25.11.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, அனைத்திலும் மகத்தான தெய்வீகப் பண்பு அமைதியாகும். ஆகையால் அமைதியாகப் பேசுங்கள், அமைதியின்மையைப் பரப்புவதை நிறுத்துங்கள்.
கேள்வி:
சங்கம யுகத்தில் குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து என்ன ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள்? தெய்வீகக் குணங்கள் நிறைந்த குழந்தைகளின் அடையாளங்கள் என்ன?பதில்:
ஞானமே முதலாவது ஆஸ்தியாகும், இரண்டாவது அமைதியாகும், மூன்றாவது தெய்வீகக் குணங்கள் ஆகும். தெய்வீகக் குணங்கள் நிறைந்த குழந்தைகள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கின்றார்கள். அவர்கள் எவரது குறைபாடுகளையும் பார்க்க மாட்டார்கள். அவர்கள் எவரைப் பற்றியும் முறைப்பாடு செய்ய மாட்டார்கள். குறைபாடுடையவர்களின் சகவாசத்தை அவர்கள் வைத்திருக்க மாட்டார்கள். பிழையானவற்றை எவராவது கூறினால், அவர்கள் அதனைப் பொருட்படுத்தாது, தமது சொந்த போதையைப் பேணுவார்கள்.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். முதலில், நீங்கள் ஞானம் எனும் ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து பெறுகின்றீர்கள். நீங்கள் தந்தையிடம் இருந்து தெய்வீகக் குணங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் இப்படத்தில் (இலக்ஷ்மி, நாராயணனின்) இருந்தும் தெய்வீகக் குணங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். தந்தை அமைதிக்கடல் என்று அழைக்கப்படுகின்றார். ஆகையால், நீங்கள் அமைதியைக் கிரகிக்க வேண்டும். தந்தை அமைதியைப் பற்றி விளங்கப்படுத்திய பின்னர் கூறுகின்றார்: நீங்கள் ஒருவரோடொருவர் அமைதியாகப் பேச வேண்டும். இந்த தெய்வீகக் குணத்தை கிரகியுங்கள். நீங்கள் ஞானம் எனும் தெய்வீகக் குணத்தை எவ்வாறாயினும் பெறுகின்றீர்கள். நீங்கள் இந்த ஞானத்தைக் கற்க வேண்டும். இந்த ஞானம் சரீரமற்ற தந்தையினால் மாத்திரமே கற்பிக்கப்படுகின்றது. சரீரமற்ற குழந்தைகள் (ஆத்மாக்கள்) கற்கின்றார்கள். இங்கு கற்பிக்கப்படுகின்ற, இப்புதிய சிறப்பியல்பை எவரும் அறியாதுள்ளார்கள். நீங்கள் கிருஷ்ணரிடம் உள்ளதைப் போன்ற தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: நானே அமைதிக்கடல் ஆவேன். ஆகையால், இங்கே அமைதி ஸ்தாபிக்கப்பட வேண்டும். அமைதியின்மை முடிவடைய வேண்டும். நீங்கள் எந்தளவிற்கு அமைதியாக இருக்கின்றீர்கள் என்பதை அறிய, உங்கள் நடத்தையை நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும். பல ஆண்கள் அமைதியை விரும்புகின்றார்கள். அமைதியாக இருப்பது நல்லது என்று அவர்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். அமைதி என்ற தெய்வீகக் குணம் மிகவும் சிறப்பானதாகும். எவ்வாறாயினும், பாரதக் குழந்தைகளுக்கு அமைதி என்றால் என்னவென்றும், அமைதியை எவ்வாறு ஸ்தாபிக்கலாம் என்பதும் தெரியாது. தந்தை பாரதமக்களைப் பற்றி மட்டுமே பேசுகின்றார். தந்தை பாரதத்திற்கு மாத்திரமே வருகின்றார். நிச்சயமாக உள்ளார்ந்த அமைதியிருக்க வேண்டும் என்று நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். எவராவது உங்களை அமையின்மையாக்க முயற்சித்தாலும் நீங்கள் அமைதியற்றவர்களாக உங்களை அனுமதிக்கவே கூடாது. அமைதியற்றவர் ஆகுதலும் ஒரு குறைபாடாகும். நீங்கள் அக்குறைபாட்டை அகற்ற வேண்டும். நீங்கள் அனைவரிடத்திலிருந்தும் தெய்வீகக் குணங்களையே கிரகிக்க வேண்டும். நீங்கள் அவர்களின் குறைபாடுகளையும் பார்க்கக் கூடாது. நீங்கள் சப்தம் போன்றவற்றை கேட்க நேர்ந்தாலும், நீங்கள் பாபாவையும், தாதாவையும் போன்று அமைதியாகவே இருக்க வேண்டும். அவர்கள் ஒருபோதும் குழப்பம் அடைவதேயில்லை. அவர்கள் என்றும் சத்தமிடுவதும் இல்லை. இந்த பிரம்மாவும் இதனைக் கற்றுக் கொண்டுள்ளார். நீங்கள் எவ்வளவிற்கு அமைதியாக இருக்கின்றீர்களோ அந்தளவிற்கு நல்லதாகும். அமைதியாக இருப்பதன் மூலம் உங்களால் நினைவு செய்யவும் முடியும். அமைதியற்றவர்களால் நினைவு செய்ய முடியாது. நீங்கள் அனைவரிடமிருந்தும் தெய்வீகக் குணங்களை கிரகித்துக் கொள்ள வேண்டும். தாத்திரேயர் போன்றோரின் (அனைவரிடமிருந்தும் அனைத்திலிருந்தும் தெய்வீகக் குணங்களை கிரகித்த இந்து சாது) உதாரணம் இங்கேயே பொருத்தமாகும். தேவர்களைப் போன்று தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்கள் எவரும் இல்லை. ஒரேயொரு பிரதான விகாரம் உள்ளது. அதனை நீங்கள் வெற்றி கொள்கின்றீர்கள். நீங்கள் புலன்களை வெற்றி கொண்டு, குறைபாடுகளைத் துறந்துவிட வேண்டும். நீங்கள் எக்குறைபாடுகளையும் பார்க்கவோ அல்லது அவற்றைப் பற்றி பேசவோ கூடாது. தெய்வீகக் குணங்கள் உள்ளவர்களுடன் மாத்திரமே சேர்ந்திருங்கள். நீங்கள் மிகவும் இனிமையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும். சிறிதளவு பேசி எந்த வேலையையும் பூர்த்தி செய்துகொள்ளலாம். நீங்கள் அனைவரிடத்திலிருந்தும் தெய்வீகக் குணங்களைக் கிரகித்து தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர் ஆகுங்கள். விவேகமானவர்களும் புத்திசாலிகளும் மௌனமாக இருக்கவே விரும்புகின்றார்கள். சில பக்தர்கள் ஞானம் நிறைந்த ஆத்மாக்களை விட அதிகளவு விவேகமானவர்களாகவும் பணிவானவர்களாகவும் உள்ளார்கள். பாபா அனுபவசாலியாவார். இவரின் லௌகீகத் தந்தை ஒரு ஆசிரியர் ஆவார். அவர் மிகவும் பணிவாகவும் அமைதியாகவும் இருப்பதுடன் அவர் என்றுமே கோபப்படுவதில்லை. சாதுக்களும் புகழப்படுகின்றார்கள். ஏனெனில் அவர்கள் கடவுளைச் சந்திக்க விடாமுயற்சி எடுக்கின்றார்கள். அவர்கள் காசிக்கும் ஹரிதுவாருக்கும் சென்று அங்கேயே வாழ்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் அமைதியாகவும் இனிமையாகவும் இருக்க வேண்டும். இங்கு அமைதியற்றிருக்கும் எவருமே அமைதியை பரப்புவதற்கு கருவியாக இருக்க முடியாது. அமைதியற்றவர்களுடன் நீங்கள் பேசவும் கூடாது. நீங்கள் அவர்களை விட்டு ஒதுங்கியே இருக்க வேண்டும். நாரைக்கும் அன்னத்திற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. அன்னங்கள் நாள்தோறும் முத்துக்களையே பொறுக்கிக் கொண்டிருக்கும். நீங்கள் நடந்து திரியும்போதெல்லாம், தொடர்ந்தும் இந்த ஞானத்தைக் கடைய வேண்டும். பிறருக்கு எவ்வாறு விளங்கப்படுத்தித் தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பது என்பதைப் பற்றியே, நாள் முழுவதும் உங்கள் புத்தியில் நீங்கள் கடைந்து கொண்டிருக்க வேண்டும். இங்கு வருகின்ற எந்தக் குழந்தையாயினும் ஒரு படிவத்தை நிரப்பிக் கொடுக்குமாறு கேட்கப்பட வேண்டும் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். ஒரு நிலையத்தில் எவரும் பாடநெறியைக் கற்க விரும்பினால், அவர்களிடம் படிவத்தை நிரப்பித் தருமாறு கேட்க வேண்டும். அவர்கள் பாடநெறியை கற்க விரும்பாது விட்டால், அவர்கள் அப் படிவத்தை நிரப்பத் தேவையில்லை. அவர்களிடம் படிவத்தை நிரப்பித் தருமாறு நீங்கள் கேட்டால், அவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்றும் நீங்கள் என்ன விளங்கப்படுத்த வேண்டும் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஏனெனில் இவ் உலகில் உள்ள எவருமே இவற்றைப் புரிந்து கொள்வதில்லை. படிவத்தின் மூலம் அவர்களைப் பற்றி அனைத்தையுமே உங்களால் அறிந்து கொள்ள முடியும். ஒருவர் தந்தையைச் சந்திக்க விரும்பினாலும் கூட, நீங்கள் அவர்களிடம் ஒரு படிவத்தை நிரப்பித் தருமாறு கேட்க வேண்டும். அப்பொழுதே உங்களால் அவர்கள் ஏன் பாபாவை சந்திக்க விரும்புகின்றார்கள் என்பதை உங்களால் அறிந்துகொள்ள முடியும். மக்கள் இங்கே வரும்போது, நீங்கள் எல்லையற்ற, எல்லைக்குட்பட்ட தந்தையரின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். எல்லையற்ற தந்தை வந்து உங்களுக்கு தனது அறிமுகத்தைக் கொடுத்திருப்பதால், நீங்கள் அவரின் அறிமுகத்தைப் பிறருக்குக் கொடுக்க வேண்டும். அவரின் பெயர் சிவனாகும். மக்கள் கூறுகின்றார்கள்: பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள். அவர்கள் ‘கிருஷ்ண தேவருக்கு வந்தனம்’ என்று கூறுகின்றார்கள், ஆனால் சிவனை நோக்கி அவர்கள் ‘பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள்’ என்று கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிந்து விடும். உங்களது ஆஸ்தியான முக்தியையும் ஜீவன்முக்தியையும் பெற்றுக் கொள்வதற்கு நீங்கள் நிச்சயமாக தூய்மையாக வேண்டும். அது சதோபிரதான் உலகம் என்று அழைக்கப்படுகின்ற தூய உலகமாகும். நீங்கள் அங்கே செல்ல வேண்டும். எனவே, தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! இது மிகவும் இலகுவானதாகும். நீங்கள் பாடநெறியைக் கொடுப்பதற்கு முன்னர் படிவத்தை நிரப்புமாறு அவர்களைக் கேட்கவேண்டும். முதல் நாளே அவர்களை நிரப்பித் தருமாறு கேளுங்கள். அதன் பின்னர் விளங்கப்படுத்துங்கள். அதன் பின்னரும், நீங்கள் கூறியவை, அவர்களுக்கு நினைவில் உள்ளதா என்பதை அறிய மீண்டும் படிவத்தை நிரப்பித் தருமாறு கேளுங்கள். இரண்டு படிவங்களுக்கு இடையேயும் நிச்சயமாக வேறுபாடு இருக்கும். அவர்கள் எதைப் புரிந்துள்ளார்கள் என்பதையும் நீங்கள் விளங்கப்படுத்தியவற்றைப் பற்றிய எண்ணங்கள் அவர்களுக்கு இருக்கின்றதா என்பதையும் உங்களால் விரைவிலேயே புரிந்து கொள்ள முடியும். அனைவரிடமும் இப்படிவங்கள் இருக்க வேண்டும். பாபா முரளியில் வழிகாட்டல்களைக் கொடுத்துள்ளார். பெரிய நிலையங்கள் உடனடியாகவே அவற்றைப் பயிற்சியில் இடவேண்டும். நீங்கள் இப்படிவங்களை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களால் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? தாம் நேற்று என்ன எழுதினோம், இன்று என்ன எழுதுகின்றோம் என்பதையிட்டு அவர்களே உணர்ந்து கொள்வார்கள். படிவங்கள் மிகவும் அவசியமாகும். அனைத்து நிலையங்களும் தத்தமக்கென வெவ்வேறாக படிவங்களை அச்சடிப்பதில் தவறில்லை. அல்லது ஒரே இடத்தில் அனைவருக்கும் சேர்த்து அச்சடிக்கப்பட்டு, அவை நிலையங்கள் அனைத்திற்கும் அனுப்பி வைக்கப்படவும் முடியும். இதுவே பிறருக்கு நன்மையளிப்பது என்பதாகும். குழந்தைகளாகிய நீங்கள் தேவர்கள் ஆகுவதற்காகவே இங்கு வந்துள்ளீர்கள். ‘தேவர்’ என்ற வார்த்தை மிகவும் மேன்மையானது. தெய்வீகக் குணங்களை கிரகித்தவர்களே தேவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது தெய்வீகக் குணங்களை கிரகிக்கின்றீர்கள். எங்கெல்லாம் கண்காட்சிகளும் அருங்காட்சியகங்களும் உள்ளனவோ, அங்கெல்லாம் நீங்கள் இப்படிவங்களை அதிகளவு வைத்திருக்க வேண்டும். அப்பொழுது அவர்களால் பார்வையாளர்களின் ஸ்திதியை அறிந்து கொள்ள முடியும். நீங்கள் புரிந்து கொண்ட பின்னரே பிறருக்கு விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் தெய்வீகக் குணங்களைப் பற்றியே பேச வேண்டும். குறைபாடுகளைப் பற்றி அல்ல. நீங்கள் தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர் ஆகுகின்றீர்கள். அதிகளவு தெய்வீகக் குணங்களைக் கொண்டவர்கள், ஏனையோருக்கு அதிகளவில் தெய்வீகக் குணங்களை கொடுக்க முடியும். குறைபாடுகள் உள்ளவர்களால் என்றுமே தெய்வீகக் குணங்களைப் பிறருக்குக் கொடுக்க முடியாது. இன்னமும் அதிகளவு காலம் எஞ்சியிருக்கவில்லை என்பதைக் குழந்தைகள் புரிந்துள்ளார்கள். நீங்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பயணத்தை அல்லது ஒரு யாத்திரையை மேற்கொள்கின்றீர்கள். ‘அதீந்திரிய சுகத்தைப் பற்றி, கோபியரையும் கோபிகளையும் கேளுங்கள்’ என்றொரு கூற்றுண்டு. அது இறுதியில் உங்களுடைய ஸ்திதியையே குறிக்கின்றது. இப்பொழுது நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமாகவே இருக்கின்றீர்கள். சிலர் உள்ளத்தில் ‘ஆஹா! நாங்கள் பரமதந்தையான பரமாத்மாவைக் கண்டு கொண்டோமே!, நாங்கள் அவரிடமிருந்து எங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றோம்’ என்று பாடுகின்றார்கள். அத்தகைய ஆத்மாக்களுக்கு எம் முறைப்பாடும் இருக்க மாட்டாது. எவரேனும் பிழையான எதனையும் கூறினாலும், நீங்கள் அதனைப் பொருட்படுத்தாது, போதையிலே இருக்க வேண்டும். நோய் அல்லது துன்பம் ஏதேனும் இருந்தால், நினைவில் நிலைத்திருங்கள். இப்பொழுது இக்கணக்குகள் தீர்க்கப்பட வேண்டும். அதன் பின்னர் 21 பிறவிகளுக்கு நீங்கள் மலர்களாக இருப்பீர்கள். அங்கே, துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. சந்தோஷத்தைப் போன்ற போஷாக்கு வேறெதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அப்பொழுது சோம்பல் போன்றவையும் முடிவடைகின்றன. இங்கே உண்மையான சந்தோஷம் உள்ளது. ஆனால் அது பொய்யானதாகும். செல்வத்தையும், நகைகளையும் வைத்திருப்பவர்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கக்கூடும். ஆனால், இங்கே இது எல்லையற்றதாகும். நீங்கள் எல்லையற்ற சந்தோஷத்தில் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் 21 பிறவிகளுக்கு சதா சந்தோஷமாக இருப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் என்னவாகப் போகின்றீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் ‘பாபா’ என்று கூறினாலே உங்கள் துன்பம் அகற்றப்பட வேண்டும். இதுவே 21 பிறவிகளுக்கான சந்தோஷமாகும். இன்னமும் சில நாட்களே உள்ளன. நீங்கள் சந்தோஷதாமத்திற்குச் செல்வதால், வேறு எதுவுமே நினைவு செய்யப்படக் கூடாது. இந்த பாபா தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கின்றார். தொடர்ந்தும் இடம்பெறுகின்ற முரண்பாடுகளைப் பற்றி பாபா அதிகளவு செய்தியைப் பெறுகின்றார். பாபா எதனையிட்டும் துன்பப்படுவதில்லை. அவர் எதைப் பற்றியாவது கேள்விப்பட்டால், நல்லது, அதுவே நியதியாகும், அது வேறொன்றும் இல்லை என்று கூறுகிறார். நீங்கள் அளவற்ற பொக்கிஷத்துக்குரியவர் ஆகுகின்றீர்கள். உங்களுக்குள் பேசிக் கொள்வதில் அதிகளவு சந்தோஷம் உள்ளது. நீங்கள் மிகவும் அமைதியாக இருப்பதுடன், உங்கள் முகம் மலர்ச்சியாகவும் இருக்கும். ஒருவர் புலமைப் பரிசில் பெற்றால், அவர் அதிகளவு முக மலர்ச்சியோடு இருப்பார். நீங்களும் இலக்ஷ்மி நாராயணனைப் போன்று முகமலர்ச்சி உடையவர்கள் ஆகுவதற்கே முயற்சி செய்கின்றீர்கள். அவர்களுக்கு ஞானம் இல்லை. உங்களுக்கு ஞானம் இருப்பதால் சந்தோஷம் இருக்கவேண்டும். முகமலர்ச்சி உடையவர்களாக இருக்கவேண்டும். நீங்கள் தேவர்களை விடவும் மேன்மையானவர்கள் ஆவீர்கள். ஞானக்கடலான தந்தை, உங்களுக்கு அத்தகைய மேன்மையான ஞானத்தைக் கொடுக்கின்றார்! நீங்கள் அநாதியான ஞான முத்துக்கள் என்ற அதிர்ஷ்ட இலாபச் சீட்டை வெல்கின்றீர்கள் என்பதால் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும்! உங்களது இப் பிறவி வைரம் போன்று பெறுமதியானது என்று நினைவு கூரப்பட்டுள்ளது. இந்தத் தேவர்களல்லாது, தந்தை மாத்திரமே ஞானம் நிறைந்தவர் என்று அழைக்கப்படுகின்றார். பிராமணர்களாகிய நீங்களும் ஞானம் நிறைந்தவர்கள் ஆவீர்கள். ஆகையால் உங்களுக்கு ஞானம் என்ற சந்தோஷம் உள்ளது. முதலில், தந்தையைக் கண்ட சந்தோஷம் உள்ளது. உங்களைத் தவிர வேறு எவருக்கும் இந்த சந்தோஷம் இல்லை. பக்தி மார்க்கத்தில் உண்மையான சந்தோஷம் கிடைக்க மாட்டாது. பக்திமார்க்க சந்தோஷம், குறுகிய காலத்திற்கும் போலியானதும் ஆகும். அவ் இடத்தின் பெயர் சந்தோஷ உலகமான வைகுந்தம், அதாவது சுவர்க்கம் ஆகும். அங்கே, அளவற்ற சந்தோஷம் உள்ளது. ஆனால் இங்கோ அளவற்ற துன்பமே உள்ளது. இராவண இராச்சியத்தில் நீங்கள் எவ்வளவு அழுக்கானவர் ஆகியுள்ளீர்கள் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் படிப்படியாகவே கீழிறங்கினீர்கள். இது நச்சுக்கடல் ஆகும். தந்தை இப்பொழுது உங்களை நச்சுக்கடலில் இருந்து மீட்டு, பாற்கடலிற்கு அழைத்துச் செல்கின்றார், இவை அனைத்தையும் குழந்தைகள் மிகவும் இனிமையானதாகக் கருதுகின்றார்கள். ஆனால் பின்னர், அவர்கள் மறக்கும் பொழுது, அவர்களின் ஸ்திதி பாழாகிவிடுகின்றது. தந்தை உங்கள் சந்தோஷத்தின் அளவை அதிகரிக்கின்றார். இந்த ஞானாமிர்தம் நினைவு கூரப்பட்டுள்ளது. நீங்கள் தொடர்ந்தும் ஒரு குவளை ஞான அமிர்தத்தை பருக வேண்டும். இங்கே உங்கள் போதை அதிகளவில் உள்ளது, ஆனால் நீங்கள் வெளியில் சென்றவுடன், அது குறைந்து விடுகின்றது. இங்கே குழந்தைகள் மிகவும் நல்ல உணர்வுகளைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை பாபாவும் உணர்ந்துள்ளார். தமது வீட்டிற்குச் செல்கின்றோம் என்றே அவர்கள் உணர்கின்றார்கள். நாங்கள் பாபாவின் ஸ்ரீமத்தின் அடிப்படையிலேயே இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றோம். நாங்கள் சிறந்த போராளிகள். இந்த ஞானம் முழுவதும் உங்கள் புத்தியில் உள்ளது. இதன் மூலமே நீங்கள் அந்த அந்தஸ்தைக் கோருகின்றீர்கள். உங்களுக்குக் கற்பிப்பவர் யார் என்று பாருங்கள்! எல்லையற்ற தந்தை, உங்களை முற்றாக மாற்றுகின்றார். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் இதயத்தில் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும்! நீங்கள் பிறருக்கு சந்தோஷத்தைக் கொடுக்கவேண்டும் என்றும் நீங்கள் இதயபூர்வமாக உணர வேண்டும். இராவணன் உங்களைச் சபித்த போதிலும், நீங்கள் தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் இராவணனால் சபிக்கப்பட்டதால், மிகவும் சந்தோஷம் இழந்தவராகவும், அமைதியற்றவர்களாகவும் ஆகினீர்கள். சேவை செய்வதற்கு பல சகோதரர்கள் விரும்பியபோதிலும், கலசம் தாய்மாரிடமே கொடுக்கப்பட்டுள்ளது. சேனை சக்திகளையே உள்ளடக்கியுள்ளது. ‘வந்தே மாதரம்’ (தாய்மாருக்கு வந்தனம்) என்றே நினைவு கூரப்பட்டுள்ளது. அத்துடன், தந்தைக்கும் வந்தனம் செலுத்தப்படுகின்றது. எவ்வாறாயினும், தாய்மாரின் பெயர்களே குறிப்பிடப்படுகின்றன. முதலில் இலக்ஷ்மியும், பின்னரே நாராயணன் குறிப்பிடப்படுகின்றார். முதலில் சீதையும் பின்னரே இராமரும் குறிப்பிடப்படுகின்றார். இங்கோ முதலில் ஆணின் பெயரைக் குறிப்பிட்ட பின்னரே, பெண்ணின் பெயர் குறிப்பிடப்படுகின்றது. இவை யாவும் விளையாட்டாகும். தந்தை அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். அவர் பக்தி மார்க்கத்தின் இரகசியங்களையும் விளங்கப்படுத்தியுள்ளார். பக்தியின் பலவகையான விடயங்கள் இடம்பெறுகின்றன. இந்த ஞானத்தைப் பெறும் வரையில், உங்களுக்கு அவற்றைப் பற்றி எதுவும் தெரியாது. முன்னர் நீங்கள் கல்வி அறிவற்றவர்களாகவும், அறியாமையிலும், அழுக்கிலும் இருந்தீர்கள் என்பதை, ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். அனைவரது நடத்தையும் இப்பொழுது சீராக்கப்பட்டுள்ளது. உங்கள் நடத்தை தெய்வீகமாகுகின்றது. ஐந்து விகாரங்களினால் உங்கள் நடத்தை அசுரத்தனமாகியது. அதிகளவு மாற்றம் ஏற்படுகின்றது. நீங்களும் மாற வேண்டும். நீங்கள் சரீரத்தை நீக்கிய பின்னர், உங்களால் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. பலரிலும் மாற்றங்களை ஏற்படுத்தத் தந்தையிடம் சக்தி உள்ளது. பல குழந்தைகள் தமது அனுபவங்களைப் பகிர்கின்றார்கள்: நான் காமம் நிறைந்தவனாகவும், குடிகாரனாகவும் இருந்தேன். நான் அதிகளவில் மாற்றப்பட்டுவிட்டேன். நாங்கள் இப்பொழுது அதிகளவு அன்புடன் வாழ்கின்றோம். அன்புக் கண்ணீரும் சிந்துகின்றோம். தந்தை அதிகளவு விளங்கப்படுத்திய போதிலும், இவ்விடயங்கள் யாவும் மறக்கப்படுகின்றன. இல்லாவிடின், உங்கள் சந்தோஷம் மிகவும் உயர்வாக இருக்கும். ‘நாங்கள் பலருக்கும் நன்மை செய்யவேண்டும். சந்தோஷமற்றவர்களுக்குப் பாதையைக் காட்டுவோம்.’ என்ற எண்ணம் இருக்கும். விளங்கப்படுத்துவதற்கு நீங்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். சிலவேளைகளில் நீங்கள் அவமதிக்கப்படுகின்றீர்கள். நீங்கள் மக்களை சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் ஆக்குகின்றீர்கள் என்ற ஓசை ஏற்கனவே பரப்பப்பட்டுள்ளது. எனினும் சகோதரனுக்கும் சகோதரிக்கும் உள்ள உறவு நல்லதே! ஆத்மாக்களாகிய நீங்கள் சகோதர்கள் ஆவீர்கள். எவ்வாறாயினும் பல பிறவிகளாகக் கொண்டிருந்த உறுதியான பார்வை மாறுவதில்லை. பாபாவிற்கு பல செய்திகள் வருகின்றன. ஆகையால் தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளாகிய உங்களது இதயம் இந்த அழுக்கான உலகிலிருந்து அகற்றப்பட வேண்டும். நீங்கள் அழகானவர்கள் ஆகவேண்டும். பலரும் ஞானத்தை செவிமடுக்கின்றார்கள், பின்னர் அதனை மறந்துவிடுகின்றார்கள். ஞானம் முழுவதும் மறைந்து விடுகின்றது. காமமே கொடிய எதிரியாகும். பாபா மிகுந்த அனுபவசாலி. அரசர்கள் இந்த விகாரங்களினால் தமது இராச்சியத்தையே இழந்துள்ளார்கள். காமம் மிகவும் தீயதாகும். அனைவருமே கூறுகின்றார்கள்: பாபா, இது மிகவும் வலிமையான எதிரியாகும். தந்தை கூறுகின்றார்: காமத்தை வெல்வதன் மூலம், நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். எவ்வாறாயினும், காம விகாரம் மிகவும் வலிமையானது. சத்தியம் செய்த பின்னரும் பல ஆத்மாக்கள் விழுந்து விடுகின்றார்கள். ஆத்மாக்கள் மிகவும் சிரமப்பட்டே மாறுகின்றார்கள். இந்த நேரத்தில் முழு உலகிலும் உள்ள மக்களின் நடத்தை மிகவும் சீரழிந்துள்ளது. எப்பொழுது தூய உலகம் இருந்தது? அது எவ்வாறு உருவாக்கப்பட்டது? அவர்கள் எவ்வாறு தமது இராச்சிய பாக்கியத்தைப் பெற்றார்கள்? எவராலும் இதனைப் பற்றி உங்களுக்கு என்றுமே கூறமுடியாது. நீங்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்ற காலமும் வரும். வைகுந்தம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதைப் பற்றி அவர்கள் கேள்விப்படுவார்கள். இவ் விடயங்கள் அனைத்தும் உங்கள் புத்தியில் மிகவும் தெளிவாக உள்ளன. இதுவே நீங்கள் இப்பொழுது மிகவும் அக்கறை கொள்ள வேண்டிய விடயமாகும். ஏனைய விடயங்கள் அனைத்தும் மறக்கப்பட வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் நடக்கும்போதும், நடமாடும்போதும், அமர்ந்திருக்கும்போதும், இந்த ஞானத்தைக் கடைந்து, முத்துக்களை பொறுக்கின்ற அன்னங்கள் ஆகுங்கள். அனைவரிடமிருந்தும் தெய்வீகக் குணங்களையே கிரகியுங்கள். உங்கள் தெய்வீகக் குணங்களை நீங்கள் பிறருக்கும் கொடுக்க வேண்டும்.2. உங்கள் முகத்தை மலர்ச்சி நிறைந்ததாக வைத்திருப்பதற்கு, உங்களுக்குள் பேசுங்கள்: ஓ! நாங்கள் அளவற்ற பொக்கிஷங்களின் அதிபதிகள் ஆகுகின்றோம்! நாங்கள் ஞானக்கடலான தந்தையிடமிருந்து, ஞான முத்துக்கள் என்ற அதிர்ஷ்ட இலாபச் சீட்டை வெல்கின்றோம்.
ஆசீர்வாதம்:
உங்களின் பட்டங்களை உணர்ந்தவராக இருப்பதன் மூலம் சுயமரியாதை உடையவராகி, உங்களின் ஸ்திதியைச் சக்திசாலி ஆக்குவீர்களாக.சங்கமயுகத்தில், தந்தையே தனது குழந்தைகளான உங்களுக்கு மேன்மையான பட்டங்களை வழங்குகிறார். அதனால் நீங்கள் இவற்றின் ஆன்மீக போதையைப் பேண வேண்டும். நீங்கள் நினைவு செய்யும் பட்டத்திற்கேற்ப, உங்களின் ஸ்திதியும் அதைப் போன்று சக்திவாய்ந்தது ஆகும். உதாரணமாக, உங்களின் பட்டம் சுயதரிசனசக்கரதாரி என்றிருந்தால், இந்த விழிப்புணர்வு ஏற்பட்ட உடனேயே, மற்றவர்களை நீங்கள் பார்ப்பது முடிந்துவிடும். உங்களுக்குச் சுய புரிந்துணர்வு ஏற்படும்போது, மாயையின் கழுத்து வெட்டப்பட்டுவிடும். நீங்கள் ஒரு மகாவீர் என நினைக்கும்போது, உங்களின் ஸ்திதி ஆட்ட, அசைக்க முடியாதது ஆகிவிடும். அதனால், உங்களின் பட்டங்களை உணர்ந்தவராக இருப்பதுடன் கூடவே, உங்களின் ஸ்திதியையும் சமமாக சக்திவாய்ந்தது ஆக்குங்கள். அப்போது நீங்கள் மேன்மையான சுயமரியாதை உடையவர் எனப்படுவீர்கள்.
சுலோகம்:
அலைந்து திரியும் ஆத்மாக்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்கு, உங்களின் வேறுபிரித்தறியும் சக்தியை அதிகரியுங்கள்.