23.01.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் மக்களுக்கு முதலில் கூறவேண்டிய இரு விடயங்களாவன: தந்தையை நினைவு செய்வதும், 84 பிறவிகளின் சக்கரத்தைத் தெரிந்துகொள்வதும் ஆகும். அப்பொழுது அவர்களுடைய கேள்விகள் யாவும் முடிவடைந்துவிடும்.
கேள்வி:
தந்தையின் புகழ்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் எந்த வார்த்தைகள் ஸ்ரீகிருஷ்ணரின் புகழ்ச்சிக்குப் பயன்படுத்தப்படுவதில்லை?பதில்:
தந்தை விருட்சத்தின் பிரபு ஆவார். ஸ்ரீ கிருஷ்ணர் விருட்சத்தின் பிரபு என அழைக்கப்பட மாட்டார். அசரீரியான தந்தையே தந்தையருக்கு எல்லாம் தந்தை எனவும், கணவன்மாருக்கு எல்லாம் கணவர் எனவும் அழைக்கப்படுகின்றார். ஸ்ரீ கிருஷ்ணர் அவ்வாறு அழைக்கப்படுவதில்லை. ஒவ்வொருவரின் தனிப்பட்ட புகழ்ச்சியையும் தெளிவாக்குங்கள்.கேள்வி:
நீங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் மேளம் தட்டித் தெரிவிக்க வேண்டியது என்ன?பதில்:
ஒவ்வொரு கிராமத்திலும் மேளம் தட்டிக் கூறுங்கள்: வாருங்கள்! எவ்வாறு நீங்கள் நரகவாசியில் இருந்து சுவர்க்கவாசி ஆகலாம் என்பதையும், எவ்வாறு மனிதரிலிருந்து தேவராகலாம் என்பதையும், ஸ்தாபனையும் விநாசமும் எவ்வாறு சம்பவிக்கின்றன என்பதையும் வந்து புரிந்து கொள்ளுங்கள்.பாடல்:
நீங்களே தாயும் நீங்களே தந்தையும் ஆவீர்கள்!ஓம் சாந்தி.
இப் பாடலின் இறுதி வரி கூறுகிறது: “நீங்களே படகும் நீங்களே படகோட்டியும் ஆவீர்கள்” இது தவறாகும். இது போலவே அவர் பூஜிக்கப்படத் தகுதிவாய்ந்தவராக இருப்பதுடன் பூஜிப்பராகவும் உள்ளாரென அவர்கள் தவறாகக் கூறுகிறார்கள். இப்பாடல் தந்தைக்கு இழிவை ஏற்படுத்துவதால், ஞானத்தில் சிறந்து விளங்குபவர்கள் இப்பாடலை உடனே நிறுத்தி விடுவார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது இந்த ஞானம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனையோரிடம் அது இல்லை. உங்களுக்கும் இந்த வேளையிலேயே அது கொடுக்கப்படுகிறது. பின்னர் அது இருக்கப் போவதில்லை. மக்கள் மிக மேன்மையான மனிதர்கள் ஆகுவதற்காகவே கடவுளின் இந்தக் கீதை ஞானம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தளவை மக்கள் புரிந்து கொள்கிறார்கள் ஆயினும், அது எப்படி, எப்போது கொடுக்கப்பட்டது என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். ஒரு தர்மத்தை உருவாக்குவதற்கான சமயநூல் கீதையே ஆகும். ஏனைய சமய நூல்கள் ஒரு சமயத்தை உருவாக்குவதற்காக அல்ல. “சமய நூல்” எனும் பதம் பாரதத்திற்காகவே உபயோகிக்கப்படுகிறது. கீதையே சமய நூல்கள் அனைத்தினதும் இரத்தினமாகும். ஏனைய அனைத்து சமயங்களும் பின்னரே வந்தன. அவை எவையுமே சமய நூல்களின் இரத்தினமாக முடியாது. தந்தை ஒருவரே விருட்சத்தின் பிரபு என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் எங்கள் தந்தையும் கணவருமாவார். அவர் எல்லோரினதும் தந்தையுமாவார். அதனாலேயே அவர் கணவன்மாருக்கு எல்லாம் கணவரென்றும் தந்தையருக்கு எல்லாம் தந்தையென்றும் போற்றப்படுகிறார். இப்புகழ்ச்சி அந்த அசரீரியான ஒருவருக்கே உரியது. ஸ்ரீகிருஷ்ணரின் புகழ்ச்சி தந்தையின் புகழ்ச்சியுடன் ஒப்பிடப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணர் புதிய உலகின் ஓர் இளவரசர் ஆவார். பழைய உலகில், சங்கம யுகத்தில் அவர் எப்படி இராஜ யோகத்தைக் கற்பிக்க முடியும்? கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இப்பொழுது கற்றுக் கொள்வதன் மூலம் நீங்கள் பின்னர் தேவர்கள் ஆகுகிறீர்கள். இந்த ஞானம் அங்கே தொடர்வதில்லை. அது மறைந்துவிடும். எஞ்சி இருப்பதெல்லாம் ஒரு மூடை மாவிற்குள் ஒரு துளி உப்பு இருப்பதைப் போன்றதே. ஒரு சில படங்களே எஞ்சியிருக்கின்றன. உண்மையில் அவர்களுடைய படங்கள் எவையுமே மிகச்சரியாக இல்லை. நீங்கள் அவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுத்த பின்னர் கடவுளே இதனை விளங்கப்படுத்துகிறாரென அவர்களுக்குக் கூறுங்கள். அவர் அனைத்தையும் இயல்பாகவே விளங்கப்படுத்துகிறார். எனவே நீங்கள் அவரை என்ன கேள்வி கேட்கப் போகிறீர்கள்? முதலாவதாக தந்தையை இனங்கண்டு கொள்ளுங்கள்! தந்தை ஆத்மாக்களுக்குக் கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! இரண்டு விடயங்களை மட்டும் நினைவு செய்யுங்கள். பாபா கூறுகிறார்: என்னையும் 84 பிறவிகளின் சக்கரத்தையும் நினைவுசெய்யுங்கள். அவ்வளவுதான். இவையிரண்டுமே நீங்கள் விளங்கப்படுத்த வேண்டிய முக்கிய விடயங்களாகும். தந்தை கூறுகிறார்: உங்களுக்கு உங்களுடைய பிறவிகளைப் பற்றியே தெரியாது. பிராமணக் குழந்தைகளாகிய உங்களுக்கே பாபா இதனைக் கூறுகிறார். வேறு எவராலும் இதனைப் புரிந்துகொள்ள முடியாது. கண்காட்சிகளுக்கு எவ்வளவு ஜனங்கள் வந்து குவிகிறார்களெனப் பாருங்கள்! பலரும் உள்ளே செல்வதைப் பார்த்ததும் ஏதோ பார்க்க வேண்டிய விடயம் இருக்க வேண்டுமெனக் கருதிப் பலர் உள்ளே நுழைந்து விடுகின்றனர். நீங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விளங்கப்படுத்துவதற்கு முயற்சித்தால், உங்கள் தொண்டை வறண்டுவிடும். ஆகவே நீங்கள் என்ன செய்ய வேண்டும்? கண்காட்சி ஒருமாத காலம் நீடிக்குமாயின், நீங்கள் அவர்களிடம் கூறலாம்: இன்று பெரிய சனக் கூட்டம் உள்ளது, ஆகவே நீங்கள் நாளைக்கு வாருங்கள் அல்லது அதற்கடுத்த நாள் வாருங்கள். இதைக் கற்க விரும்புவோருக்கு, அதாவது மனிதர்களிலிருந்து நாராயணன் ஆகுவதை விரும்புபவர்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இலக்ஷ்மி, நாராயணனின் படத்தை அல்லது சின்னத்தைக் காண்பித்து நீங்கள் கூறவேண்டும்: தந்தை மூலமாக நீங்களும் விஷ்ணு தாமத்தின் அதிபதிகள் ஆகலாம். இங்கு இப்போது சனக்கூட்டம் அதிகமாக இருப்பதனால் நிலையத்திற்கு வாருங்கள், விலாசம் பெயர்ப் பலகையில் எழுதப்பட்டுள்ளது. இது சுவர்க்கம், அது நரகமென நீங்கள் வெறுமனே மக்களுக்குக் கூறுவீர்களாயின், அவர்களால் எதனைப் புரிந்துகொள்ள முடியும்? நீங்கள் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பீர்கள். இக்காலத்தில் மக்கள் உடையணியும் முறையைக் கொண்டு அவர்கள் முக்கிய பிரமுகர்களா, செல்வந்தர்களா, ஏழைகளா எனக் கூறமுடியாது. முதலாவதாக நீங்கள் அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். தந்தையே சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவர். நீங்கள் இப்போது இவ்வாறு ஆகவேண்டும். உங்கள் இலக்கும் குறிக்கோளும் உங்கள் முன்னிலையிலேயே உள்ளது. தந்தை கூறுகிறார்: நானே அதிமேலானவர், என்னை நினைவு செய்யுங்கள். இதுவே மனதைக் கட்டுப்படுத்தும் மந்திரமாகும். தந்தை கூறுகிறார்: சதா என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள்! உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு நீங்கள் விஷ்ணு தாமத்திற்குச் செல்வீர்கள். இந்தளவினை நீங்கள் நிச்சயம் விளங்கப்படுத்த வேண்டும். உங்கள் கண்காட்சியை எட்டு முதல் பத்து நாட்கள் வரை நடாத்தவேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் நீங்கள் மேளமடித்து, மனிதரில் இருந்து தேவனாகுவது எவ்வாறு என்றும், நரகவாசியிலிருந்து சுவர்க்கவாசி ஆகுவது எவ்வாறு என்றும் வந்து புரிந்து கொள்ளுங்கள் என மக்களுக்குக் கூறவேண்டும். ஸ்தாபனையும் விநாசமும் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை வந்து பார்க்குமாறு கூறுங்கள். நீங்கள் விளங்கப்படுத்துவதற்குப் பல வழிகளுண்டு. சத்திய யுகத்திற்கும் கலியுகத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு, பகலுக்கும் இரவிற்கும் இடையேயுள்ள வேறுபாட்டைப் போன்றதென்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பிரம்மாவின் பகலும், பிரம்மாவின் இரவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. பிரம்மாவின் நாள் என்றால் விஷ்ணுவின் நாள் என்று அர்த்தம். விஷ்ணுவின் நாள் என்றாலும் பிரம்மாவின் நாள் என்றே அர்த்தம். இரண்டும் ஒரே விடயமே. பிரம்மாவின் 84 பிறவிகளும் உண்டு. விஷ்ணுவின் 84 பிறவிகளும் உண்டு. இந்த லீப் பிறப்பே வித்தியாசமாக உள்ளது. நீங்கள் இந்த விடயங்களை உங்கள் புத்தியில் பதியச்செய்ய வேண்டும். நீங்கள் எதனையும் கிரகிக்காது விட்டால், எப்படி ஏனையோருக்கு விளங்கப்படுத்த முடியும்? இந்த ஞானத்தை விளங்கப்படுத்துவது இலகுவானதே. இலக்ஷ்மி நாராயணனின் படத்திற்கு முன்னே அவர்களை அழைத்துச் சென்று கூறுங்கள்: தந்தையிடமிருந்து நீங்கள் இந்த அந்தஸ்தைக் கோரவேண்டும். நரகத்தின் விநாசம் எங்கள் முன்னிலையிலேயே உள்ளது. ஏனையோர் உங்களுக்கு மனிதர்களின் வழிகாட்டல்களையே கூறுகின்றனர். இங்கு எங்களுக்குக் கடவுளின் வழிகாட்டல்கள் கிடைக்கின்றன. ஆத்மாக்களாகிய நாங்கள் இவ் வழிகாட்டல்களை நேடியாகவே கடவுளிடமிருந்து பெறுகின்றோம். அசரீரியான ஆத்மாக்கள் அசரீரியான பரமாத்மாவிடம் இருந்து வழிகாட்டல்களைப் பெறுகின்றனர். ஏனையவை எல்லாம் மனித வழிகாட்டல்களே. இந்த வேறுபாடு இரவையும் பகலையும் போன்றதாகும். சந்நியாசிகளால் வழிகாட்டல்களைக் கொடுக்க முடியாது. ஒரு தடவையே நாங்கள் கடவுளின் வழிகாட்டல்களைப் பெறுகின்றோம். கடவுள் வரும்போது அவருடைய வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் நாம் தேவர்களைப் போல் ஆகுகிறோம். அவர் தேவதர்மத்தை ஸ்தாபிக்கவே வருகிறார். நீங்கள் இக்கருத்துக்களைக் கிரகித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், தேவை ஏற்படும்போது அவற்றைப் பயன்படுத்தலாம். முக்கியமானவற்றின் சாராம்சத்தைக் கூறுங்கள், அது போதும். இலக்ஷ்மி நாராயணன் பற்றிய கருத்துக்களை விளங்கப்படுத்தினாலே போதும். எமது இலக்கும், குறிக்கோளும் பற்றிய படம் இதுவாகும். கடவுள் இப்புதிய உலகைச் சிருஷ்டித்தார். இந்த மிக மங்களகரமான சங்கம யுகத்தில் இறைவன் அவர்களுக்குக் கற்பித்தார். வேறெவருக்கும் இந்த சங்கம யுகத்தைப் பற்றித் தெரியாது. ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் இவற்றைச் செவிமடுப்பதில் சந்தோஷமடைய வேண்டும். நீங்கள் கேட்டதைப் பற்றிப் பிறருக்கும் கூறும்போது மேலும் சந்தோஷப்படுவீர்கள். சேவை செய்பவர்களே பிராமணர்கள் எனப்படுகிறார்கள். உண்மையான கீதை உங்கள் கையினுள் உள்ளது. அந்தப் பௌதீகப் பிராமணர்களும் வரிசைக்கிரமமானவர்களே. சில பிராமணர்கள் மிக்க பிரசித்தி பெற்றவர்களாக அதிகளவு பணம் சம்பாதிக்கின்றனர். ஏனையோர் தமது உணவிற்காகவேனும் சம்பாதிக்க இயலாதுள்ளனர். சில பிராமணர்கள் கோடீஸ்வரர்களாகச் சிறப்பாக வாழ்கின்றனர். தாம் பிராமண குலத்தைச் சார்ந்தவர்களென அவர்கள் போதையுடன் கூறுவார்கள். அவர்களுக்கு இந்த நிஜமான பிராமண குலத்தைப் பற்றித் தெரியாது. பிராமணர்களை மிக மேன்மையான குலத்தவர் எனக் கருதுவதாலேயே சிலர் அவர்களுக்கு உணவு வழங்குகிறார்கள். அவர்கள் தேவர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் முதலானோருக்கு ஒருபோதும் உணவு வழங்குவதில்லை. பிராமணர்களுக்கு மட்டுமே வழங்குவார்கள். எனவே பாபா கூறுகிறார்: நீங்கள் பிராமணர்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்த வேண்டும். பிராமணர்களின் பல சங்கங்கள் உண்டு. அவர்கள் எங்கே எப்போது கூடுகிறார்களென அறிந்து, அங்கே செல்லுங்கள். நீங்கள் பிரஜாபிதாவின் குழந்தைகளாக இருப்பதைப்போல, அந்த பிராமணர்களும் அவரது குழந்தைகள் ஆக்கப்பட வேண்டும். மேலும் பிரம்மா யாருடைய குழந்தை என்பதையும் அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். அவர்கள் எப்போது கூட்டங்கள் நடத்துவார்கள் என அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் அங்குள்ள பலருக்கு நன்மை செய்யலாம். முதுமையடைந்த தாய்மார்களின் கூட்டங்களும் இருக்கின்றன. நீங்கள் எங்கு போய் வந்திருக்கின்றீர்கள் என எவருமே பாபாவிற்குச் செய்தி அனுப்புவதில்லை. முழுக் காடும் நிறைந்திருக்கிறது. நீங்கள் எங்கே சென்றாலும் ஏதாவது இரையுடன் அல்லது பிரஜைகளுடன் திரும்பி வருவீர்கள். நீங்கள் அரசர்களைக் கூட உருவாக்கலாம். செய்ய வேண்டிய சேவை அதிகளவில் உள்ளது. மாலையில் 5 மணிக்குப் பின்னர் நீங்கள் ஓய்வாக இருக்கின்றீர்கள். எனவே தினமும் நீங்கள் செல்லும் இடங்களைப் பட்டியல் படுத்துங்கள். நீங்கள் சேவை செய்வதற்குத் தந்தை பல வழிகளைக் காட்டுகிறார். தந்தை தனது குழந்தைகளுடன் மாத்திரமே பேசுகிறார். நீங்கள் ஓர் ஆத்மா என்பதில் நீங்கள் ஒவ்வொருவரும் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். பரமாத்மாவான பாபா ஞானத்தைக் கொடுக்கிறார். ஆனால் நாங்கள் அதனைக் கிரகித்துக்கொள்ள வேண்டும். சமயநூல்களைக் கற்பவர்கள், இறக்கும்போது அந்த சம்ஸ்காரங்களைத் தம்முடன் கொண்டு செல்கின்றனர். பின்னர் அடுத்த பிறப்பில் அதே சம்ஸ்காரங்கள் மீண்டும் தோன்றும். அப்போது அந்த ஆத்மா தனது சம்ஸ்காரங்களைக் கொண்டு வந்துள்ளாரெனக் கூறப்படுகின்றது. பல சமய நூல்களைக் கற்பவர்களைச் சமய நூல்களின் அதிகாரி எனக் கூறுவார்கள். அவர்கள் தம்மைச் சர்வசக்திவான் எனக் கருதமாட்டார்கள். இந்த நாடகம் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதைத் தந்தையே விளங்கப்படுத்துகிறார். இது எதுவும் புதிதல்ல. இந்த நாடகம் முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இது பழைய உலகமென்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை. பாபா கூறுகிறார்: நான் இப்போது வந்துவிட்டேன். அந்தப் பெரிய மகாபாரத யுத்தம் உங்கள் முன்னால் உள்ளது. இப்போதும் மக்கள் அறியாமை இருளில் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். பக்தியே அறியாமை எனக் கூறப்படுகிறது. தந்தையே ஞானக்கடலாவார். அதிக பக்தி செய்பவர்கள் பக்திக்கடல்கள் என அழைக்கப்படுகின்றனர். பக்தர்களின் மணிமாலையும் உள்ளது. நீங்கள் பக்தர்களின் மணிமாலைக்குரிய எல்லாப் பெயர்களையும் சேகரிக்க வேண்டும். பக்தர்களின் மணிமாலை துவாபர யுகத்தில் ஆரம்பித்து கலியுக இறுதிவரை நிலைத்திருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கவேண்டும். நாள் முழுவதும் சேவை செய்பவர்களே மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள். மிக நீண்ட மணிமாலை பற்றி பாபா உங்களுக்கு கூறியுள்ளார். அதில் ஆயிரக்கணக்கான மணிகள் உண்டு. சிலர் அதனை ஓரிடத்திலிருந்தும், ஏனையோர் அதனை வேறொரு இடத்திலிருந்தும், இழுப்பார்கள். இத்தகைய பெரிய மணிமாலை ஒன்று உருவாக்கப்பட்டதற்குக் காரணம் இருக்கவேண்டும். அவர்கள் “ராமா ராமா” என்ற பெயரையே உச்சரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களைக் கேளுங்கள்: ‘ராமா, ராமா’ என்று ஓதும்போது நீங்கள் யாரை நினைவு செய்கிறீர்கள்? அனுமானின் உதாரணத்தைப் போல் நீங்களும் எந்த சத்சங்கத்திற்கும் சென்று அவர்களுடன் கலந்து கொள்ளலாம். அவர் ஒரு சத்சங்கத்திற்குச் சென்று காலணிகளின் மத்தியில் அமர்ந்திருப்பார். நீங்களும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் பெருமளவு சேவை செய்யமுடியும். எவ்வாறாயினும் இந்த ஞானக் கருத்துக்கள் உங்கள் புத்தியிலிருந்து, நீங்கள் விவேகிகளாகும் போதே நீங்கள் செய்யும் சேவையில் வெற்றி கிட்டும். இச்சேவையைச் செய்வதற்குப் பல வழிகளுண்டு. இராமாயணம், பாகவதம் ஆகியவற்றிலுள்ள பல விடயங்களை நீங்கள் அவர்களுக்குத் தெளிவுபடுத்த முடியும். ஒரு சத்சங்கத்தில் வெறுமனே அமர்ந்திருந்து, குருட்டு நம்பிக்கையுடன் வழிபாடு செய்யக்கூடாது. அவர்களுக்குக் கூறுங்கள்: நாங்கள் உங்களுக்கு நன்மை செய்யவே விரும்புகின்றோம். அவர்களுடைய பக்தி, எங்கள் ஞானத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஞானக்கடவுளான தந்தையே இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். செய்வதற்கு அதிக சேவை உள்ளது. அதிமேலானவர் யாரென்று அவர்களுக்குக் கூறுங்கள். கடவுளே அதிமேலானவர். அவரிடமிருந்து மாத்திரமே நீங்கள் இந்த ஆஸ்தியைப் பெறமுடியும். ஏனைய அனைவரும் அவரது படைப்புக்கள். குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்வதில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு இராச்சியம் வேண்டுமெனில், நீங்கள் பிரஜைகளை உருவாக்க வேண்டும். “தந்தையை நினைவு செய்யுங்கள், உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை உங்கள் இலக்கிற்குக் கொண்டு செல்லும்”. இந்த மகாமந்திரம் ஒரு சிறிய விடயமல்ல. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை உங்களுக்கு வழங்கியுள்ளதும், மனதை நல்வழிப்படுத்துவதுமான மந்திரத்தை அனைவருக்கும் ஞாபகப்படுத்துங்கள். சேவை செய்வதற்குப் பல வழிமுறைகளை உருவாக்குங்கள். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.2. ஞானக் கருத்துக்களை உங்கள் புத்தியில் வைத்திருப்பதன் மூலம் போதையுடன் இருங்கள். அனுமானைப் போன்று கூட்டங்களுக்குச் சென்று அமர்ந்திருந்து அவர்களுக்குச் சேவை செய்யுங்கள். நாள் முழுவதும் சேவை செய்வதன் மூலம் சந்தோஷமாக இருங்கள்.
ஆசீர்வாதம்:
‘நான்’ மற்றும் ‘எனது’ என்பவற்றைத் தியாகம் செய்வதன் மூலம் முழுமையான ‘மகாபலி’ (பெரிய பலியாக ஆகுபவர்) ஆகுவீர்களாக.ஒரு நபரிடம் அல்லது உடமையிடம் எந்தவிதமான எல்லைக்குட்பட்ட பற்றையும் கொண்டிருப்பது என்றால், ‘எனது’ என்ற உணர்வைக் கொண்டிருப்பதாகும். ‘எனது’ அல்லது ‘நான் இதைச் செய்கிறேன்’ அல்லது ‘நான் இதைச் செய்தேன்’ என்ற உணர்வை முழுமையாக அர்ப்பணிப்பவர்களே, அதாவது, இதைப் பலி கொடுப்பவர்களே மகாபலி ஆவார்கள். உங்களின் எல்லைக்குட்பட்ட ‘நான், நான்’ என்பது அர்ப்பணிக்கப்படும் போது, நீங்கள் சம்பூரணமாகவும் தந்தைக்குச் சமமானவர்களாகவும் ஆகுவீர்கள். ‘நான் இதைச் செய்கிறேன்’ என்பதல்ல. ‘பாபா என்னைச் செய்ய வைக்கிறார், பாபா என்னை அசைய வைக்கிறார்’ என்றிருக்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும், ‘நான்’ என்பதற்குப் பதிலாக, இயல்பாகவே உங்களின் மொழியில் ‘பாபா’ என்ற வார்த்தை இருக்க வேண்டும். ‘நான்’ என்ற வார்த்தை அல்ல.
சுலோகம்:
உங்களின் சிந்தனையும் செயலும் ஒத்ததாகும் வகையில் உங்களின் எண்ணங்களில் திடசங்கற்பத்தைக் கொண்டிருங்கள்.உங்களின் சக்திவாய்ந்த மனதால், சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.
காலத்திற்கேற்ப, ஒரே வேளையில் உங்களின் மனதாலும் வார்த்தைகளாலும் சேவை செய்யுங்கள். வார்த்தைகளால் சேவை செய்வது இலகுவாக இருந்தாலும், உங்களின் மனதால் சேவை செய்வதென்பது கவனம் செலுத்துகின்ற விடயமாகும். ஆகவே, உங்களின் எண்ணங்கள் சகல ஆத்மாக்களுக்கும் நல்லாசிகளாலும் தூய உணர்வுகளாலும் நிறைந்திருக்க வேண்டும். உங்களின் வார்த்தைகளில் இனிமை, திருப்தி, இலகுத்தன்மையின் புதுமை இருக்க வேண்டும். அப்போது நீங்கள் இலகுவாகத் தொடர்ந்தும் வெற்றி பெறுவீர்கள்.