17.07.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் மேன்மையானவர்களாக வேண்டுமானால், ஒவ்வொரு நாளும் உங்கள் அட்டவணையிலே எந்த பௌதீகப் புலன்களும் உங்களை ஏமாற்றவில்லையே என்பதைப் பாருங்கள். கண்கள் மிகவும் ஏமாற்றக் கூடியவை. ஆகையினால் அவைபற்றி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

கேள்வி:
அனைத்திலும் மோசமான பழக்கம் என்ன? அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறை என்ன?

பதில்:
உங்கள் சுவையரும்புகளை திருப்திப்படுத்துவதே மிக மோசமான பழக்கமாகும். உங்களிற் சிலர் சுவையானவற்றைப் பார்க்கும்போது இரகசியமாக அதை உண்கின்றீர்கள். சிலவற்றை மறைப்பது என்றால் திருடுவது என்று அர்த்தம். மாயை திருடுகின்ற ரூபத்திலே பலரையும் அவர்களின் மூக்கிலும், காதுகளிலும் பிடித்து இழுக்கிறாள். உங்களின் புத்தியானது எவற்றினாலும் ஈர்க்கப்படும்போது, இந்தப் பழக்கத்தில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழி உங்களைத் தண்டித்துக் கொள்வதாகும். உங்களுடைய தீயபழக்கங்களை அகற்றுவதற்கு, நீங்கள் உங்களை அதிகளவில் தண்டிக்க வேண்டும்.

ஓம் சாந்தி.
நீங்கள் இங்கே ஆத்ம உணர்வில் அமர்ந்திருக்கின்றீர்களா? நீங்கள் அனைத்தையும் உங்களிடமே கேட்கவேண்டும். நான் இங்கே ஆத்ம உணர்வில் நிலைத்திருந்து தந்தையை நினைவு செய்கின்றேனா? சிவசக்தி பாண்டவசேனை நினைவு கூரப்படுகின்றது. சிவபாபாவின் சேனைகளான நீங்கள் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள். அந்தப் பௌதீகமான சேனையில் இளமையானவர்கள் மாத்திரமே இருக்கின்றனர், அங்கே வயதானவர்களோ, குழந்தைகளோ இருப்பதில்லை. இந்தச் சேனையில் இளையவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் போன்ற அனைவரும் உள்ளனர். அனைவரும் இங்கே அமர்ந்திருக்கின்றனர். இது மாயையை வெற்றி கொள்கின்ற சேனையாகும். நீங்கள் ஒவ்வொருவரும் மாயையை வெற்றி கொண்டு, உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து கோர வேண்டும். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உங்கள் புலனங்கங்கள் அதிகளவில் உங்களை ஏமாற்றுகின்றன. எந்தப் புலனங்கம் உங்களை இன்று ஏமாற்றியது என உங்கள் அட்டவணையில் எழுதுங்கள். “இன்று நான் இன்னார், இன்னாரைப் பார்த்து அவளைத் தொட விரும்பினேன்.” கண்களே அதிகளவு சேதத்தை ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு புலனங்கத்தையும் சோதியுங்கள். எந்தப் புலனங்கம் அதிகளவு சேதத்தை ஏற்படுத்துகின்றது? இதை அடிப்படையாகக் கொண்ட சூர்தாஸின் (தன்னையே குருடாக்கிக் கொண்டவர்) உதாரணம் உள்ளது. நீங்கள் உங்களையே சோதித்துப் பார்க்க வேண்டும். கண்கள் உங்களை அதிகளவில் ஏமாற்ற முடியும். மாயை நல்ல குழந்தைகளையும் ஏமாற்றுகின்றாள். அவர்கள் நல்ல சேவையைச் செய்த போதிலும், அவர்களின் கண்கள் அவர்களை அதிகளவில் ஏமாற்றுகின்றன. நீங்கள் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் அவைகளே உங்கள் எதிரிகளாகும். அவை உங்கள் அந்தஸ்தையே அழிவடையச் செய்கின்றன. விவேகமான குழந்தைகள் இதை மிக நன்றாகக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் சட்டைப் பையில் ஒரு டயறியை வைத்திருங்கள். பக்தி மார்க்கத்தில் அவர்களின் புத்தி தவறான வழியில் செல்லும்போது, அவர்கள் தங்களையே கிள்ளிக் கொள்வார்கள். நீங்களும் உங்களைத் தண்டிக்க வேண்டும். நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் புலன்கள் உங்களை ஏமாற்றவில்லையே என்பதைச் சோதித்துக் கொள்ளுங்கள். அவை ஏமாற்றினால் அப்பால் சென்று விடுங்கள். அந்த நபரைப் பார்த்துக் கொண்டு அங்கே நிற்காதீர்கள். ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் அதிகளவு குழப்பங்கள் (தீயபார்வை) உள்ளன. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்தவுடன் அங்கே விகாரமான பார்வை ஏற்படுகிறது. இதனாலேயே சந்நியாசிகள் தங்கள் கண்களை மூடியவாறு அமர்ந்திருக்கின்றார்கள். சில சந்நியாசிகள் பெண்களுக்குத் தமது முதுகைக் காட்டியவாறு அமர்ந்துள்ளனர். அந்த சந்நியாசிகள் எதனைப் பெறுகின்றார்கள்? இவர்கள் ஒன்று அல்லது இரண்டு மில்லியன்களையோ அல்லது ஒரு பில்லியனையோ சேகரிக்கின்றனர். அவர்கள் மரணித்ததும் அனைத்துமே முடிந்துவிடுகிறது. பின்னர் அவர்கள் அடுத்த பிறவியில் மீண்டும் பணத்தைச் சேகரிக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பெறுகின்ற அனைத்தும் அழியாத ஆஸ்தியாகின்றது. அங்கே செல்வத்துக்கான பேராசை இருக்க மாட்டாது. நீங்கள் பெரும் பிரயத்தனம் செய்யும் அளவிற்கு அங்கே உங்களுக்கு எந்தக் குறையும் இருக்க மாட்டாது. கலியுக இறுதிக்கும், சத்தியயுக ஆரம்பத்துக்கும் இடையில், பகலுக்கும் இரவுக்கும் இடையிலான வேறுபாடுள்ளது. அங்கே எல்லையற்ற சந்தோஷம் உள்ளது, இங்கே எதுவுமே இல்லை. ‘சங்கமம்’ என்ற வார்த்தையுடன் “அதிமேன்மையான” என்ற வார்த்தையையும் நிச்சயமாகச் சேர்த்து எழுதுங்கள் என பாபா சதா கூறுகின்றார். நீங்கள் வார்த்தைகளைத் தெளிவாகப் பேசவேண்டும். ஏனெனில் அது விளங்கப்படுத்த இலகுவாக இருக்கும். மனிதர்கள் தேவர்களாக மாற்றப்பட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. ஆகையால் அவர் நிச்சயமாக அவர்களைத் தேவர்களாக மாற்றுவதற்கு, நரகவாசிகளைச் சுவர்க்க வாசிகளாக மாற்றுவதற்கு சங்கம யுகத்திலேயே வரவேண்டும். மனிதர்கள் காரிருளில் உள்ளனர். சுவர்க்கம் என்றால் என்ன என்று அவர்கள் அறியமாட்டார்கள். ஏனைய மதத்தவர்களால் சுவர்க்கத்தைப் பார்க்கவும் முடியாது. இதனாலேயே பாபா கூறுகின்றார்: உங்கள் தர்மம் ஒன்றே அதிகளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்றது. அந்த இடம் சுவர்க்கம் என்று அழைக்கப்படுகின்றது. ஆயினும் தாங்களும் சுவர்க்கத்துக்குச் செல்லலாம் என அவர்கள் புரிந்து கொள்வதில்லை. எவருமே இதை அறிய மாட்டார்கள். பாரத மக்களும் இதை மறந்து விட்டார்கள். நூறாயிரக்கணக்கான ஆண்டுகளின் முன்னர் சுவர்க்கம் இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். கிறிஸ்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் சுவர்க்கம் இருந்ததாக கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர். இலக்ஷ்மியும், நாராயணனும் தேவியும் தேவரும் என அழைக்கப்படுகின்றனர். கடவுளே நிச்சயமாக தேவ, தேவியரை உருவாக்குகின்றார். எனவே நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். உங்கள் அட்டவணையை ஒவ்வொரு நாளும் சோதியுங்கள். எந்தப் புலனங்கம் உங்களை ஏமாற்றியது? நாக்கும் குறைந்ததல்ல. உங்களிற் சிலர் நல்லவற்றைக் காணும்போது, அதை இரகசியமாக உண்கின்றீர்கள். நீங்கள் அதைப் பாவம் எனப் புரிந்து கொள்வதில்லை. ஆனால் அதுவும் திருடுவதே. சிவபாபாவின் யக்யத்தில் இருந்து திருடுவது மிகவும் தீங்கானது. ஒரு வைக்கோலைத் திருடுபவர், ஆயிரத்தையும் திருடுகின்ற பழக்கத்தைக் கொண்டிருப்பார். மாயை பலரை அவர்களின் மூக்கைப் பிடிக்கின்றாள். இந்தத் தீய பழக்கங்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் உங்களைத் தண்டிக்க வேண்டும். நீங்கள் தீயபழக்கங்களைக் கொண்டிருக்கும்வரை, உங்களால் உயர்ந்த அந்தஸ்தைக் கோரமுடியாது. சுவர்க்கத்துக்குச் செல்வது ஒன்றும் பெரிய விடயமல்ல. ஆயினும் ஒரு அரசன் அல்லது அரசியாக ஆகுவதற்கும் ஒரு பிரஜையாக ஆகுவதற்கும் இடையில் அதிகளவு வேறுபாடு உள்ளது. எனவே தந்தை கூறுகின்றார்: உங்கள் புலனங்கங்கள் மீது கவனம் செலுத்துங்கள். எந்தப் புலனங்கம் உங்களை ஏமாற்றுகின்றது? அட்டவணை ஒன்றை வைத்திருங்கள். ஏனெனில் இதுவும் ஒரு வியாபாரமே ஆகும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: என்னுடன் வியாபாரம் செய்ய விரும்பினால், நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கோர விரும்பினால், ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். தந்தை வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார், ஆனால் மாயை உங்கள் வழியில் தடைகளை ஏற்படுத்துகின்றாள். அவள் உங்களை ஸ்ரீமத்தைப் பின்பற்ற அனுமதிப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: நீங்கள் தவறு செய்கின்றபோது, அதற்காக அதிகளவு வருந்த வேண்டியதுடன், ஒருபோதும் உயர்ந்த அந்தஸ்தையும் கோரமுடியாது என்பதையும் மறக்க வேண்டாம். இந்த நேரத்தில் நீங்கள் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக ஆகுவோம் எனச் சந்தோஷமாகக் கூறுகின்றீர்கள். ஆயினும் நீங்கள் தொடர்ந்தும் உங்களையே கேட்கவேண்டும்: எனது புலனங்கங்கள் என்னை ஏமாற்றுகின்றனவா? முன்னேறிச் செல்வதற்காகத் தந்தை உங்களுக்குக் கொடுக்கும் வழிகாட்டல்களைத் தொடர்ந்தும் நடைமுறையில் இடுங்கள். நாள் முழுவதற்குமான அட்டவணையைப் பாருங்கள். பல தவறுகள் தொடர்ந்தும் செய்யப்படுகின்றன. கண்கள் உங்களை அதிகளவில் ஏமாற்றுகின்றன. சிலநேரங்களில் நீங்கள் சிலர் மீது இரக்கப்பட்டு, அவருக்கு உணவோ அல்லது பரிசுப்பொருட்கள் போன்றவற்றையோ கொடுக்க விரும்புகின்றீர்கள். அதில் அதிகளவு நேரம் வீணாக்கப்படுகின்றது. மாலையின் ஒரு மணி ஆகுவதற்கு அதிகளவு முயற்சி எடுக்கின்றது. எட்டு மணிகளே பிரதானமானவர்கள் ஆவர். ஒன்பது இரத்தினங்கள் பற்றியே பேசப்படுகின்றது. ஒன்று பாபாவும், பின்னர் எட்டு மணிகளும் உள்ளனர். மத்தியில் இருக்கும் இரத்தினமே பாபாவைக் குறிக்கின்றது. மக்கள் தீயசகுனங்களை அனுபவம் செய்யும்போது, ஒன்பது இரத்தினங்கள் பதித்த மோதிரத்தை அணியும்படி கேட்கப்படுகின்றார்கள். பல முயற்சியாளர்கள் மத்தியில், எட்டுப்பேரே திறமைச் சித்தி அடைகின்றார்கள். எட்டு இரத்தினங்கள் பற்றி அதிகளவு புகழ் உள்ளது. நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகும்போது புலனங்கங்கள் உங்களை ஏமாற்றுகின்றன. தமது தலை மீது பல பாவச்சுமைகள் உள்ளன என்ற உணர்வு, பக்தி மார்க்கத்திலும் அவர்களுக்கு உள்ளது. அவர்கள் தானம் செய்வதாலோ அல்லது புண்ணியம் செய்வதாலோ தமது பாவங்கள் அழிக்கப்படலாம் என உணர்கின்றனர். சத்தியயுகத்தில் கவலைப்படுவதற்கு எதுவுமேயில்லை. ஏனெனில் அங்கே இராவண இராச்சியம் இருப்பதில்லை. இங்கே நடப்பவையே அங்கேயும் நடந்திருந்தால், சுவர்க்கத்துக்கும், நரகத்துக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இருக்க மாட்டாது. அத்தகைய உயர்ந்த அந்தஸ்தை எவ்வாறு கோருவது எனக் கடவுள் இங்கே அமர்ந்திருந்து கற்பிக்கின்றார். உங்களால் பாபாவை நினைவு செய்ய முடியாதுவிடின், அப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியரை நினைவு செய்யுங்கள். பின்னர் எங்களுடைய பாபாவே சற்குருவும் ஆவார் என நீங்கள் நினைவு செய்யமுடியும். அசுர வழிகாட்டல்களைப் பின்பற்றியதால், மனிதர்கள் தந்தையை அதிகளவு அவமரியாதை செய்துள்ளனர். தந்தை இப்பொழுது அனைவரையும் ஈடேற்றுகின்றார். குழந்தைகளாகிய நீங்களும் அனைவரையும் ஈடேற்ற வேண்டும். எவரைப் பற்றியும் அவமரியாதை செய்யவும் கூடாது. எவர் மீதும் தூய்மையற்ற பார்வையையும் கொண்டிருக்கக் கூடாது. இல்லையெனில் உங்களுக்கு நீங்களே இழப்பை ஏற்படுத்துவீர்கள். அந்த அதிர்வலைகள் பின்னர் மற்றவர்களையும் பாதிக்கும். தந்தை கூறுகின்றார்: இலக்கு அதி உயர்ந்தது. ஒவ்வொரு நாளும் உங்கள் அட்டவணையைப் பாருங்கள்: நான் ஏதாவது பாவச்செயல்களை செய்துள்ளேனா? இது பாவச்செயல்கள் நிறைந்த உலகம், பாவச் செயல்கள் செய்வதற்கான காலகட்டமாகும். பாவச் செயல்களை வெற்றிகொண்ட தேவர்களின் காலகட்டத்தை எவருமே அறியமாட்டார்கள். இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னர் பாவத்தை வென்றவர்களின் சகாப்தம் தொடங்கியது எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். பின்னர் விகாரங்களின் சகாப்தம் தொடங்கியது. இங்குள்ள அரசர்களும் தொடர்ந்தும் பாவச்செயல்களைச் செய்கின்றனர். இதனாலேயே நான் உங்களுக்கு செயல், நடுநிலைச்செயல், பாவச்செயல் பற்றிய கர்மதத்துவத்தை விளங்கப்படுத்துகின்றேன் எனத் தந்தை கூறுகின்றார். இராவண இராச்சியத்தில் உங்கள் செயல்கள் பாவகரமானவை. சத்தியயுகத்தில் செயல்கள் நடுநிலையானவை. அங்கே பாவங்கள் செய்யப்படுவதில்லை, அங்கே விகாரம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது மூன்றாவது ஞானக்கண்ணைப் பெற்றுள்ளீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையினால் திரிநேத்ரிகளாகவும், திரிகாலதரிசிகளாகவும் ஆக்கப்பட்டுள்ளீர்கள். எந்த மனிதராலும் உங்களை இவ்வாறு ஆக்கமுடியாது. தந்தையே உங்களை இவ்வாறு ஆக்குகின்றார். முதலில் நீங்கள் ஆஸ்திகர்களாகி, பின்னர் திரநேத்ரிகளாகவும், திரிகாலதரிசிகளாகவும் ஆகின்றீர்கள். முழுநாடகத்தின் இரகசியமும் உங்கள் புத்திகளில் உள்ளது. அசரீரி உலகம், சூட்சும உலகம், 84 பிறவிகளின் சக்கரம் அனைத்தும் உங்கள் புத்திகளிலே உள்ளன. பின்னர் அனைத்து மதங்களும் வருகின்றன. அவை தொடர்ந்தும் விரிவாக்கம் அடைகின்றன. அந்த மதஸ்தாபகர்களை குருமார் என அழைக்கமுடியாது. ஒரேயொரு சற்குருவே அனைவருக்கும் சற்கதி அருள்கின்றார். ஏனைய அனைவரும் சற்கதி அருள வருவதில்லை, அவர்கள் மதங்களின் ஸ்தாபகர்கள் ஆவார்கள். கிறிஸ்துவை நினைவு செய்வதன் மூலம் எவருமே சற்கதி அடைவதில்லை. எவருடைய பாவங்களும் அழிக்கப்படுவதும் இல்லை. அவர்கள் அனைவரும் பக்தியின் வரிசையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் மாத்திரமே இந்த ஞானவரிசையில் உள்ளீர்கள். நீங்கள் வழிகாட்டிகள் ஆவீர்கள். நீங்கள் அனைவருக்கும் அமைதிதாமத்துக்கும், சந்தோஷ தாமத்துக்குமான பாதையைக் காட்டுகின்றீர்கள். தந்தையே விடுதலையாக்குபவரும், வழிகாட்டியும் ஆவார். தந்தையை நினைவு செய்வதன் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்பட முடியும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உங்கள் பாவங்களை அழிப்பதற்கு முயற்சி செய்கின்றீர்கள். ஆகையால் ஒருபுறம் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும், மறுபுறம் நீங்கள் எந்தப் பாவச் செயல்களும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். முயற்சி செய்கையில், நீங்கள் பாவச் செயல்கள் செய்தால் நூறுவீதம் தண்டனை இருக்கும். முடிந்தளவிற்கு எந்தப்பாவச் செயல்களும் செய்யாதிருக்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் பாவம் செய்வது அதிகரிப்பதுடன், உங்கள் பெயரும் அவமதிக்கப்படும். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என நீங்கள் தெரிந்து கொள்ளும்போது, நீங்கள் எந்தப் பாவச்செயல்களையும் செய்யக்கூடாது. ஒரு சிறிய பொருளோ அல்லது பெரிய பொருளோ திருடப்பட்டாலும் அதனால் பாவம் செய்யப்படுகின்றது. இந்தக் கண்கள் உங்களை அதிகளவில் ஏமாற்றுகின்றன. தந்தை குழந்தைகளின் நடவடிக்கைகளில் இருந்து புரிந்து கொள்கின்றார். “இவர் எனது மனைவி” என்ற எண்ணம் ஒருபோதும் இருக்கக்கூடாது. நாங்கள் பிரம்மாகுமாரர்கள், குமாரிகள். நாங்கள் சிவபாபாவின் பேரக்குழந்தைகள். நாங்கள் பாபாவுக்குச் சத்தியம் செய்து ஒரு ராக்கியைக் கட்டி உள்ளோம். ஆகவே, எமது கண்கள் ஏன் எங்களை ஏமாற்றுகின்றன? நினைவு சக்தியினால் உங்களின் பௌதீக அங்கங்கள் எதனாலும் ஏமாற்றப்படுவதில் இருந்தும் விடுபட முடியும். இதற்கு அதிகளவு முயற்சி தேவை. தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதுடன், உங்கள் அட்டவணையையும் எழுதுங்கள். நான் தந்தையிடம் இருந்து முழு ஆஸ்தியையும் நிச்சயமாகக் கோருவதுடன், ஆசிரியருடன் முழுமையாகக் கற்பேன் எனக் கணவனும், மனைவியும் இவ்வாறு தங்களிடையே பேசிக்கொள்ள வேண்டும். இந்த எல்லையற்ற ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்ற அவ்வாறான ஆசிரியரை நீங்கள் ஒருபோதும் எங்குமே கண்டுகொள்ள முடியாது. இலக்ஷ்மி, நாராயணனிடமே இந்த ஞானம் இல்லாதபோது, அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களால், எவ்வாறு இந்த ஞானத்தைக் கொண்டிருக்க முடியும்? தந்தை கூறுகின்றார்: நீங்கள் மாத்திரமே உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இந்த ஞானத்தைக் கொண்டிருப்பதுடன், அதை நீங்கள் சங்கமயுகத்திலேயே கொண்டிருக்கின்றீர்கள். என்ன செய்யவேண்டும், எவ்வாறு அதைச் செய்ய வேண்டுமென பாபா அதிளவில் உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார், ஆனால் நீங்கள் இங்கிருந்து எழுந்ததும் அனைத்தும் முடிவடைகின்றன. சிவபாபாவே உங்களுக்குக் கூறுகின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்வதில்லை. எப்பொழுதும் சிவபாபாவே உங்களுடன் பேசுகின்றார் எனக் கருதுங்கள். இவரின் படத்தையும் வைத்திருக்க வேண்டாம். இந்த ரதம் கடனாகவே எடுக்கப்பட்டுள்ளது. இவரும் ஒரு முயற்சியாளரே ஆவார். அவர் கூறுகின்றார்: நானும் பாபாவிடம் இருந்தே ஆஸ்தியைப் பெறுகின்றேன். இவரும் உங்களைப் போன்றே மாணவ வாழ்க்கையை மேற்கொள்கின்றார். நீங்கள் முன்னேறிச் செல்லும்போது புகழப்படுவீர்கள். நீங்கள் இப்பொழுது பூஜிக்கத்தகுந்த தேவர்களாக ஆகுவதற்காகவே கற்கின்றீர்கள். பின்னர் சத்தியயுகத்தில் நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் இந்த விடயங்களை விளங்கப்படுத்த முடியாது. சிலரது பாக்கியத்தில் இது இல்லையெனில், சிவபாபா எவ்வாறு வந்து கற்பிக்கின்றார் என அவர் சந்தேகத்தைக் கொண்டிருப்பார். “நான் இதை நம்பவில்லை” எனக் கூறுவார். அவர் இதை நம்பவில்லை எனில் எவ்வாறு சிவபாபாவை நினைவு செய்ய முடியும்? அவ்வாறாயின், அவரது பாவங்களும் அழிக்கப்படமாட்டாது. வரிசைக்கிரமமான ஓர் இராச்சியம் உருவாக்கப்படுகின்றது. பணிப்பெண்களும், வேலையாட்களும் தேவைப்படுகின்றனர். அரசர்களுக்கு சீதனத்தின் ஒரு பங்காக பணிப்பெண்களும் கொடுக்கப்படுகின்றனர். மக்கள் இங்கே பல பணிப்பெண்களையும், வேலைக்காரர்களையும் வைத்திருக்கிறார்கள். எனவே சத்தியயுகத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் எனக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் பணிப்பெண்களாகவோ, அல்லது வேலைக்காரர்களாகவோ ஆகுகின்ற தளர்வான முயற்சியைக் செய்யக் கூடாது. நீங்கள் இப்பொழுது இறக்க நேரிட்டால் என்ன அந்தஸ்தைக் கோருவேன் என பாபாவிடம் வினவினால், உங்களுடைய சொந்த அட்டவணையை பார்க்குமாறு உங்களுக்கு பாபா உடனடியாகவே கூறுவார். இறுதியில் நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக கர்மாதீத ஸ்திதியை அடைவீர்கள். இது ஓர் உண்மையான வருமானம். மக்கள் இரவுபகலாக ஏனைய வருமானங்களை சம்பாதிப்பதில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். பங்குத் தரகர்கள் ஒரு கையால் உணவருந்திக் கொண்டு, மறு கையால் தொலைபேசியூடாக தங்கள் வியாபாரத்தைச் செய்கின்றனர். இப்பொழுது என்னிடம் கூறுங்கள், எவ்வாறு அத்தகைய நபர் இந்த ஞானமார்க்கத்தைப் பின்பற்ற முடியும்? எனக்கு நேரமில்லை என்றே அவர் கூறுவார். ஆ! ஆனால் நீங்கள் இங்கே உண்மையான இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். தந்தையை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். மக்கள் விசேடமான எட்டு தேவிகள் போன்றோரை நினைவு செய்கிறார்கள். அவர்களை நினைவு செய்வதனால் எதனையும் அடைய முடியாது. பாபா மீண்டும். மீண்டும் தொடர்ந்தும் ஒவ்வொரு விடயத்தையும் விளங்கப்படுத்துகின்றார். ஏனென்றால், அவர் இந்த ஒரு குறித்த விடயத்தை விளங்கப்படுத்தவில்லை என நீங்கள் எவருமே கூறமுடியாது. குழந்தைகளாகிய நீங்கள் செய்தியை அனைவருக்கும் கொடுக்கவேண்டும். நீங்கள் ஆகாய விமானங்களிலிருந்து துண்டுப் பிரசுரங்களையும் போட முயற்சி செய்யவேண்டும். சிவபாபா இதனையே கூறுகின்றார் என துண்டுப்பிரசுரங்களில் எழுதுங்கள். பிரம்மாவும், சிவபாபாவின் குழந்தை ஆவார். இவர் பிரஜாபிதாவாக இருப்பதால் இவரும் தந்தையே. அத்துடன் அவரும் தந்தையே ஆவார். “சிவபாபா” எனக்கூறும்போது பல குழந்தைகள் அன்புக்கண்ணீர் வடிக்கின்றனர். அவர்கள் இன்னமும் அவரைக் காணவில்லை. எனவே பாபா எப்போது வந்து உங்களைச் சந்திப்பது? என அவர்கள் எழுதுகின்றனர். பாபா இந்த பந்தனத்தில் இருந்து என்னை விடுவியுங்கள். பலர் பாபாவின் காட்சிகளையும் பின்னர் ஓர் இளவரசரின் காட்சிகளையும் கண்டார்கள். நீங்கள் முன்னேறிச் செல்லும்போது பலர் காட்சிகளைக் காண்பார்கள். ஆனால் நீங்களும் முயற்சி செய்யவேண்டும். ஒருவர் மரணிக்கின்றபோது, கடவுளை நினைவு செய்யுமாறு அவருக்குக் கூறப்படுகின்றது. இறுதியில் அனைவரும் எவ்வாறு அதிகளவு முயற்சி செய்வார்கள் என நீங்கள் பார்ப்பீர்கள். அவர்கள் அவரை நினைவு செய்யத் தொடங்குவார்கள். தந்தை உங்களுக்கு அறிவுரை வழங்குகின்றார்: குழந்தைகளே, நேரம் கிடைக்கும் போதெல்லாம் முயற்சி செய்யுங்கள். தந்தையின் நினைவில் நிலைத்திருந்து உங்கள் பாவங்களை அழியுங்கள். அப்பொழுதே நீங்கள் தாமதித்து வந்திருந்தாலும் முன்னால் செல்ல முடியும். புகைவண்டி தாமதிக்கும் போது, அது இழந்த நேரத்தை பின்னர் எவ்வாறு ஈடுசெய்கின்றதோ, அவ்வாறே இங்கேயும் இழந்த நேரத்தை ஈடுசெய்ய உங்களுக்கு நேரம் உள்ளது. இங்கே வந்து உங்கள் வருமானத்தை சம்பாதிப்பதில் உங்களை ஈடுபடுத்துங்கள். உங்களுக்கு நன்மை பயப்பதற்கு என்ன செய்ய வேண்டுமெனத் தந்தை அறிவுரை வழங்குகின்றார். தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். ஆகாய விமானத்திலிருந்து துண்டுப் பிரசுரங்களைப் போடுங்கள். அதனால் நீங்கள் சரியான செய்தியையே கொடுக்கின்றீர்கள் என மக்கள் புரிந்து கொள்வார்கள். பாரதம் பாரிய தேசமாகும். அனைவருமே நிச்சயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது எவராலும் “பாபா இதுபற்றி நான் எதனையும் அறிந்து கொள்ளவில்லை” எனக் கூறமுடியாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. விவேகமானவராகி, உங்கள் கண்கள் உங்களை ஏமாற்றவில்லையா என்பதைச் சோதியுங்கள். உங்கள் புலனங்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாகி தவறான செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். நினைவு சக்தியினால் புலனங்களின் ஏமாற்றுதலில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்.

2. இந்த உண்மையான வருமானத்தைச் சம்பாதிப்பதற்கு நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் தாமதித்து வந்திருந்தாலும் முயற்சி செய்வதன் மூலம் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும். இதுவே உங்கள் பாவங்களை அழிப்பதற்கான நேரமாகும். ஆகையால் எந்தப்பாவச் செயல்களையும் செய்யாதீர்கள்.

ஆசீர்வாதம்:
ஒரு குழந்தையாகவும் ஓர் அதிபதியாகவும் இருக்கின்ற பாடத்தைக் கற்பதன் மூலம் அகங்காரம் அற்றவராகவும் அசரீரியானவராகவும் ஆகுவீர்களாக.

ஒரு குழந்தையாக இருத்தல் என்றால் ஓர் எல்லைக்கு உட்பட்ட வாழ்க்கையை மாற்றுதல் என்று அர்த்தம். ஒருவர் எத்தனை பெரியதொரு நாட்டின் அதிபதியாக இருந்தாலும் அல்லது அதிகளவு செல்வத்தின் அல்லது பெரிய குடும்பத்தின் அதிபதியாக இருந்தாலும், தந்தையின் முன்னால் எல்லோரும் குழந்தைகளே. பிராமணக் குழந்தைகளான நீங்களும் இப்போது கவலையற்ற சக்கரவர்த்திகளான குழந்தைகள் ஆகுகிறீர்கள். அப்போது, எதிர்காலத்தில், நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். ‘ஒரு குழந்தையும் அதிபதியும்’ என்ற விழிப்புணர்வு, சதா நீங்கள் அகங்காரம் அற்றவராகவும் அசரீரி ஸ்திதியிலும் இருப்பதை அனுபவம் பெறச் செய்யும். ஒரு குழந்தை ஆகுவது (பச்சா பன்னா) என்றால் மாயையிடம் இருந்து பாதுகாப்பாக இருத்தல் (பச் ஜானா) என்று அர்த்தம்.

சுலோகம்:
சந்தோஷமே பிராமண வாழ்க்கையின் ஆளுமை ஆகும். ஆகவே, சதா சந்தோஷமாக இருங்கள்.

அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியைச் சேமித்து, மேன்மையான சேவை செய்வதற்குக் கருவி ஆகுங்கள்.

இன்றுள்ள கோடீஸ்வரர்களால் நிறைவேற்ற முடியாத பணியை உங்களின் ஓர் எண்ணத்தால் செய்ய முடியும். அதனால் ஆத்மாக்களான நீங்கள் பல்கோடீஸ்வரர்கள் ஆகுகிறீர்கள். ஆகவே, மேன்மையான எண்ணங்களின் சக்தியைச் சேமித்து, மற்றவர்களையும் அதையே செய்யத் தூண்டுங்கள். சிறிதளவேனும் வீணானவற்றின் அசுத்தம் இல்லாதவாறு, உங்களின் மேன்மையான எண்ணங்களின் சக்தியை மிகவும் சுத்தம் ஆக்குங்கள். அப்போது மட்டுமே இந்தச் சக்தி அற்புதமான பணியைச் செய்யும்.