25.08.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையையும், ஆஸ்தியையும் நினைவு செய்வதனால், நீங்கள் ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பதுடன், என்றும் ஆரோக்கியமானவர்களாகவும், அமரத்துவமானவர்களாகவும் ஆகுகின்றீர்கள்.
கேள்வி:
உங்கள் இதயத்தைச் சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பதற்கு இலகுவான வழி என்ன?பதில்:
நீங்கள் எங்கிருந்தாலும் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக இருப்பதாகும். நீங்கள் சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்தில் இருந்து உண்கின்றீர்கள் என எப்பொழுதும் எண்ணுங்கள். சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்தில் இருந்து உண்பவர்களின் இதயங்கள் தொடர்ந்தும் சுத்தமாகவும், தூய்மையாகவும் ஆகுகின்றன. வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து, ஸ்ரீமத்தின் வழிகாட்டல்களுக்கேற்ப, ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக இருத்தல், சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்தில் இருந்து உண்பதுடன், மனதினால் அர்ப்பணிப்பதை ஒத்ததாகும்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் அரைக்கல்பத்திற்கு, பிறவிபிறவியாக ஆன்மீக ஒன்றுகூடல்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றீர்கள். சாதுக்கள், புனிதர்கள், பண்டிதர்கள் போன்ற சகலவிதமான மனிதர்களினதும் ஆன்மீக ஒன்றுகூடல்கள் உள்ளன. இது மனிதர்களின் ஆன்மீக ஒன்றுகூடல் அல்ல. இது ஆத்மாக்களின் ஆன்மீக ஒன்றுகூடல் என்று அழைக்கப்படுகின்றது. பரமாத்மா ஆத்மாக்களான உங்களுடன் இதயபூர்வமான உரையாடல் செய்கின்றார், அதாவது, அவர் ஆத்மாக்களுடன் ஆன்மீக ஒன்றுகூடலைக் கொண்டிருக்கின்றார். இங்கே நீங்கள் ஒரு மனிதரோ அல்லது தேவரோ கூறுவதைச் செவிமடுக்கவில்லை; நீங்கள் கடவுள் கூறுவதையே செவிமடுக்கின்றீர்கள். கடவுள் எப்பொழுதும் அசரீரியானவர் என்றே அழைக்கப்படுகின்றார், அவர் குழந்தைகளான உங்களுக்குக் கற்பித்து, உங்களைத் தேவதேவியர் ஆக்க வேண்டியுள்ள பொழுது மாத்திரமே வருகின்றார். கடவுளைத் தவிர, வேறு எவராலும் தேவர் அல்லது தேவியர் அந்தஸ்தை எவருக்கும் கொடுக்க முடியாது. ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமயுகத்தின் பொழுதே, அசரீரியான தந்தை வந்து, எங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மாத்திரமே இதைப் புரிந்து கொள்கின்றீர்கள். ஏனையோருக்கு இதைப் புரிந்து கொள்வது சிரமமானது. சிவபாபா நிச்சயமாக வருகின்றார். ஆனால் அவரது பெயரைக் கூறுவதற்குப் பதிலாக, அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரே கீதையின் கடவுள் எனக் கூறியுள்ளார்கள். எனவே ஒரு மனித சரீரமே நிச்சயமாக ஒவ்வொருவரின் புத்தியிலும் பிரவேசிக்கின்றது. நீங்களும் தெய்வீகக் குணங்கள் உடையவர்களாக இருந்தீர்கள், ஆனால் இப்பொழுது அசுர குணங்கள் கொண்டவர்களாக ஆகிவிட்டீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை தெய்வீகக் குணங்கள் உடையவர்கள் ஆகுகின்றீர்கள். தெய்வீகக் குணங்கள் உடையவர்கள், இறை சமுதாயத்தினர் என்று அழைக்கப்படுகின்றார்கள், அசுர குணங்கள் உடையவர்கள் அசுர சமுதாயத்தினர் என்று அழைக்கப்படுகின்றனர். அசரீரியான தந்தை இப்பொழுது அசரீரியான சமுதாயத்திற்குக் கற்பிக்கின்றார், அதாவது, அவர் ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். இதனாலேயே இது இறை சமுதாயம் அல்லது ஆன்மீக சமுதாயம் என்று அழைக்கப்படுகின்றது. ஆன்மீகத் தந்தை வந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகியுள்ளீர்கள். நான் ஓர் ஆத்மா, தந்தை எனக்குக் கற்பிக்கின்றார். அவர் தன்னை நினைவு செய்யுமாறு எங்களுக்குக் கூறுகின்றார், அதனால், எங்கள் பாவங்களை அழிக்க முடியும். அவர் ஆத்மாக்களுக்கே கற்பிக்கின்றார். அவர் மாத்திரமே ஞானம் நிறைந்தவர். சாதுக்களும், புனிதர்களும் தொடர்ந்தும் “நேற்றி, நேற்றி” (இதுவுமல்ல, அதுவுமல்ல) என்று கூறுகின்றார்கள். அதாவது, அவர்கள் ஆத்மாக்கள் பற்றி அறியமாட்டார்கள். எவ்வாறு ஞானக்கடல் நேரடியாக வராமல், இந்த ஞானத்தைப் பேச முடியும்? இவ் விடயங்கள் மிகவும் நன்றாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். எங்களுக்குக் கற்பிப்பவர் ஒரு மனிதரல்ல. தந்தையே எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் எல்லையற்ற அசரீரியான தந்தை ஆவார். ஒவ்வொருவரும் சரீரதாரி தந்தை, அசரீரியான தந்தை என இரு தந்தையரைக் கொண்டுள்ளனர் எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் ஆன்மீகமானவரும், மற்றவர் லௌகீகமானவரும் ஆவர். ஆன்மீகத் தந்தையே வந்து ஆத்மாக்களைத் தூய்மை ஆக்குகின்றார். நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள் என்றும், பின்னர் தூய்மை அற்றவர்கள் ஆகினீர்கள் என்றும், இப்பொழுது தூய்மை அற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுகின்றீர்கள் என்றும் அறிவீர்கள். அந்த விக்கிரகங்கள் உங்களின் முன்னால் உள்ளன. பாபா உங்களுக்கு அறிவுரை வழங்குகின்றார்: சக்கரத்தின் படத்தின் முன்னால் மீண்டும், மீண்டும் சென்று அமருங்கள். அப்பொழுது, எவ்வாறு நீங்கள் சங்கமயுகத்தில் உள்ளீர்கள், எவ்வாறு ஏனைய அனைவரும் தங்களைக் கலியுகத்திற்கு உரியவர்களாகக் கருதுகின்றனர் என்ற ஞானம் அனைத்தும் உங்கள் புத்திகளில் பிரவேசிக்கும். கலியுகம் காரிருள் எனக் கூறப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது ஒளியில் இருக்கின்றீர்கள். நீங்கள் சத்தியயுகத்தில் இந்த ஞானத்தைப் பெற மாட்டீர்கள். தந்தை வருகின்றபொழுது மாத்திரமே, பேரொளி இருக்கின்றது. இந்தச் சங்கமயுகமே நன்மை பயக்கின்ற யுகமாகும். தந்தை வருகின்ற இந்த யுகம் போன்று வேறு எந்த யுகமும் இல்லை. சத்தியயுகம் நன்மை பயக்கின்ற யுகம் என அழைக்கப்படுவதில்லை. அங்கே எவருமே நன்மை அடைவதில்லை. சங்கம யுகத்திலேயே நன்மை இடம்பெறுகின்றது. சத்தியயுகத்தில் ஏற்கனவே அனைவருக்கும் நன்மை உள்ளது. நன்மைபயக்கும் சங்கமயுகத்தின் மூலமே, கலியுகம் சத்தியயுகம் ஆகுகின்றது. நீங்கள் இப்பொழுது எவ்வளவு நன்மை அடைந்துள்ளீர்கள் எனப் பாருங்கள்! தந்தையையும், உங்கள் ஆஸ்தியையும் நினைவு செய்வதனால். நீங்கள் அத்தகைய பெரும் வருமானத்தைச் சம்பாதிக்கின்றீர்கள். உங்களுக்கு முழுமையான வருமானமும், முழுமையான ஆரோக்கியமும் இருக்கின்றன. உங்கள் வாழ்வுகள் அமரத்துவமானவை ஆகுகின்றன. நீங்கள் ஒருபொழுதுமே அகால மரணத்தை அனுபவஞ் செய்ய மாட்டீர்கள். ஆகவே குழந்தைகளான நீங்கள் இந்த ஞானம் முழுவதையும் உங்கள் புத்தியில் கொண்டிருப்பதில், அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். குழந்தைகளான நீங்கள் இங்கு வந்துள்ளதால், முயற்சி செய்து, அருங்காட்சியகத்திலுள்ள படங்களை விளங்கப்படுத்துவதற்குத் தகுதியானவர்களாக வேண்டும். உங்களைத் தகுதியானவர்கள் ஆக்குவதற்கு, ஏழு முதல் எட்டு நாட்களுக்கு அமர்ந்திருந்து, உங்களுக்கு நீங்களே கற்பிக்க வேண்டும். இதைப் பயிற்சி செய்தவுடன், நீங்கள் சேவை செய்வதற்கு ஓடிச் செல்ல வேண்டும். சென்று சேவை செய்த பின்னர், திரும்பி வாருங்கள். இதைக் கற்பது மிக இலகுவானது. உங்களின் முன்னால் ஒரு படத்தை வைத்தவுடன், எவ்வாறு நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள் என்பதைப் பற்றிய அனைத்தும் புத்தியில் பிரவேசிக்கின்றது. இன்றைய உலகில் பல மனிதர்கள் இருக்கின்றார்கள். நாளை வெகுசிலரே இருப்பார்கள். அவர்கள் அனைவரும் வீடு திரும்ப வேண்டும். தந்தையே இப்பொழுது வந்து, குழந்தைகளான உங்களுக்கு அதிகளவு கௌரவம் அளிக்கிறார். தொலைதூர தேசவாசி, அந்நிய தேசத்திற்கு வந்துள்ளார். இராவணனின் தேசமே அந்நிய தேசம், இல்லையா? இராவணனால் என்றுமே இராமரின் தேசத்திற்குள் பிரவேசிக்க முடியாது. குழந்தைகளாகிய உங்களின் பராமரிப்பு இப்பொழுது தந்தையின் கரங்களில் உள்ளது. ‘நான் உங்களுடனேயே உண்ணுகின்றேன், அதாவது, நான் உங்களுடைய பொக்கிஷக் களஞ்சியத்திலிருந்து மாத்திரமே உண்கின்றேன்’. உங்களுடைய பராமரிப்பு இங்கேயே இடம்பெறுகின்றது. எப்படியாயினும், தங்களை அர்ப்பணித்தவர்கள் இங்கேயே பராமரிக்கப்படுகின்றார்கள். எவ்வாறாயினும் தங்களின் மனங்களினால் அனைத்தும் கடவுளுக்கே (தந்தை) சொந்தம் என்றும், தாங்கள் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் என்றும் கருதுவதுடன், ஸ்ரீமத்திற்கு ஏற்ப செலவும் செய்பவர்கள், சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்தினால் பராமரிக்கப்படுகின்றார்கள். சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்தில் இருந்து உண்பதால், உங்கள் இதயங்கள் சுத்தமாகவும், தூய்மையாகவும் ஆகுகின்றன. அவர்கள் சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்தில் இருந்து உண்பதில்லை என்றில்லை. சிவபாபாவின் வழிகாட்டல்களுக்கேற்ப அனைத்தையும் செய்வதெனில், சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்தில் இருந்து உண்பது போன்றதாகும். நீங்கள் உண்கின்ற அந்தப் பொக்கிஷக் களஞ்சியம் எப்பொழுதும் நிறைந்திருப்பதுடன், அது உங்கள் துன்பத்தையும், வருந்துதலையும் அகற்றுகின்றது. இதன்பின்னர் நீங்கள் ஒருபொழுதும் அகால மரணத்தை அனுபவம் செய்ய மாட்டீர்கள். சிவபாபா இந்நேரத்தில் மாத்திரமே வருகின்றார், அவரது புகழ் பாடப்படுகின்றது. சிவனின் பிறந்ததினமும் கொண்டாடப்படுகின்றது, ஆனால் அவரது பொக்கிஷக் களஞ்சியம் எத்தகையது என்பதை எவருமே அறியார். பாபா உண்மையில் இங்கே வருகின்றார். இங்கே வருகின்ற குழந்தைகள் அனைவரும் சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்தில் இருந்தே உணவைப் பெறுகின்றார்கள். ஆண்கள் அர்ப்பணம் செய்தால், அது நல்லது. ஆனால் அவர்கள் அர்ப்பணம் செய்யாவிடில், அவர் அர்ப்பணம் செய்யாவிட்டால் ஒரு தாயால் என்ன செய்ய முடியும்? கணவனாலேயே வருமானம் வழங்கப்படுகின்றது. அவர் தன்னை அர்ப்பணிக்கவில்லை. அவர் வருமானம் சம்பாதித்தால் மாத்திரமே அவரது மனைவி போன்றவர்களால் அதிலிருந்து உண்ண முடியும். ஆம், ஒரு தம்பதியினர் அர்ப்பணிக்கின்ற பொழுது, அவர்கள் சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்தினால் பராமரிக்கப்பட முடியும். தந்தை இங்கே அமர்ந்திருந்து, குழந்தைகளான உங்களுக்கு இதைத் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் உங்கள் கர்மாதீத நிலையை அடையும்வரை தந்தையுடனேயே தங்கியிருப்பீர்கள் என்பதை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். நாளுக்கு நாள் நாங்கள் எங்களது சுய இராச்சியத்திற்கு நெருக்கமாக வருகின்றோம். நேரம் கடந்து சென்று கொண்டிருக்கின்றது, நீங்கள் தொடர்ந்தும் நெருக்கமாக வருகின்றீர்கள். சத்தியயுகத்தின் முதல் வருடத்திற்குச் செல்வதற்கு முன்னர், இன்னமும் எத்தனை வருடங்கள் மீதம் இருக்கின்றன? நீங்கள் அதற்கு எவ்வளவு நெருக்கமாக வந்துள்ளீர்கள்? தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, உங்கள் 84 பிறவிகளுக்கான சக்கரம் இப்பொழுது முடிவிற்கு வருகின்றது. நீங்கள் இப்பொழுது 84 பிறவிகளின் சக்கரத்தை அறிவீர்கள். சக்கரத்தைப் பார்க்கின்ற பொழுது, இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் இருப்பதாகக் கூறுவீர்கள். இந்தப் பக்கம் கலியுகமும், அந்தப் பக்கம் சத்தியயுகமும் இருக்கின்றன. நாளை, நாங்கள் எங்கள் சந்தோஷ தாமத்தில் இருப்போம். உலகம் இதை அறியமாட்டாது; அவர்கள் முழுமையான இருளில் இருக்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். நாங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து 21 பிறவிகளுக்கான ஒரு வருமானத்தைச் சம்பாதிக்கின்றோம். நீங்கள் சதா சந்தோஷம் என்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். சுவர்க்கவாசி ஆகுவது உங்கள் பாக்கியத்தில் மாத்திரமே உள்ளது. சுவர்க்கம் அற்புதமான ஓர் இடம். அவர்கள் ஏழு அற்புதங்களைக் காட்டுவதைப் போன்று, இதுவே அனைத்திலும் மிகப்பெரிய அற்புதமாகும். சுவர்க்கத்தின் அற்புதமான படங்களும் இருக்கின்றன. இலக்ஷ்மியும், நாராயணனும் உலக அதிபதிகளாக இருந்தார்கள். இதனாலேயே பாபா எழுதியுள்ளார்: படத்தில் மேலே சூரிய வம்சம் பற்றியும், அதற்குக் கீழே சந்திர வம்சம் பற்றியும் எழுதுங்கள். அரைக்கல்பம் பூர்த்தி செய்யப்படும். சூரிய, சந்திர வம்சங்கள் ஒவ்வொன்றும் 1250 வருடங்களுக்கு நீடிக்கின்றன. பின்னர் நூறாயிரக்கணக்கான வருடங்கள் என்ற கருத்து இருக்க மாட்டாது. அங்கே அவர்கள் பௌதீகச் சக்தியைப் பெறுவதில் அதிகளவு செலவு செய்கின்றார்கள். இங்கே ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை எந்தச் செலவுமில்லை. இது தந்தையினதும், குழந்தைகளினதும் கணக்காகும்; செலவு என்ற கேள்வியே இல்லை. இங்கே, குழந்தைகள் தங்களைப் புத்துணர்ச்சி ஊட்டுவதற்காக வருகின்றார்கள், இதனாலேயே கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. பணம் முழுவதும் குழந்தைகளுக்கு சொந்தமானது. பல நாட்கள் ஏற்கனவே கடந்து விட்டன, இப்பொழுது மீதமிருக்கும் சில நாட்களுக்குச் செலவுகள் எதுவுமில்லை. நீங்கள் சிப்பியளவு கூட செலவு செய்யாமல், ஜீவன்முக்தியைப் பெறுகின்றீர்கள். இதில் முயற்சிக்கான கேள்வி மாத்திரமே உள்ளது. பக்தர்கள் அனைவரும் கடவுளை நினைவுசெய்கின்றனர், ஆனால் கடவுள் யார் என்பது அவர்களுக்குத் தெரியாது. கடவுளை அறியாததால், அவர்கள் பலரையும் கடவுள் என்று நம்புகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உண்மையான தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். எல்லையற்ற பாபா, உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குவதற்குக் கற்பிக்கின்றார் என்ற பெருமளவு சந்தோஷத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்க வேண்டும். பாபா வந்து சுவர்க்கத்தை ஸ்தாபித்து, நரகத்தின் விநாசத்தைத் தூண்டுகிறார். எனவே மகாபாரத யுத்தம் இதனுடன் தொடர்புபட்டதாகும். இந்தச் சக்கரம் ஒவ்வொரு 5000 வருடங்களும் தொடர்ந்தும் சுழல்கின்றது. தந்தையும் ஒவ்வொரு கல்பத்தினதும் சங்கமயுகத்தில் பிரவேசிக்கின்றார். அவர் ஒவ்வொரு யுகத்திலும் வருவதாக அவர்கள் கீதையில் எழுதியுள்ளார்கள். எனவே ஐந்து யுகங்கள் இருப்பதனால், அவர் ஐந்து தடவைகள் வருவதாக அவர்கள் கூறுகின்றனர். அவ்வாறாயின், அவர்கள் ஏன் 24 அவதாரங்கள் பற்றியும் இன்ன, இன்ன அவதாரம் பற்றியும் எழுதியுள்ளார்கள்? மனிதர்கள் பல்வேறு யாகங்கள் வளர்த்து, தபஸ்யா, தான தர்மங்கள் போன்றவற்றைச் செய்கின்றார்கள். அவை அனைத்தும் கடவுளைக் காண்பதற்கான பாதைகள் என அவர்கள் நினைக்கின்றார்கள். எவ்வாறாயினும், எவருமே கடவுளிடம் செல்ல முடியாது. மக்கள் அரைக்கல்பத்திற்குப் பெரும் பிரயத்தனம் செய்கின்றார்கள். நீங்களும் பிறவிபிறவியாக நாலா திசைகளிலும் சுற்றி வந்தீர்கள். நீங்கள் இதையும், அதையும் செய்தாலும், தந்தையைக் கண்டடையவில்லை. தந்தை இப்பொழுது குழந்தைகளான உங்களுடன் மிக நெருக்கமாக இருக்கின்றார். அவர் உங்களுடன் பேசி, உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் சரியாக இதேவழியில் அவரைச் சந்திப்பீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். என்ன நடந்துள்ளதோ, அது ஒவ்வொரு கல்பத்திலும் அதேபோன்று நடைபெறும். அதே தாதா ஓர் இரத்தின வியாபாரியாக இருப்பார். கடவுள் இந்த இவரில் பிரவேசிப்பார், அதே குழந்தைகளாகிய நீங்கள் பின்னர் வந்து தந்தைக்குச் சொந்தமாகி, மீண்டும் ஒருமுறை அவரிடம் இருந்து சுவர்க்க ஆஸ்தியைக் கோருவீர்;கள். தந்தை குழந்தைகளான உங்களுடன் நடிக்கின்ற, இந்த அநாதியான, அழியாத பாகம் கல்பம் கல்பமாக, அதேவழியில், தொடர்ந்தும் மீண்டும் மீண்டும் இடம்பெறும். அச்சா.இனிமையிலும், இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இது நன்மை செய்கின்ற சங்கமயுகம். இந்த யுகத்தில் அனைத்திலும் நன்மை உள்ளது. அனைத்திலும் வருமானமே அன்றி, வேறெதுவும் இல்லை. தந்தையையும், ஆஸ்தியையும் நினைவுசெய்து, 21 பிறவிகளுக்கு உங்கள் வாழ்வை அமரத்துவமாக ஆக்குங்கள்.2. வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்பொழுதும், உங்கள் மனதையும், புத்தியையும் அர்ப்பணியுங்கள். உங்கள் செலவுகள் ஸ்ரீமத்திற்கு ஏற்பவே இருக்க வேண்டும். முழுமையான நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒத்துழைக்கும் சக்தியால், ஒத்துழைக்க மறுப்பவர்களையும் ஒத்துழைப்பவர்கள் ஆக்கும் தந்தையைப் போன்றவராகி, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுபவர்கள் ஆகுவீர்களாக.உங்களுடன் ஒத்துழைப்பவர்களுடன் ஒத்துழைப்பது என்பது தைரியமான செயல் அல்ல. எவ்வாறாயினும், தந்தை தன்னை இகழ்பவர்களையும் ஈடேற்றுவதைப் போல், குழந்தைகளான நீங்கள் அதேபோன்று தந்தையை ஒத்தவர் ஆகவேண்டும். ஒருவர் எவ்வளவுதான் ஒத்துழைக்க மறுத்தாலும் அவ்வாறு ஒத்துழைக்க மறுப்பவர்களையும் ஒத்துழைக்கச் செய்வதற்கு உங்களின் ஒத்துழைக்கும் சக்தியைப் பயன்படுத்துங்கள். ஏதாவதொரு காரணத்தால் ஒருவர் முன்னேறுகிறார் இல்லை என்று நினைக்காதீர்கள். பலவீனமானவர்களை அவர்கள் பலவீனமாக இருக்கிறார்கள் என்று நினைத்து ஒதுக்காதீர்கள். ஆனால் அவர்களுக்கு சக்தியைக் கொடுத்து, பலசாலிகள் ஆக்குங்கள். இதில் கவனம் செலுத்துங்கள். அப்போது சேவைத்திட்டங்கள் என்ற ஆபரணம், வைரங்கள் பதித்தவை ஆகிவிடும். அதாவது, வெளிப்படுத்துதல் இலகுவாக இடம்பெறும்.
சுலோகம்:
கோபத்திற்கான காரணம், சுயநலமும் பொறாமையும் ஆகும். இவையே எரிச்சலின் வேர்கள். எனவே அனைத்திற்கும் முதலில், அவற்றை முடித்து விடுங்கள்.அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.
தூய்மையே அத்திவாரம். எனவே, அத்திவாரத்திற்காக பிரம்மச்சரியத்திற்கான சத்தியத்தைச் செய்வது பொதுவானது. எவ்வாறாயினும், நீங்கள் இப்போது முன்னேறிச் செல்கிறீர்கள், இனிமேலும் நீங்கள் குழந்தைப் பருவ நிலையைக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் இப்போது இளைப்பாறும் நிலைக்குள் செல்ல வேண்டும். நான் பிரம்மச்சாரியாக இருக்கிறேன், என்னிடம் எப்படியும் தூய்மை உள்ளது. இதனால் மட்டும் சந்தோஷம் அடையாதீர்கள். உங்களின் மனதை, உங்களின் பிரதானமான அத்திவாரத்தைத் தூய்மை ஆக்குங்கள். அதை இந்த ஞானத்தின் சொரூபமாகவும் சக்தி சொரூபமாகவும் ஆக்குங்கள்.
முழுமை அடைவதற்காக தாதி பிரகாஷ்மணிஜியின் மறைமுகமான முயற்சி.
(தாதிஜியின் 19 ஆவது நினைவு தினத்திற்கான விசேடமான தாரணை)
1. சகல பொறுப்புக்களையும் நிறைவேற்றும்போதும், தாதிஜியிடம் நான் சகல நற்குணங்களும் சம்பூரணமானவர் ஆகவேண்டும், சகல நிபுணத்துவத்தாலும் நிரம்பியவர் ஆகவேண்டும், அத்துடன் சம்பூரணமாக விகாரமற்றவர் ஆகவேண்டும் என்ற இலக்கை அடைய வேண்டும் என்ற இலட்சியம் இருந்தது.
2. தாதிஜி தனது எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களில் இரட்டை அகிம்சாவாதியாக இருந்ததுடன் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்து சந்தோஷத்தைப் பெற்றுக் கொண்டார். தனது மனதால்கூட அவர் எவருக்கும் எந்தவிதத் துன்பத்தையும் கொடுக்கவில்லை, எந்தவிதமான துன்பத்தையும் எடுத்துக் கொள்ளவும் இல்லை.
3. தாதிஜி எப்போதும் ஒரேயொரு தந்தையின் கவர்ச்சியிலேயே இருந்தார். அவர் ஒருபோதும் ஏதாவது பழைய விடயங்கள், யாராவது நபர்கள் அல்லது பஞ்சபூதங்களால் கவரப்படவில்லை. அவர் எப்போதும் ஒரேயொரு தந்தையின் நினைவிலேயே இருந்தார். அத்துடன் தமது சூட்சுமமான மனோபாவங்களின் மீது முழுமையான ஒருமுகப்படுத்தலைக் கொண்டிருந்தார்.
4. தாதிஜி எப்போதும் பற்றற்ற பார்வையாளருக்குரிய ஸ்திதியைக் கொண்டிருந்து, சகபாடியின் சகவாசத்தைக் கொண்டிருந்தார். அவரின் திருஷ்டியிலும் மனோபாவத்திலும் ஆன்மீகம் இருந்தது. அவரின் பார்வை ஒருபோதும் எவரை நோக்கியும் ஈர்க்காதவாறு அவரின் சம்ஸ்காரங்களில் அத்தகைய இராஜரீகம் காணப்பட்டது.
5. அவர் ஒருபோதும் எவருடைய குறைபாடுகளையும் தனது இதயத்தில் வைத்திருக்கவில்லை. அவர் ஒருபோதும் எவரின் பலவீனங்களையும் குறிப்பில் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் எப்போதும் பரசிந்தன்(மற்றவர்களைப் பற்றிச் சிந்தித்தல்), பரதர்ஷன்(மற்றவர்களைப் பார்த்தல்), பரமத்(மற்றவர்களின் கட்டளைகளைப் பின்பற்றுதல்) என்பவற்றுக்கு அப்பாற்பட்டு, எப்போதும் ஆதியான சுயத்தின் எண்ணங்களையே பேணினார்.
6. தாதிஜி எப்போதும் பிரம்மாபாபாவுடன் மிகவும் பணிவாக இருந்தார். அவர் அசரீரி மற்றும் அகங்காரமற்ற நிலைகளைப் பயிற்சி செய்தார். அவர் எப்போதும் தன்னை ஒரு சேவகராகவே கருதினார். அவர் ஒருபோதும் தனக்காக எந்தவொரு புகழ்ச்சியையும் ஏற்றுக் கொண்டதில்லை. யாராவது அவரை விமர்சித்தால், அவர் பயப்படுவதில்லை. யாராவது புகழும்போதும் சந்தோஷம் அடைவதில்லை. ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவரிடம் சமநிலையின் ஸ்திதியே காணப்பட்டது.
7. அவர் பாப்தாதாவிடம் இருந்து தான் பெற்ற தெய்வீகப் புத்தி என்ற பரிசை மிக நன்றாகப் பராமரித்தார். அவர் எப்போதும் சக்திவாய்ந்த எண்ணங்களையே கொண்டிருந்தார். அவரின் ஒவ்வொரு செயலும் ஸ்ரீமத்திற்கேற்பவே இருந்தது. ஒருபோதும் சுயத்தின் அல்லது மற்றவர்களின் கட்டளைகள் அவற்றில் கலக்கவில்லை. தனது ஒவ்வோர் எண்ணமும் வார்த்தையும் செயலும் தெய்வீகப் புத்தியின் அடிப்படையில் இருக்க வேண்டும், அதனால் முழுமை அடைய வேண்டும் என்ற இலட்சியத்தை அவர் கொண்டிருந்தார்.
8. அவர் எப்போதும் ஒரேயொருவரின் மீது நம்பிக்கை வைத்திருந்தார், ஒரேயொருவரிடம் இருந்தே சக்தியைப் பெற்றார். அவரின் உறவுமுறைகள் அனைத்தும் ஒரேயொருவருடனேயே இருந்தன. அவர் ஒருபோதும் எதற்கும் அடிமை ஆகியதில்லை அல்லது எவர்மீதும் பற்று வைத்ததில்லை. அவர் எப்போதும் மற்றவர்களை சகோதரத்துவப் பார்வையுடனேயே பார்த்தார். கருணைநிறைந்தவராக இருக்கும் நற்குணத்தைக் கிரகித்தவண்ணம் அவர் பலவீனமான ஆத்மாக்களைச் சக்தியால் நிரப்பினார். அவர் தன்னை இகழ்பவர்களையும் ஈடேற்றினார்.
9. அவர் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய சந்தர்ப்பத்தையும் ‘எதுவும் புதியதல்ல’ என்ற விழிப்புணர்வுடன் வெற்றி கொண்டார். எந்தவொரு காட்சியிலும் ஏன்? என்ன? என்ற கேள்விகளுடன் குழப்பம் அடைவதற்குப் பதிலாக, அவர் எப்போதும் பற்றற்ற பார்வையாளர் என்ற விழிப்புணர்வைக் கொண்டிருந்ததுடன் எப்போதும் மலர்ச்சி நிறைந்தவராக இருந்தார்.
10. அவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் இராஜரீகம் புலப்பட்டது. அவர் ஒருபோதும் சாதாரணமான வார்த்தைகளைப் பேசியதில்லை. நடைமுறை வடிவத்தை எடுக்கப் போகும் வார்த்தைகள் மட்டுமே அவரின் உதடுகளில் இருந்து வெளிப்பட்டன. இத்தகைய வெற்றிகரமான ஆத்மாவிற்கு, அவரின் எண்ணங்கள் எப்போதும் வெற்றி நிறைந்தவையாக இருந்ததால், அவர் இலகுவாக முழுமை அடைந்தார்.
11. தாதிஜி எப்போதும் தன்னம்பிக்கை நிறைந்தவராக இருந்ததால், அவர் ஒவ்வொரு கல்பத்திலும் வெற்றிபெறும் ஆத்மா என்ற விழிப்புணர்வை எப்போதும் கொண்டிருந்தார். அவர் ஒருபோதும் எந்தவொரு பழைய சம்ஸ்காரம் அல்லது சுபாவத்தில் தங்கியிருக்கவில்லை. அவர் தனது ஆத்மா ஓர் ஒளி உடலில் வசிப்பதை அனுபவம் செய்தார்.
12. தாதிஜியின் புத்தி சுத்தமான, தெளிவான கண்ணாடியைப் போன்றது. அவர் எப்போதும் தபஸ்யா சொரூபமாக விளங்கினார். இந்தத் தபஸ்யாவின் மூலம் உலகமே நன்மை பெறும் என்றும் சந்தோஷமான சத்தியயுக உலகம் வரும் என்ற விழிப்புணர்வை எப்போதும் கொண்டிருந்தார்.
13. இறுதி நேரத்தைத் தன் முன்னால் வைத்திருந்து, தாதிஜி எப்போதும் ஆதி சுயத்தின் எண்ணங்களையே பேணினார். தனது சுய முன்னேற்றத்திற்கு, அவர் ஒவ்வொரு நாளும் அமிர்த வேளையில் பாபாவுடன் மிக இனிமையான இதயபூர்வமான உரையாடல்களைச் செய்தார். அவர் பாபாவின் மேன்மையான வாசகங்களை ஆழமாகக் கற்றார். பாபாவின் மீதுள்ள அன்புடன் கூடவே, அவர் பாபாவின் முரளிகளின் மீதும் துண்டிக்காத அன்பைக் கொண்டிருந்தார்.
14. தனது முழுமை ஸ்திதியை உருவாக்குவதற்கு, தாதிஜி சரீர விழிப்புணர்விற்கு அப்பாற்பட்டிருப்பதைப் பயிற்சி செய்தார். அவரின் புத்தியில், தான் உலக நன்மைக்கு ஒரு கருவி என்ற உணர்வை எப்போதும் கொண்டிருந்தார். நான் எனது ஸ்திதியை உயர்ந்ததாக, ஒருமுகப்பட்டதாக, நிலையாக, ஸ்திரமாக வைத்திருக்க வேண்டும், எண்ணங்களுக்கு அப்பாற்பட்டதாக, அதாவது, எனது ஸ்திதியை எந்த எண்ணங்களில் இருந்தும் விடுபட்டதாக வைத்திருக்க வேண்டும். அப்போது மட்டுமே என்னால் இந்தப் பழைய உலகில் இருந்து பறந்து சென்று சூட்சும வதனத்தில் பாபாவுடன் அமர்ந்திருக்க முடியும்.
15. தாதிஜி எப்போதும் பாபாவின் நினைவில் இருந்து, அனைவரையும் திருப்திப்படுத்தி, அனைவரிடம் இருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுகின்ற அன்பைக் கொண்டிருந்தார். எந்தவோர் ஆத்மாவும் என்னால் குழப்பம் அடைந்து, அதனால் எனக்குச் சாபம் கொடுக்கக்கூடாது. தாதி இதில் முழுமையான கவனம் செலுத்தினார். அனைவரின் ஆசீர்வாதங்களையும் பெறுவதற்குத் தகுதி வாய்ந்தவர் ஆகினார்.
16. தாதிஜி எப்போதும் தனக்கு முன்னால் ஒரேயொரு இலட்சியத்தைக் கொண்டிருந்தார்: நான் சம்பூரணமான, முழுமையான தேவதை ஆகவும் கர்மாதீத் ஆகவும் ஆகவேண்டும். நான் இந்தப் பழைய சரீரத்தை விட்டு, ஒரு தேவதையாகி, அவ்யக்த சூட்சும வதனத்தின் வாசி ஆகவேண்டும். இந்தச் சேவை இரவுபகலாகத் தொடரும். சேவையுடன் கூடவே, நான் என்னில் சூட்சும கவனம் செலுத்துவதிலும் திறமைச்சித்தி அடைவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
17. தாதிஜி எப்போதும் எந்தத் தடைகளுக்கும் அப்பால் இருந்ததுடன் எப்போதும் தடைகளில் இருந்து விடுபட்ட ஸ்திதியைக் கொண்டிருந்தார். அவர் ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து, தன்னைச் சூட்சுமமான முறையில் சோதித்து, தனது பலவீனங்களையும் குறைபாடுகளையும் வைரம் போன்ற ஆத்மாவின் களங்கத்தையும் நீக்கி, ஒரு விலைமதிப்பற்ற வைரம் ஆகினார்.
18. சுயத்தைச் சம்பூரணமாகத் தூய்மையாகவும் ஒளி மற்றும் சக்தியால் நிரம்பியவராகவும் ஆக்குவதற்கு, உள்ளார்ந்த விருப்பமின்மைக்குரிய மனோபாவத்துடன் அவர் சகல சூழ்நிலைகளுக்கும் அப்பாற்பட்டு விளங்கினார். அத்துடன் தனது திருஷ்டியையும் மனோபாவத்தையும் சம்பூரணமாகத் தூய்மை ஆக்கினார். அவர் பழைய சம்ஸ்காரங்கள் என்ற முழுமையான இல்லறத்தையும் தோற்கடித்து, சடப்பொருளை வென்றவராகி, பாபாவின் மடியில் கலந்திருந்தார்.
19. நான் பாபாவிற்குச் சொந்தமானவன், நான் பாபாவைப் போல் சம்பூரணம் ஆகவேண்டும். இதனாலேயே, அவர் சரீரத்தின் சூட்சுமமான அகங்காரம், மரியாதை, கௌரவம், புகழ்ச்சி, தனது புத்தி மற்றும் பழக்கவழக்கங்களை சம்பூரணமாக அர்ப்பணித்து, தந்தையைப் போன்றும் சூட்சும வதனவாசியாகவும் ஆகினார்.