாறிருக்க முடியாது. தந்தை அசரீரியானவர். எனவே அவர் எவ்வாறு உங்களுக்கு விடுதலை அளிக்கின்றார்? உலகம் மாறுவதால், அவர் நிச்சயமாகச் செயற்படுவதற்கு இங்கு வருகின்றார். அப்பொழுது மாத்திரமே நீங்கள் இதைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். பிரளயம் ஏற்பட்டு, அதன்பின்னர் தந்தை புதிய உலகை உருவாக்குகின்றார் என்பதல்ல. சமயநூல்களில் பாரிய பிரளயம் ஏற்படுவதாகவும், பின்னர் கிருஷ்ணர் அரசமிலையில் மிதந்து வருவதாகவும் அவர்கள் காட்டியுள்ளனர். எனினும் அது அவ்வாறல்ல எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். உலகின் வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் நடைபெறும். ஆகையால், பிரளயம் ஏற்பட முடியாது. பழைய உலகம் இப்பொழுது மாறுகின்றது என்பது உங்கள் இதயங்களில் பதிந்துள்ளது. தந்தை மாத்திரமே வந்து இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். இலக்ஷ்மியும், நாராயணனும் புதிய உலகின் அதிபதிகள் ஆவார்கள். படங்களில் இராவணனைப் பழைய உலகின் அதிபதியாகச் சித்தரித்துள்ளார்கள். இராம இராச்சியம், இராவண இராச்சியம் இரண்டும் நினைவு கூரப்படுகின்றன. பாபா பழைய அசுர உலகை முடித்துவிட்டுப் புதிய தெய்வீக உலகின் ஸ்தாபனையைத் தூண்டுகின்றார் என்பது உங்கள் புத்திகளில் உள்ளது. தந்தை கூறுகின்றார்: என்னை உள்ளவாறே நான் எத்தகையவர் என்பதையும், நான் எவ்வாறானவர் என்பதையும் அரிதாகவே எவரும் அறிந்து கொள்கின்றார்கள். நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப என்னை நீங்கள் வரிசைக்கிரமமாக அறிவீர்கள். மிகச்சிறந்த முயற்சி செய்பவர்களுக்குப் பெரும் போதையும் உள்ளது. நினைவு செய்யும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் உண்மையான போதையைக் கொண்டிருக்கின்றார்கள். நினைவு யாத்திரையில் உங்களுக்கு ஏற்படும் போதையைப் போன்று, 84 பிறவிச் சக்கரத்தின் ஞானத்தை விளங்கப்படுத்துவதில், அந்தளவு போதையை நீங்கள் அனுபவம் செய்வதில்லை. தூய்மையாகுவதே பிரதான விடயமாகும். ‘வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்!’ என மக்கள் அழைக்கின்றார்கள். “வந்து எங்களுக்கு உலக இராச்சியத்தைத் தாருங்கள்” என்று அவர்கள் கூறுவதில்லை. நீங்கள் பக்திமார்க்கத்தில் பல்வேறு கதைகளைச் செவிமடுக்கின்றீர்கள். இது சத்திய நாராயணனின் உண்மையான கதையாகும். பிறவிபிறவியாக நீங்கள் இக்கதைகளைக் கேட்டவாறு தொடர்ந்து கீழே வந்திருக்கின்றீர்கள். சமயக்கதைகளைச் செவிமடுக்கும் வழக்கம் பாரதத்தில் மாத்திரமே உள்ளது. வேறு தேசங்களில் அத்தகைய சமயக்கதைகள் இல்லை. அவர்கள் பாரதத்தைச் சமயப்பற்றுள்ள நாடெனக் கருதுகின்றார்கள். பாரதத்திலே பல்வேறு ஆலயங்கள் உள்ளன. கிறிஸ்தவர்களுக்கு ஒரேயொரு கிறிஸ்தவ ஆலயம் மாத்திரமே உள்ளது. இங்கு பல்வேறு வகையான ஆலயங்களை அவர்கள் கொண்டுள்ளார்கள். உண்மையில் சிவபாபாவிற்கான ஓர் ஆலயமே இருக்க வேண்டும். அவரது ஒரேயொரு பெயரே இருக்க வேண்டும், ஆனால் இங்கோ பல பெயர்கள் உள்ளன. இங்குள்ள ஆலயங்களைப் பார்வையிட வெளிநாடுகளில் இருந்து மக்கள் வருகின்றனர். புராதன பாரதம் எவ்வாறு இருந்தது என அந்த அப்பாவி மக்களுக்குத் தெரியாது. 5000 வருடங்களை விடப் பழைமையானது எதுவுமில்லை. நூறாயிரம் வருடங்களுக்கு முற்பட்டவற்றைத் தாங்கள் கண்டு பிடித்துவிட்டதாக அவர்கள் எண்ணுகின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஆலயங்களில் காணப்படும் படங்கள் 2500 வருடங்களாக மாத்திரமே உள்ளன. ஆரம்பத்தில் சிவவழிபாடு மாத்திரமே இருந்தது. அது கலப்படமற்ற வழிபாடு ஆகும். அது போலவே கலப்படமற்ற ஞானமும் இருக்கின்றது. முதலில் கலப்படமற்ற வழிபாடும், பின்னர் கலப்படமான வழிபாடும் ஏற்பட்டது. இப்பொழுது மண், நீர், ஆகியவற்றை அவர்கள் எவ்வாறு வழிபடுகின்றார்கள் எனப் பாருங்கள்! எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: பக்தி மார்க்கத்தில் நீங்கள் அதிகளவு செல்வத்தை வீணாக்கினீர்கள். பல்வேறு சமயநூல்களும், பல்வேறு படங்களும் உள்ளன. பல்வேறுபட்ட கீதைகளும் இருக்க வேண்டும். இவற்றிற்காக நீங்கள் அதிகளவு செலவு செய்ததால், இப்பொழுது என்னவாக ஆகியுள்ளீர்கள் என்பதைப் பாருங்கள்! நேற்று நான் உங்களை இரட்டைக் கிரீடாதாரிகள் ஆக்கினேன், இப்பொழுது நீங்கள் ஏழைகளாகி விட்டீர்கள். இது நேற்றைக்குரிய விடயமே ஆகும். அத்துடன் நீங்கள் உண்மையாகவே 84 பிறவிச் சக்கரத்தையும் சுற்றி வந்துள்ளீர்கள் என்பதையும் புரிந்து கொள்கின்றீர்கள். நாங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை இவ்வாறு ஆகுகின்றோம். நாங்கள் பாபாவிடமிருந்து எங்கள் ஆஸ்தியைக் கோருகின்றோம். உங்களை முயற்சி செய்யும்படி பாபா மீண்டும், மீண்டும் தூண்டுகின்றார். “மன்மனாபவ” என்ற வாசகமும் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலிருக்கும் சில வார்த்தைகள் சரியானவையே. இது முன்னர் இருந்தது என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, தேவதர்மம் இப்பொழுது இல்லை, ஆனால் அதன் உருவங்கள் உள்ளன. உங்கள் ஞாபகார்த்தத்தை அவர்கள் எவ்வளவு அழகாகச் செய்துள்ளனர் எனப் பாருங்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஓருமுறை ஸ்தாபனையை மேற்கொள்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். பின்னர் பக்திமார்க்கத்தில் எங்களுடைய மிகச்சரியான ஞாபகார்த்தம் அமைக்கப்படும். ஒரு பூகம்பம் ஏற்படும் பொழுது யாவுமே அழிக்கப்பட்டு, அனைத்தும் புதிதாகக் கட்டப்பட வேண்டும். அங்கு சகல திறன்களும் உள்ளன. வைரங்களை வெட்டுகின்ற திறன்களும் உள்ளன. இங்கும் மக்கள் வைரங்களை வெட்டி, பின்னர் அவற்றைப் பதிக்கின்றனர். வைரத்தை வெட்டுபவர்கள் மிகவும் திறமைசாலிகள். பின்னர் அவர்கள் அங்கு செல்வார்கள். அவர்களின் இத்திறன்கள் அனைத்தும் அங்கு செல்லும். அங்கு அதிகளவு சந்தோஷம் நிலவும் எனத் உங்களுக்குத் தெரியும். அது இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியமாக இருந்தது. அதன் பெயரே சுவர்க்கம் என்பதாகும், அது 100சதவீதம் வளமானதாக இருந்தது. அது இப்பொழுது வளமற்று உள்ளது. பாரதத்தில் நகைகள் அணியும் நாகரீகம் அதிகளவு காணப்படுகின்றது; அது தொன்றுதொட்டுத் தொடர்கின்றது. எனவே குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். இவ்வுலகம் மாற்றம் அடைகின்றது என்பது உங்களுக்குத் தெரியும். சுவர்க்கம் படைக்கப்படுவதால் நாங்கள் நிச்சயமாக அதன் பொருட்டுத் தூய்மையாகுவது அவசியமாகும். நாங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். இதனாலேயே பாபா கூறுகின்றார்: நிச்சயமாக உங்கள் அட்டவணையை எழுதுங்கள். ஆத்மாவாகிய நான் அசுரத்தனமான செயல்களைச் செய்தேனா? உங்களை ஆத்மாக்கள் என நீங்கள் உறுதியாகக் கருதுங்கள். நான் இந்தச் சரீரத்தின் மூலம் பாவச்செயல்கள் ஏதும் செய்துள்ளேனா? அவ்வாறு நான் செய்திருந்தால், எனது பதிவேடு பாழாகிவிடும். இது 21 பிறவிகளுக்கான அதிர்ஷ்ட இலாபச் சீட்டாகும். இது ஓர் ஓட்டப்பந்தயமும் ஆகும். குதிரை ஓட்டப்பந்தயங்களும் உள்ளன. இது சுய இராச்சியத்தைப் பெறுவதற்குக் குதிரை அர்ப்பணிக்கப்படும் யாகம் என அழைக்கப்படுகிறது. அதாவது, ஆத்மாக்களாகிய நீங்கள் ஓட்டப்பந்தயத்தில் ஓடவேண்டும். இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். அது இனிய மௌன இல்லம் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த வார்த்தைகளை நீங்கள் இப்பொழுது செவிமடுக்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இப்பொழுது பெருமளவு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஓர் இராச்சியத்தைப் பெறுவது சிறு விடயமல்ல. நான் ஓர் ஆத்மா, இத்தனை பிறவிகளை எடுத்துள்ளேன். தந்தை கூறுகின்றார்: உங்கள் 84 பிறவிகளும் இப்பொழுது முடிவுக்கு வருகின்றன. இப்பொழுது நீங்கள் முதலாம் இலக்கத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். நிச்சயமாகக் குழந்தைகளாகிய நீங்களே புதிய மாளிகைகளில் வசிப்பீர்கள். பழையனவற்றில் நீங்கள் இருக்க மாட்டீர்கள். நீங்கள் பழையவற்றில் இருந்து கொண்டு புதியனவற்றைக் குடியிருப்பாளர்களுக்கு வாடகைக்குக் கொடுப்பீர்கள் என்றில்லை. எந்தளவிற்கு அதிகமாக முயற்சி செய்கின்றீர்களோ, அதற்கேற்பவே நீங்கள் புதிய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். ஒரு புதிய வீடு கட்டப்படும் பொழுது, பழைய வீட்டிலிருந்து நீங்கி புதிய வீட்டிலிருக்க வேண்டும் என்றே இதயம் விரும்பும். முன்னர் அமைத்தவை பழையதாகும் பொழுது மாத்திரமே, தந்தை குழந்தைகளுக்கு ஒரு புதிய வீட்டை அமைக்கின்றார். அங்கு, அதை வாடகைக்குக் கொடுப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. அம்மக்கள் சந்திரனில் ஒரு துண்டு நிலத்தைப் பெறுவதற்கு முயற்சிப்பது போல, நீங்களும் சுவர்க்கத்தில் உங்கள் துண்டு நிலத்தைக் கோருகின்றீர்கள். எந்தளவிற்கு அதிகமாக உங்களுக்கு இந்த ஞானமும் யோகமும் உள்ளதோ, அந்தளவிற்கு நீங்கள் மேலும் தூய்மை ஆகுவீர்கள். இது இராஜயோகம். நீங்கள் அத்தகையதொரு பெரிய இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள்! மக்கள் சந்திரனில் ஒரு துண்டு நிலத்தைத் தேடிச்செல்லும் பொழுது, அவை அனைத்தும் வீணேயாகும். இப்பொழுது உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கின்ற இவ்விடயங்கள் அனைத்தும் பின்னர் விநாசத்தை ஏற்படுத்தி, துன்பத்தைக் கொடுக்கின்ற விடயங்களாக ஆகிவிடும். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் பொழுது, குறைவான படையினரே இருப்பார்கள். குண்டுகள் மூலம் உடனே அனைத்தும் மிகவிரைவாக நிகழும். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. சரியான நேரத்தில் விநாசம் திடீரென நிகழும். அப்பொழுது படைவீரர்கள் போன்றோர் மரணிப்பார்கள். நீங்கள் இப்பொழுது தேவதைகள் ஆகுகின்றீர்கள். உங்களுக்காகவே விநாசம் நடைபெறுகின்றது என்பது உங்களுக்குத் தெரியும். பழைய உலகம் அழிவதும் நாடகத்தின் ஒரு பாகமாகும். ஒருவர் எத்தகைய செயல்களைச் செய்கின்றாரோ, அவர் அதற்கேற்ப துன்பப்பட வேண்டும். உதாரணமாக, சந்நியாசிகள் நல்லவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் இல்லறத்தவர்கள் மூலமே பிறவி எடுக்கின்றனர். புதிய உலகில் மாத்திரமே நீங்கள் மேன்மையான ஒரு பிறவியைப் பெறுவீர்கள். அதுவும் உங்கள் சம்ஸ்காரங்களுக்கு ஏற்பவே கிடைக்கும். நீங்கள் இப்பொழுது அந்தச் சம்ஸ்காரங்களைப் புதிய உலகிற்கு எடுத்துச் செல்கின்றீர்கள். நீங்கள் நிச்சயமாகப் பாரதத்தில் பிறவி எடுப்பீர்கள். நீங்கள் அத்தகைய செயல்களைச் செய்வதால், மிக நல்ல, சமயப்பற்றுள்ள மக்களுக்கே பிறப்பீர்கள். உங்கள் சம்ஸ்காரங்களுக்கு ஏற்பவே நீங்கள் பிறவி எடுப்பீர்கள். நீங்கள் சென்று மிக உயர்ந்த குலமொன்றில் பிறப்பீர்கள். உங்களைப் போலச் செயல்களைச் செய்பவர்கள் வேறெவரும் இருக்க மாட்டார்கள். உங்கள் கல்விக்கும் நீங்கள் செய்துள்ள சேவைக்கும் ஏற்பவே உங்கள் பிறவி அமையும். பலர் மரணிக்க வேண்டியுள்ளது. உங்களைப் பெறவுள்ளவர்கள் முன்கூட்டியே செல்வார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இவ்வுலகம் இப்பொழுது மாற்றம் அடைகின்றது. தந்தை உங்களுக்குக் காட்சிகளைக் கொடுத்துள்ளார். பாபா உங்களுக்குத் தனது சொந்த உதாரணத்தைக் கூறுகின்றார். தான் 21 பிறவிகளுக்கு ஓர் இராச்சியத்தைப் பெறப் போவதை அவர் கண்டதால், ‘அதனோடு ஒப்பிடும் பொழுது இந்த ஒரு மில்லியன் அல்லது இரு மில்லியன்கள் எம்மாத்திரம்?’ என அவர் சிந்தித்தார். முதலாமவர் (அல்பா) இராச்சியத்தைப் பெற்றார், இரண்டாமவர் (பீற்றா) “கழுதைத்தனத்தை” பெற்றார். இவர் தனது பங்காளியிடம் அவர் விரும்பியதை எடுத்துச் செல்லும்படி கூறினார். எந்தச் சிரமமும் இருக்கவில்லை. பாபாவிடம் இருந்து நீங்கள் எதைப் பெற்றுக் கொள்கின்றீர்கள் எனக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் சுவர்க்க இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள்! இயன்றளவுக்கு நிலையங்களைத் தொடர்ந்தும் திறவுங்கள். நீங்கள் பலருக்கும் நன்மையளிக்க வேண்டும். நீங்கள் 21 பிறவிகளுக்கான வருமானத்தைச் சம்பாதிக்கின்றீர்கள். இங்கு பல மில்லியன்களையும், பில்லியன்களையும் உடையவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பிச்சைக்காரர்கள். பலர் உங்களிடம் வருவார்கள். பலர் கண்காட்சிகளுக்கு வருகின்றார்கள்; பிரஜைகள் உருவாக்கப்படவில்லை என நினைக்காதீர்கள். பல பிரஜைகள் உருவாக்கப்படுகின்றனர். ‘இது மிகவும் நல்லது, ஆனால் தங்களுக்கு நேரமில்லை!’ எனப் பலர் கூறுகின்றார்கள். சிறிதளவு செவிமடுப்பதால் அவர்கள் பிரஜைகளில் ஒருவர் ஆகுகின்றனர். இந்த அழிவற்ற ஞானம் ஒருபொழுதும் அழிக்கப்படுவதில்லை. பாபாவின் அறிமுகத்தைக் கொடுப்பது ஒரு சிறிய விடயமல்ல. சிலருக்கு உடல் புல்லரிக்கும். எவராவது உயர்ந்த அந்தஸ்தைக் கோர விரும்பினால், அவர் முயற்சி செய்வதில் மும்முரமாக ஈடுபடுவார். பாபா எவரிடமிருந்தும் பணத்தை எடுத்துக் கொள்ள மாட்டார். குழந்தைகளின் ஒவ்வொரு துளி மூலமே பொதுநிதியம் உருவாக்கப்படுகின்றது. சிலர் ஒரு ரூபாயையும் அனுப்புகின்றார்கள்: ‘பாபா, என் பெயரில் ஒரு செங்கல்லை உபயோகியுங்கள்.’ குசேலரின் ஒரு கைப்பிடி அரிசியின் பெருமையும் உள்ளது. பாபா கூறுகின்றார்: இவை உங்களுக்கு வைரங்களும் இரத்தினங்களும் போன்றவையாகும். அனைவரின் வாழ்க்கையும் வைரம் போல் ஆகுகின்றது. எதிர்காலத்திற்காக நீங்கள் இதனை உருவாக்குகின்றீர்கள். நீங்கள் பௌதீகக் கண்களினால் காண்பவை அனைத்தும் பழைய உலகின் ஒரு பகுதியே என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த உலகம் இப்பொழுது மாறுகின்றது. நீங்கள் இப்பொழுது அமரத்துவ உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் நிச்சயமாகப் பற்றை வென்றவர்கள் ஆகவேண்டும். நீங்கள் பின்வருமாறு கூறி வருகின்றீர்கள். “பாபா நீங்கள் வரும்பொழுது, நாங்கள் எங்களை உங்களுக்கு அர்ப்பணிப்போம்.” இது நல்லதோர் பேரம், அல்லவா? அவருக்கு “வியாபாரி, நகைவியாபாரி, மந்திரவாதி” என்ற பெயர்கள் எதற்காக வழங்கப்பட்டுள்ளன என்பது மக்களுக்குத் தெரியாது. அவரே நகைவியாபாரி ஆவார். ஒவ்வோர் அழிவற்ற ஞான இரத்தினமும் விலைமதிப்பற்ற ஒரு வாசகமாகும். ரூப், பசந்த் என்னும் கதை இதன் அடிப்படையிலே அமைந்துள்ளது. நீங்களே ரூப்பும் பசாந்தும் ஆவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இப்பொழுது உங்கள் சரீரத்தினூடாக எந்தப் பாவச்செயல்களையும் செய்யாதீர்கள். உங்கள் பதிவேட்டைப் பாழாக்கும் வகையில் எந்த அசுரத்தனமான செயல்களையும் செய்யாதீர்கள்.

2. ஒரேயொரு தந்தையின் நினைவின் போதையைப் பேணுங்கள். தூய்மை ஆகுகின்ற பிரதான முயற்சியை நிச்சயமாகச் செய்யுங்கள். சிப்பிகளைத் துரத்திச் செல்வதில், மதிப்பிட முடியாத உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள், ஆனால் ஸ்ரீமத்தைப் பின்பற்றி உங்கள் வாழ்வை மேன்மையானது ஆக்குங்கள்.

ஆசீர்வாதம்:
உங்களை உலக சேவைக்காக அர்ப்பணம் செய்வதன் மூலம், இலகுவாக முழுமை அடைந்து, மாயையை உங்கள் பணியாளன் ஆக்குவீர்களாக.

இப்பொழுது, உங்கள் நேரம், பேறுகள், ஞானம், தெய்வீகக் குணங்கள், சக்திகள் அனைத்தையும் உலக சேவைக்காக அர்ப்பணம் செய்யுங்கள். நீங்கள் கொண்டிருக்கின்ற எண்ணம் எதுவாயினும், அது உலக சேவைக்கானதா எனச் சோதியுங்கள். அனைத்தையும் சேவைக்காக அர்ப்பணம் செய்யும் போது, நீங்கள் இலகுவாக முழுமை அடைவீர்கள். சேவையில் நீங்கள் கொண்டிருக்கும் அன்பினால், சிறிய தாள்கள் அல்லது வருகின்ற பரீட்சைகள் இயல்பாகவே அவை உங்களிடம் தம்மை அர்ப்பணம் செய்கின்றன. அதன் பின்னர் நீங்கள் மாயையைக் கண்டு பயப்பட மாட்டீர்கள். ஆனால் சதா வெற்றியாளர் ஆகி, சந்தோஷத்தில் நடனமாடுவீர்கள். மாயையை உங்கள் அடிமையாக அனுபவம் செய்வீர்கள். சேவைக்காக உங்களை நீங்கள் அர்ப்பணிக்கும் போது, மாயை இயல்பாகவே தன்னை உங்களிடம் அர்ப்பணிக்கின்றாள்.

சுலோகம்:
சுய ஆய்வினால் உங்கள் மனதை மூடிக் கொள்ளும் போது, கோபம் முடிவடையும்.

அவ்யக்த சமிக்ஞை: சரீரமற்ற ஸ்திதியின் பயிற்சியை அதிகரியுங்கள் (அசரீரி மற்றும் விதேஹி).

ஓர் ஆளியை ஒரு விநாடியில், போடவோ நிற்பாட்டவோ முடிவதைப் போன்றே, ஒரு விநாடியில் உங்கள் சரீரத்தின் ஆதாரத்தைப் பெறுங்கள், ஒரு விநாடியில் சரீரமற்ற ஸ்திதியில் ஸ்திரமாகுங்கள். ஒரு கணம் உங்கள் சரீரத்திற்குள் வாருங்கள், ஒரு கணம் சரீரமற்றவர் ஆகுங்கள். தேவை ஏற்படும் போது, உங்கள் சரீரம் என்ற ஆடையை போட்டுக் கொள்ளுங்கள், அதன் பின்னர், தேவையில்லாத போது, உங்கள் சரீரத்திலிருந்து விடுபட்டிருங்கள். இதனை நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். இதுவே கர்மாதீத் ஸ்திதி எனப்படுகின்றது.