20.11.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, மனத்தைப் பண்படுத்தும் “மன்மனாபவ” எனும் மந்திரத்தைப் பயன்படுத்துவதால் மாத்திரமே உங்களால் மாயையை வெல்ல முடியும். இந்த மந்திரத்தை அனைவருக்கும் நினைவூட்டுங்கள்.

பாடல்:
இந்த எல்லையற்ற நாடகத்தின் மகத்தான வேலையாட்கள் யார்? எந்த வழியில்?

பதில்:
இப் பழைய உலகைச் சுத்தப்படுத்துவதில் மகத்தான வேலையாட்களாக உள்ளவை இயற்கை அனர்த்தங்களே ஆகும். பூமியதிர்ச்சிகளாலும் வெள்ளப் பெருக்குகளாலும் உலகம் சுத்திகரிக்கப்படுகிறது. இதற்காகக் கடவுள் எவருக்கும் வழிகாட்டல்களைக் கொடுப்பதில்லை. எவ்வாறு தந்தையால் தனது குழந்தைகளை அழிக்க முடியும்? இது நாடகத்தில் அவர்களின் பாகம் ஆகும். இது இராவண இராச்சியம் ஆதலால், அவை இறை அனர்த்தங்கள் என்று அழைக்கப்பட முடியாது.

ஓம் சாந்தி.
தந்தை மாத்திரம் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: குழந்தைகளே, மன்மனாபவ! குழந்தைகளாகிய உங்களால் இங்கமர்ந்திருந்து தந்தைக்கு விளங்கப்படுத்த முடியும் என்பதல்ல. குழந்தைகள் கூறுவதில்லை: சிவபாபா, மன்மனாபவ! இல்லை. குழந்தைகள் ஒன்றாக அமர்ந்து உரையாடும் பொழுதும், தந்தை உங்களுக்குக் கொடுப்பதே பிரதானமான, மகத்தான மந்திரம் எனும் எண்ணத்தை உருவாக்க முடியும். குருமார்கள் மந்திரங்களைக் கொடுக்கிறார்கள், ஆனால் அந்த வழமை எப்பொழுது ஆரம்பித்தது? புதிய உலகைப் படைப்பவராகிய தந்தை, முதலில் “மன்மனாபவ” எனும் மந்திரத்தைக் கொடுக்கிறார். இது மனத்தைப் பண்படுத்தும் மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதுவே மாயையை வெல்வதற்கான மந்திரம் ஆகும். நீங்கள் அதை உள்ளார்ந்தமாகச் செபிக்கத் தேவையில்லை, ஆனால் நீங்கள் அதை விளங்கப்படுத்த வேண்டும். தந்தை அதன் அர்த்தத்தை விளங்கப்படுத்துகிறார். கீதையில் இம் மந்திரம் எழுதப்பட்டுள்ளது, ஆனால் எவரும் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. இப்பொழுது கீதையின் அந்த அத்தியாயத்துக்கான நேரம் இதுவாகும். ஆனால் அதைப் பேசியவரின் பெயர் மாற்றமடைந்துள்ளது. பக்திமார்க்கத்தில், அவர்கள் அத்தகைய பெரும் புத்தகங்கள் போன்றவற்றை உருவாக்குகிறார்கள். உண்மையில், தந்தை இங்கமர்ந்து இதைக் குழந்தைகளாகிய உங்களுக்கு வாய்மூலம் விளங்கப்படுத்துகிறார். தந்தையின் ஆத்மாவில் ஞானம் உள்ளது. குழந்தைகளாகிய உங்களின் ஆத்மாக்களே ஞானத்தைக் கிரகிக்கின்றன. இப் படங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால், இந்த ஞானத்தை விளங்கப்படுத்துவது உங்களுக்கு இலகுவாகும். குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானம் அனைத்தையும் உங்களின் புத்தியில் கொண்டிருக்கிறீர்கள். நிச்சயமாக ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் இருந்திருக்க வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அந்நேரத்தில், வேறெந்தத் தேசங்களும் இருக்கவில்லை. அந்த ஏனைய தேசங்கள் அனைத்தும் பிற்சேர்க்கை ஆகும். பாரதத்தில் அவர்களின் இராச்சியம் இருந்தபொழுது, அந்நேரத்தில், ஏனைய சமயங்கள் இருக்கவில்லை என்று காட்டுவதற்கு நீங்கள் இந்தப் படத்தை எங்காவது ஒரு மூலையில் வைத்திருக்க வேண்டும். இப்பொழுது பல்வேறு சமயங்கள் உள்ளன! பின்னர், அவை எதுவும்; இருக்க மாட்டாது. இது பாபாவின் திட்டமாகும். அம்மக்களுக்குப் பல்வேறு கவலைகள் இருக்கின்றன. இது முற்றிலும் மிகச்சரியானது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தந்தை வந்து பிரம்மாவினூடாக ஸ்தாபனையை மேற்கொள்கிறார் என்பதும் எழுதப்பட்டுள்ளது. எதன் ஸ்தாபனையை? புதிய உலகின் ஸ்தாபனையை ஆகும். தலைநகரம் ஜமுனை நதிக்கரையில் அமைந்திருக்கிறது. அங்கு ஒரு தர்மம் மாத்திரமே உள்ளது. விருட்சம் மிகவும் சிறியதாகும். தந்தை மாத்திரமே உங்களுக்கு விருட்சத்தின் ஞானத்தைக் கொடுக்கிறார். அவர் சக்கரத்தின் ஞானத்தையும் கொடுக்கிறார். சத்தியயுகத்தில் ஒரேயொரு மொழி மாத்திரமே உள்ளது. அங்கு அந்நேரத்தில் வேறெந்த மொழியும் இருக்காது. ஒரு பாரதம் மாத்திரமே இருந்தது என்பதை உங்களால் நிரூபிக்க முடியும். அங்கு ஓர் இராச்சியமும் ஒரு மொழியும் மாத்திரமே இருந்தன. வைகுந்தத்தில், சந்தோஷமும் அமைதியும் இருந்தன. அங்கு துன்பத்தின் பெயரோ அல்லது சுவடோ இருக்கவில்லை. அங்கு ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் அனைத்தும் இருந்தன. பாரதம் புதியதாக இருந்த நேரத்தில், அங்கு தூய்மை இருந்ததால், அதன் மக்களின் ஆயுட்காலம் மிகவும் நீண்டதாக இருந்தது. தூய்மை இருக்கும்பொழுது, மக்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். இப்பொழுது மனிதர்களின் நிலைமையைப் பாருங்கள், தூய்மையின்மை உள்ளது! அகால மரணம் திடீரென்று இடம்பெறுகின்றது. இளைஞர்களும் மரணிக்கிறார்கள். அதிகளவு துன்பம் உள்ளது. அங்கு அகால மரணம் இடம்பெறுவதில்லை. மக்கள் தங்களின் முழுமையான ஆயுள்வரை வாழ்கிறார்கள். அவர்களின் முழுமையான ஆயுட்காலத்தையும் அவர்கள் அடையும்வரையில், அவர்களில் எவரும் மரணிப்பதில்லை. அதாவது, அவர்கள் முதுமையடையும் வரையில் மரணிப்பதில்லை. நீங்கள் மக்களுக்கு விளங்கப்படுத்தும் பொழுதெல்லாம், எல்லையற்ற தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவரும் சற்கதியை அளிப்பவரும் என்பதால், அவர்கள் எல்லையற்ற தந்தையை நினைவுசெய்ய வேண்டும் என்பதை நீங்கள் அவர்களின் புத்தி கிரகிக்குமாறு செய்ய வேண்டும். உங்களிடம் அந்த வரைபடம் இருப்பதால், இது இன்றைய உலகின் வரைபடமும் அது நாளைய உலகின் வரைபடமும் என்பதை உங்களால் விளங்கப்படுத்தி, நிரூபிக்கவும் முடியும். சிலர் அவதானமாகச் செவிமடுக்கிறார்கள். நீங்கள் இதை மிகச்சரியாக விளங்கப்படுத்த வேண்டும். இப்பாரதம் அநாதியான தேசமாகும். இத்தேவதர்மம் இருந்தபொழுது, அங்கு வேறெந்தச் சமயங்களும் இருக்கவில்லை. அந்த ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் இப்பொழுது கிடையாது. இலக்ஷ்மியும் நாராயணனும் எங்கு சென்றார்கள்? அதை எவராலும் உங்களுக்குக் கூறமுடியாது. அதை உங்களுக்குக் கூறும் சக்தி எவருக்கும் கிடையாது. குழந்தைகளாகிய உங்களால் மிகவும் நன்றாக முழுமையான அர்த்தத்துடன் விளங்கப்படுத்த முடியும். எதைப் பற்றியும் குழப்பமடையத் தேவையில்லை. இப்பொழுது நீங்கள் அனைத்து விடயங்களையும் புரிந்துகொள்வதால், உங்களால் அதை ஏனையோருக்கு மீண்டும் மீண்டும் கூற முடியும். நீங்கள் எவரையும் வினவ முடியும்: இத்தேவர்கள் எங்கு சென்றார்கள்? உங்களுடைய கேள்வியைக் கேட்கும்பொழுது, அவர்கள் வியப்படைவார்கள். அவர்கள் எப்படி 84 பிறவிகளை எடுக்கிறார்கள் என்பதை நீங்கள் நம்பிக்கையுடன் அவர்களுக்குக் கூற முடியும். இது உங்கள் புத்தியில் உள்ளது. புதிய உலகமாகிய சத்தியயுகத்தில், எங்கள் இராச்சியம் இருந்தது என்பதை நீங்கள் உடனடியாகவே கூறமுடியும். அங்கு ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் மாத்திரமே இருந்தது. அந்நேரத்தில், வேறெந்தச் சமயங்களும் இருக்கவில்லை. அங்கு அனைத்தும் புதியனவாக இருக்கின்றன. அனைத்தும் சதோபிரதானாக இருக்கின்றன. அங்கு எல்லையற்ற தங்கம் இருக்கிறது. அது மிகவும் இலகுவாகத் தோண்டி எடுக்கப்படுகிறது. அதிலிருந்து அவர்களின் செங்கற்களும் கட்டடங்களும் செய்யப்படுகின்றன. அங்கு அனைத்தும் தங்கத்தினால் செய்யப்பட்டவை ஆகும். சுரங்கங்கள் அனைத்தும் புதியனவாக இருக்கும். உண்மையான பொருட்கள் ஏராளமாக இருக்கும்பொழுது, அங்கு போலிகள் இருக்காது. இங்கு, உண்மையானவற்றின் சுவடே கிடையாது. இங்கு, போலிகளின் ஆதிக்கம் அதிகளவு உள்ளது, இதனாலேயே சரீரமும் பொய், மாயையும் பொய், சொத்தும் பொய் என்று கூறப்பட்டுள்ளது. அவை போலியானவையா அல்லது நிஜமானவையா என்று உங்களால் கூறவும் முடியாதளவுக்குப் பல்வேறு விதமான வைரங்களினதும் இரத்தினங்களினதும் வகைகள் வெளிப்பட்டுள்ளன. உங்களால் நிஜத்துக்கும் போலிக்கும் இடையில் வேறுபிரித்தறியவே முடியாத, அதிகளவு பகட்டை அவை கொண்டிருக்கின்றன. அங்கு இப்போலியான விடயங்கள் இருக்க மாட்டாது. விநாசம் நடைபெறும்பொழுது, அனைத்தும் பூமியினடியில் செல்லும். தங்களின் கட்டடங்களில் அத்தகைய பெரிய வைரக்கற்களை அவர்கள் பயன்படுத்தினார்கள். அவை அனைத்தும் எங்கிருந்து வந்திருக்கும்? யார் அவற்றை வெட்டியிருப்பார்கள்? இந்தியாவில், பல நிபுணர்கள் உள்ளார்கள். அவர்கள் தொடர்ந்தும் திறமைசாலிகள் ஆகி, பின்னர் தங்களுடன் தங்கள் திறமைகளை அங்கு எடுத்துச் செல்வார்கள். கிரீடங்கள் போன்றவை வெறுமனே வைரங்களினால் ஆக்கப்பட்டிருக்க மாட்டாது. அவை முற்றாகச் சுத்திகரிக்கப்பட்ட தங்கத்தினாலும் நிஜ வைரங்களினாலும் ஆக்கப்பட்டிருக்கும். மின்சாரம், தொலைபேசிகள், மோட்டார் கார்கள் போன்றவை முன்னர் இருக்கவில்லை. பாபாவின் ஆயுட்காலத்தின் பொழுதே அவ்விடயங்கள் அனைத்தும் வெளிப்பட்டுள்ளன. அவ்விடயங்கள் அனைத்தும் வெளிப்பட்டு சுமார் 100 வருடங்கள் ஆகிவிட்டன. அங்கு, அவர்கள் மகத்தான நிபுணர்களாக உள்ளார்கள். இப்பொழுதும் மக்கள் மேலும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்னமும் திறமைசாலிகள் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு அதன் காட்சிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அங்குள்ள வானூர்திகள் கோளாறுகள் இல்லாமல் இருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் சதோபிரதானாகவும் கூர்மையான புத்திகள் உடையவர்களாகவும் இருப்பீர்கள். நீங்கள் சிறிதளவு முன்னேறுகையில், தொடர்ந்தும் அனைத்தினதும் காட்சிகள் கிடைக்கும். அது நீங்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பி உங்கள் தாய் நாட்டை அணுகும்பொழுது, மரங்களைக் காண்பதை ஒத்திருக்கின்றது. இப்பொழுது நீங்கள் வீட்டுக்குச் செல்ல இருக்கிறீர்கள் எனும் சந்தோஷம் உங்களுக்கு உள்ளார்ந்தமாக உள்ளது. இறுதியில், நீங்கள் தொடர்ந்தும் அத்தகைய காட்சிகளையும் பெறுவீர்கள். பாபாவே அதி அன்பிற்கினியவர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவரே பரமாத்மா ஆவார். அனைவரும் அவரை நினைவுசெய்கிறார்கள். நீங்களும் பக்திமார்க்கத்தில் பரமாத்மாவை நினைவுசெய்தீர்கள், ஆனால் அவர் சிறிதாகவா அல்லது பெரிதாகவா இருந்தார் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. ஒரு தனித்துவமான நட்சத்திரம் நெற்றியில் மத்தியில் பிரகாசிக்கிறது என நினைவுகூரப்பட்டுள்ளது. ஆகவே நிச்சயமாக அவர் ஒரு புள்ளியைப் போன்றே இருக்க வேண்டும். கடவுளாகிய, பரமாத்மா என்று அவர் மாத்திரமே அழைக்கப்படுகிறார். அவர் சிறப்பியல்புகள் அனைத்தும் உடையவர். அவர் ஞானக்கடல் ஆவார். அவர் உங்களுக்குக் கொடுக்கும் ஞானம் என்ன? அவர் அதை உங்களுக்குக் கொடுக்கும் பொழுது மாத்திரமே உங்களால் அதைக் கண்டறிய முடியும். முன்னர் நீங்கள் இவற்றில் எதையாவது அறிந்திருந்தீர்களா? நீங்கள் பக்தியைப் பற்றி மாத்திரம் அறிந்திருந்தீர்கள். இது எவ்வாறான ஓர் அற்புதம் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்! உங்கள் பௌதீகக் கண்கள் மூலம் உங்களால் ஓர் ஆத்மாவைப் பார்க்க முடியாததால், நீங்கள் தந்தையையும் மறந்துவிடுகிறீர்கள். எவ்வாறாயினும், உலக அதிபதி ஆக்கப்பட்டவரின் பெயர் பயன்படுத்தப்பட்டு, அவரை அவ்வாறு ஆக்கியவரின் பெயர் மறைக்கப்பட்டுள்ளமை, நாடகத்தின் பாகம் ஆகும். ஸ்ரீகிருஷ்ணர் திரிலோகநாத்தும் (மூவுலகங்களின் பிரபு), வைகுந்தத்தின் பிரபுவும் என்று அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் வெறுமனே அவருக்கு அந்த முக்கியத்தைக் கொடுக்கிறார்கள். அவர்கள் பக்திமார்க்கத்தில் பல கதைகளை உருவாக்கியுள்ளார்கள். கடவுள் அதிகளவு சக்தியை உடையவர். அதாவது, அவர் ஆயிரம் சூரியன்களை விடவும் பிரகாசமானவர், அவரால் அனைத்தையும் எரிக்க முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் அத்தகைய கதைகளை உருவாக்கியுள்ளார்கள்! தந்தை கூறுகிறார்: என்னால் எப்படி என்னுடைய குழந்தைகளை எரிக்க முடியும்? அது சாத்தியமல்ல! தந்தை தன்னுடைய குழந்தைகளை அழிப்பாரா? இல்லை! இது நாடகப் பாகமாகும். பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது. இந்த இயற்கை அனர்த்தங்களே பழைய உலகின் விநாசத்துக்கான வேலையாட்கள் ஆகும். அவையே மகத்தான வேலையாட்கள் ஆகும். தந்தை அவற்றுக்கு விநாசத்துக்கான வழிகாட்டல்களைக் கொடுக்கிறார் என்பதல்ல. இல்லை. புயல்கள் ஏற்படுகின்றன, பஞ்சம் ஏற்படுகிறது. இதைச் செய்யுங்கள் எனக் கடவுள் கூறுகிறாரா? ஒருபொழுதும் இல்லை! இது நாடகப் பாகமாகும். தந்தை கூறுவதில்லை: குண்டுகளை உருவாக்குங்கள்! இவை அனைத்தும் இராவணனின் வழிகாட்டல்கள் என்று கூறப்படுகிறது. இந்நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. இதுவே இராவண இராச்சியம் ஆதலால், அதன் மக்கள் அசுர புத்தியைக் கொண்டிருக்கிறார்கள். பலர் மரணிக்கிறார்கள்! இறுதியில் அனைத்தும் எரிக்கப்படும். இது தொடர்ந்தும் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்ற, ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட ஒரு நாடகமாகும். சங்கரரின் கண்கள் திறப்பதால் விநாசம் நடைபெறுகிறது என்பதல்ல. இவ்விடயங்கள் இறை அனர்த்தங்கள் என்று அழைக்கப்பட முடியாது. அவை இயல்பானவை. இப்பொழுது தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார். இது எவருக்கும் துன்பத்தை விளைவிக்கும் ஒரு விடயமல்ல! தந்தையே சந்தோஷத்துக்கான பாதையைக் காட்டுபவர். நாடகத் திட்டத்துக்கேற்ப, கட்டடங்கள் தொடர்ந்தும் பழையதாகுகின்றன. தந்தை கூறுகிறார்: முழு உலகமும் பழையதாகியுள்ளது. அது அழிக்கப்படவுள்ளது. எவ்வாறு மக்கள் தங்கள் மத்தியில் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்று பாருங்கள்! அவர்களுக்கு அசுர புத்தி உள்ளது. மக்கள் இறை புத்தியைக் கொண்டிருக்கும்பொழுது, அங்கு கொல்லுதல் போன்ற கேள்வியே இருக்காது. தந்தை கூறுகிறார்: நான் அனைவரினதும் தந்தை, எனக்கு அனைவர் மீதும் அன்புள்ளது. இங்கு பாபா குழந்தைகளைப் பார்க்கையில், தந்தையைப் பெருமளவு அன்புடன் நினைவுசெய்து, சேவையும் செய்கின்ற, விசேட குழந்தைகளின் மீது அவருடைய பார்வை செல்கிறது. இங்கு அமர்ந்திருக்கையில், சேவாதாரிக் குழந்தைகள் மீது தந்தையின் பார்வை செல்கிறது. சில சமயங்களில் அது, தெஹ்ராதுன்னில், சில சமயங்களில் மீரட்டில், சில சமயங்களில் டெல்லியில் உள்ளது. என்னை நினைவுசெய்யும் குழந்தைகளை நானும் நினைவுசெய்கிறேன். என்னை நினைவுசெய்யாத குழந்தைகளையும் நான் நினைவுசெய்கிறேன், ஏனெனில் நான் அனைவரையும் என்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்ல வேண்டும். என்னிடமிருந்து உலகச் சக்கரத்தின் ஞானத்தைப் புரிந்துகொள்பவர்கள், பின்னர் ஓர் உயர்ந்த அந்தஸ்தை வரிசைக்கிரமமாகக் கோருவார்கள். இவை எல்லையற்ற விடயங்களாகும். அந்த ஆசிரியர்கள் போன்றவர்கள் எல்லைக்குட்பட்டவர்கள், அவர் எல்லையற்றவர் ஆவார். ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை உங்களின் உள்ளே அனுபவம் செய்ய வேண்டும். தந்தை கூறுகிறார்: அனைவருடைய பாகமும் ஒன்றாக இருக்க முடியாது. இவருக்கு இந்தப் பாகம் உள்ளது. பல மில்லியன் கணக்கானோரில் ஒரு கைப்பிடியளவினரே பின்பற்றுபவர்களாக உள்ளார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: நான் உங்களுடைய ஏழுநாள் குழந்தை. நான் உங்கள் ஒருநாள் குழந்தை. ஆகவே, நீங்கள் பூனைக்குட்டிகள் ஆவீர்கள். தந்தை ஒவ்வொரு விடயத்தையும் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகிறார். நிச்சயமாக நீங்கள் ஆற்றைக் கடந்து வந்தீர்கள். தந்தை வந்தவுடன் ஞானம் ஆரம்பமாகியது. அவர் அதிகளவு புகழப்படுகிறார்! பிறவிபிறவியாகப் பல தடவைகள் நீங்கள் அந்தக் கீதையின் அத்தியாயத்தைக் கற்றிருக்க வேண்டும். ஆகவே, கடவுள் ஸ்ரீகிருஷ்ணரால் பேசப்பட்ட வாசகங்களுக்கும், கடவுள் சிவனால் பேசப்பட்ட வாசகங்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைப் பாருங்கள்! பகலும் இரவும் போன்ற வேறுபாடுள்ளது. நீங்கள் சத்தியபூமியில் இருந்தபொழுது, பெரும் சந்தோஷத்தைப் பார்த்தீர்கள் என்பது இப்பொழுது உங்களின் புத்தியில் உள்ளது. உண்மையில், நீங்கள் சக்கரத்தின் முக்காற் பங்குக்குச் சந்தோஷத்தை அனுபவம் செய்கிறீர்கள். தந்தை சந்தோஷத்துக்காகவே நாடகத்தை உருவாக்கியுள்ளார், துன்பத்துக்காக அல்ல. நீங்கள் அதன்பின்னரே துன்பத்தை அனுபவம் செய்ய ஆரம்பித்தீர்கள். அவ்வளவு விரைவில் யுத்தம் நடைபெற முடியாது. நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைப் பெறுகிறீர்கள். அது அரைக்கு அரைவாசியாக இருந்தால், அந்தளவு சந்தோஷம் இருக்காது. இங்கு மூவாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு யுத்தம் நடைபெற மாட்டாது. அங்கு சுகயீனங்கள் போன்றவை எதுவும் இருக்காது. இப்பொழுது எவ்வாறு நோய்க்குப் பின்னர் நோய் ஏற்படுகிறது என்று பாருங்கள்! சத்தியயுகத்தில், தானியத்தை உண்ணும் பூச்சிகள் எவையும் இருக்காது. இதனாலேயே அது சுவர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் ஓர் உலக வரைபடத்தையும் காட்டுவதால், மக்களால் புரிந்துகொள்ள முடியும். ஆதியில், பாரதம் மாத்திரமே இருந்தது. அந்நேரத்தில், அங்கு வேறெந்தச் சமயங்களும் இருக்கவில்லை. பின்னரே சமய ஸ்தாபகர்கள் வரிசைக்கிரமமாக வந்தார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு உலகின் வரலாறும் புவியியலும் தெரியும். உங்களைத் தவிர, அனைவரும் “நேற்றி, நேற்றி” என்று கூறுகிறார்கள், அவர்களுக்குத் தந்தையைத் தெரியாது என்பதே அதன் அர்த்தம். அவருக்குப் பெயர், ரூபம், தேசம் அல்லது காலநேரம் கிடையாது என்று அவர்கள் கூறுகிறார்கள். அவருக்கு ஒரு பெயரோ அல்லது ரூபமோ இல்லாதுவிட்டால், அவருக்கு ஒரு தேசமும் இருக்க முடியாது. எவ்வாறாயினும், அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. இப்பொழுது தந்தை தனது மிகச்சரியான அறிமுகத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கிறார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளான உங்களுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சதா எல்லையற்ற சந்தோஷத்தில் நிலைத்திருப்பதற்கு, எல்லையற்ற தந்தை உங்களுக்குக் கூறும் எல்லையற்ற விடயங்கள் அனைத்தையும் அடிக்கடி நினைவுசெய்து, தொடர்ந்தும் தந்தையைப் பின்பற்றுங்கள்.

2. சதா ஆரோக்கியமாக இருப்பதற்கு, தூய்மையை ஏற்றுக் கொள்ளுங்கள். தூய்மையின் அடிப்படையிலேயே நீங்கள் தந்தையிடமிருந்து ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் ஆகிய ஆஸ்தியைக் கோர முடியும்.

ஆசீர்வாதம்:
உங்களின் பேறுகள் அனைத்தையும் உங்களின் விழிப்புணர்வில் வெளிப்படுத்தி வைத்திருப்பதன் மூலம் சதா நிரம்பியிருக்கும் திருப்தியான ஆத்மா ஆகுவீர்களாக.

நீங்கள் சங்கமயுகத்தில் பாப்தாதாவிடமிருந்து பெற்ற பேறுகள் அனைத்தையும் உங்களின் விழிப்புணர்வில் வெளிப்படுத்தி வைத்திருங்கள். அந்தப் பேறுகளின் சந்தோஷம், உங்களை எந்தவிதமான குழப்பதிற்குள்ளே இறங்குவதில் இருந்தும் தடுத்துவிடும். நீங்கள் சதா அசைக்க முடியாதவராக இருப்பீர்கள். நிரம்பியிருத்தல் உங்களை அசைக்கமுடியாதவராக்கி, குழப்பத்தில் இருந்து விடுவிக்கிறது. சகல பேறுகளாலும் நிறைந்திருப்பவர்கள், சதா சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருப்பார்கள். திருப்தியே சகல பொக்கிஷங்களிலும் மகத்தானது. திருப்தியாக இருப்பவர்களிடம் அனைத்தும் இருக்கும். அவர்கள் தொடர்ந்து, ‘நான் எதைப் பெற வேண்டுமோ, அதைப் பெற்றுவிட்டேன்’ என்ற பாடலைப் பாடுவார்கள்.

சுலோகம்:
அன்பு ஊஞ்சலில் அமர்ந்திருங்கள். சகல கடின உழைப்பும் இயல்பாகவே முடிந்துவிடும்.