20.12.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நினைவில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் சதா மலர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும், இருப்பீர்கள். நீங்கள் தொடர்ந்து தந்தையிடமிருந்து உதவியைப் பெறுவதுடன், ஒருபோதும் வாடிப்போக மாட்டீர்கள்.
கேள்வி:
இந்த இறை மாணவ வாழ்க்கையைக் கடந்து செல்லும்போது, குழந்தைகளாகிய நீங்கள் எவ்வாறான போதையைக் கொண்டிருக்க வேண்டும்?பதில்:
இக்கல்வியைக் கற்பதன் மூலம் நீங்கள், இளவரசர்களாகவும், இளவரசிகளாகவும் ஆகுகிறீர்கள் என்ற போதையை சதா கொண்டிருங்கள். சிரித்து, விளையாடி, இந்த ஞான நடனமாடியவாறே இவ்வாழ்க்கையைக் கழியுங்கள். ஒரு வாரிசு ஆகி, மலர் ஆகுவதற்கு சதா தொடர்ந்தும் முயற்சி செய்யுங்கள். இது இளவரசர்களாகவும், இளவரசிகளாகவும் ஆகுவதற்கான கல்லூரியாகும். இங்கு நீங்கள் கற்பதுடன், கற்பிக்கவும் வேண்டும். நீங்கள் உங்களுடைய பிரஜைகளை உருவாக்க வேண்டும். ஏனெனில், அப்பொழுதே உங்களால் ஓர் அரசனாக முடியும். தந்தை ஏற்கனவே ஞானம் நிறைந்திருப்பவர், அவர் கற்கவேண்டிய அவசியமில்லை.பாடல்:
உங்கள் குழந்தைப் பருவ நாட்களை மறந்துவிடாதீர்கள்…ஓம் சாந்தி.
இந்தப் பாடல் குறிப்பாகக் குழந்தைகளாகிய உங்களுக்கானதாகும். அது ஒரு திரைப்படப் பாடலாக இருந்தாலும், சில பாடல்கள் குறிப்பாகக் குழந்தைகளாகிய உங்களுக்கானதாகும். தகுதியான குழந்தைகளாகிய நீங்கள் இப்பாடலைச் செவிமடுக்கும்போது, அதன் உண்மையான கருத்து உங்கள் இதயங்களில்; வெளிப்பட வேண்டும். நீங்கள் அவருடைய குழந்தைகள் ஆகிவிட்டதால் ‘எனது அன்பிற்கினிய குழந்தைகளே’ என்று தந்தை கூறுகிறார். நீங்கள் அவருடைய குழந்தை ஆகிய பின்னரே தந்தையிடமிருந்து பெற்றுக் கொள்கின்ற ஆஸ்தியை நீங்கள் நினைவு செய்யலாம். நீங்கள் அவருடைய குழந்தை ஆகாவிட்டால், அவரை நினைவு செய்வதற்கு கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். பொதுவாக, எதிர்காலத்தில் தாங்கள் தங்கள் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுவோம் என்று குழந்தைகளுக்குத் தெரியும். இங்கு இது இராஜயோகம் அல்லாது, பிரஜைகளின் யோகம் (பிரஜைகள் ஆகுவதற்கான யோகம்) அல்ல. நீங்களே அந்த எதிர்கால இளவரசர்களாகவும், இளவரசிகளாகவும் ஆகப்போகின்றீர்கள். நீங்கள் அவருடைய குழந்தைகள். நீங்கள் உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் போன்ற அனைவரையும் மறந்துவிட வேண்டும். ஒரேயொருவரைத் தவிர, வேறு எவரையும் நினைவு செய்யக்கூடாது. நீங்கள் உங்கள் சரீரத்தைக்கூட நினைவு செய்யக்கூடாது. நீங்கள் சரீர உணர்வைத் துறந்து, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகவேண்டும். நீங்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகும்போது, உங்களைக் கீழே விழுத்திவிடுகின்ற, பல தவறான விகார எண்ணங்களைக் கொண்டிருக்கின்றீர்கள். நினைவு செய்யும் பயிற்சியை நீங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்போது, சதா மலர்ச்சியாகவும் மகிழ்ச்சியாக இருப்பதுடன், ஒரு மலர் போன்றும் இருப்பீர்கள். மலர்களாகிய நீங்கள் நினைவு செய்வதை மறப்பதனாலேயே வாடிப்போய்விடுகிறீர்கள். குழந்தைகள் தைரியத்தைக் கொண்டிருக்கும்போது, தந்தை உதவிசெய்கிறார். நீங்கள் ஒரு குழந்தை ஆகாவிட்டால், எவ்வழியில் தந்தை உங்களுக்கு உதவி செய்வார்? அத்தகைய ஆத்மாக்கள் மாயையையும், இராவணனையும் தங்கள் தாயாகவும், தந்தையாகவும் அனுமதிப்பதால், அவர்கள் விழுவதற்கு அவர்களிடமிருந்து உதவியைப் பெறுகிறார்கள். ஆகவே ‘உங்கள் குழந்தைப் பருவ நாட்களை மறந்துவிடாதீர்கள்...” என்ற இந்த முழுப் பாடலும் குழந்தைகளாகிய உங்களுக்காகவே இயற்றப்பட்டுள்ளது. நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். நீங்கள் அவரை நினைவு செய்யாவிட்டால் இன்று நீங்கள் சிரிக்கலாம், ஆனால் நாளை நீங்கள் அழுவீர்கள். அவரை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் சதா மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சில சரியான வார்த்தைகளைக் கொண்டிருக்கும் சமயநூல், கீதை மாத்திரமே என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். எழுதப்பட்டுள்ளது: “நீங்கள் போர்க்களத்தில் மரணித்தால், சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள்”. வன்முறையான போர் என்ற கேள்விக்கு இடமில்லை. குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து சக்தியைப் பெற்று, மாயையை வெல்லவேண்டும். ஆகவே நீங்கள் நிச்சயமாகத் தந்தையை நினைவு செய்ய வேண்டும். ஏனெனில் அப்போதுதான் நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவீர்கள். எவ்வாறாயினும் அவர்கள் பௌதீக ஆயுதங்களைக் காட்டியுள்ளார்கள். அவர்கள் “ஞான வாள், ஞான அம்புகள்” என்ற வார்த்தைகளைக் கேட்டு, உண்மையில் அவை இந்த ஞானம் பற்றிய விடயங்களாக இருந்தும், பௌதீக அம்புகளை வரைந்திருக்கிறார்கள். உண்மையில் எவராலும் பல எண்ணிக்கையிலான கரங்களைக் கொண்டிருக்க முடியாது. ஆகவே இது ஒரு போர்க்களமாகும். நீங்கள் யோகத்தில் அமர்ந்திருந்து, சக்தியைப் பெற்று, விகாரங்களை வெல்லவேண்டும். தந்தையை நினைவு செய்வதன் மூலம், நீங்கள் உங்கள் ஆஸ்தியையும் நினைவு செய்வீர்கள். ஒரு வாரிசினால் மாத்திரமே ஆஸ்தியைப் பெற முடியும். நீங்கள் ஒரு வாரிசு ஆகாவிட்டால், பிரஜைகளில் ஒருவர் ஆகுவீர்கள். இது இராஜயோகமாகும். பிரஜைகளின் யோகம் அல்ல. இந்த விளக்கத்தைத் தந்தையால் மட்டுமேயன்றி, வேறு எவராலும் கொடுக்க முடியாது. தந்தை கூறுகிறார்: நான் இங்கு வருவதற்கு, இந்தச் சாதாரண சரீரத்தின் ஆதாரத்தை எடுக்கவேண்டியுள்ளது. சடப்பொருளின் ஆதாரமின்றி எவ்வாறு என்னால், குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்க முடியும்? ஓர் ஆத்மா தனது சரீரத்தை விட்டு நீங்கிய பின்னர், அவருடன் பேச முடியாது. அந்த ஆத்மா இன்னொரு சரீரத்தைப் பெற்று, பிறந்து, சிறிது வளர்ந்த பின்னரே, அவரது புத்தி மீண்டும் திறக்கும். எவ்வாறாயினும் சிறிய குழந்தைகள் தூய்மையானவர்கள்; அவர்களிடம் விகாரமில்லை. சந்நியாசிகள் அந்த ஏணியில் ஏறிப் பின்னர் இறங்குகிறார்கள். அவர்கள் வாழ்க்கை என்பது எதனைப் பற்றியது என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். குழந்தைகள் தூய்மையானவர்கள் என்பதால், அவர்கள் மகாத்மாக்களுக்குச் சமமானவர்கள் என்று நினைவுகூரப்படுகின்றனர். எனவே, நீங்கள் உங்கள் சரீரத்தை விட்டு நீங்கியபின்னர் சென்று, இளவரசர்களாகவும், இளவரசிகளாகவும் ஆகுகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் முன்னர் அவ்வாறு ஆகினீர்கள். இப்போது மீண்டும் அவ்வாறு ஆகுகிறீர்கள். மாணவர்களாகிய நீங்கள் இந்த எண்ணத்தைக் கொண்டிருங்கள். நம்பிக்கை நிறைந்த, கீழ்ப்படிவான, ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்ற பாபாவின் குழந்தைகளின் புத்தியில் இவ்விடயங்கள் பதியும். அவ்வாறு இல்லாவிட்டால், அவர்கள் ஒரு மேன்மையான அந்தஸ்தைப் பெறமாட்டார்கள். எவ்வாறாயினும் இந்த ஆசிரியர் ஞானம் நிறைந்தவர். அவர் கற்று, பின்னர் கற்பிக்கின்றார் என்றில்லை. இல்லை. இந்த ஆசிரியர் ஏற்கனவே ஞானம் நிறைந்தவர். அவர் ஞானம் நிறைந்தவர் என்று அழைக்கப்படுகிறார். உலகின் ஆரம்பம், மத்தி மற்றும் இறுதி பற்றிய இந்த ஞானம் வேறு எவரிடமும் இல்லை. அனைத்திற்கும் முதலில், அவரே தந்தை என்ற நம்பிக்கை இருக்கவேண்டும். இது சிலரின் பாக்கியத்திலும் இல்லையென்றால், சதா அவர்கள் அகத்தே முரண்பாடுகள் உள்ளன. அவர்கள் தங்களால் தொடர முடியாதென உணர்கின்றார்கள். நீங்கள் தந்தையின் மடிக்கு வந்ததும், இந்த விகாரங்களின் நோய்கள் இன்னும் பெரும் வேகத்துடன் வெளிப்படும் என்று பாபா விளங்கப்படுத்தியிருக்கிறார். முதலில் அனைத்து நோய்களும் வெளிப்படுமென்று மூலிகை மருத்துவர்கள் உங்களுக்குக் கூறுவார்கள். தந்தையும் கூறுகிறார்: நீங்கள் பாபாவின் குழந்தைகள் ஆகியதும், சரீர உணர்வு, கோபம், காமம் போன்ற நோய்கள் மேலும் அதிகமாக அதிகரிக்கும். வேறு எவ்வாறு உங்களைச் சோதிக்க முடியும்? ஏதாவது கருத்தையிட்டு உங்களுக்குக் குழப்பமிருந்தால், தொடர்ந்து கேளுங்கள்! நீங்கள் சக்தி நிறைந்தவர்களாகும்போது, உங்களை விழுத்துவதற்காக மாயை மிகவும் கடுமையாகக் குத்துவாள். நீங்கள் ஒரு குத்துச் சண்டைப் போட்டியில் இருக்கிறீர்கள். நீங்கள் பாபாவின் ஒரு குழந்தை ஆகாவிட்டால், குத்துச் சண்டை என்ற கேள்விக்கே இடமில்லை. அத்தகைய ஆத்மாக்கள் தொடர்ந்து தங்கள் சொந்த விகார எண்ணங்களில் மூழ்கிப் போவார்கள். அவர்கள் உதவியைப் பெற மாட்டார்கள். நீங்கள் ‘மம்மா, பாபா’ என்று கூறும்போது, நீங்கள் தந்தையின் குழந்தைகள் ஆகிவிட்டீர்கள் என்றும், இவர் உங்களுடைய ஆன்மீகத் தந்தை என்பதையும் உங்கள் இதயத்தில் உறுதியாகக் கொண்டுள்ளீர்கள் என்றும் பாபா புரிந்துகொள்கிறார். இது ஒரு போர்க்களம் என்றாலும், நீங்கள் பயப்பட்டு, உங்களால் ஒரு புயலை எதிர்கொள்ள முடியுமா, முடியாதா என்று பயப்படக்கூடாது. அது பலவீனமாக இருத்தல் என்று கருதப்படும். இந்த விடயத்தில் நீங்கள் ஒரு சிங்கம் போன்று ஆகவேண்டும். உங்களுடைய முயற்சிக்குக் கொடுக்கப்படுகின்ற சிறந்த வழிகாட்டல்களை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் தந்தையைக் கேட்கவேண்டும். தங்களுடைய ஸ்திதியையிட்டு பாபாவிற்கு எழுதுகின்ற குழந்தைகள் பலர் உள்ளனர். தந்தையால் மாத்திரமே உங்களுக்கு ஒரு நற்சான்றிதழைக் கொடுக்க முடியும். நீங்கள் அதனை இவரிடமிருந்து மறைக்கலாம். ஆனால் நீங்கள் சிவபாபாவிடமிருந்து மறைக்க முடியாது. பலர் அதனை மறைப்பதற்கு முயற்சித்தாலும், எதனையுமே அவரிடமிருந்து மறைக்க முடியாது. நல்லவை எதுவானாலும் அதன் பலன் நல்லதாகும். தீயவை எதுவானாலும், அதன் பலன் தீயதாகும். சத்திய, திரேதா யுகங்களில் அனைத்துமே நல்லதாகும். இங்குதான் நல்லவையும், தீயவையும், பாவமும், புண்ணியமும் உள்ளன. அங்கு தான தர்மங்கள் எதுவுமில்லை. அங்கு உங்களுடைய வெகுமதி மாத்திரமே உள்ளது. இங்கே நீங்கள் முற்றாகச் சரணடையும்போது, பாபா அதன் பலனை 21 பிறவிகளுக்குக் கொடுக்கிறார். நீங்கள் தந்தையைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் ஏதாவது தவறைச் செய்தால், தந்தையின் பெயரை அவதூறு செய்கிறீர்கள். இதனாலேயே உங்களுக்குக் கற்பித்தல்களும் வழங்கப்படுகின்றன. ஒவ்வொருவரும் ரூப், பஸந்த் (ஞான இரத்தினங்களைப் பொழிகின்ற, யோக சொரூபங்கள்) ஆகவேண்டும். பாபா ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஞானத்தைக் கற்பித்திருக்கிறார். ஆகவே நீங்களும் இந்த ஞானத்தை மற்றவர்கள் மேல் பொழியவேண்டும். உண்மையான பிராமணர்களாகிய நீங்கள் உண்மையான கீதையைப் பேச வேண்டும். வேறு எந்தச் சமயநூல்கள் பற்றிய கேள்விக்கும் இடமில்லை. கீதையே பிரதானமான ஒன்றாகும். ஏனைய அனைத்தும் அதன் குழந்தைகள். அவற்றால் எவரும் நன்மைபெற மாட்டார்கள். அவற்றைக் கற்பதால் எவராலும் என்னைச் சந்திக்க முடியாது. உங்களுக்கு இலகு ஞானத்தையும், இலகு யோகத்தையும் கற்பிப்பதற்காக நான் மீண்டும் ஒருமுறை வருகிறேன். கீதையே அனைத்துச் சமயநூல்களினதும் இரத்தினமாகும். ஆனால் இந்த உண்மையான கீதையைக் கற்பதன் மூலமே, நீங்கள் உங்களுடைய ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். ஸ்ரீகிருஷ்ணரும் இந்த கீதையைக் கற்றதன் மூலமே தனது ஆஸ்தியைப் பெற்றார். படைப்பவரும், கீதையின் தந்தையுமான ஒருவரே உங்களுக்கு உங்களுடைய ஆஸ்தியைத் தருபவர். நீங்கள் கீதை என்ற சமயநூலிலிருந்து அதனைப் பெறுவதில்லை. படைப்பவர் ஒருவராகவே இருக்க முடியும். ஏனைய அனைவரும் படைப்புக்களாவர். முதலாம் இலக்க சமய நூல், கீதை ஆகும். பின்னர் வருகின்ற சமயநூல்களிலிருந்து உங்களால் உங்களுடைய ஆஸ்தியைப் பெறமுடியாது. நீங்கள் நேரடியாக உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். அனைவரும் தங்களுடைய ஆஸ்தியான முக்தியைப் பெறுவார்கள். அனைவரும் வீடு திரும்பவேண்டும். எவ்வாறாயினும் கற்பதன் மூலமே நீங்கள் சுவர்க்கம் என்ற உங்களுடைய ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். பின்னர் அது நீங்கள் ஒவ்வொருவரும் எந்தளவுக்குக் கற்கின்றீர்கள் என்பதில் தங்கியுள்ளது. உங்களுக்குக் கற்பிப்பதற்காகத் தந்தை நேரடியாக இங்கு வருகிறார். உங்களுக்குக் கற்பிப்பவர் யார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லையென்றால், நீங்கள் எதனைப் புரிந்து கொள்வீர்கள்? உங்களால் எதனை அடையமுடியும்? எனினும், நீங்கள் தொடர்ந்து தந்தை கூறுபவற்றைச் செவிமடுத்தால், இந்த ஞானம் ஒருபோதும் அழியாது. நீங்கள் எந்தளவுக்கு அதிகமான சந்தோஷத்தைப் பெறுகின்றீர்களோ, அந்தளவுக்கு அதிகமான சந்தோஷத்தை நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுப்பீர்கள். நீங்கள் பிரஜைகளையும் உருவாக்கவேண்டும். அப்போதுதான் நீங்கள் அரசனாக முடியும். “எங்களுடைய வாழ்க்கை ஒரு மாணவ வாழ்க்கை”. இங்கு நீங்கள் சிரித்து, விளையாடி, இந்த ஞான நடனமாடி, பின்னர் சென்று இளவரசர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் இளவரசர்கள் ஆகவேண்டும் என்று மாணவர்களாகிய உங்களுக்குத் தெரியும், எனவே உங்களுடைய சந்தோஷத்தின் அளவு உயரவேண்டும். இந்தக் கல்லூரி இளவரசர்கள், இளவரசிகளுக்கானதாகும். அங்கு இளவரசர்கள், இளவரசிகளுக்கான கல்லூரிகள் வேறானதாகும். அவர்கள் தங்களுடைய பறக்கும் இரதங்களில் (விமானங்களில்) அங்கு செல்வார்கள். அங்குள்ள பறக்கும் இரதங்கள் சேதமடைய மாட்டாது. அவை ஒருபோதும் பழுதடைவதில்லை. எவ்வகையான விபத்தும் ஒருபோதும் அங்கு ஏற்படாது. இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். முதலில் உங்கள் புத்தியின் யோகம் தந்தையுடன் இருக்கவேண்டும். இரண்டாவதாக, நீங்கள் உங்களுடைய முழுச் செய்திகளையும் தந்தைக்குக் கொடுக்கவேண்டும். எத்தனை பேரை முட்களிலிருந்து மொட்டுக்களாக மாற்றினீர்கள் என்று நீங்கள் அவருக்குக் கூறவேண்டும். ஆசிரியர் உங்களுக்குத் தொடர்ந்து வழிகாட்டல்களைக் கொடுக்கக்கூடியதாக நீங்கள் மிகச் சரியான ஒரு தொடர்பைத் தந்தையுடன் கொண்டிருக்க வேண்டும். யார் வாரிசுகளாகுவதுடன். மலர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்வார்கள்? சில ஆத்மாக்கள் முட்களிலிருந்து மொட்டுக்கள் ஆகலாம். ஆனால் அவர்கள் பாபாவின் குழந்தைகள் ஆகியபின்னரே, மலர்கள் ஆகுவார்கள். அல்லாவிடில், அவர்கள் மொட்டுக்களாகவே இருப்பார்கள். அவர்கள் பிரஜைகளில் ஒருவராகுவார்கள் என்பதே அதன் அர்த்தமாகும். நீங்கள் ஒவ்வொருவரும் இப்போது செய்யும் முயற்சிக்கேற்ப, ஓர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். உங்களுக்கு முன்னால் ஓடிச் செல்கின்ற ஒருவரின் வாலைப் பிடித்துக் கொள்ளலாம் என்றில்லை. பாரத மக்கள் அவ்வாறே நம்புகிறார்கள். எவ்வாறாயினும் வாலைப் பிடிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் எதனைச் செய்கிறீர்களோ, அதன் பலனைப் பெறுவீர்கள். நீங்கள் எத்தகைய முயற்சியைச் செய்தாலும், அதற்கான வெகுமதி 21 சந்ததிகளுக்கு உருவாக்கப்படும். நீங்கள் நிச்சயமாக முதுமை அடைவீர்கள். ஆனால், அகால மரணம் இருக்காது. அந்தஸ்து மிக உயர்ந்ததாகும்! ஒரு குறிப்பிட்ட ஆத்மாவின் பாக்கியம் திறக்கப்பட்டு, அவர் ஒரு வாரிசு ஆகியதைத் தந்தை புரிந்துகொள்கிறார். அவர் இப்போது முயற்சி செய்வதுடன், வருகின்ற தடைகளைப் பற்றியும், நிகழ்பவை பற்றியும் பாபாவிற்கு அறிவிக்கின்றார். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் அட்டவணையை பாபாவிற்குக் கொடுக்கவேண்டும். ஏனைய சத்சங்கங்களில் இந்தளவு முயற்சி செய்யப்படுவதில்லை. பாபா சிறிய குழந்தைகளை திரான்ஸ் தூதுவர்கள் ஆக்குகிறார். ஒரு யுத்தத்தில் செய்திகளைக் கொண்டு செல்பவரும் தேவை. இது ஒரு யுத்த களமாகும். நீங்கள் இங்கு இருக்கும்போது பாபா கூறுபவற்றை நேரடியாகச் செவிமடுக்கும்போது, அதிக மகிழ்ச்சியை அனுபவம் செய்வதுடன், உங்களின் இதயமும் சந்தோஷமடைகிறது. நீங்கள் வெளியே நாரைகளின் சகவாசத்திற்குச் சென்றவுடன், அந்தச் சந்தோஷம் மறைந்துவிடுகிறது. வெளியே மாயையின் தூசி உள்ளது. இதனாலேயே நீங்கள் பலமானவர்கள் ஆகவேண்டும். பாபா உங்களுக்கு அதிக அன்புடன் கற்பிக்கிறார். அவர் உங்களுக்குப் பல வசதிகளைத் தருகிறார். இது நல்லது, இது நல்லது என்று கூறிவிட்டு காணாமல் போய்விடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் மிகச் சிலராலேயே மீண்டும் எழுந்து நிற்க முடிகிறது. இங்கு இந்த ஞானத்தைப் பற்றிய போதை உங்களுக்கு இருக்கவேண்டும். மதுபானத்தின் போதையும் உள்ளது. கடனாளி ஒருவர் குடித்தவுடன், அவருக்கு போதையேற்பட்டு, தானே அரசர்களுக்கெல்லாம் அரசர் என்று நினைக்கிறார். இங்கு குழந்தைகளாகிய நீங்கள் தினமும் ஒரு குவளை அமிர்தத்தைப் பெறுகிறீர்கள். உங்களுடைய புத்தியின் பூட்டு, தொடர்ந்து திறக்கும் வண்ணம், அத்தகைய கருத்துக்களை நீங்கள் நாளுக்கு நாள் கிரகிக்க வேண்டும். ஆகவே, எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் முரளியைச் செவிமடுக்கவோ அல்லது வாசிக்கவோ வேண்டும். மக்கள் கீதையை ஒவ்வொருநாளும் படிக்கிறார்கள். இங்கும் நீங்கள் ஒவ்வொரு நாளும் தந்தையிடம் கற்கவேண்டும். நான் முன்னேற முடியாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று நீங்கள் கேட்கவேண்டும். நீங்கள் இங்கு வந்து புரிந்துகொள்ள வேண்டும். அந்த ஒருவரே எங்களுடைய தந்தை என்ற முழு நம்பிக்கையைக் கொண்டவர்களே வருவார்கள். அவர்கள் புத்தியில் நம்பிக்கையை உருவாக்க முயற்சி செய்கிறார்கள் என்றில்லை. முழுமையான நம்பிக்கை மாத்திரமே உள்ளது. இதில் சதவீதம் என்று இருக்க முடியாது. ஒரேயொரு தந்தையிடமிருந்து மாத்திரமே நீங்கள் ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். ஆயிரக் கணக்கானோர் கற்கிறார்கள். ஆனால் எவ்வாறு நம்பிக்கையைக் கொண்டிருப்பது என்று இன்னும் அவர்கள் கேட்கிறார்கள். அவர்கள் துர்ப்பாக்கியசாலிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். தந்தையை அடையாளம் கண்டு அவரை ஏற்றுக்கொள்பவர்களே, பாக்கியசாலி ஆத்மாக்களாவர். நான் உங்களைத் தத்தெடுக்கப்போகிறேன் என்று ஓர் அரசன் ஒரு குழந்தைக்குக் கூறினால், அக்குழந்தை தத்தெடுக்கப்பட்டதுமே அவருக்கு நம்பிக்கை உண்டாகிறது. எவ்வாறு நான் நம்பலாம் என்று அவர் கேட்கமாட்டார். இது இராஜ யோகமாகும். தந்தையே சுவர்க்கத்தை உருவாக்குபவர். ஆகவே அவர் உங்களை சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகிறார். உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், அது உங்களின் பாக்கியத்தில் இல்லை. ஆகவே வேறு எவரும் அதனையிட்டு என்ன செய்யமுடியும்? நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், எவ்வாறு நீங்கள் முயற்சி செய்ய முடியும்? அத்தகைய ஆத்மாக்கள் நொண்டி நொண்டித் திரிவார்கள். பாரத மக்கள் சுவர்க்கம் என்ற தங்களுடைய ஆஸ்தியைக் கல்பம், கல்பமாக எல்லையற்ற தந்தையிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள். தேவர்கள் சுவர்க்கத்தில் மாத்திரமே இருப்பார்கள். கலியுகத்தில் உண்மையான இராச்சியமில்லை. அது மக்களால் கொண்டுநடாத்தப்படும், மக்களின் அரசாங்கமாகும். இந்த உலகம் தூய்மையற்றது. ஆகவே தந்தை அதனை ஒரு தூய உலகமாக ஆக்காவிட்டால், வேறு யார்தான் ஆக்குவார்கள்? அது அவர்களின் பாக்கியத்தில் இல்லையென்றால், அவர்கள் விளங்கிக்கொள்ள மாட்டார்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் எப்போது, எவ்வாறு இராச்சியம் என்ற தங்கள் வெகுமதியைப் பெற்றுக்கொண்டார்கள் என்று புரிந்துகொள்வது மிக இலகுவானது. அவர்கள் தமது முன்னைய பிறவியில் செய்த செயல்கள் காரணமாகவே வெகுமதியைப் பெற்றுக்கொண்டார்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் சுவர்க்கத்தின் அதிபதிகளாக இருந்தார்கள். ஆனால் இந்த உலகம் இப்போது நரகமாகும். எவ்வாறாயினும் தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்கு அத்தகைய மேன்மையான செயல்களைக் கற்பிக்கவும், இராஜயோகத்தைக் கற்பிக்கவும் முடியாது. இப்போது அனைவரதும் இறுதிப் பிறவியாகும். தந்தை உங்களுக்கு இராஜ யோகத்தைக் கற்பிக்கிறார். துவாபர யுகத்தில் அவர் இராஜயோகத்தைக் கற்பிக்கமாட்டார். துவாபர யுகத்திற்குப் பின்னர் சத்திய யுகம் வருவதில்லை. இங்கு அவர்கள் நன்றாகப் புரிந்துகொள்கிறர்கள். வெளியே சென்றதும் எல்லாமே வெறுமையாகி விடுகிறது. அது, அனைத்து இரத்தினங்களும் விழுந்தபின்னர், அவர்களின் பெட்டியில் எஞ்சியுள்ள கூழாங்கற்கள் போன்றதாகும். ஞானத்தைச் செவிமடுக்கும்போது, ஓர் ஆத்மா விகாரத்தில் ஈடுபட்டால், அவர் அனைத்தையும் இழந்துவிடுகிறார். ஞான இரத்தினங்கள் அவரின் புத்தியிலிருந்து அழிக்கப்படுகின்றன. பாபா, நான் முயற்சி செய்தபின்னர், இன்று விழுந்துவிட்டேன் என்று பலரும் எழுதிக் கூறுவார்கள். நீங்கள் விழுந்தால், உங்களையும், உங்களுடைய குலத்தையும் இழிவுபடுத்திவிட்டீர்கள் என்றே அர்த்தமாகும். நீங்கள் உங்கள் பாக்கியத்தை இரத்துச் செய்துவிட்டீர்கள். வீட்டில் எவராவது தவறாக நடந்தால், தந்தை கூறுவார்: இப்படிப்பட்ட ஒரு குழந்தை இறப்பதே மேல்! ஆகவே இந்த எல்லையற்ற தந்தை கூறுகிறார்: குலத்தின் பெயரை இழிவுபடுத்தாதீர்கள். ஐந்து விகாரங்களையும் தானம் செய்தபின்னர் நீங்கள் அவற்றை மீண்டும் எடுத்துக்கொண்டால், உங்களுடைய அந்தஸ்து அழிக்கப்பட்டுவிடும். நீங்கள் முயற்சி செய்து, வெற்றியடைய வேண்டும். நீங்கள் காயப்பட்டுவிட்டால், மீண்டும் எழுந்து நில்லுங்கள்! நீங்கள் மீண்டும் மீண்டும் வீழ்த்தப்பட்டால், மயக்கமடைவதுடன், தோல்வியும் அடைவீர்கள். தந்தை ஏராளமானவற்றை விளங்கப்படுத்துகிறார். ஆனால் அவை குறைந்தபட்சம் இங்கேயிருக்கும் போதாவது தங்கவேண்டும்! மாயை மிகவும் சாமர்த்தியசாலி. தூய்மையாக இருப்பதாக சத்தியம் செய்தபின்னர், நீங்கள் வீழ்ந்தால், மிக மோசமாகக் காயப்படுவீர்கள். நீங்கள் தூய்மையாக இருந்தால் மாத்திரமே உங்களுடைய படகு அக்கரைக்குச் செல்ல முடியும். தூய்மை இருந்தபோது பாரதத்தின் பாக்கிய நட்சத்திரம் பிரகாசித்துக் கொண்டிருந்தது. இப்போது காரிருள் உள்ளது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த யுத்த களத்தில் இருக்கும்போது நீங்கள் மாயையையிட்டுப் பயப்படக்கூடாது. முயற்சி செய்வதற்காகத் தந்தை உங்களுக்குத் தருகின்ற சிறந்த அறிவுறுத்தல்களை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். விசுவாசமாகவும், கீழ்ப்படிவாகவும் இருந்து, தொடர்ந்து ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்.2. உங்கள் ஆன்மீக போதையைக் கொண்டிருப்பதற்கு, ஒவ்வொருநாளும் உங்களுக்குத் தரப்படுகின்ற இந்த ஞானம் என்ற அமிர்தத்தை ஒரு குவளை பருகுங்கள். ஒவ்வொரு நாளும் முரளியைச் செவிமடுங்கள் அல்லது வாசியுங்கள். பாக்கியசாலியாக இருப்பதற்கு, தந்தையைப் பற்றி எவ்விதமான சந்தேகத்தையும் ஒருபோதும் கொண்டிருக்கக்கூடாது.
ஆசீர்வாதம்:
நீங்கள் எந்தவிதமான கர்ம பந்தனத்தில் இருந்தும் விடுபட்டு, தந்தை பிரம்மாவைப் போல் ஜீவன்முக்தி ஸ்திதியை அனுபவம் செய்வீர்களாக.எல்லாவற்றையும் செய்யும்போதும், தந்தை பிரம்மா எந்தவிதமான கர்ம பந்தனத்திலும் அகப்பட்டுக் கொள்ளவில்லை. உறவுமுறைகளின் பொறுப்பை நிறைவேற்றும் வேளையிலும் அவர் தன்னை அந்த உறவுமுறைகளின் பந்தனம் எதிலும் கட்டுப்பட அனுமதிக்கவில்லை. அவர் செல்வம் அல்லது வசதிகளின் பந்தனத்தில் இருந்தும் விடுபட்டிருந்தார். தனது பொறுப்புக்களை நிறைவேற்றும்போது, அவர் ஜீவன்முக்தி ஸ்திதியை அனுபவம் செய்தார். அதேபோல் தந்தையைப் பின்பற்றுங்கள். கடந்தகால கர்மக் கணக்குகளின் பந்தனம் எவற்றிலும் அகப்பட்டுக் கொள்ளாதீர்கள். எந்தவிதமான சம்ஸ்காரங்கள் அல்லது சுபாவத்தின் ஆதிக்கத்திற்கு உட்படாதீர்கள் அல்லது ஆதிக்கத்திற்கு உள்ளாகுகின்ற அல்லது அடக்கப்பட்டிருக்கின்ற எந்தவிதமான பந்தனத்திற்குள்ளும் செல்லாதீர்கள். அப்போதே, நீங்கள் கர்ம பந்தனத்தில் இருந்து விடுபட்டு, ஜீவன்முக்தியுடன் வாழ்பவர் என்று அழைக்கப்படுவீர்கள். நீங்கள் எந்தவிதமான கர்ம பந்தனத்தில் இருந்தும் விடுபட்டிருந்து, (தந்தை பிரம்மா) போல் ஜீவன்முக்தி ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
சுலோகம்:
உங்களை ஒரு தமோகுணி சூழலில் இருந்து பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு, பற்றற்ற பார்வையாளராக நாடகத்தை அவதானிப்பதைப் பயிற்சி செய்யுங்கள்.