24.10.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தாய் தந்தையைப் பின்பற்றி இதய சிம்சானத்தில் அமருங்கள். இதில் சிரமம் எதுவுமே இல்லை. தந்தையை நினைவு செய்து தூய்மை ஆகுங்கள்.

கேள்வி:
ஏழைகளின் பிரபுவான தந்தை, குழந்தைகளான நீங்கள் உங்களின் பாக்கியத்தை உருவாக்கிக் கொள்வதற்காக உங்களுக்குக் கூறும் அறிவுரை என்ன?

பதில்:
குழந்தைகளே, உங்களுடையது எதுவுமே சிவபாபாவிற்குத் தேவையில்லை. நீங்கள் உண்டு, பருகி, கற்று, புத்துணர்ச்சி ஊட்டப்பட்ட பின்னர் இங்கிருந்து செல்லலாம். எனினும் ‘ஒரு கைபிடி அவல்’ என்பதற்கொரு புகழ் உள்ளது. நீங்கள் 21 பிறவிகளுக்குச் செல்வந்தராக விரும்பினால், ஓர் ஏழையின் ஒரு சதம், ஒரு செல்வந்தரின் 100 ரூபாய்களுக்குச் சமம் என்பதை மறந்து விடாதீர்கள். ஆகையால் தந்தை நேரடியாக இங்கு வரும் போது உங்களிடம் உள்ள அனைத்தையும் தகுதிவாய்ந்த வகையில் பயன்படுத்துங்கள்.

பாடல்:
நீங்களே தாயும் தந்தையும்….

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டீர்கள். அந்த மக்கள் அழைத்த போதிலும், அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. அவர் எங்கள் தந்தை என்பதை நீங்கள் அறிவீர்கள். உண்மையில் அவர் உங்களுக்கு மாத்திரம் தந்தையல்ல. அவர் அனைவரதும் தந்தையாவார். இதுவும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். பரமாத்மா நிச்சயமாக ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தையாவார். ‘பாபா, பாபா!’ என்று கூறுவதன் மூலம் நீங்கள் நிச்சயமாக உங்கள் ஆஸ்தியை நினைவு செய்வீர்கள். தந்தையை நினைவு செய்வதனால் மாத்திரமே உங்கள் பாவம் அழிகின்றது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது தூய்மையாக்கப்பட வேண்டும். அவர் அனைவரதும் பாபா என்பதால், அவரது குழந்தைகள் நிச்சயமாக விகாரம் அற்றவர்களாகவே இருக்க வேண்டும். ஒரு காலத்தில் நீங்கள் அனைவருமே விகாரம் அற்றவர்களாக இருந்தீர்கள். தந்தையே விளங்கப்படுத்துகின்றார்: ஸ்ரீ இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் நிலவிய போது அனைவருமே விகாரம் அற்றவர்களாக இருந்தீர்கள். நீங்கள் காணும் ஆத்மாக்கள் அனைவரின் சரீரங்களும் அழிக்கப்பட்டிருக்கும் என்பதால், அங்கு அவர்கள் அனைவரும் விகாரம் அற்றவர்களாகவே இருக்க வேண்டும். அதன் பின்னர் ஆத்மாக்கள் அனைவருமே அசரீரி உலகிற்குச் சென்று அங்கு வாழ்வார்கள். அங்கே விகாரத்தின் பெயரோ, சுவடோ இருக்க மாட்டாது. அங்கு சரீரங்களும் இருப்பதில்லை. மேலே அங்கிருந்து ஆத்மாக்கள் அனைவரும் தத்தமது பாகங்களை நடிப்பதற்காகக் கீழே இவ் உலகிற்கு வருகின்றார்கள். பாரத மக்களே முதன் முதலில் வருகின்றார்கள். பாரதத்தில், முதலில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது. ஏனைய சமயங்களைச் சேர்ந்த அனைவரும் அசரீரி உலகில் இருந்தார்கள். இந்த நேரத்தில், அனைவருமே சரீர உலகில் இருக்கின்றார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களை விகாரமற்ற தேவர்களாக ஆக்குவதற்காக, இப்பொழுது உங்களை விகாரம் அற்றவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் தேவர்கள் ஆகும் போது நிச்சயமாக உங்களுக்குப் புதியதொரு உலகம் தேவை. பழைய உலகம் அழிக்கப்பட வேண்டும். மகாபாரத யுத்தம் சமயநூல்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஐந்து பாண்டவர்கள் மட்டுமே எஞ்சினார்கள் என்றும், அவர்களும் மலையின் உச்சியில் உருகிப் போனதால் எவருமே எஞ்சவில்லை என்றும் காட்டுகின்றார்கள். அச்சா. அந்த ஆத்மாக்கள் அனைவரும் எங்கே சென்றார்கள்? ஆத்மாக்கள் என்றுமே அழிவதில்லை. எனவே அவர்கள் அசரீரியான, விகாரமற்ற உலகிற்குச் சென்று விட்டார்கள் என்று கூறப்படுகின்றது. தந்தை உங்களை விகாரம் நிறைந்த உலகிலிருந்து அசரீரியான, விகாரமற்ற உலகிற்கு அழைத்துச் செல்கின்றார். நீங்கள் நிச்சயமாகத் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். துன்பம் இப்பொழுது அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் எங்களுக்கு அமைதி, சந்தோஷம் இரண்டும் தேவை. அனைவரும் கடவுளிடம் வேண்டுகின்றார்கள்: ஓ கடவுளே, எங்களுக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் கொடுங்கள்! ஒவ்வொரு மனிதனுமே செல்வத்தை ஈட்டவே முயற்சி செய்கின்றார். அவர்களிடம் செல்வம் இருந்தால் அவர்கள் சந்தோஷமாக இருக்கின்றார்கள். எல்லையற்ற தந்தை உங்களுக்கு அதிகளவு செல்வத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் சத்தியயுகத்தில் செல்வச்செழிப்புடன் இருந்தீர்கள். நீங்கள் வைரங்களும் இரத்தினங்களும் பதித்த மாளிகைகளில் வாழ்ந்தீர்கள். நீங்கள் எல்லையற்ற சுவர்க்கம் என்ற உங்கள் ஆஸ்தியைக் கோரவே எல்லையற்ற தந்தையிடம் வந்திருக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். முழு உலகமும் இங்கு வரமாட்டாது. தந்தை பாரதத்திற்கு மாத்திரமே வருகிறார். இந்த நேரத்தில் பாரதமக்கள் நரகவாசிகளாக உள்ளார்கள். பின்னர் தந்தை அவர்களைச் சுவர்க்கவாசிகள் ஆக்குகின்றார். பக்தி மார்க்கத்தில் துன்பத்தினால், பிறவிபிறவியாக நீங்கள் தந்தையை நினைவு செய்தீர்கள்: ஓ பரமாத்மாவான பரமதந்தையே! ஓ பரோபகரியான பாபாவே, துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவரே! நீங்கள் அவரை நினைவு செய்ததால் அவர் நிச்சயமாக வரவேண்டும். எதனையும் வேண்டுதல் செய்யாத போது, எவரும் அவரை நினைவு செய்வதில்லை. தந்தையான கடவுள் வந்து பக்தர்களின் பக்திக்கான பலனைத் தருவார் என அவர்கள் நம்புகின்றார்கள். எவ்வாறாயினும், அதனை அவர் அனைவருக்குமே கொடுக்கின்றார். அவர் அனைவரதும் பாபா ஆவார். நீங்கள் சந்தோஷதாமத்திற்குச் செல்வீர்கள், ஆனால், ஏனைய அனைவரும் அமைதி தாமத்திற்குச் செல்வார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் சந்தோஷதாமத்தில் இருக்கும் போது, முழு உலகிலும் அமைதியும் சந்தோஷமும் இருக்கும். தந்தை தனது குழந்தைகளின் மீது அன்பு வைத்திருக்கிறார். குழந்தைகளும் தாயும் தந்தையுமானவரை நேசிக்கின்றார்கள். ‘நீங்களே தாயும் தந்தையும்’ என்று நீங்களும் பாடுகிறீர்கள். லௌகீகத் தந்தையும், தாயும் இருந்த போதிலும் நீங்கள் பாடுகின்றீர்கள்: ‘நீங்களே தாயும் தந்தையும், நாங்கள் உங்கள் ஆசீர்வாதத்தினால் அதிகளவு சந்தோஷமாக உள்ளோம்’. உங்கள் லௌகீகப் பெற்றோரையிட்டு நீங்கள் இவ்வாறு பாட மாட்டீர்கள். அவர்களும் முயற்சி செய்து தமது குழந்தைகளைப் பராமரித்து, அவர்களுக்கு ஆஸ்தியை வழங்கி, அவர்களுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைக்கிறார்கள். எனினும், பரலோகத் தாயும் தந்தையுமே உங்களுக்கு அதிகளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் இப்பொழுது கடவுளினால் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள். ஏனைய அனைவரும் அசுரனால் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் ஆவார்கள். சத்தியயுகத்தில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் இருப்பதில்லை. அங்கே சந்தோஷத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. அங்கு துன்பத்தின் பெயரோ, சுவடோ இருக்க மாட்டாது. தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்கு 21 சந்ததிகளுக்கு அளவற்ற சுவர்க்க சந்தோஷத்தை வழங்கவே வந்துள்ளேன். இப்பொழுது நீங்கள் அளவற்ற சுவர்க்க சந்தோஷத்தை எல்லையற்ற தந்தையிடம் இருந்து பெற இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். துன்ப பந்தனங்கள் அனைத்தும் முடிவடைய உள்ளன. சத்தியயுகத்தில் உங்களுக்குச் சந்தோஷ உறவுமுறைகளே உள்ளன. ஆனால் கலியுகத்தில் துன்ப பந்தனமே உள்ளது. தந்தை உங்களைச் சந்தோஷ உறவுமுறைகளுக்குள் அழைத்துச் செல்கின்றார். அவர் துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர் என்று அழைக்கப்படுகின்றார். தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்கின்றார். அவர் கூறுகின்றார்: நான் உங்களின் கீழ்ப்படிவான சேவகன். நீங்கள் என்னை அரைக்கல்பமாக நினைவு செய்கின்றீர்கள்: ஓ பாபா, வந்து எங்களுக்கு அளவற்ற சந்தோஷத்தைக் கொடுங்கள்! நான் இப்பொழுது உங்களுக்கு அதனைக் கொடுக்கவே வந்துள்ளேன், ஆகையால் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்! இந்த மரண உலகம் அழிக்கப்பட்டு, அமரத்துவ உலகம் ஸ்தாபிக்கப்பட உள்ளது. நீங்கள் இப்பொழுது அமரத்துவ உலகிற்குச் செல்வதற்காக, அமரத்துவ பாபாவிடம் இருந்து அமரத்துவக் கதையைச் செவிமடுக்கின்றீர்கள். அங்கு எவரும் மரணிப்பதில்லை. ‘இன்ன இன்னார் மரணித்து விட்டார்!’ என்ற வாரத்தைகளை அவர்கள் என்றுமே பயன்படுத்துவதில்லை. ஆத்மா கூறுகின்றார்: நான் இப்பொழுது இந்த உக்கிய சரீரத்தை நீக்கி விட்டுப் புதியதொன்றை எடுப்பேன். அது நல்லது. அங்கே எந்த நோயும் இருக்க மாட்டாது. அங்கே மரண உலகம் பற்றிய குறிப்பே இருக்க மாட்டாது. நான் உங்களை அமரத்துவ உலகின் அதிபதிகள் ஆக்கவே வந்துள்ளேன். அங்கே நீங்கள் ஆட்சி செய்யும் போது, நீங்கள் மரண உலகைச் சேர்ந்த எதனையும் நினைவு செய்ய மாட்டீர்கள். நீங்கள் தொடர்ந்தும் கீழே இறங்கும் போது, நீங்கள் என்னவாகுவீர்கள் என்பதை அறிந்திருக்க மாட்டீர்கள். அவ்வாறாயின் உங்கள் சந்தோஷத்தை நீங்கள் இழப்பீர்கள். இங்கே நீங்கள் முழுச் சக்கரத்தையும் உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். உண்மையில் அது சுவர்க்கம், இப்பொழுது இது நரகம். ஆகையாலேயே மக்கள் தந்தையை அழைக்கின்றார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அமைதிதாம வாசிகள் ஆவீர்கள். உங்கள் பாகங்களை நடிக்கவே நீங்கள் இங்கே வருகின்றீர்கள். நீங்கள் உங்கள் சம்ஸ்காரங்களை மீண்டும் வீட்டிற்கு உங்களுடன் எடுத்துச் செல்வீர்கள். அங்கிருந்து பின்னர் இங்கே வந்து ஒரு சரீரத்தை எடுத்து இராச்சியத்தை ஆட்சி செய்வீர்கள். உங்களுக்கு இப்பொழுது அசரீரி உலகிலும், சூட்சும உலகிலும், சரீர உலகிலும் செய்திகள் கூறப்படுகின்றன. சத்தியயுகத்தில் உங்களால் இந்தச் செய்திகளை அறிய முடியாது. அங்கே நீங்கள் இராச்சியத்தை மாத்திரமே ஆட்சி செய்வீர்கள். இப்பொழுது உங்களுக்கு நாடகத்தையும் தெரியும். நீங்கள் சத்தியயுகத்திற்காக முயற்சி செய்கின்றீர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். நீங்கள் நிச்சயமாகச் சுவர்க்கத்திற்குச் செல்லும் தகுதியுடையவர்கள் ஆகுவீர்கள். உங்களுக்கும் பிறருக்கும் நீங்கள் நன்மை செய்வீர்கள். அதன் பின்னர் நீங்கள் தொடர்ந்தும் அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். உங்கள் திட்டங்கள் என்னவென்று பாருங்கள்! இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் தத்தமது திட்டங்களுடன் இருக்கின்றார்கள். தந்தைக்கும் ஒரு திட்டம் உள்ளது. நீர்த்தேக்கங்கள் போன்றவற்றை அவர்கள் கட்டும் போது, மின்சாரத்திற்காக அவர்கள் பல மில்லியன் ரூபாய்களை செலவழிக்கின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அவை அனைத்தும் அசுரர்களின் திட்டங்கள், ஆனால் எனது திட்டம் இறைதிட்டம். இப்பொழுது எவருடைய திட்டம் வெற்றியீட்டும்? அவர்கள் தம் மத்தியில் யுத்தம் புரிவார்கள். அனைவரது திட்டங்களும் மண்ணோடு மண்ணாகிப் போகும். அவர்கள் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதில்லை. அவர்கள்; செய்கின்ற அனைத்தும் துன்பத்திற்கானவையே. சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதே தந்தையின் திட்டம். நரகவாசிகள் நரகத்தில் இருக்கவே திட்டம் தீட்டுவார்கள். பாபா சுவர்க்கத்தை ஸ்தாபிக்கத் திட்டம் தீட்டுகின்றார். ஆகையால் நீங்கள் அதிகளவு சந்தோஷத்துடன் இருக்க வேண்டும். ‘உங்கள் கருணையினால் நாங்கள் அதிகளவு சந்தோஷமாக இருக்கின்றோம்’ என்று நினைவு கூரப்படுகின்றது. அதனை அடைய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் விரும்பியதை அடையலாம். நீங்கள் உலக அதிபதிகளான அரசனாகவோ, அரசியாகவோ ஆகலாம். அல்லது ஒரு பணிப்பெண்ணாகவோ, வேலையாளாகவோ ஆகலாம். அது நீங்கள் செய்யும் முயற்சியிலேயே தங்கியுள்ளது. தந்தை கூறுகின்றார்: அனைத்திற்கும் முதலில் தூய்மையாகி, அனைவருக்கும் தொடர்ந்தும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். அல்ஃபாவை நினைவு செய்யுங்கள், பின்னர் இராச்சியமான பீற்றா உங்களுடையதாகும்! தந்தையை நீங்கள் நினைவு செய்வதிலேயே மாயை அதிகளவு இடையூறை ஏற்படுத்துகின்றாள். அவள் உங்கள் புத்தியின் யோகத்தைத் துண்டிக்கின்றாள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் எந்தளவிற்கு தந்தையை நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்குப் பாவங்கள் அழிக்கப்பட்டு, உயர்ந்ததோர் அந்தஸ்தையும் நீங்கள் கோருவீர்கள். ஆகையாலேயே பாரதத்தின் புராதன யோகம் பிரபல்யமானது. தந்தை விடுதலையளிப்பவர் என்று அழைக்கப்படுகின்றார். தந்தை 21 பிறவிகளுக்கு உங்களைத் துன்பத்திலிருந்து விடுவிக்கின்றார். பாரத மக்கள் சந்தோஷ தாமத்தில் இருக்கும் போது, ஏனைய அனைவரும் அமைதிதாமத்தில் இருப்பார்கள். அசரீரி உலகினதும், சரீர உலகினதும் திட்டங்களைப் பார்க்கும் போது, ஏனைய சமயத்தைச் சேர்ந்தவர்களால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது என்பதை உங்களால் உடனடியாகவே புரிந்து கொள்ள முடியும். தேவர்கள் மாத்திரமே சுவர்க்கத்தில் வாழ்கின்றார்கள். தந்தையை அன்றி வேறு எவராலும் நாடகத்தைப் பற்றிய இந்த ஞானத்தை விளங்கப்படுத்த முடியாது. குழந்தைகள் தமது ஆஸ்தியைக் கோருவதற்கே தந்தையிடம் வருகின்றார்கள். சத்தியயுகத்தில் மாத்திரமே உங்களுக்கு அளவற்ற சந்தோஷம் உள்ளது. பின்னர் இராவண இராச்சியமே உள்ளது. அங்கு அதிகளவு துன்பமே உள்ளது. பாபா உங்களுக்கு உண்மைக் கதையைக் கூறுவதன் மூலம், உங்களை அமரத்துவ உலகிற்குச் செல்வதற்குத் தகுதியுடையவர் ஆக்குகின்றார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் 21 பிறவிகளுக்குச் செல்வந்தராக ஆகுவதற்கான அத்தகைய செயல்களையே இப்பொழுது செய்கின்றீர்கள். கூறப்பட்டுள்ளது: செல்வந்தராக இருப்பீர்களாக! புத்திர பாக்கியம் உண்டாகட்டும்! அங்கே நிச்சயமாக உங்களுக்கு ஒரு புத்திரனும் ஒரு புத்திரியும் இருப்பார்கள். உங்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்! உங்கள் ஆயுட்காலம் 150 வருடங்களாக இருக்கும். அங்கே அகால மரணம் இருக்க மாட்டாது. தந்தை மாத்திரமே உங்களுக்கு இதனை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் என்னை அரைக்கல்பமாக அழைக்கின்றீர்கள். சந்நியாசிகள் இவ்வாறு கூறுவார்களா? அவர்களுக்கு என்ன தெரியும்? தந்தை அதிக அன்புடன் இங்கே அமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளே, நீங்கள் இந்த ஒரு பிறவியில் தூய்மையாக இருந்தால், நீங்கள் 21 பிறவிகளுக்குத் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். தூய்மையில் சந்தோஷம் உள்ளது. நீங்கள் தூய தேவதர்மத்திற்கு உரியவர்கள். இப்பொழுது தூய்மை அற்றவர்கள் ஆகித் துன்பத்தை அனுபவம் செய்கின்றீர்கள். நீங்கள் சுவர்க்கத்தில் இருக்கும் போது விகாரம் அற்றவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது, விகாரம் நிறைந்தவர்கள் ஆகியதால், நீங்கள் நரகத்தில் சந்தோஷம் அற்றவர்களாக இருக்கின்றீர்கள். தந்தையே உங்களை முயற்சி செய்யத் தூண்டுகின்றார்: சுவர்க்கத்தின் சக்கரவர்த்தி, சக்கரவர்த்தினிகள் ஆகுங்கள். உங்கள் மம்மாவும் பாபாவும் இவ்வாறு ஆகுவதால் இதற்கான முயற்சியை நீங்களும் செய்ய வேண்டும். இதில் குழப்பம் அடைவதற்கு எதுவும் இல்லை. தந்தை தனது காலடியில் எவரும் விழுவதை அனுமதிப்பதில்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நான் உங்களுக்கு வைரங்கள் பதித்த தங்கமாளிகைகளைக் கொடுத்து, உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்கினேன். அதன் பின்னர் நீங்கள் பக்திமார்க்கத்தில் தரையில் விழுந்து விழுந்து வணங்குவதுடன், அரைக்கல்பமாக பணத்தையும் செலவழிக்கின்றீர்கள். வைரங்கள் பதித்த அந்த தங்க மாளிகைகள் அனைத்தும் எங்கே சென்றன? நீங்கள் சுவர்க்கத்தில் இருந்து கீழே இறங்கி வந்து இப்பொழுது நரகத்தை அடைந்துள்ளீர்கள். நான் இப்பொழுது மீண்டும் ஒருமுறை உங்களைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். நான் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் கொடுப்பதில்லை. என்னை நினைவு செய்து தூய்மை ஆகுங்கள். ஒருசதமேனும் கொடுக்க வேண்டியதில்லை. உண்டு, பருகி புத்துணர்ச்சி பெற்ற பின்னர் வீடு திரும்புங்கள். பாபா உங்களுக்கு கற்பிக்கின்றார். அவ்வளவே. உங்களுக்குக் கற்பிப்பதற்காக அவர் கட்டணம் எதுவும் அறவிடுவதில்லை. நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா நான் நிச்சயமாக உங்களுக்கு ஏதாவது ஒன்றைக் கொடுப்பேன். அல்லது நான் அங்கு எவ்வாறு மாளிகைகள் போன்றவற்றைப் பெற முடியும்? பக்தி மார்க்கத்தில் மக்கள் கடவுளின் பெயரில் ஏழைகளுக்குத் தானம் செய்கின்றார்கள். அதற்கான பலனைக் கடவுள் கொடுப்பார். ஏழைகள் அதனைச் செய்ய மாட்டார்கள்! எவ்வாறாயினும், அதற்கான பலனை அவர்கள் ஒரேயொரு பிறவிக்கே பெறுகின்றார்கள். பாபா, நீங்கள் இங்கே நேரடியாக வந்திருக்கின்றீர்கள். நான் உங்களுக்குச் சிறிதளவு பணத்தைக் கொடுக்கின்றேன், நீங்கள் அதற்கான பலனைச் சுவர்க்கத்தில் 21 பிறவிகளுக்குக் கொடுக்கின்றீர்கள். தந்தை அனைவரையும் செல்வந்தர்கள் ஆக்குகின்றார். நீங்கள் கொடுக்கின்ற பணத்திலே நீங்கள் வசிப்பதற்காகக் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அல்லது எவ்வாறு இவை கட்டப்பட முடியும்? குழந்தைகளே இக்கட்டங்கள் போன்றவற்றைக் கட்டுகின்றார்கள். சிவபாபா கூறுகின்றார்: நான் அவற்றில் வாழப் போவதில்லை. சிவபாபா அசரீரியான அருள்பவராவார். நீங்கள் அவருக்குக் கொடுக்கின்றீர்கள், அதற்குப் பலனாக அவர் உங்களுக்கு 21 பிறவிகளுக்குக் கொடுக்கின்றார். நான் உங்கள் சுவர்க்கத்திற்கு வருவதில்லை. உங்களை நரகத்திலிருந்து விடுவிப்பதற்காக நான் நரகத்திற்கே வரவேண்டும். உங்கள் குருமார்கள் உங்களை மேலும் சேற்றில் சிக்கச் செய்கின்றார்கள். அவர்கள் சற்கதி அருள்வதில்லை. தந்தை உங்களைத் தூய உலகிற்கு அழைத்துச் செல்லவே வந்திருக்கின்றார். எனவே அத்தகைய தந்தையை நீங்கள் ஏன் நினைவு செய்யக் கூடாது? தந்தை கூறுகின்றார்: பணம் கொடுக்காதீர்கள். என்னை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் என்னிடம் வருவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் உங்களுக்காகவே இந்தக் கட்டடங்கள் போன்றவற்றைக் கட்டுகின்றீர்கள். ‘ஒரு கைபிடி அவல்’ என்பது நினைவு கூரப்பட்டுள்ளது. ஏழைமக்கள் தமது தைரியத்திற்கு ஏற்ப, அவர்கள் கொடுப்பதற்குரிய பலனைப் பெறுகின்றார்கள். செல்வந்தர்களுக்குக் கிடைக்கும் அதே அந்தஸ்து ஏழைகளுக்கும் கிடைக்கின்றது. இருசாராரும் சமமே. ஒரு ஏழை தன்னிடம் உள்ள 100 ரூபாயில், ஒரு ரூபாயைக் கொடுக்கும் போதும், அதிகளவு பணம் வைத்திருக்கும் செல்வந்தர் ஒருவர் 100 ரூபாய் கொடுத்தாலும், இருவருமே சமமான பலனையே பெறுகின்றார்கள். ஆகையாலேயே தந்தை ஏழைகளின் பிரபு என்று அழைக்கப்படுகின்றார். பாரதம் அனைத்திலும் பார்க்க மிக ஏழ்மையானது ஆகும். நான் வந்தே அதனைச் செல்வம் நிறைந்தது ஆக்குகின்றேன். ஏழைகளுக்கே தானம் கொடுக்கப்படுகின்றது. பாபா உங்களுக்கு மிகவும் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளே, மரணம் உங்கள் சற்று முன்னிலையிலேயே உள்ளது. இப்பொழுது, அனைத்தையும் விரைவாகச் செய்யுங்கள். நினைவின் வேகத்தை அதிகரியுங்கள். இனிமையிலும் இனிமையான தந்தையை நீங்கள் அதிகளவு நினைவு செய்யும் போது, நீங்கள் அதிகளவு ஆஸ்தியைப் பெறுவதுடன், அந்தளவிற்கு பெருஞ் செல்வந்தர்களாகவும் ஆகுகின்றீர்கள். தந்தை உங்களை விழுந்து வணங்கவோ, அல்லது திருவிழாக்கள் போன்றவற்றிற்குச் செல்லுங்கள் என்றோ கூறுவதில்லை. இல்லை! வீட்டில் இருந்தவாறு தந்தையையும், உங்கள் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். அவ்வளவே! தந்தை ஒரு புள்ளியாவார். அவர் பரமாத்மாவான பரமதந்தை என்று அழைக்கப்படுகின்றார். அவர் பரமாத்மா ஆவார். அவர் அனைவரிலும் அதிமேலானவர். தந்தை கூறுகின்றார்: நானும் ஒரு புள்ளி, நீங்களும் ஒரு புள்ளியே. பக்திமார்க்கத்தில் உள்ளவர்களே என்னைப் பிரதிபலிப்பதற்காகப் பெரியதொரு வடிவத்தைச் செய்துள்ளார்கள். ஒரு புள்ளியை எவ்வாறு வழிபட முடியும்? அவர் சிவபாபா என்று அழைக்கப்படுகின்றார். இதனைக் கூறியவர் யார்? சிவபாபா உங்கள் ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்றார் என்று நீங்கள் இப்பொழுது கூறுகின்றீர்கள். இது ஓர் அற்புதமே. 84 பிறவிச்சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. நீங்கள் இந்த ஆஸ்தியைப் பல தடவைகள் பெற்றிருக்கின்றீர்கள். தொடர்ந்தும் அதனைப் பெறுகின்றீர்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்;து உங்களுக்கு மிகவும் நன்றாக விளங்கப்படுத்துகின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. மரணம் சற்று முன்னிலையிலேயே உள்ளது. ஆகையால், நினைவின் வேகத்தை அதிகரியுங்கள். சத்திய உலகில் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவதற்கு முழு முயற்சி செய்யுங்கள்.

2. உங்களுக்கும் பிறருக்கும் நன்மை செய்து, ஆசீர்வாதங்களைப் பெறுங்கள். தூய உலகிற்குச் செல்வதற்கு நிச்சயமாகத் தூய்மை ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
பாப்தாதாவுடன் தொடர்பையும் உறவுமுறையையும் கொண்டிருப்பதன் மூலம், மன சக்தியின் நடைமுறை அத்தாட்சியை காட்டக்கூடிய சூட்சும சேவை செய்கின்ற ஓர் ஆத்மா ஆகுவீர்களாக.

மனசக்தியினதும் செயல்களின் சக்தியினதும் நடைமுறை அத்தாட்சியை உங்களால் பார்க்க முடிவதைப் போன்றே, அதிசக்தி வாய்ந்த மௌனசக்தியின் நடைமுறை அத்தாட்சியைக் காண்பதற்கு, பாப்தாதாவுடன் சதா தெளிவான தொடர்பும் உறவுமுறையும் இருக்க வேண்டும். இதுவே யோகசக்தி என்று அழைக்கப்படுகின்றது. அத்தகைய யோகசக்தியைக் கொண்டிருக்கின்ற ஆத்மாக்களால், தொலைவில் இருக்கின்ற ஆத்மாக்களுக்கு, தமக்கு நேர்முன்னிலையில் இருக்கின்ற பௌதீக அனுபவத்தைக் கொடுக்க முடியும். அவர்களால் ஆத்மாக்களை வரவழைத்து அவர்களை மாற்றமடையச் செய்ய முடியும். இது சூட்சும சேவை. இதனை நீங்கள் செய்ய வேண்டுமாயின், உங்கள் மனஒருமைப்பாட்டுச் சக்தியை அதிகரியுங்கள்.

சுலோகம்:
தமது பொக்கிஷங்கள் அனைத்தையும் தகுதியான முறையில் பயன்படுத்துகின்ற ஆத்மாக்கள் மாத்திரமே மகாதானி ஆத்மாக்கள் ஆவார்கள்.

அவ்யக்த சமிக்ஞை: மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்து, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.

யாரேனும் சரீர உணர்வுப் பார்வையுடன் உங்களிடம் வந்தால், ஒரு விநாடியில் அவரின் பார்வையை ஆத்ம உணர்வுடைய பார்வையாக மாற்றுங்கள். உங்களை விழுத்தும் அல்லது தமது சகவாசத்தினால் உங்கள்மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்துடன் எவரேனும் உங்களிடம் வந்தால், உங்களுடைய சதா மேன்மையான சகவாசத்தின் அடிப்படையில் அவர்களின் அந்த ஆதிக்கத்தை அவர்களிடம் இருந்து அகற்றி, அவர்களை மேன்மையான சகவாசம் கொண்டிருப்பவர்களாக ஆக்குங்கள். இவ்வகையான மாற்றத்தைச் செய்யும் வழியை நீங்கள் கற்றுக் கொண்டால், நீங்கள் எந்தத் தடையினாலும் தோற்கடிக்கப்பட மாட்டீர்கள். உங்கள் தொடர்பில் வருபவர்கள் நீங்கள் இந்த மேன்மையான சூட்சும சேவை செய்வதைக் காணும் போது, அவர்கள் உங்களிடம் சரணடைவார்கள்.