25.09.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே இந்நாடகம் மிகச்சரியாக நடிக்கப்படுகின்றது. குறித்த நேரத்தில் என்ன பாகம் நடிக்கப்பட வேண்டுமோ அது அதற்கேற்ப மீண்டும் மீண்டும் நிகழ்கின்றது. இது மிகச்சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் எப்பொழுது மற்றவர்கள் மீது செல்வாக்குச் செலுத்துவீர்கள்? இப்பொழுது என்ன சக்தி குறைவாக உள்ளது?பதில்:
நீங்கள் யோகம் என்ற பாடத்தில் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கும் பொழுதே மற்றவர்கள் மீது செல்வாக்குச் செலுத்த முடியும். இன்னமும் அந்தச் சக்தி இல்லாமல் உள்ளது. நினைவைக் கொண்டிருப்பதால் மாத்திரமே நீங்கள் சக்தியைப் பெறுகின்றீர்கள். இன்னமும் குறைவாகவே இருக்கின்ற நினைவுச் சக்தியே ஞான வாளுக்குத் தேவைப்படுகின்றது. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யும் பொழுது உங்கள் படகுகள் அக்கரை செல்ல முடியும். இது ஒரு விநாடிக்கான விடயமாகும்.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஒரேயொருவர் மாத்திரமே ஆன்மீகத் தந்தை என அழைக்கப்படுகின்றார், ஏனைய அனைவரும் ஆத்மாக்கள் ஆவர். அவர் பரமாத்மா என அழைக்கப்படுகின்றார். தந்தை கூறுகின்றார்: நானும் ஓர் ஆத்மாவே ஆனால் நான் பரமனும் சத்தியமானவரும் ஆவேன். நான் மாத்திரமே தூய்மையாக்குபவரும் ஞானக்கடலும் ஆவேன். தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களை உலகின் அதிபதிகள் ஆக்குவதற்காக பாரதத்திற்கு மாத்திரமே வருகின்றேன். நீங்கள் அதிபதிகளாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் இதை நினைவு செய்கின்றீர்கள். பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவூட்டுகின்றார்: நீங்கள் முதலில் சத்தியயுகத்திற்கு வந்து பின்னர் உங்கள் 84 பிறவிகளின் பாகங்களை நடித்து இப்பொழுது இறுதியை அடைந்து விட்டீர்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள், சரீரங்கள் அழியக்கூடியன. ஆத்மாவே இன்னோர் ஆத்மாவுடன் சரீரத்தின் மூலமாக உரையாடுகின்றார். நீங்கள் ஆத்ம உணர்வில் இல்லாத பொழுது நிச்சயமாகச் சரீர உணர்விலேயே இருக்கின்றீர்கள். தாங்கள் ஆத்மாக்கள் என்பதை அனைவரும் மறந்து விட்டனர். பாவாத்மா, புண்ணியாத்மா, மகாத்மா எனக் கூறப்படுகின்றது. ஆத்மாக்களால் பரமாத்மா ஆகமுடியாது. எந்த ஆத்மாவும் தன்னை சிவன் என அழைக்க முடியாது. பலர் தங்களது சரீரங்களுக்;கு சிவன் எனப் பெயரிட்டுள்ளனர். ஓர் ஆத்மா ஒரு சரீரத்தினுள் பிரவேசிக்கும் பொழுதே பெயரொன்று வழங்கப்படுகின்றது. ஏனெனில் அவர் தனது சரீரத்தினூடாகத் தனது பாகத்தை நடிக்க வேண்டியுள்ளது. இதனாலேயே மக்கள் தங்கள் சரீரம் பற்றிய உணர்வைக் கொண்டிருந்து “நான் இன்னார் இன்னார்” என எண்ணுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள்: “ஆம் நான் ஓர் ஆத்மா, நான் எனது 84 பிறவிகளின் பாகத்தை நடித்துள்ளேன். நான் ஆத்மாக்களைப் பற்றி இப்பொழுது புரிந்து கொள்கின்றேன். இந்த ஆத்மாவாகிய நான் சதோபிரதானாக இருந்து இப்பொழுது தமோபிரதான் ஆகிவிட்டேன்”. தங்கத்தில் கலப்படம் கலக்கப்பட்டுள்ளது போன்றுஇ சகல ஆத்மாக்களிலும் கறை படிந்துள்ள பொழுது மாத்திரமே தந்தை வருகின்றார். முதலில் நீங்கள் நிஜத்தங்கமாக இருந்து பின்னர் வெள்ளியாகி, செப்பாகி, அதன்பின்னர் முற்றாக மங்கும்வரை இரும்பாக இருக்கின்றீர்கள். வேறு எவராலும் இவ்விடயங்களை விளங்கப்படுத்த முடியாது. ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என அனைவரும் கூறுகின்றனர். எவ்வாறு உங்களுக்குள் கலப்படம் கலக்கப்படுகின்றது எனத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். தந்தை கூறுகின்றார்: நான் பாரதத்திற்கு மாத்திரமே வருகின்றேன். நீங்கள் முற்றிலும் தமோபிரதான் ஆகியுள்ளபோதே நான் வருகின்றேன். நாடகம் மிகச்சரியாக நடிக்கப்படுவது போன்று நானும் எனக்குரிய மிகச்சரியான நேரத்திலேயே வருகின்றேன். குறித்த ஒரு நேரத்தில் என்ன பாகம் நடிக்கப்பட வேண்டுமோ அது அதற்கேற்ப மீண்டும் மீண்டும் நிகழும் இதில் சிறிதளவு வேறுபாடுகூட இருக்க முடியாது. அந்நாடகங்கள் எல்லைக்கு உட்பட்டவை, இந்நாடகமோ எல்லையற்றது. இவ்விடயங்கள் அனைத்தும் மிகவும் சூட்சுமமான புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் நடித்த பாகம் எதுவாயினும் அவை நாடகத்திற்கேற்பவே ஆகும். எந்தவொரு மனிதருமே படைப்பவரையோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையோ அறியார்கள். ரிஷிகளும் முனிவர்களும்கூட “நேற்றி நேற்றி” (இதுவுமல்ல, அதுவுமல்ல) எனக் கூறி வருகின்றனர். உங்களுக்குப் படைப்பவரையோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையோ தெரியுமா என எவராவது உங்களைக் கேட்டால் நீங்கள் விரைவாகவே “ஆம்” எனப் பதில் அளிப்பீர்கள். எவ்வாறாயினும் நீங்களும் வேறு நேரத்திலன்றி இந்நேரத்தில் மாத்திரமே இதை அறிந்துகொள்ள முடியும். நீங்கள் மாத்திரமே படைப்பவராகிய அவரையும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் அறிந்திருக்கின்றீர்கள் என பாபா விளங்கப்படுத்தி உள்ளார். அச்சா, இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் எப்பொழுது உள்ளது என அவர்களுக்குத் தெரியுமா? இல்லை. அவர்களிடம் எந்த ஞானமும் இல்லை. இது ஓர் அற்புதமாகும். உங்களிடம் இந்த ஞானம் இருப்பதாக நீங்கள் கூறுகின்றீர்கள். தந்தையின் பாகம் ஒருமுறை மாத்திரமே நடிக்கப்படுகின்றது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இலக்ஷ்மி அல்லது நாராயணன் ஆகுவதே உங்கள் இலக்கும் குறிக்கோளும் ஆகும். நீங்கள் ஒருமுறை அவ்வாறு ஆகிவிட்டால் பின்னர் இக்கல்விக்கான தேவை இருக்காது. நீங்கள் ஒருமுறை ஒரு சட்டநிபுணர் ஆகிவிட்டால் அவ்வளவுதான்! எனவே உங்களுக்குக் கற்பிக்கின்ற தந்தையை நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். அவர் அனைத்தையும் உங்களுக்கு இலகுவாக்கி உள்ளார். பாபா மீண்டும் மீண்டும் உங்களுக்குக் கூறுகின்றார்: முதலில் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். நான் பாபாவிற்கு உரியவன். முன்னர் நீங்கள் நாஸ்திகர்களாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் ஆஸ்திகர்கள் ஆவீர்கள். நீங்களும் இப்பொழுது கோருகின்ற ஆஸ்தியை இலக்ஷ்மியும் நாராயணனும் ஆஸ்திகர்களாகிய பின்னரே கோரினர். நீங்கள் இப்பொழுது ஆஸ்திகர்கள் ஆகுகின்றீர்கள். “ஆஸ்திகர்கள்”, “நாஸ்திகர்கள்” என்ற வார்த்தைகள் இந்நேரத்தில் மாத்திரமே உள்ளன. இவ்வார்த்தைகள் அங்கு இருக்க மாட்டாது. அங்கு கேட்பதற்கென எதுவுமே இருக்காது. இங்கேயே இந்த வினாக்கள் எழுகின்றன. எனவே நீங்கள் கேட்கின்றீர்கள்: உங்களுக்குப் படைப்பவரையும் படைப்பையும் பற்றித் தெரியுமா? அவர்கள் “இல்லை” எனப் பதில் அளிக்கின்றனர். தந்தையே வந்து தனது சொந்த அறிமுகத்தைக் கொடுப்பதுடன் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இரகசியங்களையும் விளங்கப்படுத்துகின்றார். தந்தையே படைப்பவராகிய எல்லையற்றதன் அதிபதி ஆவார். ஏனைய சமய ஸ்தாபகர்கள் அனைவரும் நிச்சயமாக இங்கு வருகின்றார்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறு ஏபிரகாம், கிறிஸ்து போன்றவர்கள் கீழே இறங்குகின்றனர் என்பது பற்றிய காட்சிகள் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கப்பட்டன. இந்த ஒலி பெருமளவில் பரவும் பொழுது இறுதிக் கட்டத்தில் அவர்கள் இங்கே வருவார்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, உங்கள் சரீரங்களையும் சரீர உறவுகள் அனைத்தையும் துறந்து என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் இப்பொழுது என் முன்னால் நேரடியாக அமர்ந்திருக்கின்றீர்கள். உங்களை ஒரு சரீரமாகக் கருதாதீர்கள். “நான் ஓர் ஆத்மா.” உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள், உங்கள் படகு அக்கரை செல்லும். இது ஒரு விநாடிக்கான விடயமாகும். மக்கள் முக்தி அடைவதற்காக அரைக்கல்பமாகப் பக்தி செய்கின்றனர். எவ்வாறாயினும் எந்த ஆத்மாவாலும் இன்னமும் வீடு திரும்ப முடியாதுள்ளது. தந்தை 5000 வருடங்களுக்கு முன்னரும் இதை விளங்கப்படுத்தினார், அவர் இப்பொழுது மீண்டும் இதை விளங்கப்படுத்துகின்றார். ஸ்ரீ கிருஷ்ணரால் இவ்விடயங்களை விளங்கப்படுத்த முடியாது; அவரைத் தந்தை என அழைக்க முடியாது. லௌகீக, அலௌகீக, பரலோகத் தந்தைமார் உள்ளனர். உங்களது பௌதீகத் தந்தையர் எல்லைக்கு உட்பட்டவர்கள். இவ்வுலகிற்கும் அப்பாலுள்ள தந்தையே ஆத்மாக்களின் தந்தையான எல்லையற்ற தந்தையாவார். இந்தச் சங்கமயுகத் தந்தை அலௌகீகத் தந்தை எனப்படுகின்ற அற்புதமான தந்தையாவார். பிரஜாபிதா பிரம்மாவை எவரும் நினைவு செய்வதில்லை. அவர் தங்களது முப்பாட்டனார் என்பது அவர்களது புத்தியில் பதிவதில்லை. அவர்கள் கூறவேண்டும் என்பதற்காக வெறுமனே ஆதிதேவன், ஆதாம் என்றெல்லாம் பேசுகின்றனர். (தில்வாலா) ஆலயத்தில் ஆதிதேவனின் சிலை உள்ளது. நீங்கள் அங்கு செல்லும்பொழுது அது உங்களது ஞாபகார்த்தமே என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். பாபா அங்கு அமர்ந்திருக்கின்றார், நாங்களும் அங்கு அமர்ந்திருக்கின்றோம். தந்தை இங்கு உயிருள்ள ரூபத்தில் அமர்ந்திருக்கின்றார், அங்கு அவர்கள் உயிரற்ற சிலைகளை வைத்திருக்கின்றனர். கூரையில் காட்டப்பட்டுள்ள சுவர்க்கமும் சிறந்ததாகும். ஆலயத்தைப் பார்த்தவர்களுக்கு இது தெரியும். பாபா உயிருள்ள ரூபத்தில் இப்பொழுது எங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். பின்னர் ஆலயங்கள் கட்டப்படும். அவை அனைத்தும் உங்கள் ஞாபகார்த்தங்களே என்பது உங்களது விழிப்புணர்வில் புகவேண்டும். நாங்கள் இப்பொழுது இலக்ஷ்மி, நாராயணன் ஆகுகின்றோம். நாங்கள் அவ்வாறு ஆகி பின்னர் ஏணியில் கீழிறங்கினோம். இப்பொழுது நாங்கள் வீட்டிற்குச் சென்று பின்னர் இராம (கடவுள்) இராச்சியத்திற்குள் பிரவேசிப்போம். பின்னர் இராவண இராச்சியம் வந்து நாங்கள் பாவப் பாதையில் செல்வோம். தந்தை அனைத்தையும் மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். இந்த நேரத்தில் மனிதர்கள் அனைவரும் தூய்மை அற்றவர்களாகவே உள்ளனர். இதனாலேயே அவர்கள் அழைக்கின்றனர்: ஓ தூய்மை ஆக்குபவரே, வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! எங்கள் துன்பத்தை அகற்றி சந்தோஷத்திற்கான பாதையை எங்களுக்குக் காட்டுங்கள். கடவுள் ஏதோவொரு ரூபத்தில் நிச்சயமாக வருவார் என அவர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும் அவர் பூனை, நாய், கூழாங்கற்கள் அல்லது கற்கள் போன்ற வடிவில் வருவதில்லை. அவர் பாக்கிய இரதத்தில் வருவதாக நினைவுகூரப்படுகின்றது. தந்தையே கூறுகின்றார்: நான் இந்தச் சாதாரண இரதத்தில் பிரவேசிக்கின்றேன். இவருக்குத் தனது சொந்தப் பிறவிகளைப் பற்றித் தெரியாது. நீங்கள் இப்பொழுது இதனை அறிவீர்கள். அவர் தனது பல பிறவிகளின் இறுதியில் தனது ஓய்வு ஸ்திதியை நெருங்கும் பொழுது நான் அவரில் பிரவேசிக்கின்றேன். பக்தி மார்க்கத்தில் அவர்கள் பாண்டவர்களின் மிகப்பெரிய சிலைகளைக் காட்டி உள்ளார்கள். ரங்கூனில் அவர்கள் புத்தரின் மிகப்பெரிய சிலையொன்றை வைத்திருக்கின்றனர். மனிதர்கள் மிகப் பெரியவர்களாக இருக்க முடியாது. அவர்கள் தற்போது உருவாக்கியுள்ள இராவணனின் உருவத்தையிட்டுக் குழந்தைகளாகிய நீங்கள் வியப்பு அடைகின்றீர்கள். நாளுக்கு நாள் அவர்கள் தொடர்ந்தும் அதை மேலும் பெரிதாகச் செய்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொரு வருடமும் எதை எரிக்கின்றார்கள்? அவன் ஓர் எதிரியாக இருந்திருக்க வேண்டும். ஓர் எதிரியின் கொடும்பாவி மாத்திரமே எரிக்கப்படும். அச்சா, இராவணன் யார்? நீங்கள் ஒவ்வொரு வருடமும் அவனது கொடும்பாவியை எரிக்கும் அளவிற்கு அவன் எப்பொழுது உங்கள் எதிரி ஆகினான்? இந்த எதிரியைப் பற்றி எவருமே அறிய மாட்டார்கள். எவருமே முற்றாகவே இதன் அர்த்தத்தை அறியார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அவர்கள் இராவண சமுதாயத்தினர், நீங்கள் இராமரின் சமுதாயத்தினர். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வாழும் பொழுதும் ஒரு தாமரை மலரைப் போன்று வாழ்ந்து தொடர்ந்தும் என்னை நினைவு செய்யுங்கள். சிலர் கேட்கின்றனர்: எவ்வாறு அன்னங்களும் நாரைகளும் ஒன்றாக வாழமுடியும்? அப்பொழுது முரண்பாடுகள் ஏற்படுகின்றன. அது நிச்சயமாக இருக்கும். அதைச் சகித்துக் கொள்ள வேண்டும். அதற்காகப் பல யுக்திகள் உள்ளன. தந்தை திறமையான களிப்பூட்டுபவர் என அழைக்கப்படுகின்றார். அனைவரும் அவரை நினைவு செய்கின்றனர்: ஓ கடவுளே எங்களது வேதனைகளை நீக்குங்கள்! எங்கள் மீது கருணை காட்டுங்கள்! எங்களை விடுதலை ஆக்குங்கள்! ஒரேயொருவரே அனைவருக்கும் விடுதலை அளிப்பவரான தந்தை ஆவார். உங்களிடம் வருகின்ற எவருக்கும் தனிப்பட்ட முறையில் விளங்கப்படுத்துங்கள். கராச்சியில் வருகின்ற ஒவ்வொருவருடனும் நீங்கள் தனியாக அமர்ந்திருந்து அவருக்கு விளங்கப்படுத்துவதுண்டு. குழந்தைகளாகிய நீங்கள் யோகத்தில் சக்தி வாய்ந்தவர்களாக ஆகும்பொழுது உங்களின் செல்வாக்கு பரவும். இதுவரை நீங்கள் அத்தகைய சக்தியைக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் நினைவின் மூலமே சக்தியைப் பெறுகின்றீர்களே அன்றி கல்வி மூலமாக அல்ல. ஞான வாளுக்கு நினைவுச் சக்தி தேவை. அந்தச் சக்தி இன்னமும் குறைவாகவே உள்ளது. தந்தை தினமும் உங்களுக்குக் கூறுகின்றார்: குழந்தைகளே நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள், நீங்கள் சக்தியைப் பெறுவீர்கள். கல்வி மூலம் அதிகச் சக்தி பெறப்பட மாட்டாது. நீங்கள் நினைவின் மூலம் முழு உலகினதும் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் செய்கின்ற அனைத்தும் உங்களுக்காகவே ஆகும். பலர் வந்தார்கள், பின்னர் சென்று விட்டார்கள். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள். பலர் திரும்பி வருவதேயில்லை. இந்த ஞானம் மிகவும் நல்லது என்றும் தாங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் வெளியே சென்றவுடனே அனைத்தும் முடிவடைந்து விடுகின்றது. அவர்கள் இங்கே தங்கி இருப்பதற்கு மாயை அனுமதிப்பதில்லை. சிலர் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றனர்: ஓஹோ பாபா இப்பொழுது வந்துவிட்டார், நாங்கள் எங்களது சந்தோஷ தாமத்திற்குச் செல்வோம்! தந்தை கூறுகின்றார்: இன்னமும் முழு இராச்சியமும் ஸ்தாபிக்கப்படவில்லை. இந்நேரத்தில் நீங்கள் கடவுளின் குழந்தைகள் பின்னர் நீங்கள் தேவர்களாக இருப்பீர்கள். உங்கள் கலைகள் பின்னர் குறைவடைகின்றன. ஒரு மானியில் உங்கள் புள்ளிகள் பதிவுசெய்யப்படுகின்றன. உங்கள் புள்ளிகள் இந்தளவால் குறைவடைகின்றன. நீங்கள் அதி மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள் பின்னர் நீங்கள் கீழிறங்கும் பொழுது உங்கள் கலைகள் படிப்படியாகக் குறைவடைகின்றன. நீங்கள் ஏணியில் கீழிறங்க வேண்டியுள்ளது. ஏணி பற்றிய ஞானம் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் மேலேறும் ஸ்திதியில் உள்ளபொழுது அனைவருக்கும் நன்மை உள்ளது. பின்னர் படிப்படியாக கீழிறங்கும் ஸ்திதி உள்ளது. நீங்கள் சக்கரத்தை அதன் ஆரம்பத்திலிருந்து மிக நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்நேரத்தில் தந்தை உங்களுடனேயே இருப்பதால் இது உங்களது மேலேறும் ஸ்திதியாகும். மக்கள் சர்வவியாபகர் என அழைக்கின்ற கடவுள் தொடர்ந்தும் உங்களை “இனிய குழந்தைகளே இனிய குழந்தைகளே” என அழைக்கின்றார். பின்னர் குழந்தைகளாகிய நீங்களும் தொடர்ந்தும்; “பாபா பாபா!” எனக் கூறுகின்றீர்கள். பாபா எங்களுக்குக் கற்பிக்க வந்துள்ளார். ஆத்மாக்களே கற்கின்றனர், ஆத்மாக்களே செயல்களைச் செய்கின்றனர். இந்த ஆத்மாவாகிய நான் அமைதி சொரூபம். நான் இச்சரீரத்தின் மூலமாகச் செயல்களைச் செய்கின்றேன். துன்பம் உள்ளபொழுதே “அமைதியின்மை” என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. எவ்வாறாயினும் அமைதியே எங்களது ஆதி தர்மமாகும். பலர் மன அமைதியை வேண்டுகின்றார்கள். ஓ! ஆனால் ஆத்மாக்களே அமைதி சொரூபங்கள், அவர்களது வீடு அமைதி தாமம் ஆகும். நீங்கள் உங்களையே மறந்து விட்டீர்கள். நீங்கள் அமைதிதாம வாசிகளாக இருந்தீர்கள். நீங்கள் அங்கு அமைதியைப் பெறுவீர்கள். தற்காலத்தில் அவர்கள் ஒரே இராச்சியம், ஒரே தர்மம், ஒரே மொழி பற்றிப் பேசுகின்றனர்: ஒரே குலம், ஒரே தர்மம், ஒரே கடவுள். கடவுள் ஒருவரே என அரசாங்கமும் எழுதுகின்றது. எனவே பின்னர் அவர்கள் ஏன் அவரைச் சர்வவியாபகர் எனக் கூறுகின்றனர்? கடவுள் ஒருவரே என்பதை எவரும் நம்புவதில்லை. எனவே நீங்கள் மீண்டும் ஒருமுறை இதை எழுத வேண்டும். நீங்கள் இலக்ஷ்மி நாராயணனின் படத்தைச் உருவாக்கும் பொழுது ‘சத்தியயுகத்தில் அவர்களது இராச்சியம் இருந்த பொழுது அங்கு ஒரே கடவுளும் ஒரே தேவ தர்மமுமே இருந்தது என அதன் மீது எழுதுங்கள். எவ்வாறாயினும் மனிதர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் அந்தளவிற்குக் கவனம் செலுத்துவதில்லை. எங்கள் பிராமண தர்மத்திற்கு உரியவர்கள் மாத்திரமே கவனம் செலுத்துவார்கள். வேறு எவரும் எதையும் புரிந்து கொள்ள மாட்டார்கள். இதனாலேயே பாபா கூறுகின்றார்: தனிப்பட்ட முறையில் அவர்களுடன் அமர்ந்திருந்து அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். அவர்களைப் படிவத்தை நிரப்பச் செய்வதன் மூலம் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைகளை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் சிலர் ஒருவரிலும் வேறு சிலர் இன்னொருவரிலும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ஒரே சமயத்தில் விளங்கப்படுத்த உங்களால் முடியாது. ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நம்பிக்கைகளைப் பற்றி உங்களுக்குக் கூற ஆரம்பிப்பார்கள். முதலில் அவர்கள் எங்கே வந்திருக்கின்றார்கள் என அவர்களிடம் கேளுங்கள்: நீங்கள் பிரம்மாகுமாரர்கள் குமாரிகள் என்ற பெயரை எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? பிரஜாபிதா பிரம்மா உங்களுக்கு யார்? அவரது பெயரை எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் இல்லையா? நாங்கள் நடைமுறையில் அவ்வாறு இருக்கின்றோம். நீங்களும் அப்படித்தான். ஆனால் நீங்கள் இதைப் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் சரியான யுக்திகளைப் பயன்படுத்தி அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஆலயங்களுக்குச் செல்லும்பொழுது அவை அனைத்தும் உங்கள் ஞாபகார்த்தங்களே என்பதை எப்பொழுதும் அறிந்திருங்கள். நாங்கள் இப்பொழுது இலக்ஷ்மி நாராயணனைப் போன்று ஆகுகின்றோம்.2. வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்பொழுது ஒரு தாமரை மலரைப் போன்று வாழுங்கள். அன்னங்களும் நாரைகளும் ஒன்றாக வாழும்பொழுது அவர்கள் பெருமளவு சாதுரியமாக வாழ்வதுடன் பெருமளவில் சகித்துக் கொள்ளவும் வேண்டும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒற்றுமை மற்றும் திருப்திக்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதன் மூலம் நீங்கள் செய்யும் சேவையில் சதா வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.நீங்கள் செய்யும் சேவையில் வெற்றி சொரூபம் ஆகுவதற்கு இரண்டு விடயங்களில் கவனம் செலுத்துங்கள். ஒன்று, சம்ஸ்காரங்களை ஒத்திசைப்பதன் மூலம் ஒற்றுமை. மற்றையது, நீங்களும் திருப்தியாக இருந்து மற்றவர்களையும் திருப்திப்படுத்துவது. சதா அன்பான மற்றும் மகத்துவமான உணர்வுகளைக் கொண்டிருப்பதன் மூலம் மற்றவர்களுடன் தொடர்புகளைப் பேணுங்கள். நீங்கள் இந்த இரண்டு சான்றிதழ்களைப் பெறுவீர்கள். அப்போது உங்களின் நடைமுறை வாழ்க்கையில் தந்தையின் ரூபத்தை வெளிப்படுத்தும் ஒரு கண்ணாடியாக ஆகுவீர்கள். அந்தக் கண்ணாடியில் தந்தை அவர் எத்தகையவரோ என்ன செய்கிறாரோ அப்படியே புலப்படுவார்.
சுலோகம்:
உங்களின் ஆத்ம உணர்வு ஸ்திதியில் உங்களை ஸ்திரப்படுத்தி உயிர்த்தானங்களைச் செய்யுங்கள். நீங்கள் ஆத்மாக்கள் பலரிடம் இருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள்.அவ்யக்த சமிக்கை: இப்போது அன்பெனும் அக்கினியை ஏற்றி உங்கள் யோகத்தை எரிமலை ஆக்குங்கள்.
நீங்கள் எதையாவது நெருப்பில் போட்டதும் அதன் பெயர், உருவம், தரம் என்பவை மாறுகின்றன. அதேபோல் நீங்கள் உங்களைத் தந்தையின் நினைவெனும் நெருப்பில் இட்டதும் நீங்கள் மாற்றம் அடைகிறீர்கள். மனிதர்களில் இருந்து நீங்கள் பிராமணர்கள் ஆகுகிறீர்கள். பிராமணர்களில் இருந்து பின்னர் தேவதைகள் ஆகுகிறீர்கள். தேவதைகள் பின்னர் தேவர்கள் ஆகுவார்கள். உங்களைப் பற்றிய எந்தவிதமான உணர்வும் எஞ்சி இருக்காதபோது அன்பு அக்கினியில் இத்தகைய மாற்றம் நடக்கும். இதனாலேயே உங்களின் நினைவானது எரிமலை ரூபமாக இருக்க வேண்டும்.