14.12.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களிடம் மன்மனாபவ, மதியாஜிபவ என்னும் மிகக் கூர்மையான அம்புகள் உள்ளன. இந்த அம்புகளினால் நீங்கள் மாயையை வெற்றி கொள்ள முடியும்.

கேள்வி:
எதன் அடிப்படையில் குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் உதவியைப் பெறுகிறீர்கள்? குழந்தைகளாகிய நீங்கள் எவ்விதம் தந்தைக்கு நன்றி செலுத்துகின்றீர்கள்?

பதில்:
குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை அன்புடன் நினைவு செய்யுமளவிற்கே நீங்கள் தந்தையிடமிருந்து உதவியைப் பெறுகின்றீர்கள். அவரோடு அன்புடன் பேசி, அவருடனான உங்கள் தொடர்பை மிகச்சரியாகக் கொண்டிருப்பதுடன், தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள், அப்பொழுது தந்தை தொடர்ந்தும் உங்களுக்கு உதவி செய்வார். குழந்தைகளாகிய நீங்கள் தந்தைக்கு நன்றி செலுத்திக் கூற வேண்டும்: பாபா, நீங்கள் பரந்தாமத்திலிருந்து வந்து, எங்களைத் தூய்மையற்றவரில் இருந்து, தூய்மையானவராக மாற்றுகின்றீர்கள். நாங்கள் உங்களிடமிருந்து அதிகளவு சந்தோஷத்தைப் பெறுகிறோம். உங்கள் மீது நாங்கள் கொண்டிருக்கும் அன்பினால் கண்ணீரையும் சிந்துகின்றோம்.

ஓம் சாந்தி.
ஒருவருக்கு, அனைவரையும் விடத் தாயின் மீதும் தந்தையின் மீதுமே அதிகளவு அன்பு உள்ளது. ஒரு தாய்க்கும் தந்தைக்கும் தங்கள் குழந்தைகளின் மீது அதிகளவு அன்புள்ளது. ஒரேயொரு தந்தையை நோக்கியே மக்கள் “நீங்களே தாயும் தந்தையும்” என்று கூறுகின்றார்கள். இதனை எவருமே ஒரு லௌகீகத் தாயிடமோ அல்லது தந்தையிடமோ கூறுவதில்லை. நிச்சயமாக இந்தப் புகழ் உள்ளது, ஆனால் அது யாருக்குரியது என்பது எவருக்கும் தெரியாது. மக்கள் இதை அறிந்திருப்பின், அவர்களும் அங்கு செல்வதுடன், ஏனைய பலரையும் அங்கு அழைத்துச் செல்வார்கள். எவ்வாறாயினும், நாடகம் இவ்வாறாகவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடகம் ஒரு முடிவுக்கு வரும் பொழுது மாத்திரமே பாபா வருகின்றார். முன்னர், நேரடியாகப் “பேசும்” நாடகங்கள் மாத்திரமே இருந்தன. ஒரு நாடகம் முடிவடைந்ததும், நடிகர்கள் அனைவரும் மேடைக்கு வருகிறார்கள். இந்த நாடகமும் ஓர் எல்லையற்ற, பெரிய நாடகமாகும். சத்தியயுகம், திரேதாயுகம், துவாபர யுகத்தின் அனைத்து விடயங்களும், முழு உலகச் சக்கரமும் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். பரந்தாமத்திலோ அல்லது சூட்சும வதனத்திலோ சக்கரம் சுழல்கின்றது என்பதல்ல. இங்கு இந்த உலகிலேயே உலகச்சக்கரம் சுழல்கின்றது. அசரீரியான ஒரேயொருவரே சத்தியம் எனவும் அழைக்கப்படுகின்றார் என்பது நினைவுகூரப்படுகின்றது. இது யாருடைய புகழ்? கிரந்தத்திலிருந்தே இப்புகழைச் சீக்கிய மக்கள் பாடுகிறார்கள். குருநானக் இப்புகழைப் பேசினார். எவ்வாறாயினும், “ஏக் ஓம்கார்” என்னும் புகழ் அசரீரியான பரமாத்மாவின் புகழ் மாத்திரமே ஆகும். ஆனால் அந்த மக்கள் பரமாத்மாவின் புகழை மறந்துவிட்டதுடன், குருநானக்கைப் புகழ ஆரம்பித்தார்கள். நானக் சத்குருவாக இருந்தார் எனவும் அவர்கள் நம்புகிறார்கள். உண்மையில், முழு உலகின் புகழ் அனைத்தும் ஒரேயொருவருக்கு மாத்திரம் உரியதாகும். வேறு எவருமே புகழப்படக் கூடாது. பாருங்கள்! பிரம்மாவில் பாபா பிரவேசிக்காமல் இருந்தால், பிரம்மா ஒரு சிப்பியைப் போன்று பெறுமதியற்றே இருப்பார். பரமாத்மாவாகிய, பரமதந்தையினூடாக, இப்பொழுது நீங்கள் சிப்பிகளிலிருந்து வைரங்கள் போன்று பெறுமதியானவர்கள் ஆகுகின்றீர்கள். இப்பொழுது உலகம் தூய்மையற்றுள்ளது. இது பிரம்மாவின் இரவு ஆகும். தூய்மையற்ற உலகில் தந்தை வரும்பொழுது, ஆத்மாக்கள் அவரை இனங்கண்டு, அவர்கள் தங்களை அவருக்கு அர்ப்பணிக்கின்றார்கள். இன்றைய நாட்களில், குழந்தைகள் மிகவும் தொல்லை கொடுக்கின்றார்கள். தேவர்கள் மிகவும் சிறந்தவர்களாக இருந்தார்கள். மறுபிறவி எடுப்பதால், அவர்கள் படிப்படியாக தமோபிரதான் ஆகினார்கள். சந்நியாசிகளும் மிகவும் சிறந்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் தங்கள் தூய்மையின் மூலம் பாரதத்துக்கு உதவினார்கள். பாரதத்தில் தூய்மை இல்லாதிருந்தால் அது காமச்சிதையினால் எரிக்கப்பட்டிருக்கும். சத்தியயுகத்தில் காமவாள் என்பதே இல்லை. இந்தக் கலியுகத்திலுள்ள அனைவரும் காமச்சிதையாகிய முட்களின் மீது அமர்ந்துள்ளார்கள். சத்தியயுகத்தில் இவ்வாறு கூறப்படுவதில்லை. இந்த நஞ்சு அங்கு இருப்பதில்லை. கூறப்பட்டுள்ளது: “நீங்கள் ஏன் அமிர்தத்தைப் பருகாமல், அதற்குப் பதிலாக நஞ்சைப் பருகுகிறீர்கள்?” விகாரத்தில் ஈடுபடும் மக்கள் தூய்மையற்றவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்நாட்களில், மக்கள் 10 அல்லது 12 குழந்தைகளைக் கூடப் பெறுகிறார்கள். அதற்குக் கட்டுப்பாடே இல்லை. சத்தியயுகத்தில், ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்னரே அவர்கள் குழந்தையின் காட்சியைக் காண்கிறார்கள். ஓர் ஆத்மா அவருடைய பழைய சரீரத்தில் இன்னமும் இருக்கையில், அவருடைய சரீரத்தை நீக்கிய பின்னர், அவர் குழந்தையாகப் பிறக்கப் போகும் காட்சி அவருக்குக் கிடைக்கிறது. ஒரு தம்பதிக்கு ஒரு மகன் மாத்திரமே இருப்பார், அதற்கு மேல் அல்ல. அனைத்தும் அங்குள்ள நியதிக்கு ஏற்பவே நிகழும். சனத்தொகை நிச்சயமாக வளர்கிறது. ஆனால் அங்கு விகாரம் இல்லை. அங்கு எவ்வாறு குழந்தைகள் பிறப்பார்கள் என்று பலர் உங்களை வினவுகிறார்கள். அங்கு யோகசக்தியின் மூலமே அனைத்தும் இடம்பெறுகிறது என்று நீங்கள் அவர்களுக்குக் கூறவேண்டும். நீங்கள் யோகசக்தியின் மூலம் உலக இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். பௌதீகச் சக்தியினால் உலக இராச்சியத்தை உங்களால் பெறமுடியாது. கிறிஸ்தவர்கள் ஒன்றுபட்டால், அவர்கள் உலகம் முழுவதையும் ஆட்சி செய்யக்கூடும் என்று பாபா கூறியுள்ளார். எவ்வாறாயினும், அவர்கள் ஒன்றுபடுவதைச் சட்டம் அனுமதிப்பதில்லை. அந்த இரு பூனைகளும் ஒன்றோடு ஒன்று சண்டையிடும்பொழுது, குழந்தைகளாகிய நீங்கள் வெண்ணெயைப் பெறுகிறீர்கள். வாயில் வெண்ணெயுடன் கிருஷ்ணர் காட்டப்படுகின்றார். அவர்கள் காட்டுகின்ற வெண்ணெய், உலக இராச்சியத்தை குறிக்கின்றது. இதுவே சமயநூல்களில் நினைவுகூரப்படுகின்ற யோகசக்திடனான யுத்தம் என்று எல்லையற்ற தந்தை கூறுகிறார். இது பௌதீகச் சக்தி அல்ல. பௌதீகமான வன்முறை யுத்தங்களைப் பற்றிச் சமயநூல்களில் பேசப்படுகிறது. உங்களுக்கு அதனுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை. கௌவர்களுக்கும் பாண்டவர்களுக்குமிடையில் யுத்தம் என்பது இல்லை. 5000 வருடங்களுக்கு முன்னரும் அந்தச் சமயங்கள் அனைத்தும் இருந்தன. அந்தச் சமயங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று சண்டையிட்டு தங்களைத் தாங்களே அழித்தன. பாண்டவர்களாகிய நீங்கள் தேவதர்மத்தை ஸ்தாபித்தீர்கள். இந்த யோகசக்தியினூடாகவே, நீங்கள் உலக இராச்சியத்தைப் பெற்றீர்கள். நீங்கள் இப்பொழுது மாயையை வென்றவர்களாகவும் உலகை வென்றவர்களாகவும் ஆகுகின்றீர்கள். இராவணனாகிய, மாயை, சத்தியயுகத்தில் இருப்பதில்லை. அங்கு நீங்கள் இராவணனின் கொடும்பாவிகள் எதனையும் உருவாக்கி அவற்றை எரிக்க மாட்டீர்கள். அனைத்து வகையான விக்கிரகங்களும் இப்பொழுதே உருவாக்கப்படுகிறது. அங்கு அத்தகைய அரக்கர்களோ அல்லது அசுரர்களோ இருக்க முடியாது. ஆண், பெண் இருபாலாரும் ஐந்து விகாரங்களைக் கொண்டிருப்பதையேனும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் இருபாலாரையும் ஒன்றாக்கிப் பத்துத் தலைகளுடன் உள்ள ஓர் இராவணனின் கொடும்பாவியை உருவாக்கினார்கள். அவர்கள் நான்கு கரங்களுடன் விஷ்ணுவையும் சித்தரிக்கிறார்கள். இந்தப் பொதுவான விடயத்தை மக்கள் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இராவணனின் ஒரு பெரிய கொடும்பாவியைச் செய்து அதை எரிக்கிறார்கள். இப்பொழுது எல்லையற்ற தந்தை இங்கமர்ந்திருந்து அதி அன்பிற்கினிய குழந்தைகளாகிய உங்களுக்கு இவ்விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். ஒரு தந்தை எப்பொழுதும் தன்னுடைய குழந்தைகள் மீது வரிசைக்கிரமமாக அன்பு செலுத்துகிறார். சிலர் அதி அன்பிற்கினியவர்களும் சிலர் குறைந்தளவு அன்பு செலுத்தப்படுபவர்களும் ஆவார்கள். ஒரு குழந்தை ஒருவருக்கு எவ்வளவு பிரியமானவராக இருக்கின்றாரோ, அந்தளவு அதிகமாக அவர் மீது அன்பிருக்கும். இங்கும், சேவையில் இருப்பவர்கள் மீதும், கருணை நிறைந்தவர்கள் மீதும் அன்பு செலுத்தப்படுகிறது. பக்தி மார்க்கத்திலுள்ள மக்கள் கருணையை வேண்டுகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: கடவுளே, தயவு செய்து என்மீது கருணை காட்டுங்கள்! எவ்வாறாயினும், எவரும் நாடகத்தை அறிய மாட்டார்கள். அவர்கள் முற்றிலும் தூய்மையற்றவர்கள் ஆகியபொழுதே, பாபா வருவதற்கான திட்டம் அவருக்கு நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடவுள் அவர் வேண்டியதை எல்லாம் செய்ய முடியும் அல்லது அவர் விரும்பும் பொழுதெல்லாம் வர முடியும் என்றல்ல. அவருக்கு அத்தகைய சக்தி இருந்திருப்பின், அவர் ஏன் அதிகளவு அவதூறு செய்யப்படுகிறார்? அவர் ஏன் வனவாசம் சென்றார்? (இராமாயணத்தில் இராமரின் கதை). இந்த விடயங்கள் மிகவும் மறைமுகமானவை ஆகும். கிருஷ்ணர் அவதூறு செய்யப்பட முடியாது. கூறப்பட்டுள்ளது: கடவுள் அந்த விடயங்களைச் செய்ய மாட்டார். எவ்வாறாயினும், விநாசம் நிச்சியமாக இடம்பெறவே வேண்டும், ஆதலால், எவரையும் பாதுகாப்பதற்கான கேள்வியே இல்லை. அனைவரும் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். பாபா ஸ்தாபனையினதும் விநாசத்தினதும் பணியை மேற்கொள்கிறார். ஆகவே, நிச்சயமாகக் கடவுள் இருக்க வேண்டும். பரமாத்மாவாகிய, பரமதந்தை ஸ்தாபனையை மேற்கொள்கிறார், எதன் ஸ்தாபனையை? நீங்கள் மக்களிடம் பிரதானமான கேள்வியைக் கேட்க வேண்டும்: “கீதையின் கடவுள் யார்?” இதனையிட்டு உலகில் உள்ள அனைவரும் குழப்பம் அடைந்துள்ளார்கள். அவர்கள் சமயநூலில் ஒரு மனிதரின் பெயரைப் புகுத்தி விட்டார்கள். கடவுளைத் தவிர வேறு எவராலும் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிக்க முடியாது. ஆகவே, கீதையின் கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் என எவ்வாறு அவர்களால் கூற முடியும்? ஸ்தாபனையினதும் விநாசத்தினதும் பணி யாருக்கு உள்ளது? கீதையின் கடவுள் யார் என்பதை அவர்கள் மறந்துவிட்டதால், கீதையை அவர்கள் சீரழித்துவிட்டார்கள். இது அவர்களுடைய மாபெரும் தவறாகும். இரண்டாவதாக, ஜெகநாத்புரியில், மிகவும் அவலட்சணமான வடிவங்களில் தேவர்களின் சிலைகளை அவர்கள் வடிவமைத்து உள்ளார்கள். மோசமான படங்களை வைத்திருப்பதை அரசாங்கம் தடைசெய்துள்ளது. ஆகவே, நீங்கள் அவர்களுக்கு இதை விளங்கப்படுத்த வேண்டும். ஆலயங்களைப் பற்றிய இந்த விடயங்கள் எவருடைய புத்தியிலும் புகுவதில்லை. தந்தை மாத்திரமே இங்கமர்ந்திருந்து இந்த விடயங்களை விளங்கப்படுத்துகிறார். குழந்தைகளாகிய நீங்கள் சத்தியம் செய்த கடிதத்தை எவ்வாறு எழுதுகிறீர்கள் எனப் பாருங்கள்! உங்களில் சிலர் அதை இரத்தத்தில் எழுதுகிறீர்கள். எவ்வாறு திரௌபதி தன்னுடைய சேலையைக் கிழித்து, ஸ்ரீகிருஷ்ணரின் இரத்தம் பெருகும் காயத்தைச் சுற்றிக் கட்டினார் என்ற கதை உள்ளது. இது அவருடைய அன்பின் ஓர் அடையாளம் ஆகும். உங்கள் அன்பு சிவபாபாவின் மீதாகும். பிரம்மாவான இவருக்கு இரத்தம் பெருகலாம். அவரால் வலியை உணர முடியும், ஆனால் சிவபாபாவினால் வலியை உணர முடியாது, ஏனெனில் அவருக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. ஸ்ரீகிருஷ்ணர் காயப்பட்டிருப்பின், அவர் வலியை உணர்ந்திருப்பார், ஆகவே எவ்வாறு நீங்கள் அவரைக் கடவுள் என்று அழைக்க முடியும்? பாபா கூறுகிறார்: நான் சந்தோஷத்திற்கும் துன்பத்திற்கும் அப்பாற்பட்டவன். ஆம், நான் வந்து குழந்தைகளாகிய உங்களைச் சதா சந்தோஷமானவர்கள் ஆக்குகிறேன். சிவன் எப்பொழுதும் நிரந்தரமானவர் என்று கூறப்பட்டுள்ளது. ஒரேயொரு சிவனே சதா சந்தோஷத்தைக் கொடுப்பவர் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். உண்மையிலேயே ஞானோதயம் பெற்ற, யோகியாக இருந்து ஞானத்தைக் கிரகித்துத் தூய்மையாக இருக்கும், இனிமையிலும் இனிமையான, நீண்ட காலம் தொலைந்திருந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும், தகுதியான குழந்தைகள் மீதே எனக்கு அன்பு உள்ளது. ஒரு லௌகீகத் தந்தைக்கும் சில நல்ல குழந்தைகளும், சில தீய குழந்தைகளும் இருப்பார்கள். சிலர் மிகவும் தீயவர்களாக மாறி, அதனால் தங்கள் குடும்பத்தின் பெயரை அவதூறு செய்வதனால் மிகவும் தீயவர்கள் ஆகுகிறார்கள். இங்கும் அதேவிடயமே நிகழ்கின்றது. அவர்கள் வியப்படைகிறார்கள். அவர்கள் இங்கு வந்து பாபாவுக்கு உரியவர்களாகி, ஞானத்தைச் செவிமடுத்து, ஞானத்தை ஏனையோர்களுக்கும் கொடுத்து, பின்னர் பாபாவை விட்டு விலகிச் செல்கிறார்கள்! இதனாலேயே உங்கள் நம்பிக்கையை இட்டு ஒரு கடிதம் எழுதித் தருமாறு கேட்கப்படுகிறது. பின்னர் இந்தக் கடிதம் உங்களிடம் கொடுக்கப்படுகிறது. உங்களில் சிலர் அதை உங்கள் இரத்தத்தினாலும் எழுதுகிறீர்கள். நீங்கள் அதை இரத்தத்தில் எழுதி ஒரு சத்தியத்தைச் செய்கிறீர்கள். இன்றைய நாட்களில், மக்களை ஒரு சத்தியப் பிரமாணம் செய்ய வைக்கிறார்கள், ஆனால் அது ஒரு பொய்யான சத்தியமாகும். கடவுள் எங்கும் இருக்கிறார் என்று நம்புவது என்றால், “நானும் கடவுள், நீங்களும் கடவுள்” என்னும் உணர்வுடன் ஒரு சத்தியப் பிரமாணத்தைச் செய்வதாகும். தந்தை கூறுகிறார்: தந்தை எவ்வாறு நடைமுறை ரீதியில் எங்கும் பிரசன்னமாக முடியும் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இக்கண்களாகிய யன்னல்களினூடாகப் பாபா பார்க்கிறார். இது கடனாகப் பெறப்பட்ட ஓர் அந்நிய சரீரமாகும். பாபாவே இந்த வீட்டைப் பயன்படுத்திக் கொள்கின்ற குடியிருப்பாளர். அதேபோன்று, பாபா கூறுகிறார்: நான் இந்தச் சரீரத்தைப் பயன்படுத்துகிறேன். இந்த யன்னல்களினூடாக பாபா உங்களைப் பார்க்கிறார். அவர் இங்கு பிரசன்னமாகி, உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஓர் ஆத்மா நிச்சயமாக அவருடைய புலன்களினூடாகச் செயற்பட வேண்டியுள்ளது. நான் இவரில் பிரவேசித்துள்ளதால், நான் நிச்சயமாக பேசுவேன். நான் இந்தப் புலன்களைப் பயன்படுத்தியத்திற்காக, நிச்சயமாக நான் வாடகை கொடுக்க வேண்டும். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் நரகத்தைச் சுவர்க்கமாக மாற்றுகின்றீர்கள். நீங்களே அனைவரையும் விழித்தெழச் செய்ய வேண்டியவர்கள். நீங்களே அனைவருக்கும் ஒளியைக் கொடுப்பவர்கள். ஏனைய அனைவரும் கும்பகர்ண உறக்கத்தில் உறங்குகிறார்கள். தாய்மார்களாகிய நீங்கள் அவர்களை விழித்தெழச் செய்கிறீர்கள். நீங்கள் அவர்களைச் சுவர்க்க அதிபதிகளாக ஆக்குகிறீர்கள். இங்கு உங்களிற் பெரும்பான்மையோர் தாய்மார்கள். இதனாலேயே கூறப்பட்டுள்ளது: “தாய்மார்களுக்கு வந்தனங்கள்”. நீங்களே பீஷ்ம பிதாமகர் போன்றோருக்கு அம்புகளை எய்தவர்கள். மன்மனாபவ, மதியாஜிபவ என்னும் அம்புகளை எய்வது மிகவும் இலகுவானதாகும். இந்த அம்புகள் மூலமாகவே நீங்கள் மாயையை வெற்றி கொள்ளக்கூடியவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் ஒரேயொரு தந்தையையே நினைவுசெய்து ஒரேயொருவருடைய ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். 21 பிறவிகளுக்கு உங்கள் செயல்களுக்காக வருந்தத் தேவையில்லாத அத்தகைய மேன்மையான கர்மத்தைத் தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார். நீங்கள் சதா ஆரோக்கியமானவராகவும் சதா செல்வந்தராகவும் ஆகுகிறீர்கள். நீங்கள் பல தடவைகள் உலக அதிபதிகள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் உங்கள் இராச்சியத்தைப் பெற்று, பின்னர் மீண்டும் அதை இழந்தீர்கள். பிராமண குல இரத்தினங்களாகிய நீங்களே, கதாநாயக, கதாநாயகி பாகங்களை நடிக்கிறீர்கள். நாடகத்தில், குழந்தைகளாகிய நீங்கள் அதிமேன்மையான பாகங்களை நடிக்கிறீர்கள். ஆகையால், உங்களை மிகவும் மேன்மையாக்குபவராகிய தந்தையின் மீது நீங்கள் அதிகளவு அன்பைக் கொண்டிருக்க வேண்டும். பாபா, நீங்கள் அத்தகைய அதிசயத்தைப் புரிகிறீர்கள்! நான் நாராயணனாக இருந்தேன் எனும் எண்ணத்தை நான் ஒருபொழுதும் சிறிதளவேனும் கொண்டிருந்ததில்லை. பாபா கூறுகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் இலக்ஷ்மி நாராயணன் போன்றும், தேவர்களைப் போன்றும் இருந்தீர்கள். பின்னர், மறுபிறவி எடுக்கையில், நீங்கள் அசுரர்களாக மாறினீர்கள். இப்பொழுது முயற்சி செய்து உங்கள் ஆஸ்தியைக் கோருங்கள். “ஒருவர் அதிக முயற்சி செய்கையில், அதிகளவு காட்சிகளைப் பெறுகிறார்”. ஒரேயொரு தந்தை மாத்திரம் உங்களுக்கு இந்த இராஜயோகத்தைக் கற்பித்தார். இப்பொழுது உங்களால் இந்த உண்மையான இலகு இராஜயோகத்தை ஏனையோருக்கும் கற்பிக்க முடியும். உங்கள் கடமையானது, அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதாகும். அனைவரும் இப்பொழுது அநாதைகள் ஆகியுள்ளார்கள். பல மில்லியன் கணக்கானோரில், முன்னைய கல்பத்தில், இந்த விடயங்களைப் புரிந்துகொண்ட சிலர் மாத்திரமே, இப்பொழுதும் புரிந்துகொள்வார்கள். உலகிலுள்ள பெரிய முட்டாள்களைப் பார்க்க விரும்பினால், நீங்கள் அவர்களை இங்கே பார்க்க முடியும் என்று பாபா கூறியுள்ளார். அவர்களே தங்களுக்கு 21 பிறவிகளுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுக்க வேண்டியவராகிய தந்தையை விட்டுப் பிரிந்து செல்பவர்கள். இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது நீங்கள் கடவுளுடைய குழந்தைகள். பின்னர், நீங்கள் தேவர்களின், சத்திரியர்களின், வைசியர்களின், சூத்திரர்களின் குழந்தைகளாகப் பிறவி எடுப்பீர்கள். இப்பொழுது நீங்கள் அசுரக் குழந்தைகளில் இருந்து, கடவுளின் குழந்தைகளாக மாறியுள்ளீர்கள். தூய்மையற்றதிலிருந்து உங்களைத் தூய்மையாக மாற்றுவதற்கு, தந்தை பரந்தாமத்திலிருந்து வருகிறார், ஆகவே நீங்கள் அவருக்கு எந்தளவிற்கு நன்றி செலுத்த வேண்டும்! பக்தி மார்க்கத்திலுள்ள மக்களும் அவருக்கு அதிகளவு நன்றி செலுத்துகிறார்கள். அவர்கள் சந்தோஷமற்று இருக்கும்பொழுது, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்த மாட்டார்கள். இப்பொழுது உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் கொடுக்கப்படுகிறது. ஆகவே நீங்கள் அவர் மீது அதிகளவு அன்பு செலுத்த வேண்டும். நீங்கள் தந்தையுடன் ஒரு தொடர்பைக் கொண்டிருந்து அவருடன் அன்புடன் பேசினால், அவர் ஏன் செவிமடுக்க மாட்டார்? நீங்கள் இரவு முழுவதும் விழித்திருந்து, பாபாவுடன் பேச வேண்டும். இந்த பாபா தொடர்ந்தும் அவருடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்: நான் அதிகளவு பாபாவை நினைவுசெய்கிறேன். பாபாவை நினைவுசெய்கையில், நீங்கள் அன்பினால் கண்ணீரும் சிந்துகிறீர்கள். நான் என்னவாக இருந்தேன், பாபா என்னை என்னவாக ஆக்கியுள்ளார்? உங்களுக்கும் அது பொருந்தும்! இப்பொழுது நீங்கள் அவ்வாறு ஆகுகிறீர்கள்! பாபா யோகத்தில் நிலைத்திருப்பவர்களுக்கும் உதவி செய்கின்றார். உங்கள் கண்கள் இயல்பாகவே திறக்கும். உங்கள் படுக்கை ஆடும். பாபா இவ்விதமாகப் பலரை விழித்தெழச் செய்கிறார். எல்லையற்ற தந்தையிடம் அதிகளவு கருணை உள்ளது. நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள் என்று பாபா உங்களை வினவும்பொழுது, நீங்கள் பதிலளிக்கிறீர்கள்: “பாபா, நான் எதிர்காலத்தில், எவ்வாறு ஸ்ரீ நாராயணனைத் திருமணம் செய்வதற்குத் தகுதியானவர் ஆகுவது என்று கற்றுக் கொள்வதற்கு வந்துள்ளேன்.” அல்லது “நான் இலக்ஷ்மியைத் திருமணம் செய்வதற்கான இப்பரீட்சையில் சித்தியடைய வேண்டும்.” இது அத்தகையதோர் அற்புதமான பாடசாலை! இவை அத்தகைய அற்புதமான விடயங்கள்! இதுவே அதி மகத்தான பல்கலைக்கழகம் ஆகும். எவ்வாறாயினும், நீங்கள் “இறை பல்கலைக்கழகம்” எனும் பெயரைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அனுமதிப்பதில்லை. ஒருநாள், அவர்கள் நிச்சயமாக இதை ஏற்றுக் கொள்வார்கள். மக்கள் தொடர்ந்தும் வருவார்கள். இது உண்மையிலேயே ஒரு மிகப் பெரிய பல்கலைக்கழகம் என்று அவர்கள் கூறுவார்கள். பாபா உங்களைத் தன்னுடைய கண்களில் அமர்த்தி, உங்களுக்குக் கற்பிக்கிறார். அவர் உங்களைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்வார் என்று அவர் கூறுகிறார். ஆகவே, இது போன்று பாபாவுடன் அதிகளவு பேசினால், பாபா உங்களுக்கு அதிகளவு உதவிசெய்வார். மூச்சுத் திணறுபவர்களின் (புத்தியின்) பூட்டை அவர் திறப்பார். இரவில் நினைவைக் கொண்டிருப்பதால், நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். பாபா உங்களுக்குத் தன்னுடைய அனுபவத்தையும் எவ்வாறு அவர் அமிர்தவேளையில் பாபாவுடன் பேசுகிறார் என்பதையும் உங்களுக்குக் கூறுகிறார். குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை கூறுகிறார்: எச்சரிக்கையாக இருங்கள்! இந்தக் குடும்பத்தின் பெயரை அவதூறு செய்ய வேண்டாம். நீங்கள் அவருக்குத் தானம் செய்த ஐந்து விகாரங்களைத் திரும்பவும் பெற வேண்டாம். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையினால் அன்பு செலுத்தப்படுவதற்கு, கருணை நிறைந்தவராகவும் சேவையில் பிரசன்னமாகியும் இருங்கள். தகுதிவாய்ந்தவராகவும் கீழ்ப்படிவுள்ளவராகவும் இருந்து, ஓர் உண்மையான ஞானி ஆத்மாவாகவும் யோகி ஆத்மாவாகவும் ஆகுங்கள்.

2. அமிர்தவேளையில் விழித்தெழுந்து, தந்தையுடன் ஓர் இனிமையான சம்பாஷணையைக் கொண்டிருங்கள். தந்தைக்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டும். தந்தையின் உதவியை அனுபவம் செய்வதற்கு, அதி அன்பிற்கினிய தந்தையை அதிகளவு அன்புடன் நினைவு செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
சதா ஊக்கம் உற்சாகத்தைக் கொண்டிருப்பதன் மூலமும், உங்கள் மனதில் சந்தோஷப் பாடல்களைப் பாடுவதன் மூலமும் அழியாத சந்தோஷப் பாக்கியத்தைக் கொண்டிருப்பீர்களாக. சந்தோஷப் பாக்கியத்தைக் கொண்டிருக்கும் குழந்தைகளாகிய நீங்கள் அழிவற்ற வழிமுறைகளை உபயோகிப்பதன் மூலம், அழிவற்ற வெற்றியை அடைகின்றீர்கள். “ஆஹா! ஆஹா” என்ற சந்தோஷப் பாடல்கள் சதா தொடர்ந்தும் உங்கள் மனதில் ஒலிக்கின்றது. ஆஹா பாபா! ஆஹா பாக்கியமே, ஆஹா இனிமையான குடும்பமே! ஆஹா! அழகான, மேன்மையான சங்கமயுகக் காலமே! ஓவ்வொரு செயலும் “ஆஹா! ஆஹா!” என்பதால் நீங்கள் அழியாத சந்தோஷப் பாக்கியத்தைக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மனதில் ஏன் நான்? என்பது என்றுமே எழ முடியாது. ஏன்? என்பதற்குப் பதிலாக, ஆஹா! ஆஹா! என நீங்கள் கூறுகிறீர்கள். நான், என்பதற்குப் பதிலாக நீங்கள் பாபா! பாபா! எனக் கூறுகிறீர்கள்.

சுலோகம்:
உங்கள் எண்ணங்கள் அனைத்தின் மீதும் அழிவற்ற இந்த அரசாங்க முத்திரையை இட்டால் நீங்கள் உறுதியாக இருப்பீர்கள்.