22.08.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, எல்லையற்ற புத்தி உடையவராக இருங்கள். முக்கிய பிரமுகர்களது அபிப்பிராயங்களைப் பெற்று, சகல ஆத்மாக்களுக்கும் நன்மை அளியுங்கள். பெருமளவு கண்காட்சிகளை நடாத்துவதற்கு, அவர்களிடம் மண்டபங்களைக் கேளுங்கள்.

கேள்வி:
இப்பொழுது நீங்கள் கொண்டுள்ள எவ் விழிப்புணர்வை நினைவு செய்வதனால், என்றுமே சந்தோஷத்தை இழக்க மாட்டீர்கள்?

பதில்:
நீங்கள் பூஜிக்கப்படத் தகுதிவாய்ந்த அரசர்களாக இருந்தீர்கள் எனவும், பின்னர் ஆண்டிகள் ஆகினீர்கள் எனவும் இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். பாபா வந்து விட்டார், அவர் உங்களை மீண்டும் ஒருமுறை அரசர்கள் ஆக்குகிறார். பாபா இப்பொழுது உங்களுக்கு முழு உலகினதும் செய்தியைக் கூறுகின்றார். நீங்கள் இப்பொழுது உலகின் வரலாறையும், புவியியலையும் அறிந்து கொண்டீர்கள். இந்த விழிப்புணர்வைத் தொடர்ந்தும் கொண்டிருப்பதால், நீங்கள் ஒருபொழுதும் சந்தோஷம் இன்மையை உணர மாட்டீர்கள். நீங்கள் சதா சந்தோஷமாகவே இருப்பீர்கள்.

பாடல்:
அன்பான கடவுளே, குருடர்களுக்கு வழியைக் காட்டுங்கள்!

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். தந்தையைச் சந்தித்து அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக்கொள்வது மிகவும் இலகுவானது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் தந்தையிடம் இருந்து ஜீவன்முக்தி எனும் ஆஸ்தியை ஒரு விநாடியில் பெறுகின்றீர்கள் என்பது நினைவு கூரப்படுகிறது. “ஜீவன்முக்தி” என்றால், ஆஸ்தியான சந்தோஷம், அமைதி, செழிப்பு முதலியவை ஆகும். இரண்டு பதங்கள் உள்ளன: ஜீவன்முக்தியும், பந்தன வாழ்க்கையும். பக்தி மார்க்கத்தில் இருப்பதாலும், இது இராவண இராச்சியம் என்பதாலும் இந்நேரத்தில் அனைவரும் பந்தன வாழ்க்கையையே கொண்டிருக்கிறார்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். தந்தை வந்து, உங்களைப் பந்தனத்தில் இருந்து விடுவித்து உங்களுக்கு ஆஸ்தியைக் கொடுக்கிறார். ஒரு குழந்தை பிறந்தவுடனேயே ஒரு வாரிசு பிறந்து விட்டார் என்று அந்தக் குழந்தையின் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் புரிந்து கொள்கின்றார்கள். இதனைப் புரிந்துகொள்வது எவ்வளவு சுலபமாக இருக்கிறதோ, அவ்வாறே அதனைப் புரிந்து கொள்வதும் இலகுவானது. குழந்தைகள் கூறுகிறார்கள்: பாபா, நீங்கள் மிகச்சரியாக எங்களை முன்னைய கல்பத்தில் சந்தித்ததைப் போலவே, இப்பொழுதும் வந்து சந்தித்திருக்கிறீர்கள். உங்களிடம் இருந்து ஓர் ஆஸ்தியை இலகுவில் பெற்றுக் கொள்கின்ற ஒரு வழியை நாங்கள் கண்டுவிட்டோம். புதிய உலகைப் படைப்பவர் கடவுளே என்பது அனைவருக்கும் தெரியும். அவர் எங்களை அலைந்து திரிவதிலிருந்து விடுவிக்கிறார். நேற்று நாங்கள் பக்தி செய்து கொண்டிருந்தோம், இன்று இந்த இலகு ஞானத்திற்கும், இராஜ யோகத்திற்குமான பாதையைக் கண்டு கொண்டுள்ளோம். இரண்டு தந்தையரைக் கொண்டிருக்கின்ற விடயத்தைத் தாங்கள் பிரம்மாகுமாரிகள் மூலம் எவ்வாறு அறிந்து கொண்டனர் என்ற தங்கள் அனுபவங்களைச் சில குழந்தைகள் கூறுகிறார்கள். உங்களைத் தவிர வேறெவராலுமே தங்களுக்கு இரு தந்தையர் உள்ளனர் எனக் கூற முடியாது. உங்கள் ஒவ்வொரு விடயமும் அற்புதமானதே. இவ்விடத்திற்கு உரியவர்கள் மிக இலகுவிலேயே இவ்விடயங்கள் அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்வார்கள் என்பதை நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். ஆம், சிலவேளைகளில் மாயை அனைத்தையும் மறக்கச் செய்வதால், அனைத்தையும் நினைவில் வைத்திருப்பவர்களையும் அறைந்து விடுகின்றாள். இதில் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தந்தை உங்களுக்கு அனைத்தையும் நினைவுபடுத்தி உள்ளார். நீங்கள் தூய்மைக்கான காப்பை இறுக்கமாகக் கட்ட வேண்டும். இப்பொழுது நீங்கள் இரக்ஷா பந்தனின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்கின்றீர்கள். உங்களை இந்தச் சத்தியத்தைச் செய்ய வைத்தவர் யார்? காமமே கொடிய எதிரியாகும். தந்தை கூறுகிறார்: நீங்கள் ஒருபொழுதுமே தூய்மை அற்றவர்கள் ஆகமாட்டீர்கள் எனவும், தொடர்ந்தும் என்னையே நினைவு செய்வீர்கள் எனவும் எனக்குச் சத்தியம் செய்யுங்கள், அப்பொழுது அரைக் கல்பத்திற்கான உங்களின் பாவங்கள் எரிக்கப்பட்டு, அழிக்கப்படும். தந்தை இந்த உத்தரவாதத்தைத் தருகிறார். தந்தையே உங்களுக்கு இந்த உத்தரவாதத்தைக் கொடுப்பதால், அது நல்லதே என்பதைக் குழந்தைகளான நீங்களும் புரிந்து கொள்கின்றீர்கள். பொற்கொல்லர்கள் என்ன உத்தரவாதத்தைக் கொடுக்கிறார்கள்? தாங்கள் பழைய நகைகளைப் புதியதாக்குவதாக அவர்கள் கூறுகிறார்கள். அதுவே அவர்களின் வேலை ஆகும். அதனைத் தீயில் இடுவதால், அது நிச்சயமாகவே தூய தங்கம் ஆகும். ஆகவே தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஆத்மாக்களில் கலப்படம் உள்ளது. நீங்கள் எவ்வாறு சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்கிறீர்கள் என்பது விளங்கப்படுத்துவதற்கு மிகவும் இலகுவானதே. படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, ஆகவே அவற்றைப் பயன்படுத்தி விளங்கப்படுத்துவதும் இலகுவானது. அவர்கள் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பல வகையான வரைபடங்களை வைத்திருக்கிறார்கள். இவை உங்கள் வரைபடங்கள் ஆகும். நீங்கள் யாருக்காவது மிகவும் நன்றாக விளங்கப்படுத்தலாம். ஞானக் கடலாகிய, தூய்மையாக்குகின்ற தந்தையே வந்து, உங்களுக்கு இப்பாதையைக் காட்டுகிறார். வேறு எவராலுமே தூய்மையற்ற நபரைத் தூய்மையாக்க முடியாது. மனிதர்கள்; பார்வை அற்றவர்களாகவும், சந்தோஷம் அற்றவர்களாகவும் இருக்கிறார்கள். முதல் இரண்டு யுகங்களிலும் துன்பமோ அல்லது பக்தியோ இல்லை என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அதுவே சுவர்க்கம் ஆகும். தற்காலத்துப் பாரத மக்களுக்கும், புராதன பாரத மக்களுக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கிறது. எவ்வாறாயினும், வேறு எவருமே இதனைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் பெருமளவு வழிபாடுகள் போன்றவற்றைச் செய்கிறார்கள். மக்கள் எந்தளவு செல்வந்தர்களாக இருக்கிறார்களோ, அந்தளவிற்கு அதிகமாக அழகான நகைகளை அவர்கள் தேவ, தேவியரின் விக்கிரகங்களுக்கு அணிவிக்கிறார்கள். பாபா அனுபவசாலி ஆவார். பம்பாயில் இருந்த இலக்ஷ்மி, நாராயணன் ஆலயத்தின் தர்மகர்த்தா ஒருவர் வைரத்தாலான ஓர் அட்டியலை இலக்ஷ்மி, நாராயணனுக்காகச் செய்வித்தார். பாபா இன்னமும் அந்தத் தர்மகர்த்தாவின் பெயரை ஞாபகம் வைத்திருக்கிறார். அவர் முதலில் சிவபாபாவிற்கு ஓர் ஆலயத்தைக் கட்டி, மிக அழகாக அலங்கரித்தார், பின்னர் தேவர்களுக்கும் ஆலயங்களைக் கட்டி, இலக்ஷ்மி, நாராயணன் போன்றோரை அதிகளவு ஆபரணங்களினால் அலங்கரித்தார். அந்நேரத்தில் எவ்வளவு செல்வம் இருந்திருக்கும்! முஹம்மது கஸ்னாவி வந்து, ஒட்டகத்தில் மூட்டைகளாக அதனைக் கொள்ளை அடித்துச் சென்றான். பாரதத்தில் அதிகளவு செல்வம் இருந்தது! உங்கள் பாரதம் எப்படி இருந்தது என்பதை நீங்கள் இப்பொழுது மிகச்சரியாகப் புரிந்து கொள்கிறீர்கள். எங்கள் பாரதத்தில் எல்லையற்ற பொக்கிஷங்கள் இருந்தன. அவர்கள் வைரங்களாலும், இரத்தினங்களாலும் ஆலயங்கள் கட்டுவது வழக்கம். அவ்விடயங்கள் இப்பொழுது இல்லை. அனைவரும் அனைத்தையும் கொள்ளை அடித்துள்ளார்கள். இப்பொழுது நிலைமை என்னவாகி உள்ளது எனப் பாருங்கள்! நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்த அரசர்களாக இருந்தீர்கள், இப்பொழுது உங்கள் 84 பிறவிகளையும் பூர்த்திசெய்த பின்னர், முழுமையான ஆண்டிகளாகி உள்ளீர்கள். நீங்கள் இந்த விடயங்களை மீண்டும் மீண்டும் கடைவதால், என்றுமே உங்களைச் சந்தோஷம் அற்றவர்கள் எனக் கருத மாட்டீர்கள். நீங்கள் பாபாவிடம் இருந்து எதைப் பெற்றுக் கொள்கிறீர்கள் என்பதை நீங்கள் உங்கள் இதயங்களில் தொடர்ந்தும் கடைய வேண்டும். தந்தை வந்து, எங்களுக்கு முழு உலகினதும் செய்தியைக் கூறுகிறார். எவருக்குமே இவ்வுலகின் வரலாறும், புவியியலும் தெரியாது. ஆரம்பத்தில் ஒரே தர்மமும் ஓர் இராச்சியமும் ஒரே வழிகாட்டலும் ஒரே மொழியும் மாத்திரமே இருந்தன என்பதையும், முதலில் அனைவரும் சந்தோஷமாக இருந்தனர் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பின்னர் அவர்கள் தங்கள் மத்தியில் சண்டையிட ஆரம்பித்தனர், பாரதம் துண்டுகளாகப் பிரிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அது அவ்வாறு இருக்கவில்லை. அங்கு எவ்விதமான துன்பமும் இருக்கவில்லை. அங்கு நோய் என்ற குறிப்பே இருக்கவில்லை. அதன் பெயரே சுவர்க்கம் ஆகும். நீங்கள் இப்பொழுது உங்களைப் பற்றிய அனைத்தையும் நினைவு கூருகின்றீர்கள். உண்மையில் நாங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் அனைத்தையும் மறந்து, பின்னர் அனைத்தையும் நினைவு செய்கின்றோம். படைப்பவரையும், படைப்பையும் மறந்ததே நாங்கள் செய்த முதலாவது ஒரேயொரு தவறாகும். உங்களுக்கு இப்பொழுது ஆரம்பம், மத்தி, இறுதியைத் தெரியும். இந்த ஞானம் சத்தியயுகத்தில் இருக்கவும் மாட்டாது. அப்படியானால் இது எவ்வாறு தொன்றுதொட்ட காலம் முதல் தொடர்ந்திருக்க முடியும்? அந்நேரத்தில் அரசர்;களே பிரதானமானவர்கள். அப்பொழுது ரிஷிகளோ அல்லது முனிவர்களோ இருக்கவில்லை. அவர்கள் துவாபரயுகத்திலேயே இருந்தார்கள். ரிஷிகளும், முனிவர்களும் தங்கள் உணவு முதலியவற்றை அரசர்களிடம் இருந்தே பெற்றார்கள். அவர்கள் அனைத்தையும் துறந்தவர்கள் என்பதால், அரசர்களே அவர்களைப் பராமரித்தார்கள். புராதன பாரதத்தின் புராதன இராஜயோகமானது நினைவுகூரப்படுகிறது. ரிஷிகளும், முனிவர்களும் புராதனமானவர்கள் என நீங்கள் கூறமாட்டீர்கள். அவர்கள் துவாபர யுகத்திலேயே வருகிறார்கள். அவர்கள் அரசர்களாலேயே பராமரிக்கப்படுகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: எங்களுக்குப் படைப்பவரையோ அல்லது படைப்பையோ தெரியாது. தந்தை கூறுகிறார்: அரசர்களுக்கும் இது தெரியாது. இவ்வுலகில் உள்ள எவருக்குமே இந்த ஞானம் இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது விவேகமானவர்கள் ஆகிவிட்டீர்கள். இலக்ஷ்மி, நாராயணனின் ஆலயங்களைக் கட்டுபவர்களுக்கு நீங்கள் இவ்வாறு எழுதலாம்: நீங்கள் பல நூறாயிரம் ரூபாய்களை ஆலயங்களைக் கட்டுவதில் செலவு செய்துள்ளீர்கள், ஆனால் உங்களுக்கு அவர்களது வாழ்க்கை வரலாறுகள் தெரியுமா? அவர்கள் எவ்வாறு தங்கள் இராச்சியத்தைப் பெற்றார்கள்? பின்னர் அவர்கள் எங்கு சென்றார்கள்? அவர்கள் இப்பொழுது எங்கு இருக்கிறார்கள் என்பதைப் பற்றிய இரகசியங்கள் முழுவதையும் எங்களால் உங்களுக்குக் கூறமுடியும். உங்களால் இவ்வாறு அவர்களுக்கு எழுத முடியும். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது அனைவரது வாழ்க்கை சரிதையும் தெரியும், ஆகவே நீங்கள் ஏன் அவர்களுக்கு எழுதக்கூடாது? கூறுங்கள்: எங்களுக்கு நீங்கள் சிறிதளவு நேரத்தைக் கொடுத்தீர்களாயின், நாங்கள் உங்களுக்கு ஒவ்வொருவரதும் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவோம். சிவனுக்கு ஆலயங்களைக் கட்டுபவர்களுக்கும் இதைப் பற்றி உங்களால் எழுத முடியும். பெனாரசில் இருக்கின்ற சிவாலயம் மிகப் பிரமாண்டமானது! அங்கு தர்மகர்த்தாக்கள் இருக்க வேண்டும். நீங்கள் பிரமுகர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கும் முயற்சி செய்ய வேண்டும். பிரமுகர்கள் புரிந்துகொள்ளும் பொழுது, அவர்களது ஒலியானது அனைவரும் கேட்கும் வகையில் பரவும். ஏழைகள் மிக விரைவில் அவர்களைச் செவிமடுக்கின்றார்கள். நீங்கள் பிரமுகர்களது உதவியைக் கோர வேண்டும். நீங்கள் அவர்களது அபிப்பிராயங்களை எழுதும்படி கூறவேண்டும். ஏனெனில் அவர்களது ஒலியானது உதவியாக இருக்கும். உண்மையில், அவர்கள் தாங்கள் எழுப்பக் கூடியளவு ஒலியை எழுப்ப மாட்டார்கள். நீங்கள் இதனை ஜனாதிபதிக்கும் விளங்கப்படுத்த வேண்டும். அவர்கள் “இது நல்லது” என்றும் கூறுகிறார்கள். முதல் அமைச்சர் அல்லது ஆளுனர் திறப்புவிழாவை நடாத்தும்பொழுது, இந்தப் பிரம்மாகுமாரிகளே உங்களுக்குக் கடவுளைச் சந்திப்பதற்கான மிக நல்ல, இலகுவான பாதையைக் காட்டுகிறார்கள் என்றும் எழுதுகிறார்கள். எவ்வாறாயினும் கடவுள் யார் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அந்த நேரத்தில் நீங்கள் காட்டும் பாதை மிகவும் சிறந்தது எனவும், அமைதியை அடைவதற்காக நீங்கள் காட்டும் பாதை மிகவும் நல்லது எனவும் அவர்கள் வெறுமனே கூறுகிறார்கள். ஆனால் அவர்களே எதனையும் புரிந்து கொள்வதில்லை. முக்கிய பிரமுகர்களுக்கு விளங்கப்படுத்துமாறு பாபா உங்களுக்குக் கூறுகிறார். பிரமுகர்களின் உதவியுடன் மிகவும் பிரபல்யமான மண்டபங்களைக் கேளுங்கள். அவர்களிடம் கூறுங்கள்: சகல மனிதர்களுக்கும் நன்மையை ஏற்படுத்துவதற்காக நாங்கள் இந்தக் கண்காட்சியை இங்கேயே நிரந்தரமாக நடாத்த விரும்புகிறோம். இதை விளம்பரப்படுத்துங்கள். இதனைப் போல் 50 முதல் 100 மண்டபங்களை எடுத்துக் கொள்ளுங்கள்! பாரதம் மிகப் பிரமாண்டமானது. ஒவ்வொரு நகரத்திலும் 10 இலிருந்து 12 மண்டபங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பல மண்டபங்களிலே கண்காட்சிகள் நடாத்தப்படுகின்றன எனச் செய்திப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட வேண்டும். இதனைப் புரிந்து கொள்ள விரும்புபவர்கள் வந்து அதனைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுது இதனால் பலரும் நன்மை அடைவார்கள். குழந்தைகளான நீங்கள் மிகவும் பரந்த புத்தியைக் கொண்டிருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்ய வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் கூறுகிறார்: கண்காட்சிகளைப் பெரும் ஆடம்பரத்துடனும், பகட்டுடனும் நடாத்துங்கள். பாபா இதற்கான ஆயத்தங்களைச் செய்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இவ்விடயங்கள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். கடவுளே வந்து, பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் மக்களின் படைப்பைப் படைக்கிறார். ஆகவே அவர் நிச்சயமாகப் பல பிராமணர்களை உருவாக்கியிருக்க வேண்டும். அவர் இப்பொழுது அவர்களை மீண்டும் உருவாக்குகிறார். பல பிராமணர்கள் இருக்கிறார்கள்! பாபா சங்கமயுகத்திலேயே இந்தப் பிராமண தர்மத்தை உருவாக்குகிறார். உங்களால் இவ்விடயங்கள் யாவற்றையும் நடைமுறைரீதியில் பார்த்துப் புரிந்துகொள்ள முடியும். இவ்விடயங்கள் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. தூய்மையற்ற உலகம் தூய்மையாக்கப்பட வேண்டியுள்ள பொழுது மாத்திரமே பாபா வருகிறார் எனக் குழந்தைகளான நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பரமாத்மா படைப்பினைப் பிரஜாபிதா பிரம்மாவினூடாகவே செய்கிறார் என மக்களும் அறிவார்கள், ஆனால் அவர் எப்பொழுது அதனைச் செய்கிறார் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர் ஒரு புதிய படைப்பைப் படைக்க வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள். பிரம்மா சூட்சும உலகிலேயே இருக்கிறார் எனவும் அவர்கள் நம்புகிறார்கள். பிரஜாபிதா பிரம்மா இப்பொழுது இங்கேயே இருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் சூட்சும உலகிற்குச் செல்கிறீர்கள். நீங்கள் தூய்மையாகி, பின்னர் தேவதைகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் காட்சிகளையும் காண்கின்றீர்கள். குழந்தைகள் திரும்பவும் வந்து, அங்கிருப்பவை (சூட்சும உலகம்) யாவும் அசைவுகளே எனக் கூறுகிறார்கள். அதுவே அசைவு (சலனம்) உள்ள உலகமாகும். நீங்கள் சலனப் படங்களைப் பார்த்திருக்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது அனைத்தையும் நடைமுறையில் புரிந்து கொள்கிறீர்கள். அசரீரி உலகமே ஆத்மாக்கள் வசிக்கும் ‘மௌன உலகம்’ ஆகும். சூட்சும உலகில் சூட்சும சரீரங்கள் இருக்கின்றன. ஆகவே அங்கே நிச்சயமாக ஏதாவது மொழியும் இருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய உங்களது வசிப்பிடமே மௌனதாமம் என்பது குழந்தைகளாகிய உங்களது புத்திகளில் இருக்கிறது. பின்னர் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் வசிக்கின்ற சூட்சும உலகம் இருக்கின்றது. இங்கே இதுவே கலியுகத்தினதும், சத்தியயுகத்தினதும் சங்கமமாகும். தந்தை இங்கு வருகின்றார், பின்னர் பிராமணர்களாகிய நீங்கள் இங்கிருந்தே செல்கிறீர்கள். பிறந்த வீடும், புகுந்த வீடும் இருக்கின்றன. இங்கு உங்கள் இரண்டு பெற்றோரும் உள்ளனர். பாபா, தாதா இருவரும் குழந்தைகளாகிய உங்களை மலர்களைப் போல் ஆக்குவதற்கே முயற்சி செய்கிறார்கள். முஸ்லிம்கள் அல்லாவின் தோட்டத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். பாபாவின் முன்னால் நின்று, பாபாவைக் கண்டதுமே தரையில் வீழ்ந்து விடுகின்ற ஒரு குறிப்பிட்ட நபர் கராச்சியிலே இருந்தார். அதனைப் பற்றி அவரிடம் கேட்கப்படும் பொழுது, தான் கடவுளின் பூந்தோட்டத்திற்குச் சென்றதாகவும், கடவுள் தனக்கு ஒரு மலரைக் கொடுத்ததாகவும் கூறுவார். அவருக்கு இந்த ஞானம் எதுவுமே இருக்கவில்லை. பூந்தோட்டம் என்றால் என்ன என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இது முட்காடாகவும், அது பூந்தோட்டமாகவும் இருக்கின்றன. இந்தக் கலியுகம் என்றால் என்ன, அந்தச் சத்தியயுகம் என்றால் என்ன என்பது பற்றிய இரகசியங்கள் அனைத்தும் உங்கள் புத்திகளில் இருக்கின்றன. உங்கள் புத்தியில் நீங்கள் சக்கரம் முழுவதையும் கொண்டிருப்பதால், பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும், அதனையிட்டுப் பெருமளவு விரிவாக்கம் உள்ளது. இது உங்கள் புத்தியில் சுருக்கமாக இருக்கிறது. படைப்பவராகிய தந்தையிடம் இருந்து குழந்தைகளான நீங்கள் இப்பொழுது படைப்பவரையும், படைப்பையும் அறிந்து கொள்கிறீர்கள். பிரம்மா படைப்பவர் என்று அழைக்கப்படுவதில்லை. ஒரேயொரு படைப்பவரும், அந்த ஒரேயொருவரின் மகத்துவமுமே உள்ளன. முதலில் பிரம்மா மூலமான படைப்பும், பின்னர் ஸ்ரீகிருஷ்ணரின் படைப்பும் இருக்கின்றன. பிரம்மா இருக்கிறார், ஆனால் பிராமணர்களும் தேவைப்படுகிறார்கள். பாண்டவர்கள் பிராமணர்கள் என்று அழைக்கப்படுவதில்லை. பிரம்மாவின் மூலம் உருவாக்கப்பட்ட பிராமணர்களே தேவைப்படுகிறார்கள். இதுவே ஓர் ஆன்மீக யாகம் ஆகும். இதுவே ஆன்மீக ஞானம் என்று அழைக்கப்படுகிறது. ஒரேயொரு தந்தையே ஆத்மாக்களாகிய உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். உங்களுக்குக் கற்பிப்பது ஒரு மனிதரல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தந்தையே ஆத்மாக்களான உங்கள் அனைவருக்கும் கற்பிக்கிறார். பிரம்மாவின் மூலமே ஸ்தாபனை இடம்பெறுகிறது எனக் கூறப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணர் மூலம் இது நடைபெறுகிறது என நீங்கள் கூறமாட்டீர்கள்; அது சாத்தியமல்ல. பிரம்மா மூலமான ஸ்தாபனையைத் தூண்டுவது யார்? அது ஸ்ரீகிருஷ்ணரா? இல்லை, இது பரமாத்மாவாகிய பரமதந்தையே. விஷ்ணுவின் மூலமே பராமரிப்பு நடைபெறுகிறது. பிரம்மாவும், விஷ்ணுவும் கூட தங்கள் பாகங்களைக் கொண்டிருக்கிறார்கள். பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களே பின்னர் விஷ்ணுதாமத்தின் தேவர்கள் ஆகுகிறார்கள். பிரம்மா விஷ்ணு ஆகுகின்றார், விஷ்ணு பிரம்மா ஆகுகின்றார். பிரம்மா விஷ்ணு ஆகுவதற்கு ஒரு விநாடியே எடுக்கின்றது என்பதுவும், பின்னர் விஷ்ணு பிரம்மா ஆகுவதற்கு 84 பிறவிகள் எடுக்கின்றன என்பதுவும் குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. இவை அத்தகைய அற்புதமான விடயங்கள்! வேறெவராலுமே இவற்றைப் புரிந்துகொள்ள முடியாது. அவை எல்லையற்ற விடயங்கள் ஆகும். நீங்கள் எல்லையற்ற தந்தையுடன் இந்த எல்லையற்ற கல்வியைக் கற்று, அந்த எல்லையற்ற இராச்சியத்தைப் பெற வேண்டும். உலகச் சக்கரத்தை அறிந்து கொள்ளுங்கள்! ஆத்மாக்களான நீங்கள் அதனை உங்களின் சரீரங்களின் மூலம் அதனை அறிந்து கொள்கிறீர்கள். உங்களின் சரீரங்கள், இந்த ஞானத்தை ஆத்மாக்களான உங்களின் மூலம் பெறுகின்றன என்பதல்ல் இல்லை. ஆத்மாக்களான நீங்களே இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் உள்ளது! உங்களுக்குள் உள்ளார்ந்த, மறைமுகமான சந்தோஷம் இருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்களே கற்கின்ற சம்ஸ்காரங்களைக் கொண்டிருக்கிறீர்கள். ஆத்மாவே துன்பத்தை உணர்கிறார். “எனது ஆத்மாவிற்குத் துன்பம் கொடுக்காதீர்கள்” என்று கூறப்பட்டிருக்கின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அதிகளவு ஞானோதயத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள். முகில்களாகிய நீங்கள் கடலினால் புத்துணர்ச்சியைப் பெற்று, இந்த ஞானத்தை ஒன்றுகூடிப் பொழிய வேண்டும். ஒன்றாகச் சந்தித்து, இந்தக் கண்காட்சிகளை உருவாக்குவதற்கு உதவி செய்யுங்கள். நீங்கள் இதனைச் செய்வதற்கு ஆர்வமுடையவராக இருக்க வேண்டும். சேவை, சேவை, மேலும் சேவை! அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் தந்தையிடம் இருந்து பெற்றுள்ள இந்த ஞானத்தைக் கடைந்து, முடிவற்ற சந்தோஷத்தைப் பேணுங்கள். எல்லையற்ற புத்தியைக் கொண்டிருப்பதுடன், சேவையைப் பெரும் ஆடம்பரத்துடனும், பகட்டுடனும் செய்யுங்கள்.

2. பாபா உங்களுக்கு ஞாபகப்படுத்தியுள்ள விழிப்புணர்வை மறக்காதீர்கள். தூய்மையாக இருப்பேன் என நீங்கள் தந்தைக்குச் செய்துள்ள சத்தியத்தை முழுமையாக நிறைவேற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் பற்றற்றவர் ஆக இருக்கும் உங்களின் பயிற்சியால் தேவதை ரூபத்தின் காட்சியை அருளும் சதா இலகு யோகி ஆகுவீர்களாக.

ஓர் ஆடையை அணிவதும் அணியாமல் விடுவதும் உங்களில் தங்கி இருப்பதைப் போன்று, உங்களின் சரீரம் என்ற ஆடைக்கும் அதே அனுபவத்தைக் கொண்டிருங்கள். ஒரு பணியைச் செய்வதற்காக நீங்கள் ஓர் ஆடையை அணிகின்றீர்கள். அந்தப் பணி முடிவடைந்து உடனேயே நீங்கள் அந்த ஆடையைக் களைந்து விடுகிறீர்கள். நடக்கும் போதும் அசையும் போதும் ஆத்மாவான உங்களுக்கும் சரீரத்திற்கும் இடையில் பற்றற்ற தன்மையை அனுபவம் செய்யுங்கள். அப்போது நீங்கள் சதா இலகு யோகி என்று அழைக்கப்படுவீர்கள். இந்த முறையில் பற்றற்று இருக்கும் குழந்தைகளினூடாக ஆத்மாக்கள் பலர் உங்களின் தேவதை ரூபத்தினதும் உங்களின் எதிர்கால அரச அந்தஸ்தினதும் காட்சிகளைக் காண்பார்கள். இறுதியில், இந்த வகையான சேவையே ஒரு விளைவை ஏற்படுத்தும்.

சுலோகம்:
சங்கமயுகத்தில் ஒரு விநாடியையேனும் வீணாக்குவது என்றால், ஒரு வருடத்தை வீணாக்குவதாகும்.

அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.

பிராமண வாழ்க்கையின் இயல்பான ஆஸ்தியான சதா சந்தோஷத்தையும் அமைதி சொரூபமாக இருந்து மனதில் திருப்தியையும் கொண்டிருப்பதையும் அனுபவம் செய்வதற்கு, உங்களின் மனதில் தூய்மை இருக்க வேண்டும். இதைச் சேமிப்பதற்கான வழிமுறை, உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் தூய்மை இருக்க வேண்டும். தூய்மையே அத்திவாரம் ஆகும். சேவையில் வெற்றி பெறுவதற்கான அடிப்படையும் தூய்மையே ஆகும். உங்களின் எண்ணங்களிலோ அல்லது வார்த்தைகளிலோ வேறெந்த உணர்வுகளும் கலக்கக்கூடாது. உங்களின் நோக்கங்களிலும் அத்துடன் உங்களின் உணர்வுகளிலும் தூய்மை இருக்க வேண்டும்.