25.06.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையை நினைவு செய்வதே தூய்மை ஆகுவதற்கான ஒரேயொரு வழியாகும். நினைவிற்கான முயற்சி மாத்திரமே இறுதியில் பயனுள்ளதாக இருக்கும்.

கேள்வி:
சத்தியயுக இராச்சியத் திலகத்தைப் பெறுவதற்கு, சங்கமயுகத்தில் நீங்கள் என்ன திலகத்தை இட்டுக் கொள்ள வேண்டும்?

பதில்:
சரீரம் அன்றி, ஒரு புள்ளியாகிய, ஆத்மாவாக இருக்கின்ற திலகத்தைச் சங்கமயுகத்தில் இட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் ஓர் ஆத்மா என்பதையும், நீங்கள் உங்கள் ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து கோர வேண்டும் என்பதையும் தொடர்ந்தும் உங்களினுள் உறுதியாக்கிக் கொள்ளுங்கள். “பாபாவும் புள்ளி, நானும் ஒரு புள்ளியே”. இந்தத் திலகத்துடன் நீங்கள் சுவர்க்க இராச்சியத் திலகத்தையும் பெற்றுக் கொள்வீர்கள். பாபா கூறுகிறார்: நீங்கள் என்னை நினைவுசெய்தால், அழுவதில் இருந்து அரைக் கல்பத்திற்குப் பாதுகாக்கப்படுவீர்கள் என்ற உத்தரவாதத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.

ஓம் சாந்தி.
நீங்கள் இந்த அக்கறையைக் கொண்டிருப்பது அவசியம்: ஆத்மாவாகிய நான் நிச்சயமாகத் தந்தையை நினைவு செய்வது அவசியமாகும், ஏனெனில் அப்பொழுதே என்னால் தூய்மையாக முடியும். இதற்கே அனைத்து முயற்சியும் தேவைப்படுகிறது. எவ்வாறாயினும், குழந்தைகளாகிய உங்களால் இந்த முயற்சியைச் செய்ய முடியாதுள்ளது. மாயை பெருமளவில் உங்களுக்குத் தொல்லை கொடுக்கிறாள்; நீங்கள் ஒரேயொரு தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதை அவள் மறக்கச் செய்கிறாள், ஏனெனில் ஏனையோரின் நினைவு அங்கு காணப்படுகிறது. பின்னர் நீங்கள் தந்தையையோ அல்லது மணவாளனையோ நினைவு செய்வதில்லை. நீங்கள் அத்தகைய மணவாளனைக் குறைந்தபட்சம் எட்டு மணித்தியாலங்களாவது நினைவு செய்கின்ற சேவையைச் செய்ய வேண்டும்; அவரை நினைவு செய்வதனால் உங்கள் மணவாளனுக்கு நீங்கள் உதவ வேண்டும். அதாவது, குழந்தைகளான நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இந்த முயற்சி மிகவும் மகத்துவமானது. “மன்மனாபவ” என்ற வார்த்தை கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள்; நடந்தும் உலாவியும் திரியும்பொழுதும், ஒரேயொரு தந்தையைத் தொடர்ந்தும் நினைவு செய்யுங்கள். நீங்கள் செய்வதற்கு வேறெதுவும் இல்லை. இறுதியில், இந்த நினைவே பயனுள்ளதாக இருக்கும். உங்களை இப்பொழுது வீடு திரும்பவுள்ள, ஒரு சரீரமற்ற ஆத்மாவாகக் கருதுங்கள். நீங்கள் இந்த முயற்சியைப் பெருமளவில் செய்ய வேண்டும். காலையில் நீராடிய பின்னர் வந்து, கூரையில் அல்லது மண்டபத்தில் ஏகாந்தத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். எந்தளவிற்கு ஏகாந்தம் இருக்கிறதோ, அந்தளவிற்கு நல்லது. நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும் என்பதை எப்பொழுதும் சிந்தியுங்கள். நீங்கள் உங்கள் முழு ஆஸ்தியையும் தந்தையிடம் இருந்து கோரிக் கொள்ள வேண்டும். நீங்கள் இந்த முயற்சியை ஒவ்வொரு 5000 வருடங்களும் செய்ய வேண்டும். நீங்கள் இந்த முயற்சியைச் சத்திய, திரேதா, துவாபர, கலியுகங்களில் செய்ய மாட்டீர்கள். சங்கமயுகத்தில் மாத்திரமே தந்தை உங்களுக்குக் கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! அவ்வளவுதான். இந்த நேரத்திலேயே தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! தந்தை சங்கமயுகத்தில் மாத்திரமே வருகின்றார். அவர் வேறெந்த நேரத்திலும் வருவதில்லை. இதை நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாக நீங்களும் அறிவீர்கள். பல குழந்தைகள் தந்தையை மறந்து விடுகின்றனர், இதனாலேயே அவர்கள் பெருமளவு ஏமாற்றப்படுகின்றனர். இராவணன் மிகவும் ஏமாற்றுபவன். அவன் அரைக் கல்பத்திற்கு உங்கள் எதிரியாக இருக்கிறான். இதனாலேயே தந்தை கூறுகிறார்: தினமும் அதிகாலை வேளையில் எழுந்து, இந்த ஞானக் கடலைக் கடைவதுடன், நீங்கள் தந்தையை எவ்வளவு நேரம் நினைவு செய்தீர்கள் என்றும், எவ்வளவு துரு அகற்றப்பட்டிருக்கும் என்றும் கூறுகின்ற, உங்கள் அட்டவணையை வைத்திருங்கள். அனைத்தும் நினைவிலேயே தங்கியுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள், உங்களுடைய முழு ஆஸ்தியையும் கோருவதற்கு மிகவும் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் சாதாரண மனிதரிலிருந்து நாராயணன் ஆக வேண்டும். இதுவே சத்திய நாராயணனின் கதை ஆகும். பௌர்ணமி தினத்தில் சத்திய நாராயணனின் கதை கூறப்படும் பொழுது, பக்தர்கள் ஒன்றுகூடுகிறார்கள். நீங்கள் 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள் ஆக வேண்டும் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். உண்மையான தந்தையை நினைவு செய்வதால் மாத்திரமே உங்களால் அவ்வாறாக முடியும். தந்தையே உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார். தந்தை கூறுகின்றார்: நீங்கள் வீட்டில் வசித்தவாறே உங்கள் வியாபாரம் போன்றவற்றைச் செய்யலாம். ஆனால், நிச்சயமாகத் தந்தையை நினைவுசெய்து தூய்மையாக வேண்டும்; அவ்வளவுதான்! நீங்கள் தந்தையை நினைவு செய்யாவிட்டால் ஏதோவொரு வழியில் இராவணனால் ஏமாற்றப்படுகிறீர்கள். இதனாலேயே, நினைவுசெய்தல் எனும் பிரதான விடயம் உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகிறது. நீங்கள் சிவபாபாவை நினைவுசெய்ய வேண்டும். உங்கள் சரீரங்கள் உட்பட, உங்கள் சரீர உறவினர்கள் அனைவரையும் மறந்து, நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுமாறு தந்தை உங்களுக்கு மீண்டும் மீண்டும் கூறுகிறார். இல்லையெனில் நீங்கள் பெருமளவு ஏமாற்றப்படுவதுடன், இறுதியில் பெருமளவு வருந்தவும் நேரிடும். மாயை உங்கள் முகங்களை முற்றிலும் அவலட்சணம் ஆக்குமளவுக்கு நீங்கள் மிகவும் கடுமையாக அறையப்படுவீர்கள். தந்தை உங்கள் முகங்களை அழகாக்குவதற்காகவே வந்திருக்கிறார். இந்த நேரத்தில் அனைவரும் தொடர்ந்தும் ஒவ்வொருவரது முகங்களையும் அவலட்சணமாக ஆக்குகிறார்கள். ஒரேயொரு தந்தையே உங்களை அழகாக்கக் கூடியவர். அவரை நினைவு செய்வதனால், நீங்கள் சுவர்க்கத்தின் அழகிய அதிபதிகள் ஆகுவீர்கள். இது தூய்மையற்ற உலகம். தந்தை தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்கவே வருகின்றார். உங்கள் வியாபாரம் போன்றவற்றுடன் பாபாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. உங்கள் சரீரத்தின் வாழ்வாதாரத்திற்காக நீங்கள் எதனையெல்லாம் அவசியம் செய்ய வேண்டுமோ, அதை நீங்கள் தொடர்ந்தும் செய்யலாம். தந்தை கூறுகிறார்: மன்மனாபவ! “எவ்வாறு தூய உலகின் அதிபதிகள் ஆகுவது?” என்று நீங்கள் கேட்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! அவ்வளவு தான்! தூய்மை ஆகுவதற்கு வேறெந்த வழியும் இல்லை. அவர்கள் எவ்வளவு தானங்கள் செய்தாலும், தர்மங்கள் செய்தாலும், அல்லது தீ மிதித்தல் போன்றவற்றுக்கு முயற்சி செய்தாலும் தந்தையின் நினைவைத் தவிர வேறு எதுவும் பயனுள்ளதாக இருக்காது. இது மிகவும் எளிமையான விடயம்; இது இலகு யோகம் என அழைக்கப்படுகிறது. நாள் முழுவதும் உங்கள் இனிய தந்தையை நீங்கள் எவ்வளவு நேரம் நினைவு செய்கின்றீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள். நீங்கள் உறங்கும் பொழுது, பாவங்கள் செய்யப்படுவதில்லை; அந்த நேரத்தில் நீங்கள் சரீரமற்றவர்கள் ஆகுகின்றீர்கள். எவ்வாறாயினும், நாள் முழுவதும் பெருமளவு பாவங்கள் செய்யப்படுவதுடன், கடந்த காலப் பாவங்களும் இன்னமும் இருக்கின்றன. நீங்கள் நினைவு செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் இங்கே வந்து விட்டதால், இந்த முயற்சியைச் செய்ய வேண்டும். வெளியுலக வீண் எண்ணங்கள் அனைத்தையும் முடித்து விடுங்கள். இல்லையெனில், இது சூழலை மிகவும் அதிகளவில் பாழாக்கும். நீங்கள் சிலநேரத்தில் உங்கள் வீட்டைப் பற்றிய அல்லது பண்ணையைப் பற்றிய எண்ணங்களைத் தொடர்ந்தும் கொண்டிருக்கின்றீர்கள். சிலநேரத்தில் உங்கள் குழந்தைகளைப் பற்றியும், சிலநேரத்தில் உங்கள் குருவைப் பற்றியும் சிந்திக்கிறீர்கள். இவ்வாறான எண்ணங்களை நீங்கள் தொடர்ந்தும் கொண்டிருக்கும் பொழுது, சூழலைப் பாழாக்குகிறீர்கள். முயற்சி செய்யாதவர்கள் தொடர்ந்தும் தடைகளை உருவாக்குகின்றார்கள். இவை அத்தகைய சூட்சுமமான விடயங்கள். வேறு எந்த நேரத்திலும் அன்றி, இந்த நேரத்தில் மாத்திரமே நீங்கள் இதனை அறிவீர்கள். இந்த நேரத்தில் மட்டுமே தந்தை உங்களுக்கு ஓர் ஆஸ்தியைத் தருகிறார், பின்னர் அவர் அரைக் கல்பத்திற்குக் கவலையற்றவராகி விடுகிறார். உங்கள் லௌகீகத் தந்தையர்களுக்கு உள்ள அக்கறைக்கும், எல்லையற்ற தந்தைக்குள்ள அக்கறைக்கும் இடையே அதிகளவு வேறுபாடு உள்ளது. தந்தை கூறுகிறார்: பக்தி மார்க்கத்தில் எனக்குப் பல்வேறு அக்கறைகள் இருக்கின்றன. பக்தர்கள் அதிகளவில் என்னை மீண்டும் மீண்டும் நினைவு செய்கிறார்கள். சத்தியயுகத்தில் எவரும் என்னை நினைவு செய்வதில்லை. தந்தை கூறுகிறார்: அங்கே நீங்கள் என்னை நினைவுசெய்ய வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு அத்தகைய சந்தோஷத்தை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். அந்த நேரத்தில் என் குழந்தைகள் அமைதி தாமத்திலோ அல்லது சந்தோஷ தாமத்திலோ இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இதை வேறு எந்த மனிதராலும் புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் தங்களுடைய புத்தியில் அத்தகையதொரு தந்தையில் நம்பிக்கை கொண்டிருப்பதில் மாயை தடைகளை உருவாக்குகின்றாள். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்களில் கலக்கப்பட்டுள்ள வெள்ளி, செம்பு, இரும்பு ஆகியவற்றின் கலப்படங்கள் அகற்றப்படும். நீங்கள் சத்தியயுகத்தில் இருந்து திரேதாயுகத்திற்குச் செல்லும் பொழுது, இரு கலைகள் குறைவடைகின்றன. நீங்கள் இந்த விடயங்களைச் செவிமடுத்துப் புரிந்து கொள்கிறீர்கள். உண்மையான பிராமணர்களது புத்திகளில் இந்த விடயங்கள் மிகத் தெளிவாகப் பதியும். இல்லாவிடின் அவர்களது புத்திகளில் இவை பதியாது. அவர்களால் தந்தையின் நினைவில் இருக்க முடியாது. அனைத்தும் தந்தையை நினைவு செய்வதிலேயே தங்கியிருக்கிறது. அவர் மீண்டும் மீண்டும் கூறுகிறார்: குழந்தைகளே, தந்தையை நினைவு செய்யுங்கள்! இந்த பாபாவும் கூறுகிறார்: சிவபாபாவை நினைவு செய்யுங்கள். சிவபாபாவே கூறுகிறார்: தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள்! அவர் ஆத்மாக்களாகிய உங்களை அழைக்கிறார்: ஓ குழந்தைகளே! அசரீரியான பரமாத்மா ஆத்மாக்களுடன் பேசுகிறார். இதுவே பிரதான விடயம். அனைத்திற்கும் முதலில், வருகின்ற எவருக்கும் அல்பாவை நினைவு செய்யுமாறு கூறுங்கள். நீங்கள் வேறு விடயங்களை மேலும் மேலும் கூறத் தேவையில்லை. 'உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள்!" என அவர்களுக்குக் கூறுங்கள். தொடர்ந்தும் இதை உங்களுக்குள் உறுதியாக்கிக் கொள்ளுங்கள்: நான் ஓர் ஆத்மா. துளசிதாசர் சந்தனக் கட்டையைப் பசையாக்குவதற்காக அதைத் தேய்த்ததாகவும், இரகுவீர் அதைத் (அந்தப் பசையை) திலகமாக இட்டதாகவும் நினைவுகூரப்படுகிறது. எவ்வாறாயினும் அது ஒரு பௌதீகமான திலகத்திற்கான கேள்வி அல்ல. உண்மையில் அந்தத் திலகம் இந்த நேரத்தின் ஒரு ஞாபகார்த்தமே என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் தொடர்ந்தும் நினைவில் இருக்கிறீர்கள், அதாவது, உங்களுக்கு ஓர் இராச்சியத் திலகம் இடப்பட்டுள்ளது. நீங்கள் இராச்சியத் திலகத்தைப் பெற்று, இரட்டைக் கிரீடம் அணிந்தவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் இராச்சிய திலகத்தைப் பெறுவீர்கள். அதாவது, நீங்கள் சுவர்க்கத்தின் சக்கரவர்த்திகளும், சக்கரவர்த்தினிகளும் ஆகுவீர்கள். தந்தை அனைத்தையும் உங்களுக்கு மிக இலகுவாக விளங்கப்படுத்துகிறார். நீங்கள் ஆத்மாக்களே அன்றி, சரீரங்கள் அல்ல என்பதை நினைவு செய்யுங்கள். நீங்கள் உங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும். நீங்கள் புள்ளிகள் என்பதையும், பாபாவும் ஒரு புள்ளியே என்பதையும் ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். பாபாவே ஞானக்கடலாகவும், சந்தோஷக்கடலாகவும் இருக்கிறார். அவர் எமக்கு ஆசீர்வாதங்களைத் தருகிறார். அவர் வந்து இவருக்கருகில் அமர்கின்றார். ஒரு குரு தனது சீடனைத் தன்னருகில் அமர்த்தி, அவருக்குக் கற்பிக்கின்றார். இவரும் அவருக்கு அருகாமையில் அமர்ந்திருக்கிறார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: உங்களை ஆத்மாக்கள் எனக் கருதி, சதா என்னை மட்டும் நினைவு செய்யுங்கள்! சத்தியயுகத்தில் உங்களை நீங்கள் ஆத்மாக்களாகக் கருதுகிறீர்கள், ஆனால் உங்களுக்குத் தந்தையைத் தெரியாது. ஆத்மாவாகிய நான், ஒரு சரீரத்தை விடுத்து, இன்னொன்றை எடுக்கிறேன். நாடகத்திற்கேற்ப உங்கள் பாகங்கள் அத்தகையவை. இதனாலேயே அங்கு உங்கள் ஆயுட்காலங்கள் நீண்டவையாக இருக்கின்றன் அங்கே நீங்கள் தூய்மையாக இருக்கிறீர்கள். சத்தியயுகத்தில் உங்கள் ஆயுட்காலங்கள் நீண்டவையாக இருக்கின்றன, கலியுகத்திலோ அவை குறுகியவையாக இருக்கின்றன. அங்கே நீங்கள் யோகிகளாகவும், இங்கே போகிகளாகவும் (விகாரத்தில் ஈடுபடுபவர்கள்) இருக்கிறீர்கள். யோகிகள் தூய்மையானவர்கள். அங்கே இராவண இராச்சியம் இல்லை என்பதால் ஆயுட்காலங்கள் நீண்டவையாக இருக்கின்றன, இங்கோ ஆயுட்காலங்கள் மிகவும் குறுகியவை! இதுவே கர்ம வேதனை என அழைக்கப்படுகிறது. அங்கே ஒருபொழுதும் அகால மரணம் ஏற்படுவதில்லை. தந்தை கூறுகிறார்: நீங்கள் தந்தையை இனங்கண்டு விட்டதால், ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். ஒரேயொரு தந்தையை நினைவு செய்யுங்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள்! நான் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதால், இப்பொழுது இந்தச் சரீரத்தை நீக்க வேண்டும். உங்கள் எஞ்சிய காலத்தைச் சேவை செய்வதற்குப் பயன்படுத்துங்கள். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் ஏழைகள், அதனாலேயே தந்தை கருணை கொள்கிறார். வயதான தாய்மார்களான உங்களுக்கும், கூன் விழுந்தவர்களுக்கும் அவர் எவ்விதமான சிரமத்தையும் கொடுப்பதில்லை. வயதானவர்களே கூன் விழுந்தவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். வயதான தாய்மார்களுக்கு விளக்கப்படுகிறது: தந்தையை நினைவு செய்யுங்கள்! யாராவது உங்களை எங்கே செல்கின்றீர்கள் என வினவும்பொழுது, கீதாப் பாடசாலைக்குச் செல்வதாகக் கூறுங்கள். சில குழந்தைகள் கண்காட்சிகள் போன்றவற்றிற்கு அதிகளவில் செலவிடுகிறார்கள். இன்னார் மிகவும் கவரப்பட்டார் என்றும் அவர்கள் எழுதுகிறார்கள், ஆனால் பாபா கூறுகிறார்: இந்த நேரத்தில் எல்லையற்ற தந்தை உண்மையிலேயே பிரம்மாவின் சரீரத்தினுள் பிரவேசித்துள்ளார் என்றும், அவரிடம் இருந்து மட்டுமே நீங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெற முடியும் என்றும் எவருமே எழுதுவதில்லை. ஒருவருக்கேனும் அந்த நம்பிக்கை ஏற்படவில்லை என்பதை அப்பொழுது பாபா புரிந்து கொள்கிறார். இந்த ஞானம் மிகவும் நல்லது என்றும், ஏணியின் படத்தை நீங்கள் மிக நன்றாக விளங்கப்படுத்தினீர்கள் என்றும் அவர்கள் கவரப்பட்டாலும், அவர்கள் யோகத்தில் நிலைத்திருந்து, தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவதில்லை. கடவுளிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுவதைப் பற்றி நீங்கள் கொடுக்கும் விளக்கம் மிகவும் நல்லது என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அவர்களே அதைப் பெற விரும்புவதில்லை. அவர்கள் எம் முயற்சியும் செய்வதே இல்லை. பல பிரஜைகள் உருவாக்கப்படுவார்கள், ஆனால், ஓர் அரசர் ஆகுவதற்கு முயற்சி தேவைப்படுகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்த இதயத்தை வினவ முடியும்: நான் எந்தளவிற்குத் தந்தையின் நினைவிலும், முகமலர்ச்சியுடனும் இருக்கிறேன்? நாங்கள் மீண்டும் ஒருமுறை தேவர்கள் ஆகுகின்றோம். ஏகாந்தத்தில் இருந்து, உங்களுடனேயே பேசுங்கள். இதை நீங்களே முயற்சித்துப் பாருங்கள். தந்தையைத் தொடர்ந்தும் நினைவு செய்யுங்கள். ஏனெனில் அரைக் கல்பத்திற்கு நீங்கள் ஒருபொழுதும் அழ மாட்டீர்கள் என்ற உத்தரவாதத்தைத் தந்தை உங்களுக்கு அளிக்கிறார். பாபா வந்து இப்பொழுது உங்களை இராவணனான, மாயையை வெற்றி கொள்ளுமாறு செய்கிறார் என்று நீங்கள் இப்பொழுது கூறுகிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் என்ன முயற்சியைச் செய்கிறீர்களோ, அதை உங்களுக்காகவே செய்கிறீர்கள். பின்னர் நீங்கள் புதிய உலகத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக வேண்டியிருப்பதால், பழைய உலகின் கர்மக் கணக்குகள் தீர்க்கப்பட வேண்டும். அவர் உங்களுக்குத் தூய்மை ஆகுவதற்கான வழியையும் காட்டுகிறார். இதுவே தீர்வுக் காலம், அனைத்தும் அழிக்கப்பட வேண்டும். புதிய உலகம் ஸ்தாபிக்கப்பட உள்ளது. நீங்கள் மரண பூமியில் உங்கள் சரீரங்களை விடுத்து, பின்னர் புதிய, அமரத்துவ உலகிற்குச் செல்வீர்கள் என்பதை அறிவீர்கள். நாம் புதிய உலகிற்காகவே கற்கிறோம். அவர்கள் எதிர்காலத்திற்காகக் கற்கின்ற கல்விக்கூடம் வேறு எதுவும் இல்லை. ஆம், பெருமளவு தானங்களைச் செய்பவர்களும் பெருமளவு தர்மங்களைச் செய்பவர்களும், அரசர் ஒருவருக்குப் பிறக்கின்றார்கள். “வாயிலே தங்கக்கரண்டி” என்று ஒரு கூற்றும் இருக்கிறது. சத்தியயுகத்தில் நீங்கள் அதனைப் பெற்றுக் கொள்கிறீர்கள். கலியுகத்திலும் அரசர்களுக்குப் பிறக்கின்றவர்கள் அதைப் பெற்றுக் கொள்கிறார்கள். இருப்பினும் இங்கே பல்வகையான துன்பங்களும் இருக்கின்றன. உங்களது எதிர்கால 21 பிறவிகளுக்கு நீங்கள் எந்தத் துன்பத்தையும் கொண்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் ஒருபொழுதும் நோய்வாய்ப்பட மாட்டீர்கள். சுவர்க்கத்தில் நீங்கள் ஒரு தங்கக் கரண்டியைக் கொண்டிருப்பீர்கள். இங்கே மக்கள் ஒரு தற்காலிகமான காலப்பகுதிக்கே இராச்சியத்தைக் கொண்டிருக்கிறார்கள். நீங்களோ அதனை 21 பிறவிகளுக்குப் பெறுகிறீர்கள். இவ்விடயங்கள் அனைத்தையும் பற்றி நீங்கள் உங்கள் புத்திகளை மிக நன்றாகப் பயன்படுத்தி, பின்னர் அவற்றை ஏனையோருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். பக்தி மார்க்கத்தில் நீங்கள் அரசர்களாக முடியாது என்றில்லை. ஒருவர் ஒரு கல்லூரியையோ அல்லது ஒரு வைத்தியசாலையையோ கட்டும்பொழுது, அதன் பிரதிபலனைப் பெறுகிறார். அவர் ஒரு வைத்தியசாலையைத் திறப்பாரே ஆனால், தனது அடுத்த பிறவியில் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுகிறார். அவர்கள் கூறுகிறார்கள்: இவர் தனது முழு வாழ்விலும் காய்ச்சலைக் கூட அனுபவம் செய்யவில்லை. அவர்களுக்கு நீண்ட ஆயுட்காலங்கள் உள்ளன. ஒருவர் பெருமளவில் தானங்களைச் செய்து ஒரு வைத்தியசாலையையும் திறப்பாராயின், அவரது ஆயுட்காலம் அதிகரிக்கிறது. இங்கே நீங்கள் யோகத்தைக் கொண்டிருப்பதால், சதா ஆரோக்கியமானவர்களாகவும் செல்வந்தர்களாகவும் ஆகுகிறீர்கள்; யோகத்தைக் கொண்டிருப்பதால் நீங்கள் 21 பிறவிகளுக்கு நல்ல ஆரோக்கியத்தைப் பெறுகிறீர்கள். இது ஒரு மிகப் பெரிய வைத்தியசாலையும், ஒரு பெரிய கல்லூரியும் ஆகும். தந்தை அனைத்தையும் உங்களுக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகிறார். தந்தை கூறுகின்றார்: உங்களில் எவரும்; உங்கள் இதயத்திற்குப் பிடித்த எந்த இடத்திற்கும் அல்லது நீங்கள் களிப்படைகின்ற எந்த நிலையத்திற்கும் சென்று கற்க முடியும். எவரும் கூறக்கூடாது: நீங்கள் எங்கள் நிலையத்திற்கு மட்டுமே வர வேண்டும். ஏன் நீங்கள் அந்த நிலையத்துக்குச் செல்கிறீர்கள்? இல்லை; உங்களில் எவரும் தமக்குப் பிடித்த எந்த நிலையத்துக்கும் செல்லலாம். அனைத்துமே ஒன்று தான்; ஒரே முரளியே எங்கும் வாசிக்கப்படுகிறது. இந்த முரளி இங்கேயிருந்து (மதுவனம்) அனுப்பப்படுகிறது. பின்னர், சிலர் அதை மிகவும் நல்ல விளக்கத்துடன் வாசிக்கின்றனர், ஏனையோர் அதை வெறுமனே அப்படியே வாசிக்கிறார்கள். சொற்பொழிவு ஆற்றுபவர்கள் மிக நல்ல சவால்களை விடுக்கிறார்கள். எங்கெல்லாம் சொற்பொழிவு இடம்பெறுகிறதோ, அனைத்திற்கும் முதலில், அவர்களுக்குக் கூறுங்கள்: சிவபாபா கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி, உங்கள் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள், அப்பொழுது உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் தூய்மையாகி, தூய உலகின் அதிபதிகளாகவும் ஆகுவீர்கள். அவர் உங்களுக்கு மிக இலகுவாக விளங்கப்படுத்துகிறார்! அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. வெளி விடயங்கள் பற்றிய வீண் எண்ணங்களை விட்டு விடுங்கள், ஏகாந்தத்தில் இருந்து தந்தையை நினைவு செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். அதிகாலையில் விழித்தெழுந்து, இந்த ஞானக்கடலைக் கடைவதுடன், உங்கள் அட்டவணையையும் பார்வையிடுங்கள்.

2. பக்தி மார்க்கத்தில் தானமும் தர்மமும் அவசியமாக இருப்பதைப் போன்றே, இந்த ஞான மார்க்கத்தில் நினைவு அவசியமானது. நினைவின் மூலம் உங்கள் ஆத்மாவைச் சதா ஆரோக்கியமானவராகவும், செல்வந்தராகவும் ஆக்குங்கள். சரீரமற்றவராக இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் இணைந்த ரூபத்தில் சேவை செய்து, ஆத்மாக்களை நெருக்கமானதோர் உறவுமுறையில் கொண்டு வருவீர்களாக.

நீங்கள் சத்தத்தால் மட்டும் சேவை செய்யும்போது, பிரஜைகள் உருவாக்கப்படுவார்கள். எனவே, நீங்கள் உங்களை சத்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் நிலைநிறுத்திய பின்னர் சத்தத்திற்குள் வரவேண்டும். முதலில் அவ்யக்த ஸ்திதி, பின்னர் சத்தத்திற்குள் வாருங்கள். இந்த ஒன்றிணைந்த ரூபத்தில் உங்களால் செய்யப்படும் சேவை, வாரிசுகளை உருவாக்கும். சத்தம் மனதில் பதிந்த ஆத்மாக்கள், பல வகையான சத்தங்களைக் கேட்பார்கள், அத்துடன் வந்து செல்வார்கள். ஆனால், நீங்கள் அனைவரும் உங்களின் ஒன்றிணைந்த ரூபத்தில் இருந்து, இந்த ரூபத்தில் சேவை செய்யும்போது, அவர்கள் வேறெந்த ரூபத்தின் ஆதிக்கத்திற்கும் உட்பட மாட்டார்கள்.

சுலோகம்:
வசதிகளைப் பயன்படுத்துங்கள், ஆனால் எல்லையற்ற விருப்பமின்மைக்குரிய மனோபாவத்தைக் கொண்டிருக்கும் உங்களின் ஆன்மீக முயற்சி அவற்றுக்குள் அமிழ்ந்து போக அனுமதிக்காதீர்கள்.

அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு, இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.

சகித்துக் கொள்ளும் குழந்தைகளால் கடுமையான சம்ஸ்காரங்களைக் கொண்டவர்களையும் கஷ்டமான காரியங்களையும் குளிர்மையாகவும் இலகுவாகவும் ஆக்குவதற்குத் தமது சகித்துக் கொள்ளும் சக்தியைப் பயன்படுத்த முடியும். சகித்துக் கொள்ளும் குணத்தைக் கொண்டவர்கள், முதிர்ச்சியாக இருப்பார்கள். அத்துடன் அனைத்தினதும் ஆழத்திற்குள் செல்வார்கள். அவர்கள் ஒருபோதும் பயப்பட மாட்டார்கள். அவர்கள் ஆழத்திற்குள் சென்று, வெற்றி பெறுவார்கள்.