19.07.26    Avyakt Bapdada     Tamil Lanka Murli    18.01.2011     Om Shanti     Madhuban


இந்த வாழ்க்கையை வாழும்போதே தந்தை பிரம்மாவைப் போல், ஜீவன்முக்தி ஸ்திதியின் களிப்பை அனுபவம் செய்யுங்கள். உங்களின் மனதை வென்றவர் ஆகி அதன் மூலம் உலகை வென்றவர் ஆகுவதன் மூலம் தந்தைக்கு அன்புப் பரிசை வழங்குங்கள்.


இன்று, தந்தை பிரம்மா அவ்யக்த் ஆகிய விசேடமான நினைவு தினம் ஆகும். தந்தை பிரம்மாவின் அன்பு, குழந்தைகளான உங்கள் அனைவரின் கண்களிலும் கலந்துள்ளது. இன்று, அதிகாலை 4 மணிக்கு முன்னரே குழந்தைகளான உங்களின் அன்பு சூட்சும வதனத்தை வந்தடைந்தது. எனவே நீங்கள் தந்தை பிரம்மாவுடன் ஒரு சந்திப்பைக் கொண்டாடினீர்கள். அன்புச் சின்னங்கள், இதயபூர்வமான அன்பின் அடையாளங்கள், தந்தை பிரம்மாவை மாலைகளாக வந்தடைந்தன. குழந்தைகளான உங்களின் அன்பு, ஒவ்வொரு மாலையின் நறுமணத்திலும் கலந்திருந்தது. ஒவ்வொரு குழந்தையின் கண்களும் புன்னகையும் இதயத்தின் விடயங்களைப் பேசின. தந்தை பிரம்மாவும் ஒவ்வொருவருக்கும் அன்பின் பதிலை வழங்கினார். இப்போதும் ஒவ்வொரு குழந்தையும் தனது இதயபூர்வமான அன்பைக் கண்களின் பாஷையால் வழங்குவதைத் தந்தை கண்டார். இறையன்பானது ஒவ்வொரு குழந்தையையும் இலகுவாகத் தந்தைக்கு உரியவர் ஆக்குகிறது. இந்த அலௌகீக (ஆன்மீக) அன்பானது பாபா என்னுடையவர் - மேரா பாபா என்ற அனுபவத்தின் மூலம் அவரை உங்களுக்குச் சொந்தமாக ஆக்கியுள்ளது. குழந்தைகளான நீங்கள் ‘எனது பாபா’ எனக் கூறி இருப்பதனால் இந்த அன்பானது உங்களைத் தந்தையின் பொக்கிஷங்களுக்கு அதிபதிகள் ஆக்கியுள்ளது. எனது பாபா என்று நீங்கள் கூறிய உடனேயே நீங்கள் சகல பொக்கிஷங்களுக்கும் அதிபதி ஆகுகிறீர்கள். இந்த அன்பானது உங்களை ஒரு விநாடியில் உங்களின் சரீர உணர்வை மறக்கச் செய்து, உங்களை ஆத்ம உணர்வு உடையவர் ஆக்குகிறது. தந்தையைத் தவிர வேறு எதுவும் ஆத்மாக்களான உங்களைக் கவருவதில்லை. இந்த நாள் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது. இது நினைவு நாள் மட்டுமல்ல, ஆனால் சக்தி நாளும் ஆகும். ஏனென்றால் இந்த நாளிலேயே, தந்தை செய்விப்பவராகி (கரவன்ஹார்) குழந்தைகளுக்கு உலகச் சேவையைச் செய்வதற்கான (கரன்ஹார்) திலகத்தை வழங்கினார். தந்தையைக் காட்டுகின்ற மகன், பணியைச் செய்வதற்குக் கருவி ஆகினார். சேவையில் வெற்றி ஏற்படுவதற்காக, அவர் கரவன்ஹார் ஆகிக் குழந்தைகளைக் கரன்ஹார் ஆக்கினார். சேவையில் வெற்றி அடைவதற்கான வழிமுறை இந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பதே: நான் கரன்ஹார், கரவன்ஹார் என்னை அனைத்தையும் செய்ய வைக்கிறார். இந்த விழிப்புணர்வு அவசியம், ஏனென்றால் உங்களிடம் 63 பிறவிகளாக சரீர உணர்விற்கு உங்களைக் கொண்டு வந்த ‘நான்’ என்ற விழிப்புணர்வு உள்ளது. கரவன்ஹார் என்னை அனைத்தையும் செய்ய வைக்கிறார். நான் கரன்ஹார், ஒரு கருவி ஆவேன். இந்த விழிப்புணர்வுடன் உங்களை ஒரு கருவியாகக் கருதுங்கள். உங்களின் சரீர உணர்வு முடிவடைந்துவிடும். இதனாலேயே அவர் குழந்தைகளான உங்களைக் கரன்ஹார் ஆக்கினார், அவர் கரவன்ஹார் ஆகினார். நீங்கள் கரன்ஹாராக இருக்கும்போது இயல்பாகவே கருவியாகவும் பணிவாகவும் ஆகுகிறீர்கள். இப்போதும் பாப்தாதா குழந்தைகளான உங்களைச் சேவைக்குக் கருவிகள் ஆக்கியிருப்பதனால், சேவையின் பலனை நட்சத்திரங்களான சேவையாளர்களின் நெற்றிகளில் ஜொலிப்பதைத் தந்தை கண்டார். பெரும்பாலான குழந்தைகளின் சேவையைப் பார்த்து பாப்தாதா களிப்படைகிறார். இதனாலேயே தந்தை பிரம்மா குறிப்பாக இத்தகைய குழந்தைகளைப் பாராட்டுவதுடன் ‘ஆஹா குழந்தைகளே! ஆஹா!’ எனக் கூறுகிறார்.

தந்தை பிரம்மா குறிப்பாக அவர்கள் சேவைக்குக் கருவிகள் ஆகியிருப்பதுடன் சேவையை முன்னேற்றுவதற்காக சந்தோஷம் அடைந்து அவர்களைப் பாராட்டுகிறார். இப்போதும் தந்தை பிரம்மா குழந்தைகளான நீங்கள் தேவதை ஸ்திதியை அடைந்து அவரைப் போன்று ஆகவேண்டும் என்று சமிக்கை கொடுக்கிறார். குழந்தைகளான நீங்கள் கவனம் செலுத்துவதை பாப்தாதா பார்த்தார். தந்தை பிரம்மா சதா ஜீவன்முக்தி அடைந்திருந்தார். பெரிய குடும்பத்தைப் பராமரித்தல், அனைவரும் ஒரு யோகி வாழ்க்கை வாழச் செய்தல், அதிகளவு சேவையின் பொறுப்பைப் பார்த்துக் கொள்ளுதல், அனைவரையும் சதா சேவையில் முன்னேறச் செய்தல் என்ற பெரிய பொறுப்பை அவர் கொண்டிருந்தாலும் இந்தப் பொறுப்புக்கள் அனைத்தையும் கொண்டிருக்கும் அதேவேளை, அவர் ஜீவன்முக்தி வாழ்க்கையின் களிப்பையும் அனுபவம் செய்தார். இதனாலேயே, பக்தி மார்க்கத்தில், பிரம்மா ஒரு தாமரை ஆசனத்தில் அமர்ந்திருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. அவர் ஜீவன்முக்தி அடைந்ததுடன் இந்த நேரத்தின் ஜீவன்முக்தியின் களிப்பையும் அனுபவம் செய்தார். அத்துடன் குழந்தைகளான உங்கள் அனைவரையும் அவ்வாறே ஆக்கினார். இப்போதும் அவர் குழந்தைகளான உங்களுக்கு உங்களைத் தேவதைகள் ஆக்குவதற்கான பல்வேறு வழிமுறைகளைக் காட்டுகிறார். ஏனென்றால் தன்னைப் போன்றே நீங்களும் அவ்வாறு ஆகவேண்டும் என்றே அவர் விரும்புகிறார்.

ஒவ்வொரு குழந்தைக்கும் நல்லதோர் இலக்கு இருப்பதை பாப்தாதா கண்டார். உங்களின் இலட்சியம் என்ன என்று யாராவது உங்களைக் கேட்கும்போது நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் நிச்சயமாகத் தந்தைக்குச் சமமானவர் ஆகுவீர்கள் என்பதே ஆகும். எந்த முறையில் நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகுவீர்கள்? இந்த வாழ்க்கையில் நீங்கள் ஜீவன்முக்தியாக இருக்கும் வாழ்க்கையின் ஒரு மாதிரியாக ஆகுவீர்கள். உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வீட்டுவேலையில் நீங்கள் கவனம் செலுத்துவதை பாப்தாதா கண்டார். உங்களுக்கு அந்த அனுபவங்கள் உள்ளன, ஆனால் நீங்கள் அதை எல்லா வேளையும் செய்வதில்லை. உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலைக்கு ஏற்ப, சில குழந்தைகள் முயற்சி செய்ததுடன் ஒவ்வொரு மாதமும் கவனம் செலுத்தும் அறிக்கையை பாபா பெற்றார். சில பிராந்தியங்கள் ஒரு மாதத்திற்கான நல்லதொரு பெறுபேற்றை அறிவித்துள்ளனர். தமது அறிக்கைகளை அனுப்பியுள்ள பிராந்தியங்களுக்கு, ‘ஆஹா குழந்தைகளே! ஆஹா!’ என்று பாப்தாதா கூறி அவர்களைப் பாராட்டுகிறார். இப்போது பாப்தாதா எதை விரும்புகிறார்? நீங்கள் சிலவேளைகளில் நன்றாக இருந்தாலும் இப்போது ஒவ்வொரு குழந்தையும் எல்லா வேளையும் இவ்வாறு இருக்க வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். நீங்கள் நல்ல யோகிகள் ஆகியுள்ளீர்கள். ஆனால் இப்போது உங்களை சதா யோகிகள் ஆக்கவே அவர் விரும்புகிறார். பாப்தாதா குழந்தைகளான உங்களுக்குச் சில வேலைகளைக் கொடுத்துள்ளார்: நிலையாக இருப்பதற்கு, ‘சில வேளைகள்’ என்பதை எல்லா வேளையும் என்று ஆக்குவதற்காக ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு வழிமுறையை உருவாக்குங்கள். தமது மனங்களை வெல்பவர்கள், உலகையே வெல்கிறார்கள் என்ற கூற்று உள்ளது. இப்போது உங்களின் மனதில் நீங்கள் கேட்கின்ற எண்ணங்களை மட்டுமே உருவாக்க வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். ஏன்? உங்களின் பௌதீகப் புலன்கள் அனைத்தும் நீங்கள் விரும்பியதை விரும்பும் வேளையில் செய்கின்றன, அல்லவா? அதேபோல், உங்களின் மனமும் நீங்கள் அதை என்ன செய்ய வேண்டும் என்று கட்டளை இடுகிறீர்களோ அதை மட்டுமே செய்ய வேண்டும். நீங்கள் இதைப் பயிற்சி செய்கிறீர்கள். ஆனால் சிலவேளைகளில், நீங்கள் அதைப் பயிற்சி செய்வதில்லை. உங்களின் சக்திகள் என்ற கடிவாளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உங்களின் மனதை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று பாப்தாதா இப்போது விரும்புகிறார். தமது மனதை வெல்பவர்கள், உலகை வென்றவர்கள் ஆகுகிறார்கள் என்ற புகழ் யாருக்கு உரியது? இது குழந்தைகளான உங்களின் புகழே ஆகும். நீங்கள் இதை ஒவ்வொரு கல்பத்திலும் பெறுவதனால் இந்தப் புகழ் உள்ளது. உங்களின் பௌதீகப் புலன்கள் அனைத்தும் உங்களுக்கே உரியது என்று நீங்கள் சொல்கிறீர்கள். அதேபோல், உங்களின் மனம் உங்களுக்குச் சொந்தமானது என்றும் நீங்கள் சொல்கிறீர்கள். அது உங்களுடையது என்று சொல்வது என்றால், நீங்கள் அதன் அதிபதி என்று அர்த்தம். உங்களின் மனதில் என்ன எண்ணத்தை நீங்கள் கொண்டிருக்க விரும்புகிறீர்களோ, அது எவ்வளவு காலத்திற்கு இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, உங்களின் மனம் அதைச் செய்யக் கட்டுப்பட்டுள்ளது. ஏனென்றால், அது உங்களின் மனம். எனவே, இந்த அன்பான தினத்தில், பாப்தாதா உங்களுக்கு இந்த வீட்டுவேலையை வழங்க விரும்புகிறார்: நீங்கள் கொண்டிருக்க விரும்பும் எண்ணத்தை மட்டும் உருவாக்குங்கள். நீங்கள் தூய எண்ணங்களைக் கொண்டிருக்க விரும்பினால், வீணான எண்ணங்கள் ஏதாவது எழுமாயின், உங்களின் தூய எண்ணங்கள் அவற்றை முடித்துவிட வேண்டும். நீங்கள் யோகம் செய்ய விரும்பினால், ஆனால் உங்களின் சம்ஸ்காரங்களால் அதற்குப் பதிலாக வீணான எண்ணங்கள் தோன்றுமாயின், அல்லது நீங்கள் யோகம் செய்வதில் வெற்றி அடையவில்லை என்றால், நீங்கள் இந்தக் கட்டுப்பாட்டை விருத்தி செய்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு மணிநேரத்திற்கு யோகம் செய்ய விரும்பினால், உங்களின் மனம் குழப்பம் அடைய அனுமதிக்காதீர்கள். ஆத்மாவே அதிபதி ஆவார். மனம் அதிபதி கிடையாது. மனம், ஆத்மாவின் சகபாடி ஆகும். எனவே, உங்களின் சகபாடிக்கு அன்புடன் கட்டளை இடுங்கள். உங்களின் மனதை வென்றவர் ஆகுங்கள். அவ்வப்போது வீணான எண்ணங்களைத் தாம் கொண்டிருப்பதாகப் பல குழந்தைகளின் செய்திகளை பாப்தாதா பெறுகிறார். உங்களின் விருப்பத்திற்கு மாறாக உங்களுக்குள் வீணான எண்ணங்கள் தோன்றுகின்றன. இதை நீங்கள் அதன் அதிபதியாக இருத்தல் என்று அழைக்க முடியுமா? உங்களுக்குத் தந்தை பிரம்மாவின் மீது அன்பு இருக்கிறதல்லவா? எனவே இன்று, தந்தை மிகுந்த அன்புடன் தனது இதயத்தின் ஆசையை உங்களுக்குக் கூறுகிறார். இப்போது, நீங்கள் நிச்சயமாக உங்களின் மனதை வென்றவர் ஆகவேண்டும், இதுவே உங்களை உலகை வென்றவர் ஆக்கும். நீங்கள் தந்தை பிரம்மாவிற்கு இந்த அன்புப் பரிசை வழங்குவீர்களா? உங்களிடம் அன்பு இருக்கும்போது, நீங்கள் எதைக் கொடுப்பீர்கள்? ஒரு பரிசு கொடுக்கப்படுகிறது, அல்லவா? எனவே இன்று, தந்தை பிரம்மா குழந்தைகளான உங்களிடம் இருந்து இந்தப் பரிசைக் கேட்கிறார். நீங்கள் தயாரா? நீங்கள் தயாரா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இன்றில் இருந்து எந்தவொரு வீணான எண்ணமும் வர அனுமதிக்கக்கூடாது என்ற அறிவுறுத்தல் உங்களுக்கு வழங்கப்பட்டால், உங்களால் அதைச் செய்ய முடியுமா? இன்று, யோக ஸ்திதியில் இருந்தவண்ணம் உங்களால் செயல்களைச் செய்ய முடிகிறதா? அத்துடன் உங்களால் இரண்டு அல்லது நான்கு மணிநேரம் யோகம் செய்ய முடிகிறதா? உங்களால் இதைச் செய்ய முடியுமா? நீங்கள் இதைச் செய்வீர்களா? ஓகே, இப்போது கடந்ததைக் கடந்தாக ஆக்குங்கள்! இப்போது இன்றில் இருந்து வீணான எண்ணங்கள் அனைத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று உங்களின் மனதிற்குக் கட்டளை இடுங்கள். நீங்கள் இதைச் செய்ய வேண்டும், அப்படியல்லவா?

இன்று, இந்த இலட்சியத்தை யோகத்தில் கொண்டிருங்கள். அப்போது நாள் முழுவதும் உங்களால் அதற்கேற்ப முயற்சி செய்ய வேண்டும், செய்வீர்களா? தந்தையின் மீதுள்ள அன்பினால், தந்தை என்ன சொல்கிறாரோ அதை நீங்கள் செய்ய வேண்டும். வீணான எண்ணங்கள் அனைத்தையும் முடிப்பதற்கான வழிமுறை, உங்களின் இதயத்தில் பிரம்மாபாபாவின் அன்பை நினைவு செய்வதாகும். நீங்கள் அவரை பௌதீக ரூபத்தில் கண்டிருந்தாலென்ன அல்லது காணாவிட்டாலென்ன, நீங்கள் அனைவரும் உங்களின் புத்தியின் சக்தியால் அவரைப் பார்த்திருக்கிறீர்கள்தானே? நீங்கள் அவரைப் பார்த்திருக்கிறீர்களா, இல்லையா? பாபாவின் அன்பை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், தந்தை பிரம்மாவின் பராமரிப்பை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்று சொல்பவர்கள், அதற்கேற்ப நீங்கள் முன்னேறுகிறீர்களா? அப்படி என்றால், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா. உங்களின் கைகளை உயர்த்தியதால் நீங்கள் பாபாவை களிப்பிற்கு உள்ளாக்கினீர்கள். குறைந்தபட்சம் உங்களுக்கு அந்தத் தைரியம் இருப்பதை இட்டு பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். எவ்வாறாயினும், நீங்கள் தைரியத்தை இழக்கும்போது, எப்போதும் தந்தையுடனான உங்களின் உறவுமுறைகளை நினைவு செய்யுங்கள். எத்தனை உறவுமுறைகள் உள்ளன? சிலவேளைகளில் அவர் தந்தை, சிலவேளைகளில் அவர் குழந்தையாகவும் ஆகுகிறார். சிலவேளைகளில் அவர் தந்தை, சிலவேளைகளில் அவர் உங்களின் நண்பராகவும் இருக்கிறார். உறவுமுறைகளை அல்லது பேறுகளை நினைவு செய்யுங்கள். பேறுகளையும் உறவுமுறைகளையும் நினைவு செய்யுங்கள். இன்று உங்களின் இதயங்களில் நீங்கள் அவற்றை நினைவு செய்கிறீர்கள், அல்லவா? இந்த முறையில் நீங்கள் நினைவு செய்தால், அன்பை விருத்தி செய்து கொள்வீர்கள். இன்றும், நீங்கள் அனைவரும் தந்தை பிரம்மாவின் அன்பை உங்களின் இதயங்களில் அனுபவம் செய்கிறீர்கள், அல்லவா? ஏதாவது சரியில்லாதபோது, உறவுமுறைகளையும் பேறுகளையும் நினைவு செய்யுங்கள். தந்தை ஒவ்வொரு குழந்தையுடனும் ஒத்துழைக்கிறார். நீங்கள் அனைவரும் செய்ய வேண்டியது, அவரை நினைவு செய்வதே ஆகும். இன்று நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? இந்தப் புகழின் சொரூபம் ஆகுங்கள்: மனதை வெல்பவர்கள், உலகை வெல்வார்கள். உங்களின் கட்டளைகளால் உங்களின் மனதைக் கட்டுப்படுத்துங்கள். இப்போது, நீங்கள் அதைச் சிறிது சுதந்திரமாக விட்டிருப்பதனால், அது தனது வேலையைக் காட்டுகிறது. இப்போது, கவனம் செலுத்துங்கள்! உங்களின் மனம் உங்களின் கட்டளைகளின்படி நடக்க வேண்டும். நீங்கள் உங்களின் மனதின் கட்டளைகளின்படி நடப்பதாக இருக்கக்கூடாது. நீங்கள் இந்த ஞான விடயங்களை ஆழ்ந்து நினைவு செய்ய விரும்புகிறீர்கள். ஆனால் அதற்குப் பதிலாக, உங்களின் மனதில் பயனற்ற எண்ணங்கள் தோன்றுகின்றன. எனவே, என்ன நடந்தது? உங்களின் மனம் அதிபதியா அல்லது நீங்கள் அதிபதியா? நீங்கள் அனைவரும் உங்களின் வீட்டுவேலையைப் புரிந்து கொண்டீர்களா? நீங்கள் உங்களின் மனதை வெற்றி கொள்ள வேண்டும். உங்களின் கட்டளை எதுவாக இருந்தாலும், அதற்கு மனம் கீழ்ப்படிய வேண்டும். நிச்சயமாக அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் அனைவரும் செய்ய வேண்டியது, கவனம் செலுத்துவதே ஆகும். தாய்மார்களே, ஆசிரியர்களே, இது சாத்தியமா? இது சாத்தியமா? ஆசிரியர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! ஆசிரியர்கள் தமது கைகளை உயர்த்துகிறார்கள். இது சாத்தியம் என்று நீங்கள் நினைத்தால், உங்களின் கைகளை அசையுங்கள்! குறைந்தபட்சம், முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள், உங்களின் கைகளை அசையுங்கள்! சகோதரர்களே, உங்களின் கைகளை அசையுங்கள்! ஆஹா! தந்தை பிரம்மாவிற்கு அன்புப்பரிசை நீங்கள் கொடுத்து விட்டீர்கள் என்பதே இதன் அர்த்தம். அதற்காகப் பாராட்டுக்கள். பாராட்டுக்கள்.

இது நல்லது. பாப்தாதாவின் மீதுள்ள அன்பு, உங்களுக்கு அதிகளவு ஒத்துழைப்பைக் கொடுக்கும். உங்களின் இதயபூர்வமாக ‘எனது பாபா, எனது பாபா’ என்று நீங்கள் கூறும்போதெல்லாம், ‘எனது’ என்பவர் யார்? தந்தையின் நீண்ட காலம் தொலைந்து இப்போது கண்டு எடுக்கப்பட்டுள்ள குழந்தை. எத்தனை தடவைகள் நீங்கள் அனைவரும் மேரா பாபா, மேரா பாபா எனச் சொல்கிறீர்கள்? எத்தனை தடவைகள் நீங்கள் மேரா பாபா எனச் சொல்கிறீர்கள்? தந்தை அதைக் கேட்கிறார், அத்துடன் அனைத்தையும் குறித்துக் கொள்கிறார். இரட்டை வெளிநாட்டவர்களான நீங்களும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள், அல்லவா? இரட்டை வெளிநாட்டவர்கள் பருவ காலம் முழுவதிலும் இருந்ததை பாப்தாதா பார்த்தார். ஒவ்வொரு சந்திப்பிலும் நீங்கள் மதுவனத்தில் இருக்கிறீர்கள். இப்போதும் 350 பேர் இருக்கிறார்கள். நீங்கள் உங்களின் சொந்த முறைக்கும் வருகிறீர்கள். ஒவ்வொரு முறைக்கும் எங்கேயாவது இருந்து ஒருசிலர் வருகிறார்கள். இப்போது, பாப்தாதா தொடர்ந்து பெறுபேறுகளைப் பார்க்கிறார். நீங்கள் அனைவரும் தொடர்ந்து உங்களின் பெறுபேறுகளை பற்றற்ற பார்வையாளர்களாக இருந்து பார்க்க வேண்டும். நீங்கள் அதிபதிகள் ஆகுவீர்கள் என்று பாப்தாதாவிற்கு சத்தியம் செய்திருப்பதை நினைவு செய்யுங்கள். குறைந்தபட்சம், பாப்தாதாவால் ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் இந்தப் பணியை வழங்குவார்: அடுத்த வாரம் அல்லது இரண்டு வார காலங்களில், நீங்கள் பெறுபேற்றை பாப்தாதாவிற்குக் கொடுங்கள். உங்களுக்கு வீணான எண்ணங்கள் இருக்கவில்லை என்பதல்ல, ஆனால் உங்களின் மனதிற்குக் கொடுக்கப்பட்ட பாடம், நீங்கள் அதைச் செய்தீர்களா இல்லையா என்பதைக் கொடுங்கள். ஆசிரியர்களே, நீங்கள் இதை ஏற்றுக் கொள்கிறீர்களா? பிராந்தியத்திற்கு ஒரு பணியைக் கொடுப்போமா? ஆசிரியர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்!

இது மகாராஷ்டிரா, அல்லவா? மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களுக்கு ஏதாவது மகத்தான பணியைக் கொடுக்க வேண்டும், அப்படியல்லவா? பாப்தாதாவிற்கு ஒவ்வொரு பிராந்தியத்தின் மீதும் அன்பு உள்ளது. அத்துடன் தந்தை கேட்டுக் கொண்டதை இந்தக் குழந்தை அவ்வாறே செய்வார் என்ற நம்பிக்கையும் எப்போதும் உள்ளது. அப்படித்தானே? மகாராஷ்டிரா, தந்தை உங்களை எதையாவது செய்யும்படி கேட்டு, நீங்கள் அதைச் செய்தீர்களா? மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பலர் இருக்கிறார்கள். வகுப்பில் மூன்றில் இரண்டு பங்கினர் இருக்கிறார்கள். ஒவ்வொரு பிராந்தியமும் தந்தையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுகிறார்கள். அனைவரும் தலையசைக்கிறார்கள். தந்தைக்கும் தனது குழந்தைகள் தமது புத்திகளில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

உங்களின் ஒவ்வொரு நாள் மேன்மையான வாசகங்களை (முரளி) உங்களின் வீட்டுவேலையாகப் பயன்படுத்த வேண்டும் என்று பாப்தாதா விரும்புகிறார். தந்தை ஒவ்வொரு நாள் முரளியிலும் செய்யும்படி கேட்பதைக் குழந்தைகளான நீங்கள் செய்வீர்களாயின், நீங்கள் தந்தையின் நீண்ட காலம் தொலைந்திருந்து, இப்போது கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளாக, கீழ்ப்படிவான குழந்தைகளாகச் செயல்படுகிறீர்கள் என்பதே இதன் அர்த்தம் ஆகும். நீங்கள் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு நாள் முரளியையும் வாசியுங்கள். ஏனென்றால், பெரும்பாலான குழந்தைகள் முரளியை விரும்புவதை பாப்தாதா பார்த்திருக்கிறார். யாராவது அதை விரும்பாவிட்டாலும் ஒரு குழந்தை பாப்தாதாவிடம், பாபா, நான் உங்களை அதிகளவு நேசிக்கிறேன் என்று சொல்லும்போது, தந்தை எதை விரும்புகிறார்? அவர் முரளியையே விரும்புகிறார். அவர் முரளியைக் கூறுவதற்காக வெகு தொலைவில் இருந்து வருகிறார். வெகு தொலைவில் இருந்து உங்களைக் கற்பிப்பதற்காக வருகின்ற ஆசிரியர் வேறு யாராவது இருக்கிறார்களா? தந்தை முரளியை விரும்புவதனால், ‘எனது பாபா’ என்று சொல்வதுடன் முரளியையும் விரும்புவர்கள், அவர்களின் முதல் அன்பு, தந்தையின் முரளிக்காகவும் அத்துடன் தந்தைக்காகவும் இருக்கும். பாருங்கள், தந்தை பிரம்மா ஒரு நாளேனும் முரளியைத் தவறவிட்டதில்லை. அவர் ஏதாவது ஒரு காரணத்தினால் பம்பாய் சென்ற போதும் அவர் முரளியை எழுதினார், மாதேஸ்வரி அந்த முரளியை வாசிப்பார். கடைசி நாளிலும், அவரின் ஆரோக்கியம் அவ்வளவு நன்றாக இல்லாதபோது, அவர் காலை வகுப்பை எடுக்கவில்லை. ஆனால், மாலை வகுப்பை எடுத்த பின்னரே அவர் அவ்யக்த் ஆகினார். பிரம்மா பாபா எதை விரும்பினார்? முரளியை. தாம் பாபாவை நேசிக்கிறோம் என்று நினைப்பவர்கள், தந்தை விரும்புவதைத் தாமும் நேசிக்க வேண்டும், அல்லவா? இதனாலேயே, நீங்கள் முரளியை வாசிக்க வேண்டும் அல்லது அதை வகுப்பில் படிக்க வேண்டும் என்று தந்தை நினைக்கிறார். இது சாத்தியம் இல்லாவிட்டால், நீங்கள் ஒரு சாக்குப் போக்குச் சொல்லாமல் ஒரு சரியான காரணம் இருந்தால், யாரையாவது அதை உங்களுக்கு வாசிக்கும்படி செய்யுங்கள். நீங்கள் முரளிக்கு அந்தளவு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்று உணர்ந்தால் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா. இங்கிருந்து அனைத்தும் புலப்படுகிறது. பின்னால் அமர்ந்திருக்கும் உங்கள் அனைவரையும் தந்தையும் பார்க்கிறார். அச்சா. மிகவும் நல்லது. அவ்வப்போது, இன்று முரளியைக் கேட்காதவர்கள் என்ற உங்களின் பரீட்சையைத் தந்தை எடுத்துக் கொள்வார். ஆசிரியர் அதை எழுத்தில் அனுப்பி வைக்க வேண்டும். நீங்கள் இதை விரும்புகிறீர்கள், அப்படித்தானே? அச்சா. இன்று, தந்தை பிரம்மா மிகுந்த அன்புடன் குழந்தைகளைச் சந்தித்து, ஒவ்வொரு குழந்தைக்கும் தனது கண்களினூடாக அன்பைக் கொடுக்கிறார். அச்சா.

இரட்டை வெளிநாட்டு சகோதர, சகோதரிகளுடன் பேசுகிறார்:

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு சேவை செய்வதற்கான நல்ல ஊக்கமும் உற்சாகமும் உள்ளது. இது நாளுக்கு நாள் அதிகமாகப் புலப்படுகிறது. பாப்தாதா அனைவருக்கும் கூறுகிறார்: அதிகளவு சேவை செய்யுங்கள். ஏனென்றால், எந்தக் கணமும் காலம் மாறக்கூடும். அப்போது, நீங்கள் சேவை செய்ய விரும்பினாலும் உங்களால் அதைச் செய்ய முடியாதிருக்கும். இத்தகையதொரு நேரமும் வரும். இதனாலேயே, நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதை இப்போதே செய்யுங்கள். பின்னர் அல்ல, ஆனால் இப்போதே! பாப்தாதா எப்போதும் கூறுவார்: அதை நாளைக்கென்று விட்டுவிடாதீர்கள். அதை இன்றைக்கு என்று விட்டுவிடாமல், இப்போதே அதைச் செய்யுங்கள். ஏனென்றால் காலமும் பஞ்ச பூதங்களும் தந்தையிடம் வந்து கேட்கின்றன: இந்த வேதனை எவ்வளவு காலத்திற்குத் தொடரும் என்று எங்களுக்குக் கூறுங்கள். அவையே வேதனைப்படுகின்றன, அப்படி இருக்கும்போது அவற்றால் என்ன செய்ய முடியும்? அவை மனித ஆத்மாக்களுக்கும் துன்பத்தை விளைவிக்கும், அப்படித்தானே? இதனாலேயே, வந்திருக்கும் நீங்கள் அனைவரும் இந்த எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும்: பிராமண வாழ்க்கை எவ்வாறு அவசியமானதோ, அவ்வாறே, தற்சமயத்திற்கேற்ப, ஒவ்வொருவரும் சேவை செய்வதும் அத்தியாவசியமானது. அதைச் செய்யுங்கள் அல்லது மற்றவர்கள் மூலம் அதைச் செய்வியுங்கள். பாப்தாதா கொடுத்திருக்கும் வீட்டுவேலை: நீங்கள் நிச்சயமாக மனதை வென்றவர் ஆகவேண்டும். அதன் மூலம் உலகை வென்றவர் ஆகவேண்டும். இது உங்களின் புகழ், நீங்கள் அதை மீண்டும் செய்ய வேண்டும், அவ்வளவே. அச்சா.

எங்கும் உள்ள குழந்தைகளிடம் இருந்து பாபா செய்திகளைப் பெற்றுள்ளார். எங்கும் இருந்து வெவ்வேறு வார்த்தைகளில் இனிய அன்பும் நினைவும் நிறைந்த உணர்வுகளுடன் கூடிய வெவ்வேறு கடிதங்கள் வந்துள்ளன. பாப்தாதா அவை அனைத்திற்கும் பதில் அளிக்கிறார்: ஒவ்வொரு குழந்தையும் அன்புடன் தந்தையின் இதயத்தில் அமிழ்ந்திருக்கிறார். தந்தையினதும் குழந்தைகளினதும் இந்த அழியாத அன்பு, அநாதியானது மற்றும் அழியாதது. சங்கம யுகம் முழுவதும் தந்தையினதும் குழந்தைகளினதும் சந்திப்புக்கள் நிச்சயிக்கப்பட்டுள்ளன. அச்சா.

இப்போது, தனிப்பட்ட முறையில் இங்கே இருப்பதுடன் வெகுதொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் அனைவரையும் பொறுத்தவரையில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள நிலையங்களில் பாபாவைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அதிகளவு முயற்சி செய்யப்பட்டிருப்பதை பாப்தாதா அறிந்துள்ளார். சில நாடுகளில் இரவில் என்ன நேரமாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்களும் பாபாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விஞ்ஞானத்தின் இந்த வழிமுறைகள் உங்களுக்காகவே கண்டு பிடிக்கப்பட்டுள்ளன, அத்துடன் உங்களுக்கு நன்மை செய்கின்றன. விநாசம் விஞ்ஞானத்தினூடாக இடம்பெற்றாலும் அது உங்களின் இராச்சியத்திற்கே ஆகும். எங்கும் உள்ள அன்பான குழந்தைகள் அனைவருக்கும் விசேடமான அன்பும் நினைவுகளும். தயவுசெய்து தந்தை பிரம்மாவின் இதயபூர்வமான கனிவையும் அதிகளவு அன்புகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் நேர்மையையும் சுத்தத்தையும் கிரகிப்பதன் மூலம் நெருக்கத்தை அனுபவிக்கும் முழுமையின் ரூபம் ஆகுவீர்களாக.

சகல நற்குணங்களிலும் நேர்மையும் சுத்தமுமே கிரகிக்க வேண்டிய பிரதானமான விடயங்கள் ஆகும். உங்களின் இதயங்களில் ஒருவருக்கு ஒருவர் முழுமையான சுத்தம் இருக்க வேண்டும். சுத்தமாக இருக்கும் எதிலும் அனைத்தும் சுத்தமாகப் புலப்படும். அதேபோல், ஒருவருக்கு ஒருவர் உங்களின் நோக்கங்களும் உணர்வுகளும் தெளிவாகப் புலப்பட வேண்டும். எங்கே நேர்மையும் சுத்தமும் உள்ளதோ, அங்கே நெருக்கம் காணப்படும். எவ்வாறு நீங்கள் பாப்தாதாவிற்கு நெருக்கமாக இருக்கிறீர்களோ, அவ்வாறே, உங்களின் இதயங்களிலும் ஒருவருக்கு ஒருவர் நெருக்கம் இருக்க வேண்டும். உங்களின் சுபாவங்களில் உள்ள எந்தவிதமான வேறுபாடுகளையும் முடித்து விடுங்கள். இதற்கு, உங்களின் மனங்களிலும் உங்களின் சுபாவங்களிலும் உள்ள உணர்வுகளை ஒத்திசையச் செய்ய வேண்டும். உங்களின் சுபாவங்களில் எந்தவிதமான வேறுபாடும் இல்லாவிட்டால், நீங்கள் முழுமை ரூபங்கள் எனப்படுவீர்கள்.

சுலோகம்:
பாழாகிப் போன எதையும் மீண்டும் அதன் ஆதிநிலைக்குத் திருப்புவதே, அனைத்திலும் மகத்தான சேவை ஆகும்.

அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம் சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.

உங்களின் யோகத்தை நெருப்பைப் போல் தீவிரமாக ஆக்குவதற்கு, தொடர்ந்து ஒரு விநாடியில் புள்ளி ரூபம் ஆகும் பயிற்சியைச் செய்வதுடன் உங்களின் மனதையும் புத்தியையும் ஒருமுகப்படுத்துங்கள். நீங்கள் நில் என்று சொன்னவுடன், உங்களின் மனமும் புத்தியும் சகல சரீர உணர்வுகளில் இருந்தும் விடுபட்டு ஒருமுகப்பட வேண்டும். நாள் முழுவதும் இந்த வகையான கட்டுப்படுத்தும் சக்தியைப் பயன்படுத்துங்கள். இந்த சக்திவாய்ந்த பிரேக்கினால் உங்களின் மனதையும் புத்தியையும் கட்டுப்படுத்துங்கள். ஒரு விநாடியில் உங்களின் மனமும் புத்தியும் நீங்கள் விரும்பும் விடயத்தில் ஒருமுகப்பட வேண்டும்.

விசேட அறிவித்தல்: மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைக்கான யோகப் பயிற்சி.

இன்று மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. சகோதர, சகோதரிகள் அனைவரும் ஒன்றுகூடி மாலை 6.30 இலிருந்து 7.30 வரை யோகத்தில் அமர வேண்டும். சந்தோஷமற்ற, அமைதியை இழந்து அலைந்து திரியும் ஆத்மாக்களுக்கு உங்களின் தேவதை ரூபத்தால் சந்தோஷம் மற்றும் அமைதியின் தூய கதிர்களை வழங்குங்கள். அத்துடன் ஆதாரத்தை அருள்பவரான பரமாத்மா தந்தையை அவர்களுக்கு நினைவூட்டும் சேவையையும் செய்யுங்கள்.